புறநானூறு/பாடல் 51-60

(புறநானூறு பாடல் 51-60 இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பாடல்: 51 (நீர்மிகிற்) தொகு

பாடியவர்: ஐயூர் முடவனார்.

பாடப்பட்டோன்
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி.
திணை
வாகை.
துறை
அரசவாகை .


நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்
மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை
வளிமிகின் வலியு மில்லை யொளிமிக்
கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி
தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து (5)
கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே
அளியரோ வளியரவ னிளியிழந் தோரே
நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த
செம்புற் றீயல் போல (10)
ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே.

(பாடபேதம்.) 5 ‘தண்டமிழ்ப்’ 9 ‘நுண்பல்’ 11 ‘கலம்வருவோரே’

'(பாடபேதம்.) ஐயூர் கிழார் பாடியது.

பாடல்: 52 தொகு

அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்
ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு
5வடபுல மன்னர் வாட வடல்குறித்
தின்னா வெம்போ ரியறேர் வழுதி
இதுநீ கண்ணிய தாயி னிருநிலத்
தியார்கொ லளியர் தாமே யூர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி

10

வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரி னொரீஇ யினியே
கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
15 வல்லி னல்லக நிறையப் பல்பொறிக்
கான வாரண மீனும்
காடாகி விளியு நாடுடை யோரே.

(பி - ம்.) 3 ‘ஊன்மிசை’ 12 ‘கலிகெழு மூதூர்க்கந்து’

திணையும் துறையும் அவை.

அவனை மருதனிளநாகனார் (பி - ம். மருதினிள நாகனார்) பாடியது.

பாடல்: 53 தொகு

முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்
கதிர்விடு மணியிற் கண்பொரு மாடத்
திலங்குவளை மகளிர் தெற்றி யாடும்
விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற
5 களங்கொள் யானைக் கடுமான் பொறைய
விரிப்பி னகலுந் தொகுப்பி னெஞ்சும்
மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை
கைம்முற் றலநின் புகழே யென்றும்
ஒளியோர் பிறந்தவிம் மலர்தலை யுலகத்து
10 வாழே மென்றலு மரிதே தாழாது
செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுள னாயி னன்றும னென்றநின்
ஆடுகொள் வரிசைக் கொப்பப்
15 பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே.
(பி - ம்.) 7 ‘தெமக்கோவொருநினை’ 14 ‘கேற்பப்’

திணையும் துறையும் அவை.

சேரன் 1மாந்தரஞ்சேரலிரும் பொறையைப் பொருந்திலிளங்கீரனார் பாடியது.

பாடல்: 54 தொகு

எங்கோ னிருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல விடையின்று குறுகிச்
செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்
எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே
5இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்து
வான நாண வரையாது சென்றோர்க்
கானா தீயுங் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
10பாசிலைத் தொடுத்த வுவலைக் கண்ணி
மாசு ணுடுக்கை மடிவா யிடையன்
சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத் தற்றே
வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே.
(பி - ம்.) 3 - 4 ‘புகுதற்கெம்மன’ 11 ‘மாசூணுடுக்கை’
திணையும் துறையும் அவை.

சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன் பாடியது.

பாடல்: 55 தொகு

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
5 பிறைநுதல் விளங்கு மொருகண் போல
வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும் என
நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
10 அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
அதனால், நமரெனக் கோல்கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
15 வானத் தன்ன வண்மையு மூன்றும்
உடையை யாகி யில்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
டுவளி தொகுப்ப வீண்டிய
வடுவா ழெக்கர் மணலினும் பலவே.
(பி - ம்.) 1 ‘நாண்’ 7 ‘பரிமா’ 8 ‘எனும்’ 13 ‘வெந்தெற’ 16 ‘உடையாயாதலினில்லோர்’, ‘உடையையாதலினி’ 17 ‘நீடுவையொழிய’

திணை - பாடாண்டிணை; துறை - செவியறிவுறூஉ.

பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிளநாகனார் பாடியது.

பாடல்: 56 தொகு

ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
கடல்வளர் புரிவளை புரையு மேனி
அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
5 மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்
10 றோலா நல்லிசை நால்வ ருள்ளும்
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனைப்
புகழொத் தீயே முன்னியது முடித்தலின்
முருகொத் தீயே முன்னியது முடித்தலின்
15ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும்
அரியவு முளவோ நினக்கே யதனால்
இரவலர்க் கருங்கல மருகா தீயா
யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
20ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்
தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற
அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
25நின்று நிலைஇய ருலகமோ டுடனே.
(பி - ம்.) 5 ‘மண்ணிய’

திணை - அது; துறை - பூவைநிலை.

அவனை மதுரைக்கணக்காயனார்மகனார் நக்கீரனார் (பி - ம். அவர்) பாடியது.

பாடல்: 57 தொகு

வல்லா ராயினும் வல்லுந ராயினும்
புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன
உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற
நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்
5நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்
டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க
நனந்தலைப் பேரூ ரெரியு நைக்க
மின்னுநிமர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்
10கடிமரந் தடித லோம்புநின்
நெடுநல் யானைக் கந்தாற் றாவே.
(பி - ம்.) 11 ‘யானைக்குக் கந்’

திணை-வஞ்சி; துறை-துணைவஞ்சி.

அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

பாடல்: 58 தொகு

நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே
முழுமுத றொலைந்த கோளி யாலத்துக்
கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
5நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ
இளைய தாயினுங் கிளையரா வெறியும்
அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவ ரேறே நீயே
அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே
10நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென
வரைய சாந்தமுந் திரைய முத்தமும்
இமிழ்குரன் முரச மூன்றுட னாளும்
தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே
பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்
15நீனிற வுருவி னேமி யோனுமென்
றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்
குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி
இன்னீ ராகலி னினியவு முளவோ
இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே
20ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவீரும்
உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப்
பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே
அதனால், நல்ல போலவு நயவ போலவும்
25தொல்லோர் சென்ற நெறிய போலவும்
காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா
தின்றே போல்கநும் புணர்ச்சி வென்றுவென்
றடுகளத் துயர்கநும் வேலே கொடுவரிக்
30கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே.
(பி - ம்.) 10. ‘மெளியவரைய’

திணை-பாடாண்டிணை; துறை-உடனிலை.

சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

பாடல்: 59 தொகு

ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற்
றாடோய் தடக்கைத் தகைமாண் வழுதி
வல்லை மன்ற நீநயந் தளித்தல்
தேற்றாய் பெரும பொய்யே யென்றும்
5காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும்
ஞாயி றனையைநின் பகைவர்க்குத்
திங்க ளனையை யெம்ம னோர்க்கே.
(பி - ம்.) 1 ‘வம்பகட்டு மார்பிற்’

திணை-அது; துறை-பூவைநிலை.

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் பாடியது.

பாடல்: 60 தொகு

முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்
செம்மீ னிமைக்கு மாக விசும்பின்
உச்சி நின்ற வுவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்த
5 சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதன மல்லமோ பலவே கானற்
கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும்
ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன்
10 வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன்
வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை யொக்குமா லெனவே.
(பி - ம்.) 2 ‘செய்ம்மீ’ 12 ‘யோர்க்குமா’

திணை-அது; துறை-குடைமங்கலம்.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_51-60&oldid=1397498" இருந்து மீள்விக்கப்பட்டது