புறநானூறு/பாடல் 321-330


321

கண்ட மனையோள்! தொகு

பாடியவர்: வீரை வெளியனார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை

முன்றில் முஞ்ஞையடு முசுண்டை பம்பிப்,
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்,
பார்வை மடப்பிணை தழீஇப், பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,
இவ்வழங் காமையின், கல்லென ஒலித்து,
மான்அதட் பெய்த உணங்குதினை வல்சி
கானக் கோழியடு இதல்கவர்ந்து உண்டென,
ஆர நெருப்பின், ஆரல் நாறத்
தடிவுஆர்ந் திட்ட முழுவள் ளூரம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்,
தங்கினை சென்மோ, பாண! தங்காது,
வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே.

322

வன்புல வைப்பினது! தொகு

பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை

பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக்,
கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்,
வன்புல வைப்பி னதுவே_சென்று
தின்பழம் பசீஇ.. .. .. ..ன்னோ, பாண!
வாள்வடு விளங்கிய சென்னிச்
செருவெங் குருசில் ஓம்பும் ஊரே.

323

கண்படை ஈயான்! தொகு

பாடியவர்: ஆவூர்கிழார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை

உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்,
புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்,
பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய
மன்றிற் பாயும் வன்புலத் ததுவே;
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது,
இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்,
தண்பணை யாளும் வேந்தர்க்குக்
கண்படை ஈயா வேலோன் ஊரே.

324

உள்ளியது சுரக்கும் ஈகை! தொகு

பாடியவர் பாடப்பட்டோர் : பெயர்கள் தெரிந்தில.
திணை: வாகை. துறை : வல்லாண் முல்லை.

புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
கா .. .. .. .. .. .. .. .. .. க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை,
வெள்வேல் ஆவம்ஆயின், ஒள் வாள்
கறையடி யானைக்கு அல்லது
உறைகழிப் பறியா,வேலோன் ஊரே.

325

உலந்துழி உலக்கும்! தொகு

பாடியவர்: ஆலத்தூர் கிழார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை

வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்
புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்,
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
ஊக நுண்கோற் செறித்த அம்பின்,
வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்,
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க்,
குமிழ்உண் வெள்ளைப் பகுவாய் பெயர்த்த
வெண்வாழ் தாய வண்காற் பந்தர்,
இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்,
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை,
வலம்படு தானை வேந்தற்கு
உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே.

326

வேந்து தலைவரினும் தாங்கம்! தொகு

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை

களிறுநீ றாடிய விடுநில மருங்கின்,
வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந்து இறந்தெனக்,
குழிகொள் சின்னீர் குராஅல் உண்டலின்,
செறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல்
முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை,
முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல்-ஆடவர்
உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய் திடுமார்,
கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து,
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்,
கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
அருமிளை இருக்கை யதுவே-வென்வேல்ஊரே.

327

பருத்திப் பெண்டின் சிறு தீ! தொகு

பாடியவர்: தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை

ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்,
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக்,
கலிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்
அருமிளை இருக்கை யதுவே -மனைவியும்,
வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது,
படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு
வருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்
அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே.

328

வரகின் குப்பை! தொகு

பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: வாகை துறை : மூதின் முல்லை

எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்,
ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச்
சிறுபுல் லாளர் முகத்தவை கூறி,
வரகுடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே.

329

ஈயத் தொலைந்தன! தொகு

பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: வாகை துறை :மூதின் முல்லை

.. .. டைமுதல் புறவு சேர்ந்திருந்த
புன்புலச் சீறூர், நெல்விளை யாதே;
வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;
.. .. .. .. .. .. டமைந் தனனே;
அன்னன் ஆயினும், பாண ! நன்றும்
வள்ளத் திடும்பால் உள்ளுறை தொட.. ..
களவுப் புளியன்ன விளை.. .. .. ..
.. .. .. வாடூன் கொழுங்குறை
கொய்குரல் அரிசியடு நெய்பெய்து அட்டுத்,
துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு
உண்டு, இனி திருந்த பின். .. .. ..
.. .. .. தருகுவன் மாதோ-
தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
முயல்வந்து கறிக்கும் முன்றில்,
சீறூர் மன்னனைப் பாடினை செலினே.

330

மாப்புகை கமழும்! தொகு

<poem> பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் திணை: வாகை துறை : மூதின் முல்லை

இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப் புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி, நன்னீர் ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய, மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும், அருமுனை இருக்கைத்து ஆயினும், வரிமிடற்று அரவுஉறை புற்றத்து அற்றே, நாளும் புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு அருகாது ஈயும் வண்மை, உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_321-330&oldid=1397517" இலிருந்து மீள்விக்கப்பட்டது