புறநானூறு/பாடல் 211-220


211

நாணக் கூறினேன்!

தொகு

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.
திணை: பாடாண்: துறை: பரிசில் கடாநிலை.

அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந்தலை துமிய,
நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்,
குன்றுதூவ எறியும் அரவம் போல,
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று,
அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின்
உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்,
`வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்` எனக்,
கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின்
உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள்
கையுள் ளதுபோல் காட்டி, வழிநாள்
பொய்யடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும், நாணக் கூறி, என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்,
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்
ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்
செல்வல் அத்தை, யானே வைகலும்,
வல்சி இன்மையின் வயின்வயின் மாறி,
இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்,
பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து,
முலைக்கோள் மறந்த புதல்வனொடு,
மனைத் தொலைந்திருந் தவென்வாள் நுதற் படர்ந்தே.

212

யாம் உம் கோமான்?

தொகு

பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண்: துறை: இயன்மொழி.

`நுங்கோ யார்?` வினவின், எங்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கின் காமம் வீடஆரா,
ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ,
வைகுதொழின் மடியும் மடியா விழவின்
யாணர் நல்நாட் டுள்ளும், பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்,
கோழி யோனே, கோப்பெருஞ் சோழன்
பொத்தில் நண்பின் பொத்தியடு கெழீஇ,
வாயார் பெருநகை வைகலும் நமக்கே.

213

நினையும் காலை!

தொகு

பாடியவர்: புல்லாற்றூர் எயிற்றியனார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: வஞ்சி: துறை: துணை வஞ்சி.
குறிப்பு: கோப்பெருஞ்சோழன் தன் மக்கள்மேற் போருக்கு எழுந்தகாலைப்
பாடிச் சந்து செய்தது.

மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்,
வெண்குடை விளக்கும், விறல்கெழு வேந்தே!
பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து,
நின்தலை வந்த இருவரை நினைப்பின்,
தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்,
அமர்வெங் காட்சியடு மாறுஎதிர்பு எழுந்தவர்:
நினையுங் காலை, நீயும் மற்றவர்க்கு
அனையை அல்லை; அடுமான் தோன்றல்!
பரந்துபடு நல்லிசை எய்தி, மற்று நீ
உயர்ந்தோர் உலகம் எய்திப்; பின்னும்
ஒழித்த தாயும் அவர்க்குஉரித்து அன்றே;
அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்
இன்னும் கேண்மதி, இசைவெய் யோயே!
நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த
எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்,
நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே?
அமர்வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின்,
இகழுநர் உவப்பப், பழியெஞ் சுவையே;
அதனால்,ஒழிகதில் அத்தை,நின் மறனே!வல்விரைந்து
எழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு
ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால். நன்றோ வானோர்
அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே.

214

நல்வினையே செய்வோம்!

தொகு

பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

`செய்குவம் கொல்லோ நல்வினை!’எனவே
ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,
செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,
தீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே,

215

அல்லற்காலை நில்லான்!

தொகு

பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண் துறை: இயன்மொழி
குறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; பிசிராந்தையார் வருவார் என்றான்; 'அவர் வாரார்' என்றனர்
சான்றோருட் சிலர்; அவர்க்கு அவன் கூறிய செய்யுள் இது.

கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாதொரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே;
செல்வக் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன் மன்னே.

216

அவனுக்கும் இடம் செய்க!

தொகு

பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண் துறை: இயன்மொழி
குறிப்பு : வடக்கிருந்த சோழன், பிசிராந்தையாருக்கும் தன்னருகே இடன் ஒழிக்க என்று கூறிய செய்யுள் இது.

“கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது யாண்டுபல கழிய,
வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்,
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல் என்று
ஐயம் கொள்ளன்மின், ஆரறி வாளிர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே;
புன்பெயர் கிளக்கும் காலை, ‘என் பெயர்
பேதைச் சோழன்’ என்னும், சிறந்த
காதற் கிழமையும் உடையவன்; அதன் தலை,
இன்னதோர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே!

217

நெஞ்சம் மயங்கும்!

தொகு

பாடியவர்: பொத்தியார்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
குறிப்பு: கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர்;
அதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது.

நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,
எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,
இசைமரபு ஆக, நட்புக் கந்தாக,
இனையதோர் காலை ஈங்கு வருதல்;
‘வருவன்’ என்ற கோனது பெருமையும்,
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே;
அதனால், தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை இழந்தஇவ் வுலகம்
என்னா வதுகொல்? அளியது தானே!

218

சான்றோர்சாலார் இயல்புகள்!

தொகு

பாடியவர்: கண்ணகனார் நத்தத்தனார் எனவும் பாடம்.
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்தார்; அதனைக் கண்டு பாடியது.

பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்,
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை,
ஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

219

உணக்கும் மள்ளனே!

தொகு

பாடியவர்: பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்,
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே;
பலரால் அத்தை, நின் குறிஇருந் தோரே.

220

கலங்கனேன் அல்லனோ!

தொகு

பாடியவர்: பொத்தியார்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
குறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; அவன்பாற் சென்ற பொத்தியார், அவனால் தடுக்கப்பட்டு உறையூர்க்கு மீண்டார்; சோழன் உயிர் நீத்தான். அவனன்றி வறி தான உறையூர் மன்றத்தைக் கண்டு இரங்கிப் பொத்தியார் பாடிய செய்யுள் இது.

பெருங்சோறு பயந்து, பல்யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை,
வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்,
கலங்கினேன் அல்லனோ, யானே-பொலந்தார்த்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே?

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_211-220&oldid=1350730" இலிருந்து மீள்விக்கப்பட்டது