அகநானூறு/301 முதல் 310 முடிய
< அகநானூறு
அகநானூறு பக்கங்கள்
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
3. நித்திலக்கோவை
தொகுபாடல்:301 (வறனுறு)
தொகு- 'வறன் உறு செய்யின் வாடுபு வருந்திப்
- படர்மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
- சிறுநனி ஆன்றிகம் என்றி- தோழி-
- நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம்
- ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு 5
- நீர்வாழ் முதலை ஆவித் தன்ன
- ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து
- ஊர்இஃது என்னாஅர் ஊறில் வாழ்க்கை
- சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டிப்
- பாடுஇன் தெண்கிணை கறங்கங் காண்வரக் 10
- குவிஇணர் எருக்கின் ததர்பூங் கண்ணி
- ஆடூஉச் சென்னித் தகைப்ப மகடூஉ
- முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக்
- களரி யாவிரைக் கிளர்பூங் கோதை
- வண்ண மார்பின் வனமுலைத் துயல்வரச் 15
- செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக்
- குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந் திசைப்பக்
- கார்வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
- தேரை ஒலியின் மாணச் சீர் அமைத்து
- சில்லரி கறங்கும் சிறுபல் லியத்தொடு 20
- பல்லூர் பெயர்வனர் ஆடி ஒல்லெனத்
- தலைப்புணர்த்து அசைத்த பல்தொகைக் கலப்பையர்
- இரும்பேர் ஒக்கல் கோடியர் இறந்த
- புன்றலை மன்றங் காணின் வழிநாள்
- அழுங்கன் மூதூர்க்கு இன்னா தாகும்; 25
- அதுவே மறுவினம் மாலை யதனால்
- காதலர் செய்த காதல்
- நீடின்று மறத்தல் கூடுமோ, மற்றே? 28
பாடல்: 302 (சிலம்பிற்)
தொகு- சிலம்பிற் போகிய செம்முக வாழை
- அலங்கல் அம்தோடு அசைவளி யுறுதொறும்
- பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும்
- நல்வரை நாடனொடு அருவி ஆடியும்
- பல்லிதழ் நீலம் படுசுனைக் குற்றும் 5
- நறுவீ வேங்கை இனவண் டார்க்கும்
- வெறிகமழ் சோலை நயந்துவிளை யாடலும்
- அரிய போலும்- காதல்அம் தோழி!-
- இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத
- கரும்பென கவினிய பெருங்குரல் ஏனல் 10
- கிளிபட விளைந்தமை யறிந்தும் 'செல்க' என
- நம்மவண் விடுநள் போலாள் கைம்மிகச்
- சில்சுணங் கணிந்த செறிந்துவீங் கிளமுலை
- மெல்லியல் ஒலிவரும் கதுப்பொடு
- பல்கால் நோக்கும்- அறனில் யாயே. 15
பாடல்: 303 (இடைபிறர்)
தொகு- இடைபிறர் அறிதல் அஞ்சி மறைகரந்து
- பேஎய் கண்ட கனவிற பன்மாண்
- நுண்ணிதின் இயைந்த காமம் வென்வேல்
- மறமிகு தானைப் பசும்பூண் பொறையன்
- கார்புகன் றெடுத்த சூர்புகல் நனந்தலை 5
- மாஇருங் கொல்லி யுச்சித் தாஅய்த்
- ததைந்துசெல் அருவியின் அலர்எழப் பிரிந்தோர்
- புலம்கந் தாக இரவலர் செலினே
- வரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும்
- உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின் 10
- நிரைபறைக் குரீஇயினம் காலைப் போகி
- முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் ஓராங்கு
- இரைதேர் கொட்பின் வாகிப் பொழுதுபடப்
- படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு
- வருவாஎன்று உணர்ந்த மடங்கெழு நெஞ்சம்! 15
- ஐயந் தெளியரோ நீயே பலவுடன்
- வறன்மரம் பொருந்திய சிள்வீ டுமணர்
- கணநிரை மணியின் ஆர்க்கும் சுரனிறந்து
- அழிநீர் மீன்பெயர்ந் தாங்கவர்
- வழிநடைச் சேறல் வலித்திசின் யானே. 20
பாடல்:304 (இருவிசும்பு)
தொகு- இருவிசும்பு இவர்ந்த கருவி மாமழை
- நீர்செறி நுங்கின் கண்சிதர்ந் தவைபோல்
- சூர்ப்பனி பன்ன தண்வரல் ஆலியொடு
- பரூஉப்பெயல் அழிதுளி தலைஇ வான்நவின்று
- குரூஉத்துளி பொழிந்த பெரும்புலா வைகறை 5
- செய்துவிட் டன்ன செந்நில மருங்கிற்
- செறித்துநிறுத் தன்ன தெள்ளறல் பருகிச்
- சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
- வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
- அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதியச் 10
- சுரும்புமிர்பு ஊதப் பிடவுத்தளை அவிழ
- அரும்பொறி மஞ்ஜை ஆல வரிமணல்
- மணிமிடை பவளம் போல அணிமிகக்
- காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவும்
- ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்பப் 15
- புலனணி கொண்ட காரெதிர் காலை
- 'ஏந்துகோட்டு யானை வேந்தன் பாசறை
- வினையொடு வேறுபுலத்து அல்கி நன்றும்
- அறவர் அல்லர்நம் அருளா தோரன
- நந்நோய் தன்வயின் அறியாள்
- எந்நொந்து புலக்குங்கொல் மாஅ யோளே? 21
பாடல் 305 (பகலினும்)
தொகு- பகலினும் அகலா தாகி யாமம்
- தவலில் நீத்தமொடு ஐயெனக் கழியத்
- தளிமழை பொழிந்த தண்வரல் வாடையொடு
- பனிமீக் கூரும் பைதற் பானாள்
- பருகு வன்ன காதலொடு திருகி 5
- மெய்புகு வன்ன கைகவர் முயக்கத்து
- ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ
- அருளி லாளர் பொருள்வயின் அகல
- எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
- யானெவன் உளனே- தோழி!- தானே 10
- பராரைப் பெண்ணைச் சேக்குங் கூர்வாய்
- ஒரு தனி அன்றில் உயவுக்குரல் கடைஇய
- உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
- கனைஎரி பிறப்ப ஊதும்
- நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே? 16
பாடல்: 306 (பெரும்பெயர்)
தொகு- பெரும்பெயர் மகிழ்ந! பேணா தகன்மோ!
- பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
- முட்கொம் பீங்கைத் துய்த்தலைப் புதுவீ
- ஈன்ற மாத்தின் இளந்தளிர் வருட
- ஆர்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயற் 5
- கழனிக் கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து
- பழன யாமை பசுவெயிற் கொள்ளும்
- நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
- இதுவோ மற்றுநின் செம்மல்? மாண்ட
- மதியேர் ஒள்நுதல் வயங்கிழை ஒருத்தி- 10
- இகழ்ந்த சொல்லுஞ் சொல்லிச் சிவந்த
- ஆயிதழ் மழைக்கண் நோயுற நோக்கித்
- தண்ணறுங் கமழ்தார் பரீஇயினள் நும்மொடு
- ஊடினள்- சிறுதுனி செய்தெம்
- மணன்மலி மறுகின் இறந்திசி னோளே. 15
பாடல்: 307 (சிறுநுதல்)
தொகு- 'சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய்
- அகலெழில் அல்குல் அவ்வரி வாடப்
- பகலுங் கங்குலும் மயங்கிப் பையெனப்
- பெயல்உறு மலரின் கண்பனி வார
- ஈங்கிவள் உழக்கும்' என்னாது வினைநயந்து 5
- நீங்கல் ஒல்லுமோ- ஐய!- வேங்கை
- அடுமுரண் தொலைத்த நெடுநல் யானை
- மையலம் கடாஅஞ் செருக்கி மதஞ்சிறந்து
- இயங்குநர்ச் செருக்கும் எய்படு நனந்தலைப்
- பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் 10
- புற்றுடைச் சுவர புதலிவர் பொதியிற்
- கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
- உடனுறை பழமையின் துறத்தல் செல்லாது
- இரும்புறாப் பெடையொடு பயிரும்
- பெருங்கல் வைப்பின் மலைமுதல் ஆறே? 15
பாடல்:308 (உழுவையொடு)
தொகு- உழுவையொ டுழந்த உயங்குநடை ஒருத்தல்
- நெடுவகிர் விழுப்புண் கழாஅக் கங்குல்
- ஆலி அழிதுளி பொழிந்த வைகறை
- வால்வெள் அருவிப் புனல்மலிந் தொழுகலின்
- இலங்குமலை புதைய வெண்மழை கவைஇக் 5
- கலஞ்சுடு புகையிற் றோன்றும் நாட!
- இரவின் வருதல் எவனோ? பகல்வரின்
- தொலையா வேலின் வண்மகிழ் எந்தை
- களிறணந் தெய்தாக் கன்முகை இதணத்துச்
- சிறுதினைப் படுகிளி எம்மொடு ஓப்பி 10
- மல்ல லறைய மலிர்சுனைக் குவளை
- தேம்பாய் ஒண்பூ நறும்பல அடைச்சிய
- கூந்தல் மெல்லணைத் துஞ்சிப் பொழுதுபடக்
- காவலர்க் கரந்து கடிபுனம் துழைஇய
- பெருங்களிற்று ஒருத்தலின் பெயர்குவை
- கருங்கோற் குறிஞ்சிநும் உறைவி னூர்க்கே. 16
பாடல்:309 (வயவாள்)
தொகு- வயவாள் எறிந்து வில்லின் நீக்கி
- பயநிரை தழீஇய கடுங்கண் மழவர்
- அம்புசேண் படுத்து வன்புலத்து உய்த்தெனத்
- தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
- கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப் 5
- புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்
- களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
- அரலை வெண்காழ் ஆலியின் தாஅம்
- காடுமிக நெடிய என்னார் கோடியர்
- பெரும்படைக் குதிரை நற்போர் வானவன் 10
- திருந்துகழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு
- நாஞ்செலின் எவனோ- தோழி!- காம்பின்
- விளைகழை உடைந்த கவண்விசைக் கடிஇடிக்
- கனைசுடர் அமையத்து வழங்கல் செல்லாது
- இரவுப்புனம் மேய்ந்த உரவுச்சின வேழம் 15
- தண்பெரும் படாஅர் வெரூஉம்
- குன்றுவிலங் கியவினவர் சென்ற நாட்டே? 17
பாடல்:310 (கடுந்தேர்)
தொகு- கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்ற
- நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்
- தொழுதகு மெய்யை அழிவுமுந் துறுத்துப்
- பன்னாள் வந்து பணிமொழி பயிற்றலின்
- குவளை யுண்கண் கலுழ நின்மாட்டு 5
- இவளும் பெரும்பே துற்றனள் ஓரும்
- தாயுடை நெடுநகர்த் தமர்பா ராட்டக்
- காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்
- பெருமடம் உடையரோ சிறிதே; அதனால்
- குன்றின் தோன்றும் குவவுமணற் சேர்ப்ப! 10
- இன்றிவண் விரும்பா தீமோ! சென்றப்
- பூவிரி புன்னை மீதுதோன்று பெண்ணைக்
- கூஉம்கண் ணஃதே தெய்ய- ஆங்கண்
- உப்பொய் உமணர் ஒழுகையொடு வந்த
- இளைப்படு பேடை இரியக் குரைத்தெழுந்து 15
- உருமிசைப் புணரி யுடைதரும்
- பெருநீர் வேலிஎம் சிறுநல் ஊரே. 17