புறநானூறு/பாடல் 171-180

(புறநானூறு பாடல் 171-180 இலிருந்து வழிமாற்றப்பட்டது)


171

வாழ்க திருவடிகள்!

தொகு

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.
சிறப்பு: 'ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே' என்னும் வாழ்த்தில், உலகின் தன்மையைக் காணலாம்.

இன்று செலினுந் தருமே; சிறுவரை
நின்று செலினுந் தருமே ; பின்னும்,
‘முன்னே தந்தனென்’ என்னாது, துன்னி
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி,
யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்;
தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப
அருந்தொழில் முடியரோ, திருந்துவேல் கொற்றன்;
இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்,
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்,
அருங்கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே,
அன்னன் ஆகலின், எந்தை உள்ளடி
முள்ளும் நோவ உற்றாக தில்ல!
ஈவோர் அரியஇவ் உலகத்து,
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே!

172

பகைவரும் வாழ்க!

தொகு

பாடியவர்: வடமண்ணக்கன் தாமோதரனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக;
அன்னவை பலவும் செய்க ; என்னதூஉம்
பரியல் வெண்டா வருபதம் நாடி,
ஐவனங் காவல் பெய்தீ நந்தின்.
ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்
வன்புல நாடன், வயமான் பிட்டன்;
ஆரமர் கடக்கும் வேலும், அவனிறை
மாவள் ஈகைக் கோதையும்.
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே!

173

யான் வாழுநாள் வாழிய!

தொகு

பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர் ! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்;
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே,

174

அவலம் தீரத் தோன்றினாய்!

தொகு

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன் : மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்.
ணை: வாகை. துறை: அரச வாகை.

அணங்குடை அவுணர் கணம்கொண்டுஒளித்தெனச்,
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல்
அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்கு,
அர சிழந்து இருந்த அல்லற் காலை,
முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு, கரைபொருது
இரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி
மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்,
பொய்யா நாவிற் கபிலன் பாடிய,
மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்
செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட
எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,
அருவழி இருந்த பெருவிறல் வளவன்
மதிமருள் வெண்குடை காட்டி, அக்குடை
புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந!
விடர்ப்புலி பொறித்த கோட்டைச், சுடர்ப் பூண்,
சுரும்பார் கண்ணிப், பெரும்பெயர் நும்முன்
ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்,
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,
ஆறுகொள் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலந் தீர
நீதோன் றினையே-நிரைத்தார் அண்ணல்!
கல்கண் பொடியக், கானம் வெம்ப
மல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக்,
கோடை நீடிய பைதறு காலை,
இருநிலம் நெளிய ஈண்டி,
உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே!

175

என் நெஞ்சில் நினைக் காண்பார்!

தொகு

பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார்.
பாடப்பட்டோன் : ஆதனுங்கன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

எந்தை; வாழி; ஆதனுங்க ! என்
நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே;
நின்யான் மறப்பின், மறக்குங் காலை,
என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்,
என்யான் மறப்பின், மறக்குவென் - வென்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன, நாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே.

176

சாயல் நினைந்தே இரங்கும்!

தொகு

பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.
பாடப்பட்டோன் : ஓய்மான் நல்லியக் கோடான்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்,
இழுமென ஒலிக்கும் புனலம் புதவின்,
பெருமா விலங்கைத் தலைவன், சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
உடையை வாழி, யெற் புணர்ந்த பாலே!
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக்,
காணாது கழிந்த வைகல், காணா
வழிநாட்கு இரங்கும், என் நெஞ்சம்-அவன்
கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே.

177

யானையும் பனங்குடையும்!

தொகு

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: மல்லி கிழான் காரியாதி.
திணை: பாடாண். துறை: இயன்மொழி. (வந்தார்க்கு மான் கறியும் சோறும்
வாரி வழங்கிய கொடையியல்பைப் பாடுகின்றார் புலவர்.)

ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்,
வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்,
பாடிப் பெற்ற பொன்னணி யானை,
தமர்எனின், யாவரும் புகுப; அமர்எனின்,
திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்,
கண்மாறு நீட்ட நணிநணி இருந்த
குறும்பல் குறும்பின் ததும்ப வைகிப்,
புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்,
மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக்,
கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்,
பெரும்பெயர் ஆதி, பிணங்கரில் குடநாட்டு,
எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை,
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய,
இரும்பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே.

178

இன்சாயலன் ஏமமாவான்!

தொகு

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்
பாடப்பட்டோன்: பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன் எனவும் பாடம்.
திணை: வாகை துறை: வல்லாண் முல்லை

கந்துமுனிந்து உயிர்க்கும்யானையடு,பணைமுனிந்து,
கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்,
மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று
உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்
ஈண்டோர் இன்சா யலனே ; வேண்டார்
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்,
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
அஞ்சி நீங்கும் காலை,
ஏம மாகத் தான்முந் துறுமே.

179

பருந்து பசி தீர்ப்பான்!

தொகு

பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்
திணை: வாகை துறை: வல்லாண் முல்லை

ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென,
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்?’ என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்,
படை வேண்டுவழி வாள் உதவியும்,
வினை வேண்டுவழி அறிவு உதவியும்,
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்,
தோலா நல்லிசை, நாலை கிழவன்,
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
திருந்துவேல் நாகற் கூறினர், பலரே.

180

நீயும் வம்மோ!

தொகு

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்.
திணை: வாகை. துறை: வல்லாண்முல்லை; பாணாற்றுப் படையும் ஆம்.

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே;
இறையுறு விழுமம் தாங்கி, அமர்அகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து,
மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி,
வடுவின்றி வடிந்த யாக்கையன், கொடையெதிர்ந்து,
ஈர்ந்தை யோனே, பாண்பசிப் பகைஞன்;
இன்மை தீர வேண்டின், எம்மொடு
நீயும் வம்மோ? முதுவாய் இரவல!
யாம்தன் இரக்கும் காலைத், தான்எம்
உண்ணா மருங்குல் காட்டித், தன்ஊர்க்
கருங்கைக் கொல்லனை இரக்கும்,
‘திருந்திலை நெடுவேல் வடித்திசின்’ எனவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_171-180&oldid=483249" இலிருந்து மீள்விக்கப்பட்டது