அகநானூறு/101 முதல் 110 முடிய

அகநானூறு பக்கங்கள்


1. களிற்றியானை நிரை

தொகு

பாடல்: 101 (அம்மவாழி)

தொகு
அம்ம வாழி, தோழி! 'இம்மை
நன்றுசெய் மருங்கில் தீதுஇல்' என்னும்
தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-
தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த
சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர் 5
வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி,
நுரைதெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து,
அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்,
கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், 10
இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்,
பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்
புன்கான் முருங்கை ஊழ்கழி பன்மலர், 15
தண்கார் ஆலியின், தாவன உதிரும்,
பனிபடு பன்மலை இறந்தோர்க்கு,
முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலமே! 18

பாடல்: 102 (உளைமான்)

தொகு

உளைமான் துப்பின், ஓங்குதினைப் பெரும்புனத்துக்
கழுதில் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென,
உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப்பு
ஐதுவரல் அசைவளி ஆற்றக், கைபெயரா
ஒலியல் வார்மயிர் உளரினள், கொடிச்சி 5

பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற்று, ஒய்யென
மறம்புகல் மழ களிறு உறங்கும் நாடன்;
ஆர மார்பின் வரிஞிமிறு ஆர்ப்பத், 10
தாரன் கண்ணியன், எஃகுடை வலத்தன்,
காவலர் அறிதல் ஓம்பிப், பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
உயங்குபடர் அகலம் முயங்கித், தோள்மணந்து
இன்சொல் அளைஇப், பெயர்ந்தனன் - தோழி!- 15

இன்றுஎவன் கொல்லோ கண்டிகும் - மற்றுஅவன்
நல்கா மையின் அம்பல் ஆகி,
ஒருங்குவந்து உவக்கும் பண்பின்
இருஞ்சூழ் ஓதி ஒண்நுதற் பசப்பே! 19


பாடல்:103 (நிழலறு)

தொகு

நிழல்அறு நனந்தலை, எழில்ஏறு குறித்த
கதிர்த்த சென்னி நுணங்கு செந்நாவின்,
விதிர்த்த போலும் அம்நுண் பல்பொறிக்,
காமர் சேவல் ஏமம் சேப்ப;
முளிஅரில் புலம்பப் போகி, முனாஅது 5

முரம்பு அடைந் திருந்த மூரி மன்றத்து,
அதர்பார்த்து அல்கும் ஆகெழு சிறுகுடி
உறையுநர் போகிய ஓங்குநிலை வியன்மலை ;
இறைநிழல் ஒருசிறைப் புலம்புஅயா உயிர்க்கும்
வெம்முனை அருஞ்சுரம் நீந்தித், தம்வயின் 10

ஈண்டுவினை மருங்கின் மீண்டோ ர் மன்என,
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு
தானே சென்ற நலனும்
நல்கார் கொல்லோ, நாம் நயந்திசி னோரோ? 1 5

பாடல்: 104 (வேந்துவினை)

தொகு

</poem> வேந்துவினை முடித்த காலைத், தேம்பாய்ந்து இனவண்டு ஆர்க்கும் தண்நறும் புறவின் வென்வேல் இளையர் இன்புற, வலவன் வள்புவலித்து ஊரின் அல்லது, முள்உறின் முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா 5

நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர் வாங்குசினை பொலிய ஏறிப்; புதல பூங்கொடி அவரைப் பொய்அதள் அன்ன உள்இல் வயிற்ற, வெள்ளை வெண்மறி, மாழ்கி யன்ன தாழ்பெருஞ் செவிய, 10

புன்றலை சிறாரோடு உகளி, மன்றுழைக் கவைஇலை ஆரின் அங்குழை கறிக்கும் சீறூர் பலபிறக்கு ஒழிய, மாலை இனிதுசெய் தனையால் - எந்தை! வாழிய!- பனிவார் கண்ணள் பலபுலந்து உறையும் 15

ஆய்தொடி அரிவை கூந்தற் போதுகுரல் அணிய வேய்தந் தோயே! 17 </poem>

பாடல்: 105 (அகலறை)

தொகு

அகல்அறை மலர்ந்த அரும்புமுதிர் வேங்கை
ஒள்இலைத் தொடலை தைஇ, மெல்லென
நல்வரை நாடன் தற்பா ராட்ட
யாங்குவல் லுநள்கொல் தானே - தேம்பெய்து,
மணிசெய் மண்டைத் தீம்பால் ஏந்தி, 5
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
நிழற்கயத் தன்ன நீணகர் வரைப்பின்
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம்மருண்டு
பந்துபுடைப் பன்ன பாணிப் பல்லடிச்
சில்பரிக் குதிரை, பல்வேல் எழினி 10

கெடல்அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,
கனைஎரி நடந்த கல்காய் கானத்து
வினைவல் அம்பின் விழுத்தொடை மறவர்
தேம்பிழி நறுங்கள் மகிழின், முனைகடந்து
வீங்குமென் சுரைய ஏற்றினம் தரூஉம் 15

முகைதலை திறந்த வேனிற்
பகைதலை மணந்த பல்அதர்ச் செலவே? 17

பாடல்: 106 (எரியகைந்தன்ன)

தொகு

எரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்துப்,
பொரிஅகைந் தன்ன பொங்குபல் சிறுமீன்,
வெறிகொள் பாசடை, உணீஇயர், பைப்பயப்
பறைதபு முதுசிரல் அசைபுவந்து இருக்கும்
துறைகேழ் ஊரன் பெண்டுதன், கொழுநனை 5

நம்மொடு புலக்கும் என்ப - நாம்அது
செய்யாம் ஆயினும் உய்யா மையின்,
செறிதொடி தெளிர்ப்ப வீசிச், சிறிதுஅவண்
உலமந்து வருகம் சென்மோ - தோழி!-
ஒளிறுவாட் டானைக் கொற்றச் செழியன் 10

வெளிறுஇல் கற்பின் மண்டுஅமர் அடுதொறும்
களிறுபெறு வல்சிப் பாணன் எறியும்
தண்ணுமை கண்ணின் அலைஇயர், தன் வயிறே! 13

பாடல்: 107 (நீசெலவயர)

தொகு

நீசெலவு அயரக் கேட்டொறும், பலநினைந்து,
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த
என்அகத்து இடும்பை களைமார், நின்னொடு
கருங்கல் வியல்அறை கிடப்பி, வயிறுதின்று
இரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல் 5

நெறிசெல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன்நிலைப் பள்ளி அளைசெய்து அட்ட
வால்நிணம் உருக்கிய வாஅல் வெண்சோறு
புகர்அரைத் தேக்கின் அகல்இலை மாந்தும் 10

கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர்
வல்லாண் அருமுனை நீந்தி, அல்லாந்து,
உகுமண்ஊறு அஞ்சும் ஒருகாற் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
ஒருதனித்து ஒழிந்த உரனுடை நோன்பகடு 15

அம்குழை இருப்பை அறைவாய் வான்புழல்
புல்உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
மரைகடிந்து ஊட்டும் வரையகச் சீறூர்
மாலை இன்துணை ஆகிக், காலைப்
பசுநனை நறுவீப் பரூஉப்பரல் உறைப்ப, 20

மணமனை கமழும் கானம்
துணைஈர் ஓதிஎன் தோழியும் வருமே! 22

பாடல்: 108 (புணர்ந்தோர்)

தொகு

புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்று மன்னால்! எவன்கொல்? முத்தம்
வரைமுதற் சிதறிய வைபோல், யானைப்
புகர்முகம் பொருத புதுநீர் ஆலி
பளிங்குசொரி வதுபோற் பாறை வரிப்பக், 5

கார்கதம் பட்ட கண்அகன் விசும்பின்
விடுபொறி ஞெகிழியிற் கொடிபட மின்னி,
படுமழை பொழிந்த பானாட் கங்குல்,
ஆர்உயிர்த் துப்பின் கோள்மா வழங்கும்
இருளிடைத் தமியன் வருதல் யாவதும் 10

அருளான் - வாழி தோழி!- அல்கல்
விரவுப்பொறி மஞ்ஞை வெரீஇ அரவின்
அணங்குடை அருந்தலை பைவிரிப் பவைபோற்,
காயா மென்சினை தோய நீடிப்
பல்துடுப்பு எடுத்த அலங்குகுலைக் காந்தள் 15

அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி
கைஆடு வட்டின் தோன்றும்
மைஆடு சென்னிய மலைகிழ வோனே! 18

பாடல்: 109 (பல்லிதழ்)

தொகு

பல்இதழ் மென்மலர் உண்கண், நல்யாழ்
நரம்புஇசைத் தன்ன இன்தீம் கிளவி,
நலம்நல்கு ஒருத்தி இருந்த ஊரே-
கோடுழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடுகால் யாத்த நீடுமரச் சோலை 5

விழைவெளில் ஆடும் கழைவளர் நனந்தலை;
வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர்
எண்ணுவரம்பு அறியா உவல்இடு பதுக்கைச்
சுரம்கெழு கவலை கோட்பாற் பட்டென
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர், 10

கைப்பொருள் இல்லை ஆயினும், மெய்க்கொண்டு
இன்உயிர் செகாஅர் விட்டுஅகல் தப்பற்குப்
பெருங்களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன்இல் வேந்தன் ஆளும்
வறன்உறு குன்றம் பலவிலங் கினவே. 15

பாடல்:110 (அன்னையறியினும்)

தொகு

அன்னை அறியினும் அறிக; அலர்வாய்
அம்மென் சேரி கேட்பினும் கேட்க;
பிறிதுஒன்று இன்மை அறியக் கூறிக்,
கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்,
கடுஞ்சூள் தருகுவன், நினக்கே; கானல் 5

தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும், சிறுசோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தன மாக எய்த வந்து
'தடமென் பணைத்தோள் மடநல் லீரோ! 10

எல்லும் எல்லின்று; அசைவுமிக உடையேன்;
மெல்இலைப் பரப்பின் விருந்துஉண்டு, யானும்இக்
கல்லென் சிறுகுடித் தங்கின்மற்று எவனோ?'
எனமொழிந் தனனே ஒருவன்; அவற்கண்டு,
இறைஞ்சிய முகத்தேம் புறம்சேர்பு பொருந்தி, 15

'இவைநுமக்கு உரிய அல்ல; இழிந்த
கொழுமீன் வல்சி' என்றனம்; இழுமென
'நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ?' எனக் காலின் சிதையா,
நில்லாது பெயர்ந்த பல்லோர் ருள்ளும் 20

என்னே குறித்த நோக்கமொடு 'நன்னுதால்!
ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி,
யான் 'பெயர்க' என்ன நோக்கித் தான்தன்
நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி,
நின்றோன் போலும் இன்றும்என் கட்கே! 25


பாடல் தரும் செய்தி

தொகு

இந்தப் பாடலைப் பாடியவர் ஆலங்குடி வங்கனார். தலைமகள் தன்னைப் புறங்கூறினாள் என்று பரத்தை தலைமகளின் பாங்காயினோர் கேட்பச் சொல்லுகிற செய்தி இது.

தலைவனைப்பற்றிப் பரத்தை உள்ளுறையாகச் சொல்லும் செய்தி

தொகு

அவன் துறைகெழு ஊரன். அவன் நாட்டுப் பொய்கையில் தாமரைப் பூக்கள் அகல்விளக்கில் சுடர் எரிவது போல ஆங்காங்கே பூத்திருக்கும். அங்கே பொரிகள் சிதறி அலைவது போல மீன்கள் மின்னும். அந்த மீன்களை உண்பதற்காகப் பறக்கமுடியாத சிறகு ஒடிந்த வயது முதிர்ந்த சிரல் என்னும் மீன் கொத்திக் குருவி தாமரை இலையில் அமர்ந்திருக்கும்.

உள்ளுறை

தொகு

தன்னை மீன் என்றும், தலைமகனைச் சிரல் என்றும் பரத்தை குறிப்பிடுகிறாள். பரத்தை சொல்கிறாள், என்னோடு தலைமகன் இருந்தான் என்று அவனைப் புலக்காமல் தலைமகள் என்னைப் புலந்து கூறுகிறாளாம். அவனை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவன் உயிர் வாழ மாட்டான். எனவே நான் செய்தது சரி. அவள் வயிறு வலிக்கட்டும் (எரியட்டும்). அவள் கண்முன் என் வளையல் குலுங்கக் கைவீசிக்கொண்டு நடந்துகாட்டுவேன்.

உவமை

தொகு

அவள் வயிறு எப்படி வலிக்கட்டும் என்பதற்குப் பரத்தை கூறும் உவமை
வெற்றி பெற்று மீண்ட செழியன் என்னும் பாண்டிய மன்னனின் வாட்படை வெட்டவெளியில் போர்கலையை மேலும் கற்கப் போர் செய்துகொண்டிருந்தபோது பாணன் செழியனிடம் களிறுகளைப் பரிசாகப் பெறுவதற்காகத் தண்ணுமை முழக்குவானாம். அப்போது அந்தத் தண்ணுமை முரசம் அடிபட்டு வருந்துவது போலத் தலைமகள் தன் வயிற்றில் அடித்துக்கொண்டு வருந்தவேண்டுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/101_முதல்_110_முடிய&oldid=1234152" இலிருந்து மீள்விக்கப்பட்டது