புறநானூறு/பாடல் 201-210


201

இவர் என் மகளிர்! தொகு

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன் : இருங்கோவேள்.
திணை; பாடாண். துறை: பரிசில்.
குறிப்பு: பாரி மகளிரை உடன் கொண்டு சென்ற காலத்துப் பாடியது.)

`இவர் யார்?` என்குவை ஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளித் ,தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,
படுமணி யானைப்,பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்: இவர்என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்,
செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை,
உவரா ஈகைத், துவரை ஆண்டு,
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்!
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின், பாண்கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மா அல்!
யான்தர, இவரைக் கொண்மதி! வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து, அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ! வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்,
கெடல்அருங் குறைய நாடுகிழ வோயே!

202

கைவண் பாரி மகளிர்! தொகு

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: இருங்கோவேள்.
திணை:பாடாண். துறை: பரிசில்.
குறிப்பு: இருங்கோவேள் பாரி மகளிரைக் கொள்ளானாக, அப்போது பாடியச் செய்யுள் இது.
(கபிலரின் உள்ளம் மிகவும் நொந்து போயின நிலையைச் செய்யுள் காட்டுகின்றது.)

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்,
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச், சிதறுபொன் மிளிரக்,
கடிய கதழும் நெடுவரைப் படப்பை
வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி,
இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்,
கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி;
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்!
எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்று,`இவர்
கைவண் பாரி மகளிர்` என்றஎன்
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும;
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே!

203

இரவலர்க்கு உதவுக! தொகு

பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்
பாடப்பட்டோன்: சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
திணை:பாடாண் துறை:பரிசில்

கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்,
எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை;
இன்னும் தம்மென எம்ம்னோர் இரப்பின்,
முன்னும் கொண்டிர்என, நும்மனோர் மறுத்தல்
இன்னாது அம்ம; இயல்தேர் அண்ணல்!
இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும்,
உள்ளி வருநர் நசையிழப் போரே;
அனையையும் அல்லை, நீயே; ஒன்னார்
ஆர்எயில் அவர்கட்கு ஆகவும்,`நுமது` எனப்
பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்!
பூண்கடன், எந்தை! நீஇரவலர் புரவே.

204

அதனினும் உயர்ந்தது! தொகு

பாடியவர்: கழைதின் யானையார்.
பாடப்பட்டோன்: வல் வில் ஓரி.
திணை:பாடாண். துறை: பரிசில்.

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.

205

பெட்பின்றி ஈதல் வேண்டலம்! தொகு

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: கடிய நெடுவேட்டுவன்.
திணை:பாடாண். துறை: பரிசில்.

முற்றிய திருவின் மூவர் ஆயினும்,
பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே;
விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
உறுவர் செல்சார்வு ஆகிச், செறுவர்
தாளுளம் தபுத்த வாள்மிகு தானை,
வெள்வீ வேலிக் கோடைப் பொருந!
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்,
நோன்சிலை, வேட்டுவ! நோயிலை யாகுக!
ஆர்கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்துக்,
கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா ஆங்குத், தேரொடு
ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
களிறின்று பெயரல, பரிசிலர் கடும்பே.

206

எத்திசைச் செலினும் சோறே! தொகு

பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்: துறை: பரிசில்.

வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.

207

வருகென வேண்டும்! தொகு

பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பாடாண்: துறை: பரிசில்.

எழுஇனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ,
பருகு அன்ன வேட்கை இல்அழி,
அருகிற் கண்டும் அறியார் போல,
அகம்நக வாரா முகன்அழி பரிசில்
தாள்இலாளர் வேளார் அல்லர்?
வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள்அவிந்து அடங்காது, வெள்ளென
நோவா தோன்வயின் திரங்கி,
வாயா வன்கனிக்கு உலமரு வோரே.

208

வாணிகப் பரிசிலன் அல்லேன்! தொகு

பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்: துறை: பரிசில்.

`குன்றும் மலையும் பலபின் ஒழிய,
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு` என
நின்ற என்நயந்து அருளி, `ஈது கொண்டு,
ஈங்கனம் செல்க, தான்` என என்னை
யாங்குஅறிந் தனனோ, தாங்கரும் காவலன்?
காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்
தினை அனைத்து ஆயினும், இனிதுஅவர்
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே.

209

நல்நாட்டுப் பொருந! தொகு

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: மூவன்.
திணை: பாடாண்: துறை: பரிசில் கடாநிலை.

பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல்அம் கழனி, நெல்அரி தொழுவர்
கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்திக், தெண்கடல்
படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
பல்கனி நசைஇ, அல்கு விசும்பு உகத்து.
பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்
பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக், கையற்றுப்.
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின்
நசைதர வந்து, நின்இசை நுவல் பரிசிலென்
வறுவியேன் பெயர்கோ? வாள்மேம் படுந!
ஈயாய் ஆயினும், இரங்குவென் அல்லேன்;
நோயிலை ஆகுமதி; பெரும! நம்முள்
குறுநணி காண்குவ தாக - நாளும்,
நறும்பல் ஒலிவரும் கதுப்பின், தேமொழித்,
தெரியிழை அன்ன மார்பின்,
செருவெம் சேஎய்! நின் மகிழ்இரு க்கையே!

210

நினையாதிருத்தல் அரிது! தொகு

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.
திணை: பாடாண்: துறை: பரிசில் கடாநிலை.

மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது,
அன்புகண் மாறிய அறனில் காட்சியடு,
நும்ம னோரும்மற்று இனையர் ஆயின்,
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ;
செயிர்தீர் கொள்கை எம்வெங் காதலி
உயிர்சிறிது உடையள் ஆயின், எம்வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால்,
அறனில் கூற்றம் திறனின்று துணியப்
பிறனா யினன்கொல்? இறீஇயர், என் உயிர்!` என
நுவல்வுறு சிறுமையள் பலபுலந்து உறையும்
இடுக்கண் மனையோள் தீரிய, இந்நிலை
விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக்காண்:
அவல நெஞ்சமொடு செல்வல்: நிற் கறுத்தோர்
அருங்கடி முனையரண் போலப்
பெருங்கை யற்றஎன் புலம்புமுந் துறத்தே.

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_201-210&oldid=483252" இலிருந்து மீள்விக்கப்பட்டது