மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 04
மனோன்மணீயம் நாடகம்
தொகுஅங்கம் 01- நான்காம் களம்
தொகுஇடம்: கன்னிமாடம்
காலம்: காலை
(மனோன்மணி சயனித்திருக்க, சீவகன், வாணி, செவிலி சுற்றிநிற்க)
- (நேரிசை ஆசிரியப்பா)
- சீவகன்
- உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே!
- உனக்குறு துயரம் எனக்குரை யாததென்?
- விரும்பிய தென்னென் றுரைக்கில் விசும்பில்
- அரும்பிய அம்புலி யாயினுங் கொணர்வன்
- வருந்துவ தென்னென வழங்கின் மாய்ப்பன்
- உறுத்துங் கூற்றுவ னாயினும் ஒறுத்தே.
- தாய்க்கும் ஒளித்த சூலோ? தையால்
- வாய்க்கும் ஒளித்த உணவோ? மங்காய்
- ஏதா யினுமெனக் கோதா துளதோ?
- பளிங்கும் பழித்த நெஞ்சாய்! உனக்கும் (10)
- களங்கம் வந்த காரண மெதுவோ?
- பஞ்ச வனக்கிளி செஞ்சொல் மிழற்றி
- இசையது விரித்தோர் பிசித மரமேல்
- இருந்து பாடு மெல்லைஓர் வானவன்
- திருந்திய இன்னிசை அமுதிற் செப்பிப்
- போயது கண்டு சேயதோர் போந்தையில்
- தனியே பறந்துபோய்த் தங்கி அங்கவன்
- பாடிய இசையே கூவிட உன்னி
- நாடி நாடிப் பாடியும் வராது
- வாடி வாயது மூடி, மௌனமாய் (20)
- வருந்தி யிருந்ததாய்க் கண்ட கனாவும்
- நேற்றன் றோவெனக் கியம்பினை! நெஞ்சில்
- தோற்றிய தெல்லாம் இங்ஙனஞ் சொல்லும்
- பேதாய்! இன்றெனக் கென்னோ
- ஓதாய் உன்றன் உளமுறு துயரே! (பா-1)
- செவிலி
- உன்பிதா உலகாள் வேந்தன் அன்பாய்ச்
- சொல்லாய் என்னில் துப்பிதழ் துடித்துச்
- சொல்ல உன்னியுஞ் சொல்லா தடக்கில்
- யாம்படுந் துயரம் அறிந்துங்
- காம்படு தோளீ! கருதாய் போன்மே. (30) (பா-2)
- சீவகன்
- ஐயோ இதற்கென் செய்வேன்? ஆ!ஆ!
- பொய்யோ பண்ணிய புண்ணிய மனைத்தும்?
- பிள்ளை யில்லாச் செல்வங் கள்ளியிற்
- சோறே போலப் பேரே யன்றி
- வேறே என்பயன் விளைக்கும் என்றுனி
- நெடுநாள் நைந்து நைந்து கெடுவேன்!
- பட்டபா டெல்லாங் கெட்டுப் பரிதி
- வந்துழி யகலும் பனியெனச் சுந்தர
- முனிவன் முயன்ற வேள்வியாற் பிள்ளைக்
- கனியென வுனைநான் கண்டநாள் தொட்டு (40)
- நின்முக நோக்கியும் நின்சொற் கேட்டும்
- என்மிகை நீக்கி இன்ப மெய்தி
- உன்மன மகிழ்ச்சிக் குதவுவ உஞற்ற
- உயிர்தரித் திருந்தேன்! செயிர்தீ ரறமும்,
- வாய்மையும், மாறா நேசமுந், தூய்மையும்
- தங்கிய உன்னுளம் என்னுளந் தன்னுடன்
- எங்கும் கலந்த இயல்பா லன்றோ
- மறந்தே னுன்தாய் இறந்த பிரிவும்!
- உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில்
- எதுவோ உறுதி யியம்பாய்? (50)
- மதிகுலம் விளங்க வருமனோன் மணியே! (பா-3)
- மனோன்மணி
- (கண்ணீர் துளும்பி)
- எந்தையே! எனதன் பினுக்கோ ரிழுக்கு
- வந்த தன்று;மேல் வருவது மிலை,இலை
- உரைக்கற் பாற்றதொன் றில்லை
- உரைப்ப தெப்படியான் உணரா தொழியிலே? (பா-4)
- சீவகன்
- குழந்தாய்! என்குலக் கொழுந்தே! அழாய்நீ;
- அழுவையேல் ஆற்றேன்; நீயழல் இதுவரைக்
- கண்டது மிலை;யான் கேட்டது மிலையே.
- பெண்களின் பேதைமை என்னே, தங்களைப்
- பெற்றா ருற்றார் களுக்குந் தமக்கும், (60)
- விழுமம் விளைத்துத் தாமே யழுவர்.
- என்னே அவர்தம் ஏழைமை! மின்னேய்
- (வாணியை நோக்கி)
- மருங்குல் வாணீ! வாராய் இப்புறம்.
- அருங்கலை யாய்ந்தநின் தந்தைசொன் மதியும்
- உன்புத் தியுமுகுத் துழல்வதென் வம்பில்?
- நலமே சிறந்த குலமே பிறந்த
- பலதே வனாமொரு பாக்கிய சிலாக்கியன்
- தன்னைநீ விடுத்துப் பின்னையோர் பித்தனை
- நச்சிய தென்னை? சீச்சீ!
- நகையே யாகும் நீசெயும் வகையே? (பா-5) (70)
- வாணி
- அகலிடந் தனிபுரந் தாளும் வேந்தே!
- நிகழுமென் சிறிய நினைவெலாம் விரித்து
- விநயமாய் நின்பால் விளம்ப, எனது
- நாணம் நாவெழா தடக்கு மாயினும்
- பேணி யொருமொழி பேசுவன்,
- நேசமில் வதுவை நாசகா ரணமே. (பா-6)
- சீவகன்
- புதுமைநீ புகன்றாய்! வதுவைமங் கையர்க்குப்
- பெற்றா ராற்றுவர்; ஆற்றிய வழியே
- தையலார் மையலாய் நேயம் பூண்டு
- வாழ்வது கடமை. அதனில் (80)
- தாழ்வது தகுதியோ தருமமோ? சாற்றே. (பா-7)
- வாணி
- கற்பனைக் கெதிராய் அற்பமும் மொழியேன்;
- ஆயினும் ஐயமொன் றுண்டு; நேயமும்
- ஆக்கப்படும் பொருளாமோ? நோக்கில்
- துன்பமே நிறையும் மன்பே ருலகாம்
- எரியுங் கானல் விரியும் பாலையில்
- திரியும் மனிதர் நெஞ்சஞ் சிறிது
- தங்கி அங்கவர் அங்கங் குளிரத்
- தாருவாய்த் தழைத்தும், ஓயாத் தொழிலில்
- நேருந் தாகம் நீக்குவான் நிமல (90)
- ஊற்றா யிருந்தவ ருள்ளம் ஆற்றியும்,
- ஆறலை கள்வர் அறுபகை மீறில்
- உறுதுணை யாயவர் நெறிமுறை காத்தும்,
- முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில்
- ஊன்றுகோ லாயவர் ஊக்க முயர்த்தியும்,
- இவ்விதம் யாரையுஞ் செவ்விதிற் படுத்தி
- இகத்துள சுகத்திற்கு அளவுகோ லாகி,
- பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய்,
- இல்லற மென்பதன் நல்லுயி ரேயாய்,
- நின்ற காதலின் நிலைமை நினையில், (100)
- இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல்
- இருவர் சிந்தையும் இயல்பா யுருகி
- ஒன்றாந் தன்மை யன்றி, ஒருவரால்
- ஆக்கப் படும்பொரு ளாமோ?
- வீக்கிய கழற்கால் வேந்தர் வேந்தே! (பா-8)
- சீவகன்
- ஆமோ அன்றோ யாமஃ தறியேம்.
- பிஞ்சிற் பழுத்த பேச்சொழி, மிஞ்சலை.
- மங்கைய ரென்றும் சுதந்தர பங்கர்,
- பேதையர், எளிதிற் பிறழ்ந்திடும் உளத்தர்,
- முதியவுன் தந்தை மதியிலுன் மதியோ (110)
- பெரிது?மற் றவர்தமில் உன்னயம் பேண
- உரியவர் யாவர்? ஓதிய படியே
- பலதே வனுக்கே யுடன்படல் கடமை.
- வாணி
- இல்லையெனில்? -- -- --
- சீவகன்
- -- கன்னியா யிருப்பாய் என்றும்.
- வாணி
- சம்மதம். -- -- --
- சீவகன்
- -- கிணற்றிலோர் மதிகொடு சாடில்
- எம்மதி கொடுநீ யெழுவாய்? பேதாய்!
- கன்னியா யிருக்கில் உன்னழ கென்னாம்?
- அரைக்கி லன்றோ சந்தனங் கமழும்?
- வாணி
- விரைதரு மோசிறு கறையா னரிக்கில்?
- சீவகன்
- நானே பிடித்த முயற்கு மூன்றுகால் (120)
- ஆனால் எங்ஙனம்? ---- ----
- வாணி
- ---- ---- அரிவையர் பிழைப்பர்?
- (சேடி வர)
- சேடி
- சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில்,
- கால நோக்கினர். --- ---
- சீவகன்
- --- ---- சாலவு மினிதே;
- ஆசனங் கொணர்தி. -- --
- (வாணியை நோக்கி) -- -- யோசனை வேண்டாம்;
- எப்படி யாயினுஞ் சகடர் சொற்படி
- நடத்துவம் மன்றல், நன்குநீ யுணர்தி.
- ஆயினும் தந்தனம் ஐந்துநாள்,
- ஆய்ந்தறி விப்பாய் வாய்ந்தவுன் கருத்தே. (பா-9)
- வாணி
- இறக்கினும் இறைவ! அதற்கியா னிசையேன்.
- பொறுத்தருள் யானிவண் புகன்ற (130)
- மறுத்துரை யனைத்தும் மாற்றலர் ஏறே. (பா-10)
- (சுந்தர முனிவர் வர)
- சீவகன்
- (முனிவரைத் தொழுது)
- வணங்குது முன்றன் மணங்கமழ் சேவடி
- இருந்தரு ளுதியெம் இறைவ!
- பரிந்து வந்ததெம் பாக்கியப் பயனே. (பா-11)
- சுந்தர முனிவர்
- (மனோன்மணியை நோக்கி)
- தீதிலை யாதும்? க்ஷேமமே போலும்.
- ஏதோ மனோன்மணி! ஓதாய்
- வேறுபா டாய்நீ விளங்கு மாறே. (பா-12)
- மனோன்மணி
- (வணங்கி)
- கருணையே உருவாய் வருமுனீ சுரரே!
- எல்லாம் அறியும் உம்பாற்
- சொல்ல வல்லதொன் றில்லை, சுகமே. (பா-13) (140)
- செவிலி
- (மனோன்மணியை நோக்கி)
- கரும்பே, யாங்கள் விரும்பும் கனியே!
- முனிவர் பாலுநீ யொளிப்பையே லினியிங்கு
- யார்வயி னுரைப்பாய்? ஐயோ! இதுவென்?
- (முனிவரை நோக்கி)
- ஆர்வமும் ஞானமும் அணிகல னாக்கொள்
- தேசிக வடிவே! செப்புமா றறிகிலம்
- மாசறு மனோன்மணி தன்னுரு மாறி
- நேற்றிரா முதலாத் தோற்றுந் தோற்றம்
- மண்ணாள் மேனியும்; உண்ணாள் அமுதும்;
- நண்ணாள் ஊசலும், எண்ணாள் பந்தும்;
- முடியாள் குழலும், படியாள் இசையும்; (150)
- தடவாள் யாழும், நடவாள் பொழிலும்;
- அணியாள் பணியும், பணியாள் ஏவலும்;
- மறந்தாள் கிளியும், துறந்தாள் அனமும்;
- தூங்குவள் போன்றே ஏங்குவள்; எளியை!
- நோக்குவள் போன்றே நோக்குவள் வெளியை;
- கேட்டுங் கேட்கிலள்; பார்த்தும் பார்க்கிலள்;
- மீட்டும் கேட்பள், மீட்டும் பார்ப்பள்;
- தனியே யிருப்பள், தனியே சிரிப்பள்!
- விழிநீர் பொழிவள்; மெய்விதிர்த் தழுவள்;
- இங்ஙன மிருக்கில் எங்ஙனம் ஆமோ? (160)
- வாணியும் யானும் வருந்திக் கேட்டும்
- பேணி யிதுவரை ஒருமொழி பேசிலள்.
- அரசன் கேட்டும் உரைத்திலள், அன்பாய்
- முனிவநீ வினவியும் மொழியா ளாயின்,
- எவருடன் இனிமேல் இசைப்பள்?
- தவவுரு வாய்வரு தனிமுதற் சுடரே? (பா-14)
- சுந்தரமுனிவர்
- (சீவகனை நோக்கி)
- குழவிப் பருவம் நழுவுங் காலை
- களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்
- புளியம் பழமுந் தோடும் போலாம்.
- காதல் வெள்ளங் கதித்துப் பரந்து (170)
- மாத ருள்ளம் வாக்கெனும் நீண்ட
- இருகரை புரண்டு பெருமூச் செறியில்,
- எண்ண மெங்ஙனம் நண்ணும் நாவினை?
- தாதா அன்பு போதா தாகும்!
- காலம் கன்னியர்க் குளதெனும் பெற்றி
- சாலவும் மறந்தனை போலும்! தழைத்துப்
- படர்கொடி பருவம் அணையில், நட்ட
- இடமது துறந்துநல் லின்ப மெய்த
- அருகுள தருவை யவாவும்! அடையின்
- முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும் (180)
- அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்;
- இலையெனில் நலமிழந் தொல்கும், அதனால்
- நிசிதவே லரசா டவியில்
- உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே. (பா-15)
- சீவகன்
- எங்குல குருவே! இயம்பிய தொவ்வும்
- எங்குள திக்கொடிக் கிசைந்த
- பொங்கெழில் பொலியும் புரையறு தருவே. (பா-16)
- சுந்தரமுனிவர்
- உலகுள மற்றை யரசெலாம் நலமில்
- கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய,
- சகமெலாந் தங்க நிழலது பரப்பித் (190)
- தொலைவிலாத் துன்னலர் வரினும், அவர்தலை
- யிலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து,
- புகழ்மணங் கமழும் குணம்பல பூத்து,
- துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான்
- கனியுங் கருணையே கனியாக் காய்த்து,
- தருமநா டென்னும் ஒருநா மங்கொள்
- திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப்
- புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன்
- நீங்கி லில்லை நினது
- பூங்கொடி படரப் பாங்காந் தருவே. (பா-17) (200)
- சீவகன்
- நல்லது! தேவரீர் சொல்லிய படியே,
- இடுக்கண் களைந்த இறைவ!
- நடத்துவன் யோசனை பண்ணி நன்றே. (பா-18)
- சுந்தரமுனிவர்
- யோசனை வேண்டிய தன்று, நடேசன்
- என்றுளன் ஒருவன். ஏவில்
- சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கவே. (பா-19)
- சீவகன்
- கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி....
- சுந்தரமுனிவர்
- (எழுந்து)
- அரகர! குருபர! கிருபா நிதியே!
- காவாய் காவலன் ஈன்ற
- பாவையை நீயே காவாய் பசுபதே! (பா-20) (210)
- (சுந்தர முனிவர் போக)
- சீவகன்
- தொழுதோம்! தொழுதோம்! செவிலி! அவ்வறைக்
- கெழுதுங் கருவிகள் கொணராய்
- பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே. (பா-21)
- (சீவகன் முதலியோர் போக)
முதல் அங்கம் நான்காம் களம் முற்றிற்று
தொகு- பார்க்க
I. முதல் அங்கம்
தொகு- மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 01
- மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 02
- மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 03
- மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 05
- மனோன்மணீயம்(ஆசிரிய முகவுரை, கதைச்சுருக்கம்.)
- மனோன்மணீயம் மூலம் (அங்கம் 01- பாயிரம்)
II
தொகுIII
தொகுIII:01 ^ III:02 ^ III:03 ^ III:04
IV
தொகுIV:01 ^ IV:02 ^ IV:03 ^ IV:04 ^ IV:05