புறநானூறு/பாடல் 111-120


111

விறலிக்கு எளிது! தொகு

பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி. துறை: மகள் மறுத்தல்.
சிறப்பு: பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல்.

அளிதோ தானே, பேரிருங் குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.

112

உடையேம் இலமே! தொகு

பாடியவர்: பாரி மகளிர்
திணை: பொதுவியல் துறை: கையறு நிலை

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

113

பறம்பு கண்டு புலம்பல்! தொகு

பாடியவர் : கபிலர்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
சிறப்பு : நட்புக் கெழுமிய புலவரின் உள்ளம்.

மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி,
நட்டனை மன்னோ, முன்னே; இனியே,
பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று,
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச்
சேறும் - வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே!
கோல் திரள் முன்கைக் குறுந் தொடி மகளிர்
நாறு இருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.

114

உயர்ந்தோன் மலை! தொகு

பாடியவர் : கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
சிறப்பு : மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது.

ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்; சிறு வரை
சென்று நின் றோர்க்கும் தோன்றும், மன்ற;
களிறு மென்று இட்ட கவளம் போல,
நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
வார் அசும்பு ஒழுகு முன்றில்,
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.

115

அந்தோ பெரும நீயே! தொகு

பாடியவர் : கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
சிறப்பு : பறம்பின் வளமை.

ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,
வாக்க உக்க தேக் கள் தேறல்
கல்அலைத்து ஒழுகும் மன்னே! பல் வேல்,
அண்ணல் யானை, வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே!

116

குதிரையும் உப்புவண்டியும்! தொகு

பாடியவர் : கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை

தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்,
ஏந்தெழில் மழைக் கண், இன் நகை, மகளிர்
புன் மூசு கவலைய முள் முடை வேலிப்,
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண்,
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்,
ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
உப்பு ஓய் ஒழுகை எண்ணுப மாதோ;
நோகோ யானே; தேய்கமா காலை!
பயில் இருஞ் சிலம்பிற் கலை பாய்ந்து உகளவும்,
கலையுங் கொள்ளா வாகப்,பலவும்
காலம் அன்றியும் மரம் பயம் பகரும்
யாணர் அறாஅ வியன்மலை அற்றே
அண்ணல் நெடுவரை ஏறித், தந்தை
பெரிய நறவின், கூர் வேற் பாரியது
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த
வலம் படுதானை வேந்தர்
பொலம் படைக் கலிமா எண்ணு வோரே.

117

தந்தை நாடு! தொகு

பாடியவர் : கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை

மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும்,
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர,
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்,
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்,
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே;
பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே.

118

சிறுகுளம் உடைந்துபோம்! தொகு

பாடியவர் : கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை

அறையும் பொறையும் மணந்த தலைய,
எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்
தெண் ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ-
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரி தண் பறம்பு நாடே!

119

வேந்தரிற் சிறந்த பாரி! தொகு

பாடியவர் : கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
சிறப்பு: 'நிழலில் நீளிடைத் தனிமரம்' போல விளங்கிய பாரியது வள்ளன்மை.

கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்,
செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து!
மெந்தினை யாணர்த்து; நந்துங் கொல்லோ;
நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்,
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

120

கம்பலை கண்ட நாடு! தொகு

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்
கார்ப் பெயர் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப்,
பூழி மயங்கப் பல உழுது, வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி,
மென் மயிற் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக்,
கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து,
வாலிதின் விளைந்த புது வரகு அரியத்
தினை கொய்யக், கவ்வை கறுப்ப, அவரைக்
கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம்ஆக,
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து.
நறுநெய்க் கடலை விசைப்பச் சோறு அட்டுப்,
பெருந் தோள் தாலம் பூசல் மேவர,
வருந்தா யாணர்த்து; நந்துங் கொல்லோ:
இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடு கழை நரலும் சேட் சிமைப், புலவர்
பாடி யானாப் பண்பிற் பகைவர்
ஓடுகழல் கம்பலை கண்ட
செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_111-120&oldid=1397505" இலிருந்து மீள்விக்கப்பட்டது