திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/098.மறலியை வெல் வருக்கக் கோவை


ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



98. வருக்கக் கோவை தொகு

இலக்கணம்:-

வருக்க எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடலின் முதலெழுத்தாக வருமாறு பாடப் பெறுவது. இஃது அகப்பொருட்துறைகளைக் கோவையாக விளக்கிக் கட்டளைக் கலித்துறையால் பாடப்பெறுவது.

அகர முதலா கியவா மக்கர
வருக்க மொழிக்கு முதல்வரு மெழுத்து 
முறையே கட்டளைக் கலித்துறை யாக
வழுத்துவ ததுவே வருக்கக் கோவை
- முத்துவீரியம் 1044
வழுவில் அகப்பொருளின் ஏற்பன அகராதியாய்
வருக்கம் பாடுதல் வருக்கக் கோவை
- சுவாமி நாதம் 167
வருக்கக் கோவையே மொழி முதல் வரும் எழுத்து
அகர முதலா வகரம் ஈறாக
ஒவ்வோர் எழுத்திற்கு ஒவ்வோர் செய்யுள்
கட்டளைக் கலித்துறைக் கவியாக் காட்டலே
- பிரபந்ததீபம் 23
“............. உயிரும் மெய் வருக்கத்து
அடைவில் வருபொருள் துறையிற் கலித்துறை
அகப்பொருள் அமைய உலகெலா மதிப்ப
வழுத்தும் இயல்பது வருக்கக் கோவை”
- பிரபந்த மரபியல் 7

அகப்பொருட் துறையாகிய கோவையென்னும் இலக்கிய வாயிலாக மெய்வழி ஆண்டவர்களின் புகழை வருக்க எழுத்துக்களால் முறைப்படுத்திப் புகழ்வது இப்பனுவலின் நோக்கம்.

மறலியை வெல் வருக்கக் கோவை

காப்பு

கட்டளைக் கலித்துறை

விண்ணர சாகிய பொன்னர ங்கையரின் பொற்பதமேல்
வண்ணவ ருக்கத் திருக்கோ வைதனைப் பாடிடவே
எண்ணம் விழைந்தது ஏடெழுத் தானிமு னைநின்றுமே
அண்ணல் தயாநிதி அன்பனுக் கென்றுமே ஆதரவே!

நூல்

பொழில் வளம்

அற்புத மாயொரு உத்யோ வனம்ஊ ரல்மலையார்
நற்புறம் சார்ந்து நறுமண கற்பகம் அல்லியெனும்
பொற்புகு தாமரை முல்லை குமுதநீ லோற்பன்னம்
வெற்பரு காம்குளம் பொன்மலர் பூத்துப் பொலிந்ததுவே! (1)

ஆரெழில் பூம்பொழில் ஓர்தரு பன்மலர் தேம்பிழிய
சீருயிர் செண்பகம், மல்லிகை, காயாம் பூமலரும்
பாரினில் எண்டிசை கண்டறி யாதென மெல்லருவி
சேர்கய மார்கயல் நீந்துற ஓடைகள் ஊற்றெழுமே! (2)

இங்கித மாய்க்குயில் கூவிட வண்ண மயில்நடமே
அங்கது செய்திடக் கொஞ்சிட அஞ்சுகம் புள்ளினமே
பொங்கி மகிழ்வுற ஆரொலி எங்கணும் தங்கிடவே
சங்கம மாயின மெல்லிசை யெங்கும் பரந்ததுவே (3)

தலைவர் பொழிலிடைச் சேரல்
ஈடில ராகிய விண்ணவர் மண்ணவர் உய்வுறவே
தேடரி தாகிய பொற்பதம் மண்மகள் இன்புறவே
பீடுயர் மென்னடை செய்தவர் போதர விண்பொழிய
ஆடர சென்னுயிர் மன்னவர் அங்கு உலாவருமே (4)

உன்னத மெய்த்தவம் செய்தவ வேந்தரிம் மண்ணுயிர்கள்
தன்பதம் பற்றிடில் நித்திய வாழ்வு வரந்தரவே
இன்பந டம்புரி எந்தைமெய்ச் சிந்தையர் இவ்வுலகோர்
துன்ப மொழிந்திடச் செங்கதிர் போல்வரு தோன்றலரே! (5)

ஊறல் மலையரு கோரம்சித் திமிகு கானகத்தே
மாறில் மணிமொழி மாதவர் பூதலர் உய்ந்திடவே
கூறரி தாகிய கொற்றவர் நற்றுணைப் பொற்பதமெய்
யாறினைக் காட்டிட இன்பம் கொழித்திடப் பேர்ந்துளரே! (6)

எம்மதம் உம்மதம் என்றிலை யாவுமே சம்மதமே!
தம்மதம் தானுண ராசெயல் ஆணவப் பொய்மதமே!
அம்மதச் சீருரை ஆண்டவர் போதரு கானகமே!
தம்மை யுணர்ந்தவர் சந்தித் தேற்றனர் தேனகமே! (7)

ஏதுகுலத்திடை பேதமி லைஎலாம் ஓர்குலமே
ஏது குலத்தவர் உள்ளமைப் பெட்டகம் சீர்குலமே!
வாதம் புரிந்துயிர்ச் சேதம் விளைப்பவர்க் கேதுகுலம்
நீதம் அருள்பவர் நின்னைவந் தேற்றார் மெய்க்குலமே! (8)

ஐயமி லாதிந்த அற்புதர் பாதம் பணிந்தவர்கள்
வையகத் தேமெய் பெற்றிடு வாழ்வாங்கு வாழ்பவரே
துய்யம னத்தவர்க் கேயிது தோற்றர வாகிடுமே
வெய்ய மனத்தினர் வெந்நர குற்றிடு வீணவரே (9)

தலைவர் தோன்றுதல்

ஒண்டொடி யாளவள் நாமம் இளங்கலை மாதினியாள்
கண்டனை யாளிணை: வேட்கையி னாள்பொழில் காணுறவே!
ஒண்மணி மாதொரு பாங்கியொ டேயவள் அன்புடனே
கண்மணி யாளொடு காண்பொழில் ஏகும் கருத்தினளே! (10)

பாங்கி பொழில் வளம் கூறுதல்

ஓதிமம் போல் நடை கிண்கிணி மென்குரல் கண்கயலே!
பாதிப் பிறைநுதல் பங்கயம் போல்முகம் பொன்னுடலே!
ஒத்தது டியிடை ஒன்பவ ளயிதழ், மிக்கொயிலாள்
வீதிவ லம்வரு தேரென வந்தனை வாகுயிலே! (11)

ஔவைய னாளினி யாளென் னொடுஎழில் ஆர்பொழிலே!
செவ்வைய தாகவே சென்றிடு சேடியர் கூடுவரே!
பவ்விய மானவர் பண்புளர் அங்குறும் பைந்தொடியே!
முவ்வகை யானும் மகிழ்ந்திடும் வாய்ப்புறும் மென்கொடியே! (12)

கன்னியே இப்பொழி லுக்கிணை எங்குமில் கற்பகமே!
நின்னித யம்மகிழ் வெய்திடு நீர்மைய திங்கெழிலே!
மின்னிய லாயிதில் மெய்ம்மொழி வானவர் வந்துறுமே!
அன்னிய மில்லவர் அன்புயர் உம்பர்கள் அங்குறுமே! (13)

காட்சிகள் கண்டு களித்திட லாகுமே காரிகையே
மாட்சி மிகும் எழில் மாதர்கள் போதரும் மெல்லியலே!
மீட்சியு றும்முளம் வெம்மை தணிந்திடு மிங்குறலால்
சாட்சி யுனக்குறு சேடி யுரைத்தனள் தேன்மொழியே! (14)

தலைவியுரை

கிட்டறு மின்பம் கிளர்ந்திடும் என்றனை கிஞ்சுகமே
மட்டில் மகிழ்வுளம் பொங்கிடக் காண்குவம் செய்குவமே
அட்டியெதும்மிலை அன்புடை நற்றுணை அன்னமெனக்
கிட்டினை யென்றன ளொடுபொழில் போதரு பூங்குயிலே! (15)

தலைவி பொழிலிடைச் சேரல்

கீழ்த்திசை ஆதவன் பொள்ளென வீசியே போதரல்போன்ம்
ஆழ்த்திடு மென்னித யத்தினில் ஓர்ஒளி ஆர்ந்தெழுந்தே
வாழ்த்திடும் நின்றனை இவ்வுணர் வெய்திடு வாய்ப்புறவே
மூழ்கிடு தேன்உடல் தன்னிலென் நெஞ்சமே மென்கொடியே (16)

குயில்கிளி வானதில் பாடியாம் புட்குலம் கூடியிசை
பயில்வன வாயின மயிலது ஆடிக் களிக்கிறதே!
இயலுளம் இன்புறத் தென்ற வசைந்து இதந்தருதே!
துயரில் அகம்விளை வார்ந்தது அன்புயர் சேயிழையே! (17)

காட்சி

கூவிடு கோகிலம் தாவிடு மான்மரை பூம்பொழிலில்
யாவரோர் ஆடவர் ஆரியர் சூரியர் போலெழிலார்
தேவர்கொல் கந்தர்வர் தார்புனை மன்னவ ரின்னவரோ!
சேவடி பூமியில் பாவிட வந்தனர் விந்தையிதே! (18)

கெஞ்சின கண்கள் விடாம வர்தனைக் காணுறவே
அஞ்சுறு நெஞ்சம் அயலவர் ஆடவர் நோக்குறவே
விஞ்சிடு நாண மிகுத்தது பூமியை நோக்கினளே!
விஞ்சையர் கோனவர் எந்தனை நோக்கிட அஞ்சினனே! (19)

ஐயம்

கேளடி தேன்மொழி யேயவர் வானவர் கோனிவரோ!
வாள்விழி யேயிவர் வான்கொடை விஞ்சிடு வள்ளல்கொலா!
தாள்மலர் பூமகள் பூத்திட நன்னடை யிட்டருளும்
கோளரி வாளரென் றேயுல கோர்கள் கிளத்துவரே! (20)

தேளிதல்

கையொரு மென்மலர் தாளது விண்மலர் பங்கயமார்
மெய்ம்மதி போன்முகம் மார்பகம் மத்தகம் மிக்கிலங்கும்
உய்வழி தந்துயிர் காத்திடு பண்டிதர் என்றுரைசொல்
மெய்வழி ஆண்டவர் என்று துதிபெறு நாமமுளார் (21)

பாங்கியுரை

கொய்மலர் பூங்கனி கொண்டிவர் தாளிணை முன்னிலையில்
வையடி வானுதல் மானனை தையல் வணங்கிடுவாய்
வையக முற்றுய வந்தனர் முந்துறு மண்டியிடு
செய்யடி வந்தனம் சேவடி நற்றுணை நின்றனுக்கே! (22)

கோவலர் கோடிக டந்தகு ரீஸ்வரர் கோதகல்சீர்
மாவலர் மாதவர் மாமுனி வோர்கள் வணங்கிடவே
பூவல மாகப் பொருந்திட வந்தவர் பூபதியே!
நாவலர் நாதர் நலந்தரு நற்றவர் கொற்றவரோ! (23)

தலைவியுரை

கௌவிய தென்னுளம் அன்னவர் நோக்கம் கனிந்தினிதே
செவ்விய ரானதி ருக்கயிலைப்பதிச் சங்கரரோ!
ஒவ்விய வர்முனம் சென்றிட என்னுளம் நாணுறுமே!
எவ்வனம் செல்லுகேன் செப்படி என்னுயிர் ஏந்திழையே! (24)

பாங்கியுரை

சற்றுமி தெண்ணிடேல் சார்ந்து பணிந்திடு தேன்கனியே!
மற்றவர் ஏற்றுத் தயவொடு வானமு தம்தருவார்
பெற்று மகிழ்ந்துயிர் பூரித்துக் கொள்ளடி பெண்ணன்னமே!
கற்றவர் போற்றிடும் கற்பகக் காஅவர் கண்மணியே! (25)

சாற்றிடு நின்னுயிர் தாள்மல ரில்அவர் ஏற்றருள்வார்
மேற்றிசை மாதவர் வேதகுலாதிபர் வேதியராம்
மாற்றி மறுபிறப் பாக்கிடு மாவலி மாமணிர்
கூற்றினை வென்றிடு ஆற்றலர் கோகுலத் தோன்றலரே! (26)

சித்தர் தலைவர் திருவுயர் வான வரோதயரே!
முத்திநி லைக்கொரு வித்தகர் விண்மணி நாயகரே!
அத்தி புரத்தவர் அண்டர்க் கரியவர் அன்பினர்க்கு
மெத்த எளியவர் மேலவர் மெய்வழி ஆண்டவரே! (27)

சீதம லர்ப்பதப் போதினில் தாழ்ந்து பணிந்திடுவோர்
ஏதம் அறுத்(து)உயர் பேரின்ப வாழ்வினில் ஏற்றிடுவார்
மாதவ ரின்திருப் பாதமலர்சிர மேலணிந்தால்
பூதலத் தில்நிக ராருனக் கன்பே புரிந்துகொள்ளே! (28)

தலைவி பணிந்து வணங்குதல்

சுந்தரி யாள்மலர் தீங்கனி கையுறை கொண்டினிதே
விந்தையார் வித்தகர் சன்னிதி முன்செய் சமர்ப்பணமே
மந்திர ரூபரும் மாதினி யாள்முகம் நோக்கிடவே
சிந்தெழில் மங்கையும் தேவர் திருமுகம் நோக்கினளே! (29)

தலைவி ஒருவழித் தணத்தல்

சூரரோ மன்மதன் பேரரோ வான்கயி லையரசோ
கார்முகில்வண்ணரோ யாவும் படைத்த அயனிவரோ
தாரணி செண்பகர் தாமரை யார்திருக் கண்களையே!
நேரெதிர் நோக்கத் திறனிலை நாணிக் கவிழ்ந்தனளே! (30)

செந்துவர் வாயுமை பங்கரோ எற்கிவர் முந்துறவோ!
சந்தித்த தும்முளம் சிந்தித்த தும்உயிர் பந்தித்ததே
விந்தை யிதேஇந்த ஊருல கோர்கள் உரைப்பது போல்
சந்தித்த தும்காதல் என்றது உண்மையும் ஆனதுவே! (31)

சேவடி கண்டதும் வேறெதும் கண்டிலர் என்றுரை போல்
பூவடி கண்டதும் போய்ப்படி நெஞ்சமும் மீண்டிலதே!
மூவடி யாலுல கேயளந் தார்திரு மாலிவரோ!
பாவடி பூமி நழுவின போலுணர் வுற்றனளே! (32)

தலைவர் பாங்கியை வினவுதல்

சைவத் திருமேனித் தெய்வம் இவள்தனை நோக்கினரே
மைவைத்த கண்ணினள் மாதிவள் பேரென ஊரெதுவோ?
மெய்வைத்த சிந்தையாள் மென்மலர் மேனியாள் என்னுளத்தே
மையலைத் தந்தனள் மங்கை கவர்ந்தனள் எந்தனையே! (33)

சொற்றுணை வேதியர் சோதியர் ஆதியர் சேயிழையே!
நற்றுணை நானுனக் காகுவன் அஞ்சிடேல் நீயிளையாள்
மற்றுனை ஏற்றிடற் கட்டியில் ஏற்றிடும் சம்மதமே!
சற்று பொறுத்திரு சென்று மீண்டும்வரு கென்றனரே! (34)

தலைவியின் நிலை

சோதியர் செப்பவும் மாதினி யாளுளம் வேதனையே
ஆதியில் எந்தனை ஆண்டவர் தானிவர் என்றுணர்வால்
காதல் கனிந்தது கண்கள் கலங்கின என்செய்வளே!
நூதனப் பூம்பொழில் தன்னிலைவிட் டிங்ஙன் நகர்ந்தனளே! (35)

சௌபாக் கியவதி முன்செலக் கால்களும் பின்னிழுக்க
திவ்வியர் பொன்திரு மேனியும் சிந்தையில் தானியக்க
பவ்விய மாகப் பணிந்தவள் ஏகினாள் பாங்கியொடு
செவ்வியர் செல்பவள் தன்னைத் தயையொடு நோக்கினரே! (36)

பாங்கிக்கு தலைவி நன்றியுரை

ஞமலியின் நன்றிபோல் நின்றனுக் கென்றனின் நன்றியம்மே!
கமலியென் காதலர் கண்டுகொ ளச்செய நின்றுணையே!
எமதுயிர் ஒன்றுடல் ரெண்டென உணர்வுற ஆக்கினையே!
இமையவர்க் கென்றனை ஈந்தனை அன்புடை ஏந்திழையே! (37)

தலைவிக்கு உருவெளித் தோற்றம்

ஞாலத்தில் எங்கெங்கு நோக்கினும் நாதரின் தோற்றமதே
கோலம வர்பரி யேறிவ ரல்போலும் காணுறுதே
சீலத்தி னேடவர் சிந்தை கவர்ந்தென்னுள் புக்கினரே
வேலைத்தன் பொற்கரத் தேந்திய வேலவர் தானவரே! (38)

ஞண்டது ஓய்வில தங்கிங்கும் திரிதரல் போன்மனமே
வண்டது மென்மலர் சூழ்ந்துரீங் காரம் செய்வதுபோன்ம்
செண்டணி ஆண்டவர் தங்களை சுற்றிச் சுற்றிவருதே
பண்டிதர் என்னுயிர் நோயும் நோய்க்கு மருந்தவரே! (39)

தலைவி ஒரு வழித்தணத்தல்

தண்ணென் மதியது சுட்டது தென்றல் தகித்ததுகாண்
உண்ணல் ஒழிந்தது பாலும் கசந்தது ஒண்டொடிக்கே!
எண்ணம் அவர்நினை வுற்றது எங்கெது நோக்கிடினும்
வண்ணம் அவரெனு மாயம் விளைந்தது நெஞ்சினிலே! (40)

தானவ ரின்மொழி தேனதுவா னமுதானதுவே!
கோனவ ரின்உரு தேரசை(வு) ஏறெனும் பீடுடைத்தே!
கானவ ரைக்கண் டளவே உள்ளம் குளிர்கிறதே
ஏனவ ரைப்பிரிந் தேனென என்னுள் நெகிழ்கிறதே! (41)

திருவுடை யார்தலை வர்தரி சனையாள் புளகமுறும்
பெருகிடு நெஞ்சினில் பேரின் பம்மிகப் பொங்கிடுமே
அருகுற நெஞ்சம் விழைவுறும் நாணம் தடுத்திடுதே!
நெருங்கி யவர்தாள் முகமே படிந்திடு நாளெதுவோ? (42)

தீருவதென்பிணி சேர்வது தான்பிறி தேதுவழி
பாரினிலென்னுயிர் நாயகர்க் காரும்மிணை யிலையே!
காரிய காரணர் ஆரணர் பூரணர் காந்தருவர்
நேரிய லிங்ஙனம் நீடுநி னைந்து நெகிழ்ந்தனளே! (43)

தலைவர் நீடுநினைத்திரங்கல்

துள்ளிடு மானவள் நடைகாட் டும்கொடி இடைகாட்டும்
வெள்ளை யுளத்தினள் மானெனு நோக்கினள் மெல்லியலே
உள்ளமெ னக்கென ஆக்கி யுணர்வது ஒன்றினளே
பள்ளம திற்பாய் வெள்ளமென விரைந்தே வருமே (44)

தலைவர் பாங்கரோடு சார்தல்

தாமதி யாளெழில் தோகையுளாலவள் சீரெழிலாள்
கோமதி யென்றனைக் கொண்டவள் தண்டேன் மொழியயில்வாள்
தேமது ரக்கனி போல்பவள் ஊர்பேர் நிலைமுதலாம்
சேமநிலை நலம் சென்றுநீ ஆய்ந்துவா சீர்பெறவே! (45)

பாங்கர் தனியே ஆய்தல்

தென்றல் தனியசை கின்ற தளிர்க்கொடி போல்பவள்மான்
கன்றனை யாள்பொற் குன்றனை யாளிவள் கோகிலமே
தென்னன் பெருந்துறை தேசிகர் என்றலை வர்க்கிவளோ
நன்று பொருந்திடு நாயகி யாகும் நலத்தினளே (46)

தேடரு மாமலை தெய்வ சிகாமணி என்றலைவர்
கூடரு கொற்றவர் கோதகல் நற்றவர் கோமகனார்
ஏடவிழ் அம்புயம் பேரெழில் இன்முக ஏந்தலர்க்கு
ஈடிவள் ஆவளோ இல்லறம் செய்திட ஏற்றவளே? (47)

பாங்கர் தலைவர்க் குரைத்தல்

தையல் இளையவள் மையல் கொளச்செயும் பேரெழிலார்
துய்ய மனத்தினள் தெய்வ குணத்தினள் தேன்மொழியாள்
வையம் தழைத்திட வந்தீர் மதிக்குடை வானவரே!
மெய்யாய்த் துணைதரு நாயகி நல்லாள் எனத்தகுமே! (48)

தொட்டதென் மெல்லுளம் செந்துவர் வாய்மொழித் தண்மதியே!
சுட்டது தென்றல் தகித்தது என்செயம் தோகைமயில்
எட்டியெ னக்கைப் புற்றது உண்டி உறக்கமிலை
மட்டிலள் அன்பினள் மாதவன் போதரும் பூம்பொழிற்கே (49)

தோன்றினள் தோகையும் சுந்தரர் வந்துறும் சோலையிலே
ஆன்றவர் அங்குற அங்ஙண் மலர்ந்தது ஆரெழிலை
ஏன்றனர் இன்கரு ணைவிழி யன்புட னேதழுவி
மூன்றத னாலும் சுகம் பெறலாயினன் விண்மகளே (50)

தௌவிய நற்கனி பாலில் விழுந்துநற் றேன்கலந்தே!
பவ்விய மாகப் பருகிய போலுமிப் பைங்கிளியாள்
ஒவ்வினள் இன்புற் றாரிடை சேர்ந்தனள் ஒண்டொடியாள்
எவ்வித மோவலுக் கொண்டு பிரிந்ததை ஒத்ததுவே! (51)

தோழியர் ஐயம்

நன்னுதல் நம்மவள் தன்னடை வேறுப டல்அறிமின்
இன்னவ ளுக்கிவள் யாதுற லானது ஏந்திழையின்
மின்னிய லாளிவள் மேனி பசந்தது காண்மின்களே
அன்னையர் கண்டிலர் போலும வர்க்குரை செய்திடுமே! (52)

நன்றாய் வினவல்

நாடியவர்க்குரை செய்தனர் கேட்ட நற்றாயவளும்
ஏடி இளங்கலை என்னுற லாயது நின்றனக்கே
வாடினை உண்டியை மற்று துயின்றிலை மற்றெவர்பால்
கூடி மகிழ்ந்துற வாடினை யோஅது கூறடியே! (53)

தலைவி வரைவு வேட்டல்

நின்றனள் நேரிழை நேருரை செப்பிலள் நற்பொழிலே
சென்றனள் சீர்தலை வர்கிது ணர்த்தினள் தன்னிலையே!
மன்றல் நிகழ்வுறு மங்கள தாரகை நாட்டுமினே!
என்றனள் ஏந்தலும் இன்னவள் செப்பிய தேற்றனரே! (54)

தலைவர் உரை

நீயிதற்கஞ்சிடேல் நேரிழை யேயிது தானியல்பே
ஆய்தொடி யேயுனை யேமணம் கொண்டிடும் இஃதுறுதி
சேய்மைய தன்றென தூரும் அணித்தது தான்குயிலே!
நேயம தோடிரு நன்மை நடந்திடும் என்றனரே! (55)

நுந்தம ராலிடர் வந்திடு மென்றுளம் அஞ்சலொழி
சிந்தையில் நின்றனை செய்பிழை ஏதுமில் சித்திரமே!
முந்துறு முற்பிற விதனில் என்னோ டிருவந்தவள்நீ
ஏந்தனை உந்தனுக் காக்கினேன் நன்றிரு ஏந்திழையே! (56)

நூதன மானது கந்தர்வ நன்மணமே புரியும்
மாதன மாகிய மங்கள தாரகை நாட்டுதுமே!
காதலி யேயுனைக் காத்திடும் என்றும் கலங்கலொழி
ஒதுமின் உன்றனும் கேயுரியோரக்கிது உண்மையிதே! (57)

வரைவு

நெஞ்சக மேமகிழ் வெய்தினள் நற்றலை மைப்பதியர்
அஞ்சுக மான இளங்கலை மங்கை கழுத்தினலே
கஞ்சம தாலியல் மங்கள தாரகை நாட்டினரே!
விஞ்சையர் விண்ணிருந் தேமலர் மாரி பொழிந்தனரே! (58)

இரவு நிகழ்ச்சி

நேரிழைக் கிங்கன் நிகழ்ந்தது மங்கொரிராவினிலே
பேரிய லின்ப முகூர்த்தம தென்று குறித்தனரே!
கூறரு மஃதினை கோதறு மின்பம் கொழிநிலைமை
ஆருரை செய்குவார் அண்டர்கள் போற்றும் அற்புதமே! (59)

காணரு காட்சிகள்

நைமிசா ரண்யம் நலம்பொழி கானகம் நண்ணினரே!
ஐயை தனக்கு ஈரிறக் கைகள்முளைத்தனவே!
வையகம் விட்டே வானகம் அன்னவ ளேகினளே!
ஏய்தற் கரிதெனும் இன்பஉலாநிலை எய்தினளே! (60)

நொய்யதாம் விண்ணகம் தன்னில் எழில்மணி மண்டபத்தே!
துய்ய பணிங்கனை மேடையில் தோகையைக் கொண்டிருத்தி
மெய்யின்பம் மேவுறச் செய்தனர் வானவர் அச்சுகமே!
வையகத் தில்லது வானகத்துள்ளது கேண்மின்களே! (61)

நோற்றவர் தாமே அடைவது இச்சுகம் நேரிழையே!
ஆற்றலுனக்கிலை அற்புதம் தந்தேன் மகிழ்ந்திருவே!
கூற்றமு னக்கிலை என்றும் பதினாறு கொண்டிடுவாய்
மாற்றறியாத பசும்பொன்னின் மேனி யுனக்குறுமே (62)

நௌவிய மானது நானிலத் தோர்கண்கா ணாததிது
பவ்விய மாகப் பரமேசர் ஈயப் பெறுவதிது
செவ்வியர் கண்ட சுகத்துறை சேமநிலையி துவே
இவ்வுல கத்தில் இயல்மெய் குண்டத்தோர்க் கேற்றதிதே! (63)

பரசுகம் எய்தும் பதியது வாழ்வின் நியதியிதே!
அரனடி சார்வோர் அனுதினம் போக்குவரத்ததிது
சரணடை வோர்சா யுச்யம் பெறுபதி யிதுகாணே!
தரமுயர் பாக்கியம் பெற்றனை செல்ல மயிலனையே! (64)

பாருல கோர்கா ணாதபே ரின்பம் பெற்றனையே
சீருயர் தெய்வ சிகாமணி சீரிள மைக்கனியே!
ஆருயிர்க் குற்றதோர் நற்றுணை பெற்றனையே!
நேருனக் காரினை நித்தியர் காதலைப் பெற்றனையே! (65)

பின்னதும் முன்னதும் கண்டு தெளிந்து பரமேசர்
சன்னிதி முன்னுற அன்னவர் தாளிணைச் சார்ந்தனை நீ
உன்னத மாவரம் பெற்றனை மாதுஇளங்கலையே!
நன்னிலை எய்தினை நற்றவர்க் குற்றது ளாயினையே! (66)

பீடுடை யார்பிரம் மப்பிர காசர் பெருமானார்
ஆடலைப் பொன்னரங் கையரை அன்பு மணம்கொண்டாய்
கூடி மகிழ்ந்துயிர் உறவுகொண் டனையேகோகிலமே!
தேடரி தாகிய மாதனம் பெற்றனை வாழியரே! (67)

புண்ணிய வதியென் றுலகோர் சொல்வர் பொன்மகளே!
நண்ணினை அப்பெரு மைக்குரி யாளென ஆகினையே!
வண்ணவ ரோதயர் நின்மண வாளர்சு மங்கலியே!
எண்ணமு யர்ந்தது எய்தினை வாழிய! வாழியரோ! (68)

தலைவி இல்லமடைதல்

பூமகள் போல்பவள் பெற்றனள் நற்சுகம் பூதலத்தே!
சேமநி திக்குவை யானப ராபர ரைப்பிரிந்தே!
ஊமையாள் போலவள் மெல்லென இல்ல மடைந்தனளே!
தாமுறு பெற்றவர் சுற்றமும் வெஞ்சினம் கொண்டனரே! (69)

பெற்றோர் சினத்தல்

பெற்றவ ரையுட னுற்ற வரைத்தமர் சுற்றமெலாம்
சற்றுமெண்ணாமலே செய்தஇக் காரியம் என்னடி சொல்
மற்றது யாரவர் பேர்குலம் உள்ளது சொல்மகளே?
முற்று நினைந்திலை முந்துறு செய்கை இது சரியோ! (70)

தலைவி உரை

பேதைய ளாயினும் மாதுதெ ளிந்தவ ளேஉரை செய்
நீத முரைத்தது நியாய மதேஎனைப் பெற்றவரே!
காதல துற்றதும் கடிமணம் கொண்டதும் நீதமதே
வேதனை கோபமும் வேண்டுதில் சற்றே கேண்மின்களே! (71)

பைங்கிளி யாயெனை ஈன்று வளர்த்திட்ட பெற்றவரே!
வையக மஃதினில் அன்பு கனிந்தநல் உறவினரே!
செய்மண மானது சீரல வென்றுரை செய்தீர்கள்
துய்யவ ரென்னவர் தெய்வவரோதயர் அறமின்கள் (72)

பொன்னரங் கர்அவர் என்னுயிர் என்று உணர்ந்தேனால்
அன்னனம் அன்னவர் அம்புயத் தாளினில் பணிந்தேன்யான்
தென்னவர் என்றுமே உள்ளவர் தெய்வம் அறிமின்கள்
என்னை யிழந்ததும் தன்னுளே ஆழ்த்திய தும்சரியே! (73)

போற்றிய வர்பதம் பற்றிச் சிரம்பதி புண்ணியரை
ஏற்றி இறைஞ்சினோர் வெம்பிற விப்பிணி தீர்வுறுவர்
கூற்றுவ னும்மவர் ஆற்றலால் தோற்றிடு கண்ணியராம்
தேற்றர வாளரே ஏற்றெனை ஆண்டவர் என்னுயிரே (74)

பௌவம திற்சிறு புன்துரும் பாய்நாம் அலைகின்றமால்
எவ்வித மோகரை காணலு மாகும் இயம்புதுமே!
செவ்வியர் வானவர் வையகம் போதுறு சீர்தருமால்
பவ்விய மாகப் பணிந்தடி பற்றிடில் கூடுவதே! (75)

குறிப்பு : பௌவம் - கடல்

மங்கை யவளிது போலுரை செப்பினள் மெய்ம்மொழிதான்
பொங்கி யேழுந்தவர் புந்தியில் போய்மலர்ந் துற்றதுவே
திங்கள் வதனரைச் சென்று கண்டேயவர் சேவைசெயத்
தங்களு ளம்சமாதானமும் கொண்டனள் சாந்தியங்கே! (76)

ஊர் அலர் தூற்றுதல்

மாது இளங்கலை செய்த கொடுமையைக் கேண்மின்களே
யாது புரிந்தனள் யாவரவ ரோகுலம் என்றறியாள்
பேதை மணம்கொளும் பெற்றவ ருற்றவ ரும்மாறியார்
ஈதுல கத்தி லநியாயம் இப்படி யாகிடுமோ? (77)

மின்னவள் மெத்தவும் ஊமைபோ லேயிருந் தாலளவோ
இன்னசெய் தாளவள் ஊரைக் கெடுத்திடும் செய்கையினால்
என்ன துணிவிது மங்கல நாணுமே பூண்டனளாம்
தன்னகத் தோரிடம் சாதுர்யம் பேசும் சமர்த்தவட்கே! (78)

மீறிய வள்செயல் மற்றிளம் மங்கைய ரைக்கெடுக்கும்
ஊறு படுத்தினள் ஊர்ப்பெயர் கெட்டது ஊமையினாள்
பேறுபெற்றே னென்று பெற்றவர் பால்தனைப் பீற்றினளாம்
மாறு செய்தாளிந்த மாதினைக் கண்டித்தல் வேண்டுதுமே! (79)

முன்னிவள் செய்கையைக் கண்டிடு பின்வரு பேதையர்கள்
தன்னிலை கெட்டிடச் செய்திடும் ஆதலின் ஊரீரே!
அன்னையர் யாவரும் அவரவர் மக்களைக் காபந்துமே
வின்னம் வாராமலே வைத்திடு மின்இது சூதானமே (80)

மூதுரை வானவர் வேதகுலாதிபர் என்னவர்காண்
ஆதியர் ஆற்றலர் அன்புயர் பண்பினர் என்றனளாம்
ஏதிவள் செப்பினும் யார்க்கென தத்தமர் செல்வியரைத்
தீது வராவணம் இற்செறித் தேவைமின் சீரோரே! (81)

மெல்லியல் தன்னை மணந்தவர் வானவர் என்றனளாம்
எல்லையில் மாட்சியர் ஏந்தலர் ஈடிலர் கூற்றினையும்
வெல்லவல் லாரென்றும் மாவரம் தந்திடும் வள்ளலென்றும்
சொல்லு மவள்செயல் பித்துடை யாள்போன்ம் தோற்றுதம்மே! (82)

பெற்றோர் தலைவரைக் காணல்

மேலவர் என்றுரை தன்மகள் செப்பவும் அஃதுரையால்
சீலமொ டேபெற் றோர்தலை வர்தமைக் காணுறவே
கோலமும் கையுறை கொண்டனர் சன்னிதி சென்றனராம்
பாலகி செப்பிய வாறு சமர்ப்பணம் செய்தனரே! (83)

பெற்றோர் நிலை

மையுறை கண்ணினள் மங்கையு ரைத்தது முற்றிலுமே!
மெய்யெனக் கண்டனர் வானவர் மால்சிவனும்அரியும்
உய்வழி காட்டிடும் மெய்வழி ஆண்டவர் என்றதெலாம்
மெய்யது மெய்யே என்றுணர் வுற்றனர் பெற்றவரே! (84)

மொய்ம்புகழ் வானவர் வந்தவர்க் கேமுக மன்மொழிந்து
மெய்ம்மொழி யால்திரு வாக்கத னால்உயர் நோக்கதனால்
வையக வாழ்வியல் மெய்யக வாழ்வியல் செப்பினரே!
துய்யபெற் றோர்களும் சிந்தையி னில்தெளி வுற்றனரே! (85)

மோனச பாபதி ஞானவ ரோதயர் மெல்லியலிற்கே
ஆன பெற்றோர்தமக் காமியல் நல்லுரை கள்நவின்றே
வானமு தும்உயர் போனக மும்தந் துபசரித்தே!
ஆனகம் தேனகம் ஆகிட வேஅறம் செய்தனரே! (86)

மௌவல் மணம் கமழ் சன்னிதி நின்றவர் வேண்டிடவும்
செவ்வை நெறிக்கவர் சேர்ந்திட வேண்டுவ செய்தனரே!
முவ்விய லாலும் முதுபெருங் குரவர்கள் சம்மதமாய்
பவ்விய மாய்விடை பெற்றனர் ஆசீர் உற்றனரே! (87)

குறிப்பு : மௌவல்-மல்லிகை; முவ்வியல்- மனம், மொழி, மெய்;
பவ்வியம்- பணிவு

தலைவர் உரை

யமுனைந திக்கரைக் கண்ணணோ டாடிய கோபியிவள்
எமதுணர் வில்கலந் தின்புறு பண்பினள் இன்னவளே
தமரவர் சுறறமு மெய்வழி சார்ந்திடச் செய்தனளே!
உமையவள் சிவனுக் காகின போலெமக் காகினைளே! (88)

தலைவி உரை

யானென தில்லையெலாமும தென்றறிந் தேனரசே!
தானென வந்தவர் கானவர் தங்களைத் தாமுணர்ந்தார்
கோனவ ரே!யெனைக் கொண்டவ ரே!எனக் குற்றவரே
யானினி இல்லறம் செய்திட நல்வரம் வேண்டுதுமே! (89)

தலைவர் உரை

யூகமிதற் இனி வேண்டுதல் சுத்தய தார்த்தமதே
ஏகனுக் காகிட நல்வழி நல்கிடும் நன்மணியே!
பாகமுளாளெனும் பார்பதிபோலெனைப் பற்றியதால்
சோகமும் தாகமு மென்று மிலாதிரு அஞ்சுகமே! (90)
யோகியர் யாகம் புரிபவர் வேட்பது நித்தியமே!

சோகமி லாநெறி மெய்வழி என்றுசு கித்திருநீ!
ஆகமம் ஆரணம் மாமறை யாவும் புகழ்ந்திடுமிப்
பூகயி லாயமாம் பொன்னரங் கையரைப் போற்றினரே! (91)

யௌவன மாகவே என்று மிருந்திடு வாயினிதே
செவ்வை நெறியிது சேர்வழி ஓர்வழி மெய்வழியே!
எவ்வன மாயினும் துன்பமுறா நெறி இவ்வழியே!
இவ்வன மிங்கு இருந்திட வேண்டி இறைஞ்சினளே! (92)
குறிப்பு : யௌவனம்-இளமை

தலைவி இல்லறத் திருத்தல்

வளவர சர்மெய் வழிமுதல் வர்தம் மனையரசி
இளங்கலை மாதுத் யோவனச் சோலையில் இங்கிதமாய்
உளமுடல் சொல்மூன் றானுமே மெய்யாய் உவந்தினிதே
வளமுடன் போற்றியே தெய்வத்தின் தன்னருள் பெற்றனளே! (93)

தலைவி பொங்கல் கொண்டாடுதல்

வானவர் கோன்அவ தாரத் திருநாள் மாட்சிமிகு
தேன்கனி கோளரி சாலையர் பொங்கல் படைத்தினிதே
பானைப் பலியிடும் காணும் பொங்கல்எனும் முந்நாளினும்
வான்குல சந்ததி யரொடும் சேர்ந்து கொண்டாடினளே! (94)

பங்குனித்திருவிழா கொண்டாடுதல்

விண்ணவர் வான்தனி கைமணி வள்ளல் தமைநேர்ந்து
பண்ணியம் கேழ்வர கப்பமும் தேன்பால் சமர்ப்பித்து
கண்ணிய பிரம்ம உபதே சம்பெறு திருநாளை
வண்ணமார் தேவர் அனந்தர்க ளோடும் கொண்டாடினளே (95)

வைகாசித் திருவிழா கொண்டாடுதல்

வீறுயர் வானக மேய்ப்பரே பண்டை நன்நாளினிலே
பேறுடை ஆடுகள் மேய்ப்புப் பணிசெய்த அதன்பின்னர்
ஏறினர் பாசுப தத்தவம் செய்தனர் அதன்விளைவால்
மாறிலர் பன்னிரு சன்னதம் பெற்றதைக்கொண் டாடினளே (96)

பிச்சையாண்டவர் திருவிழா

வெள்ளையன் வெஞ்சமர்க் காலயம் தனையீந் தெம்பெருமான்
தெள்ளிதின் ஊறலாம் மலைசார் திங்கிருந் தாள்காலம்
உள்ளினர் தம்மக்கள் செயும்பா வங்களைப் பிச்சைகொண்டே அள்ளியே வான்வரம் அருளிடும் நன்னாள் கொண் டாடினளே (97)

கார்த்திகைத் திருவிழா

வேதியர் கார்க்கும்தீ கைக் கொண் டவர்வா னருளாளார்
ஜோதியர் திருநா கார்த்திடும் ஜீவர்கள் உய்வுறவே
சாதிம தங்களை ஒன்றென ஆக்கும் திருநாளில்
மாதினி யாளெழில் தீபங்களேற்றிக் கொண்டாடினளே! (98)

தலைவர் திக்விஜயம் செய்தல்

வையகம் வானவர் வந்துறு காலம் மக்களிடையே
உய்யவே னற்பதி ஊர்நக ரெல்லாம் அன்பினொடே
ஐயரும் திக்விஜ யம்செய் தாருயிர் காத்தனரே
எய்தரும் மாவரம் ஈந்திட மெய்வழி ஓங்கியதே! (99)

வௌவிடு வெங்கலி மக்களைச் சீர்கெடச் செய்திடுகால்
செவ்வியர் சீர்கரம் கோளரி வான்கொடு சேதித்து
திவ்வியர் ஆக்கிடு வான்கொடை நல்கிடும் நானிலத்தே
அவ்வகரம் கொடு அறம்புரி ஆற்றலர் என்அரசே! (100)

தலைவர் விராட்தவம் ஏவல்

ஆதியர்அம்புவி தன்னிலே செங்கோ லோச்சிடுநாள்
வேதித்து வெங்கலி தீர்த்துமே மெய்யுக மும்படைத்து
சீதனம் ஒன்றே குலம்மதம் என்றே நிலைநிறுத்தி
வேதியர் மேனி மறைத்து விராட்தவம் ஏகினரே! (101)

தலைவி கலங்கல்

நீதியர் நற்றிரு மேனியின் நேர்தரி சனையில்லாள்
மாதினி யாளுளம் வெம்பினள் மிக்கக் கலங்கினளே!
ஏது புரிவது எங்ஙனம் வாழ்வது என்றறியாள்
வேதியர் தன்னை நினைந்து நினைந்து மருகினளே! (102)

தலைவர் உணர்வுறுத்தல்

பொன்னரங்கண்ணல் இன்னவள் தன்னை அழைத்தினிதே
என்னை நினைந்தெழு என்னை நினைந்தெனையே தொழுவாய்
என்னைநீ வந்தடை வாயிது திண்ணம் மகிழ்ந்திருநீ
என்னுடைய வேதம் படிஉரைப் படிநட அதுதவமே! (103)

தலைவி உணர்தல்

தன்னுயிர் நாயகர் உரைகேட் டிளங்கலை மாதுநல்லாள்
அன்னவர் புகழ்புரி செயல்தனில் தன்னையே ஆட்படுத்தி
என்னவர் என்னுள் அன்னவ ருள்நான் எனஇனிதே
மன்னவரைப் பிரியாதுறை யும்உணர் வுற்றனளே! (104)

மறலியை வெல் வருக்கக் கோவை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!