திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/056.தெய்வத் திருவருளெம்பாவை


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



56. திருவெம்பாவை

தொகு

நூற் குறிப்பு:-

இறைநேயச் செல்வர்கள் இறைவனைப் போற்றிப் பாடும் போது கண்மணியனையானை என்று புகழ்ந்து போற்றிப் பாடுவது வழக்கமாக உள்ளது. கண்மணியைப் பாவை என்றும் கூறுவர். அந்தப் பாவை போன்று ஒளிபொருந்தி விளங்குபவர் இறைவன் என்று தெய்வ பக்த சிரோன்மணிகள் போற்றுவர். ஆணிப்பொன் நாட்டு அருந்தவச் செம்மலாகிய காணிக்கை நீதி மாணிக்கவாசக பிரானவர்கள் திருவெம்பாவை 20 பாசுரங்கள் பாடி இறைவனைத் தோத்தரிக்கின்றார்கள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பெருமாட்டியவர்கள் “திருப்பாவை” பாடித் தோத்திரம் செய்துள்ளார்கள். அவர்களைப் பின்பற்றி திருவருளெம்பாவை என்று வெண்டளையான் வந்த எட்டடி நாற்சீர் ஒருவிகற்பக் கொச்சகக் கலிப்பாவால் பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் மீது 51 பாசுரங்கள் இயற்றப்பெற்றுள்ளன.

தெய்வத் திருவருளெம்பாவை

காப்பு

நேரிசை வெண்பா

செம்பொன்னார் சீரடிகள் சென்னிமிசை சூடிதிரு
எம்பாவை பாடிடவே என்நாவில் - தெம்பருள்க
தேவாதி தேவே திருவோங்கு ஆண்டவரே!
ஓவாது போற்றும் பணிந்து.

நூல்

வெண்டளையான் வந்த எட்டடி நாற்சீர் ஒருவிகற்பக் கொச்சகக் கலிப்பா

ஆதி அனாதியாம் அன்பே திருவுருவாம்
நீதி நிறைந்தொளிரும் நித்தியமாம் சத்தியமாம்
வேதப் பொருளாகி வேதாந்தம் சித்தாந்தம்
போதம் அனைத்துமாம் பேரறஞ்செய் சீர்திருவாம்
நாத நாதாந்தர் நலங்கிளர்ந்த நற்றவமாம்
மாதவர்கள் போற்றும் மணிவிளக்காம் எம்முயிரின்
காதலராம் மெய்வழியின் கர்த்தாதி கர்த்தரின்பொற்
பாதமலர் போற்றிப் பணிந்தேலோ ரெம்பாவாய்! (1)

தனமதித் திங்கள் தருமதுரை நங்கோன்
தினம்புதி யோராய் திகழும்மெய்த் தெய்வம்
இனம்புதி யோராய் இறைதாள்ப ராவும்
அனந்தர்கள் போற்றும் அருளவ தாரம்
மனங்கனிந்து பாடி மதிகனிந்து ஆர்ப்ப
வனங்கனிந்து மெய்வணக்க வாழ்த்தொலிக்கக் கூடித்
தினம் பணிந்து தோத்தரிப்போம் சீர்மெய்க் குலத்தீர்!
இனங்கனியப் போற்றியே ஏத்தேலோ ரெம்பாவாய்! (2)

தனையும் தலைவரையும் தானறிந்த நல்லிர்!
முனைகொழு கண்டீர்மு மூச்சுமார் வல்லிர்!
வினைதீர் பரிமளமெய் விண்ணமுது கொண்டு
மனைமனை தோறும்யாம் வந்தெழுப்பு கின்றோம்
தனைமறந்து துஞ்சிடும் தன்மை விடுமின்
மனைதிருப் பஞ்சணைப் பள்ளி எழுச்சி
தனைப்பாடி வாழ்த்தித் தரிசனம் செய்ம்மின்
தனைத்தந்தார் தாள்போற்றிப் பாடேலோ ரெம்பாவாய் (3)

குக்குடங்கள் வண்ணமயில் கோகிலங்கள் கூவினகாண்!
எக்களித்து இன்பக் களிபொங்கப் புள்ளினங்கள்
மிக்கொலித்து ஆர்ப்பக்கீழ் வானும் வெளுத்ததுகாண்!
சொக்கத் தனித்தங்கம் சீர்மேனிப் பொன்னரங்கர்
இக்கலியிற் போந்து இனிது நமையாண்டார்
சொர்க்கபதிச் சந்ததிமெய்ச் சோதித் திருக்குலத்தீர்!
சிக்கெனப்பொற் றாள்பற்றிச் சீராய்ச் சிரமணிந்து
மிக்கினிது போற்ற விரைந்தேலோ ரெம்பாவாய்! (4)

நங்கள் அனந்த(ர்)குல நற்சீலர் சேய்களெனும்
தங்கங்கள் தங்கள் சிறுபொற் கரமேந்தி
பொங்கும்மெய்த் தெய்வம் பொழிமறையோ தும்மலர்வாய்ச்
சங்கம் முழங்கும் திருவொலியைக் கேண்மின்கள்!
திங்கள் திருவதனர் சீர்தனிகைச் சேய் என்னும்
எங்கும் நிறைந்தொளிரும் ஏரார்ந்த நாயகர்தம்
துங்கத் திருவடியைத் தோத்தரிப்போம் வம்மின்கள்!
மங்காத வாழ்வருளும் வாழ்த்தேலோ ரெம்பாவாய்! (5)

தக்கார்கள் சாலைவாழ் சீரார் அனந்தர்கள்
சொக்கேசர் மெய்யர் திருமலர்கள் தாள்பணிந்து
எக்காலும் இன்பம் இறவாப் பெருவரங்கொள்
எக்களிப் போங்க இனிது வணங்கிடவே
எக்காளம் என்னும் எழில்சூர் குழல்ஊதல்
மிக்கொலியே கேண்மின் விடுமின் துயில்தன்னை
திக்கெட்டும் நந்தை திருப்புகழே ஓங்கிடவும்
பற்குணரைப் போற்றியே பாடேலோ ரெம்பாவாய்! (6)

முந்திவி நாயகராம் முன்னைப் பழம்பொருளாம்
சிந்தை குடிகொண்ட தெய்வநற் றேசிகராம்
தந்தை தனிகைமணித் தன்செல்வப் பொன்னரங்கர்
வந்தார்மெய் கொண்டு மரணமிலா வாழ்வுதர
நந்தை திருத்தயவை நாம்போற்றி யேற்றிடவே
துந்துபி யார்த்திடுதல் சீர்செவியில் ஏற்றிடுமின்!
விந்தை இதனின்வே றுண்டோ சகோதரமே!
நந்தெய்வப் பொற்றாளே நாடேலோ ரெம்பாவாய்! (7)

தீர்க்க தரிசனங்கள் செவ்வான் அதிர்ந்திடவே
ஆர்க்க உரைசெய்வர் ஆங்காங் கனந்தர்குலம்
சீர்கொள் திருவொலியைச் சேர்மின் செவிமடலில்
பார்க்குள் இதனின் பரிசுபிறி துண்டோகாண்
தார்கொள் துழாய்மார்பர் சன்னதியைச் சார்மின்கள்!
யார்க்கும் இளையா இருநிதியை ஈந்தபிரான்
கார்க்கும்தீ கையர் கருணைத் திருவரங்கள்
நீர்கொள்ள வந்தினிது நன்றேலோ ரெம்பாவாய்! (8)

விண்ணரசர் மெய்வழிதெய் வத்திருவார் வான்புகழை
திண்ணங்கொள் சிந்தைத் திருஅனந்தர் வான்மரபோர்
தண்ணென் இராமுழுதும் சீரார்பா ரவணக்கம்
வண்ணவண்ணப் பாமலரான் வாழ்த்திசைகள் கேண்மின்கள்!
மண்ணகத்தே வந்துறுதே வர்குலத்தீர் வாருங்கள்!
அண்ணல் அருள்பெறுநல் ஆர்வத்தீர் துஞ்சன்மின்!
எண்ணம் முதலாய யாவும்நம் நாயகர்க்கே
பண்ணிப் பணிந்தினிது பாடேலோ ரெம்பாவாய்! (9)

வாருங்கள் நந்தம் மதிச்செல்வர் மாணடியைக்
காருங்கள் கண்ணாளர் கோத்திறத்தைப் பாடிகளி
கூருங்கள் இந்தக் குவலயத்தில் வானகத்தில்
நேருங்க ளுக்கிலைகாண் நித்தியர்பொற் பாதநிழல்
சாருங்கள் சாலைதெய் வத்தருளால் சாயுச்யம்
சேருங்கள் செப்பரிய ஒப்பிலியர் சீரெழிலைப்
பாருங்கள் இன்பம் பரிமளிக்கும் பேரின்பச்
சீருங்க ளுக்கருளும் செப்பேலோ ரெம்பாவாய்! (10)

எழுமின் உறங்கன்மின் எங்கோன் மலர்த்தாள்
தொழுமின் துயர்தவிரும் தூமலரார் கண்கள்
விழிமின் விறல்வேந்தர் மெய்யருளார் மாரி
பொழிமின் பெருவரங்கள் பொங்கலால் பொய்ம்மை
அழிமின் அறங்கனிந்தார் ஆர்புகழைப் போற்றி
கழிமின்வா ணாளெல்லாம் காதலரின் சீரே
மொழிமின் மறைமொழியார் மாதவரைப் பாடிக்
குழுமிநின்றார்த்திடக் கூடேலோ ரெம்பாவாய் (11)

நகரா முரசுபோல் நன்றதிர்ந்து வாய்மை
சுகமே ரருளுங்கால் தேர்மெய்போல் மின்னி
அகமே களிதுளும்ப ஆர்ப்பரிக்கக் கொண்டல்
மிகவே பொழிய வளம்பொங்கு மாபோல்
இகத்தே சுகத்தை இனிதயின்றும் வான
மகத்துக்க ளாக வதியும்மெய்ம் மக்காள்
திகழ்மெய் வழிசாலை ஆண்டவர்கள் மாண்பைப்
புகழ்வோம்நற் பொற்றாளைப் போற்றேலோ ரெம்பாவாய்! (12)

பாடி வணங்கிப் பணிந்துகொண் டாடிடுவோம்
கூடிக் கழல்போற்றிக் கோமான் புகழ்பரவி
ஆடி அகங்களிப்போம் அம்புவியோர் கூற்றமலால்
வாடி மயங்கா வழியுரைப்போம் பொற்றாளை
நாடி நலந்திகழ நம்சிரத்தே நல்லணியாய்ச்
சூடிச் சுகித்திருப்போம் சொர்க்கபதிச் சந்ததியாய்
கோடி கடந்த குருநாதர் கோத்திரத்தீர்!
ஈடிணையில் மாட்சி இனிதேலோ ரெம்பாவாய்! (13)

எங்கும்எக் காலும் இலாதென்னும் மெய்ப்புதுமை
எங்கும்எப் போதுமறை யாயிலங்கும் வான்பழமை
இங்கண் நமதிறைவர் ஈயும் திருவுயர்மெய்
பொங்கிப் பெருகிப் பொலிகின்ற பேருண்மை
நங்கள் குலம்விளங்க நல்வரங்கள் நல்கருமை
பங்கயப் பொன்வதனார் பாலிக்கும் மாட்சிமையை
இங்கினிது பாடிடுவோம் ஏற்றிப் பணிந்திடுவோம்
துங்கத் திருத்தாள் தொழுதேலோ ரெம்பாவாய்! (14)

புலையும் கொலைகளவும் பொய்சூதும் உள்ளம்
அலையும் திரைக்காட்சி ஆருயிரை வாட்டித்
தொலையும் புகையும் சேராது ஆவல்
வலைசெய்பால் நெய்யுண்ணும் வேட்கையதும் வீய
கலைமலிந்த மெய்யார்ந்த காட்சியதும் காட்டி
நிலைபெறவே நம்முயிரை நன்காண்டார் மெய்யர்
தலைவர் திருத்தாள்கள் தோத்தரிப்போம் வம்மின்
மலைவறுநன் மார்க்கம் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் (15)

ஏழ்வகைப் பாவம் இலாது நமையாண்டு
வாழ்வகை காட்டி மறுபிறப்பும் தானருள்மெய்
சூழ்வார்கள் பொற்றாள் துதிப்பார்கள் மெய்யன்பால்
ஆழ்வார்கள் என்று அகத்தைச் செழிப்பித்துத்
தாழ்வார்கள் தெய்வத் திருமுன்னர் ஏமனெனும்
ஊழ்வலியை வென்றேநம் உய்யக்கொண் டோம்வெய்ய
பாழ்வினைகள் பாரப் பரகதியைச் சேர்ந்தோங்காண்
யாழ்முரல இன்னிசையால் ஏத்துதுங்காண் எம்பாவாய்! (16)

மண்பதியாப் பொன்னார் மலர்த்தாள்கள் நந்தமக்காய்
மண்பதியப் போந்து வருந்த நடம்புரிந்த
விண்பதியர் வெவ்வினைகள் வீய வரமருள்வார்
செண்பகமார் வாசத் திருமேனிப் பொன்னரங்கர்
விண்பாங்கு காட்டியருள் வேத முழுமுதல்வர்
எண்குணத்தார் மெய்த்தெய்வம் இன்பத் திருவடிவர்
பண்போங்கு நாதர் பரமர் குருதேவர்
ஒண்புகழே பாடி உவந்தேலோ ரெம்பாவாய்! (17)

தேட்டம் உலகியலார் செல்வம் எனஅதன்பின்
ஓட்டம் உவப்பதெல்லாம் சிற்றின்பம் பொய்யரொடு
கூட்டம் குறைபிறர்மேல் கூறல் பொருள்பெறில்கொண்
டாட்டம் தனைவியத்தல் சான்றோர் இடித்துரைத்தால்
காட்டம் கடைநாளில் கூற்றுவனைக் கண்டதும்திண்
டாட்டம் எனஇழிந்த நம்மைத் தடுத்தாண்டு
வாட்டம் தவிர்த்த மணவாளர் மெய்த்தெய்வத்
தாட்டா மரைபணிந்து ஏத்தேலோ ரெம்பாவாய்! (18)

சேடியீர் வாரும் திருவோங்கு ஏழ்நிலைமேன்
மாடிவாழ் தெய்வ மலர்த்தாள்கள் போற்றிடுவோம்
ஆடிக் களித்திருப்போம் ஆண்டவர்கள் நற்றயவைத்
தேடி வணங்கும் திருக்குலத்தீர் சன்னிதியில்
கூடிக் குலவிக் குருகொண்டல் வான்புகழே
பாடிப் பரவிடுவோம் பண்ணழகர் மெய்க்கீர்த்தி
நாடிப் பணிந்திருப்போம் நற்றமிழ்ப்பா மாலையெனும்
வாடா மலர்தூவி வாழ்த்தேலோ ரெம்பாவாய்! (19)

உயிரிற் கலந்தேநம் உள்ளில் நிறைந்தாரை
செயிர்தீர் திருக்காட்சித் தென்பாண்டி நாட்டாரை
அயர்வில் தவத்தாரை அன்பே வடிவாரை
துயரம் தவிர்த்தாரை தோமில் குணத்தாரை
அயன்மால் சிவ(ம்)மூன் றிணைந்தோர் உருவாரை
இயலும்மெய் குண்டத் திருப்பாரை ஈடில்
தயவால் நமையாண்ட தற்பரரின் தூமலர்த்தாள்
கயற்கண் மடநல்லிர்! காத்தேலோ ரெம்பாவாய்! (20)

காதல் கனியக் கருத்தில் நிறைந்தார்நம்
நாதர் திருவடியே நண்ணினோம் நாயகியீர்!
பூதலத்தே வந்துற்றார் பொன்னரங்கர் பூரணர்காண்
சாதல் தவிர்த்த தருமதுரை தண்ணிளியீர்!
நீதம் விதந்துரைத்தல் நத்தம்மால் ஆகுவதோ!
ஏதம் உறங்கிடுதல் இன்பம்கொள் வீர்எழுமின்!
பாதம் தொழுதேத்தப் பாங்கிமீர் போதருமின்!
வேதப் பொருளானை வாழ்த்தேலோ ரெம்பாவாய்! (21)

வாசக் கருங்குழலார் மின்னார் அனந்தகியர்
வாச நறுஞ்சாந்தால் முன்றில் மனைமெழுகி
தேசுபெறு மாக்கோலச் சித்ரம் எழிலார்ப்ப
நேசம் கனிந்தருள்செய் நித்தியமெய் நாயகரே!
ஆசை மிகுந்தழைத்தேம் அம்பொன் திருவடிகள்
வாசல் பதிய மலர்சுவட்டால் கோலங்கள்
தேசுறவும் எங்களுயிர்த் தேசிகரால் சீர்பெறவும்
பூசித்தோம் வாழ்வினிது பொங்கேலோ ரெம்பாவாய்! (22)

தேவாதி தேவர் திருவாரும் பொன்னரங்கர்
சாவா வரந்தந்த சாயுச்யர் சர்வேசர்
மூவா முதல்வர் முனிவரர்தம் கோமான்காண்
தீவா தனைவினைகள் தீண்டாது காத்தருள்வார்
நாவார நாமம் உரைசெய்து பாட்டிசைப்போம்
ஓவாது போற்றி உளம்கனிவோம் வம்மின்கள்
ஆவா இவர்க்கிணைதான் ஆர்காண் அணியிழையீர்!
பூவார் திருவடிகள் போற்றேலோ ரெம்பாவாய்! (23)

பாலாழி வாழும் பரந்தாமர் பொற்கரச்செங்
கோலாள வாழும் கோகுலங்கள் பேரின்பச்
சூலாகி ஈன்று சொரிகின்ற மெய்ஞ்ஞானப்
பாலால் உயிர்வளரும் பான்மை அறிமின்கள்
காலங் கடந்த கலிக்கடையில் போந்துற்ற
கோலந் திகழ்கோமான் கொற்றவர்மெய்த் தெய்வம்
சீலர் திருவாரும் செல்வரீர் வம்மின்கள்!
ஏலவல்லார் பொன்னடிகள் ஏத்தேலோ ரெம்பாவாய்! (24)

உம்மையன் றிப்பிறரை உள்ளேன்என் னும்திறமாம்
செம்மை நெறிகற்புச் சேர்ந்தாய் இளங்கலையே!
பொம்மை வணக்கம் புரிவார் தொடர்பறுத்து
நம்மைப் பொருளாக்கி நற்றயவால் ஏன்றாரை
இம்மைக்கும் ஏழேழ் பிறவி மறுமைக்கும்
வெம்மை வினைதவிர வேண்டிப் பணிந்திருப்போம்
அம்மையீர்! மெய்வழிதந் தாண்டார் திருவோங்கும்
பெம்மான் பெரும்புகழைப் பேசேலோ ரெம்பாவாய்! (25)

கந்தையாய் வீணாய்க் கழியக் கிடந்தேமை
நிந்தைக் கிடமாய் நின்றேமைக் காத்தருள்செய்
தந்தை தனிகைமணி தந்த தனித்தங்கம்
தந்தையாய் தாயாகிச் சற்குருவும் தானாகி
சிந்தையினின் நீங்காத தெய்வமுமாய் வானாகி
விந்தை விரிந்தோங்கு மெய்ப்பொருளைத் தானருள்செய்
அந்தமில் இன்ப அரசர் திருமலர்த்தாள்
பந்தித்து நெஞ்சம் படிந்தேலோ ரெம்பாவாய்! (26)

வித்தில்லா வித்தாம்நம் வேதமணி அந்நாட்டு
வித்தெடுக்கும் வான்கருணை மிக்கிலங்கத் தாமீன்ற
நித்தியராம் மெய்யனந்தர் நம்மரபு நற்றவர்க்கு
பத்திவரும் ஊழிப் பெருநாள் கடத்தற்கு
உத்தியதாய் உப்பில்லா மெய்யமுது ஓர்பொழுதாய்
பத்தியமும் வைத்தார்காண் பரமர் திருநோன்பாய்
அத்தனார் ஊணுறக்கம் அற்றே தவத்துற்றார்
முத்திக்கு வித்தானார் மாண்பேலோ ரெம்பாவாய்! (27)

வல்லிருளாம் அந்தகனின் வாதனைகள் தீர்ந்துய்ய
நல்லருளைப் பாலித்தார் நந்தெய்வம் நானிலத்தீர்
தொல்புவிவான் ஈடில் துலங்குதவ மாட்சிமையர்
அல்பகலும் ஓவா தனவரத மும்பொழியும்
நல்லமுதம் மாந்தி நலங்கனிந்த நல்லிரே!
இல்லங்கள் தோறும் இனிதுவந்து கூவுகின்றோம்
செல்வங்காள்! நீவிர் சிணுங்கா தெழுந்திருமின்!
வல்லவர்மெய்ம் மாணடியை வாழ்த்தேலோ ரெம்பாவாய்! (28)

அனந்தலா டேலென்று அன்பறிவோங் கவ்வை
முனம்உரை செய்த முதுமொழியை கேண்மின்!
இனும்உறங் கேன்மின் எழுமின்! தொழுமின்!
மனோண்மணி அன்னை மணிவயிறு ஈன்ற
அனந்தர் குலத்தீரே! ஆய்ந்தமதி யோரே!
அனந்தம் தவவேந்தர் ஆரருளுள் ஆழ்த்தி
மனம்மொழி மெய்யால்நம் மாதவர்தாள் வாழ்த்தி
தனமதிச் செல்வர்தம் தாள்பணிவோம் எம்பாவாய்! (29)

ஏற்றி வணங்கிடுவோம் இன்பமறை தாமோதிப்
போற்றிப் பணிந்திடுவோம் பொய்யருகும் மெய்வாழும்
ஆற்றின் துறையறிந்தோம் அன்புத் திருக்குலத்தீர்
நோற்றுத் துயர்தவிர்க்கும் நுண்மெய்ந்நெறிகாண்மின்
காற்றைப் பிடிக்கும் கணக்காயர் விண்ணுழவர்
கூற்றை உதைத்த குருபாதம் கண்டுய்ந்தோம்
பேற்றிற்கெல் லாம்பெரிய பேறுற்றோர் நாமானோம்
மாற்றறியாப் பொன்னரங்கர் வாழ்த்தேலோ ரெம்பாவாய் (30)

நவகோடி சூரியர்கள் நாணும்பிர காசர்
புவிமிசைப் போந்துற்ற பொன்னரங் கையர்
தவமேரு மெய்வழிச் சாலையையர் தெய்வம்
அவதாரம்செய்து அருண்மழை பெய்கின்றார்
தவப்பலன் வேண்டித் தவமாளிகை முன்றில்
நவநாத சித்தர்கள் நாடிநிற்றல் காண்மின்
சிவபதச் செல்வரீர் சேர்ந்திங்கு வம்மின்கள்
பவப்பிணி தீர்ந்திடவே பாடேலோ ரெம்பாவாய்! (31)

விந்தை அழகர்தம் மென்பதுமத் தாள்பணிந்து
சிந்தை பரிமளிக்க செவ்வாய்கள் போற்றிசெய
முந்தை திருமுன்னர் மெய்யார் பணிபுரிய
வந்திக்கும் வாழ்த்திசைகேண்ம் மெய்யனந்தர் வான்குலத்தீர்!
நந்தை தயாபரரின் நன்னாமம் வாழியரோ!
சிந்தா குலம்தவிர சேவிக்க வாரீரோ!
நந்தா விளக்காம்நம் ஆருயிரின் நாயகராம்
பைந்தார் துளபரைப் பாடேலோ ரெம்பாவாய்! (32)

வானிற் கதிர்முளைத்து வல்லிருள்வீ யக்கிளர்கால்
கானில் தவக்குடில்முன் காத்துக்கை யேந்திநிற்கும்
கோனீன் அனந்த(ர்)குலக் கோத்திரத்தீர் உய்திபெற
மோனத் தவத்திருந்து மெய்வரங்கள் மிக்கருள
ஞான மணிக்கதிரோன் நல்கும் தரிசனைகாண்
ஈனம் இடர்பிணிகள் முத்தாபம் வெவ்வினைகள்
தானும் இரியத் திருநோக்கம் தானருளும்
வானவர்மெய் தெய்வத்தாள் வாழ்த்தேலோ ரெம்பாவாய் (33)

சிம்புள்காண் சிம்மம் கலங்குறல்போன்ம் தீவினைகள்
நம்பொன் னரங்கர்பதம் நண்ணில் நடுங்குறல்காண்
வம்பன் மறலியமல் வீயும் மதிதெளியும்
செம்பட் டுடையாரச் சீரார் சிரோமகுடம்
பைம்பொன் கலன்பூண்டு பைந்தார் துளபமணிந்
தும்பர் பதம்வரங்கள் ஓங்கும்மெய் வாழ்வருளும்
தெம்பும் திறன்திடனார் செம்மை நெறிசேர்க்கும்
அம்புயத்தாள் போற்றிசெய் தாடேலோ ரெம்பாவாய் (34)

ஓரடியால் மூவுலகும் தாமளந்தார் தம்எழிலைப்
பாரடியென் றேநம்மைப் பற்றியிழுத் தேபொற்றாள்
சேரடியென் றேயணைத்தார் செம்மைசேர் தாள்நிழலைக்
காரடியென் றேயன்பாய்க் காதலித்தார் மாட்சிமிகும்
சீரடியை நம்சிரத்தே தாம்பதித்தார் கற்பகத்தின்
வேரடியில் நாம்கிடக்க வேதித்தார் வெங்கலியை
யாரடிநீ இங்குனக்கு வேலையில்லை ஏகென்றார்
சீரடியார் நாம்காண் தொழுதேலோ ரெம்பாவாய்! (35)

பாலில்நீ ரைக்கலந்தாற் பாவமென்பார் இவ்வுலகோர்
பாலில்நீ ரைக்கலந்து பற்றினர்பாட் டையர்தமை
பால்நெய்வேண் டாமென்று பத்தியம்வைத் தேஞானப்
பால்தந்தார் முப்பாழுக் கப்பாலார் நந்தமக்குப்
பாலில்லை என்றினிதே பாலித்தார் நம்மைப்பெண்
பாலென்றார் தம்மைஆண் பாலென்றார் வான்தனிகைப்
பாலகனார் கோபாலார் பூபால ராய்நம்மின்
பால்தயவு தந்தார் பரிசேலோ ரெம்பாவாய்! (36)

இரும்பைப் பொன்ஆக்கும் ரசவாதம் என்பர்காண்
துரும்பைப் பொன்ஆக்கியதும் காணீரோ ஞானக்
கரும்பை நமக்களித்தார் கற்பகமே பூத்த
அரும்பைச் சிரமணிவித் தாரெழிலார் நாதர்
குருஉம்பர் கோதில் குணாநிதியர் வான்மெய்
பெரும்பதமே பெற்றுய்ந்தோம் பேராளர் மாட்சி
தரும்பொற் பதநிழலில் தாம்படிந்தோம் காக்க
வரும்பொன்னர் தாளை வணங்கேலோ ரெம்பாவாய்! (37)

வானுக்கு வித்தெடுத்து மெய்யமுதா லேவளர்க்கும்
தேனுக்கு மூத்தகனிச் செம்பாகு வான்மொழியர்
ஊனுக்கும் ஆருயிர்க்கும் ஒப்பில்லா முத்தியருள்
கோனுக்கு ஆவிபொருள் கூடளிப்போம் பல்கோடி
பானுமதி விஞ்சும் பிரகாசர் உத்யோங்கு
கானுக்குள் வைத்துநமைக் காத்தருளும் மெய்யம்மை
மோனத்தில் இன்பம் முகிழ்க்க வரம்அருள்செய்
தானவர்தம் வான்புகழைச் செப்பேலோ ரெம்பாவாய்! (38)

பிச்சையாண் டாரென்று பேர்கொண்டு நாம்செய்த
பொய்ச்செய் வினைபவங்கள் போக்கியிங்கு வாழ்வருளி
அச்சம் கடந்துய்ய ஆட்கொண்டு மார்பிளந்து
பிச்செடுத்து இன்பம் பெருகுதுறை காட்டியருள்
மச்சமுனி கோத்திரத்தார் வான்தனிகை வள்ளல்சுதன்
தச்சில்லா வாகனத்தால் தேவுலகம் கொண்டேற்றி
பச்சமுறக் காக்கும் பரமர்மெய்ச் சாலைஐயர்
இச்சையெலாம் தீர்பாதம் ஏத்தேலோ ரெம்பாவாய்! (39)

மன்னா உலகிடையே வந்துற்று மெய்வழியில்
மன்ன விழைந்துய்ந்தீர் வானகத்தாய் ஈன்மக்காள்!
இன்னா உமக்கில்லை எந்நாளும் நந்நாளே!
தென்னன் பெருந்துறையார் சீரார் திருவருளால்
ஒன்பான்கோள் மூவொன்பான் மீன்கள்யா வும்நல்ல
தென்போங்கத் திக்கனைத்தும் சென்றையர் சீர்விரிமின்!
இன்பமிக இன்கனிவாய் வான்மறைகள் ஓதுமின்கள்!
துன்பொழிந்தோம் என்று தொழுதேலோ ரெம்பாவாய்! (40)

துய்ய உஷைக்காலம் தேவன்கோ வில்சென்று
மெய்சிலிர்த்து நெக்குருகி விண்ணரசைப் போற்றிடுவோம்
வையகத்தும் வானகத்தும் மற்றிணையில் மாதவர்நம்
தெய்வத் திருவடியே சிந்தைசெய்வோம் வம்மின்மெய்ம்
மைவைத்த கண்ணுடையீர் முத்தாபம் வீய்ந்ததுகாண்
உய்வைத் தரும்நத்தம் ஒருதலைவர் நன்னாமம்
கைமெய்தாள் பற்றிக் கனிவாய்ச் சிரம்புனைவோம்
ஐயரடி போற்றி அகவேலோ ரெம்பாவாய்! (41)

இந்நாட்டில் மெய்வழிசார்ந் தேமன் படர்வென்றீர்
அந்நாட்டு வித்தெனவே ஐயர்தய வாலுய்ந்தீர்
பொன்னாட்டு மாமன்னர் பேரேட்டில் பேர்பதிந்தீர்
தென்னா டுடைசிவனார் சீரார் தரிசனத்தீர்
மன்னாதி விண்ணரங்கர் மெய்யாட்சிக் குட்பட்டீர்
முன்னை முழுமுதலாம் மெய்யார் தவத்திருவாம்
பின்னைப் பெரும்பொருளைப் பெற்ற நலமுடையீர்
இன்னல் கடந்தோமென் றேற்றோலோ ரெம்பாவாய்! (42)

மெய்வழியே வையமெலாம் மேலோங்கி நின்றிடுக!
வையம் முழுதுமது மெய்யடியா ராகிடுக!
உய்வழியு வந்தோர் உடல்தங்கம் ஆகிடுக!
ஐயா உமதன்பர் எற்கன்பர் ஆகிடுக!
மெய்யா உமைப்பணிந்தோர் மிக்குறவாய் எற்காக!
துய்யா நுமைத்தொழுதோர் சோதரராய் ஆகிடுக!
நைவழியி னின்றெம்மை நாதரருள் காத்திடுக!
பொய்யருகி மெய்வாழப் பாடேலோ ரெம்பாவாய்! (43)

கற்பூர வாடை கமழும் திருவாயா!
சொற்பூர்ண நல்லமுதம் பொங்கும் மலர்நாவா!
பொற்பூரக் காருண்யம் பொங்கும் திருநயனா!
நற்பூர்ணச் சந்த்ரன் நளினத் திருவதனா!
விற்போல் புருவம் குமிழ்போன்ம் எழில்நாசி
நற்சங்கக் கண்டமொடு நற்றுளபத் தார்மார்பா!
பொற்கரங்கள் பொற்றாள்கள் பூதலத்தில் கண்டுய்ந்தோம்
கற்புடையீர்! காதலியீர்! காத்தேலோ ரெம்பாவாய்! (44)

தேன்கனிந்த செம்பாகுச் சீரார் மொழியழகா!
வான்கனிந்த செங்கமலப் பூவார் விழியழகா!
ஊன்உயிருள் தித்தித்து உள்ளம் அனல் மெழுகாய்த்
தானுருக ஏன்றுகொண்டு தண்ணளிசெய் மெய்க்குழகா!
கோனே! குருதனிகைக் கொண்டல் திருமகவே!
வானே! மதிமணியே! மெய்ந்நெறியுள் யாம்புகவே
தானேவந் தாண்ட தவமேரே! சீமானே!
ஆனேறூர் அத்தாவென் றகவேலோ ரெம்பாவாய்! (45)

வையத்துள் வான்கொண்டு வந்த நெடுமாலே!
வெய்ய வினைதீர்க்கும் வேதியரே! மாதவரே!
ஐயா றடைவித்து ஆண்ட குருநாதா!
மெய்யார் அருள்மாரி மிக்கப் பொழிந்ததனால்
உய்யக்கொண் டெங்கள் உயிர்வளர்த்த உத்தமரே!
துய்யா துளபமலர்த் தொங்கல் அணிந்தவரே!
எய்ப்புவந் தெம்மை நலியாது காத்தவரே!
ஐயா எனப்போற்றி ஆடேலோ ரெம்பாவாய்! (46)

வேண்டும் வரமீயும் விமலா! விடைப்பாகா!
ஈண்டெமக்குப் புக்கில் இணைதாளே தஞ்சமையா!
ஆண்டவரே! எங்கள் அனந்தர் குலதேவா!
மாண்டவரை மீட்கும் மகதி மகாத்மியரே!
தூண்டா மணிவிளக்கே! திவ்யப் பெருஞ்சோதி
மூண்டு வரும்மறலி வெம்மைமமுத் தாபமெல்லாம்
தாண்டும் வரமருள்வீர் தாழ்ந்துபொற் றாள்சிரத்தில்
பூண்டுபணிந் தோமென்று போற்றேலோ ரெம்பாவாய்! (47)

கலிவென்ற கோமானே! கர்த்தாதி கர்த்தாவே!
நலிவின்றி யாம்வாழ நல்லருள்செய் நாதாவே!
பொலிகின்ற பூம்பதமே போற்றுகின்றோம் பொற்கோவே!
சலிவின்றி ஓவாது நோற்கும் தவமேரே!
வலிமைமிக் கோங்கும்மெய் வாய்மைத் திருநாத
ஒலிமெய்ம்மை யால்எம் உயிர்வளர்க்கும் ஓர்அன்னாய்
பலிகொண்டெம் வெவ்வினைகள் பாரு(ம்)வரம் நல்கும்
ஒலிவா மலையேயென் றுவந்தேலோ ரெம்பாவாய் (48)

வாழிய! தெய்வத் திருநாமம் வாழியவே!
வாழிய! பொன்னார் மணிமகுடம் வாழியவே!
வாழி அருளார் மதியத் திருவதனம்
வாழி எழில்பிறையார் வாணுதலும் வாழியரோ!
வாழி கருணை மலரார் திருநோக்கம்
வாழிய மூச்சோடாத் திருநாசி வாழியரோ!
வாழி அருளமுதம் பொங்கும் திருமலர்வாய்!
வாழி வலம்புரிச் சங்கார் திருக்கண்டம்! (49)

வாழிய! வெள்ளானை மத்தகமார் பொன்மார்பம்
வாழிய! பொன்புரிநூல் மிக்கிலங்கும் பொன்மேனி
வாழிய! கொண்டற் கொடைவிஞ்சும் பொற்கரங்கள்
வாழிய! பொன்வட்டில் போலும் மணிஉதரம்
வாழிய! பொற்குமிழார் மாண்பார் திருவுந்தி
வாழிய! வயிரத்தூண் ஆகும் திருத்தொடைகள்
வாழிய! வெண்கலம் வார்த்தன்ன முன்தாள்கள்
வாழிய! பொற்றா மரையார் திருப்பாதம் (50)

வாழிய! செண்பகமார் வாசத் திருமேனி
வாழிய! தெய்வம் வழங்கியருள் வேதங்கள்
வாழிய! நம்சாமி வான்புகழே வாழியரோ!
வாழிய! நம்துரையை வாழ்த்தும் அனந்த(ர்)குலம்
வாழிய! ஆண்டவர்தாள் வாழ்த்தும் யதார்த்த இனம்
வாழிய! சாதிகளின் கர்த்தர்புகழ் வாழியரோ!
வாழிய! மெய்வழியே வையமெலாம் வாழியரோ!
வாழிய! வாழிய வாழிய வாழியரோ! (51)

தெய்வத் திருவருளெம்பாவை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!