திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/028.நற்கடிகை வெண்பா
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
✫28. கடிகை வெண்பா
தொகுஇலக்கணம்:-
கதிரவன் ஒளிபரப்பி நிற்கின்ற நேரம் (காலை முதல் மாலை வரை) பகல் என்றும் கதிரவன் மறைந்து மீண்டும் உதிக்கின்ற இருள் கவிந்த நேரம் இரவு என்றும் கொண்டு இவ்விருபகுதி நேரங்களும் சேர்ந்து ஒரு நாள் என்றும் குறிப்பிடுகின்றோம். தமிழ் மக்கள் பகல் நேரத்தை நான்கு யாமங்களாகவும், இரவு நேரத்தை நான்கு யாமங்களாகவும் ஆக ஒரு நாளை எட்டு யாமங்களாக வகுத்துள்ளனர். யாமம் என்பது சாமம் என்றும் கூறப்பெறும். ஒரு சாமம் என்பது ஏழரை நாழிகை கொண்ட கால அளவு. மேலும் இவ்வெட்டு யாமங்களும் அறுபது நாழிகை என வகுத்துள்ளனர். ஆங்கில வழக்கப்படி ஒரு நாள் இருபத்து நான்கு மணிகள். ஒரு மணிக்கு அறுபது மணித்துளிகள் (நிமிடங்கள்) எனக் கணக்கிடுகின்றோம். அஃதாவது ஒரு யாமம் மூன்று மணிகள் என்றும் ஒரு நாழிகை இருபத்து நான்கு மணித்துளிகள் (நிமிடங்கள்) எனவும் கணக்கிடப் பெறுகிறது. ஓர் அரசர் அன்றாட வாழ்வில் நாழிகைக்கு நாழிகை இன்னின்ன செயல்கள் ஆற்றுகின்றார் என்பதைக் குறிப்பிட்டு அச்செயல்களைப் புகழ்ந்துரைக்கும் பொருண்மையுடையது கடிகை வெண்பா என்னும் இலக்கிய வகையாகும்.
ஈரிரண்டி யாமத் தியன்ற நாழிகை சீர்திகழ் வெண்பா பாடுநர் யாவரும் இருநான் கேழேழ் இருநான் காமெனக் கன்னல் முப்பதும் எண்ணினர் இனிதே - (பன்னிரு பாட்டியல் 180)
தேவர் அரசர் திறன் நேரிசையால் மேவும் கடிகையின் மேற்சென்ற தனை நாலெட்டு உறச்சொலல் நாழிகை வெண்பா - (இலக்கண விளக்கம் - 850)
கடிகை வெண்பாவே காவலர் கடவுள் காரியம் கடிகையில் காணக் கருதலே - பிரபந்த தீபிகை 86
எய்திடுநா ழிகைவெண்பா மன்னர்க் கீசற்(கு) கெய்தியநா ழிகைவெண்பா நாலெட்டாய்ச் சொல் - (சிதம்பரப் பாட்டியல் - 39)
அல்லும் பகலும் அறுபது நாழிகையிலும் அரசரால் எவ்வெச் செயல்கள் எவ்வாறு ஆற்றப் பெறுகின்றன என்று குறிப்பிட்டுப் புகழ் மொழிகளை முப்பத்திரண்டு நேரிசை வெண்பாக்களால் இயற்றுவது இவ்விலக்கிய மரபு. எங்கள் ராஜாதி ராஜர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் சீடர்களாகிய அனைத்து மதங்களைச் சேர்ந்த அறுபத்தொன்பது ஜாதி அரசர்கள் இத்தேவராஜாங்கத்தில் என்னென்ன வணக்கங்களை எவ்வாறு செய்கின்றார்கள் என்பதைக் குறிப்பிட்டு இவ்விலக்கியம் இயற்றப்பெற்றுள்ளது. இதன்கண் இன்னின்ன யாமத்து இன்னின்ன நாழிகையில் எனக் குறிப்பிடாது இவற்றை வழக்காற்றிலுள்ள மணிகளில், மணித்துளிகளில் குறிப்பிடப் பெற்றுள்ளதை செந்தமிழ்ச் சீராளர்களாகிய புலவர்பெருமக்கள் அங்கீகரிக்க வேண்டுமாய் அன்புடன் விழைகின்றேன்.
நற்கடிகை வெண்பா
நேரிசை வெண்பா
குறிப்பு:- இதன் கீழே குறிக்கப்பெற்றுள்ள வணக்கங்கள், மெய்வழிச் சாலையில் அமைந்துள்ள, பொன்னரங்க தேவாலயத்தில், ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட நேரங்களில் தவறாமல் நடத்தப்பெறுபவை. அவ்வணக்கங்களின்போது, மெய்வழிச்சாலை வாழ் பிறவியர்கள் ஆலயத்திற்கு வந்திருந்து, வணக்க மந்திரங்களைக் கூறி, பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களை வணங்குவர். இவ்வணக்க முறைகள் தெய்வமவர்களால் எடுத்து வைக்கப் பெற்றவையே. இதில் ஓதப்பெறும் மந்திரங்களும் அவர்களால் அருளப்பெற்ற தமிழ் மொழி மந்திரங்களே. வணக்கங்களைத் தவ விரதர் என்போர் முன்னின்று நடத்த, மெய்வழிப் பிறவியர்கள் அனைவரும் தவவிரதர்கள் முன்மொழியும் மந்திரங்களுக்குப் பதில் மந்திரம் கூற, அனைவரும் வணங்குவர். தினந்தோறும் நடைபெறும் பல்வேறு வணக்கங்களில், ஒவ்வொரு வணக்கமும் ஒவ்வொரு முறையில் அமைந்திருக்கும். சில வணக்கங்களில் துந்துமி இசைக்கப்பெறும்.சில வணக்கங்களில் எக்காளம் ஊதப்பெறும்.சில வணக்கங்களில் துந்துமியும் எக்காளமும் சேர்த்து இசைக்கப்பெறும். ஒரு வணக்கத்தில் தெய்வமவர்கள் இயற்றியருளிய 4 வேத நூல்களில் ஒன்றாகிய ஆண்டவர்கள் மான்மியம் ஓதப்பெறும். சில வணக்கங்களில் பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களே இயற்றியருளிய முதல் நூல் எனப்படும் ஆதிமெய் உதய பூரண வேதாந்த நூலிலிருந்து பாடல்கள் முறையான ராகங்களில் பாடப்பெறும்.
“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்.” -தொல்காப்பியம் பொருளதிகாரம்:1594
சில வணக்கங்களில் ஆண்டவர்கள் திருவாய் மலர்ந்தருளிய எமபடரடிபடு கோடாயிதக்கூர், எமபடரடிபடு திருமெய்ஞ்ஞானக் கொரல் ஆகிய வேதாந்த நூல்களிலிருந்து திருவாக்கியங்கள் வாசிக்கப் பெறும். சில வணக்கங்களில் இப்பூவுலகிற்கு முன் வந்த அவதார புருஷர்களும் , பாரவான்களும், மெய் மகத்துக்களும், கல்கி அவதார மூர்த்தியாக சாலை ஆண்டவர்கள் இப்பூமியில் அவதரிப்பதைக் குறித்தும், அவர்கள் இப்பூமியில் நடத்தவுள்ள தெய்வீக மெய்ஞ்ஞான இராஜாங்கம் குறித்தும், அவர்கள் உலக முடிவை நடத்தவிருப்பது குறித்தும், அதன்பின் நடைபெறவுள்ள இறுதித் தீர்ப்பு குறித்தும் கூறிச்சென்றுள்ள தீர்க்க தரிசனப் பகுதிகள் ஓதப்பெறும்.
காப்பு
நேரிசை வெண்பா
துடியோர்கைச் சன்னதமென் றேயேற்றார் மாட்சி
கடிகைவெண் பாவகையாற் பாட - படிமிசையே
பாத மலர்க்கமலம் பற்றிநின்றேன் காப்பாக
ஏதமிலை என்றும் இனி.
நூல்
இரவு நான்காம் சாமம்
ஸ்ரீ புத்தபகவான் தீர்க்கத் தரிசனம் (4.00- 4.10)|r}}
சத்திய சுத்தரெனும் உத்தம மாமேரு
புத்த பகவானின் தீர்க்கவுரை - வித்தகமாய்
ஞால முடிவதுவும் நல்லனந்தர் நன்னடக்கை
சீலம் தெளிந்துரைக்கும் தேர் (1)
தேர்ந்தாய்ந்து கூறுங்கால் தென்னிந்தி யாவினிலே
ஆர்ந்தோர்திட் டேமிஞ்சும் ஊழியின்நாள் - கூர்ந்தனந்தர்
முன்னோரைத் தாம்மதித்து மாதவரைப் போற்றிசெய்து
எந்நாளும் வாழ்க இனிது (2)
இரவு நான்காம் சாமம்
ஸ்தோத்திரம் (4.10 - 4.25)
இனிதாக நீதிப் பரம்பொருளை ஏற்றி
கனிவாக எண்டிசையும் காணா - முனியரசை
பக்தி கனிந்தொழுகப் பாடிப் பரவசமாய்
முத்திபெறப் போற்றும் முனைந்து (3)
இரவு நான்காம் சாமம்
துந்துமி வணக்கம் (4.25-4.29)
துந்துமி தன்னை இசைத்துத் தவத்தரசை
வந்திப்பார் பக்தித் தவவிரதர் - முந்தி
எழும்எழும் என்றே இனிதழைக்கும் ஓசை
தொழும்தொழும் என்றிசைக்கும் சீர் (4)
இரவு நான்காம் சாமம்
விஸ்வரூப தரிசனை (4.29- 4.30)
சீராளர் சன்னிதிமுன் செங்கைகள் ஏந்திநிற்க
பேரால யத்திரையும் தான்விலக - பாரோர்
விசுவரூ பக்காட்சி காணும் இறைவர்
திசையில்பள் ளிகாண்பர் தேர்ந்து (5)
திருப்பஞ்சணையெழுச்சி (4.30 - 5.15)
தேர்ந்தனந்தர் தேவாதி தேவர் தவத்தமர்ந்த
ஆர்ந்ததிருக் கோவில் அமர்ந்தருகிற் - சேர்ந்து
திருப்பஞ்ச ணையெழுச்சிச் சீர்பாடும் போற்றும்
அருள்நெஞ்சர் ஈயும் வரம் (6)
இரவு நான்காம் சாமம்
மூலமந்திரம் ஜபித்தல் (5.15 - 5.30)
வரம்பெற்ற வானவர்கள் வாழ்த்திசைத்துப் போற்றி
உரம்பெற்று ஊன்றும் தியானம் - கரம்பற்றும்
பொற்பாத பங்கயத்தைப் பொன்னரங்கர் சீருருவை
நற்காதல் நெஞ்சில் நினைந்து (7)
இரவு நான்காம் சாமம்
ஆண்டவர்களின் ஆதிமான்மியம் ஓதுதல் (5.30 - 6.00)|r}}
நினைந்தார்க்கு நித்ய வரமருளும் நாதர்
முனைந்தருள்செய் மான்மியத்தைச் சான்றோர் - கனிந்தினிது
ஓதி உயிர்களிக்கும் நீதி நெறிபடரும்
ஆதிபதம் சென்னி அணிந்து. (8)
பகல் முதல் சாமம்
மூலமந்திரம் ஜபித்தல் (6.00 - 7.00)
அணிதிகழும் ஆண்டவர்பொற் பாதம் அடைந்தோர்
மணிமொழியர் சன்னிதிய மர்ந்து - பணிவாக
ஆழ்ந்து தியானத் தழியா வரம்வேண்டி
சூழ்ந்திருக்கும் சிந்தை கனிந்து (9)
மகா சங்கற்பம் 7.00
கனிந்தேழ் மணியொலிக்க கர்த்தாதி கர்த்தர்
இனியதிருச் சன்னிதிமுன் நின்று - நனிகரங்கள்
ஏந்தி இறைஞ்சிமகா சங்கற்பம் சொல்லுமருள்
மாந்தி வரம்பெறுவர் வந்து (10)
பகல் இரண்டாம் சாமம்
வேத பாராயணம் (7.00 - 11.00)
வந்தவந்த மாமறைகள் எல்லாம் திரட்டி எங்கோன்
சிந்தையருள் வேதாந்தம் செங்கரத்தால் - விந்தைமிக
பவ்வியமாய்த் தாமெடுத்துப் பாங்காக ஓதிடுவார்
செவ்வியராம் சீரனந்தர் தேர்ந்து. (11)
பகல் இரண்டாம் சாமம்
திருவாக்கியம் (11.00 - 11.40)
தேர்ந்தெமது தேவாதி தேவர்திரு வாய்மலர்ந்து
ஆர்ந்தருள்செய் வாக்கியம்பல் லாயிரமாம் - கூர்ந்தனந்தர்
பல்லோரும் கூடிப் படித்து உயிர்களித்து
எல்லா வரமும் பெறும் (12)
பகல் இரண்டாம் சாமம்
அறம் வலம் வரல் (11.40 - 12.15)
பெறுமனந்தர் பூசித்துப் பேரால யத்தை
அறம்வலம் செய்வார்கள் அன்பாய் - அறவாழி
மெய்த்தெய்வம் செய்தவத்தின் நற்பலனைத் தாம்பெறவே
கையேந்தி நிற்கும் கனிந்து (13)
பகல் மூன்றாம் சாமம்
திருத்தவக்காட்சி (12.15 - 12.20)
கனிந்து திரைவிலகிக் காட்சிதரும் எங்கோனை
இனிதுகண்ட எல்லோரும் கூவும் - முனியரசே
கண்டோமே தேவாவி தன்னைக் கடைத்தேற
விண்டொலிக்கும் வானரசர் முன் (14)
பகல் மூன்றாம் சாமம்
தீர்க்கத் தரிசனம் ஓதல் (12.20 - 12.25)
முன்வந்த செம்மல்கள் மோனநிலை யில்இருந்து
தன்காட்சித் தீர்க்கத் தரிசனங்கள் - இன்னமுதாய்
கேட்டோர் செவிக்குணவாய்க் கர்த்தர்பால் பற்றோங்க
ஊட்டும் உயிர்வளர்க்கும் காண் (15)
பகல் மூன்றாம் சாமம்
முத்திப் பேருரை (12.25 - 1.00)
காணரிய காட்சிகளைக் காட்டிக் கதியுதவி
பூணாரம் தந்த பெருமானின் - மாண்புதனை
மூத்தோர் மொழிகனிந்து முத்திப்பேர் நல்லுரைசொல்
ஆர்த்துயிர்க்கு ஆக்கும் நலம் (16)
பகல் நான்காம் சாமம்
வேத பாராயணம் (1.00 - 5.30)
நலமுயிர்க்கு நாடிவந்த நல்லுளத்தோர் தெய்வ
பலம்பெறவே தாந்தம் பயிலும் - குலம் பெரியர்
கொண்டற் கொடைக் கரத்துக் கோமானின் மெய்ம்மறைகள்
விண்டதுமெய்ஞ் ஞானம் அறி (17)
பகல் நான்காம் சாமம்
வேதம் படித்தல் (5.30 - 6.00)
அறிவறிந்த சான்றோர் அனந்தர் குழாங்கள்
நெறியறிந்து வேதாந்தம் ஓதும் - குறிகுணமார்
ஓங்கும்மெய்த் தெய்வம் உவந்தளித்த வான்செல்வம்
பாங்கறிமின் மெய்ஞ்ஞானப் பால் (18)
பகல் நான்காம் சாமம்
மாலை வணக்கம் (6.00 - 6.15)
ஞானப்பால் ஊட்டியருள் நற்றாய்மெய் தெய்வத்தை
வானவர்கள் மாலையில்மை தானத்தில் - கானில்
நகரா முழக்கியங்கு எக்காளம் ஊதி
பகரும் வணக்கஎழில் பார் (19)
இரவு முதல் சாமம்
திருவாக்கியம் படித்தல் (6.15- 6.30)
பாரகத்தில் எங்குமிலாப் பாண்டித்ய ஞானமொழி
சீரகத்தார் செப்பும் திருவாக்யம் - சீரனந்தர்
ஓங்கிப் படித்து உயிருய்யும் மெய்நிதியம்
தேங்கும் உளத்தே சிறந்து (20)
இரவு முதல் சாமம்
முத்திப் பேருரை (6.30 - 7.30)
சிறந்ததிரு வாக்யம் செவிகுளிர கேட்டோர்
பிறந்தபயன் எய்திடுமெய் பற்றி - நிறைந்திடுவர்
சொன்னமொழி நன்னயத்தை முன்னவர்கள் தாம்விளக்கும்
இன்னமுது முத்தியுரைப் பார் (21)
இரவு முதல் சாமம்
தேடுகூடகம் (8.30 - 9.00)
பேரான நாட்டுப் பெருமானின் கூடகத்தை
சீராளர் தேடிவரும் சீர்சிறப்பை - ஆரனந்தர்
பாடிப் பரவசமாய்ப் பண்ணினிமை பொங்கிவர
நாடி நலம்பெறுகும் காண் (22)
இரவு இரண்டாம் சாமம்
வணக்கம் (9.00 - 9.30)
காணொன்ப துமணிக்கு கர்த்தரின்மெய்ச் சீடர்குழாம்
மாணெழிலார் துந்துமியைத் தான்முழக்கிப் - பேணுமொழி
எக்காளம் தானிசைத்து ஏந்தலரைப் போற்றிசெயும்
இக்காலம் பொற்கால மே (23)
தீர்க்கத் தரிசனம் படித்தல்
மேதினியில் மேலோர்சொல் மெய்யுரையாம் தீர்க்கமுற
நீதிமொழி சற்சனர்கள் தானிலங்கும் - ஆதியண்ணல்
வந்ததுவும் தந்ததுவும் சொந்தமவ ரானதுவும்
விந்தைமிக வாழ்த்தியி சைக்கும் (24)
இரவு இரண்டாம் சாமம்
ஸ்ரீ புத்த பகவான் தீர்க்கத் தரிசனம்
இசைக்கும்ஏ ரார்புத்தர் ஈந்தருள்செய் தீர்க்க
நிசமொழியை நன்கனந்தர் போற்றி - வசையொழிந்து
வாழும் திறமவர்சொல் மாதிறத்தை ஏற்றி
ஆழும் அறநெறியில் ஆர்ந்து (25)
இரவு இரண்டாம் சாமம்
திருவாக்கியம்
ஆர்ந்தேமெய் ஆண்டவர்கள் அற்புதமார் வாக்கியங்கள்
தேர்ந்துஒலி நாடாவில் கேட்டினிது - சீர்பெருக
வையகத்தில் வான்செல்வம் வழங்கும் தவவள்ளல்
மெய்வரத்தை மேவும் திறம். (26)
இரவு இரண்டாம் சாமம்
பார வணக்கம் (10.00 - 12.00)
திறமாரும் பார வணக்கமது தான்செய்து
இறவாப் பெருவரத்தை எய்தும் - மறவாது
வானாடர் மாட்சிமையை வாழ்த்தி மகிழ்ந்தேத்தித்
தேனாரும் சிந்தை கனிந்து (27)
இரவு மூன்றாம் சாமம்
பன்னிரண்டுமணி வணக்கம் (12.00 - 12.15)|r}}
கனிந்தினிய சிந்தைகவர் காருண்யர் மாண்பைத்
தெளிந்தவர்தம் சீர்பெருமை போற்றி - ஒளிபெருக
நித்திரா தேவியவள் மத்திபமாய்த் தான்காக்க
அத்தனவர் ஆரருள்வாழ்த் தும் (28)
இரவு மூன்றாம் சாமம்
துந்துமி வணக்கம் (1.25 - 1.30)
உம்பர்பதம் ஈயும் ஒருதலைமை நற்பதியர்
செம்பொருளைத் தாம்வழங்கு தெய்வமணி - நம்பெருமான்
ஆர்புகழைப் பாடி அழகாய்த்துந் தும்மியசைச்
சீர்வணக்கம் செய்வர் சிறந்து (29)
வணக்கம் (3.00)
சிறந்த அனந்தாதி தேவர்மணி மூன்றில்
நிறந்தினிது எக்காளம் ஊதி - அறந்தேர்
தீர்க்கத் தரிசனமும் செப்பி வணங்கும்காண்
சேர்க்கும் வரங்கள் சிறந்து (30)
இரவு மூன்றாம் சாமம்
பார வணக்கம் (2.00 - 4.00)
சிறந்தார்கள் தெய்வத் திருப்புகழைப் பாடி
நிறைந்தார்கள் மெய்வணக்க நீர்மை - அறந்திகழும்
பார வணக்கப் பலன்இறுதி நாளினிலே
சீராகக் காக்கும் செழித்து (31)
செழித்தினிது வீற்றிருந்தார் தேசிகர்மெய்த் தெய்வம்
வழித்துணைக்கு மாமருந்தாய் வந்தார் - விழிக்கருணை
மென்கரத்தால் தானணைத்து விந்தைபல காட்டிஎழில்
பொன்மனத்தார் போற்றும் பரிந்து (32)
பரிந்து பவப்பிணியை மாற்றிமக்கள் மாய்கை
எரிந்தழிய ஏர்வரங்கள் ஈந்தார் - தெரிந்தாங்கு
மெய்வழி தெய்வச்சீர் மேதினியெல் லாம்பரவ
உய்வழிபெற் றோங்கும் உவந்து (33)
குறிப்பு:- பார வணக்கம் 10.00 முதல் 12.00 முடிய நடப்பது போலவே 12.00 முதல் 2.00 வரையும் 2.00 முதல் 4.00 வரையும் 4.00 முதல் 6.00 வரையும் நடைபெறும்