புறநானூறு/பாடல் 181-190
01-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
101-110 111-120 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200
201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
181
இன்னே சென்மதி!
தொகுபாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார்.
பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன்.
திணை: வாகை. துறை: வல்லாண்முல்லை.
மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்,
கருங்கண் எயிற்றி காதல் மகனொடு,
கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்,
புலாஅல் அம்பின், போர்அருங் கடிமிளை,
வலாஅ ரோனே, வாய்வாள் பண்ணன்;
உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்,
இன்னே சென்மதி, நீயே; சென்று, அவன்
பகைப்புலம் படரா அளவை, நின்
பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே.
182
பிறர்க்கென முயலுநர்!
தொகுபாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்,
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.
183
கற்கை நன்றே!
தொகுபாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,
184
யானை புக்க புலம்!
தொகுபாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் அறிவுடை நம்பி.
திணை: பாடாண். துறை: செவியறிவுறூஉ.
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
185
ஆறு இனிது படுமே!
தொகுபாடியவர்: தொண்டைமான் இளந்திரையன்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(இ·து உலகாளும் முறைமையைக் கூறியதாம்.)
கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,
பகைக்கூழ் அள்ளற் பட்டு,
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.
186
வேந்தர்க்குக் கடனே!
தொகுபாடியவர்: மோசிகீரனார்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(வேந்தர்க்குரிய கடன் இதுவென்னும் சிறந்த செய்யுள் இது.
ஆட்சியாளர் நெஞ்சங்களில் ஆழப் பதியவேண்டிய ஒரு செய்யுளும் ஆம்.)
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.
187
ஆண்கள் உலகம்!
தொகுபாடியவர்: ஔவையார்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை என்பது இது. மிகச் சிறந்த செய்யுள்.)
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!
188
மக்களை இல்லோர்!
தொகுபாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(மக்கட் பேற்றின் சிறப்பைக் கூறம் சிறந்த செய்யுள் இது.)
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே.
189
உண்பதும் உடுப்பதும்!
தொகுபாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.)
தெண்கடல் வளாகம் பொதுமை ‘இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.
190
எலி முயன் றனையர்!
தொகுபாடியவர்: சோழன் நல்லுருத்திரன்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(வலியுடையோரின் நடப்பை வலியுறுத்திப் பாடிய செய்யுள் இது.)
விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ!
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்,
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து,
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையடு
இயைந்த வைகல் உளவா கியரோ!
பொருள் : எலி போன்றோர் நட்பு கூடாது. புலி போன்றோர் நட்பு வேண்டும். என்கிறான். எலி: நன்கு விளைந்திருக்கும் காலத்தில் நெல்-மணிக் கதிர்களைக் கொண்டுபோய்த் தன் வளையில் பதுக்கிக்கொள்ளும் எலி போன்றோர் நட்பு வேண்டாம். புலி தான் கவ்விய காட்டுப் பன்றி தன் இடப்பக்கமாக விழுந்தது என்பதற்காக அதனை உண்ணாமல் பட்டினிக் கிடந்து மறுநாள் யானை வேட்டைக்கு முயலும் புலி போல் துணிவும், நெஞ்சுரமும் கொண்ட மானமுள்ளவர் நட்பு வேண்டும்