புறநானூறு/பாடல் 31-40
01-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
101-110 111-120 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200
201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
பாடல்: 31 (சிறப்புடை)
தொகு- (வடநாட்டார் தூங்கார்! )
பாடியவர்: கோவூர்கிழார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் நலங்கிள்ளி.
- திணை
- வாகை.
- துறை
- அரசவாகை
- மழபுல வஞ்சியும் ஆம்.
- (சிறப்பு
- வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய அச்சத்தால் துஞ்சாக் கண்ணர் ஆயினமை.)
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,
நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்
பாசறை யல்லது நீயல் லாயே;
நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே;
‘போர்’ எனில் புகலும் புனைகழல் மறவர்,
‘காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய;
செல்வேம் அல்லேம்’ என்னார்; ‘கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்,
குண கடல் பின்ன தாகக், குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப,
வலமுறை வருதலும் உண்டு’ என்று அலமந்து
நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.
பாடல்: 32 (கடும்பின்)
தொகு- (பூவிலையும் மாடமதுரையும்!)
பாடியவர்: கோவூர்கிழார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் நலங்கிள்ளி.
- திணை
- பாடாண்.
- துறை
- இயன்மொழி.
- (சிறப்பு
- சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு.)
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ?
‘வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்,
ஒண்ணுதல், விறலியர் பூவிலை பெறுக!’ என,
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!
தொன்னிலக் கிழமை சுட்டின், நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போல, அவன்
கொண்ட குடுமித்தும், இத் தண்பணை நாடே.
பாடல்: 33 (கான்உறை)
தொகு- (புதுப்பூம் பள்ளி!)
பாடியவர்: கோவூர்கிழார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் நலங்கிள்ளி.
- திணை
- வாகை.
- துறை
- அரசவாகை.
- (சிறப்பு
- பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில்
வெற்றிபெற்றோன் தனது அரச முத்திரையைப் பதிக்கும் மரபுபற்றிய செய்தி.)
கான் உறை வாழ்க்கைக் கதநாய், வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும், நிறைய,
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்,
ஏழெயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு நின்;
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
பாடுநர் வஞ்சி பாடப், படையோர்
தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்,
புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பான்கடும்பு அருத்தும்
செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை;
வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர் அல்லது, யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,
ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி
வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே.
பாடல்: 34 (ஆன்முலை)
தொகு- (செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!)
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
- திணை
- பாடாண்.
- துறை
- இயன்மொழி.
- (சிறப்பு
- 'செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய செய்தி.)
‘ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்,
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்,
வழுவாய் மருங்கின் கழுவாயும் உள’ என,
‘நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ என’
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
‘காலை அந்தியும், மாலை அந்தியும்,
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்,
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்,
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி,
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்,
எங்கோன்,வளவன் வாழ்க!’என்று, நின்
பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்,
படுபறி யலனே, பல்கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின்,
இமையத்து ஈண்டி, இன்குரல் பயிற்றிக்,
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய, பலவே!
பாடல்: 35 (நளிஇருமுந்நீர்)
தொகுபாடியவர்: வெள்ளைக்குடி நாகனார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
- திணை
- பாடாண். துறை: செவியறிவுறூஉ
- (சிறப்பு
- அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள். )
- (சிறப்பு
- 'பாடிப் பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது' என்று இதனைக் குறிப்பர்.)
நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்,
அரசுஎனப் படுவது நினதே, பெரும!
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்,
அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்,
தோடு கொள் வேலின் தோற்றம் போல,
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே!
நினவ கூறுவல்: எனவ கேண்மதி!
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே;
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்,
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய
குடிமறைப் பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்,
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,
வருபடை தாங்கிப், பெயர்புறத் தார்த்துப்,
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண்ணகன் ஞாலம்;
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,
குடிபுறம் தருகுவை யாயின், நின்
அடிபுறம் தருகுவர், அடங்கா தேரே.
பாடல்: 36 (அடுநையாயினும்)
தொகு- (நீயே அறிந்து செய்க!)
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
- திணை
- வஞ்சி.
- துறை
- துணை வஞ்சி.
- (குறிப்பு
- சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது.)
அடுநை யாயினும், விடுநை யாயினும்,
நீ அளந் தறிதி நின் புரைமை; வார்தோல்,
செயறியரிச் சிலம்பின், குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்,
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின், நிலையழிந்து,
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக், காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப,
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு, ஈங்குநின்
சிலைத்தார் முரசும் கறங்க,
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.
பாடல்: 37 (நஞ்சுடை)
தொகு- (புறவும் போரும்!)
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
- திணை
- வாகை; உழிஞை எனவும் பாடம்.
- துறை
- அரச வாகை குற்றுழிஞை எனவும், முதல் வஞ்சி எனவும் பாடம்.
நஞ்சுடை வால் எயிற்று, ஐந்தலை சுமந்த,
வேக வெந்திறல், நாகம் புக்கென,
விசும்புதீப் பிறப்பத் திருகிப், பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்,
புள்ளுறு புன்கண் தீர்த்த, வெள் வேல்
சினங்கெழு தானைச், செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டுகண் அகழி,
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்,
செம்புஉறழ் புரிசைச், செம்மல் மூதூர்,
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்,
‘நல்ல’ என்னாது, சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை! செருவத் தானே!
பாடல்: 38 (வரைபுரையும்)
தொகு- (வேண்டியது விளைக்கும் வேந்தன்!)
பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
- திணை
- பாடாண்.
- துறை
- இயன்மொழி,
- (குறிப்பு
- 'எம்முள்ளீர், எந்நாட்டீர்?' என்று அவன் கேட்ப, அவர் பாடியது.)
வரை புரையும் மழகளிற்றின் மிசை,
வான் துடைக்கும் வகைய போல
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே!
நீ, உடன்று நோக்கும்வாய் எரிதவழ,
நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்,
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்,
நின்நிழல் பிறந்து, நின்நிழல் வளர்ந்த,
எம் அளவு எவனோ மற்றே? ‘இன்நிலைப்
பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை,
உடையோர் ஈதலும், இல்லோர் இரத்தலும்
கடவ தன்மையின், கையறவு உடைத்து’என,
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்,
நின்நாடு உள்ளுவர், பரிசிலர்:
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத் தெனவே.
பாடல்: 39 (புறவின்அல்லல்)
தொகு- (புகழினும் சிறந்த சிறப்பு!)
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
- திணை
- பாடாண்.
- துறை
- இயன்மொழி,
- (சிறப்பு
- வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது.)
புறவின் அல்லல் சொல்லிய, கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று,
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம்நின்று நிலையிற் றாகலின், அதனால்
முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு,
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்,
கண்ணார் கண்ணிக், கலிமான், வளவ!
யாங்கனம் மொழிகோ யானே; ஓங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமையம் சூட்டியஏம விற்பொறி,
மாண்வினை நெடுந்தேர், வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே?
பாடல்: 40 (நீயேபிறர்)
தொகு- (ஒரு பிடியும் எழு களிரும்!)
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
தொகு- பாடப்பட்டோன்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
- திணை
- பாடாண்.
- துறை
- செவியறிவுறூஉ.
நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்
ஓம்பாது கடந்தட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன்னின்
அடி பொலியக் கழல் தைஇய
வல் லாளனை, வய வேந்தே!
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப்,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும்
இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும!
ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!