மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 01

மனோன்மணீயம்- நாடகம்Edit

மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 01Edit

இரண்டாம் அங்கம்- முதற்களம்: கதைச்சுருக்கம்Edit

பாண்டியன் சீவகனும் அமைச்சன் குடிலனும், மனோன்மணியின் திருமணத்தைப் பற்றி ஆலோசனை செய்கின்றனர். சேரநாட்டு மன்னன் புருடோத்தமனுக்கு மனோன்மணியை மணம்செய்விக்குமாறு கூறியவர் சுந்தர முனிவரே என்பதைத் தெரிவித்து, அதனை விரைவில் செய்துமுடிக்க வேண்டும் என்று அரசன் கூறுகிறான். திருமணத்தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டவன்போலக் குடிலன் நடித்து, இதுபற்றித் தானும் பல நாள்களாகக் கருதியதுண்டு என்றும், கோட்டை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததால் இதுபற்றிப் பேச நேரமில்லாமற் போயிற்று என்றும், மனோன்மணியை உருவும் திருவும் அறிவும் ஆண்மையும் படைத்த புருடோத்தமனுக்கே மணம் செய்விப்பது தகுதி என்றும், அறியாதவர் பல பேசினாலும் உடனே தூது அனுப்புவதுதான் தகுதி என்றும் அரசனிடம் கூறுகிறான்.
“அறியாதவர் பலவாறு பேசுவர்” என்பதன் கருத்து என்னவென்று அரசன் கேட்கக் குடிலன், “மணமகன் வீட்டாரே, மணமகளைத் தேடிவருவது உலக வழக்கம்; மணமகள் இல்லத்தார், முதன்முதலில் மணமகன் இல்லத்தைத் தேடிப்போவது வழக்கம் அன்று. ஆனால், அவசரகாரியத்திற்குச் சாத்திரம் சம்பிரதாயம் பார்க்க வேண்டியதில்லை” என்று கூறுகிறான். “உலகவழக்கம் அப்படியானால், நாம் தூது அனுப்பவேண்டியதில்லை. மனோன்மணியை மணஞ் செய்துகொள்ள விரும்பாத அரசர்கள் உண்டோ?” என்று அரசன் கூற, அதற்கு அமைச்சன் கூறுகிறான்: “குமரி மனோன்மணியை விரும்பாத அரசர்கள் யார் உளர்? சோழன், கலிங்கன், கன்னடன், காந்தாரன், மச்சன், கோசலன், விதர்ப்பன், மராடன், மகதன் முதலாய அரசர்கள், மனோன்மணியை மணம்புரிய ஆவல்கொண்டு தவஞ்செய்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு குறை உண்டு, சேரநாட்டுப் புருடோத்தமனுக்கு மட்டும், எல்லாத் தகுதியும் உண்டு. ஆனால், அவன் கருத்தை அறியாமல் நாம் எப்படித் தூது அனுப்புவது என்பது பற்றித்தான் சிந்திக்கின்றேன்.”
இவ்வாறு அமைச்சன் கூறியதைக் கேட்ட அரசன், புருடோத்தமன் கருத்தை அறியும் உபாயம் யாது என்று வினவ, குடிலன், அதற்கு உபாயம் உண்டு எனக் கூறி அதனை விளக்கிச் சொல்கிறான். “இப்பொழுது சேரமன்னன் ஆட்சிக்குட்பட்டிருக்கிற ’நன்செய் நாடு’ (நாஞ்சில் நாடு) என்று ஒரு நாடு உண்டு. அது முறைப்படி, பாண்டியராகிய உமக்கே உரியது. அது நீர்வளம், நிலவளம் பொருந்திய செழிப்பான நாடு. அங்கு வழங்குவது மலையாள மொழி அன்று; தமிழ்மொழியே. அங்கு வழங்கி வருகிற பழக்கங்களும், தமிழரின் பழக்கவழக்கங்களே. (இந்த நன்செய் நாட்டின் இயற்கை எழிலையும், வளங்களையும், நூலாசிரியர் இங்குக் குடிலன் வாயிலாக நன்கு சிறப்பிக்கிறார்.) இந்நாடு, இப்போது சேரன் ஆட்சியில் இருந்தபோதிலும், அதன் உரிமையை, நாம் விட்டுவிடவில்லை. அதனைக் கைப்பற்றுவதற்காகத்தானே, அதற்கு அருகிலே, இந்தத் ’திருநெல்வேலிக்கோட்டை’யைக்கட்டினோம்? இப்போது புருடோத்தமனிடம் தூது அனுப்பி, நன்செய் நாட்டைத் திருப்பிக்கொடுக்கும்படி கேட்போம். நமது புதிய கோட்டையின் வலிமையைக் கருதி, அவன் திருப்பிக்கொடுப்பான். அல்லது ஏதேனும் வாதம் தொடங்குவான். அந்தச் சமயத்தில், இரு தரத்தாருக்கும் பொதுவான முறையில், இந்தத் திருமணத்தைப் பேசி முடிப்போம்.”
இவ்வாறு சூழ்ச்சியாகக் குடிலன் பேசியதை, அரசன் உண்மையெனக் கருதி, “இது நல்ல உபாயந்தான், மெத்த மகிழ்ச்சி” என்று கூறுகிறான். குடிலன், இந்தக் காரியம் கைகூட வேண்டுமானால், தூது போகிறவர், திறமையுள்ளவராயிருக்கவேண்டும். பெருமானடிகளே, தகுந்த தூதனைத் தேர்ந்தெடுத்து அனுப்புங்கள் என்று கூறுகிறான். அதற்கு, அரசன், “உமது மகன் பலதேவன் இருக்கிறானே”, அவன் முன்னமே சில தடவைகளில், பகையரசர்களிடம் தூது சென்றிருக்கிறான் அல்லவா? அவனையே தூது அனுப்பலாம்” என்று கூறுகிறான். குடிலன், நினைத்த காரியம் கைகூடிற்று என்று மனத்தினுள் மகிழ்ச்சி கொண்டு, அதை வெளியில் காட்டாமல், “அடியேனுடைய உடல் பொருள் ஆவி சுற்றம் யாவும், அரசர் பெருமானுக்குரியனவே. பலதேவனைத் தூது அனுப்பலாம். ஆனால், அவன் இளைஞன், இப்பெரிய காரியத்துக்கு அவனைத் தூது அனுப்புவது தகுமோ என்று யோசிக்கிறேன்” என்று மனமில்லாதவன் போலக்கூறுகிறான்.
வெள்ளையுள்ளம் படைத்த அரசன், “பெரிய காரியம் ஆனால் என்ன? சேரனிடம் சொல்லவேண்டியவைகளையெல்லாம் முறையாகச் சொல்லியனுப்பினால், பலதேவன் நன்றாக எடுத்துக் கூறுவான். இந்தத் துன்பங்களையெல்லாம் உணராமல், பித்துக்கொள்ளி நடராசனைத் தூது அனுப்பும்படி, நமதுகுருநாதர் கூறுகிறார்” என்று சொன்னான். “அரசர் பெருமானே! அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். துறவிகளுக்குத் தூதின் பெருமை என்ன தெரியும்? கோவிலைக் கட்டு, குளத்தை வெட்டு என்று சொல்லத்தெரியுமே தவிர, அரசதந்திரம், அவர்களுக்குத் தெரியாது. அரசர்களிடம் தூதுசெல்ல நடராசனுக்கு என்ன தகுதி உண்டு? பெண்களிடம் தூதுசெல்லத் தகுதியுடையவன் அவன்” என்றான் குடிலன். காலம் கடத்தாமல், உடனே பலதேவனைத் தூது அனுப்புக என்று அரசன் கூற, “கட்டளைப்படியே, இன்றே அனுப்புகிறேன்” என்று கூறி, விடைபெற்றுச் சென்றான் அமைச்சன்.
தனித்து அமர்ந்திருக்கும் பாண்டியன், “கூர்த்த மதியுள்ள குடிலனை நமது அமைச்சனாகப் பெற்றது நமது பாக்கியம்” என்று தனக்குள்ளே பேசிக் கொள்கிறான். அவ்வமயம், நகரப் பிரபுகள் சிலரும் நாராயணனும், அவ்விடம் வருகிறார்கள். அரசன், அவர்களிடத்திலும், தன் அமைச்சனைப் பற்றிப் புகழ்ந்து பேசுகிறான். “சற்று முன்புதான், நமது அமைச்சருடன், அரசியல் காரியமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அவருடைய அறிவே அறிவு என்று அரசன் புகழ்ந்து கூறுகிறான். இதனைக் கேட்ட பிரபு ஒருவர், “அதற்கென்ன ஐயம்! குடிலனுடைய அறிவுக்கு எல்லையுண்டா? தேவகுருவும், அசுரகுருவுங் கூட, இவரிடம் வந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். குடிலனுடைய அறிவும் திறமையும், அரசருக்குத் தீமை பயக்கும் என்று நாராயணன் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். மற்றொரு பிரபு, “அரசர் பெருமானிடத்திலும் அரச குடும்பத்தினிடத்திலும் அமைச்சருக்கு இருக்கிற பக்தி சொல்லி முடியாது. இராமரிடம் அனுமானுக்கு இருந்த பக்தி போன்றது, அவருடைய பக்தி” என்று மெச்சிப் பேசினார். “இதுவும் முழுப்பொய்; அரசர் இதனையும் உண்மை என நம்புவார்” என்று தனக்குள் பேசிக்கொண்டான், நாராயணன்.
அவ்வமயம் அங்கு இருந்த சேவகன், அரசனை வணங்கித் தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றிக் காட்டி, “அரசர் பெருமான், நேற்று, அடியேனிடம் திருமுகம் கொடுத்து அனுப்பியபோது, திருமணச்செய்தியை அறிந்து மகிழ்ச்சியடைந்து அதற்கு அடையாளமாக, இந்த முத்துமாலையை, அமைச்சர், அடியேனுக்கு வெகுமதியாக அளித்தார்” என்று கூறினான். இதைக்கேட்டு, ஏதோ அரசருக்குப் பொல்லாங்கு செய்யக் குடிலன் எண்ணியிருக்கிறான் என்பது இதனால் நன்கு தெரிகிறது என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறான், நாராயணன்.
“பாருங்கள், அமைச்சருடைய அரச பக்தியை! இராமனுக்குப் பரதன் போலவும், முருகனுக்கு வீரவாகு தேவர் போலவும்,அரசர் பெருமானிடம் சுவாமி பக்தியுள்ளவர் ’குடிலர்’ என்று மற்றொரு பிரபு, கருத்துக்கூறினார். நாராயணன் வெளியே போய், தனது மூக்கில் கரிபூசிக்கொண்டு, உள்ளே வருகிறான். அவனது மூக்கைக் கண்டு அரசன் நகைத்து, “என்ன நாராயண! உனது மூக்குக் கரியாயிருக்கிறது” என்று கேட்டான். “புறங்குன்றி கண்டனைய ரேனும், அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து” என்னும் திருக்குறளை நினைவுறுத்துவதற்காக, இப்படிச் செய்து கொண்டேன்” என்று விடை கூறுகிறான், நாராயணன். இதைக்கேட்டு, எல்லோரும் நகைக்கிறார்கள். பிறகு, பிரபுகள், அரசனிடம் விடைபெற்றுச் செல்கிறார்கள்.
அரசன் நாராயணனைப் பார்த்து, “உனக்கென்ன பைத்தியமா? ஆமாம்! நடேசனுடைய தோழன்தானே? அவனைப்போல நீயும் பைத்தியக்காரன்தான்” என்று கூற, நாராயணன், “எனைவகையான் தேறியக் கண்ணும், வினைவகையான், வேறாகும் மாந்தர் பலர்” என்று திருக்குறளினால் விடையளிக்கிறான். “திருக்குறள் எதற்கும் இடமளிக்கும். அதை விடு” என்று கூறி, அரசன், சேவகனுடன் செல்கிறான்.
நாராயணன், தனியே இருந்து, தனக்குள்ளே சிந்திக்கிறான். “வெள்ளையுள்ளம் படைத்த அரசன், குடிலனை, முழுதும் நம்பியிருக்கிறான். குடிலனோ, சூதுவாது அறிந்த சுயநலக்காரன். இவனை எல்லோரும் நல்லவன் என்றே நம்புகிறார்கள். இவனுடைய கள்ள உள்ளத்தை அறிந்தவர்களும், இவனுடைய கள்ளத்தனத்தை, வெளியில் சொல்ல அஞ்சுகிறார்கள். அரசாட்சி, ’நெருப்பு ஆறும் மயிர்ப்பாலமும்’ போன்றது. அரசர்பெருமான், விழிப்பாக இருந்தால் பிழைப்பார்; இல்லையேல், படவேண்டியதைப் பட்டே தீரவேண்டும். அரசருக்கு உதவிசெய்து அரசகாரியங்களைச் செம்மையாகவும், முறையாகவும், நேர்மையாகவும் செலுத்தவேண்டுவது, அமைச்சர் கடமை. அதைவிட்டு, இந்த அமைச்சன், அரசனைக் கவிழ்த்து, ஆட்சியைக் கைப்பற்றக் கள்ளத்தனமாகச் சூழ்ச்சிகளைச் செய்கிறான். அந்தோ! இவனுடைய சூதுவாதுகளை வெளிப்படுத்துவது எப்படி? வெளிப்படையான சான்றுகளைக் காட்டினால்தானே நம்புவார்கள்? சூழ்ச்சிக்காரர்கள், சான்றுகள் தெரியும்படியா காரியம் செய்கிறார்கள்? அரசர், குடிலனுடன் ஏதோ மந்திராலோசனை செய்ததாகக் கூறினார்; நடேசன் பெயரையும் குறிப்பிட்டார். அரசருக்கு ஏதோ ஆபத்து வரும்போல் தோன்றுகிறது.” இவ்வாறு தனக்குள் நாராயணன், எண்ணிக்கொண்டே போகிறான்.

இரண்டாம் அங்கம்Edit

முதற் களம்Edit

இடம்: அரண்மனை.
காலம்: வைகறை.
(சீவகனும் குடிலனும் மந்திராலோசனை)

(நேரிசை ஆசிரியப்பா)

சீவகன்
சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே!
புருடோத்த மனெனும் பொறையனே நமக்கு
மருமா னாக மதித்ததும் அவரே;
என்றுங் குழந்தை யன்றே; மன்றல்
விரைவில் ஆற்ற வேண்டும்; நாம்இது
வரையும் மறதியா யிருந்தது தவறே
யாம்இனித் தாமத மின்றியிம் மணமே
கருமமாய்க் கருதி முடிப்பாம்;
வருமுன் கருதும் மந்திர வமைச்சே! (பா-1)
குடிலன்
இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம் (10)
அறைவதெப் படியான்? அநேக நாளாப்
பலமுறை நினைந்த துண்டிப் பரிசே;
நலமுறப் புரிசை நன்கு முடியும்
அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச்
சற்றும் மறந்தே னன்று; தனியே
கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை
விட்டுள தோஇனி வேறொரு காரியம்?
புருடோத் தமனென்னும் பொருநைத் துறைவன்
காண்டகும் ஆண்டகை யென்றும், ஞானம்
மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந் (20)
திரியுந் தவசிகள் உரைசெய யானுங்
கேட்ட துண்டு; மற்றவன் நாட்டிற்கு
இன்றே தூதுவ ரேவின், மங்கையை
மன்றல் செய்வான் மனதோ வன்றோ
என்றியாம் அறியலாம் எளிதில். அறியார்
பலவும் பழிப்பர்; நமக்கதி லொன்றும்
இலைஇன் றேதூ தேவுவம்
பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் பதிக்கே. (பா-2)
சீவகன்
பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை?
பகருதி வெளிப்படப் பண்பாய் (30)
நிகரிலா சூழ்ச்சி நெடுந்தகை யோனே! (பா-3)
குடிலன்
எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்;
கண்ணகன் ஞாலம் கழறும் பலவிதம்.
மணஞ்செய முதன்முதல் பேசி வருதல்
இணங்கிய ஆடவ ரில்லுள் ளாரே;
அன்றி யாடவர்த் தேடி மன்றல்
சாற்றுதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்
முன்னை வழக்கும் அன்னதே; ஆயினும்
ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை?
சீவகன்
கூடா தஃதொரு காலும்; குடில! (40)
கேடாம் நமது கீர்த்திக் கென்றும்
மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்;
என்னே ஆத்திரம்? நமது
கன்னியை விழையும் மன்னருங் குறைவோ? (பா-4)
குடிலன்
குறைவோ அதற்கும் இறைவ! ஓகோ!
மூவருந் தேவரும் யாவரும் விரும்புநங்
கொழுந்தை விழைந்து வந்த வேந்தரைக்
கணக்கிட லாமோ? கலிங்கன் சோழன்
கன்னடன் வடிவில் ஒவ்வார்; காந்தர்
மன்னவன் வயதிற் கிசையான்; மச்சன் (50)
குலத்திற் பொருந்தான்; கோசலன் பலத்திற்
கிணங்கான்; விதர்ப்பன் வீர மில்லான்;
வணங்கலில் நிடதன்; மராடன் கல்வியில்
நேரான்; மகதன் தீராத் தரித்திரன்;
இன்னம் பலரும் இங்ஙனம் நமது
கன்னியை விழைந்துங் கல்வி வடிவு
குணம்பலங் குலம்பொரு ளென்றிவை பலவும்
இணங்கா ரேமாந் திருந்தார், அரசருள்
கொங்கன் றனக்கே இங்கிவை யாவும்
பொருத்த மாயினும் இதுவரைப் பாலியன் (60)
ஆகையில் இவ்வயின் அணைந்திலன், எங்ஙனந்
திருத்தமா யவன்கருத் தறிந்திடு முன்னம்
ஏவுதுந் தூதரை? ஏதில னன்றே.
சீவகன்
படுமோ அஃதொரு காலும்? குடில!
மற்றவன் கருத்தினை யுணர
உற்றதோ ருபாயம் என்னுள துரையே. (பா-5)
குடிலன்
உண்டு பலவும் உபாயம்; பண்டே
இதனைக் கருதியிருந்தேன்; புதிய
கடிபுரி முடியும் முன்னர்க் கழறல்
தகுதி யன்றெனக் கருதிச் (70)
சாற்றா தொழிந்தேன் மாற்றல ரேறே. (பா-6)
சீவகன்
நல்லது! குடில! இல்லை யுனைப்போல்
எங்குஞ் சூழ்ச்சித் துணைவர்
பங்கமி லுபாயம் என்கொல்? பகரே. (பா-7)

குடிலன்:Edit

வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச்
செந்தமிழ் வழங்குந் தேயமொன் றுள(து)அதன்
அந்தமில் பெருவளம் அறியார் யாரே?
மருதமும் நெய்தலும் மயங்கியங் கெங்கும்
புரையரு செல்வம் நிலைபெற வளரும்
மழலைவண் டானம் புலர்மீன் கவர (80)
ஓம்புபு நுளைச்சியர் எறிகுழை, தேன்பொழி
புன்னைநுண் தாதாற் பொன்னிறம் பெற்ற
எருமையின் புறத்திருந் திருஞ்சிறை புலர்த்தும்
அலைகடற் காக்கைக் கலக்கண் விளைக்கும்
கேதகை மலர்நிழல் இனமெனக் கருதித்
தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த
ஆம்பல்வாய் கொட்டிடும் கொங்கலர் தாதே.
வால்வளை சூலுளைந் தீன்றவெண் முத்தம்
ஓதிமக் குடம்பையென் றுன்னுபு காலாற்
பருந்தினங் கவர்ந்துசென் றடம்பிடைப் புதைக்கும் (90)
கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக்
கூம்பிய நெய்தற் பூந்தளிர் குளிர
மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும்;
அலமுகந் தாக்குழி யலமரும் ஆமை
நுளைச்சியர் கணவரோ டிழைத்திடும் ஊடலில்
வழித்தெறி குங்குமச் சேற்றிடை ஒளிக்கும்;
பூஞ்சினை மருதிடை வாழ்ந்திடும் அன்றில்
நளிமீன் கோட்பறை விளிகேட் டுறங்கா;
வேயென வளர்ந்த சாய்குலைச் சாலியில்
உப்பார் பஃறி யொருநிறை பிணிப்பர். (100)
இப்பெருந் தேயத் தெங்கும் இராப்பகல்
தப்பினும் மாரி தன்கடன் தவறா.
கொண்மூ வென்னுங் கொள்கலங் கொண்ட
அமிழ்தினை யவ்வயிற் கவிழ்த்தபின் செல்வுழி
வடியும்நீ ரேநம் மிடிதீர் சாரல்
நன்னீர்ப் பெருக்கும் முந்நீர் நீத்தமும்
எய்யா தென்றும் எதிர்த்திடும் பிணக்கில்
நடுக்கடல் நன்னீர் சுவைத்திடு மொருகால்;
மரக்கலம் வந்திடும் வயற்கரை யொருகால்;
வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம் (110)
ஓமென வோவிறந் தொலிக்கப் பிரணவ
நாதமே தொனிக்குமந் நாட்டிடை யொருசார்;
நறுமலர்க் குவளையும் நானிறத் திரணமும்
படர்தரும் பழனக் கம்பளம் பரப்பித்
தாமரைத் தூமுகை தூமமில்
நிலவொளி முத்துங் கவடியும் பணமா
அலவன் பலவிர லாலாய்ந் தெண்ண
துகிர்க்கா லன்னமும் புகர்க்கால் கொக்குஞ்
செங்கட் போத்துங் கம்புட் கோழியுங்
கனைகுரல் நாரையுஞ் சினமிகு காடையும் (120)
பொய்யாப் புள்ளும் உள்ளான் குருகும்
என்றிவை பலவும் எண்ணில குழீஇச்
சிரஞ்சிறி தசைத்துஞ் சிறகை யடித்தும்
அந்தியங் காடியின் சந்தங் காட்டித்
தந்தங் குழூஉக்குரல் தமைவிரித் தெழுப்பும்
பேரொலி யொன்றுமே யார்தரு மொருசார்;
வீறுடை யெருத்தினம் வரிவரி நிறுத்தி
ஈறிலாச் சகரர் எண்ணில ராமெனப்
பொன்னேர் பூட்டி நின்றவர் தம்மைப்
போற்றிய குரவையே பொலிதரு மொருசார்; (130)
சேற்றிடை யடர்ந்த நாற்றடைத் தெடுக்குநர்
நாறுகூ றாக்குநர் வேறுபுலம் படுக்குநர்
நடுபவர் களைப்பகை யடுபவ ராதியாக்
கள்ளுண் கடைசியர் பள்ளும் பாட்டும்
தருமொலி பரந்தே தங்குவ தொருசார்;
குன்றென அரிந்து குவித்திடுஞ் செந்நெற்
போர்மிசைக் காரா காரெனப் பொலியக்
கறங்குங் கிணைப்பறை முழவுடன் பிறங்கும்
மங்கல வொலியே மல்குவ தொருசார்;
தூவியால் தம்முடல் நீவிடில் சிரிக்குஞ் (140)
சிறுமிய ரென்னஅச் செழுநில நங்கை
உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி
உடல்குழைந் தெங்கும் உலப்பறு செல்வப்
பயிர்மயிர் சிலிர்த்துப் பல்வளம் நகுவள்,
எனிலினி யானிங் கியம்புவ தென்னை?
அனையவந் நாடெலாம் அரசமற் றுனக்கே
உரித்தென அங்குள பாடையே உரைக்கும்.
சின்னா ளாகச் சேரனாண் டிடினும்
இந்நாள் வரையும் அந்நாட் டுரிமை
கொடுத்தது மில்லைநாம் விடுத்தது மில்லை (150)
பண்டைநம் உரிமைபா ராட்டிட வென்றே
கண்டனன் இப்புரி, ஆயினும் அதுஇம்
மணத்திற் குதவியாய் வந்தது நன்றே
ஆதலின் அவன்பால் தூதரை விடுத்துக்
கிழமையும் பழமையும் எடுத்துக் கிளத்தில்
நாட்டிய நமது நகர்வலி கருதி
மீட்டும் விடுப்பினும் விடுப்பன். அன்றி
வாதமே பலவும் ஓதினும் ஒருவிதம்
ஒப்புர வாகா தொழியான் பின்னர்
அந்நியோந் நியசமா தானச் சின்னம் (160)
ஆகவோர் விவாக மாயின் நன்றெனக்
குறிப்பாற் பொதுவாய்க் கூறிடின்
மறுத்திடா னுடன்மண முடிக்குதும் நன்றே. (பா-8)
சீவகன்
மெத்தவுங் களித்தோம்! உத்தமோ பாயம்
இதுவே! குடில! இதனால்
வதுவையும் நடந்ததா மதித்தேம் மனத்தே. (பா-9)
குடிலன்
அப்படி யன்றே! செப்பிய உபாயம்
போது மாயினும் ஏகுந் தூதுவர்
திறத்தாற் சித்தி யாகவேண் டியதே
வினைதெரிந் துரைத்தல் பெரிதல. அஃது (170)
தனைநன் காற்றலே யாற்றல். அதனால்,
அன்புங் குடிமைப் பிறப்பும் அரசவாம்
பண்பும் அறிவும் பரவுநூ லுணர்வும்
தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும்
வாய்மையுஞ் சொல்லில் வழுவா வன்மையுந்
துணிவுங் காலமுங் களமுந் துணியுங்
குணமும் மந்திரத் தலைவர் துணைமையும்
உடையனே வினையாள் தூதனென் றோதினர்
அன்ன தூதரை யனுப்பின் மன்னவ!
உன்ன தெண்ண முறுமே யுறுதி; (180)
அன்றெனி லன்றே! அதனால்
வென்றிவை வேலாய் விடுவாய் தெரிந்தே. (பா-10)
சீவகன்
அத்திறம் முற்றும் ஒத்தவ னாய்நமக்
குரிமை பூண்டநின் அருமை மகன்பல
தேவனே யுள்ளான். மேவலர் பலர்பால்
முன்னம் பன்முறை தூதிலும் முயன்றுளான்.
அன்னவன் றன்னை அமைச்ச!
ஏவிடத் தயையா யிசைவாய் நீயே! (பா-11)
குடிலன்
ஐய மதற்கென்? ஐய! என்னுடல்
ஆவியும் பொருளும் மேவிய சுற்றமும் (190)
நினதே யன்றோ! உனதே வலுக்கியான்
இசையா தொழிவனோ! வசையறு புதல்வன்
பாலியன் மிகவும்; காரியம் பெரிது.

சீவகன்:Edit

பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம்
விரிவா யெடுத்துநீ விளம்பி விடுக்கில்
நலமா யுரைப்பன் நம்பல தேவன்
வருத்தம் இவையலாங் கருத்தி லுணராது
உரைத்தனர் முனிவர். உதிய னவைக்கே
யோசனை யின்றி நடேசனை யேவில்
நன்றாய் முடிப்பனிம் மன்றல் (200)
என்றார். அவர்கருத் திருந்த வாறே!---------------(பா-12)
குடிலன்
குற்றமோ அதுவுங் கொற்றவ! முனிவர்
அறிந்ததவ் வளவே யாகும். ஏழை!
துறந்தா ரறிவரோ தூதின் தன்மை?
இகழ்ச்சியும் புகழ்ச்சியு மின்பமுந் துன்பமும்
எல்லாமில்லை; ஆதலால் எவருங்
கட்டுக கோவில் வெட்டுக ஏரி,
என்று திரிதரும் இவர்களோ நமது
நன்றுந் தீதும் நாடி யுரைப்பர்?
இராச்சிய பரண சூத்திரம் யார்க்கும் (210)
நீச்சே யன்றி நிலையோ? நடேசன்!
யோசனை நன்று! நடேசன்! ஆ! ஆ!
ஏதோ இவ்வயிற் சூதாப் பேதையர்
உள்ளம் மெள்ள உண்டு மற்றவர்
அம்மை யப்பரை அணுகா தகன்று
தம்மையும் மறந்தே தலைதடு மாறச்
செய்யுமோர் சேவக முண்டுமற் றவன்பால்
ஐயமொன் றில்லை அதனால் மொய்குழல்
மாதர்பால் தூதுசெல் வல்லமை கூடும்.
பித்த னெப்படிச் சுந்தரர்க்கு (220)
ஒத்த தோழனா யுற்றனன்! வியப்பே!
முனிவரும் வரவர மதியிழந் தனரே!------------------(பா-13)
சீவகன்
இருக்கும், இருக்கும் இணையறு குடில!
பொருக்கெனப் போயுன் புதல்வற் குணர்த்தி
விடுத்திடு தூது விரைந்து,
கால விளம்பனம் சாலவுந் தீதே.----------------------(பா-14)
குடிலன்
ஈதோ அனுப்பினேன், இன்றிம் மாலையில்
தூது செல்வான் தொழுதுன் அநுமதி
பெறவரு வான்நீ காண்டி;
இறைவ! மங்கல மென்றுமுன் னடிக்கே! (230) --------(பா-15)
(குடிலன் போக)
சீவகன்
(தனதுள்)
நல்லது! ஆ! ஆ! நமது பாக்கியம்
அல்லவோ இவனைநாம் அமைச்சனாய்ப் பெற்றதும்?
என்னே! இவன்மதி முன்னிற் பவையெவை?
(சில பிரபுக்களும் நாராயணனும் வந்து வணங்க)
(பிரபுக்களை நோக்கி)
வம்மின் வம்மின் வந்து சிறிது
கால மானது போலும், நமது
மந்திரி யுடன்சில சிந்தனை செய்திங்கு
இருந்தோம் இதுவரை, குடிலன் மிகவும்
அருந்திறற் சூழ்ச்சியன்.

முதற் பிரபுEdit

------ ------ அதற்கென் ஐயம்?
சுரகுரு பிரசுரன் முதலவர் சூழ்ச்சி
இரவலா யிவன்சிறி தீந்தாற் பெறுவர் (240)
எல்லை யுளோ இவன்மதிக் கிறைவ!
வல்லவன் யாதிலும்.
நாராயணன்
(தனதுள்)
...... ....... நல்லது கருதான்
வல்லமை யென்பயன்!
இரண்டாம் பிரபு
...... ...... மன்னவ! அதிலும்
உன்தொல் குலத்தில் உன்திரு மேனியில்
வைத்த பரிவும் பத்தியு மெத்தனை!
குடிலனுன் குடிக்கே யடிமை பூண்ட
ஆஞ்ச னேயனோ அறியேம்!
நாராயணன்
(தனதுள்)
...... ...... ....... முழுப்பொய்
வாஞ்சையாய் மன்னனின் வாயுரை முகமன்
விடுப்பனோ விடமென? குடிப்பனே!
சேவகன்
------ -------- -------- கொற்றவ!
நேற்று மாலையில் நின்றிரு வாணையிற் (250)
சென்றுழித் திருமுகம் நோக்கி யேதோ
சிந்தனை செய்துதன் சித்த மகிழ்ச்சியால்
தந்தன னெனக்கித் தரள மாலை.
நாராயணன்
(தனதுள்)
எதுவோ பொல்லாங் கெண்ணினன் திண்ணம்
சீவகன்
பார்மின், பார்மின் நம்மிசை வைத்த
ஆர்வமும் அன்பும். ஆ! ஆ!
நாராயணன்
(தனதுள்)
...... ...... ...... யாதும்
பேசா திருக்கி லேசுமே நம்மனம்;
குறியாற் கூறுவம்; அறிகி லறிக.
(நாராயணன் செல்ல)
மூன்றாம் பிரபு
சாட்சியு மோகண் காட்சியாம்! இதற்கும்!
எங்கு மில்லையே யிவின்போற் சுவாமி
பக்தி பண்ணுநர் சுமித்திரை பயந்த
புத்திரன், வீரவா கிவர்முதற் போற்றிய
எத்திறத் தவரும் இறைவ! இவனுக்
கிணையோ தன்னய மெண்ணாப் பெருமையில்?
அங்கைப் புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ? (260)
எங்கு மில்லையே யிவன்போற் சுவாமி
பத்தி பண்ணுநர். சுமித்திரை பயந்த
புத்திரன் வீரவா கிவர்முதற் போற்றிய
எத்திறத்தவரும் இறைவ! இவனுக்
கிணையோ தன்னய மெண்ணாப் பெருமையில்?
(நாராயணன் மூக்கிற் கரிதேய்த்து வர)
சீவகன்
(நாராயணனை நோக்கி)
ஏ! ஏ! நாரணா கரியா யுன்மூக்
கிருந்தவா றென்னை? ஏ!ஏ! இதுவென்!
நாராயணன்
மூக்கிற் கரிய ருளரென நாயனார்
தூக்கிய குறளின் சொற்படி, எல்லாம்
உள்ளநின் னருகவ ரில்ல ராவரோ? (270)
சீவகன்
ஓகோ! ஓகோ! உனக்கென் பைத்தியம்!
யாவரும்
ஓகோ! ஓகோ! ஓகோ! ஓகோ! (யாவரும் நகைக்க)
சீவகன்
நாரணா! நீயும் நடேசன் தோழனே.
(பிரபுக்களை நோக்கி)
நல்லது; விசேடமொன் றில்லை போலும்.
முதற்பிரபு
இல்லையெம் இறைவ! எல்லாப் புவியுநின்
வாகுவே தாங்க! மங்கலம் வரவே!
(பிரபுக்கள் போக)
சீவகன்
நாராயணா!உனக் கேனிப் பித்து
தீரா இடும்பையே தெளிவி லையுறல்.
நாராயணன்
எனைவகைத் தேறியக் கண்ணும் வினைவகை
கோடிய மாந்தர் கோடியின் மேலாம். (280)
சீவகன்
திருக்குறள் எதற்கும் இடந்தரும்! விடுவிடு.
விரும்பி யெவருந் தின்னுங்
கரும்பு கைப்பதுன் வாய்க்குற் றம்மே. ...................(பா-16)
(அரசனும் சேவகர்களும் போக)

நாராயணன்:Edit

(தனிமொழி)
ஐயோ! இதற்கென் செய்வன்! அரசன்
உறுதியா நம்பினன்; சிறிதும் பிறழான்.
வெளுத்த தெல்லாம் பாலெனும் மெய்ம்மை
யுளத்தான்! களங்கம் ஓரான். குடிலனோ
சூதே யுருவாத் தோன்றினன். அவன்றான்
ஓதுவ உன்னுவ செய்குவ யாவுந்
தன்னயங் கருதி யன்றி மன்னனைச் (290)
சற்று மெண்ணான். முற்றுஞ் சாலமா
நல்லவன் போலவே நடிப்பான். பொல்லா
வஞ்சகன். மன்ன னருகுளோர் அதனை
நெஞ்சிலும் நினையார்; நினையினும் உரையார்.
இறைவன் குறிப்பிற் கிசைய அறைவர்
வடித்து வடித்து மாற்றொலி போன்றே.
தடுத்து மெய்ம்மை சாற்றுவார் யாரே?
என்னே அரசர் தன்மை! மன்னுயிர்க்
காக்கவும் அழிவும் அவர்தங் கடைக்கண்
நோக்கி லுண்டாம் வல்லமை நோற்றுப் (300)
பெற்றார்; பெற்றவப் பெருமையின் பாரம்,
உற்றுநோக் குவரேல் உடல்நடுங் காரோ?
கருப்போ தேனோ என்றவர் களிப்பது
நெருப்பா றும்மயிர்ப் பாலமும் அன்றோ?
விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்; விழியிமை
கொட்டிற் கோடி பிறழுமே. கொட்டும்
வாலாற் றேளும், வாயாற் பாம்புங்
காலும் விடமெனக் கருதி யாவும்
அடிமுதன் முடிவரை ஆய்ந்தா ராய்ந்து
பாரா ராளும் பாரென் படாவே? (310)
யாரையான் நோவ! அதிலுங் கொடுமை!
அரசர்க் கமைச்சர் அவயவம் அலரோ?
உறுப்புகள் தாமே உயிரினை யுண்ண
ஒருப்படில் விலக்குவ ருளரோ? தன்னயம்
மறந்து மன்னுயிர்ச் சகமே மதித்தங்
கிறந்தசிந் தையனோ இவனோ அமைச்சன்?
குடிலன் செய்யும் படிறுகள் வெளியாப்
பொய்யும் மெய்யும் புலப்பட உரைக்க
என்றால், நோக்க நின்றார் நிலையில்
தோன்றுஞ் சித்திர வொளிபோ லியார்க்குஞ் (320)
சான்றொடு காட்டுந் தன்மைய வலவே
சித்திரப் பார்வை யழுந்தார்க் கெத்தனை
காட்டினுங் கீறிய வரையலாற் காணார்.
என்செய? இனியான் எப்படிச் செப்புவன்?
நிந்தையா நடேசனைப் பேசிய குறிப்புஞ்
சிந்தனை செய்ததாச் செப்பிய செய்தியும்
ஓரில் யாதோ பெரிய உறுகண்
நேரிடு மென்றென் நெஞ்சம் பதறும்.
என்னே யொருவன் வல்லமை!
இன்னும் பிழைப்பன் மன்னன் விழிக்கிலே. (330) (பா-17)

(நாராயணன் போக)

இரண்டாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.Edit

பார்க்கEdit

II. இரண்டாம் அங்கம்Edit

மனோன்மணீயம்-இரண்டாம்அங்கம்/கதைச்சுருக்கம்

அங்கம்02/களம்02

அங்கம்02|களம்03

மனோன்மணீயம்- ஆசிரியமுகவுரை, கதைச்சுருக்கம்.

IEdit

I:01 <> I:02 <> I:03 <> I:04 <> I:05

IIIEdit

III:01 * III:02 * III:03 * III:04

IVEdit

IV:01 ^ IV:02 ^ IV:03 ^ IV:04 ^ IV:05

VEdit

V:01 * V:02 * V:03