புறநானூறு/பாடல் 241-250
01-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
101-110 111-120 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200
201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
241
விசும்பும் ஆர்த்தது!
தொகுபாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
‘திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார்
அண்டிரன் வரூஉம்’ என்ன, ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசும் கறங்க,
ஆர்ப்புஎழுந் தன்றால், விசும்பி னானே.
242
முல்லையும் பூத்தியோ?
தொகுபாடியவர்: குடவாயிற் தீரத்தனார்.
பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
குறிப்பு: கடவாயில் நல்லாதனார் பாடியது என்பதும் பாடம்.
இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?
243
யாண்டு உண்டுகொல்?
தொகுபாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,
கரையவர் மருளத், திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-
“தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம்” ஆகிய எமக்கே?
244
கலைபடு துயரம் போலும்!
தொகு(பாடினோர் பாடபபட்டடோர் யாவரெனத் தெரியாதவாறு இது அழிந்தது.
பாடலும் சிதைந்தே கிடைத்துள்ளன).
பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா;
விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா;
இரவல் மாக்களும் .. .. .. .. .. .. .. .
245
என்னிதன் பண்பே?
தொகுபாடியவர்: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை
யங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே,
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்?
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து,
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ;
இன்னும் வாழ்வல் ; என்இதன் பண்பே!
246
பொய்கையும் தீயும் ஒன்றே!
தொகுபாடியவர்: பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
திணை: பொதுவியல் துறை: ஆனந்தப் பையுள்
பல்சான் றீரே ; பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;
துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆகப்,
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
247
பேரஞர்க் கண்ணள்!
தொகுபாடியவர்: மதுரைப் பேராலவாயர்
திணை: பொதுவியல் துறை: ஆனந்தப் பையுள்
யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து;
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி,
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்,
நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்,
பேரஞர்க் கண்ணள், பெருங்காடு நோக்கித்,
தெருமரும் அம்ம தானே- தன் கொழுநன்
முழுவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்,
இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே!
248
அளிய தாமே ஆம்பல்!
தொகுபாடியவர்: ஒக்கூர் மாசாத்தனார்
திணை: பொதுவியல் துறை: தாபதநிலை
அளிய தாமே சிறுவெள் ளாம்பல்!
இளையம் ஆகத் தழையா யினவே; இனியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப், பொழுது மறுத்து,
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படுஉம் புல் ஆயினவே.
249
சுளகிற் சீறிடம்!
தொகுபாடியவர்: தும்பி சொகினனார்;தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம்.
திணை: பொதுவியல் துறை: தாபதநிலை
(காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, 'தாமே யேங்கிய தாங்கரும் பையுள்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.சூ. 24 உரை)).
கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்,
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்,
பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு,
உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்,
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப் பட்டன்று ; மன்னே! இன்றே
அடங்கிய கற்பின் ; ஆய்நுதல் மடந்தை,
உயர்நிலை உலகம் அவன்புக .. .. வரி
நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி,
அழுதல் ஆனாக் கண்ணள்,
மெழுகு, ஆப்பிகண் கலுழ்நீ ரானே.
250
மனையும் மனைவியும்!
தொகுபாடியவர்: தாயங் கண்ணியார்
திணை: பொதுவியல் துறை: தாபதநிலை
குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்,
கூந்தல் கொய்து, குறுந்தொடு நீக்கி,
அல்லி உணவின் மனைவியடு, இனியே
புல்என் றனையால்-வளங்கெழு திருநகர்!
வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.