அகநானூறு/361 முதல் 370 முடிய

அகநானூறு பக்கங்கள்


அகநானூறு

தொகு

பாடல்:361 (தூமலர்த் தாமரை)

தொகு
'தூமலர்த் தாமரைப் பூவின் அங்கண்
மாஇதழ்க் குவளை மலர்பிணைத் தன்ன
திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண்
அணிவளை முன்கை ஆயிதழ் மடந்தை
வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும் 5
கவவுப்புலந்து உறையும் கழிபெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியிற் சிறந்ததொன்று இல்லென
அன்பால் மொழிந்த என்மொழி கொள்ளாய்
பொருள்புரி வுண்ட மருளி நெஞ்சே!-
கரியாப் பூவின் பெரியோர் ஆர 10
அழலெழு தித்தியம் மடுத்த யாமை
நிழலுடை நெடுங்கயம் புகல்வேட் டாஅங்கு
உள்ளுதல் ஓம்புமதி இனிநீ முள்ளெயிற்றுச்
சின்மொழி அரிவை தோளே- பன்மலை
வெவ்வறை மருங்கின் வியன்சுரம்
எவ்வம் கூர இறந்தனம் யாமே! 16

பாடல்:362 (பாம்புடை)

தொகு
பாம்புடை விடர பனிநீர் இட்டுத்துறை
தேம்கலந்து ஒழுக யாறுநிறைந் தனவே
வெண்கோட்டு யானை பொருத புண்கூர்ந்து
பைங்கண் வல்லியம் கல்லளைச் செறிய
முருக்கரும்பு அன்ன வள்ளுகிர் வயப்பிணவு 5
கடிகொள வழங்கார் ஆறே ஆயிடை
எல்லிற்று என்னான் வென்வேல் ஏந்தி
நசைதர வந்த நன்ன ராளன்
நெஞ்சுபழு தாக வறுவியன் பெயரின்
இன்றிப் பொழுதும் யான்வா ழலனே 10
எவன்கொல்?- வாழி தோழி!- நம் இடைமுலைச்
சுணங்கணி முற்றத்து ஆரம் போலவும்
சிலம்புநீடு சோலைச் சிதர்தூங்கு நளிர்ப்பின்
இலங்குவெள் அருவி போலவும்
நிழல்கொண் டனவால், திங்கள்அம் கதிரே! 15

பாடல்:363 (நிரைசெலல்)

தொகு
நிரைசெலல் இவுளி விரைவுடன் கடைஇ
அகலிரு விசும்பிற் பகல்செலச் சென்று
மழுகுசுடர் மண்டிலம் மாமலை மறையப்
பொழுதுகழி மலரிற் புனையிழை! சாஅய்,
அணை அணைந்து இனையை ஆகல்! கணையரைப் 5
புல்லிலை நெல்லிப் புகரில் பசுங்காய்
கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்பப்
பொலஞ்செய் காசிற் பொற்பத் தாஅம்
அத்தம் நண்ணி அதர்பார்த் திருந்த
கொலைவெங் கொள்கைக் கொடுந்தொழின் மறவர் 10
ஆறுசெல் மாக்கள் அருநிறத்து எறிந்த
எஃகுஉறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய
வளைவாய்ப் பருந்தின் வள்ளுகிர்ச் சேவல்
கிளைதரு தெள்விளி கெழுமுடைப் பயிரும்
இன்னா வெஞ்சுரம் இறந்தோர் முன்னிய 15
செய்வினை வலத்தர் ஆகி இவணயந்து
எய்தவந் தனரே!- தோழி!- மையெழில்
துணையேர் எதிர்மலர் உண்கண்
பிணையேர் நோக்கம் பெருங்கவின் கொளவே. 19

பாடல்:364 (மாதிரம்)

தொகு
மாதிரம் புதையப் பாஅய்க் கால்வீழ்த்து
ஏறுடைப் பெருமழை பொழிந்தென அவல்தோறு
ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க
ஆய்பொன் அவிர்இழை தூக்கி யன்ன
நீடிணர்க் கொன்றை- கவின்பெறக் காடுடன் 5
சுடர்புரை தோன்றிப் புதல்தலைக் கொளாஅ
முல்லை இல்லமொடு மலரக் கல்ல
பகுவாய்ப் பைஞ்சுனை மாவுண மலிரக்
கார்தொடங் கின்றே காலை காதலர்
வெஞ்சின வேந்தன் வியன்பெரும் பாசறை 10
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்
யாதுசெய் வாங் கொல்?- தோழி!- நோதகக்
கொலைகுறித் தன்ன மாலை
துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே! 14

பாடல்:365 (அகல்வாய்)

தொகு
அகல்வாய் வானம் ஆலிருள் பரப்பப்
பகல்ஆற்றுப் படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை
அத்தம் நடுகல் ஆள்என உதைத்த
கான யானைக் கதுவாய் வள்ளுகிர் 5
இரும்பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்
கடுங்கண் ஆடவர் ஏமுயல் கிடக்கை
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
என்றூழ் வெஞ்சுரம் தந்த நீயே!
துயர்செய்து ஆற்றா யாகிப் பெயர்பாங்கு 10
உள்ளினை- வாழிய- நெஞ்சே!- வென்வேல்
மாவண் கழுவுள் காமூர் ஆங்கண்
பூதம் தந்த பொரியரை வேங்கைத்
தண்கமழ் புதுமலர் நாறும்
அஞ்சில் ஓதி ஆய்மடத் தகையே. 15

பாடல்:366 (தாழ்சினை)

தொகு
தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய
நீர்சூழ் வியன்களம் பொலியப் போர்புஅழித்துக்
கள்ளார் களமர் பகடுதலை மாற்றிக்
கடுங்காற்று எறியப் போகிய துரும்புடன்
காயல் சிறுதடிக் கண்கெடப் பாய்தலின் 5
இருநீர்ப் பரப்பின் பனித்துறைப் பரதவர்
தீம்பொழி வெள்ளுப்புச் சிதைதலின் சினைஇக்
கழனி உழவரொடு மாறுஎதிர்ந்து மயங்கி
இருஞ்சேற்று அள்ளல் எறிசெருக் கண்டு
நரைமூ தாளர் கைபிணி விடுத்து 10
நனைமுதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம்பூண் எவ்வி நீழல் அன்ன
நலம்பெறு பணைத்தோள் நன்னுதல் அரிவையொடு
மணங்கமழ் தண்பொழில் அல்கி நெருநை
நீதற் பிழைத்தமை அறிந்து
கலுழ்ந்த கண்ணளெம் அணங்கன் னானே. 16

பாடல்:367 (இலங்குசுடர்)

தொகு
இலங்குசுடர் மண்டிலம் புலந்தலைப் பெயர்ந்து
பல்கதிர் மழுகிய கல்சேர் அமையத்து
அலந்தலை மூதேறு ஆண்குரல் விளிப்ப
மனைவளர் நொச்சி மாசேர்பு வதிய
முனையுழை இருந்த அம்குடிச் சீறூர்க் 5
கருங்கால் வேங்கைச் செஞ்சுவல் வரகின்
மிகுபதம் நிறைந்த தொகுகூட்டு ஒருசிறைக்
குவியடி வெருகின் பைங்கண் ஏற்றை
ஊன்நசைப் பிணவின் உயங்குபசி களைஇயர்
தளிர்புரை கொடிற்றின் செறிமயிர் எருத்திற் 10
கதிர்த்த சென்னிக் கவிர்ப்பூ அன்ன
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும் இனிது மன்றம்ம-
நல்லக வனமுலை அடையப் புல்லுதொறும்
உயிர்குழைப் பன்ன சாயற்
செயிர்தீர் இன்துணைப் புணர்ந்திசி னோர்க்கே. 16

பாடல்:368 (தொடுதோல்

தொகு
தொடுதோற் கானவன் சூடுறு வியன்புனம்
கரிபுறம் கழீஇய பெரும்பாட்டு ஈரத்துத்

தோடுகொள் பைந்தினை நீடுகுரல் காக்கும்

ஒண்தொடி மகளிர்க்கு ஊசல் ஆக
ஆடுசினை ஒழித்த கோடுஇணர் கஞலிய 5
குறும்பொறை அயலது நெடுந்தாள் வேங்கை
மடமயிற் குடுமியின் தோன்றும் நாடன்
உயர்வரை மருங்கின் காந்தளம் சோலைக்
குரங்குஅறி வாரா மரம்பயில் இறும்பிற்
கடிசுனைத் தெளிந்த மணிமருள் தீநீர் 10
பிடிபுணர் களிற்றின் எம்மொடு ஆடிப்
பல்நாள் உம்பர்ப் பெயர்ந்து சில்நாள்
கழியா மையே வழிவழிப் பெருகி
அம்பணை விளைந்த தேக்கட் டேறல்
வண்டுபடு கண்ணியர் மகிழும் சீறூர் 15
எவன்கொல்- வாழி, தோழி!- கொங்கர்
மணியரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன
அலர்ஆ கின்றது பலர்வாய்ப் பட்டே? 19

பாடல்:369 (கண்டிசின்)

தொகு
கண்டிசின்- மகளே!- கெழீஇ இயைவெனை
ஒண்தொடி செறித்த முன்கை ஊழ்கொள்பு
மங்கையர் பலபா ராட்டச் செந்தார்க்
கிள்ளையும் தீம்பால் உண்ணா மயிலியற்
சேயிழை மகளிர் ஆயமும் அயரா 5
தாழியும் மலர்பல அணியா கேழ்கொளக்
காழ்புனைந்து இயற்றிய வனப்பமை நோன்சுவர்
பாவையும் பலிஎனப் பெறாஅ நோய்பொர
இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன்
கொடியோள் முன்னியது உணரேன் 'தொடியோய்! 10
இன்றுநின் ஒலிகுரல் மண்ணல்' என்றதற்கு,
எற்புலந்து அழிந்தன ளாகித் தற்றகக்
கடல்அம் தானைக் கைவண் சோழர்
கெடல்அரு நல்லிசை உறந்தை அன்ன
நிதியுடை நல்கர்ப் புதுவது புனைந்து 15
தமர்மணன் அயரவும் ஒல்லாள் கவர்முதல்
ஓமை நீடிய உலவை நீளிடை
மணியணி பலகை மாக்காழ் நெடுவேல்
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியாத் தேஎத்து அருஞ்சுரம் மடுத்த 20
சிறியோற்கு ஒத்தஎன் பெருமடத் தகுவி
'சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓர்ஆ யாத்த ஒருதூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ
மேயினள் கொல்?' என நோவல் யானே. 26

பாடல்:370 (வளைவாய்க்)

தொகு

<poem>

'வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇ
இளையோர் செல்ப எல்லும் எல்லின்று
அகலிலைப் புன்னைப் புகர்இல் நீழல்
பகலே எம்மொடு ஆடிஇரவே
காயல் வேய்ந்த தேயா நல்லில் 5
நோயொடு வைகுதி ஆயின் நுந்தை
அருங்கடிப் படுவலும்' என்றி; மற்று 'நீ
செல்லல்' என்றலும் ஆற்றாய் 'செலினே
வாழலென்' என்றி ஆயின் ஞாழல்
வண்டுபடத் ததைந்த கண்ணி நெய்தல் 10
தண்ணரும் பைந்தார் துயல்வர அந்திக்
கடல்கெழு செல்வி கரைநின் றாங்கு
நீயே கானல் ஒழிய யானே
வெறிகொள் பாவையிற் பொலிந்தஎன் அணிதுறந்து
ஆடுமகள் போலப் பெயர்தல்
ஆற்றேன் தெய்ய அலர்கவிவ் வூரே! 16

<:/poem>

பாடல் தரும் செய்தி

தொகு

இது அம்மூவனார் பாடிய நெய்தல் திணைப் பாடல். தலைவிக்காகக் காத்திருக்கும் தலைவன் கேட்கும்படி தோழி தலைவியிடம் கொல்வது போல் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

தோழி சொல்கிறாள் - பகலில் கோதையர் வண்டல் விளையாடுவர். இளையோர் அதனை அழித்துவிட்டுச்('தைஇ') செல்வர். அப்போது நீ அவரைப் பார்த்தாய். இரவில் தூங்காமல் இருக்கிறாய். அவரிடம் செல்லாம் என்றால் தந்தை தடுபார்('அருங்கடிப் படுவல்') என்கிறாய். அவன் இல்லாமல் வாழமாட்டேன் என்றும் சொல்கிறாய். நீயே நெய்தற்பூ மாலையைப் போட்டுக்கொண்டு கடல் தெய்வம் போலக் கானலில் நிற்பதுதான் அவனை உடையும் வழி. இப்படி நீ செய்யாவிட்டால் நான் என் அணிகலன்களைக் கழற்றி வைத்துவிட்டு உடல் வித்தை காட்டும் ஆடுகள மகளைப் போலச் சென்றுவிடுவேன்.

வண்டல்

தொகு

மகளிர் மணலில் வண்டல் விளையாடுவர். ஆண்களில் இளையோர் அதனை அழித்து விளையாடுவர்.

உடல் வித்தை gymnastics

தொகு

உடல் வித்தை சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. இந்த விளையாட்டின்போது அணிகலன்கள் இல்லாமல் விளையாடுவர்.

கடல்கெழு செல்வி

தொகு

நெய்தல் நிலத் தெய்வத்தைக் கடல் கெழு செல்வி என்பர். அதற்கு மாலை சூட்டி வழிபடுவது சங்ககால வழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/361_முதல்_370_முடிய&oldid=480945" இலிருந்து மீள்விக்கப்பட்டது