அகநானூறு/161 முதல் 170 முடிய
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
161 வினைவயிற் பிரிதல் யாவது?- 'வணர்சுரி
வடியாப் பித்தை வன்கண், ஆடவர்
அடியமை பகழி ஆர வாங்கி; வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலைப்
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி 5
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக்
கேட்டனள் கொல்லோ தானே? தோழ் தாழ்பு
சுரும்பு உண ஒலிவரும் இரும்பல் கூந்தல், 10
அம்மா மேனி, ஆயிழைக் குறுமகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்குஎன உருத்த
நல்வரல் இளமுலை நனைய;
பல்லிதழ் உண்கண் பரந்தன பனியே. 14
162 கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்து
அளப்பு அரிது ஆகிய குவைஇருந் தோன்றல,
கடல்கண் டன்ன மாக விசும்பின்
அழற்கொடி அன்ன மின்னுவசிபு நுடங்கக்
கடிதுஇடி உருமொடு கதழுறை சிதறி 5
விளிவுஇடன் அறியா வான்உமிழ் நடுநாள்
அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கிப்,
பனிமயங்கு அசைவளி அலைப்பத், தந்தை
நெடுநகர் ஒருசிறை நின்றனென் ஆக;
அறல்என அவிரும் கூந்தல் மலர்என 10
வாண்முகத்து அலமரும் மாஇதழ் மழைக்கண்,
முகைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல்;
நகைமாண்டு இலங்கும் நலம்கெழு துவர்வாய்க்,
கோல்அமை விழுத்தொடி விளங்க வீசிக்,
கால்உறு தளிரின் நடுங்கி ஆனாது, . 15
நோய்அசா வீட முயங்கினன் - வாய்மொழி
நல்லிசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
நசைபிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்
கோள்அறவு அறியாப் பயம்கெழு பலவின்
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, 20
வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன்
களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர
ஒளிறுவன இழிதரும் உயர்ந்துதோன்று அருவி
நேர்கொள் நெடுவரை கவா அன்
சூரா மகளிரிற் பெறற்குஅரி யோளே. 25
163 விண்அதிர்பு தலைஇய விரவுமலர் குழையத்
தண்மழை பொழிந்த தாழ்பெயற் கடைநாள்,
எமியம் ஆகத் துனிஉளம் கூரச்
சென்றோர் உள்ளிச் சில்வளை நெகிழப்
பெருநகை உள்ளமொடு வருநசை நோக்கி 5
விளியும் எவ்வமொடு 'அளியள்' என்னாது
களிறுஉயிர்த் தன்ன கண்அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
குன்றுநெகிழ்பு அன்ன குளிர்கொள் வாடை!
எனக்கே வந்தனை போறி ! புனற்கால் 10
அயிர்இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழக்,
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
இனையை ஆகிச் செல்மதி;
வினைவிதுப் புறுநர் உள்ளலும் உண்டே! 14
164 கதிர்கை யாக வாங்கி ஞாயிறு
பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி,
விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம்
காடுகவின் எதிரக் கனைபெயல் பொழிதலின்
பொறிவரி இனவண்டு ஆர்ப்பப் பலவுடன் 5
நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற'
வெறியேன் றன்றே வீகமழ் கானம்-
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி,
இகுபனி உறைக்குங் கண்ணொடு இனைபு ஆங்கு
இன்னாது உறைவி தொன்னலம் பெறூஉம் 5
இதுநற் காலம்; கண்டிசின் - பகைவர்
மதின்முகம் முருக்கிய தொடிசிதை மருப்பின்;
கந்துகால் ஒசிக்கும் யானை;
வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறினே! 14
165 கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக்
களிறுவிளிப் படுத்த கம்பலை வெரீஇ,
ஒய்யென எந்த செவ்வாய்க் குழவி
தாதுஎரு மறுகின் மூதூர் ஆங்கண்
எருமை நல் ஆன் பெறுமுலை மாந்தும் 5
நாடுபல இறந்த நன்ன ராட்டிக்கு
ஆயமும் அணிஇழந்து அழுங்கின்று! தாயும்
'இன்தோள் தாராய், இறீஇயர்என் உயிர்! என,
கண்ணும் நுதலும் நீவித், தண்ணெனத்,
தடவுநிலை நொச்சி வரிநிழல் அசைஇத், 10
தாழிக் குவளை வாடுமலர் சூட்டித்,
'தருமணற் கிடந்த பாவைஎன்
அருமக ளே' என முயங்கினள் அழுமே! 13
166 'நல்மரங் குழீஇய நனைமுதிர் சாடி
பல்நாள் அரித்த கோஒய் உடைப்பின்,
மயங்குமழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும்
பழம்பல் நெல்லின் வேளூர் வாயில்,
நறுவிரை தெளித்த நாறிணர் மாலைப், 5
பொறிவரி இனவண்டு ஊதல கழியும்
உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம்,
புனைஇருங் கதுப்பின் நீகடுத் தோள்வயின்
அனையேன் ஆயின், அணங்குக, என்!' என
மனையோட் தேற்றும் மகிழ்நன் ஆயின், 10
யார்கொல்- வாழி, தோழி !- நெருநல்
தார்பூண் களிற்றின் தலைப்புணை தழீஇ,
வதுவை ஈர்அணிப் பொலிந்து, நம்மொடு,
புதுவது வந்த காவிரிக்
கோடுதோய் மலிர்நிறை, ஆடி யோரே? 15
===167===
வயங்குமணி பொருத வகையமை வனப்பின்
பசுங்காழ் அல்குல் மாஅயோ ளொடு
வினைவனப்பு எய்திய புனைபூஞ் சேக்கை,
விண்பொரு நெடுநகர்த் தங்கி, இன்றே
இனிதுடன் கழிந்தன்று மன்னே; நாளைப் 5
பொருந்தாக் கண்ணேம் புலம்வந்து உறுதரச்
சேக்குவம் கொல்லோ, நெஞ்சே! சாத்துஎறிந்து
அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ
ஊர்எழுந்து உலறிய பீர்எழு முதுபாழ் 10
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந்ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென,
மணிப்புறாத் துறந்த மரம்சோர் மாடத்து
எழுதுஅணி கடவுள் போகலின், புல்லென்று 15
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால்நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
குயில்காழ் சிதைய மண்டி, அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த
போர்மடி நல்இறைப் பொதியி லானே! 20
====பாடல் தலும் செய்தி====
இதனைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
- திணை - பாலை
தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான். இன்று இவளோடு மெத்தையில் படுத்திருக்கிறேன். நாளை?
பொருள் தேடச் செல்ல உள்ளேன். அங்குள்ள மக்கள் என்னோடு பொருந்தி இருப்பார்களோ மாட்டார்களோ? கூட்டம் கூட்டமாகச் செல்லும் சாத்து மக்களையே அம்பெய்து வீழ்த்துபவர்கள் அவர்கள். (நானோ தனியே செல்ல உள்ளேன்) அங்கே பீர்க்கங் கொடி படர்ந்திருக்கும் முதிர்ந்த முருங்கை மரத்தில் யானை தன் முதுகை உரசிக்கொள்ளும். (அது முரியும்) எனவே அங்குள்ள பழஞ் சுவர்களில் உரசும். அது இடிந்து விழும். அந்தச் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் கடவுள் ஓவியங்களும் அழியும். எனவே அந்தக் கடவுளுக்குக் கொடுக்கும் பலிப் படையலும் இல்லாமல் போகும். அங்குப் பானாய் துள்ளி விளையாடும். இடிந்த சுவர்களில் கறையான் புற்று ஏறியிருக்கும். அங்குள்ள பொதியில் என்னும் பொது இடத்தில்தான் நான் தூங்கவேண்டி யிருக்கும்.
இப்படியெல்லாம் தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான்.
- பானாய் = ஓநாய்
===168===
யாமம் நும்மொடு கழிப்பி, நோய்மிக,
பனிவார் கண்ணேம் வைகுதும், இனியே:
ஆன்றல் வேண்டும் வான்தோய் வெற்ப!
பல்ஆன் குன்றில் படுநிழல் சேர்ந்த
நல்ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்- 5
கொடைக்கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலிஎழுந்து,
அருவி ஆர்க்கும் பெருவரைச் சிலம்பின்
ஈன்றணி இரும்பிடி தழீஇக் களிறு தன்
தூங்குநடைக் குழவி துயில்புறங் காப்ப, 10
ஒடுங்குஅளை புலம்பப் போகிக், கடுங்கண்
வாள்வரி வயப்புலி நன்முழை உரற,
கானவர் மடிந்த கங்குல்,
மான்அதர்ச் சிறுநெறி வருதல், நீயே? 14
169 மரம்தலை கரிந்து நிலம்பயம் வாட,
அலங்குகதிர் வேய்ந்த அழல்திகழ் புனந்தலைப்,
புலிதொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழிஊன்
கலிகெழு மறவர் காழ்க்கோத்து ஒழிந்ததை
ஞெலிகோற் சிறுதீ மாட்டி, ஒலிதிரைக் 5
கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர்
சுனைகொள் தீநீர்ச் சோற்றுஉலைக் கூட்டும்
சுரம்பல கடந்த நம்வயின் படர்ந்து: நனி
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து
செல்கதிர் மழுகிய புலம்புகொள் மாலை 10
மெல்விரல் சேர்த்திய நுதலள், மல்கிக்
கயலுமிழ் நீரின் கண்பனி வாரப்,
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால், அளியள் திருந்திழை தானே! 14
170 கானலும் கழறாது: கழியும் கூறாது:
தேன்இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது:
ஒருநின் அல்லது பிறிதுயாதும் இலனே:
இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்
கமழ்இதழ் நாற்றம் அமிழ்துஎன நசைஇத்: 5
தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து,
பறைஇய தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் - அலவ! பல்கால்
கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம்
கடற்சிறு காக்கை காமர் பெடையொடு 10
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
வெள்இறாக் கனவும் நள்ளென் யாமத்து,
'நின்னுறு விழுமம் களைந்தோள்
தன்னுறு விழுமம் நீந்துமோ!' எனவோ! 14