அகநானூறு/51 முதல் 60 முடிய
< அகநானூறு
அகநானூறு பக்கங்கள்
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
1. களிற்றியானை நிரை
தொகுபாடல்: 51 (ஆள்வழக்)
தொகு- ஆள்வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர்தெற,
- நீள்எரி பரந்த நெடுந்தாள் யாத்து,
- போழ்வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
- முடைநசை இருக்கைப் பெடைமுகம் நோக்கி,
- ஊன்பதித் தன்ன வெருவரு செஞ்செவி 5
- எருவைச் சேவல் கரிபுசிறை தீய,
- வேனில் நீடிய வேய்உயர் நனந்தலை,
- நீஉழந்து எய்தும் செய்வினைப் பொருட்பிணி
- பல்இதழ் மழைக்கண் மாஅ யோள்வயிற்
- பிரியின் புணர்வது ஆயிற், பிரியாது. 10
- ஏந்துமுலை முற்றம் வீங்கப், பல்வீழ்
- சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
- மனைமுதல் வினையொடும் உவப்ப,
- நினை - மாண் நெஞ்சம்!- நீங்குதன் மறந்தே. 14
பாடல்: 52 (வலந்தவள்ளி)
தொகு- 'வலந்த வள்ளி மரன்ஓங்கு சாரல்,
- கிளர்ந்த வேங்கைச் சேண்நெடும் பொங்கர்ப்
- பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள்
- இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
- "ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் 5
- ஆகொள் வயப்புலி ஆகும் அஃது" எனத்தம்
- மலைகெழு சீறூர் புலம்பக், கல்லெனச்
- சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
- நெஞ்சுஅமர் வியன்மார்பு உடைத்துஎன அன்னைக்கு
- அறிவிப் பேம்கொல்? அறியலெம் கொல்?' என 10
- இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபாற்
- சேர்ந்தன்று - வாழி, தோழி!- 'யாக்கை
- இன்உயிர் கழிவது ஆயினும், நின்மகள்
- ஆய்மலர் உண்கண் பசலை
- காம நோய்' எனச் செய்யா தீமே! 15
பாடல்:53 (அறியாய்)
தொகு- அறியாய், வாழி, தோழி! இருள்அற
- விசும்புடன் விளங்கும் விரைசெலல் திகிரிக்
- கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய,
- நெடுங்கான் முருங்கை வெண்பூத் தாஅய்,
- நீர்அற வறந்த நிரம்பா நீள்இடை, 5
- வள்எயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
- கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
- உள்ஊன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
- பொரிஅரை புதைத்த புலம்புகொள் இயவின்,
- விழுத்தொடை மறவர் வில்இட வீழ்ந்தோர் 10
- எழுத்துடை நடுகல் இன்நிழல் வதியும்
- அருஞ்சுரக் கவலை நீந்தி, என்றும்,
- 'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
- வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
- பொருளே காதலர் காதல்;
- 'அருளே காதலர்' என்றி, நீயே. 16
பாடல்: 54 (விருந்தின்)
தொகு- விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
- வேந்தனும் வெம்பகை தணிந்தனன்; தீம்பெயற்
- காரும் ஆர்கலி தலையின்று: தேரும்
- ஓவத் தன்ன கோபச் செந்நிலம்,
- வள்வாய் ஆழி உள்உறுபு உருளக், 5
- கடவுக காண்குவம் - பாக! மதவு நடைத்
- தாம்புஅசை குழவி வீங்குசுரை மடியக்,
- கனையலம் குரல் காற்பரி பயிற்றிப்,
- படுமணி மிடற்ற பயநிரை ஆயம்
- கொடுமடி உடையர் கோற்கைக் கோவலர் 10
- கொன்றையம் குழலர் பின்றைத் தூங்க,
- மனைமனைப் படரும் நனைநகு மாலைத்,
- தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
- பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்இலைப்
- புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர் 15
- நீர்குடி சுவையின் தீவிய மிழற்றி,
- 'முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
- பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி,
- வருகுவை ஆயின், தருகுவென் பால்' என,
- விலங்கு அமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித் 20
- திதலை அல்குல்எம் காதலி
- புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே! 22
பாடல்: 55 (காய்ந்துசெலற்)
தொகு- காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின்,
- ஈந்துகுருகு உருகும் என்றூழ் நீள்இடை,
- உளிமுக வெம்பரல் அடிவருத் துறாலின்,
- விளிமுறை அறியா வேய்கரி கானம்,
- வயக்களிற்று அன்ன காளையொடு என்மகள் 5
- கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே! ஒழிந்துயாம்
- ஊதுஉலைக் குருகின் உள்உயிர்த்து, அசைஇ,
- வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
- கண்படை பெறேன், கனவ - ஒண்படைக்
- கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் 10
- பொருதுபுண் நாணிய சேர லாதன்
- அழிகள மருங்கின் வான்வடக் கிருந்தென,
- இன்னா இன்உரை கேட்ட சான்றோர்
- அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
- பெரும்பிறிது ஆகி யாங்குப், பிரிந்து இவண் 15
- காதல் வேண்டி, எற் றுறந்து
- போதல் செல்லாஎன் உயிரொடு புலந்தே! 17
பாடல்: 56 (நகையாகின்றே)
தொகு- நகை ஆகின்றே - தோழி! - நெருநல்-
- மணிகண் டன்ன துணிகயம் துளங்க,
- இரும்புஇயன் றன்ன கருங்கோட்டு எருமை,
- ஆம்பல் மெல்லடை கிழியக், குவளைக்
- கூம்புவிடு பன்மலர் மாந்திக், கரைய 5
- காஞ்சி நுண்தாது ஈர்ம்புறத்து உறைப்ப,
- மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
- தண்துறை ஊரன் திண்தார் அகலம்
- வதுவை நாள்அணிப் புதுவோர்ப் புணரிய,
- பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் 10
- புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ்இட்டு,
- எம்மனைப் புகுதந் தோனே; அதுகண்டு
- மெய்ம்மலி உவகை மறையினென், எதிர்சென்று,
- 'இம்மனை அன்று; அஃது உம்மனை' என்ற
- என்னும் தன்னும் நோக்கி,
- மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே. 16
பாடல்: 57 (சிறுபைந்)
தொகு- சிறுபைந் தூவிச் செங்காற் பேடை
- நெடுநீர் வானத்து, வாவுப்பறை நீந்தி
- வெயில்அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
- பெறுநாள் யாணர் உள்ளிப், பையாந்து,
- புகல்ஏக் கற்ற புல்லென் உலவைக் 5
- குறுங்கால் இற்றிப் புன்தலை நெடுவீழ்
- இரும்பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொரப்,
- பெருங்கை யானை நிவப்பின் தூங்கும்
- குன்ற வைப்பின் என்றூழ் நீள்இடை
- யாமே எமியம் ஆகத், தாமே 10
- பசுநிலா விரிந்த பல்கதிர் மதியிற்
- பெருநல் ஆய்கவின் ஒரீஇச், சிறுபீர்
- வீஏர் வண்ணம் கொண்டன்று கொல்லோ-
- கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
- முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக் 15
- களிறுபட எருக்கிய கல்லென் ஞாட்பின்
- அரும்புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து,
- பானாட் கங்குலும் பகலும்
- ஆனாது அழுவோள் - ஆய்சிறு நுதலே! 19
பாடல்: 58 (இன்னிசை)
தொகு- இன்இசை உருமொடு கனைதுளி தலைஇ,
- மன்னுயிர் மடிந்த பானாட் கங்குல்
- காடுதேர் வேட்டத்து விளிவுஇடம் பெறாஅது,
- வரிஅதள் படுத்த சேக்கை, தெரிஇழைத்
- தேன்நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை, 5
- கூதிர் இல் செறியும் குன்ற நாட!
- வனைந்து வரல் இளமுலை ஞெமுங்கப், பல்ஊழ்
- விளங்குதொடி முன்கை வளைந்துபுறம் சுற்ற,
- நின்மார்பு அடைதலின் இனிது ஆகின்றே-
- நும்இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும் 10
- தண்வரல் அசைஇய பண்புஇல் வாடை
- பதம்பெறு கல்லாது இடம்பார்த்து நீடி-
- மனைமரம் ஒசிய ஒற்றிப்
- பலர்மடி கங்குல், நெடும்புற நிலையே! 14
பாடல்: 59 (தண்கயத்து)
தொகு- தண்கயத்து அமன்ற வண்டுபடு துணைமலர்ப்
- பெருந்தகை இழந்த கண்ணினை, பெரிதும்
- வருந்தினை, வாழியர், நீயே!- வடாஅது
- வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை,
- அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் 5
- மரம்செல மிதித்த மாஅல் போலப்
- புன்தலை மடப்பிடி உணீஇயர், அம்குழை,
- நெடுநிலை யாஅம் ஒற்றி, நனைகவுள்
- படிஞிமிறு கடியும் களிறே- தோழி!
- சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல், 10
- சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து,
- அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை,
- இன்தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த
- தண்நறுங் கழுநீர்ச் செண்இயற் சிறுபுறம்
- தாம்பா ராட்டிய காலையும் உள்ளார், 15
- வீங்குஇறைப் பணைத்தோள் நெகிழச், சேய்ந்நாட்டு
- அருஞ்செயற் பொருட்பிணி முன்னி, நப்
- பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே! 18
பாடல்: 60 (பெருங்கடற்)
தொகு- பெருங்கடற் பரப்பில் சேயிறா நடுங்கக்
- கொடுந்தொழின் முகந்த செங்கோல் அவ்வலை
- நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
- உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு
- அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து, 5
- கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
- திண்தேர்ப் பொறையன் தொண்டி அன்னஎம்
- ஒண்தொடி ஞெமுக்கா தீமோ தெய்ய;
- 'ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை,
- கோதை ஆயமொடு வண்டல் தைஇ, 10
- ஓரை ஆடினும் உயங்கும்நின் ஒளி' எனக்
- கொன்னும் சிவப்போள் காணின், வென்வேற்
- கொற்றச் சோழர் குடந்தை வைத்த
- நாடுதரு நிதியினுஞ் செறிய
- அருங்கடிப் படுக்குவள், அறன்இல் யாயே 15