மனோன்மணீயம்/அங்கம் 02/களம் 03
மனோன்மணீயம்- நாடகம்
தொகுமனோன்மணீயம்/அங்கம் 02/களம் 03
தொகுஇரண்டாம் அங்கம்- மூன்றாங் களம்: கதைச்சுருக்கம்
தொகு- காலை நேரம். திருவனந்தபுரத்து அரண்மனையில், சேரநாட்டு அரசன் புருடோத்தமன், தன்னந்தனியே இருந்து, தனக்குள் எண்ணுகிறான்: “நாள்தோறும் நான் கனவிற் காணும் மங்கை, யாரோ தெரியவில்லை. தேவவுலகத்துத் தெய்வ மகளிரைக் கண்டாலும் கலங்காத என் மனம் இவளைக் கண்டு, மத்தினால் கடையப்படுகின்ற தயிர்போல அலைகின்றது. நீண்ட கூந்தலும், அணிந்த ஆடையும் நெகிழ்ந்து விழ, முழுநிலா போன்ற முகத்தைக் கவிழ்த்துக் காதல் கனியும் கண்களால் நோக்கித் தனது அழகான கால்விரலினால் தரையைக் கீறி நின்ற காட்சி, என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவள் யாரோ, எந்நாட்டவளோ, ஒன்றும் தெரியவில்லை. அன்பும், அழகும் நலமும் உடைய அவளை, நேரிற் காண்பேனானால்...! காண முடியுமா? அது வீண் எண்ணம். இந்தக்கனவை, வெளியில், யாரிடத்திலும் சொல்ல இயலவில்லை. கனவில் காண்பன பொய் என்று கூறுவார்கள். நான் காண்பது கனவுதான்; ஆனால், பொய்க்கனவல்ல. கனவாக இருந்தால், நனவு போல, நாள்தோறும், அம்மங்கை, ஏன் தோன்ற வேண்டும்? இது, வெறும் பொய்த்தோற்றம் அல்ல. இக்கனவுக்காட்சி, நாள்தோறும் வளர்பிறைபோல, வளர்ந்து கொண்டே போகிறது. முந்திய நாள் இரவில், அவள் முகத்திலே, புன்முறுவல் காணப்படவில்லை. ஆர்வத்தோடு கண்ணிமைக்காமல் பார்த்தாள். நேற்று இரவு, என் மனத்தை, முழுவதும் கவர்ந்து கொண்டாள். வெண்மையான நெற்றியில் கரிய கூந்தல் சிறிது புரள, புருவத்தை நெகிழ்த்துச் செவ்வரி படர்ந்த கண்களால், அன்புடன் அவள் என்னை நோக்கியபோது, நானும், அவளை நோக்கினேனாக, வெட்கத்தினால் அவளுடைய கன்னம்,செவ்வானம் போலச் சிவக்கச் சந்திரமண்டலம் போன்ற முகத்தைக் கவிழ்த்துக் குமுதம் போன்ற செவ்வாயில் புன்முறுவல் அரும்பிய இனிய காட்சி, என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது. தன் அழகினால், தேவகன்னியரையும் ஆண்மக்கள் என்று கருதும்படி செய்கிற கட்டழகு வாய்ந்த இப்பெண்ணரசி யார்? எங்குள்ளவள்? அறிய முடியவில்லையே! மறக்கவும் முடியவில்லையே!... மறக்கத்தான் வேண்டும். ஆனால், மறப்பது எப்படி? போர் முதலிய ஏதேனும் ஏற்படுமானால், அந்த அலுவலில் மனத்தைச் செலுத்தி ஒருவாறு மறக்கலாம்...”.
- இவ்வாறு புருடோத்தமன் தனக்குள் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு சேவகன் வந்து வணங்கி, “பெருமானடிகளே! பாண்டி நாட்டிலிருந்து ஒரு தூதன் வந்திருக்கிறான்” என்று கூறினான். “யார் அவன்?” என்று கேட்க, “அவன் பெயர் ‘பலதேவன்’ என்று கூறினான்” என்றான், சேவகன். அரசன், அவனை உள்ளே வரும்படி கட்டளையிடத், தூதன் வந்து, அரசனைப் பணிந்து கூறுகிறான்: “சேரநாட்டு மன்னருக்கு மங்களம் உண்டாகுக. தன்னுடைய (பாண்டியனுடைய) புகழைப் பூமிதேவி சுமக்கப், பூமி பாரத்தை (அரசாட்சியை)த் தன் (பாண்டியன்) தோளிலே தாங்கிக்கொண்டு, பகையரசர்களின் தலைகளைப் போர்க்களத்திலே உருட்டி, ஆணைச் சக்கரத்தை நாடெங்கும் உருட்டிக், கலகஞ் செய்யும் நாட்டுக் குறும்பர்கள் (பாண்டியனுடைய) முற்றத்திலே தமது கைகளையே தலையணையாகக் கொண்டு உறங்குவதற்கு அங்கு இடம் பார்க்கத், திருநெல்வேலியில் வீற்றிருந்து அரசாளும் சீவக மன்னன் அனுப்பிய தூதன், நான். பாண்டிய மன்னனின் முதல் மந்திரியாகிய, சூழ்ச்சியிலும் அரசதந்திரத்திலும் வல்ல குடிலேந்திரனின் மகனாகிய என் பெயர்...”
- “வந்த காரியத்தைக் கூறுக” என்றான், புருடோத்தமன். தூதனாகிய பலதேவன் தொடர்ந்து கூறுகிறான்: “நெல்லை மாநகரத்திலே, பாண்டிய மன்னன் புதிதாக அமைத்த கோட்டை, பகைவரும் நாகமன்னனும் அஞ்சும்தன்மையது. உயிர்களுக்கு உள்ள பிறப்பு இறப்பு என்னும் பெருங்கடலைவிட அகலமும், உயிர்களை வாட்டும் ஆணவ மலத்தைவிட அதிக ஆழமும் உடையது, அக்கோட்டையின் அகழி. கோட்டை மதில்களோ, அஞ்ஞானத்தின் திண்மையை விட வலிமையானவை. கோட்டை மதிலின்மேல் அமைந்துள்ள யந்திரப்படை... முதலிய கணக்கில்லாத போர்க்கருவிகள், உலக விடயங்களில் உயிர்களைச் செலுத்தி, அழுத்தும்புலன்களைப் போன்றவை.”
- “வந்த அலுவலைக் கூறுக” என்றான், புருடோத்தமன்.
- “தூதுவன் கூறுகிறான்: “அரசர் பெருமானே! தங்கள் நாட்டின் தென்கிழக்கில் உள்ள நன்செய்நாடு, எங்கள் பாண்டியருக்கு உரியது. அங்கு வழங்கும் மொழியும், அங்குள்ள பழக்க வழக்கங்களும் இதற்குச்சான்று.”
- “ஆமாம். அதற்கென்ன?”
- தூதுவன் தொடர்ந்து கூறுகிறான்: “உரிமையை நாட்டி, வல்லமையோடு ஆணைசெலுத்தாத அரசர்கள் காலத்தில், நீங்கள், அந்த நன்செய் நாட்டைப் பிடித்துக் கொண்டு, சதியாக ஆட்சிசெய்கிறீர்கள். அந்த உரிமையை மீட்க எண்ணியே, பழைய நகரமாகிய மதுரையைவிட்டு, நன்செய் நாட்டுக்கு அருகிலே, திருநெல்வேலியில் கோட்டை அமைத்து, அங்கு வந்திருக்கிறார், எமது பாண்டிய மன்னர்.”
- “சொல்லவேண்டியதை விரைவாகச் சொல்” என்றான், புருடோத்தமன்.
- தூதுவன்: “பாண்டியரும் சேரரும் போர்செய்தால் யார் பிழைப்பார்? சூரியனும் சந்திரனும் எதிர்ப்பட்டால், சூரியன் மறைய, உலகில் இருள் மூடுவதுபோல, நீவிர் இருவரும் போர்செய்தால், உலகம் தாங்காது. ஆகவே, நீதியைக் கூறி, நன்செய் நாட்டினை, அதற்குரியவரிடம் சேர்ப்பிப்பதே முறை என்பதைத் தெரிவித்துத் தங்களுடைய கருத்தைத் தெரிந்துகொள்ளவே, என்னைத் தூது அனுப்பினார்.”
- “ எல்லாம் சொல்லியாய் விட்டதா?” என்றான், சேர மன்னன்.
- “தூதுவன்: “ஒன்று சொல்லவேண்டும். இரண்டு வேந்தரும் போர்செய்தால் உலகம் துன்பம் அடையும். அன்றியும், போரில், உமக்கு என்ன நேரிடுமோ? ஆகையினால், ஆண்சிங்கம் போன்ற சீவக அரசருடன் தாங்கள் போர் புரிவது நன்றல்ல.” அது கேட்டுப் புருடோத்தமன், இகழ்ச்சிக் குறிப்போடு நகைக்கிறான். பலதேவன், மேலும் பேசுகிறான்: “நன்செய் நாட்டினைத் திருப்பிக் கொடுப்பது பெருமைக்குரியது அல்ல என்று கருதினால், ஓர் உபாயம் கூறுகிறேன். பாண்டியன் அரண்மனையில், ‘மனோன்மணி’ என்னும் மலர் அலர்ந்திருக்கிறது. அம்மலரின் தேனை உண்ணும் வண்டு, இங்குத் திருவனந்தபுரத்தில் இருக்கிறது. மனோன்மணி, தங்கள் அரியணையில் அமர்ந்தால், பாண்டியன் போரிடமாட்டான்; நன்செய் நாடும், தங்களுக்கே உரியதாகும்.”
- புருடோத்தமன், “ஓகோ! மலரிடம் செல்ல, வண்டைக் கொண்டு போகிறார்கள் போலும்! நல்லது. இருவரும் காதல் கொண்டால் அல்லது, எமது நாட்டில், திருமணம் நிகழாது. அன்றியும், எமது அரியணை, இரண்டு பேருக்கு இடங்கொடாது. இதனை அறிவாயாக” என்றான். தூதுவனாகிய பலதேவன், “நல்லதாயிற்று, மனோன்மணியின் திருமணம் தடைப்பட்டது” என்று தனக்குள் எண்ணிக்கொள்கிறான். புருடோத்தமன் தொடர்ந்து கூறுகிறான்: “ஆகவே, நீ சொன்ன மணச்செய்தியை மறந்து விடு. நன்செய் நாட்டைப் பற்றி நீ பேசின பேச்சு, நகைப்பை உண்டாக்குகிறது. நமது அமைச்சரிடம் வந்து புகலடைந்து, நடைப்பிணம்போலத் தலைவாயிலில் நின்று, தமது முடியையும் செங்கோலையும் கப்பமாகக் கொடுத்துக் கைகட்டி வாய்பொத்தி மன்னர்கள் நிற்க, அவருடைய மனைவியர் வந்து, தமது மங்கலநாணை நிலைக்கச்செய்ய வேண்டும் என்று கெஞ்சுகிற எமது சபையிலே, நீ வந்து அஞ்சாமல், ‘நஞ்செய் நாட்டினைப் பாண்டியனுக்குக் கொடு’ என்று கூறிய பிறகும், நீ இன்னும் உயிருடன் இருப்பது, நீ தூதுவன் என்னும் காரணம் பற்றியே! சற்றும் சிந்திக்காமல், உன்னை வரவிட்ட பாண்டியன், யாருடைய பகையும் இல்லாதபடியால், இதுகாறும் முடிசூடி அரசாண்டான். இன்னும் ஒரு வார காலத்தில் அறிவான். நீ புகழ்ந்து பேசிய கோட்டையும், நீ ஆண்சிங்கம் எனக்கூறிய அரசனும் உண்மையில் இருப்பார்களானால், அந்த வலிமையையும் பார்ப்போம்” என்று சொல்லி, அருகிலிருந்த சேவகனிடம், சேனாதிபதி அருள்வரதனை அழைக்கும்படி கட்டளையிட்டான்.
- அருள்வரதன் வந்து வணங்கி நிற்க, புருடோத்தமன், அவனிடம் “பாண்டியனுடைய நெல்லை நகரத்துக்கு நாளை புறப்படுகிறோம். நமது படைவீரர்களை ஆயத்தப்படுத்துக” என்று கூறி, மீண்டும் தூதுவனிடம் கூறுகிறான்: “நீவிரைந்து போய்க்கொள். பாண்டியன் போரில் வல்லவனானால் - ஒரு வாரத்துக்குள் நாம் அங்கு வருவோம் - அவன், சேனையுடன் கோட்டையை வலிமையாகக் காத்துக் கொள்ளட்டும். இல்லையானால், எனது அடியில் அவன் முடிவைத்து வணங்கி நமது ஆணைக்கு அடங்கி நடக்கட்டும். வீணாகத் தூது அனுப்பியதற்கு, வஞ்சிநாட்டின் விடை இது. விரைந்து போய்ச்சொல்லுக.” இவ்விடையைக் கேட்டுக்கொண்டு, பலதேவன் சென்றான்.
- சேனாதிபதியாகிய அருள்வரதன் சென்று, போர் வீரர்களையெல்லாம் அழைத்துப் போருக்குப் புறப்பட ஆயத்தமாக இருக்கும்படி சொல்கிறான். வீரர்கள், போர்ச்செய்தி கேட்டு மகிழ்கிறார்கள். “இதுகாறும் போர் இல்லாமல், சோம்பிக் கிடந்தோம். ‘போர் இல்லா நாளெல்லாம் பிறவா நாளே’ என்று ஏங்கிக் கிடந்தோம். நல்லவேளையாகப் போர் வந்தது” என்று மகிழ்கிறார்கள். “நாளை காலையில், நெல்லைக்குப் புறப்பட்டுப்போகிறோம். கோட்டையை முற்றுகையிட்டுப் பிடிக்கவேண்டும். போருக்குச் செல்ல ஆயத்தமாக இருங்கள்!” என்றுசேனைத்தலைவன் கூறியதைக் கேட்டுக்கொண்டு, வீரர்கள், தத்தம் இருக்கைக்குப் போகிறார்கள்.
- (இரண்டாம் அங்கம் , மூன்றாம் களத்தின் கதைச்சுருக்கம் முற்றிற்று).
இரண்டாம் அங்கம்
தொகுமூன்றாங் களம்
தொகு- இடம்: திருவனந்தையிற் சேரன் அரண்மனை.
- காலம்: காலை.
- (புருடோத்தமன் சிந்தித்திருக்க)
(நேரிசை ஆசிரியப்பா)
- புருடோத்தமன்
(தனிமொழி)
- யார்கொலோ அறியேம்! யார்கொலோ அறியேம்!
- வார்குழல் துகிலொடு சோர மாசிலா
- மதிமுகங் கவிழ்த்து நுதிவேற் கண்கள்
- விரகதா பத்தால் தரளநீர் இறைப்ப
- பரிபுர மணிந்த பங்கயம் வருந்துபு
- விரல்நிலங் கிழிப்ப வெட்கந் துறந்து
- விண்ணணங் கனைய கன்னியர் பலரென்
- கண்முன் னின்றங் கிரக்கினுங் கலங்காச்
- சித்தம் மத்துறு தயிரில் திரிந்து
- பித்துறச் செய்தவிப் பேதை யார்கொலோ? (10)
- எவ்வுல கினளோ? அறியேம். இணையிலா
- நவ்வியும் நண்பும் நலனு முடையவள்
- யார்கொலோ? நாள்பல வானவே. ஆ!ஆ!
- விழிப்போ டென்கண் காணில்! - வீண்!வீண்!
- பழிப்பாம் பிறருடன் பகர்தல் பகர்வதென்?
- கனவு பொய்யெனக் கழறுவர். பொய்யோ?
- நனவினும் ஒழுங்காய் நாடொறுந் தோற்றும்.
- பொய்யல; பொய்யல; ஐய மெனக்கிலை
- நாடொறும் ஒருகலை கூடி வளரும்
- மதியென எழில்தினம் வளர்வது போலும். (20)
- முதனாள் முறுவல் கண்டிலம்; கடைக்கணில்
- ஆர்வம் அலையெறி பார்வையன் றிருந்தது.
- நேற்றிராக் கண்ட தோற்றமென் நெஞ்சம்
- பருகின தையோ! கரிய கூந்தலின்
- சிறுசுருள் பிறைநிகர் நறுநுதற் புரளப்
- பொருசிலைப் புருவம் ஒருதலை நெகிழ்த்துச்
- செவ்வரி படர்ந்த மைவழி நெடுவிழி
- உழுவலோ டென்முகம் நோக்க எழுங்கால்,
- என்னோக் கெதிர்படத் தன்னோக் ககற்றி
- வெய்யோன் வாரியில் விழுங்கால் துய்ய (30)
- சேணிடைத் தோன்றுஞ் செக்கர்போற் கன்னம்
- நாணொடு சிவக்க, ஊர்கோள் நாப்பண்
- தோன்றிய உவாமதி போன்றங் கெழிலொளி
- சுற்றிய வதனஞ் சற்றுக் கவிழ்த்தி,
- அமுதமூற் றிருக்குங் குமுதவா யலர்ந்து
- மந்த காசந் தந்தவள் நின்ற
- நிலைமையென் நெஞ்சம் நீங்குவ தன்றே!
- தேவ கன்னியர் முதலாந் தெரிவையர்
- யாவரே யாயினும் என்கண் தனக்கு
- மைந்தரா மாற்றுமிச் சுந்தரி யார்கொலோ? (40)
- அறியுமா றிலையே! அயர்க்குமா றிலையே!
- உண்டெனிற் கண்டிடல் வேண்டும். இலையெனில்
- இன்றே மறத்தல் நன்றே. ஆம்!இனி
- மறத்தலே கருமம். மறப்பதும் எப்படி?
- போரெவ ருடனே யாயினும் புரியிலம்
- ஆரவா ரத்தில் அயர்ப்போ மன்றி...
(சேவகன் வர)
- சேவகன்
- எழுதரு மேனி இறைவ!நின் வாயிலில்
- வழுதியின் தூதுவன் வந்துகாக் கின்றான்.
- புருடோத்தமன்
- யாரவன்?
- சேவகன்
- .... பேர்பல தேவனென் றறைந்தான்.
- புருடோத்தமன்
(தனதுள்)
- சோரன்!
(சேவகனை நோக்கி)
- ..... வரச்சொல்.
(தனதுள்)
- .... ..... தூதேன்? எதற்கிக்
- கயவனைக் கைதவன் அனுப்பினான்?
- நயந்தீ துணர்ந்து நட்டிலன் போன்மே. (பா-1)
(பலதேவன் வர)
- பலதேவன்
- மங்கலம், மங்கலம்! மலய மன்னவ!
- பொங்கலைப் புணரிசூழ் புவிபுகழ் சுமக்கத்
- தன்தோள் தாரணி தாங்க எங்கும்
- ஒன்னார் தலையொடு திகிரி யுருட்டிக்
- குடங்கை யணையிற் குறும்பர் தூங்க
- இடம்பார்த் தொதுங்குந் தடமுற் றத்து
- மேம்படு திருநெல் வேலிவீற் றிருக்கும்
- வேம்பார் சீவக வேந்தன் விடுத்த (60)
- தூதியான். என்பே ரோதில்அவ் வழுதியின்
- மந்திரச் சிகாமணி தந்திரத் தலைவன்,
- பொருந்தலர் துணுக்குறு மருந்திறற் சூழ்ச்சியின்,
- குடிலேந் திரன்மகன்...
- புருடோத்தமன்
(தனதுள்)
- .... .... மடையன் வந்ததென்?
- பலதேவன்
- அப்பெரு வழுதி யொப்பறு மாநகர்
- நெல்லையிற் கண்டு புல்லார் ஈட்டமும்
- அரவின தரசும் வெருவி ஞெரேலெனப்
- பிறவிப் பௌவத் தெல்லையும் வறிதாம்
- ஆணவத் தாழ்ச்சியும் நாண அகழ்வலந்
- தொட்டஞ் ஞானத் தொடர்பினு முரமாய்க் (70)
- கட்டிய மதிற்கணங் காக்க விடயத்து
- எட்டி யழுத்தி இழுக்கும் புலன்களின்
- யந்திரப்படைகள் எண்ணில இயற்றி...
- புருடோத்தமன்
- வந்த அலுவலென்?
- பலதேவன்
- .... ..... மன்னவா! நீயாள்
- வஞ்சிநா டதற்குத் தென்கீழ் வாய்ந்த
- நன்செய்நா டென்றொரு நாடுள தன்றே?
- எங்கட் கந்நா டுரித்தாம். அங்கு
- பரவு பாடையும் விரவுமா சாரமும்
- நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா...
- புருடோத்தமன்
- நல்லது! சொல்லாய்.
- பலதேவன்
- .... .... தொல்லையாங் கிழமைபா (80)
- ராட்டித் தங்கோல் நாட்டி நடத்த
- வல்ல மன்னவ ரின்மையால் வழுதிநாட்டு
- எல்லையுட் புகுந்தங் கிறுத்துச் சின்னாள்
- சதியாய் நீயர சாண்டாய்...
- புருடோத்தமன்
- .... .... .... அதனால்?
- பலதேவன்
- அன்னதன் உரிமையு மீட்க உன்னியே
- முதுநக ராமெழில் மதுரை துறந்து
- நெல்லையைத் தலைநகர் வல்லையில் ஆக்கி
- ஈண்டினன் ஆங்கே.
- புருடோத்தமன்
- .... .... வேண்டிய தென்னை?
- உரையாய் விரைவில்
- பலதேவன்
- .... .... உதியனும் செழியனும்
- போர்தனி புரியில் யார்கொல் பிழைப்பர்? (90)
- பங்கமில் இரவியுந் திங்களுந் துருவி
- எதிர்ப்படுங் காலை, கதிர்க்கடுங் கடவுள்
- மறையவிவ் வுலகில் வயங்கிருள் நிறையும்.
- அவரந் நிலையில் அமர்ந்திடில் அவ்விருள்
- தவறாத் தன்மைபோல், நீவிர் இருவருஞ்
- சமர்செயி லுலகம் தாங்கா தென்றே
- எமையிங் கேவி இவ்வவைக் கேற்றவை
- நீதியா யெடுத்தெலாம் ஓதி,நன் செய்நாடு
- உடையார்க் குரிமை நோக்கி யளிப்பதே
- கடனெனக் கழறிப் பின்னிக ழுன்கருத்து (100)
- அறிந்து மீளவே விடுத்தான்.
- புருடோத்தமன்
- .... ..... ..... ஆ!ஆ!
- முடிந்ததோ? இலையெனின் முற்றுஞ் செப்புவாய்.
- பலதேவன்
- மேலும் ஒருமொழி விளம்புதும் வேந்தே!
- சாலவும் நீவிர் பகைக்கின் சகமெலாம்
- ஆழ்துயர் மூழ்கலும் அன்றி, உங்கட்கு
- ஏது விளையுமோ அறியேம். ஆதலின்,
- அஞ்சா அரியே றன்னசீ வகனுடன்
- வெஞ்சமர் விளைத்தல் நன்றல.
- புருடோத்தமன்
(பயந்தாற்போல்)
- .... .... .... ஆ!ஆ!
- பலதேவன்
- நன்செய்நா டினிமேல் மீட்டு நல்கலும்
- எஞ்சலில் பெரும்புகழ்க் கேற்ற தன்றெனில் (110)
- உரைக்குது முபாயமொன் றுசிதன் மனையில்
- திரைக்கடல் அமுதே உருக்கொண் டதுபோல்
- ஒருமலர் மலர்ந்தங் குறைந்தது. தேனுண
- விரைமலர் தேடளி வீற்றிங் கிருந்தது.
- அன்னவன் மன்ன!நின் அரியணை அமரில்
- தென்னவன் மனமும் திருந்தும் நன்செய்நா
- டுன்னதும் ஆகும்.
- புருடோத்தமன்
- .... .... உண்மை! ஓகோ!
- வண்டு மலரிடை யணையவுன் நாட்டில்
- கொண்டு விடுவரே போலும் நன்று!
- கோதறு மிருபுறக் காதல் அன்றி,யெம் (120)
- நாட்டிடை வேட்டல்மற் றில்லை. மேலும்நம்
- அரியணை இருவர்க் கிடங்கொடா தறிகுதி.
- பலதேவன்
(தனதுள்)
- சுரிகுழல் வதுவை போனது. சுகம்!சுகம்!
- புருடோத்தமன்
- ஆதலின் முடிவில்நீ ஓதிய தொழிக
- நன்செய்நா டதற்கா நாடிநீ நவின்ற
- வெஞ்சொல் நினைதொறும் மேலிடும் நகையே!
- அடைக்கலம் என்றுநம் அமைச்சரை யடைந்து
- நடைப்பிணம் போலக் கடைத்தலை திரிந்து
- முடியுடன் செங்கோல் அடியிறை வைத்துப்
- புரவலர் பலர்வாய் புதைத்து நிற்க (130)
- அனையர்தம் மனைவியர் அவாவிய மங்கல
- நாணே இரந்து நாணம் துறந்து
- கெஞ்சுமெஞ் சபையில் அஞ்சா தெமது
- நன்செய்நா டதனை நாவு கூசாமற்
- பாண்டியற் களிக்க என்றுரை பகர்ந்தும்
- ஈண்டுநீ பின்னும் உயிர்ப்பது தூதுவன்
- என்றபே ரொன்றால் என்றே அறிகுதி!
- கருதா துனையிங் கேவிய கைதவன்
- ஒருவா ரத்திற் குள்ளாய் அவன்முடி
- யார்பகை இன்மையால் இதுகா றணிந்து (140)
- பார்வகித் தானெனப் பகரா தறிவன்.
- விரித்துநீ யெம்மிட முரைத்த புரிசையும்,
- அரிக்குநே ரென்னநீ யறைந்த அரசனும்
- இருப்பரேல், காண்குவம் அவர்வலி யினையும்!
(சேவகனை நோக்கி)
- அருள்வர தனையிங் கழையாய்! சேவக!
(அருள்வரதன் வர)
- பலதேவன்
(தனதுள்)
- சிந்தனை முடிந்தது.
- அருள்வரதன்
- .... ..... வந்தனம்! வந்தனம்!!
- புருடோத்தமன்
- நல்லது! செழியன் நெல்லையை நோக்கி
- நாளையாம் ஏகுவம். நமதுபோர் வீரரவ்
- வேளையா யத்தமாய் வைப்பாய்.
- அருள்வரதன்
- .... .... .... ஆஞ்ஞை.
- புருடோத்தமன்
(பலதேவனை நோக்கி)
- செல்லாய் விரைவில். தென்னன் போர்க்கு (150)
- வல்லா னென்னில் வாரமொன் றிற்குள்
- துன்னிய சேனையும் தானும்நீ சொன்ன
- கடிபுரி பலமாக் காக்க, இல்லையேல்,
- முடிநம் அடியில் வைத்து நாமிடும்
- ஆணைக் கடங்கி யமர்க. எமதிடம்
- வீணுக் குன்னை விடுத்தகை தவற்கு
- வஞ்சியான் மொழிந்த மாற்றமீ தெனவே
- எஞ்சா தியம்புதி ஏகாய், ஏகாய்!
(பலதேவன் போக) (தனதுள்)
- முட்டாள், இவனை விட்டவன் குட்டுப்
- பட்டபோ தன்றிப் பாரான் உண்மை! (160)
- பச்சாத் தாபப் படுத்துவம், நிச்சயம்.
- நண்ணிய நமது கனாவின்
- எண்ண மேகினும் ஏகும் இனியே. (பா-2)
(புருடோத்தமன் போக)
- (காவற் படைஞரும், சேவகர்களும் அருள்வரதனைச் சுற்றி நிற்க.)
- (நிலைமண்டில ஆசிரியப்பா)
- அருள்வரதன்
- தீர்ந்தது சூரரே! நுந்தோள் தினவு;
- நேர்ந்தது வெம்போர்.
- யாவரும்
- .... ..... வாழ்கநம் வேந்தே!
- நொந்தோம் நொந்தோ மிதுகா றுறங்கி
- யாவரும்
- உய்ந்தோம் உய்ந்தோம் வாழுக உன்சொல்!
- இரண்டாம் படைவீரன்:
- பெரும்போர் இலாநாள் பிறவா நாளே.
- மூன்றாம் படைவீரன்
- மெய்யோ? பொய்யோ? ஐய! இதுவும்.
- நான்காம் படைவீரன்
- யாவரோ, பகைவர்? அருளா பரணா! (170)
- தேவரோ, அசுரரோ, மூவரோ, யாவர்?
- அருள்வரதன்
- பாண்டியன்.
- யாவரும்
(இகழ்ச்சியாய்)
- .... பாண்டியன்! சீச்சீ! பகடி
- அருள் வரதன்
- ஈண்டுவந் தவனவன் தூதன். யதார்த்தம்...
- யாவரும்
- வியப்பு! வியப்பு!
- மூன்றாம் படைவீரன்
- .... ..... வேற்றா ளொருவனென்
- அயற்புறம் போனான். அவன்முகம் நோக்குழி
- வியர்த்தனன், தூதுடை கண்டு விடுத்தேன்.
- முதற்படை வீரன்
- அவன்றான்! அவன்றான்! அவன்றான்! தூதன்.
- நான்காம் படைவீரன்:
- யாதோ காரணம்? ஓதாய், தலைவா!
- இரண்டாம் படைவீரன்
- அப்பந் தின்னவோ? அலால்குழி எண்ணவோ?
- செப்பிய துனக்கு? நமக்கேன்? சீச்சீ! (180)
- அருள்வரதன்
- நல்லது வீரரே! நாளை வைகறை
- நெல்லையை வளைந்து நெடும்போர் குறித்துச்
- செல்லற் குரியன திட்டம் செய்வான்
- வல்லையில் ஏகுதும், மங்கலம் உமக்கே. (பா-3)
(அருள்வரதன் முதலியோர் போக)
- இரண்டாம் அங்கம்
- மூன்றாம் களம் முற்றிற்று.
- (கலித்துறை)
- அடைய மனோன்மணி அம்மையுஞ் சேரனும் ஆசைகொள்ள
- இடையில் நிகழ்ந்த கானாத்திற வைபவம் என்னையென்க!
- உடலுள் உலண்டென வேயுழல் கின்ற வுயிர்களன்புந்
- தடையில் கருணையுஞ் சந்தித்தல் எங்ஙனஞ் சாற்றுதுமே.
இரண்டாம் அங்கம் முற்றிற்று.
தொகு- ஆசிரியப்பா 22/க்கு அடி 708
- ஆசிரியத்துறை 3/க்கு அடி 12
- கலித்துறை 1/க்கு அடி 4
- ஆக அங்கம் 1/க்குப் பா.26/க்கு அடி 724.
பார்க்க
தொகுII. இரண்டாம் அங்கம்
தொகுமனோன்மணீயம்-இரண்டாம்அங்கம்/கதைச்சுருக்கம்
மனோன்மணீயம்- ஆசிரியமுகவுரை, கதைச்சுருக்கம்.
அங்கம்:I
அங்கம்: III
அங்கம்: IV
IV:1 * IV:2 *IV:3 * IV:4 * IV:5*