புறநானூறு/பாடல் 251-260


251

அவனும் இவனும்! தொகு

பாடியவர்: மாற்பித்தியார்
திணை: வாகை துறை: தாபத வாகை

ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்,
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்-
கழைக்கண் நெடுவரை அருவியாடிக்,
கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்,
புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே!

செய்தி தொகு

  • ஓவம் = ஓ என ஒலிக்கும் கடல்

கடல் பான்ற வீடு. அதில் ஓவியம் போன்ற மகளிர். அவர்களது அணிகலன்கள் கழன்றன. காரணம் இவனை அடையமாட்டோமா என்னும் ஏக்கம். இவன் அப்போது இப்படி இருந்தான்.

இப்போது! மூங்கில் பால் நீரொழுகும் அருவியில் நீராடுகிறான். பழகிய காட்டுயானை கொண்டுவந்து தந்த விறகில் கடுமையாக அனல் வீசும் தீயை மூட்டுகிறான். அந்தத் தீயில் வேள்வி செய்கிறான். அந்தத் தீயில் திரியாகிப் பின்புறம் தொங்கும் தன் தலைமுடியைக் காயவைத்துக்கொள்கிறான்.

(அன்று அறவன். இன்று துறவி. என்னே வாழ்வு!)

=== அவனே இவன்! === 252

பாடியவர்: மாற்பித்தியார்
திணை: வாகை துறை: தாபத வாகை

கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,
தில்லை அன்ன புல்லென் சடையோடு,
அள்இலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.’

செய்தி தொகு

  • தில்லை என்பது பொன்னிறம். தில்லையம்பலத்தைப் பொன்னம்பலம் என்பதும் இதனால்தான். தில்லைக் காய்கள் முறுக்கிக்கொண்டு பொன்னிறமாய் இருக்கும்.

காட்டில் தவம் செய்யும் இந்தத் துறவி அருவியில் நீராடுகிறான். அதனால் அவன் தலைமுடி நிறம் பெயர்ந்துள்ளது. நிறத்தாலும், சடை போட்டுக்கொண்டிருப்பதாலும் அது தில்லை போல் உள்ளது. இன்று அவன் தன் உணவுக்காகவும், உடைக்காகவும் தாளி இலைகளைக் கொய்கிறான். அன்று அவன் வீட்டில் நடமாடும் பெண் மயிலைப் பிணித்தவன். தன் சொல் வலையை வீசிப் பிடித்தவன்.

=== கூறு நின் உரையே! === 253

பாடியவர்: குளம்பாதாயனார்
திணை: பொதுவியல் துறை: முதுபாலை

என்திறத்து அவலம் கொள்ளல், இனியே;
வல்வார் கண்ணி இளையர் திளைப்ப,
‘நாகாஅல்’ என வந்த மாறே, எழாநெல்
பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்,
வளைஇல், வறுங்கை ஓச்சிக்,
கிளையுள்’ஒய்வலோ? கூறுநின் உரையே!

254

ஆனாது புகழும் அன்னை! தொகு

பாடியவர்: கயமனார்
திணை: பொதுவியல் துறை: முதுபாலை

இளையரும் முதியரும் வேறுபுலம் படர,
எதிர்ப்ப எழாஅய், மார்பமண் புல்ல,
இடைச்சுரத்து இறுத்த, மள்ள ! விளர்த்த
வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்,
‘இன்னன் ஆயினன், இளையோன்’ என்று,
நின்னுரை செல்லும் ஆயின்,’ மற்று
முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்,
புள்ளார் யாணர்த் தற்றே’ என் மகன்
வளனும் செம்மலும் எமக்கு’ என , நாளும்
ஆனாது புகழும் அன்னை
யாங்குஆ குவள்கொல் ? அளியள் தானே!

255

முன்கை பற்றி நடத்தி! தொகு

பாடியவர்: வன்பரணர்
திணை: பொதுவியல் துறை: முதுபாலை

ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;
அணைத்தனன்’ கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!
என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
திரைவளை முன்கை பற்றி-
வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!

256

அகலிதாக வனைமோ! தொகு

பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: பொதுவியல் துறை: முதுபாலை

கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!

257

செருப்பிடைச் சிறு பரல்! தொகு

பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: வெட்சி துறை: உண்டாட்டு

செருப்புஇடைச் சிறுபரல் அன்னன்; கணைக்கால்,
அவ்வயிற்று அகன்ற மார்பின், பைங்கண்,
குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்,
செவிஇறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு,
யார்கொலோ, அளியன் தானே? தேரின்
ஊர்பெரிது இகந்தன்றும் இலனே; அரண்எனக்
காடுகைக் கொண்டன்றும், இலனே ; காலைப்,
புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்,
கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்,
சிலையின் மாற்றி யோனே ; அவைதாம்
மிகப்பல ஆயினும், என்னாம்-எனைத்தும்
வெண்கோள் தோன்றாக் குழிசியடு,
நாள்உறை மத்தொலி கேளா தோனே?

258

தொடுதல் ஓம்புமதி! தொகு

பாடியவர்: உலோச்சனார்
திணை: வெட்சி துறை: உண்டாட்டு

முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந்நிணப் பெருத்த
எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்,
புலம்புக் கனனே, புல்அணற் காளை,
ஒருமுறை உண்ணா அளவைப், பெருநிரை
ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் ; யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி;
ஆதரக் கழுமிய துகளன்,
காய்தலும் உண்டு, அக் கள்வெய் யோனே.

259

புனை கழலோயே! தொகு

பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார்
திணை: கரந்தை துறை: செருமலைதல் (பிள்ளைப் பெயர்ச்சியுமாம்).

ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது,
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்,
செல்லல், செல்லல் ; சிறக்க நின், உள்ளம்;
முதுகுமெய்ப் புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கும் ஆன்மேல் ;
புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே!

260

கேண்மதி பாண! தொகு

பாடியவர்: வடமோதங்கிழார்
திணை: கரந்தை (பாடாண் திணையுமாம்) துறை: கையறுநிலை செருவிடை வீழ்தல்;
கையறு நிலையுமாம்; பாண்பாட்டுமாம்; பாடாண் பாட்டுமாம்.

வளரத் தொடினும், வெளவுபு திரிந்து,
விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்
தளரும் நெஞ்சம் தலைஇ; மனையோள்
உளரும் கூந்தல் நோக்கி, களர
கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
பசிபடு மருங்குலை, கசிபு, கைதொழாஅக்,
‘காணலென் கொல் ?’ என வினவினை வரூஉம்
பாண ! கேண்மதி, யாணரது நிலையே;
புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும், இரவுஎழுந்து,
எவ்வம் கொள்வை ஆயினும், இரண்டும்,
கையுள போலும் கடிதுஅண் மையவே;
முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்
நெடுநிரை தழீஇய மீளி யாளர்
விடுகணை நீத்தம் துடிபுணை யாக,
வென்றி தந்து, கொன்றுகோள் விடுத்து,
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வைஎயிற்று உய்ந்த மதியின், மறவர்
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையடு வந்த உரைய னாகி,
உரிகளை அரவ மானத், தானே
அரிதுசெல் உலகில் சென்றனன் ; உடம்பே,
கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்,
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல,
அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே;
உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே,
மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி,
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்,
படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_251-260&oldid=1397509" இலிருந்து மீள்விக்கப்பட்டது