நற்றிணை - முதற்பகுதி/பாடிய சான்றோர்கள்

நற்றிணை 1—200 செய்யுட்களைப்
பாடிய சான்றோர்கள்
[எண் — செய்யுள் எண்]

அகம்பன் மாலாதனார் 81

'தன்' என்னும் பெயரினர்; 'அகம்பல்' என்னும் ஊரினர்; ஆதலின் 'அகம்பன் மாலாதனார்" எனப் பெற்றனர். 'மால்' தலைமையைக் குறிப்பது; அகம்பலூர்க்குத் தலைவராகவும் இருந்திருக்கலாம். வேந்தனின் ஏவலைக்கொண்டு வினைமேற் சென்றோனாகிய ஒரு தலைவன், அவ்வினையது முடிவின்கண் தன்னுடைய காதற்குரியாளை நோக்கிச் செலுத்தும் மனத்தினனாகத் தேர்ப்பாகனிடத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும். இந்நிகழ்ச்சியை இவரது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகவும் கொள்ளலாம். 'என்னைப் பிரிந்திருத்தலாகிய பிரிவுப் பெருநோயினாலே அழுதபடியிருக்கின்றாளான அவள்பாற் சென்று, என்னைக் கண்டவுடனே அவள் முகத்திடத்தே தோன்றுகின்ற இளநகையைக் காண்போ'மெனச் சொல்லுந் திறம், மிக்க காதற் சுவையுடையதாகும்; உளவியல் விளக்கமும் ஆகும். சேரமன்னர் பரம்பரையினர் பலர் 'ஆதன்' என்ற பெயர் முடிவு பெற்றிருப்பதும் நினைக்க.

அஞ்சில் அஞ்சியார் 90

'அஞ்சி' என்பது இவருடைய இயற் பெயராகும்; இவரூரின் பெயராகவும் 'அஞ்சில்' என்பதனைக் கொள்ளலாம். இவரைப் பெண்பாலராகக் கருதுவர். அதியமான் நெடுமான் அஞ்சியென்னும் தகடூர்க் கோமானின் பெயரினைக் கொண்டவராகவும். அந்நாட்டுப் பகுதியைச் சார்ந்தவராகவும் இவரைக் சுருதலாம். 'தலைவியை மறந்து பரத்தையுறவு பூண்டோனாக விளங்கும் தலைவனுக்கு அறிவுறுத்தும் வகையாகத், தூதுவந்த பாணனுக்குத் தோழி வாயின் மறுப்பதாக அமைந்துள்ள செய்யுள் இது'வாகும். இதன்கண் விளங்கும் ஊசற்காட்சி மிகமிகச்சுவை பயப்பதாகும்.

அம்மள்ளனார் 82

'மள்ளனார்' எனப் பெயருடையார் பலரினும் இவரை வேறுபடுத்த 'அம்' என்னும் அடையினைத் தந்துள்ளனர் எனல் பொருந்துவதாகும். 'நல்நடைக் கொடிச்சி! என் உயவு அறிதியோ? முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல நின் உருவு கண்எறிப்ப நோக்கல் ஆற்றலெனே' எனத் தலைவன் சொல்வதாகப் பாடிய புலமைத் திறத்தினை உடையவர். கானவரது சிறுகுடி வாழ்வை இவர் எடுத்துக் காட்டும் வகையும் நயமுடையதாகும். இவர் பாடியதாகக் கிடைத்துள்ள செய்யுள் இஃது ஒன்று மட்டுமே.

அம்மூவனார் 4, 35, 76, 138.

'அம்மு' எனச் சேரநாட்டாரிடையே வழங்கிவருகின்ற பெயரமைதியைக் கொண்டு இவரையும் சேரநாட்டினராகக் கருதுவார் பலர். 'மூவனார்' என்பதனை இயற்பெயராகவும், 'அம்' என்பது சிறப்புக் கருதிச் சேர்த்து வழங்கப்பட்டதாகவும் கருதுவர் சிலர். சேரன், பாண்டியன், மலையமான் ஆகியோரால் ஆதரிக்கப்பெற்றவராகத் தொண்டி, மாந்தை, கொற்கை, கோவலூர் முதலிய பேரூர்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர், ஐங்குறுநூற்றின் நெய்தல்பற்றிய நூறு செய்யுட்களையும் (100-200), அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுட் சில (27) செய்யுட்களையும் பாடியவாகச் சங்கத்தொகை நூற்களுட் காணலாம். இந்நூலுள் 76 ஆவது செய்யுள் பாலைத்திணையைச் சார்ந்தது; பிற மூன்றும் நெய்தற்றிணைச் செய்யுட்களாகும். மாந்தைத் துறையின் சிறப்பை 35ஆவது செய்யுளுள் மிகவும் இனிதாக இவர் அறிமுகப் படுத்துகின்றனர். நெய்தற் பரதவர் வலைகளை உணக்கும் திறமும், அலவனின் அறியாமைச் செயலும், தலைவனின் காதற்பாசமும், தோழியின் பண்பும் ஆகிய பலவற்றையும் தீவிய சொற்களினாலே அமைத்து நம்மை இன்புறுத்துவதனை இச்செய்யுட்களாற் காணலாம். 76ஆவது செய்யுளிற் பாலைத்திணையை அமைத்துப் பாடிய பொழுதும் அதன்கண்ணும் தலைவியை நெய்தனிலக் குறுமகளாக அமைத்துள்ள திறம் பெரிதும் இன்புறர்பாலதாகும்.

அறிவுடை நம்பி 15

'பாண்டியன் அறிவுடை நம்பி' என்னும் இவர், அரச வாழ்வினரேனும் சிறந்த தமிழ்ப்புலவராகவும் விளங்கியவராவர். 'மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லை. தாம் வாழும் நாளே' எனப் புறநானூற்றின் பொருள்பொதிந்த 188ஆம் செய்யுளைச் செய்தவர் இவரேயாவர். நட்பிற்கு ஒருவரெனப் போற்றப்பெறும் பிசிராந்தையாராற் பொருண்மொழிக் காஞ்சி பாடப் பெற்றவர். 'தலைவியைப் புனங்காவலில் அச்சுறுத்தித் தோழி ஈடுபடுத்தும் கூற்றாக' அமைந்த இவரது அகநானூற்றுச் செய்யுள் மிக்க நயமுடையதாகும் (அகம் 28). இவருடைய குறுந்தொகைச் செய்யுளும் (230) பொருள்நலம் மிக்கதாகும்.

ஆலம்பேரி சாத்தனார் 152

மதுரையைச் சார்ந்த ஆருலவிய நாட்டு ஆலம்பேரியென்னும் ஊரினைச் சார்ந்தவர் இவராவர்; இவர் பெயர் 'சாத்தனார்' என்பதாகும். அகநானூற்று 47, 81, 143, 175 ஆம் செய்யுட்களையும், நற்றிணையுள் 152, 255, 303, 238 ஆகிய செய்யுட்களையும் பாடியவர் இவர். நெய்தனிலத்தும் பாலைநிலத்தும் நன்கு பழகியவர் என்பதனை இச்செய்யுட்களால் நாம் அறியலாம். 'துன்பங்கள் பலவாக வந்தன; அனைத்திற்கும் தலைவிபாற்கொண்ட காதலே காரணம்' எனத் தலைவன் கூறுவதாக இச்செய்யுளுட் காட்டுந்திறம் சிறப்புடையதாகும். அகநானூற்றுச் செய்யுட்களுள் கடலனது விளங்கிலென்னும் ஊரையும், பிட்டனது குதிரை மலையினையும், திருத்தலையானங்கானத்தையும், நெவியன் என்னும் கொடையாளியையும் இவர் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

இடைக்காடனார் 142

இடைக்காடு என்னும் ஊரினர்; இவரது இயற்பெயர் தெரிந்திலது. இடைக்காடு குமரி மாவட்டத்து ஓர் ஊராகும். தஞ்சை மாவட்டத்தும் இடைக்காடென்னும் ஓர் ஊர் உளதென்பர். இவர் பாடியவாகக் கிடைத்துள்ள செய்யுட்கள் 10 ஆகும். (நற் 142, 316: புறம்; 42, அகம் 139, 194, 274 284, 304, 374; குறு. 251). இவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியவராதலின், அவன் காலத்தவராகக் கொள்ளப்படுவர். இவருடைய செய்யுட்களுள் முல்லையின் எழிலும் இனிமையும் சிறப்பாக உரைக்கப்பட்டுள்ளன. இச் செய்யுளுள் இவர் எடுத்துக்காட்டும் இடையனது நிலை சிறந்த சொல்லோவியமாகத் திகழ்கின்றது. 'அல்லி யாயினும் விருந்துவரின் உவக்கும் முல்லைசான்ற கற்பின் மெல்லியற் குறுமகள்' எனத் தலைவியது இல்லற மேம்பாட்டையும் இவர் நன்கு எடுத்துக் கூறுகின்றனர். புறநானூற்று 42ஆம் செய்யுளுள் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடும் இவர், 'மலையினிழிந்து மாக்கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவரெல்லாம் நின்னோக்கினரே' எனக்கூறும் உவமைத்திறம், மிக்க இனிமையுடையதாகும். இடைக்காட்டுச் சித்தர் வேறொருவர்; பிற்காலத் தவர்.

இளங்கீரனார் 3, 62, 113

இவரை 'எயினந்தை மகனார் இளங்கீரனார்' எனவும் குறிப்பிட்டுள்ளனர். 'பொருந்தில் இளங்கீரனார்' என்பவர் மற்றொரு புலவராவர். இவர் வேட்டுவக்குலத்தினராகத் தோன்றியவர் என்பர்; மக்களின் இயல்புகளை நன்கு ஆய்ந்தறிந்து உரைக்கும் திறனுடையவர். இவர் செய்யுட்களுள் பாலைபற்றிய செய்திகள் எழிலுடன் உரைக்கப் பட்டுள்ளமையைக் காணலாம். இச் செய்யுட்களுள் வில்லேருழவரின் வெம்முனைச் சீறூரை அறிமுகப்படுத்தும் இவரது ஆழ்ந்த புலமைத் திறம் வியத்தற்கு உரியதாகும். இல்லுறை மகளிர் மாலை வேளையில் மனைவிளக்கு ஏற்றினராக விளங்குவதனை, 'மனைமாண் சுடரொடு படர்பொழுது' என்பதனால் இவர் எடுத்துக்காட்டியுள்ளனர். திங்களை நோக்கித் தன் மனைவியின் முகத்து நினைவிலே திளைக்கும் தலைவன், 'எமதும் உண்டோர் மதிநாள் திங்கள்' என்று கூறுவதாக உரைத்துள்ளனர் இவர். 113ஆம் செய்யுளுள் உதியனின் போர்ச்சிறப்பையும் இவர் பாராட்டுகின்றனர். ஆம்பற் குழலினை இசைக்கும் பழந்தமிழரது வழக்கத்தையும் இச்செய்யுளாற் காணலாம் 'கீரர்' எனும் பெயரால், சங்கறுக்கும் குலத்தவர் இவர் எனக் கருதுவாரும் சிலர்.

இளந்திரையனார் 94, 99, 106

தொண்டைமான் இளந்திரையன் என்பானும் இவனும் ஒருவனே எனக் கொள்வர் சான்றோர். இவன் அதியமான் அஞ்சியின் காலத்தவன். பெரும்பாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன். இவனுடைய பிறப்பின் வரலாறு பெரும்பாணாற்றுப் படையின் 29—31 ஆம் அடிகளுள் அந் நூலைச் செய்த கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் உரைக்கப் பெற்றுளது. இவன் 'இளந்திரையம்' என ஒரு நூலைச் செய்தனன்; அந் நூலைப்பற்றிய குறிப்பினை இறையனாரகப் பொருள் உரையால் அறியலாம். தொண்டையர் வேந்தனாக விளங்கிப் புலவர்களைப் புரந்து வந்த சிறப்பினனாக வாழ்ந்த இவன், தானே பெரும் புலவனாகவும் விளங்கினனாதல் வேண்டும். நற்றிணையுள் வரும் இச் செய்யுட்களுடன் புறநானூற்று 185 ஆவது செய்யுளையும் செய்துள்ளவன் இவன் ஆவான். 'தன் வயின் ஆர்வம் உடையராகி மார்பணங் குறுநரை அறியாதோன் என்ன மகன் கொல்?' எனத் தலைவி கூற்றாக இவன் சொல்லும் நயம் தலைவியின் ஏக்கத்தை நன்கு எடுத்துரைப்பதாகும் (90), 'பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ வாகலின் மலர்ந்தன பலவே (99)' என்று தோழி கார்கால வரவை மறுத்துக் கூறுவதாக உரைத்துள்ள சொன்னயமும் சிறப்புடையதாகும். உலகாளும் முறைமையை இவன் எடுத்துரைக்கும் திறத்தினை இவனுடைய புறநானூற்றுச் செய்யுளாற் காணலாம். 'கலந்தான் அதனைச் செலுத்துவோன் மாட்சிமைப் படின் ஊறு பாடில்லாதே இனிதாக வழியைக் கடந்து செல்லும்; அவன் இனிதாகச் செலுத்தும் தொழிலை அறியானாயின் அதுதான் பகையாகிய செறிந்த சேற்றில் அழுந்திப் பல தீமைகளை அடையும்' என்கின்றான் இவன். இவ்வுவமையினை அரசியற்றலைமை பூண்டோருக்குப் பொருத்திப் பொருள் நயம் கண்டு போற்றுதல் வேண்டும்.

இளந்தேவனார் 41

இவரை மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் எனவும் குறித்துள்ளனர். மதுரைப் பேரூரிலே பல பண்டங்களையும் கொண்டுவிற்று வாணிகத்தொழிலினைச் செய்தோரான இவர், சிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்திருக்கின்றனர். இவர் பாடியவாக அகநானூற்றுள் மூன்று செய்யுட்களும் காணப்படும் (58, 298, 328). உன்னைத் தழுவிக் கூடி இன்புறுவதினுங் காட்டில், உன்னை நினைந்தேமாய்க் காத்திருக்கும் அதுவே மிக்க இனிமை உடையது' எனத் தலைவியொருத்தி கூறுவதாக இவர் அகநானூற்றுச் செய்யுளுள் உரைக்கும் (58) தன்மை, அத் தலைவியின் ஏக்கமிகுகியை நன்குகாட்டுவதாகும். 'முயங்குதொறு முயங்குதொறு முயங்க முகந்துகொண்டு அடக்குவமன்னோ தோழி... நாடன் சாயல் மார்பே' என்று தலைமகளின் காதற் பேரார்வத்தையும் இவர் உருக்கமாகக் கூறுவர் (அகம் 328). பெருந்தேவனாரினும் வேறுபடுத்திக் காட்டுதல் கருதி. இவரை இளந்தேவனார் என்றன போலும்!

இளநாகனார் 151

இளம்புல்லூர்க் காவிதி 89

காவிதிப் பட்டத்தினர்; இதனால் உழுவித்து உண்ணும் வேளாளப் பெருங்குடியினராக இவரைக் கொள்ளலாம். இவரூர் 'புல்லூர்' என்பதாகும். இவர் பாடியவாகக் காணப்படுவது இந் நற்றிணைச் செய்யுள் மட்டுமேயாகும். வாடைக் காற்றது கொடுமையைப் பற்றிய உவமைத் திறம் மிகமிகச் சுவையுடையது ஆகும். 'புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்துப் பரும யானை அயாவுயிர்த் தாங்கு' வாடைக்காற்று வருத்தம் மிகுக்க வருகின்றதாம்.

இளம்போதியார் 72

'போதியார்' என்றமை இவரைப் புத்த முனிவருள் ஒருவரெனக் காட்டுவதாகும்: 'இளம்' என்றது இவரது பருவத்தைக் குறித்துக் கூறப்பட்டதும் ஆகலாம். இவர் பாடியவாகக் கிடைத்துள்ளது இச் செய்யுள் ஒன்று மட்டுமேயாகும். நெய்தற்றிணையைச் சார்ந்த இதன்கண், 'பேணும் பேணார் பெரியோர் என்பது நாணுத்தக்கன்றது காணுங் காலை' எனப் பெரியோரது வாய்மை பேணும் கடப்பாட்டைச் சுட்டித் தோழி கூற்றாக இவர் கூறியுள்ளமையும், களவுறவுக்குத் தலைவி அஞ்சுகின்றாளெனத் தோழி கூறுவதாக உரைக்குந் திறமும் சிறப்புடைய தாகும்.

இளவேட்டனார் 33, 157

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்பாரும் இவரும் ஒருவரேயாவர்; இருவரும் வேறானவர் என்பாரும் உளர் மதுரைக்கண்ணிருந்து அறுவை வாணிகத்தால் வாழ்ந்து வந்தாரான இவர் சிறந்த தமிழ்ச் சான்றோராகவும் விளங்கினார். அகம். 56, 124, 230, 254, 272, 302; குறுந் 185; நற்.33. 157, 221, 344; புறம். 329 என்பன இவரியற்றிய செய்யுட்களாகக் காணப்படுவனவாகும். 'புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு அருகாது ஈயும் வண்மையுடைய தலைவர்கள் இவர் காலத்து வாழ்ந்தனர் (புறும் 329). இச் செய்யுட்கள் இரண்டும் பாலைத்திணையைச் சார்ந்தவை பிரிவுத் துயரத்தால் வருந்தும் தலைவியின் நிலையையும், தலைவனின் மன நிலையையும் இச் செய்யுட்களுட் காணலாம். இவரது அகநானூற்று 56வது செய்யுள் சுவையான எள்ளல் காட்சியினைக் கொண்டதாகும்.

இனிச்சந்த நாகனார் 66

இனிய சந்தத்தோடு வாய்ப்பாட்டுப் பாடும் திறனுடையவராகவும், 'நாகன்' என்னும் பெயருடையோராகவும் விளங்கியவராதலின் இப்பெயர் பெற்றனாரதல் பொருந்தும். நாகர் குலத்தவர் எனலும் பொருத்தமுடைத்தேயாம். இவரதாகக் காணப்படுவது பாலைத்திணை சார்ந்த இச் செய்யுளொன்றே. நற்றாய் உடன்போக்கிற் சென்றாளான தன் குறுமகளை நினைந்து வருந்துகின்றதாக அமைந்துள்ள இச்செய்யுள் மிகவும் நயமுடையதாகும்.

உக்கிரப் பெருவழுதி 98

இச் செய்யுளும். அகநானூற்று 26 ஆவது செய்யுளும் இவரியற்றியனவாகக் காணப்படுவனவாம். கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி (புறம். 21) எனச் சான்றோராற் சிறப்பிக்கப் பெற்றவரும் இவரே. பாண்டிய மன்னராகவும் பைந்தமிழ் வல்லாராகவும் திகழ்ந்தவர் இவராவர். சேரமான் மாரிவெண்கோவும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும் இவருடன் நட்புடையோராக விளங்கினர். ஔவையாராலும் ஆவூர் மூலங்கிழாராலும் போற்றிப் புகழப்பட்டவர். உப்பூரிகுடிகிழார் உருத்திர சன்மரைக் கொண்டு அகநானூற்றைத் தொகுப்பித்தவரும் இவரேயாவர். திருக்குறட் பெருநூலும் இவரவைக் கண்ணேயே அரங்கேறினதென்று சான்றோர் கூறுகின்றனர், 'பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென' என இவர் உரைப்பது கொண்டு பல்லி படுவதனைக் கேட்டு நிமித்தம் காணும் பண்டைமரபினை அறியலாம். இச் செய்யுள் குறிஞ்சித்திணைச் செய்யுளாகும் தலைவனோடு ஊடி நின்ற தலைவி, தான் ஊடல் தீர்ந்து அவனோடு கூடிய தன்மையைக் கூறுவதாக அமைந்த இவரது அகநானூற்றுச் செய்யுள் (26) சிறந்த ஓர் இன்ப நாடகமாகவே விளங்குகின்றது.

உலோச்சனார் 11, 38, 63, 64, 74, 131, 149, 191.

இவர் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் காலத்தவர்; அவனையும், பொறையாற்றுப் பெரியன் என்பானையும் பாடியுள்ளனர். இவரூர் 'காண்டவாயில்' என்பதாம்; இதனை நற்றிணை 38 ஆம் செய்யுளால் உய்த்துணரலாம். நெய்தனில மக்களது வாழ்வையும் பழக்கவழக்கங்களையும் நன்கறிந்து நயமாகப் பாடியுள்ளவர் இவரென்றும் அறியலாம். இவர் செய்துள்ள புறநானூற்றுச் செய்யுள் (274) பண்டைத் தமிழ்மறவரது மறமாண்பினை உயர்த்துக் காட்டுவதாகும். அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகியவற்றுள் இவராற் பாடப்பெற்ற செய்யுட்களைக் காணலாம். (மொத்தம் 35 செய்யுட்கள்). 'அவர் செய்குறி பிழைப்பப், பெய்யாது வைகிய கோதைபோல மெய்சாயினை–(நற். 11); 'அறிவும் உள்ளமும் அவர்வயிற் சென்றென, வறிதால் இகுளையென் யாக்கை; இனியவர் வரினும் நோய் மருந்து இல்லர்–(நற்.) 94; 'ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் உள்ளலாகா உயவு நெஞ்சமொடு ஊடலும் உடையமோ?'–(நற். 131); 'சிலரும் பலரும் கட்கண் நோக்கி, மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி, மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்ற' – (நற்.149) எனச் சுவைபடத் தாம் கூறும் செய்திகளைக் காட்சிப்படுத்தி, உளத்தே நிலைப்படுமாறு எடுத்துரைக்கும் சொல்லாட்சித் திறனில் இவர் மிக்கவராவார்.

எயினந்தையார் 43

எயின் + தந்தை = எயினந்தை; எயினன் என்பானைத் தந்தையாகக் கொண்டவர் என்பது பொருள். இவருடைய பெயருக்கு இதுவே காரணமாகலாம். 'உடைமதில் ஓரெயின் மன்னன் போல' என இச் செய்யுளுள் அழிவுமிகுதிக்கு உவமை காட்டிய திறத்தால் இப் பெயரைப் பெற்றனரெனலும் பொருத்தமுடையதாகும். முற்கூறப்பெற்ற இளங்கீரனார் இவருடைய மகனார் என்று கொள்ளல் வேண்டும். பிரிதலை யெண்ணி முயலும் தலைவனிடம், பிரிவினால் தலைவிக்கு வந்துறும் துயரமிகுதியை எடுத்துக்கூறும் தோழி கூற்றாக அமைந்த இச் செய்யுள் மிகவும் சுவையுடையதாகும்.

ஒருசிறைப் பெரியனார் 121

நாஞ்சில் வள்ளுவனைப் பாடியவர்—(புறம் 137) இவர். இவர் செய்தவாகக் காணப்பெறுவன குறுந்தொகையின் 272 ஆவது செய்யுளும், இச் செய்யுளும், புறநானூற்று 137ஆவது செய்யுளும் ஆகும். சினத்தாற் சிவப்புற்ற கண்களுக்கும் குருதியொடு பறித்த செங்கோல் வாளியை உவரித்து நம்மை வியப்பிலாழ்த்துகின்றார் இவர் (குறு.272). தலைமகனைத் தேர்ப்பாகன் தேற்றுவதாக அமைந்த முல்லைத் திணைச் செய்யுள் இதுவாகும்.

ஓரம்போகியார் 20

இந் நூலுள் இச் செய்யுளும், 360 ஆவது செய்யுளும் இவர் பெயராற் காணப்படுவன. மருதத்திணைச் செய்யுட்களியற்றுவதில் இவர் வல்லவர். ஐங்குறு நூற்றுள் மருதம் பற்றிய நூறுசெய்யுட்களைப் பாடியவர் இவர். ஆதன் அவினி, பாண்டியன், சோழன், மத்தி இருப்பையூர் விரான் என்போரைப் பாடியவரும் இவராவர். தலைவனோடு நெடுக ஊடுதல் வேண்டாவெனத் தோழி கூற்றாக இவர் உரைத்துள்ள அகநானூற்றுச் செய்யுள் வியக்கத்தக்கதாகும் (அகம் 316). ஐங்குறு நூற்றுச் செய்யுட்கள் அனைத்தினும் மருதத்து வளமையையும் மருதநிலத் தலைவன் தலைவியரது மனப்போக்குக்களையும் இவர் மிகவும் செறிவோடு காட்டுகின்றனர். 'கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல் சுரும்பு பசி களையும் பெரும்புனல் ஊர!; 'நறுவடு மாஅத்து விளைந்துகு தீம்பழம் நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉங் கைவண் மத்தி கழாஅர்' என உவமை நயப்பாட்டுடன் உரைக்கும் ஆற்றலுடையவர் இவர். இச் செய்யுளுள் தலைவனின் பரத்தையைத் தான் கண்டதாகத் தலைவி கூறுகின்ற தன்மையிலே, அவளைச் சொல்லோவியப்படுத்து இவர் காட்டுகின்றனர்.

ஔவையார் 129, 187

பாணர் மரபினரும் பைந்தமிழ் வல்லாருமான இப்பெருமாட்டியாரது வரலாறு மிகப்பரந்தது ஆகும். இவர்பாற் பேரன்பு கொண்டோனாக விளங்கியவன் தகடூர்க் கோமானான அதியமான் நெடுமான் அஞ்சியாவான். சங்கத்தொகை நூற்களுள் 59 செய்யுட்கள் இவராற் செய்யப் பெற்றனவாகக் காணப்படும். இச் செய்யுட்களுள் முன்னது குறிஞ்சித் திணையையும்; பின்னது நெய்தற்றிணையையும் பற்றியவாம். 'காதலர் ஒருநாட் கழியினும் உயிர் வேறு படூஉம்' தலைவியது காதற்பெருநிலையையும், தலைவனைப் பிரிந்து இரவைக் கழிக்க மாட்டாளாய்க் கவலும் தலைவியது உளப்பாங்கையும் இச் செய்யுட்களுட் கண்டு இன்புறலாம்.

கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் 144

கச்சிப்பேடு என்பது காஞ்சிபுரத்தைச் சார்ந்த ஒரு சிற்றூராகும். அவ்வூர்த் தச்சர் குலத்தவராக இவரும், இவரினும் இளமைப் பருவத்தினரான இளந்தச்சனாரும் குறிக்கப் பெற்றுள்ளனர். இச் செய்யுளும் நற்றிணை 213 ஆவது செய்யுளும் இவர் பெயரால் வழங்குவன. 'காஞ்சிக் கொற்றனார்' என்பாரும், கச்சிப்பேட்டு நன்னாகையாரும் இவ்வூரினராவர். இச் செய்யுளுள், 'வரும் வழியது ஏதத்திற்கு அஞ்ரிய தலைவியானவள், இரவுக்குறியிடத்து வந்தோனாக ஒருசிறை நிற்கும் தலைவன் கேட்குமாறு சொல்லுகின்றாளாக' இவர் நயம்படப் பாடியுள்ளனர். பெருந்தச்சு என்பது பெருமனைகளும் பெருங்கோயில்களும் எழிலுற அமைக்கும் தொழில்நுட்பத் தகுதியாகும்.

கடுவன் இளமள்ளனார் 150

மதுரைத் தமிழக்கூத்தன் கடுவன் இளமள்ளனார் என்பாரும் இவரும் ஒருவரே யெனவும். இருவரும் வேறானவர் எனவும் உரைக்கின்றனர் பாண்டியன் மாறன் வழுதியது போராற்றலை இச் செய்யுளுள் இவர் குறிப்பிட்டுள்ளனர். மள்ளராகவும், கூத்தராகவும் தமிழ்ப் புலவராகவும் விளங்கியவர். 'ஒருமைய நெஞ்சங் கொண்டமை விடுமோ?' எனக் கேட்பதாக உரைக்கும் திறம் வியத்தற்கு உரியதாகும்.

கண்ணகனார் 79

கண்ணனாகனார் என்பது 'கண்ணகனார்' எனத் திரிந்தது; இவரியற்பெயர் 'நாகனார்' என்பதாகும். கோப்பெருஞ் சோழனின் காலத்தவர். புறநானூற்று 218ஆம் செய்யுளால் பிரோந்தையாரின் நட்பு மேம்பாட்டைப் பெரிதும் வியந்து பாடியவர். பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குத் தன் நிலையைச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.

கண்ணகாரன் கொற்றனார் 143

இவர் பெயர் கொற்றனார் என்பதாகும் 'கண்ணகாரன்' என்னும் அடைமொழி இவரது ஊரையாயினும் தொழிலையாயினும் குறித்து அமைந்ததெனக் கருதலாம். மனை மருட்சியாக இவர் பாடியுள்ள இச் செய்யுள் தாய்மையின் பெரும்பாசத்கை நன்கு காட்டுவதாகும். தன் மகள் தான் விரும்புங் காதலனுடன் உடன்போக்கில் சென்றாளாயினும், அதனை அறத்தொடு பட்டதே எனக்கொண்ட தாய், 'வழுவிலள் அம்ம தானே!' என்றுரைத்தாளாயினும், அவளைப் பிரிந்ததற்கு இரங்கி மருளுகின்றாளெனக் காட்டுகின்றனர் இவர்.

கண்ணன் கொற்றனார் 156

கண்ணன் புல்லனார் 159

இவர் கருவூரினர்; அதனாற் கருவூர்க் கண்ணம்புல்லனார் எனவும் குறிக்கப் பெறுவர். அகநானூற்று 63ஆம் செய்யுளைச் செய்தவரும் இவரே. தலைவியின் ஆற்றாமையினையும் உலகியலையும் எடுத்துக்கூறித் தலைவியை வரைந்து கொள்ளுமாறு வேண்டும் தோழி கூற்றாக அமைந்த செய்யுள் இதுவாகும். 'செழுநகர்ச் செலீஇய எழு'. எனின் அவளும் ஒல்லாள்: யாமும் ஒழியென வல்லல் ஆயினம்' எனக் கூறும் தோழியின் சொற்கள் அவர்களது உளம் நிரம்பிய பேரன்பைக் காட்டுவனவாகும்.

கணக்காயனார் 23, 24

இச் செய்யுளை [23] மதுரைக் கணக்காயனார் செய்ததெனவும். கணக்காயன் தத்தனார் செய்ததெனவும் இருவாறாகக் கொள்வாரும் உளா. தொழிலாற் பெயர் பெற்றவர் இவர். கணக்குக் கற்பிக்கும் ஆசிரியத் தொழிலோர் கணக்காயர் எனப் பெற்றனர். தலைவியின் துயராற்றாமையை உணர்ந்த தோழி வரைவு கடாயதாக அமைந்த இச் செய்யுளுள், இவர் 'முத்துப்படு பரப்பின் கொற்கை முன்றுறை'யைச் சிறப்பித்துள்ளனர்.

கதப்பிள்ளையார் 135

கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் வேறு; இவர் வேறு என்பர். சாத்தனாரின் தந்தையாராகவும் இவரைக் கொள்வார்கள். குறுந்தொகையுள் 64, 265, 380 ஆகிய மூன்று செய்யுட்களும், இச்செய்யுளும் இவர் பெயரால் வழங்குவனவாம். நாஞ்சில் வள்ளுவனைப் புறநானூற்று 380 ஆம் செய்யுளாற் பாடியவரும் இவரே. நெய்தற்றிணையைச் சார்ந்த இச் செய்யுளுள் நெய்தனிலத்தின் தன்மையை இவர் அழகுறக் காட்சிப்படுத்திக் காட்டுகின்றனர்.

கந்தரத்தனார் 116, 146

கபிலர் 1, 13, 32, 59, 65, 77

பாண்டிய நாட்டுத் திருவாதவூரிற் பிறந்தாரான இப் பெரும்புலவரது வரலாறு மிகப் பரந்த ஒன்றாகும். பாரியின் தோழராகவும் அவைப் புலவராகவும் வாழ்ந்த சிறப்பினர். சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனையும், மலையமான் திருமுடிக் காரியையும். மற்றும் பலரையும் பாடியவர். சங்கத் தொகை நூற்களுள் 235 செய்யுட்கள் இவர் பெயரால் விளங்குவனவாகும். குறிஞ்சிக்கலியும், குறிஞ்சிப் பாட்டும், ஐங்குறு நூற்றுள் குறிஞ்சிபற்றிய நூறு செய்யுட்களும், பதிற்றுப்பத்துள் 'ஏழாம் பத்தும் இவராற் செய்யப்பெற்ற பெருநூற்கள் எனலாம். இவரது செய்யுட்களுள் குறிஞ்சித் திணையின் குன்றாத பேரெழிலைக் கண்டு இன்புறலாம். 'நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்' எனத் தலைவனைக் குறிப்பிடும் தலைவியையும் (1), 'பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே' எனவரும் பெரியோரியல்பையும் (32), 'நல்லுரை கூறியோள் அமுதம் உண்க' என வாழ்த்தும் மரபினையும் (65), மலையனின் போர்மறச் செவ்வியையும் இச் செய்யுட்களிடையே கண்டு நாம் இன்புறலாம்.

கயமனார் 12, 198

இவர் பாடியவாகக் காணப்படும் 25 செய்யுட்களுள் நற்றிணையுள் ஆறு செய்யுட்கள் அமைந்துள்ளன. அவற்றுள் இவை இரண்டாகும். 'பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல், இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொறும் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்' எனக் குறுந்தொகையுட் கூறிய (9) உவமைத் திறத்தால் இப் பெயரினை இவர் பெற்றனர். இவரது செய்யுட்கள் பலவும் மகட்போக்கிய தாயது புலம்பலாகவே காணப்படுதலைக் கொண்டு இவரைப் பெண்பாலரென ஐயுறுதலும் பொருந்துவதாகும். அன்னி திதியனது காவன் மரமான புன்னையை வெட்டியழிக்த செய்தியை இவரது அகப்பாட்டுள் (145) காணலாம். இச் செய்யுட்கள் பாலைத்திணைச் செய்யுட்களை நயமுறப் பாடுதலில் இவர் வல்லவரென்னும் உண்மையினை நன்றாக உணர்த்துவனவாகும். உடன்போக்கின் கண்ணே செல்லற்கு முற்பட்ட தலைவிக்கு அதனை மறுத்து உரைத்துத் தோழி அஞ்சுவித்ததாகப் புதியவொரு துறையினை வகுத்துரைத்தவரும் இவராவர் (நற்.12)

கள்ளம்பாளனார் 148

இவர் கருவூர்க் கண்ணம்பாளனார் எனவும் கூறப்பெறுவர்; அகநானூற்றுள் இரண்டு செய்யுட்களோடு இச்செய்யுளையும் இவர் பாடியுள்ளனர். பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயதாக அமைந்த இச்செய்யுளால் இவரது தமிழ்ப் புலமையினை நாம் அறிந்து இன்புறலாம்.

காஞ்சிப் புலவனார் 120, 123

மாங்குடி மருதனார் என்னும் தமிழ்ச் சான்றோர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்மீது மதுரைக் காஞ்சி பாடியதனால், 'காஞ்சிப் புலவனார்' எனவும் பெயர் பெறுவாராயினர். வேளாண் மரபினரான இவரை மாங்குடிகிழார் எனவும் கூறுவதுண்டு. இவருடைய மதுரைக் காஞ்சி சொற்றொரும் இன்பம் பயக்கும் செறிவுடையதாகும். ஐம்பாற்றிணையும் கவினோடு அமையைக் காஞ்சியை வலியுறுத்தும் செய்யுளை இவர் ஆக்கியுள்ளனர். மதுரையின் வளத்தையும் மதுரைக்கண் வாழ்ந்த மக்களது வாழ்வுச் சிறப்பையும் அதனுட் காணலாம். புறநானூற்றுள்ளும் இவர் பாடியுள்ள செய்யுட்கள் பொருட்செறிவுடன் விளங்குகின்றன். தலைவி அட்டிலாக்கி வருகின்ற அரிய காட்சியையும், நெய்தனிலத்து இளமகளிர் அலவனாட்டி யாடும் ஆடல் அழகையும் இச்செய்யுட்களாற் காணலாம்.

கீரங் கீரனார் 78

கீரனூர்ப் புலவராதலின் கீரங்கீரனார் எனப் பெற்றனர் போலும்! தன் தேர்மணியினது ஒலியைப் பலரும் கேட்டறியுமாறு வெளிப்படையாகத் தலைவன் வருகின்றானாதலின், அவன் நின்னை வரைதற்கே வருபவனாதல் வேண்டுமெனத் தோழி தலைவிபாற் சென்று கூறுவதாக இச் செய்யுளுள் இவர் அமைத்துள்ளனர். கீரங்குடியினர் எனவும் கருதுவர்.

கீரத்தனார் 27, 42

குடவாயிற் கீரத்தனார் எனவும் இவர் பெயர் வழங்கும். குடவாயில் தஞ்சை மாவட்டத்து நன்னிலத்தைச் சார்ந்துள்ள ஒரு பேரூர். கழுமலப் பெரும்போரை அகநானூற்று 44ஆம் செய்யுளுள் போற்றிக் கூறுகின்றார் இவர் புறநானூற்றுள் (242) ஒல்லையூர்கிழான்பெருஞ்சாத்தனைப் பாடியுள்ளனர். அன்னையின் சொற்களைத் தலைவிக்குக் கூறி ஆராயும் நயத்தையும் (21), வினைமுற்றி மீள்வானொரு தலைவன் தேர்ப்பாகற்குத் தன்னை எதிர்பார்த்திருக்கும் மனையோளைப்பற்றி உரைக்கும் இச் செவ்வியையும் இச் செய்யுட்களாற் கற்று இன்புறலாம்.

குன்றியனார் 117

குன்றையொட்டிய ஊரவராதலின் இப் பெயரினைப் பெற்றவராதலும் பொருந்துவதாம். இவர் பாடியன அகநானூற்றுள் மூன்றும் குறுந்தொகையுள் ஐந்தும், நற்றிணையுள் இரண்டுமாக மொத்தம் பத்துச் செய்யுட்கள் ஆகும். மாலைப் பொழுதினது வருகையை இப் பாடலுள் இவர் மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றனர்.

கூடலூர்ப் பல்கண்ணனார் 200

இவர் கூடலூரினராதல் இவர் பெயரால் விளங்கும். 'பல்கண்ணன்' என்றது இவரது தொழிலையொட்டி வந்த பெயராகவும் கொள்ளப்படுவதுண்டு. பண்டை நாளிலே ஊர் விழாவைக் குயவர், பலருக்கும் சென்று அறிவிக்கும் வழக்கத்தை உடையவர் என்பது இச் செய்யுளாற் காணப்படும் உண்மையாகும்.

கொள்ளம் பாக்கனார் 147

'கொள்ளம் பாக்கம்' என்னும் ஊரினராதல்பற்றி இப் பெயருடையராயினர் போலும். இவரது செய்யுளாகக் காணப்படுவது இஃது ஒன்றே. குறிஞ்சித்திணைச் செய்யுள் இதுவாகும். தலைவியின் களவுறவை அன்னையும் அறிந்தனளாதலின் இனி யாது செய்வேமோ எனக் கவலையுற்றுத் தோழி கூறுவதாக அமைந்துள்ள இச் செய்யுள் மிக்க சுவையுடையதாகும். 'எவ்விடஞ் சென்றனை?' எனக் கேட்டாளான தாய்க்குப் பெருவரை நாடனை அறியலும் அறியேன்; காண்டலு மிலேனே' எனப் பொய்யுரைப்பாள் போன்று உண்மையை உரைத்துவிட்ட தலைவியது சால்பினையும் இச்செய்யுளாற் காணலாம்.

கொற்றனார் 30

கொற்றங் கொற்றனாரினும் வேறானவர் இவர். இவரைச் செல்லூர் கிழார் மகனார் பெருங்கொற்றனார் எனவும், செல்லூர்க் கொற்றனார் எனவும் உரைப்பர். செல்லூர் இந்நாளைய இராமநாதபுர மாட்டத்து உளதாய ஓரூராகும். பரசுராமர் வேள்வி இயற்றியதாகக் குறிக்கப்பட்டுள்ள ஊரும் இதுவாகும். கொற்றம் வெற்றியைக் குறிக்கும்; கடலிடைக் கலங்கவிழ்தல் பற்றிய உவமையொன்றை இச்செய்யுளுட் கூறியதுகொண்டு இவரைக் கடல் வாணிகருள் ஒருவரெனவும் கொள்வார்கள். குறுந்தொகையுள் சூலிக்குக் கடன்பூணல்; கைந்நூல் யாத்தும் புள்ளோர்ந்தும் நற்பொழுது காண்டல்; விரிச்சியோர்தல் முதலான பல பண்டை வழக்கங்களை இவர் எடுத்தாண்டுள்ளமை காணலாம் (218). தலைவனது பரத்தமையைப் பற்றி உரைக்கும் இச் செய்யுள் இவரது நுட்பமான புலமைத் திறத்தைக் காட்டுவதாகும்.

கோட்டம் பலவனார் 95

இவரைக் கொட்டம்பலவனார் எனவும் உரைப்பர். 'கோட்டம்பலம்' என்பது ஓரூர்; அவ்வூரினர் இவராவர். 'கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் மாக்கோதை' எனச் சேரமான்களுள் ஒருவனைக் குறிப்பிட்டுள்ளனர். இவ்வூரின் உண்மை இதனாலும் அறியப்படும். கழைக் கூத்தாடும் ஆடன் மகளிர் அக்காலத்தும் தமிழகத்திருந்தனர் என்னும் உண்மையும் இச்செய்யுளால் அறியப்படும். 'கொடிச்சி கையகத்ததுவே பிறர் விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே' எனத் தலைவனொருவன் தான் கொண்ட காதலைத் தன் பாங்கனுக்கு உரைக்குந் திறம் இன்புறற்பாலது ஆகும்.

கோக்குள முற்றனார் 96

இவர் 'குளமுற்றம்' என்னும் ஊரினராவர். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனப் புறநானூற்றுள் வருதலால் இவ்வூரின் உண்மை அறியப்படும். 'கோ' என்றது தலைமைபற்றியமைந்த அடையாகும். இவரது செய்யுட்கள் இதுவும் குறுந்தொகை 98 ஆம் செய்யுளும் ஆகும். 'உள்ளுதோ றுள்ளுதோ றுருகிப் பைஇப் பையப் பசந்தனை பசப்பே' எனவரும் சொற்கள் தலைவியரின் நெஞ்சத் தகைமையை நன்கு காட்டுவனவாம்.

கோண்மா நெடுங்கோட்டனார் 40

'கோண்மா' போலும் ஆற்றலும், 'நெடுங்கோட்டன்' என்னும் பெயருங்கொண்டவர் இவராவர். இவரது செய்யுளாகக் காணப்பெறுவது இஃது ஒன்றே. 'நள்ளென் கங்குற்கள்வன்போல அகன்றுறை பூரனும் வந்தனன்' எனப் பரத்தையிற் பிரிந்தோனாய தலைவன், தனக்குப் புதல்வன் பிறந்ததறிந்து தன் மனைக்குச் செல்லும்போது, தலைவியை எதிரிட்டு நோக்கற்கு அஞ்சிய தன்மையினை இவர் நயமாக விளக்குகின்றனர். அரியதொரு காட்சியாகக் கண்முன்னே நிழலாடும் வண்ணம் சொல்லோவியப்படுத்துக் கூறும் இவர் புலமையினை நாமும் அறிந்து உணர்ந்து அநுபவிக்கலாம்.

சல்லியங் குமரனார் 141

இவரை உறையூர்ச் சல்லியங் குமரனார் எனவும் உரைப்பர்; அவர் வேறு இவர் வேறு எனக் கொள்ளலும் பொருந்தும். வேறு பிரித்துக் காட்டற் பொருட்டே இவரைச் சல்வியங் குமரனார் எனவும், அவரை உறையூர்ச் சல்லியங் குமரனார் எனவும் குறித்துள்ளனர் போலும். சல்லியன் என்பாரின் மகனார் 'சல்லியன் குமரனார்' எனப் பெற்றமையாற் சல்லியனாரும் பெரும்புகழினராக விளங்கினராதல் வேண்டும். பாரதக் கதையுள் வரும் 'சல்லியன்' என்னும் பெயரைக் கருதவே இப்பெயரும் பண்டை நாளில் வழக்காற்றிலிருந்து வந்த பழம் பெயர்களும் ஒன்றென்று கூறலாம். சல்லியம் — அம்பு; பகைவருக்குச் சல்லியம் போன்று விளங்கும் மாண்புபற்றிச் 'சல்லியன்' எனப் பெயர் பெற்றனர். சேறாடிய யானை தன் உடலினை உராய்தலாற் சேறுபடிந்த புனற்காற் கொன்றையானது. 'நீடிய சடையோடு ஆடாமேனிக் குன்றுறை தவசியர்' போலத் தோன்றும் எனச் சுவையோடு உவமித்துத்துள்ளனர் இவர் (141). இதனால், பண்டைநாளிற் குன்றுகளிடத்தே சென்று தவ வாழ்வினரயிருந்தாரும் தமிழகத்தே இருந்தமை அறியப்படும். இதனால், பண்டைத் தமிழறிஞர்களிடையே தவமாற்றி வருகின்ற ஆன்மநெறிப்பாடு செறிவுற்றிருந்தமையும் காணப்படும்.

சாத்தந்தையார் 26

சாத்தன் தந்தை என்பது சாத்தந்தை எனவாயிற்று என்பர். சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளியை இவர்தம் புறப்பாட்டுக்களாற் சிறப்பித்துள்ளனர். இவருடைய மகனார் கண்ணன் சேந்தனார் என்பவர். புறநானூற்றுள் நான்கு செய்யுட்களும் இச்செய்யுளும் இவர் பாடியவையாம். தலைவியானவள் பிரிவறிந்து வேறுபட்டாளாக, அதனைத் தலைவனிடத்தே எடுத்துரைத்து அவன் செலவைத் தடுத்தற்கு முயலுகின்றாள் தலைவியின் தோழி, அவள் கூறுவது போல அமைந்த இப்பாலைத்திணைச் செய்யுள் மிக்க நயச் செறிவினை உடையதாகும். இவரை வாணிகச் சாத்துக்களின் தவைவர் எனவும் கருதலாம்.

சிறுமோலிகனார் 61

'மௌலி' என்பது அரசர்க்குரிய திருமுடியாகும். அதனைச் சமைக்கும் நுட்பவினைத் திறனுடையோராதன் பற்றி இவரை மோலிகனார் என்றார் போலும்! 'சிறுமை' பருவத்து இளமையைக் குறித்ததாகலாம். இரவுத்துயிலும் ஒழிந்தாராகத் தலைவனின் வரவைநோக்கிக் காத்திருந்த தம் நிலையைத் தோழி தலைவனுக்கு உணர்த்தும் பாங்கிலே அமைந்துள்ள இச் செய்யுள் இனிமை யுடையதாகும். 'கான்கெழு நாடற் படர்ந்தோர்க்குக் கண்ணும் படுமோ?' என்று வருவதன் செறிவை அறிந்து, நினைந்து இன்புறுக.

சிறைக்குடி ஆந்தையார் 16

'சிறைக்குடி' என்னும் ஊரினர்; ஆதனின் தந்தையாதலின் ஆந்தை எனப் பெற்றனர். இச்செய்யுளோடு குறுந்தொகையுள் 56, 57, 62, 132, 168, 222, 273, 300 ஆகிய செய்யுட்களையும் செய்தருளியவர் இவராவர். 'புணரிற் புணராது பொருளே; பொருள்வயிற் பிரியிற் புணராது புணர்வே' எனப் பொருளினாலாகும் வாழ்வையும் பொருளாசையால் வாழ்வில் இன்பம் இடையீடுபடுதலையும் விளக்கியிருப்பவர் இவராவர். இவருடைய குறுந்தொகைச் செய்யுட்கள் அனைத்தும் அகத்திணை ஒழுக்கத்துப் பொருள் பொதிந்த பலநுட்பமான உளக்கூறுபாடுகளை விளக்குவனவாகும். 'நல்லோளது நறியமேனி முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிது' (குறு.62) எனவும்; 'பணைத்தோள் மணத்தலும், தணத்தலும் இலமே, பிரியின் வாழ்தல் அதனினும் இலமே' (குறு. 168) எனவும் வரும் தொடர்கள், இவரது நுட்பமான புலமைத்திறத்தைக் காட்டுவனவாகும்.

சீத்தலைச் சாத்தனார் 36, 127

சாத்தனார் எனும் பெயருடையாரான இவர் 'சீத்தலை' என்னும் ஊரினராகக் கருதப்படுபவராவர்; சீத்தலை திருச்சி மாவட்டத்துள்ளதோர் ஊரென்பர் 'செர்த்தலை' என இந்நாளில் வழங்கும் சேரநாட்டு ஊரினரும் ஆகலாம். இவர் மதுரையிற் கூலவாணிகம் புரிந்தமைபற்றிக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனவும் உரைக்கப்படுகின்றனர். மணிமேகலைக் காப்பியத்தைச் செய்தருளியவரும், சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் பாடக் கேட்டவரும், இளங்கோவுக்குக் கண்ணகியின் வரலாற்றுள் மதுரையெரிந்த பகுதிபற்றிய நிகழ்வைக் கூறியவரும் இவரே யாவர். பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைப் புகழ்ந்து பாடிய இவரது புறச்செய்யுளைப் புறநானூற்றுட் காணலாம் (புறம். 59). இவர் பாடியவாக இந்நூலுள் மற்றும் இரண்டு செய்யுட்களும், குறுந்தொகையுள் ஒன்றும், அகத்துள் ஐந்தும் காணப்படுகின்றன. பண்டை ஆடவரின் உளப்பண்பினைத் தலைவி கூற்றாக, 'இல்லோர்க்கு இல்லென்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல்' எனக் கூறும் நயம் (அகம்.53) வியத்தற்கு உரியதாகும். இவரைப் போதி மாதவர் கொள்கையினர் என்பர்.

செங்கண்ணனார் 122

இவரை மதுரைச் செங்கண்ணனார் எனவும் கூறுவர். கண்ணனார் எனப் பெயரிய சான்றோருள் இவரும் ஒருவர். 'செங்கண்' என்பது ஒருவகை அரச கருமம் எனவும் உரைப்பார்கள். இச்செய்யுளும் அகநானூற்று 39வது செய்யுளும் இவராற் செய்யப்பெற்றவை. தலைவன் தலைவியை விரைய மணந்து கொள்ளவேண்டுமென்னும் ஆர்வத்தால், அவன் கேட்குமாறு தோழி தலைவிக்கு உரைப்பதாக அமைந்த குறிஞ்சித்திணைச் செய்யுள் இதுவாகும். மூங்கில்கள் உராய்தலால் தீப்பொறி எழுந்து காடே தீப்பற்றிக் கொள்வதை மிகவும் இயற்கையாக எடுத்துக் கூறியிருக்கின்றார் இவர் (அகம் 39).

செம்பியனார் 102

'செம்பியன்' என்பது சோழர் குடியினர்க்குரிய பெயர்களுள் ஒன்றாதலால், இவரை அக்குடியில் தோன்றியவராகக் அருதலாம். காமமிக்கதனாலாய பெருந்துயரத்தினால் தலைவியானவள் தினை கவர்தற்கு வந்து படியும் கிளியை விளித்துக் கூறுவதாக அமைந்த காதற் சுவைமிகுந்த செய்யுள் இதுவாகும். காவற்கடனை மறந்தவளாகக் கிளியை நோக்கிப் புலம்பும் தலைவியது நிலையை, நம் கண்முன்னர் நிழலாடும் வண்ணமாக இவர் அமைத்துள்ள சொற்றிறம் இன்புறுதற்கு உரியதாகும்.

சேகம்பூதனார் 69

மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் என்பவரின் பெயரே இவ்வாறு பிழைபட எழுதப்பெற்றிருத்தல் கூடுமென்பர். மதுரைக் கடைச்சங்கத்து ஏடெழுதும் பணியைச் செய்து வந்தாரான இவர், தாமும் தமிழறிந்த சான்றோருள் ஒருவராக விளங்கினராதல் வேண்டும். அக நானூற்றுள் இரண்டும் (84, 207), குறுந்தொகையுள் மூன்றும் (90, 226, 247), இந்நூலுள் இரண்டும் (69, 247) இவர் செய்தவாக விளங்கும் செய்யுட்களாம். சொல்லழகும், பொருள்வளமும், உவமைத்திறமும் அமைந்தவை இச்செய்யுட்கள் அனைத்தும். பிரிந்துறையும் தலைவி மாலை நேரத்திலே படுகின்ற வேதனை மிகுதியை இச்செய்யுள் நமக்குக் காட்டுகின்றது.

சேந்தங் கண்ணனார் 54

சேந்தன் என்பாரின் மகன்; கண்ணன் என்னும் பெயரினர். இச் செய்யுளும் அகநானூற்று 350 ஆவது செய்யுளும் இவராற் செய்யப்பெற்றனவாம். அகநானூற்றுச் செய்யுளுள் கொற்கைத் துறையிடத்தே பரதவர்கள் மீன் வேட்டமாடியவராக வந்திறங்கும் காட்சியைக் காட்டுகின்றனர். காமநோய் மிகுந்த தலைவியானவள் கடற்குருகினைத் தன் பொருட்டுத் தலைவனிடம் சென்று தூது உரைத்து வருமாறு சொல்லுவதாகச் சுவைகனிய அமைந்த செய்யுள் இதுவாகும்.

தனிமகனார் 153

'வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி, வாழ்வோர்ப் போகிய பேரூர்ப் பாழ்காத்திருந்த தனிமகன் போன்று' என இச்செய்யுளுள் உவமித்த நயம்பற்றி இப்பெயரால் இவர் குறிக்கப் பெற்றுள்ளார். எழில்நலம் அனைத்தும் தலைவனைப் பிரிதலால் இழந்துவிட்டாளாக உயிர் காத்திருக்கும் உடம்போடு விளங்கும் தலைவியின் தனிமை நிலைக்கு நல்ல உவமை இதுவாகும். இத்துடன் போரின் வெம்மைக் காற்றாவாய்ப் பாழ்படும் ஊர்களினது அவல நிலையையும் இச்செய்யுளாற் காணலாம்.

தூங்கலோரியார் 60

இச்செய்யுளும், குறுந்தொகை 151, 295 ஆம் செய்யுட்களும் இவராற் செய்யப்பெற்றவாகக் சாணப் பெறுவன. இவர் ஊணூர்த் தலைவனான தழும்பனைப் பாடியவர் எனக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரின் அகப்பாட்டால் (அகம் 226) அறிகின்றோமாயினும், அப்பாட்டுக் கிடைத்திலது. 'ஒரு பெண் மனைவியாக வீட்டுள் வந்த நிமித்தத்தால் அவ் வீட்டு வளம் பெருகுதலுண்டு' என்பதனை இவரது செய்யுளால் அறிகின்றோம் (குறு.295). 'மறப்பரும் காதலியொழிய, சிறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே'; 'பெருநலக் குறுமகள் வந்தென இனி விழவாயிற்று என்னும் இவ்வூரே' எனவரும் சிறந்த சொல்லோவியங்களை அமைத்துள்ளவர் இவராவர் (குறு. 151, 295). உழத்தியர் நாற்றுமுடி அழுத்தச் செல்லும் சிறப்பையும் இச் செய்யுள் நமக்கு நயமாக எடுத்துரைக்கின்றது.

தொல்கபிலர் 114

திருவாதவூரினரான கபிலர்க்கு முற்பட்டவர் இவராவர். அவர் குலத்து முன்னோராகவும் கருதலாம். இவர் பாடியன அகம். 282; குறும். 14; நற், 114, 276, 328, 399 என்னும் ஆறு செய்யுட்களும் ஆம். இச் செய்யுளுள்வரும் 'புள்ளித் தொல்கரை' என்னும் உவமை காரணமாக இப் பெயர் வழங்கலாயிற் றென்பார்கள். 'இல்லுறை கடவுட்குப் பலி ஆக்கும்' பண்டை வழக்கம்; மூவேறு தாரமும் மல்கிய தமிழகத்தின் சிறப்பு: மணம் நேர்ந்ததால் தலைவிக்கு உண்டாகும் களிப்பு; மடலேறத் துணிந்தானின் சூளுரை; குறிஞ்சிச் சிறுகுடியின் சிறப்பு; 'குறவர் மகளிரேம் குன்று செழு கொடிச்சியேம்' உரைக்கும் குடிச் செருக்கு; வேங்கை முன்றிற் குறமகளிர் குரவையயர்தல்; 'எண்பிழி நெய்யைப் பண்டை நாளில் பயன்படுத்தியமை' போலும் பல செய்திகளையும் இவரது செய்யுட்களாற் காணலாம். இவற்றுடன் நுட்பஞ் செறிந்த உவமைகளையும் கண்டு இன்புறலாம்.

நக்கண்ணையார் 19, 87

இவர் பெண்பாலர்; பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை எனவும் கூறப்படுவர். வணிகர் மரபினரான இவர் உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தனது மகனான போர்வைக்கோப் பெருநற்கிள்ளியைக் காதலித்து, அக் காதல் நிறைவேறாத போதும் அவன்பாற் கொண்ட அன்பிற் குறையாதாராய் அவனைப் பலவாறு பாடிச் சிறப்பித்தவர். அகம். 252; நற். 19, 87; புறம். 83, 84, 85 ஆகியன இவராற் பாடப்பெற்ற செய்யுட்களாம். கிள்ளியது வாழ்க்கையை ஒட்டிய பல செய்திகளையும் இவரது செய்யுட்களால் அறிகின்றோம். அழிசியின் ஆர்க்காட்டையும் இவர் குறித்துள்ளனர். இச் செய்யுட்களுள் வரும் 'வருவையாகிய சின்னாள் வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே' எனவும், 'உள்ளூர் மரத்துத் துயிலும் வாவல் அழிசியின் பெருங்காட்டு நெல்லிக்கனியை உண்டாற்போலக் கனவுகாணும்' எனவும் உரைத்துள்ள நுட்பங்களைக் கற்று மகிழலாம்.

நக்கீரனார் 31, 86, 197

இவர் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எனக் கூறப்பெறும் புகழுடையார் ஆவார். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தவர்; அக் காலத்திருந்த தலைவர்கள் பலரையும் பாடியுள்ளவர். அகம் 141ஆம் செய்யுளுள் கார்த்திகை மாதத்துக் கார்த்திகை விளக்கீடு விழாவினைப் பண்டைத் தமிழ் மகளிர் கொண்டாடும் பாங்கினை விரிவாக இவர் உரைத்துள்ளனர். திருமுருகாற்றுப்படையும் நெடுநல்வாடையும் இவராற் செய்யப்பெற்ற ஒப்பற்ற பெருநூல்களாம். இறையனாரின் களவியலது நுட்பங்களை விளக்கி உரைவகுத்தவரும். இவரே என்பர். இவர் வரலாறு மிகமிக விரிவானதாகும்; இவராற் செய்யப்பெற்றுக் கிடைத்துள்ள செய்யுட்கள் 37 ஆகும். 'உண்பது நாழி உடுப்பவை இரண்டே; பிறவும் எல்லாம் ஒரொக்கும்மே' என்னும் குரலைத் தமிழகத்து எழுப்பியவர் இவராவர் (புறம். 189). 'வேறு பன்னாட்டிற் கால்தர வந்த பலவுறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்' என (31)ப் பழந்தமிழ்க் கடற்றுறைகளையும், மேகங்கள் செறியும் சிறப்பையும் (197) இச் செய்யுட்களுட் கற்று இன்புறலாம்.

நம்பி குட்டுவனார் 145

குட்ட நாட்டினரும் அரசகுடித் தொடர்பை உடையவரும் ஆயினதால் இப்பெயரைப் பெற்றனர் போலும்! 'குறுந்தொகையுள் இரண்டும், இந்நூலுள் மூன்றுமாக ஐந்து செய்யுட்கள் இவர் செய்தவாகக் காணப்படுவன. இச் செய்யுள் நெய்தல்திணை சார்ந்த செய்யுளாகும், இதன்கண் இரவுக்குறி வந்தொழுகுவானாகிய தலைவனை, அதனைக் கைவிட்டு மணவினை பெறுதற்கு முயலுமாறு தூண்டும் தோழியது சொற்றிறத்தைக் கற்று இன்புறலாம்.

நல்லந்துவனார் 88

'அந்துவன்' என்னும் பெயரினர்; அந்துவஞ் சேரல் இரும்பொறை என வருவது இச் சொல்லின் வழக்காற்றுண்மையை வலியுறுத்தும். கலித்தொகைக் கடவுள்வாழ்த்தும், நெய்தல் பற்றிய 33 செய்யுட்களும் இவர் இயற்றியவையே. பரிபாடலுள் வையை நீரணி விழாவினைப்பற்றி அழகுறப் பாடியுள்ள செய்யுட்களைக் காணலாம். 'நம்மை நினைந்து பழமுதிர் குன்றமும் கண்தூர் அருவியாக அழும்' என இச் செய்யுளுள் இவர் கூறுந் திறம் இவரது நுட்பமான பெரும் புலமைக்கும் இயற்கையறிவுக்கும் எடுத்துக்காட்டாகும். உப்பைக் 'கடல்விளை அமுதம்' எனக் கூறும் சிறப்பையும் இச் செய்யுளாற் காணலாம்.

நல்லாவூர் கிழார் 154

நல்லாவூர்த் தோன்றிய வேளாண்குடியினர் இவராவர். பண்டைக் கால மணவினை நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை இவரது அகநானூற்றுச் செய்யுளால் அறியலாம் (86). இரவுக்குறித் தலைவன் சிறைப்புறமாக வரைவு கடாயதாக அமைந்த இச் செய்யுள். தலைவன் வரும் வழியேதத்தை எண்ணிக் கலங்கும் தலைவியது துன்புற்ற மனநிலையை நன்கு காட்டுகின்றது.

நல் விளக்கனார் 85

'நல் விளக்கம்' என்னும் ஊரினரென இவரைக் கொள்வார்கள். குறிஞ்சியைச் சிறப்பித்த இச் செய்யுள் ஒன்றே இவர் செய்ததாகக் கிடைத்துளது. 'கானவன் வேட்டமாக்கொணர்ந்த மானின் கொழுங் குறையைக் கிழங்கொடு காந்தளஞ் சிறுகுடிப் பகுக்கும் கொடிச்சியரது' பகுத்துண்டு வாழும் பண்பாட்டை இச்செய்யுளிற் காணலாம்.

நல் வெள்ளியார் 7, 47

இவர் பெண்பாலர்; அகம். 32, குறு. 365, செய்யுட்களும் இவ்விரண்டு செய்யுட்களுமாக இவர் செய்தவாகக் கிடைத்தன நான்கு செய்யுட்களாகும். 'மறியறுத்து முருகயரும்' குறிஞ்சி நிலத்தாரது இயல்பை இச்செய்யுளால் அறியலாம். இவருடைய அகநானுற்றுச் செய்யுளை ஒரு காதல் நாடகமெனவே கூறலாம்.

நல் வேட்டனார் 53

மிளைகிழான் நல்வேட்டனார் எனவும் இவர் பெயரை வழங்குவர். 'மிளை' என்பது ஓர் ஊரின் பெயராகலாம். களவுறவை அன்னை அறிந்தனளெனக் கூறி இரவுக்குறி மறுத்து வரைவு வேட்பாளாகத் தோழி உரைக்கும் பாங்கிலே அமைந்த சுவையான செய்யுள் இதுவாகும். செல்வத்தினைப் பற்றிய இவரது விளக்கத்தை நற்றிணையின் 210 செய்யுளாற் கண்டு தெளிவடையலாம். மிளை, காவற்காடும் ஆம்.

நற்சேந்தனார் 128

கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார் எனவும் இவர் பெயர் வழங்கும் என்பர்; அவர் வேறு இவர் வேறு எனவும் கூறுவர். குறை நேர்ந்த தோழி தலைவி குறைநயப்பக் கூறியதாக அமைந்த இச் செய்யுள் மிக்க இனிமை செறிந்ததாகும். 'ஏனல் காவலின் இடையுற்று ஒருவன், கண்ணியன் கழலன் தாரன் தண்ணெனச் சிறுபுறங் கவையினனாக, அதற்கொண்டு அஃதே நினைந்த நெஞ்சமொடு இஃதாகின்று யானுற்ற நோயே' என்னும், காதற் செறிவு பெரிதும் நயமுடைத்தாகும்.

நற்றங் கொற்றனார் 136

இவர் பெயர் கொற்றனார் என்பதாகும்; 'நற்றம்' இவரது ஊரின் பெயரெனக் கொள்ளல் பொருந்தும் 'நத்தம்' எனப் பலவூர்கள் இக்காலத்தும் தென்பாண்டிப் பகுதியுள் விளங்கக் காணலாம். 'நத்தம்' என்பது மக்கள் கூடி வாழும் ஊர்ப்பகுதி, தலைவனது பிரிவினாலே தன்னுடல் இளைத்தமைபற்றித் தலைவி கூறுகின்றதாக அமைந்த இச் செய்யுள் அவளது தந்தையது பெருந்தகைமையையும் நமக்கு உணர்த்துவதாக விளங்குகின்றது. 'அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது மருந்தாய்ந்து கொடுத்த அறவோன் போல, எனவுரைத்துள்ள உவமைத்திறம் பெரிதும் நுட்பமுடையதாதலை அறிந்து இன்புறுக; பண்டைத் தமிழ் மருத்துவத்தைப் பற்றியும் இதனால் அறியலாம்.

நற்றமனார் 133

நற்றாமனார் என்னும் பெயரே நற்றமனார் எனத் திரிந்ததெனக் கொள்ளலாம். பிரிவுப் பெருவெம்மையிடையே தோழியுரைக்கும் ஆறுதல் உரைகள், 'கொல்லன் உலையிற் பழுக்கக் காய்ச்சிய இரும்பினிடத்தே சிறிது நீர் தெளித்து அதன் சூட்டைத் தணிப்பது போலாகு' மென்று தலைவி உரைப்பதாக இவர் கூறுவது மிக்க நயம் உடையதாகும்.

நெய்தற்றத்தனார் 49, 130

'தத்தன்' என்னும் பெயரினருள் நெய்தல் நிலத்தைச் சார்ந்தவராதலின் இப் பெயரைப் பெற்றனர் போலும்! இவர் பாடிய மற்றொரு செய்யுள் அகநானூற்று 243ஆவது செய்யுள் ஆகும். தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்ததாக அமைந்த இச் செய்யுள், இவரது நுட்பமான புலமையைக் காட்டுவதாகும். 'அவனூர்க்குத் தலைவி சென்று அறிந்தாலென்ன?' எனத் தோழி கேட்டாள் எனினும், அவள் அதற்கு இசையாள் என்பதையும் அத் தோழி அறிவாள், அஃது பண்பன்று ஆயினமையின். இதனால் தலைவியின் காதற்பெருக்கத்தைத் தோழி உணர்ந்து கொண்டாளாகத் தலைவியும் இரவுக்குறியிடைத் தலைவனைக் காணற்கு இசைவாள் என்பதாம்.

நொச்சி நியமங்கிழார் 17

'நியமம்' ஓர் ஊர்; நொச்சிவேலி சூழ்ந்ததாயிருந்தமையின், 'நொச்சி நியமம்' எனப் பெற்றது; ' நெகமம்' என இக்காலத்தும் கொங்குப் பகுதியில் ஓர் ஊர் வழங்கிவருகின்றது. வேளாண் குடியினர் இவர். இவர் செய்தன் அகம்.52; நற்.17, 208, 209; புறம், 293 ஆகிய செய்யுட்கள். தலைமகள் அன்னையிடம் தான் தன் களவுறவைச்சொல்ல முற்பட்டு மறைத்துக்கொண்ட தன்மையை நயமாகக் கூறுவதாக இவர் இச் செய்யுளாற் காட்டுகின்றனர். 'உயிரினும் சிறந்த நாண்" என்றது, நாணத்தை அந்நாட் பெண்டிர் பேணிய சிறப்பை உணர்த்துவதாகும். பூக்கோட் காஞ்சியாக அமைந்த இவரது புறநானூற்றுச் செய்யுளும் சிறந்த பொருள்நயங் கொண்டதாகும்.

பரணர் 6, 100

சங்கத் தொகை நூற்களுள் இவர் பெயராற் காணப்படுவன எண்பத்தைந்து செய்யுட்களாகும். இவர் கபிலரோடு நட்புடையவராயிருந்தவர். வையாவிக்கோப் பெரும் பேகனின் காலத்தவர்; அக் காலத்துச் செய்திகள் பலவற்றையும் தம் செய்யுட்களுள் அமைத்துப் பாடியவர். இவரது செய்யுட்களுள் பல செய்திகளைக் கண்டு அக்கால வரலாற்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம். இச் செய்யுட்களுள் ஓரியது கொல்லிக் கானத்தையும். மலையமானின் போர்த்திறத்தையும் இவர் கூறுகின்றனர். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பத்துப்பாடல்களாற் பாடி (ஐந்தாம் பத்து) உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றவரும் இவரே. இவர் வரலாறு விரிவாக அறிவதற்கு உரியதொன்றாகும்.

பராயனார் 155

தலைவன் தலைவியைப் பராயதாக அமைந்துள்ள இச்செய்யுளால் இவர் இப்பெயரைப் பெற்றனர் போலும்! தலைவியது ஊடலை நீக்கக் கருதின தலைவன், அவளைப் பணிந்து பராய், அவளது முள்ளெயிற்று முறுவல் திறந்தது கண்டு இன்புறும் செவ்வி பெரிதும் சுவையுடையதாகும்.

பாரதம் பாடிய பெருந்தேவனார் (கடவுள் வாழ்த்து)

பாரதக் கதையைத் தமிழ்ச் செய்யுளாற் பாடியவர்; பெருந்தேவன் என்னும் பெயரினர்; இந் நற்றிணையின் காப்புச் செய்யுளைச் செய்தவர். இப்போது வழங்கும் பாரத வெண்பாப் பகுதிகள் இவருக்குப் பிற்பட்ட பெருந்தேவனார் ஒருவராற் செய்யப் பெற்றனவாகும். புறத்திரட்டுள் காணப்படும் பழம்பாரதச் செய்யுட்களை இவரதாகக் கொள்ளலாம். இந்நற்றிணையின் 83ஆம் செய்யுளைச் செய்த பெருந்தேவனார் இவரிலும் வேறான மற்றொருவர் ஆவர்.

பாலத்தனார் 52

இவர் பெயர் நப்பாலத்தனார் எனவும் காணப்படும். இச் செய்யுளும் நற்றிணையின் 240 ஆவது செய்யுளும் இவர் பாடியவாகக் காணப்படுவனவாகும். இச் செய்யுளுள் வல்விலோரியின் வள்ளன்மையை இவர் எடுத்துக் கூறுதலால், அவனைப் பாடிப் பரிசில் பெற்றவர் எனக் கருதலாம். பாலையது வெம்மையை நினைந்து 'ஐதே கம்ம இவ்வுலகு படைத்தோனே' எனக் கூறியுள்ளவர் இவராவர் (நற்.240). தலைமகன் தலைவியைப் பிரியவியலாதும், பொருளார்வத்தைத் தடுக்கவியலாதும் தன் நெஞ்சுக்குக் கூறுவதாக அமைந்த இச்செய்யுள் பெரிதும் இன்பம் பயப்பதாகும்.

பாலை பாடிய பெருங்கடுங்கோ 9, 48, 118

பிசிராந்தையார் 91

பாண்டிநாட்டுப் பிசிர் என்னும் ஊரினர்; ஆந்தை என்னும் பெயரினர். உறையூரை ஆண்டிருந்த கோப்பெருஞ்சோழனின் உயிர் நண்பராக விளங்கி அவனோடு வடக்கிருந்து உயிர்நீத்த பண்பாளர்; நரைதிரையின்றி நெடுநாள் வாழ்ந்தவர் இவர். அதனைக் குறித்த இவரது புறநானூற்றுச் செய்யுள் (191) பெரிதும் பொருள் நுட்பம் கொண்டதாகும். அரசிறை கொள்ளற்குரிய முறைமையை விளக்கிப் பாண்டியன் அறிவுடை நம்பிக்குக் கூறுவதான செய்யுளும் (புறம் 184) இவரது அறிவாற்றலை நன்கு காட்டுவதாகும். நாரை தன் குஞ்சுக்கு இரையினை வாயிற் பெய்கின்ற பெரும்பாசத்தை இச் செய்யுளால் இவர் நமக்கு எடுத்துக்கூறித் தாய்மையை விளக்கி இன்புறுத்துகின்றனர்.

பிரமசாரி 34

இவர் பெயர் பிரம;சரிய விரதங்கொண்ட சான்றோர் இவரெனக் காட்டுவதாகும் தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறிவிலக்கியதாக அமைந்தது இச் செய்யுள். 'வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்! கடவுள் ஆயினும் ஆக; மடவை மன்ற வாழிய முருகே' என்று முருகனைக் குறமகள் உரிமையோடு கடிந்து கொள்வதாக உரைக்கும் சிறப்பை இச் செய்யுளுட் காணலாம். குன்றத்தினரின் வாழ்வியற் பண்புகளை நன்கு கண்டறிந்தவராகவும் இவரைக் கொள்ளலாம்.

பிரான்சாத்தனார் 68

சாத்தனார் இவரது பெயர் 'பிரான்' என்பது தலைமை குறிக்கும் சொல். இற்செறிக்கப்பட்ட தலைவி கூறுவதாக 'இளையோர் இல்லிடத்திற் செறிந்திருத்தல் அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம்' என்று இவர் கூறுவது தமிழ் மக்களின் ஒழுக்கப் பண்பாட்டைக் காட்டும் சிறப்பினதாகும். 'பிரான்மலை' என்னும் ஊரைச் சேர்ந்தவராகவும் கருதலாம்.

பூதங் கண்ணனார் 140

பூங்கண்ணனார் எனவும் கூறுவர்; கண்ணனார் பலரினும் வேறுபடக் காட்டுதற் பொருட்டு முன்னே அடையிட்டுள்ளனர். கன்னியைக் கண்டு காதலுற்ற ஒரு காளை அவளை அடையப் பெறாதபோதும் அவளை அடைதற்கான முயற்சியைக் கைவிடானாய், 'என்னதூஉம் அருந்துயர் அவலந் தீர்க்கும் மருந்து பிறிதில்லை யானுற்ற நோய்க்கே' எனத் தன் நெஞ்சுக்குக் கூறுவதாக அமைத்திருக்கும் திறம் வியத்தற்குரியதாகும். இதே கருத்து வள்ளுவராலும் கூறப்பட்டிருப்பது இங்கே நினைத்தற்கு உரியதாகும்.

பூதன் தேவனார் 80

ஈழத்துப் பூதன் தேவனார் வேறு, இவர் வேறு என்பர். இவர் செய்ததாகக் குறுந்தொகையின் 285 ஆவது செய்யுளும் காணப்படும். 'தைஇத் திங்கள் தண்கயம் படியும் பெருந்தோட் குறுமகள்' என இவர் கன்னிப்பெண்கள் தைநோன்பு மேற்கொண்டு, தமக்கு நல்ல கணவரைத் தந்தருளுமாறு தெய்வத்தை வேண்டும் பண்டைக்கால மரபினை இச் செய்யுளுள் உரைத்துள்ளனர்.

பூதனார் 29

பெருங்கண்ணனார் 137

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் எனவும் விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் எனவும் இருவர் உளர். இவர்களிலும் இவர் வேறானவரென்பது அடைமொழி தரப்படாதது சொண்டு அறியப்பெறும் என்பார்கள், இவர் பாடியன குறுந்தொகை 289, 310ஆம் செய்யுட்களும், இச் செய்யுளும் ஆகும். 'வளர்பிறை போல வழிவழிப் பெருகி' எனக் காமநோய் பெருகுந் திறத்தைக் குறுந்தொகை 289 ஆம் செய்யுளுள் இவர் எழிலாகக் கூறுகின்றனர். 'புள்ளும் புலம்பின பூவும் கூம்பின... இன்னும் உளேனே தோழி, ' எனத் தலைவியின் ஏக்கமிகுதியையும் இவர் மனம் நொந்து உரைப்பர்.

பெருங்குன்றூர் கிழார் 5, 112, 119

இவர் வேளாண் மரபினர்; பெருங்குன்றூர் என்னும் ஊரினர்; இவ்வூர் தொண்டை நாட்டது என்பர்; சேர நாட்டகத்திலேயும் பெருங்குன்றூர் உளதென்பர். சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறையைப் பாடிப் பரிசில் பெற்றவர் (பதிற்றுப்பத்துள் ஒன்பதாம் பத்து). பரணர் நக்கீரர் ஆகியோரோடு ஒரு காலத்தவராக இருந்தவர். சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியையும், வையாவிக் கோப்பெரும் பேகனையும் பாடியவர். இச் செய்யுட்கள் மூன்றும் குறிஞ்சித்திணைச் செய்யுட்களாகும். 'அற்சிரக் காலையும் காதலர்ப் பிரிதல் அரிதே' எனவும், 'மழைக்கு விருந்து எவன் செய்கோ' எனவும் வரும் சுவையான பகுதிகளை இச் செய்யுட்களுட் காணலாம்.

பெருங் கௌசிகனார் 44, 139

இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் எனவும் கூறப்படுவர்; செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை மலைபடுகடாம் பாடிப் போற்றியவர் இவரே என்பர் சிலர். அவர் வேறு இவர் வேறு என இருவராகக் கொள்ளலும் பொருந்துவதாகும். இச் செய்யுட்களுள் இவர் குறிஞ்சியையும் முல்லையையும் புனைந்து பாடியுள்ளார். இற்செறிப்பிற் பிற்றை ஞான்று குறியிடத்து வந்து நின்றானாகிய தலைமகன் தலைமகளது பெறற்கரிய பெருநிலையை எண்ணித் தன் நெஞ்சுக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் (44) மிகுசுவை பயப்பதாகும். 'பன்மரவுயர்சினை மின்மினி விளக்கத்துச் சென்மழை இயக்கங்காணும் நன்மலை நாடன் காதல் மகள்' என்பது, அத் தலைவியது பேதைமையைக் காட்டுவதுமாகும், வினைமுற்றி வந்து கூடியின்புறுவோனாகிய தலைவன் மழையை வாழ்த்துவதாக அமைந்த செய்யுளும் இன்சுவைமிக்கதாகும் (நற் 139).

பெருந்தேவனார் 83

பாரதம் பாடிய பெருந்தேவனாரினும் வேறாய ஒருவர் இவர் என்பர். அகநானூற்று 51ஆம் செய்யுளும், குறுந்தொகை 255ஆம் செய்யுளும், இச்செய்யுளும் இவர் பெயரால் வழங்குவன. பிரிந்துறையும் தலைவி நள்ளிரவினும் துயில்கொள்ள இயலாளாய் நலிந்திருக்கின்றனள். அவ்வேளை கூகையின் கடுங்குரல் எழ, அவள் அதனைக்கேட்டுப் பெரிதும் மனம் நடுங்குகின்றனள்; அக்கூகையிடத்துக் கடுங்குரல் பயிற்றாதிருக்குமாறு தோழி கேட்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும். தலைவியின் மனநிலையைத் தலைவனுக்கு உணர்த்தி வரைவுகடாதற் பொருட்டுப் புனைந்து கூறியதாகவும் இதனைக் கருதலாம்.

பெரும்பதுமனார் 2, 109

இவரும் மீளிப் பெரும்பதுமனார் என்பாரும் வேறாயவர் ஆவர். இவர் பாடியவை குறுந்தொகையின் 7ஆம் செய்யுளும், நற்றிணையின் 2, 109 ஆம் செய்யுட்களும், புறநானூற்றின் 199ஆம் செய்யுளும் ஆகும். பாலைத்திணைச் செய்யுட்களைச் செய்தில் வல்லவர் இவராவதை இச்செய்யுட்களால் நாம் அறியலாம். கொடையாளியிடம் இரவலர் மீண்டும் மீண்டும் சென்று இரந்து பெற்று வருவதனைப் பழமரத்தை நாடி நாள்தோறும் புள்ளினம் செல்வதனோடு ஒப்பிட்டுள்ளவர் இவர் (புறம்.189). இடைச்சுரத்துக் கண்டார் கூற்றாக அமைந்த குறுந்தொகைச் செய்யுள் மிகவும் நுட்பமுடைத்தாகும். தலைவியின் மென்மையைக் கண்டு அவளைச் சுரத்தூடே அழைத்தேகும் தலைவனின் உள்ளம் இடியினுங் காட்டிற் கொடிதெனக் கண்டார் சொல்வதாக அமைந்த செய்யுளும் (2), பிரிவிடை ஆற்றாளான தலைமகளது. நிலைக்குத் துளியுடைத் தொழுவில் துணிதல் அற்றத்து உச்சிக்கட்டிய கூழை ஆவின் நிலையை உவமித்த திறமும் (109) இவரது புலனைத்திறனை விளக்குவனவாகும்.

பெருவழுதி 55, 56

கடலுண் மாய்ந்த இளம்பெருவழுதியும் இவரேயாவர், 'புலவரை அறியாப் புகழொடு பொலிந்து' எனத்தொடங்கும் பரிபாடற் செய்யுளை இயற்றியவரும் இவரே. ஐயுற்றுக் கேட்ட தாய்க்குத் தோழி மற்றொன்றைக் காட்டி நம்புமாறு ஏமமற்றியதாக அமைந்த நயமுடையது 55ஆம் செய்யுள். தலைவன்பாற் போய நெஞ்சம் மீண்டுவந்தவிடத்து, அதற்குள் தலைவியின் உடலெழில் வேறுபட்டமையினால் அவளை வேற்றவள் எனக் கருதி அகன்று போயினதாகப் புனைந்துரைக்கும் திறமும் (56) பெரிதும் இன்புறுதற்கு உரியதாகும். புறநானூற்று 182 ஆம் செய்யுளைச் செய்தவரும் இவரே யாவர்.

பேராலவாயர் 51

மதுரைப் பேராலவாயர் எனவும் கூறப்படுவார். அகநானூற்றுள் 87, 296 செய்யுட்களையும் புறநானூற்றுள் 247, 262ஆம் செய்யுட்களையும், இந் நற்றிணையுள் 361ஆம் செய்யுளையும் செய்தவர் இவரே. பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு தீப்பாய்வாள் நிலைகண்டு பாடியவராதலின் அக்காலத்தவராகலாம். அன்னை வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்வதுகண்ட தலைவி தோழியிடத்துச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.

பேரிசாத்தனார் 25, 37, 67, 104, 199

வட வண்ணக்கண் பேரிசாத்தன், வடமவண்ணக்கண் பேரிசாத்தன் எனக் குறிக்கப்பெறுபவரும் இவரே. இவர் நற்றிணையுள் எட்டுச் செய்யுட்களையும், குறுந்தொகையுள் நான்கு செய்யுட்களையும், அகத்தில் ஐந்து செய்யுட்களையும், புறத்தில் இரண்டு செய்யுட்களையும், செய்துள்ளனர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய பலரையும் பாடியவர். 'நீலங் கண்ணென மலர்ந்த சுனை' என உவமை கூறியுள்ளவர் இவர் (அகம். 38). 'நிலவும் இருளும்போலப் புலவுத்திரைக் கடலும் கானலும் தோன்றும்—(குறு. 81) எனவும், 'மெய்புகுவன்ன கைகவர் முயக்கத்து ஓருயிர் மாக்கள்'—(அகம் 305) எனவும், 'கடுவன் ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந்து ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும் பார்ப்புடை மந்திய மலை — (குறு. 278) எனவும், 'நறுந்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப் பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம்' (நற். 125) எனவும் இனிதாகச் செய்கிகளைக் கூறும் திறனுடையவர் இவர். மலையமானின் பேராற்றலை இவரது புறப்பாட்டால் நன்கு காணலாம் (125). விரிவாகக் கற்றாய்ந்து இன்புறுதற்கான சிறப்பையுடையன இவரது செய்யுட்கள் பலவும் எனலாம்.

பொதும்பில் கிழார் 57

பொதும்பில் என்னும் ஊரினரான வேளாளர் இவராவர். குறிஞ்சியைச் சிறப்பித்துப் பாடியிருக்கும் இச்செய்யுளுள், 'மந்தி தன் குட்டிக்குப் பசுவின் பாலைக் கைந்நிறையப் பிழிந்து எடுத்து ஊட்டும்' என்று உரைப்பது பெருநயம் உடையதாகும்.

பொய்கையார் 18

சேரமான் கணைக்காலிரும் பொறையின் அவைப்பெரும் புலவராக விளங்கியவர். 'பொய்கை' ஊரின் பெயர். குடவாயிற் கோட்டத்துச் சிறைப்பட்டிருந்த சேரமான் பொருட்டாகக் கோச்செங்கட் சோழன்பாற் சென்று களவழி நாற்பது பாடியவர். 'கானலந் தொண்டி அஃதெய்மூர்' என்பதனால், அவ்வூரிடத்துப் பொய்கைக்கரைப் பகுதியினராதலும் பொருந்தும். மூவன் என்பானைக்கொன்று அவன் பற்களைத் தொண்டிக் கோட்டைவாயிற் கதவிலே தைத்த சேரமானின் சிறப்பை (18) செய்யுளிற் கூறுகின்றார். இவருடைய புறநானூற்றுச் செய்யுட்கள் (48, 49) சேரமான் கோக்கோதை மார்பனைப் பற்றியதாக விளங்குகின்றன. பொய்கைபோல நிரம்பிய தமிழ்நலம் பெற்றவர் இவர் எனலும் பொருந்தும்.

போதனார் 110

இச் செய்யுள் பாலைத்திணையைச் சார்ந்தது. மகவின் நிலையை எண்ணித் தாய் மயங்குவதாக அமைத்துத் தாயின் புலம்பலாக இவர் இச்செய்யுளை அமைத்துள்ளனர். தேன் கலந்த பாலையும் உண்ண மறுத்து ஓடிப்பிழைக்கும். இயல்பினள் பொழுதுமறுத்து உண்ணும் மதுகையளான பெண்மைச் செவ்வியை நினைந்து தாய் மயங்குகின்றாள். மிகச் செறியவான குடும்ப ஒவியம் இச் செய்யுளாகும். போது – மலரரும்பு; அத்தகு மெல்லிய மனத்தவர் இவர் எனலாம்.

மதுரை மருதன் இளநாகனார் 21, 39, 103, 194

தொகை நூற்களுள் இவர் பாடியவாகக் காணப்படுவன 79 செய்யுட்கள் ஆகும். மருதனிள நாகனார் எனவும் குறிக்கப் பெற்றிருப்பதும் காணலாம். மதுரைத் திருமருத முன்றுறைப் பகுதியிலே வாழ்ந்தவர். இவரது செய்யுட்கள் வரலாற்றுச் செய்திகளை எடுத்துக்கூறுவனவாக உள்ளன. கலித்தொகையுள் மருதக்கலி பற்றிய செழுஞ் சுவைச் செய்யுட்கள் 35-ம் இவராற் செய்யப் பெற்றனவேயாகும். ஐந்திணைச் செய்யுட்களையும் அழகுறவியற்றும் ஆற்றலுடையவர் இவர். பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், நாஞ்சில் வள்ளுவன் ஆகியோரும் மற்றுஞ் சிலரும் இவராற் பாடப் பெற்றவர்களாவர். இச் செய்யுட்களுள் முல்லை, குறிஞ்சி, பாலை எனும் மூன்றையும் இவர் அறிமுகப்படுத்தும் திறன் பெரிதும் இன்புறற்பாலனவாகும்.

மருதம் பாடிய இளங்கடுங்கோ 50

இவர் சேரர் மரபினர்; பாலை பாடிய பெருங் கடுங்கோவின் தம்பி; மருதத்திணைச் செய்யுட்களை நயத்தோடும் பாடுகின்ற சிறப்பினராதலால் இவ்வடை மொழியினைப் பெற்றனர். இவரை இளஞ்சேரல் இரும்பொறை எனக் கொள்வாரும் உளர். அஃதை என்பாளின் தந்தை சோழரைப் பருவூர்ப் பறந்தலைப் போரிலே வெற்றிகொண்ட வரலாற்றை இவரது அகநானூற்றுச் செய்யுளால் (96) அறிகின்றோம். தோழி பாணற்கு வாயின் மறுத்ததாக அமைந்த இச்செய்யுளுள் ஒரு சிறிய ஓரங்க நாடகத்தையே உருவாக்கி இவர் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர். 'செறு நரும் விழையும் செம்மலோன்' என்னும் தொடர் மிக நுட்பமான பொருள்நயந் தருகின்றது.

மலையனார் 93

'மல்லற்றம்ம இம் மலைகெழு வெற்பு' என மலைவளத்தைச் சிறப்பித்ததால் இப் பெயரைப் பெற்றனர் என்பர். மலையம் தென்பொதியத்திற்கும் பெயராதலால், அப் பகுதியைச் சார்ந்தவராகவும், கருதுவர். மலையனூர் என்னும் ஊரினராகவும், மலைபோன்ற தோளினர் எனவும் சொல்லலாம். குறிஞ்சித் திணையைச் சார்ந்த இச் செய்யுளுள் வரும் இறைச்சிப் பொருள் மிக்க சுவையுடையதாகும். இவர் பாடியதாகக் கிடைத்துள்ளது இச் செய்யுள் ஒன்றுமட்டுமே.

மாங்குடி கிழார் 120

இவரை மாங்குடி மருதனார் எனவும், மதுரைக் காஞ்சி பாடியதனால் காஞ்சிப் புலவர் எனவும் கூறுவர். இவரைப் பற்றிய குறிப்புக்களைக் 'காஞ்சிப் புலவன்' என்னும் தலைப்பின்கீழ்க் காண்க.

மாமூலனார் 14, 75

முக்காலமும் அறிந்து கொள்ளும் சக்திபெற்ற யோகியராக விளங்கியவர் இவர். இதனை நச்சினார்க்கினியர் உரைக்குமாற்றால் அறியலாம். திருமந்திரத்தைச் செய்தவர் திருமூலர்; இவர் மாமூலனார். இவ்வேறுபாட்டை அறிக. தொகை நூற்களுள் 29 செய்யுட்களைச் செய்தவர் இவர்; அகநானூற்றுச் செய்யுட்கள் அவற்றுள் 26 ஆகும். அவற்றுள் பல வரலாற்றுக் குறிப்புக்களை இவர் எடுத்துக் கூறுகின்றனர். இச் செய்யுட்களுள் 'குட்டுவன் அகப்பா அழிய நூறிச் செம்பியன் பகற்றீ வேட்ட ஞாட்பினும்' என (நற்.14) அகப்பாவின் அழிவைக் கூறுகின்றனர். சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகனின் உள்ளக் குமுறலை 75ஆம் செய்யுளாற் காணலாம்.

மாறன் வழுதி 97

மதுரைப் பாண்டியர் மரபினருள் ஒருவர். பூவிலை மடந்தையைக் காண்டலும் பருவவரவின் கொடுமையை நினைந்து புலம்பும் தலைவியின் நிலையை இச்செய்யுளாற் காணலாம். நற்றிணையின் 120ஆம் செய்யுளும் இவராற் செய்யப்பட்டதே யாகும்.

முடத் திருமாறன் 105

இடைச் சங்கத்து இறுதியில் பாண்டிய நாட்டை அரசாண்டவன். இதனை இறையனார் களவியலுக்கு நக்கீரனார் வகுத்துள்ள உரைப்பகுதியால் அறியலாம். குட்டுவன் சேரலைப் பாராட்டியிருக்கின்றனர் (105). 'வெறிகொள் சாபத்து எறிகணை வெரீஇ' என்பதன்கண் வில்லைக் குறிக்கச் 'சாபம்' என்னும் வடமொழிச் சொல்லை (நற்.228) எடுத்தாண்டவர் இவர்.

முதுகூற்றனார் 28, 58

இவர் பெயர் முதுகூத்தனார். எனவும் காணப்படும். சோழரது உறந்தையை 'இன்கடுங் கள்ளின் உறந்தை' என்று சிறப்பித்துள்ளார் (அகம்.127). பருவ வரவின்கண் தலைவியின் துயரத்தை 'அவரோ வாரார் முல்லையும் பூத்தன்று' என நயமாகக் காட்டுகின்றனர் (குறு. 211); பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி தலைமகனைப் பழித்துக் கூறுவதாக அமைந்த செய்யுளுள் (28). 'என்கைக் கொண்டு தன்கண் ஒற்றியும்; தன்கைக் கொண்டு என் நன்னுதல் நீவியும், அன்னைபோல இனிய கூறியும், கள்வர் போலக் கொடியன் மாதோ' என்று உரைப்பன பொருளினிமை மிக்கவாகும்.

மூலங்கீரனார் 73

மூலவோரையிற் பிறந்தவர்; கீரனார் என்னும் பெயரினர். பேய்கள் பலியுண்ண மூதூர் மன்றங்கட்கு வருவதுபற்றி இவர் கூறுகின்றனர். திருச்சாய்க்காட்டின் வளத்தையும் சிறப்பித்துக் கூறுகின்றனர். 'திருச்சாய்க்காடு' என்பது 'சாயாவனம்' என இக்காலத்து வழங்கப்படுகிறது.

மோசி கண்ணத்தனார் 124

மோசி என்னும் ஊரினர் இவர்; கண்ணத்தனார் என்பது இவர் பெயர். மோசிகீரனார், மோசி சாத்தனார். முட மோசியார் ஆகியோர் இவ்வூரில் தோன்றியவர்கள் ஆவர். இச்செய்யுளுள் நெய்தலின்வளத்தை இவர் கூறுவர்.

வண்ணப்புறக் கந்தரத்தனார் 71

இச் செய்யுளையும் அகநானூற்று 49ஆம் செய்யுளையும் செய்தவர் இவராவர். உடன்போயின தலைவியை நினைந்து செவிலித்தாய் மனையின்கண் வருந்தியதாக விளங்கும் இவரது அகநானூற்றுச் செய்யுள் மிக்க இனிமையுடையதாகும். 'செல்வர் வகையமர் நல்லில் அகலிறை யுறையும் வண்ணப் புறவின் செங்காற் சேவல், வீழ்துணைப் பயிரும் கையறு முரல் குரல்' என இச்செய்யுளுட் கூறிய உவமைச் சிறப்பால், 'வண்ணப்புற' என்னும் அடையினைப் பெற்றவராகலாம்.

வெள்ளியந் தின்னனார் 101

பெயர்க் காரணம் அறியுமாறில்லை. 'வெள்ளியம்' என்பது ஊர்ப் பெயரும் ஆகலாம்; 'வெளியம்' என்னும் ஒரு சிற்றூர் தமிழகத்து இந்நாளினும் உளது. கடலிலிருந்து இறாமீனின் கொள்ளையைப் பற்றிக் கொணர்ந்து காயவைக்கும் பரதவர் திறத்தை இச் செய்யுள் காட்டுகின்றது. திண்ணனார் என்பதே தின்னனார் என்றாயிற்று எனக் கருதுவது சாலும்.

வெள்ளி வீதியார் 70

மதுரை வெள்ளியம்பலத் தெருவிலே இருந்தவர்; பெண்பாலர்; தம் கணவரை யாது காரணத்தாலோ பிரிய நேர்ந்து அவரை நினைந்து நினைந்து பாடிப் புலம்பியவர். தொகை நூற்களுள் 14 செய்யுட்கள் இவர் பாடியவாகக் காணப்படுகின்றன. இச் செய்யுள் காமமிக்க தலைவி கடற்குருகினைத் தன் பொருட்டுத் தலைவனிடம் சென்று தூதுரைக்க வேண்டுவதாக அமைந்துள்ளது.

வெள்ளைக்குடி நாகனார் 158, 196

சோணாட்டு 'வெள்ளைக்குடி என்னும் ஊரினர், 'நாகன்' என்னும் பெயரினர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியவர். இவருக்குள்ள நிலங்கட்கு அரசிறை செலுத்த இயலாதவராகக் கிள்ளியைப் பாடிப் பழஞ்செய்க் கடன் வீடு கொண்டவர் (புறம் 35). 'பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை ஊன்றுசால் ஈன்றதன் பயனே;' என்றும், 'மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும், இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும். காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகன் ஞாலம்' என்றும், சிறந்த அறநெறிகளை உரைத்துள்ளார் இவர்.

பாடியோர் பெயர் காணாப் பாடல்கள்

8, 10, 22, 45, 46, 84, 92, 107, 108, 111, 115, 125, 126, 132, 134, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186, 188, 189, 190, 192, 193, 195

.