புறநானூறு/பாடல் 291-300


291

மாலை மலைந்தனனே! தொகு

பாடியவர்: நெடுங்கழுத்துப் பரணர்
திணை: கரந்தை துறை: வேத்தியல்

சிறாஅஅர் ! துடியர்! பாடுவல் மகாஅஅர்;
தூவெள் அறுவை மாயோற் குறுகி
இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும்,
விளரிக் கொட்பின், வெண்ணரி கடிகுவென்;
என்போற் பெருவிதுப்பு உறுக, வேந்தே_
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை!
மணிமருள் மாலை சூட்டி, அவன் தலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே!

292

சினவல் ஓம்புமின்! தொகு

பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார்
திணை: வஞ்சி துறை: பெருஞ்சோற்று நிலை

வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
யாம்தனக்கு உறுமறை வளாவ, விலக்கி,
வாய்வாள் பற்றி நின்றனென்’ என்று,
சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்!
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்,
‘என்முறை வருக’ என்னான், கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி,
ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.

293

பூவிலைப் பெண்டு! தொகு

பாடியவர்: நொச்சி நியமங்கிழார்
திணை: காஞ்சி துறை: பூக்கோட் காஞ்சி

நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்,
எம்மினும் பேர்எழில் இழந்து, வினை எனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ?
அளியள் தானே, பூவிலைப் பெண்டே!

294

வம்மின் ஈங்கு! தொகு

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்
திணை: தும்பை துறை: தானை மறம்

வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்;
கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்,
குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து,
இறையும் பெயரும் தோற்றி,”நுமருள்
நாள்முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு” எனப்
போர்மலைந்து ஒருசிறை நிற்ப, யாவரும்
அரவுஉமிழ் மணியின் குறுகார்;
நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே.

295

ஊறிச் சுரந்தது! தொகு

பாடியவர்: ஔவையார்
திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி

கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்,
வெந்துவாய் மடித்து வேல்தலைப் பெயரித்,
தோடுஉகைத்து ‘எழுதரூஉ, துரந்துஎறி ஞாட்பின்,
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி,
இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய,
சிறப்புடை யாளன் மாண்புகண் டருவி,
வாடுமுலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

296

நெடிது வந்தன்றால்! தொகு

பாடியவர்: வெள்ளை மாளர்
திணை: வாகை துறை: எறான் முல்லை

வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?

297

தண்ணடை பெறுதல்! தொகு

பாடினோர் பாடப்பட்டோன் : பெயர்கள் தெரிந்தில.
திணை: வெட்சி துறை: இண்டாட்டு

பெருநீர் மேவல் தண்ணடை எருமை
இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்,
கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
கோள்இவண் வேண்டேம், புரவே; நார்அரி
நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித்,
துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே, வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்,
மடல்வன் போந்தையின், நிற்கு மோர்க்கே.

298

கலங்கல் தருமே! தொகு


எமக்கே கலங்கல் தருமே தானே
தேறல் உண்ணும் மன்னே : நன்றும்
இன்னான் மன்ற வேந்தே; இனியே_
நேரார் ஆரெயில் முற்றி,
வாய் மடித்து உரறி,’ நீ முந்து? என் னானே.

299

கலம் தொடா மகளிர்! தொகு

பாடியவர்: பொன் முடியார்
திணை: நொச்சி துறை: குதிரை மறம்

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி,
கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ_
நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின்,
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி,
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின் றவ்வே.

300

எல்லை எறிந்தோன் தம்பி! தொகு

பாடியவர்: அரிசில் கிழார்
திணை: தும்பை துறை: தானைமறம்

‘தோல்தா; தோல்தா’ என்றி ; தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி,
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்,
பேரூர் அட்ட கள்ளிற்கு
ஓர் இல் கோயின் தேருமால் நின்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_291-300&oldid=1397513" இலிருந்து மீள்விக்கப்பட்டது