திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/038.ஊறல்மலைக் குறமங்கை
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
38. குறத்திப் பாட்டு
தொகுஇலக்கணம்:-
“குறவஞ்சி” என்பதைக் குறித்திப்பாட்டு என்றும் கூறுவர். குறத்தி குறி சொல்லும் மரபை உட்கொண்டு எழுந்த இந்த இலக்கியத்தில், தலைவர் ஒருவரது உலா, அதனைக் கண்ட ஒரு தலைவியின் காதல், அத்தலைவிக்குக் குறத்தி குறிசொல்லுதல், குறவன் குறத்திக் காதல் முதலிய நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. வெண்பா, அகவல், விருத்தம் முதலிய பாக்களோடு சிந்து, கண்ணி முதலியனவும் விரவிய நாடகத் தமிழாக அமைந்தது இந்நூல். திரிகூட ராசப்ப கவிராயர் இயற்றிய குற்றாலக்குறவஞ்சியைப் பின்பற்றி இவ்விலக்கியம் இயற்றப்பெற்றது.
இறப்பு நிகழ்வெதிர் வென்னுமுக் காலமும் திறம்பட உரைப்பது குறத்திப் பாட்டே - பன்னிருபாட்டியல் 336
எனவரும் ஈரைந்துழத்திப் பாட்டே - பன்னிரு பாட்டியல் 335
குறத்திப் பாட்டும் அதனோரற்றே - பன்னிரு பாட்டியல் 218
என் ஆத்ம காம நாயகராகிய பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் இந்நூலின் பாட்டுடைத் தலைவர். இந்நூலின் பெயரைச் சற்று மாற்றி ஊறல்மலைக் குற மங்கை என வழங்கியுள்ளேன்.
ஊறல்மலைக் குறமங்கை
காப்பு
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
அனைத்தையும் படைத்துக் காத்து
அருள்முழு முதல்வர் நற்றாள்
தனித்தலை மைமெய்த் தெய்வம்
சாலைஆண் டவர்கள் பொற்றாள்
தனைத்தந்து எனைக்கொண் டாளும்
தருமர்மென் மலர்த்தாள் போற்றி!
வினைபவம் கடத்தும் எங்கோன்
விமலர்பா தங்கள் காப்பே!
(1)
நூல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
ஒருதனித் தலைமை முழுமுதற் பெருமான்
இருவினை கடத்திமும் மலமும்
வெருவிட நான்கு வேதமும் அருளி
ஐம்மணி துலங்கிட ஆறு
திருபுரி மதில்சூழ் ஏழ்நிலை மாடத்
தேற்றிஎட் டாநிலை காட்டி
வகுத்திடும் ஒன்பான் கோளமல் கடத்தும்
மாதவர் தாள்உயிர்ப் பத்தே
(2)
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
பத்தொடு ஒன்றாய் என்னைப்
பதமலர் தன்னில் ஏற்ற
சித்தர்தம் தலைவ! என்னில்
சேதம்நான் காகி டாமல்
வித்தக ஈறா றீந்து
விளைபதி னாறாய் வாழ
எத்திய பொற்றாள் பற்றி
என்னுயிர் களிக்கும் மன்னோ!
(3)
என்னுயிருக் குயிரான என்சாமி
எனதுதுரை அரசே போற்றி
பொன்னொளிர்மெய் மதிமணித்தாள் பிறவாழி
கடத்தும்புணை யதனி லேற்றி
இன்னமுதம் வழங்கியருள் அன்னாய்என்
அத்தா!சற் குருவே போற்றி
என்னிதய மலர்நிலைத்த இறைதயவே
தஞ்சமுற்றேன் சரணம் காப்பே!
(4)
நூற் பயன்
இதம்புரிநம் முயிர்த்தோற்றம் இயல்புமுடி
பனைத்தையுமே இனிது காட்டி
மதம்சாதி சமயமெல்லாம் வந்தவர
லாறதனின் பயன்கள் காட்டி
அதம்புரியும் மறலியின்கை தீண்டாத
அமலவாழ் வதனி லாம்மெய்ப்
பதமருள்வார் பரமரெங்கள் பொன்னரங்கர்
பாதமலர் பற்றி உய்வாம்
(5)
எண்சீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
ஒக்கநின்று ஓங்குபுகழ் உரைசெய்வோரும்,
உடனிருந்து உளமகிழ்ந்து உயிர்பூ ரிக்க
எக்களித்தெம் பெருமானார் இயல் வேதங்கள்
இனிதிசையோ டின்பமிக ஓது வோரும்,
பக்கநின்று கேட்போரும் பரமர் நாமம்
பக்தியுடன் பரவசமாய் உரைக்கும் பேரும்
துக்கவுடல் துயர்நீங்கித் திருமிக் கோங்கத்
துரியநிலைப் பரிசுபதம் பெறுவர் காணே
(6)
அவையடக்கம்
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
பாமரர் தென்பாங் கோசை
பாவலர் ஏற்றல் போலும்
தோமுறு சிறுவர் ஆடல்
துறைவலார் நயத்தல் போலும்
ஆமனு மகனார் தெய்வ
அருட்புகழ் போற்றும் இந்நூல்
சேமமார் அனந்தர் நல்லோர்
சிந்தை நன்கேற்கும் மன்னோ!
(7)
கட்டியங்காரன் வருகை
எட்டிரண் டறிவித் தெட்டா
நிலைதனக் கேற்றும் ஐயர்
மட்டிலாப் புகழ்மிக் கோங்க
வருகைசெய் நன்மா ராயக்
கட்டியங் கூறப் பஞ்ச
கச்சமும் கைக்கோல் சீராக்
கட்டி கட்டியங் காரன்தான்
கனிவொடு வந்தானன்றே!
(8)
கட்டியங் கூறல்
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
எண்ணரிய சன்னதங்கள் இலங்குதிருப்
பொற்கரத்தார் சாலைத் தெய்வம்
விண்ணகத்தை மண்ணகத்தி லிறக்கிவைத்து
மெய்வழியால் மனுக்க ளுய்யப்
பண்ணகத்தார் அருள்வருகை பண்ணுகின்றார்
தரிசனையாம் பரிசு வாங்க
நண்ணுமினோ நானிலத்தீர் நற்றருணம்
நற்றருணம் நவில்கின் றேனே!
(9)
எண்சீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
உலகனைத்தும் ஆண்டாலென் உயர்வானில் பறந்தேகோள்
அனைத்திலுமே தன்னாட்சி நிறுவி னாலும்
கலகமிடும் எமனமலைக் கடந்திடவும் கூடுவதோ
காசினியின் மாந்தர்களே கர்த்தர் எம்மான்
அலகில்விளை யாட்டுடையார் ஆண்டவர்மெய் சாலையண்ணல்
ஆருயிர்கள் உய்விக்கும் தயவால் நித்ய
நலமருள்வார் நான்மறையின் தெளிவருள்வார் நல்வரங்கள்
நல்கிடுவார் பெறவாரும் நாட்டி னீரே!
(10)
அத்திபுரத் தாண்டருள்செய் அண்ணல்வரு கின்றார்
அனந்தர்குலத் தாதையெம தையர்வரு கின்றார்
வித்துநா யகமெங்கள் மெய்யர்வரு கின்றார்
வேதவே தாந்தமுதல் விமலர்வரு கின்றார்
நித்தியமெய் வாழ்வருளும் நீதர்வரு கின்றார்
நீதிநட வாதியர்மூ லழகர்வரு கின்றார்
எத்திசையும் மெய்வழியே இலங்கவரு கின்றார்
எக்காளம் எடுத்திசைத்தோம் இனிதறிமின் உலகீர்
(11)
சத்தியமெய்ப் பிரம்மகுலத் தேவர்வரு கின்றார்
சாதிகளின் கர்த்தர்தயை யருளவரு கின்றார்
முத்தியருள் முழுமுதல்வா னமுதர்வரு கின்றார்
முனியரசு தனிக்கருணை வழங்க வருகின்றார்
சித்தமிசைக் குடிகொள்மெய்த் தெய்வம்வரு கின்றார்
சாவாவ ரந்தருந்தே வாதிவரு கின்றார்
இத்தரையில் மெய்குண்டம் இலங்கவரு கின்றார்
எக்காளம் இசைக்கின்றோம் இனிதறிமின் உலகீர்!
(12)
விந்தைமிகு கற்பகர்மெய் விளங்கவரு கின்றார்
விளம்புமத குலம்பேதம் வீயவரு கின்றார்
எந்தையருட் பெருஞ்ஜோதி இனியர்வரு கின்றார்
இன்பநடம் எம்முயிருட் புரியவரு கின்றார்
கந்தருவ மணம்புரிந்த கணவர்வரு கின்றார்
கனிந்தருள்பே ரின்பங்கொப் பளிக்கவரு கின்றார்
துந்துமியும் எக்காளம் தொடர்ந்திசைத்தோம் உலகீர்!
துன்பமறும் இன்பமுறும் சுகம்பெறுவீர் உலகீர்!
(13)
ஆதித்தாய் அருட்தந்தை ஆளவரு கின்றார்
அமுதர்குல குருதெய்வம் அழகர்வரு கின்றார்
நீதியொரு திருமேனி நித்யர்வரு கின்றார்
நினைவகலா துறையரசு நேயர்வரு கின்றார்
மாதிறைசூல் மணிமறைமெய்ம் மொழியர்வரு கின்றார்
மதிநிறைவா னமுதுகுமெய் வழியர்வரு கின்றார்
பூதலத்தே கயிலையர்பொன் னரங்கர்வரு கின்றார்
பொங்கியிசை எக்காளம் பூரித்தோம் உலகீர்!
(14)
சுத்தசிவ நன்மார்க்கர் தெய்வம்வரு கின்றார்
துலங்கமறை விளங்கஅருட் ஜோதிவரு கின்றார்
வித்தில்லா வித்தெனும்மெய் வேந்தர்வரு கின்றார்
விண்ணரசு நீதிச்செங் கோலர்வரு கின்றார்
நத்தியபேர்க் கின்பமருள் நாதர்வரு கின்றார்
நாயகர் சாயுச்யபதம் நல்கவரு கின்றார்
உத்யோவ னச்சோலை ஓங்கவரு கின்றார்
உவந்திசைத்தோம் எக்காளம் உய்வடைவீர் உலகீர்!
(15)
குருகுலமெய் வரதர்மணி கொண்டல்வரு கின்றார்
கோடிகடந் தைஸ்வர்யகு பேரர்வரு கின்றார்
பெருகுமதி யமுதநதி பொங்கவரு கின்றார்
போதமருள் வேதத்திரு மேனிவரு கின்றார்
கருகவினை பவம்கடத்தும் கதியர்வரு கின்றார்
கர்த்தாதி கர்த்தர்நமைக் காக்கவரு கின்றார்
அருணயந்த அனந்தர்குல மிலங்கவரு கின்றார்
ஆர்ந்திசைத்தோம் எக்காளம் அகம்களிப்பீர் உலகீர்!
(16)
தில்லையமு தளித்தருள்செய் தென்னர்வரு கின்றார்
தேசிகர்பொற் றாள்நடஞ்செய் தேவர்வரு கின்றார்
இல்லையெனா தனைத்தும் நமக்கீய வருகின்றார்
என்சாமி எனதுதுரை இனிதுவரு கின்றார்
தொல்லையெமன் துயர்கடத்தும் துணைவர்வரு கின்றார்
தூயமறை நமக்கருளும் தூயர்வரு கின்றார்
எல்லைகடந் தின்பமுறு என்னருமைத் தோழி
எக்காளம் துந்துமிகள் எடுத்திசைத்தோம் உலகீர்!
(17)
அல்லலறுத் தெனையாண்ட ஐயர்வரு கின்றார்
அன்புருவர் அருட்கடலென் அமுதர்வரு கின்றார்
கொல்லெமனின் கொடுமைகெட கோமான்வரு கின்றார்
கோதறுவா னிதியர்கரு வூலம்வரு கின்றார்
மெல்லெனவந் திதயம்கொள்ளை கொண்டுவரு கின்றார்
வேதாக மங்கள்புகழ் மெய்யர்வரு கின்றார்
இல்லையிவர்க் கீடிணையென் றெக்களித்துப் பொங்கி
எக்காளம் துந்துமியும் இசைக்கின்றோம் உலகீர்!
(18)
கரணாவஸ் தைதவிர்க்கும் கடவுள்வரு கின்றார்
கதிநீரென் றோலமிடில் காக்கவரு கின்றார்
மரணாவஸ் தைகெடுக்கு மாயன்வரு கின்றார்
மாதவர்மெய் வழித்தெய்வம் வருகைதரு கின்றார்
அரன்அயன்மால் ஓருருவாய் ஆகிவரு கின்றார்
அளவில்மெய்ப் பதம்வழங்கும் அணியர்வரு கின்றார்
சரணாக திக்குதயை தருகவரு கின்றார
சிந்தைகனிந் தெக்காளம் சிறந்திசைத்தோம் உலகீர்
(19)
அறவாழி அந்தணரெம் அத்தன்வரு கின்றார்
அழிவில்நிதி அமுதமழை பொழியவரு கின்றார்
இறவாத வரமருள்செய் யிறைவர்வரு கின்றார்
இணையில்தபோ பலம்வழங்கும் இனியர்வரு கின்றார்
பிறவாநெ றிக்கரசர் பெரியர்வரு கின்றார்
பெம்மான்மெய் வழிதெய்வப் பிரபுவரு கின்றார்
துறவோர்தூ மதிமலரார் தேவர்வரு கின்றார்
துந்துமியும் எக்காளம் தொடர்ந்திசைத்தோம் உலகீர்!
(20)
திருவருகை காணவந்த கூட்டம்
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
எழுந்தருள் எம்மான் சாலை
ஆண்டவர் அருள்பெற் றுய்ய
எழுபரு வத்தோர் ஆண்பெண்
யாவரும் திரண்டு மொய்ப்ப
எழுகடல் பொங்கி னாற்போல்
இயன்றவப் பெருக்கம் காண
எழுந்தனர் வானோர் விண்ணில்
இறைதரி சனம்பெற் றாரே!
(21)
பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் விஜயம்
பல்லவி
விஜயம் செய்தனரே - சாலை தெய்வம்
விஜயம் செய்தனரே
அனுபல்லவி
விஜயம் செய்தனர் விமலர் நாயகர்
வியன் அரன்அரி விளை ஒருவுரு
நிஜநிதி தர மனுவரம் பெற
நிலமிசை எழில் குருதிரு மணி
(விஜயம்)
சரணங்கள்
அனந்தராதியர் அகிலவர்களும்
அணிதிகழ்தரு அரிவை மார்களும்
மனந்தனிலிறை அருள்நயந்திடும்
மறையவர்களும் மன்னவர் பண்ணகர்
இனந்திருவளர் இளஞ்சிறார் களும்
எண்ணரும் விண்ணவர் தேவரிஷிமாரும்
தினந்தரும் ஞானத் தனந்தரும் எங்கள்
தேவதே வேசர் திருமிக வோங்கி
(விஜயம்)
முக்கோடி தேவர்விண் ணிருந்து வாழ்த்திட
மூவுல கோரும் வணங்கித் தொழுதிட
எக்காளம் துந்துமி இசைந்த சைந்திட
இன்னிசை வல்லார்கள் கீதமி சைத்திட
செக்கர்வா னென்னச்சி ரோமகு டம்புனை
தேவர் அனந்தர்கள் தோத்திரம் பாடிட
மக்கள் குழாம்கட லலையாய்ப் பெருகிட
வானாடர் வாருமென் றேவர வேற்றி
(விஜயம்)
வேறு
பூரணகும்பங்கள் பொன்னாரணி மாதர்
பொன்னரங் கையர்முன் ஏந்தவே
ஆரணவேத கலைக்கதிபர் எழில்
ஆர்ந்துகண் டோமென்று மாந்தவே
தோரண மாலைகள் வீதிய லங்காரம்
சொர்க்கப் பதியதும் தோற்கவே
வாரணங்கள் பரிவாகன மாதிய
வரிசை யணிவர வேற்கவே
(விஜயம்)
சந்திர வட்டக் குடைபிடிக்க அதைச்
சார்ந்தால வட்ட விருதுகளும்
இந்திரா திதேவர் வெண்கவரி வீச
இன்பங்கொண் டெல்லோரு மேவணங்க
மந்திர மோதவும் வாழி ஜெயஜெய
வாழியென்றே வாழ்த்துக் கூறவே
எந்திர வள்ளலின் தரிசனை கண்டோர்கள்
இதயம் களிப்பினில் மீறவே
(விஜயம்)
மத்தளம் பேரிகை நாதசுரம் குழல்
வீணை கொம்புதம்பூர் இசைக்கவே
ஒத்துத்தா ளம்மணி கின்னரம் கிண்கிணி
ஓசையிடக் கொடி அசைக்கவே
சித்தர்கள் முத்தர்கள் தேவர்கள் கர்த்தர்கள்
சேவித்துப் பண்ணிசை மாணவே
அத்தன்எங்கள் சாலை ஆண்டவர் ஆரெழில்
ஆயிரம் சூரியர் நாணவே
(விஜயம்)
ஆண்டவர் மான்மியம் அன்போடொருபுடை
ஆருயிரினிக்க மொழியவே
மாண்டொழி மாந்தர் மனந்தெளிந் துய்ந்திட
வாக்கிய அமிர்தம் பொழியவே
ஈண்டிசைப் பண்கனி தேடுகூ டகத்தை
இன்பம் பெருகிட நடிக்கவே
தீண்டினும் சிந்தை களிப்புறும் வேதாந்தம்
செல்வர் மகிழ்ந்து படிக்கவே
(விஜயம்)
பாவாணர் வாழ்த்துக்கள் பாடி வரவேற்கப்
பாதம்பணிந்து பராவவே
மூவாமு தல்வர்முன் கும்மிகோ லாட்டங்கள்
வீரர்சி லம்பம் உராவவே
ஆவாவென் றெல்லோரும் ஆர்வமுடன் நோக்க
ஆரணங்கு நடம் பயிலவே
தேவாதி தேவர் திருநாமம் போற்றியே
சிந்தை களித்தெல்லாம் வந்தனை செய்யவே
(விஜயம்)
மாமறையாவும் விளக்கம் பெறுவோமே
மாண்புறு வோமெனக் களிக்கவே
ஓமுத லாமந்ரம் யாவும் உருப்பெற்று
ஒங்கிடு வோமென்று துளிர்க்கவே
மாமதங் கொண்டலை சாதிசமயங்கள்
மயக்கற வழக்கறச் செழிக்கவே
சேமம்நிறைந்து செகத்தில் சமரசம்
சீர்சிறந் தோங்கியெக் களிக்கவே
(விஜயம்)
மெய்வழி யாலிந்த வையகம் உய்ந்திட
மெய்வரங்கள் தந்து அருளவே
ஐயர் தரிசனை கண்டு மகிழ்ந்திட்ட
அன்பர்கள் உள்ளம் உருகவே
பொய்யருத்தம் சொல்லி மக்களை ஏய்த்திடும்
போலிப்பா சாண்டியர் மருளவே
வையக மீதினில் வஞ்சகம் செய்திடும்
மந்திர வாதிகள் சுருளவே
(விஜயம்)
தம்மை யுணர்ந்து தலைவரைக் கண்டவர்
தானவர் வானவர் கூடியே
இம்மை மறுமைப் பயனடைந் தோமென
எக்களிப் பால்பூரித் தாடியே
செம்மை நலஞ்சேரும் சாகாவ ரம்தாரும்
தேவே எனவேண்டிப் பாடியே
அம்மையப் பாகுரு தெய்வமே என்றேற்றி
ஆண்டவர் திருவடி நாடியே நிற்க
(விஜயம்)
சாகாவரம் ஒன்று உண்டோ என்போருக்கு
சத்தியம் உண்டெனச் சாற்றவே
ஏகாப் பெருவெளிக் கேற்றிப் பேரின்பத்தை
எய்த மனுமகன் ஏற்றவே
போகாப் புனல்சாகாத் தலையும் வேகாக்காலும்
பெற்றுப் பிறவியை மாற்றவே
தேகமுத்தியுண்டு ஜீவன்முத்தி யொடு
தந்தோம் பெற்றோமென்று போற்றவே
(விஜயம்)
கண்டோம் கண்டோம் எங்கள் கர்த்தாதி கர்த்தரைக்
கண்பெற்ற நற்பயன் பெற்றதே
கொண்டோம் கொண்டோம்அருள் ஆரமுதம் வாழ்வின்
கோதற நல்வரம் உற்றதே
பண்டே பழுத்த மறையோர் திருவுரு
பாண்டிய ராயுரு வுற்றதே
அண்டர்க்கரியவர் தொண்டற் கெளியவர்
அல்லலறுத்திட வெற்றிவேல் கைக்கொண்டு
(விஜயம்) 23)
அருள் வருகை கண்டு அன்பர்கள் ஆர்த்தல்
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
எண்டிசை மேல்கீழ் எங்கும்
இணைநிக ரில்லா எங்கோன்
மண்டுமெய்ப் புகழார் சாலை
:மாதவர் வருகை கூர்தல்
கண்டுவந் தன்பர் கூட்டம்
கடலென ஆர்ப்பரித்து
விண்டுவிண் மண்குலுங்க
விளம்பினர் போற்றி மாதோ!
(24)
வாழ்த்தி வணங்குதல்
சமரச வேத நாதரே வாழிய
வாழிய என்றார்ப்ப
சாதிகளின் கர்த்தாவே வாழிய
வாழிய என்றார்ப்ப
இமையவர் கோனே ஜயஜய வாழிய
வாழிய என்றார்ப்ப
எம்முயிர் நாயக ஜயஜய வாழிய
வாழிய என்றார்ப்ப
மெய்வழி நாமநன் நாதமே ஜயஜய
வாழிய என்றார்ப்ப
மெய்வழி ஆண்டவர் திருவடி சரணம்
வாழிய என்றார்ப்ப
உய்வழி தந்தெமை ஆளுடை நாயக
வாழிய என்றார்ப்ப
ஒருதனி முதல்வா உத்தம சத்திய
வாழிய என்றார்ப்ப
நீதிச் செங்கோல் வாழிய வருக
வாழிய என்றார்ப்ப
நித்திய மாதவர் சத்திய தேவர்
வாழிய என்றார்ப்ப
ஆதி நாயக தேவதே வேசா
வாழிய என்றார்ப்ப
அந்நாட் டரசே ஜயஜய வாழிய
வாழிய என்றார்ப்ப
நமதுநாற் காரண ராஜ நிலையே
வாழிய என்றார்ப்ப
நமனிடர் கடத்தும் ராஜ ராஜரே
வாழிய என்றார்ப்ப
எமதித யங்கவர் கள்வரே ஜயஜய
வாழிய என்றார்ப்ப
இன்பவடி வந்தரு இறைவா ஜயஜய
வாழிய என்றார்ப்ப
மெய்வழி ஆண்டவர் தேவ சன்னத
முத்திரைக் கரம் வாழி
மெய்வழி ஆண்டவர் திருக்குழாம் ஓங்க
ஓங்கவே என்றார்ப்ப
மெய்வழித் திருக்குலம் பரிசுத்த மாக
ஓங்கவே என்றார்ப்ப
மெய்வழி தெய்வமே முத்தி பூரணம்
வாழிய என்றார்ப்ப
தென்னா டுடைய சிவனே போற்றி
வாழிய என்றார்ப்ப
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி
வாழிய என்றார்ப்ப
இந்நாட் டினிலே எமபடர் மாற்றும்
இறைவா ஜய போற்றி
அந்நாட் டினுக்குவித் தெடுக்க வந்த
அரசே ஜய போற்றி
என்னுயி ருட்கலந் தினிக்கும் நாயக
வாழிய ஜய போற்றி
இன்பநி லைவிளங் காதியே துணையாம்
வாழிய வாழியவே
ஒன்றே குலமாம் ஒன்றே இறைவன்
என்றே நிலை நாட்ட
ஒருதனித் தலைவர் வருகைதந் தருள்வார்
வாழிய வாழியவே
நன்றே மெய்வழி நானில மெங்கும்
நாளும் நிலை நிற்க
நாதா அருள்வீர் வரமே தருவீர்
ஜயஜய வாழியவே
(25)
விஜயம் காண வந்தோர் உரை
கதிரோனோ என்னில் வெம்மைக் கதிர்வீச்சு இல்லை ஞானக்
கதிரோனிக் காட்சிதரும் புதியோராய் வந்தார்
மதிதானோ என்னில் அங்கு மதிகொள் களங்க மில்லை
மதியோங்கு ஞானமாலி கதியுயிர்க் கென்பார்
மதிசூடு சிவனோ என்னில் மாதொரு பாகத்தில்லை
மணியார் ப்ரகாசவேத அணிபூண்டார் ஆனார்
விதிசெய்நான் முகனோ என்னில் ஒருதிருமுகமே கொண்டார்
வினைஓர் தரிசனையில் பிணிபோலே நீங்கும்
(26)
அரிதானோ என்னில் மேனி கரியோனும் இல்லை பாலின்
ஆழிஅரவில் மெய்ம்மை வாழ்ந்திடலானார்
தரித்தார்மும் மூர்த்திகரம் விரித்தார்மெய் யோங்குவரம்
பிரியார்நல் லாரைஎன்றும் தரியார் பொல்லாருள்
மரியாவரம் மிக்கீயும் பெரியோர் உயிர்க்குத் தாயாம்
சரியாம் மெய்ந்நிலை வாசிப்பரியேறும் தேவர்
துரியாதீதத்தில் ஓங்கும் திரியாமனத்தில் தேங்கும்
துணையாம் பவம்கடத்தும் புணையாகும் தெய்வம்
(27)
அருவமாம் தெய்வம்குரு உருவம்மெய் வழிவிண்டார்
அருட்செல்வம் வழங்கிய பொருளாளர் ஆனார்
கருமுதல் கடந்தவள்ளல் காணில் உயிருள் துள்ளல்
கடைபாற் கடலமுதம் உடையோருமானார்
வருகும் கிருபைநிதி பெருகும் கருணை நதி
வளையாமெய்ச் செங்கோல்செய்யும் சளையாத்தவத்தார்
கருகும் பவவினைகள் உருகும்இதயம் அன்பால்
ஒருதிரு தரிசனை இருவினை போக்கும் (28)
ஆரியர் கலைகள்நாதர் நேரியர் ஆயிரமாம்
சூரியர் இணையில் மெய்ம்மைக் காரியர் இவரே
சீரியர் செஞ்சொல்லாளர் பூரியர் காணா மாட்சி
வாரிதி பொங்கும்மதிக் கூரினர் இவரே
தூரிகை தொட்டெழுதா ஓவியம் சொல்லடங்காப்
பாரில் நிகரில்லாத காவியம் இவரே
பேரியல் பாரும்சிரத் தார்புனை மாதவர்காண்
நேரினத்தார்க் கென்றென்றும் தேறியதலைவர்
(29)
சண்முகவடிவு விஜயம் காண வருதல்
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
வண்ணமின் னெழிலாள் சொர்ண
வகைவகைப் பணிகள் பூண்டு
கண்டவர் வியந்து நோக்கக்
கவின்மிக அலங்கரித்து
தண்பொழில் மயில்போல் சாயல்
சண்முக வடிவு என்பாள்
எண்டிசை புகழார் எம்மான்
எழில் விஜயம் கண்டுற்றாள்
(30)
காஞ்சி நகர்ப்பட்டுச் சேலை - அஃதோர் சோலை - அதைக்
கட்டிவந்தாள் இது காலை
காஞ்சனை சண்முக வடிவாள் - இன்பவடிவாள் - இரு
கண்புரு வங்களும் வடிவாள்
(31)
கண்களிரண்டுமே கயலே - காணில் மயலே - துஷ்டக்
கள்ளர்க் கதுபெரும் புயலே
பெண்களிலே இவள் தங்கம் - எழில் அங்கம் - தீய
புல்லர்க் கிவளொரு சிங்கம்
(32)
கொவ்வை இதழ்மலர் வாயினாள் - அன்புத் தாயனாள் - இன்பக்
கன்னித் தமிழ்க் கிவள் சேயனாள்
துவ்வெண் மதியெழில் முகமே - காணில்சுகமே - இவள்
சொல்மொழி கொஞ்சு அஞ்சுகமே
(33)
சிற்பி செதுக்காத சிலையே - இன்பநிலையே - இந்தச்
செல்வியாள் முத்தமிழ்க் கலையே
பொற்புயர் சந்தனமேனி - தமிழ்த்தேனி - தேடும்
போதம் செய்யும்தவ ஞானி
(34)
வேறு
அழகு பொங்குவடி வுடைய நங்கையிவள்
செங்கையாள் - அந்த
அரம்பை ஊர்வசிக்கும் ரதிக்குமே இவளோர்
தங்கையாள்
பழகு செந்தமிழில் இலகு நூல்கள் பல
கற்றவள் - மிகப்
படித்த போதும் மனம் தடித்திடாத டக்கம்
உற்றவள்
மெழுகு போலிளகு மென்மை அன்புடைய
பெண்டிவள் - தமிழ்
மேதையானவரும் வியக்கச் சொற்பொழிகற்
கண்டிவள்
ஒழுகு பண்புகளில் உயர்வு நேர்மைமிகு
பணிவினாள் - கூறும்
உரையில் தெளிவும் மாசில் உணர்வில் நிறைவுடைய
துணிவினாள்
(35)
கள்ளமின்றிப் பழகன் பர்கட்கு நல்ல
சேயிவள் - சற்று
கபடு நோக்குடைய கசடர் தம்மைஎரி
தீயிவள்
தெள்ளு தேன்தமிழில் சிறப்பிலக்கியங்களின்
நூலகம் - கொண்ட
செல்வி இன்னவளின் சிந்தை மெய்ம்மைவிழை
பாலகம்
உள்ளம் இல்லறத்தில் ஒட்டிடாத தன்மை
உடையவள் - நெஞ்சில்
உண்மை நேர்மை பெண்மை ஓங்கு நாற்குணமாம்
படையிவள்
எள்ளும் ஈனர்தமை வெல்லும் வீரமிகு
பேச்சினாள் - இறை
இன்பம் பெற்று இறவாமை கொள்ளமுழு
மூச்சினாள்
(36)
ஆடவர்க்கு நிகர் பெண்களில்லை யெனில்
சீறுவாள் - அதற்(கு)
ஆன சீருரைகள் கூறிச் சான்றுபரி
மாறுவாள்
பாடு பக்திநெறி சார்ந்து தெய்வமறி
தாகத்தாள் - தெய்வம்
பரவும் கூட்டங்களை விரைந்து தேடிநிற்கும்
மோகத்தாள்
கூடு ஞானமொழி கூறுவான வர்சொல்
போற்றுவாள் - என்றும்
கோதிலா இறைமைக் காதல் சொற்பெருக்கம்
ஆற்றுவாள்
வாடிடாத மெய்ம்மை வழியெங்கு எங்கென்று
தேடுவாள் - இறை
மாட்சிகூறும் சொல்லின் ஆட்சி யாளர்தமை
நாடுவாள்
(37)
சேலை ஆசையினும் நூல்களாசை கொள்ளும்
அறிவினாள் - இவள்
சிறிய வயதெனினும் பெரியதகைக் குணத்தின்
செறிவினாள்
மேலை அவ்வை காரைஅம்மை ஆண்டாள் போலும்
ஆகவே - ஞான
வேட்கை கொண்டு வழி தேடித்தேடி யுள்ளம்
வேகவே
கோலப் பொன்னணிகள் இருந்தும் பூணுமாசை
இல்லவள் - மேனி
குலுக்கி மினுக்கித் திரியாத உத்தமியாள்
நல்லவள்
சாலை ஆண்டவர்கள் விஜயம் கேட்டு நெஞ்சம்
ஆர்ந்தனள் - தெய்வ
தரிசனம் கிடைக்க வேண்டுமென்று உள்ளில்
நேர்ந்தனள்
(38)
சண்முக வடிவு தெய்வதரிசனம் கண்டு உவத்தல்
பல்லவி
திருவுரு கண்டனளே - சாலை தெய்வத்தின் - திருவுருகண்டனளே
திருவுரு கண்டனளே சண்முகவடிவு திருவுரு கண்டனனே
அனுபல்லவி
திருவுரு கண்டனள் பெருமயல் கொண்டனள்
அருள்மொழி விண்டஎம் குருமணி கண்டரின் (திருவுரு)
சரணங்கள்
கருமுதல் வந்துமெய்ப் பொருள் மிகத்தந்தவர்
அருமை அனந்தராம் பெருங்குல முந்தையர் (திருவுரு)
பரமன் இவரோ அன்றிப் பிரமர் இவரேதானோ
அரவணைப் பள்ளிகொண்ட ஆதிநாரணர்தானோ (திருவுரு)
தந்தைக் குபதேசித்த விந்தை முருகர்தானோ
சிந்தை கவர்ந்திழுக்கும் சந்த்ரன் இந்திரன் தானோ (திருவுரு)
மந்திர மாயம் செய்யும் இந்த்ரஜாலக் காரரோ
செந்தூரப் பொடிகொண்டு எந்தனுள்ளம் கொண்டாரோ (திருவுரு)
அரசர்க்கரசிவ ரோஅண்டம் புவனமெல்லாம்
முரசு முழக்கி வந்து மூவுலகாளும் தேவோ (திருவுரு)
பரசுகம் தந்தருளும் பரம்பிரம்மம் இவர்தாமோ
திருமுகம் கண்ட கண்கள் திரும்பவில்லையே ஏனோ? (திருவுரு) (39)
தரிசனை கண்டு வியப்பு
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
வணங்கிடும் மக்களோர் பால்
வாழ்த்திடும் சீரோர் ஓர்பால்
இணங்கியே பணிந்து போற்றி
ஏற்றிட விழைவோர் ஓர்பால்
நுணங்கிய அறிவோர் நாதர்
நலம்புனைந் துரைப்ப ரோர்பால்
அணங்கிவை கண்டு சிந்தை
அயர்ந்தனள் வியந்தாளன்றே!
(40)
சண்முக வடிவின் நிலை
எண்சீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
ஈரெட்டு பிராயத்தாள் எழிலார் பெண்ணாள்
இவள்பண்பு மூவெட்டாய்க் காட்டும் நுண்மை
சீரெட்டும் நூலறிவில் நாலெட்டாவாள்
திருமறைகள் பேசுங்கால் ஐயெட் டொக்கும்
நேரெட்டும் இறையுணர்வில் ஆறெட்டெய்தும்
நேரிழையாள் பிறர்போலே விரகம் கொள்ளாள்
பாரெட்டும் விஜயம்செய் பரமர்கண்டு
பதியெட்ட மதியெட்ட விழைந்தாள் மாதோ
(41)
பல்லவி
எவ்வாறு எடுத்துரைப்பேன் - உளத்தில்
எழுகின்ற உணர்வு களை (எவ்வாறு)
அனுபல்லவி
செவ்வானின் கதிரெழுந்த - அழகுத்
திருவுடையார் கண்டுவந்தேன்
ஒவ்வாத சிறுபருவம் - எளியாள்
உளந்தனிலே புகுந்தனரே
உயர் திருவுரு மனுமகனென(து)|r}}
உயிர் கவர்கிறார் இதைப் பிறர்க்கு நான் (எவ்வாறு)
சரணங்கள்
என்னனைய ஏந்திழையார் - போலும்
இயல்பிலளே என் செய்வேன்
என்வயதிற் கிதுதகுமோ - கேட்போர்
எள்ளியெனை ஏசாரோ
என்நினைவினில் பொன்னனையவர்
மின்னெனப் புகுந்தின்னல் தருதல் ::
எவ்வாறு
ஆயிரமாயிரம் மக்கள் - இவர்பால்
நேயமொடு சென்றணைந்தார்
சேயிழையான் சென்றடைந்து
சுகமடைதல் என்றோமோ
திருவுடையவர் தருமகிழ்வதைப்
பெறஉளமிக உருகுதே இதை (எவ்வாறு) 43)
நிலவு விடுதூது
விண்ணகத்தில் நின்றிலங்கும் வெண்ணிலாவே - அன்பாய்
விள்ளுமொரு சேதிகேளாய் வெண்ணிலாவே
மண்ணகத்தில் வந்தநிலா வெண்ணிலாவே - எந்தன்
மாதவர்திருமுகமே வெண்ணிலாவே
வண்ணமுகம் கண்டகண்கள் வெண்ணிலாவே - பின்னர்
மற்றோர் முகம் காண்பதில்லை வெண்ணிலாவே
நண்ணிவந்து தரிசித்தால் வெண்ணிலாவே - உனக்கு
நல்வரங்கள் தந்தருள்வார் வெண்ணிலாவே (43)
என்னுயிரி லேபுகுந்தார் வெண்ணிலாவே - அங்கு
இரவும் பகலுமில்லை வெண்ணிலாவே
பொன்னரங்கர் என்றுசொல்வார் வெண்ணிலாவே - கொண்ட
புருடன் நாமம் சொல்லிடவோ வெண்ணிலாவே
என்னுளத்தில் வெட்கம் கொண்டேன் வெண்ணிலாவே - ஆவல்
எப்படிநான் சொல்லிடுவேன் வெண்ணிலாவே
கன்னலொடு தேன்கசக்கும் வெண்ணிலாவே - எந்தன்
காதலர் மொழிக்கு முன்னே வெண்ணிலாவே
(44)
பார்க்கப்ப ரவசம்காண் வெண்ணிலாவே - வந்து
பாரேன் நீ என்னவரை வெண்ணிலாவே
ஆர்க்கும் திருமுகம்காண் வெண்ணிலாவே - கண்டால்
அப்புறம் நீ செல்லமாட்டாய் வெண்ணிலாவே
தீர்க்கும் பவவினைகள் வெண்ணிலாவே - அவர்
திருமுக தரிசனையால் வெண்ணிலாவே
சீரும் சிறப்பும் கொள்ள வெண்ணிலாவே - இங்கு
சீக்கிரமாய் வந்திடுவாய் வெண்ணிலாவே
(45)
மந்தனம்நான் ஒன்று சொல்வேன் வெண்ணிலாவே - அதை
மனதுக்குள் வைத்துக் கொள்வாய் வெண்ணிலாவே
சிந்தை கவர்ந்த கள்வர் வெண்ணிலாவே - இந்தச்
செகமெல்லாம் படைத்தவர்தான் வெண்ணிலாவே
சொந்தமெனக் காக்கிக் கொண்டேன் வெண்ணிலாவே - இதைச்
சொல்ல வெட்கமாகுதடி வெண்ணிலாவே
உந்தனுக்கு மட்டும் சொன்னேன் வெண்ணிலாவே - இதை
ஒருவருக்கும் சொல்லிடாதே வெண்ணிலாவே
(46)
சொக்குப்பொடி போட்டிட்டாரோ வெண்ணிலாவே - பின்ஏன்
சொக்கிச் சொக்கி விழுகின்றேன் வெண்ணிலாவே
எக்களிப்பு மீறுதடி வெண்ணிலாவே - அவரை
எண்ணுகிற நேரமெல்லாம் வெண்ணிலாவே
பக்கத்திலே நானிருந்து வெண்ணிலாவே - மலர்ப்
பாதம் வருடஆசை வெண்ணிலாவே
சொக்கர்என்றோர் நாமமுண்டாம் வெண்ணிலாவே - எந்தன்
சுந்தரர் பேர் ஆயிரமாம் வெண்ணிலாவே
(47)
பெண்ணொருத்தி தன்விருப்பம் வெண்ணிலாவே - வலியப்
பேசியதாய்க் கேட்டதுண்டோ வெண்ணிலாவே
வண்ணவண்ண மலரெடுத்து வெண்ணிலாவே - மண
வாளருக்குச் சாற்ற ஆசை வெண்ணிலாவே
பண்ணியம் சுவைப் பண்டங்கள் வெண்ணிலாவே - அவர்க்குப்
படைக்க மிகவும் ஆசை வெண்ணிலாவே
வண்ணவண்ணப் பண்ணிசைத்து வெண்ணிலாவே - எந்தன்
மாதவரைப் பாடஆசை வெண்ணிலாவே
(48)
உன்னைஒன்று வேண்டுகின்றேன் வெண்ணிலாவே - எந்தன்
உத்தமர்க்குத் தூதுசெல்வாய் வெண்ணிலாவே
என்னையவர் ஏற்றுக்கொள்ள வெண்ணிலாவே - சற்று
இங்கிதமாய்த் தூதுபோவாய் வெண்ணிலாவே
என்விருப்பம் சொல்லும் போது வெண்ணிலாவே - யாரும்
இல்லாநேரம் பார்த்துச் சொல்வாய் வெண்ணிலாவே
என்னுடைமாலை தருவேன் வெண்ணிலாவே - சாற்றி
எதிர்மாலை வாங்கி வாராய் வெண்ணிலாவே
(49)
காலகாலமாய் நீயும் வெண்ணிலாவே - பல
காதலர்க்குத் தூது போனாய் வெண்ணிலாவே
ஆலகாலர்க்குத் தூதாய் வெண்ணிலாவே - சென்றால்
அழியாவரம் தருவார் வெண்ணிலாவே
கோலமகேசர் அவர் வெண்ணிலாவே - உனக்குக்
குறையா வரம்தருவார் வெண்ணிலாவே
காலமெல்லாம் மறவேன் வெண்ணிலாவே - சென்று
கழல்மாலை வாங்கி வாராய் வெண்ணிலாவே
(50)
சண்முகவடிவின் அன்னையின் ஐயம்
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
சண்முக வடிவு அண்ணல்
சார்விழை வேட்கை மீற
ஒண்முகம் வாடல் ஏற்கும்
உணவதில் வெறுப்பு நாளும்
பண்ணிடும் செயல்கள் மாற்றம்
பழகலில் பேதம் மற்று
எண்ணம் சொல் செயல்வேறாகும்
இயல்புகண் டையுற்றாள்தாய்
(51)
தாய் சண்முகவடிவை வினவுதல்
சொர்ணமே நான்பெற்ற மங்கை - உந்தன்
சிந்தையில் என்னடி சங்கை - கண்கள்
சொரிகிற தேனடி கங்கை - செப்புச்
சிலையேயுன துளமே துயர்
நிலை மேவுதல் மறையாதுரை
வண்ண ரதிக்கு நீதங்கை இன்று
வளையிழந்த தென்னுன் செங்கை (52)
என்ன காட்சி கண்டு வியந்தாய் - அன்றி
எவரை உன்னுள்ளத்தில் நயந்தாய் - நேற்று
இரவில் எதைக்கண்டு பயந்தாய் - இடர்
எதுவாயினும் இதமேயுரை
அதுமேவிடும் வழியோருவம்
ஏற்கும் உணவெல்லாம் கயந்தாய் - உள்ளில்
எப்பொருள் வேட்கையுள்ளியைந்தாய் (53)
கண்ணிலே ஏனடி மருட்சி - பேயைக்
கண்டு வந்திட்டதோ மிரட்சி - உந்தன்
கருத்தில் வந்ததென்ன புரட்சி - தூக்கம்
கலையாதவள் நிலைபோலுள
அலையாதலை உளமேவினை
கட்டழகுத் தங்கம் நில்லடி - எந்தன்
கவலை நீங்க வழி சொல்லடி (54)
என்னத்திற்கு இந்தப் பிணக்கு - உந்தன்
எண்ணத்தில் என்னடி கணக்கு - செய்யும்
எல்லாப் பணியிலும் குணக்கு - வந்த
இடர்தீர்ந்திட படர்வோம் வழி
அடமேனடி மடமான் உனக்(கு)|r}}
ஏதுக்கடி சொல்லச் சுணக்கம் - செய்வோம்
எம்குல தெய்வத்தின் வணக்கம் (55)
சண்முகவடிவு மறுமொழி கூறல்
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
அன்று ஔவைப் பிராட்டி
ஆன்றகா ரைக்காலம்மை
ஆரெழில் ஆண்டாளம்மை
அக்காள் மகாதேவி
நன்று மைத்ரேயி கார்த்தி
யாயினி மீரா பாயும்
நாதர் இறையன் பாலே
நல்வரம் பெற்றே உய்ந்தார்
இன்று அதுபோல் மெய்வாழ்
வெய்திட ஆசையுற்றேன்
இந்தப் பிறவிப் பயன்
இறைதிரு தரிசனைசெய்
மன்றில் நடஞ் செய்யீசர்
வருகைகண் டுள்ளம் ஆர்ந்தேன்
மற்றோர் மயக்கமில்லை
வருந்தேல் என்அன்பு அன்னாய்
(56)
தாய் வினா
ஈரைந்து மாதம் தாங்கி
ஈன்றுனை வளர்த்துப் போற்றி
பாரில்நற் கல்வி தந்து
பல்லோரும் போற்ற வாழ
ஆர்ந்து நின்மணம் காணற்கு
அகத்தெண்ணிக் காத்திருந்தேன்
கூர்ந்த அம்பனை சொல்லாலே
குலைத்தனை கனவை அந்தோ
(57)
பாலிய காலத்துன்றன்
பண்பெண்ணிக் களித்திருந்தேன்
நூலினற் றிறம்பேச் சாற்றல்
நுண்மதி வியந்திருந்தேன்
ஆலமர் கண்டர் பாலே
ஆசையுற்றே னென்றாயே
சேல்விழி மகளே எந்தன்
சிந்தையில் தீயிட்டாயே
(58)
பித்துற்றாய் பிதற்று கின்றாய்
பேதையே இது நன்றாமோ
இத்தகு இளமைக்காலத்(து)|r}}
இதுவழி சரியின் றம்மா
மெத்தவும் அஞ்சுகின்றேன்
வேலனால் குறி சொல்வோரால்
பித்தினைத் தெளிய வைப்பேன்
பொறு பொறு என்றாள் அன்னை
(59)
சண்முகவடிவின் தோழிகள் கூற்று
என்னடி சண்முகவடிவு - உந்தன்
இயல்பு மாற்றத்திற்கு எப்போடி விடிவு
கன்னல் மொழியினை யன்றோ - அந்தக்
கடவுளென் நாயகர் என்றனை நன்றோ
(60)
மிக்கச் சிறிய பிராயம் - நீதான்
மிகப்பெரிய வார்த்தை சொல்வதென் ஞாயம்
சிக்கல் வந்ததென்ன சொல்லு - தாயார்
செப்புநெறி தனிலே நிலை நில்லு
(61)
கெடுக்கவோ சொல்லுவாள் அன்னை - அதைக்
கேட்காமல் போனால் நலமாமோ பின்னை
அடுக்குமோ பெற்றோர் சொல்மீறல் - இது
அனியாயம் உந்தனிஷ்டத்திற்கு மாறல்
(62)
எல்லோரையும் போல இரடி - ஆனால்
ஏதேதோ சொல்லுகிறாயே நீமுரடி
இல்லாத தேதேதோ பேசி - நீயும்
எங்களைக் குழப்புகிறாயே நீயோசி
(63)
இறைவரென் நாயக ரென்றாய் - இது
எங்கேனும் நடக்குமோ எண்ணிப்பார் நன்றாய்
மறைதெளி வேனென்று சொல்வாய் - அந்த
மறலியை மணவாளரால் எங்ஙன் வெல்வாய்
(64)
பண்டுபோல் நீஇப்போ தில்லை - எம்மைப்
பார்த்துச் சிரித்துப் பழகுவதில்லை
எண்டிசைக்கும் தெய்வம் ஒன்றே - என்று
இயம்புகின்றாயே இதுமிக நன்றோ
(65)
மண்டல மீது பல்கோடி - தெய்வம்
வைத்து வணங்குதல் காண்கிலை யோடி
கண்டதும் காதலென் பார்கள் - பின்னர்
கதிகெட்டு மதிகெட்டுக் கலங்கி நிற்பார்கள்
(66)
மணம்கொள் பருவமுமில்லை பின்னர்
மணம்கொண்டு வாழ்ந்தாலும் அதிலும் தப்பில்லை
குணம் கெட்டுப் போகாதே பெண்ணே - நம்ம
குலதெய்வ பூசைகளையே நீ பண்ணே
(67)
தென்றிசைப் பாண்டியர் வந்தார் - உந்தன்
சிந்தைகொண்டா ரென்றாய் என்னவர் தந்தார்
நன்றிதுவோ அன்புக் கண்ணே - உந்தன்
நற்றாய் கலங்குதல் தன்னைச் சற்றெண்ணே
(68)
வேண்டாம் விபரீத புத்தி - உந்தன்
வேட்கைகளைச் சற்று வைப்பாய் நீ ஒத்தி
ஆண்டாள் அவ்வை போல வேண்டாம் - அது
அந்தக் காலக் கதை இப்போது வேண்டாம்
(69)
கும்மிகோலாட்டங்கள் ஆடி - ஆறு
குளம்கோவில் தலங்களைப் போவோம் நாம்நாடி
அம்மே எங்களோடு கூடி - இன்பம்
ஆரக்களிப்புறச் சேர்ந்துறவாடி
(70)
இம்மை மறுமை புண்யம் பாவம் - இவை
இளமை கடந்த முதியோர்கள் ப்ரபாவம்
செம்மை நெறியென்று சொன்னாய் - நாமோ
சிறுமிகள் நமக்கெதற் கப்பேச்சு மின்னே
(71)
வயதுக்கு மீறிய பேச்சு - வேண்டாம்
வம்புதும்பு அதனாலே தானாச்சு
கயல்விழி தெளிவு கொள்ளேண்டி - என்று
கனிவோடு கேட்கிறோம் நீஇணங்கேண்டி
(72)
தாய் வெறியாட்டு வேலனை அழைத்து வரல்
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
அன்னை பிறர்சொல் தனைக்கேட்டு
அழைத்தாள் வெறியாட் டயர்வேலன்
முன்னை பின்னை நிகழ்காலம்
முறையாய் உரைப்பேன் எனக்கூறி
பொன்னை நிகர்சண்முக வடிவைப்
பார்த்தான் உருட்டிவிழி விழித்து
தன்னை வியந்து உடுக்கடித்துத்
தலையை ஆட்டிக் குறிஉளறும்
(73)
வேலன் குறியுரைத்தல்
ஆயிமக மாயி காளி
ஆத்தாளே மாரி கூளி
தாயிசக சண்டி சத்தி
சக்கம்மா துக்கம் தீர்ப்பாய்
பேயி பிசாசு சூன்யம்
பில்லிசுக்குட்டி மந்திரம்
நோய்நொடி நோவு எல்லாம்
நொடியிலே தீர்த்து வைப்பாய்
(74)
கோழியும் பன்றி ஆடு
கொன்று முப்பூசை போட்டேன்
வாழி நீ மலையாளத்தாள்
வந்திடு பகவதித்தாய்
நாழிதப் பாது வந்து
நலந்தர வேண்டு மம்மா
சூழ்ந்திடு குட்டிச் சாத்தான்
தூரப்போ தூதூ என்றான்
(75)
தாயத்து மந்தி ரித்துத்
தருகுவேன் கட்டிக் கொள்வாய்
நோயத்துப் போகும் பேயும்
நொடியினில் பறக்கும் என்றான்
மாயத்தால் மந்தி ரத்தால்
மனக்குறை தீர்ப்பேன் என்பான்
சேயைத்தாய் அலைக் கழித்துச்
செய்தனள் இங்ஙன் மாதோ
(76)
குறமங்கை வருதல்
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
கார்முகில்கள் திரண்டிருப்பக் கண்ணொளிரும்
மின்னலொன்று தோன்றுமாப் போல்
சீர்விரித்த அழகனைத்தும் திரண்டதொரு
பொன்மயிலாள் தெய்வப் பெண்ணாள்
ஊரல்மலைக் குறமங்கை மணிக்கூடை
இடப்புறத்தே தாங்கிக் கொண்டு
ஆரெழில்சீர் மாத்திரைக்கோல் வலக்கரத்தே
தான்தரித்து எழிலாய் வந்தாள்
(77)
குறமங்கையின் இயல்பு
இருளெலாம் திரட்டிச் சுருட்டி வைத்த எழில்
கார்குழல் - அதில்
எடுத்துச் செருகிவைத்த மலரெலாம் அழகுப்
பூம்பொழில்
குருமகான் மியரின் அருளைமாந்தி யொளிர்
மதிமுகம் - எங்கள்
கொற்றவர் இறையைத் தரிசனம் புரிந்த
விழியகம்
அருளெலாம் பொதிந்த வேதமோதிதெளி
வாயினாள் - தெய்வ
அன்பு கொண்டவரை ஆதரித்திருக்கும்
தாயனாள்
பெருகும் ஆண்டவரின் புகழைப் போற்றுமொரு
தொழிலினாள் - நெஞ்சில்
பேதம் நீங்கி நான்குவேதம் ஓதி நிற்கும்
எழிலினாள்
(78)
வியந்து நோக்கிபிறர் விரும்பும் ஆசை விழை(வு)
இல்லவள் - உயர்
மேன்மையான குணம்மிகவும் பொதிந்திருக்கும்
நல்லவள்
நயந்த அன்புமொழி நாளும் பேசிவளர்
பண்பினாள் - சாலை
நாதர் வான்புகழைப் பேசுவோர்க்கினிய
நண்பினாள்
பயந்திடாத உரம் அயர்ந்திடாத திறம்
உடையவள் - தெய்வ
பக்தகோடி களைக் காக்கும் தீரமுள
படையவள்
இயைந்த பேர்க்கிறைவர் ஈடில் மாட்சியுரை
தங்கமாம் - சற்று
இயல்புமாறிப் பேதம் இயம்புவோர்க்கு இவள்
சிங்கமாம்
(79)
ஆதி சைவநெறித் திருமுறையனைத்தும்
கற்றவள் - மற்ற
ஆகமங்களையும் கற்று நெஞ்சில் தெளி
வுற்றவள்
நீதியான நெறி நடப்பவர்க்கு இவள்
மகளெனும் - தன்னை
நாதர் மெய்வழிநற் சாலைஐயர் பாதத்
துகளெனும்
வேதம் ஓருருவ மானதெய்வமொன்றே
சிந்திப்பாள் - அண்ணல்
வகுத்தபத்ய நெறி நடந்திடாத பேரை
நிந்திப்பாள்
கோதில்லாத குணம் குறையில்லாத மனம்
கொண்டவள் - குரு
கொண்டல்பாதம் கதிஎன்று ஓய்விலாது
விண்டவள்
(80)
வெறிகொள் வீணுலகில் மெய்ம்மை யோங்குதுறை
மெய்வழி - என்று
விள்ளுமன்புடனே மனுக்குலத்திற் கிதுவே
உய்வழி
குறிகள் கூறுகுலத் தொழில்செயும் வனிதை
ஆயினும் - இவள்
குறிக்கோள் ஆண்டவரின் புகழ்பரப்புவதாம்
தூயவள்
அறிஞர் என்பவரும் அரிவைகூறும் சொல்லைச்
சிந்திப்பார் - பின்னர்
அட்டியின்றி உண்மை தெளிந்து ஆண்டவரை
வந்திப்பார்
குறிசொல் எந்தனுக்கு என்று சண்முகப் பொன்
வடிவினாள் - குறக்
குலத்தில் வந்த மங்கை தன்னை இன்சொலினால்
தடவினாள்
(81)
குறமங்கையும் சண்முகவடிவும் உரையாடல்
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
குறமங்கை::குறியுரை என்று கேட்ட
குலமணி மகளே சொல்வேன்
நெறியொடு எனைய ழைத்த
நேரமும் நிகழ்வும் பண்பும்
உறுத்துளம் கூர்ந்து ஆய்ந்தேன்
உத்தமப் பெண்நீ என்னும்
பொறுமைகொள் அன்புச் செல்வி
புகலுவேன் குறிகள் நன்றே
(82)
சண்முகவடிவு:
பெருகுறு அன்பின் அம்மே
பெருவழி நடந்தாய் போலும்
பருகுக பசுமோர் பின்னர்
பசியுமாறிடுக உந்தன்
அருங்களைப் பாறிஎற்கு
அன்புடன் குறிசெப் பென்றாள்
பெருங்குணம் கண்ட மங்கை
பேரன்பால் நனைந்தா ளன்றே
(83)
சண்முகவடிவு:
எப்பதியினின்று இங்கு
இனிது வந்தாய் அம்மா
செப்பிடுவாய் அப்பதியின்
சீர்சிறப்பும் அம்மா
(84)
குறமங்கை:
முப்பதியிப் பதிகட் கெல்லாம்
மூத்த பதி அம்மே
ஒப்பரிய மெய்ப்பதியென்
றுரைபுகல்வேன் அம்மே
(85)
சண்முகவடிவு :
ஒப்பரிய அப்பதியின்
உயர்வுபுகல் அம்மா
நற்பதியின் நலமுமதன்
வளமும் நவி லம்மா
(86)
குறமங்கை :
மெய்வழிஎம் ஆண்டவர்கள்
சாலை யென்பா ரம்மே
துப்புடையார் அனந்தர்கள்வாழ்
தூயபதி அம்மே
(87)
தன்னையறி தவமுறையோர்
சார்ந்துவளர் ஊராம்
பொன்னரங்க நாயகரின்
பொற்பதி யிவ்வூராம் (88)
ஊரான ஊரிதுகாண்
உயிர்ப்பயிர் செய் ஊராம்
பேரான பெருந்துறையார்
பெருந்திரு வார் ஊராம் (89)
கொலை களவு கள்காமம்
சூதுஇல்லா ஊராம்
கலகமிடும் திரைக்காட்சி
புகை பிடியா ஊராம் (90)
அரசியல் வீணாடலங்கள்
அணுவு மில்லா ஊராம்
பரசுகப் பேச்சினிது வளர்
பண்புடைய ஊராம் (91)
அசுசி கழி விடமில்லா
அழகு நிறை ஊராம்
நற்சுசிலம் நிலை பெறுமோர்
நல்லதிரு வூராம் (92)
சாதிமத பேதமில்லாச்
சற்சனர்கள் ஊராம்
நீதியர சாளுகின்ற
நித்தியமெய் ஊராம் (93)
வேதஒலி ஓவாது
ஓசையிடும் ஊராம்
மாதர்கள் மெய்ஞ் ஞானமுற்ற
மாண்புடைய ஊராம் (94)
சத்திய மெய்த் தேவபிரம்ம
குலத்தினர்வாழ் ஊராம்
நித்திய வாழ்வருளிறைவர்
நல்லருட் சீர் ஊராம் (95)
ஏமனமல் கடந்துவிட்ட
இணையில்லா ஊராம்
சேமநெறி சிறந்திருக்கும்
திருநின்ற ஊராம் (96)
நாத்தழும்பேர் நாத்திகர்கள்
ஆத்திகம் கொள் ஊராம்
சீர்திகழும் தெய்வ மணம்
செறிந்து கமழ் ஊராம் (97)
மெய்ஞ் ஞானச் செயல் தேர்ந்தோர்
விளங்குகின்ற ஊராம்
பொய்ஞ்ஞானப் புலையரில்லாப்
பொற்பதி எம் ஊராம் (98)
சண்முகவடிவு:
திங்கள்வத னம்திகழும்
சேயிழையே அம்மா
உங்களுட நாட்டுவளம்
உரைத்திடுவீர் அம்மா (99)
குறமங்கை:
வாடாத தவநெறியோர்
வாழுமெங்கள் நாடு
ஈடில்லா வரங்களருள்
ஈசரின் மெய்ந்நாடு (100)
மரணபயம் தெளிய வைத்து
வாழ்வருளும் நாடு
அரனெமது ஆண்டவர்கள்
ஆட்சி செயும் நாடு (101)
போகாத புனல் பொழியும்
வேகாக்கால் நாடு
சாகாத தலையிலங்கும்
சற்சனர்கள் நாடு (102)
ஆகாய கங்கையது
பொங்கிவழி நாடு
ஆமனுஎன் நாயகரின்
அறவணை மெய் நாடு (103)
ஆதியிறை சூல் ஆளும்
அரசாட்சி நாடு
நீதிதவறாது அங்கு
நின்றிலங்கும் நாடு (104)
மதங்களெல்லாம் ஒருங்கு திரண்
டிணைந்திருக் கும்நாடு
இதங்கனிந்து எங்கள் குரு
கொண்டல் திகழ் நாடு (105)
உயிர்ப்பயிர் செய் வேளாண்மை
ஓங்கிவிளை நாடு
அயர்வறு மெய்ஞ் ஞானிகளை
ஆதரிக்கும் நாடு (106)
மந்திரம்மெய் உருவடைந்த
மாதவர் மெய்ந் நாடு
எந்திர வள்ளல் சாலை
ஆண்டவர் பொன் நாடு (107)
வேதமறை ஆகமங்கள்
மெய் தெளிந்த நாடு
போதமுயர் பொற்புடை யோர்
பூரிக்கும் நாடு (108)
படையெடுத்து எவரும் என்றும்
பற்றரிய நாடு
விடை யேறும் பெருமானார்
விளங்கு மெங்கள் நாடு (109)
இரவுபக லற்றஒளி
இலங்கு கதிர் நாடு
எம்பெருமான் அருளொளியால்
துலங்கு மெழில் நாடு (110)
கரவில்லார் களங்க மில்லார்
கனிந்து வளர் நாடு
கர்த்தாதி கர்த்தர் என்றும்
காட்சி தரும் நாடு (111)
சண்முகவடிவு:
சிலையுயிர்பெற் றிலங்குதல் போல்
திகழுகின்றீர் உங்கள்
மலைவளத்தைக் கூறிவர
வேண்டுகின்றேன் அம்மா (112)
குறமங்கை:
ஆதிதுணை யான சாலை
ஆண்டவர்கள் மலையே
போதிவிருட்சம் விளங்கும்
ஜோதி மலை அம்மே (113)
மந்திர மகாமேரு
மலையெங்கள் மலையே
மாமுனிவோர் வாசஞ் செய்யும்
குகைவளங் கொள் மலையே (114)
வந்தெவரும் தீண்டறியா
சிகரமுயர் மலையே
வாணியெங்கள் ஆதிசத்தி
தவம்புரியும் மலையே (115)
விண்ணளவும் விரிந்து பரந்
துயர்ந்திருக்கும் மலையே
எண்ணரிய மணிகொழித்து
எமக்களிக்கும் மலையே (116)
ஊனக்கண் காணா அருவி
ஊற்றெடுக்கும் மலையே
ஞானிகட்கு ஜீவதீர்த்தம்
நல்குமெங்கள் மலையே (117)
முக்கோடி தேவர்களும்
முனைந்தேறும் மலையே
எக்கோடி யாராலும்
எட்டரிய மலையே (118)
வானமயிலாட அங்கு
ஞானக்குயில் கூவ
வளங்களெல்லாம் துலங்க எழில்
விளங்கு மெங்கள் மலையே (119)
திகட்டாத தேனருவி
பெருக்கெடுக்கும் மலையே
சஞ்சீவி செழித்து வளர்
ஜீவநதி மலையே (120)
யோகியரும் ஞானியரும்
உலவிவரும் மலையே
தேகமுத்தி ஜீவன்முத்தி
தருகு மெங்கள் மலையே (121)
கற்பகமும் பாரிஜாதம்
புட்ப கெந்திமலரும்
பொற்புடைய நற்பதத்தார்
பொலிந்தி லங்கும் மலையே (122)
அற்புதங்கள் நின்றிலங்கும்
அந்தர்முக மலையே
விற்பனவர் பொன்னரங்கர்
விளங்கு மெங்கள் மலையே (123)
விரியக் கண்டது மெய்ப்பொருள் மாட்சி
சுருங்கக் கண்டது தீமையின் ஆட்சி
தெரியக் கண்டது திருவருட் பெருமை
மறையக் கண்டது மயக்கிடு சிறுமை
இரியக் கண்டது மதவெறிப் புன்மை
இணையக் கண்டது சமரச நன்மை
பிரியக் கண்டது பேதமை பொய்ம்மை
பிணையக் கண்டது நீதியும் மெய்ம்மை
(124)
ஓடக்கண்டது பொய்யர்தம் கள்ளம்
ஒடுங்கக் கண்டது மெய்யர்தம் உள்ளம்
வாடக் கண்டது வஞ்சகம் தீங்கு
வளரக்கண்டது மதிதெளி பாங்கு
நாடக் கண்டது நற்றவர் பாதம்
நழுவக் கண்டது பற்றலர் பேதம்
கூடக் கண்டது நல்லவர் நெஞ்சம்
குலையக் கண்டது கொடியவர் வஞ்சம்
(125)
ஆடக்கண்டது ஆண்டவர் துவஜம்
அசையா நின்றது அனந்தர் நம்பிக்கை
நீடக் கண்டது நாயகர் வான்புகழ்
நெருங்கக்கண்டது அறிவினர் அன்பு
தேடக்கண்டது தெய்வநற் பண்பு
தெளியக் கண்டது அருள்வளர் இன்பம்
பாடக்கண்டது பரமர் வேதங்கள்
பணியக் கண்டது பக்தர் நீதங்கள்
(126)
சாலையர் கண்டது சமரச வேதம்
சார்ந்தவர் கண்டது அமரர்கள் நீதம்
மேலையர் கண்டது மெய்யரின் போதம்
மாதவர் தந்தது மெய்ந்நிலைப் போதம்
சீலமெய் தந்தது தெய்வ மான்மியம்
திருவருள் தந்தது தேடுகூடகம்
ஏலவல்லாரருள் அருள்திரு வாக்கியம்
இவையெல்லாம் பெற்றது எங்களின் பாக்கியம்
(127)
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
சண்முகவடிவு:
ஊரதும் மலையும் நாடும்
ஓங்குநற் புகழும் செப்பிச்
சீரெலாம் விரித்து ரைத்த
சித்திர நங்காய் இந்தப்
பாரிலுன் குலத்தின் பாங்கைப்
பண்புடன் உரைப்பீர் அம்மா
ஆர்ந்தனன் நின்சொல் கேட்க
அணிதிகழ் ஆரணங்கே
(128)
குறமங்கை தன் குலப் பெருமை கூறல்
எண்சீர்கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்
அரனயனும் திருமாலும் மும்மூர்த்தி கரமும்
அரிதிணைந்த அவதாரம் எங்கள்தந்தை அம்மே
வரங்களெலாம் திருக்கரத்தே தாங்கிவந்த தெய்வம்
மாதவத போதனர்கள் வணங்கும் தெய்வம் எந்தை
பரமகிரு பாகரத்தாய் ஆதிபரா பரையாள்
பாராதி அண்டமெலாம் பெற்ற பெருமாட்டி
பெருங்குலங்கள் எனப்புவியில் புகலுமெலாக் குலமும்
பெற்றுவளர்த் தோங்கவைத்த ஆதித்தாய் எம்தாய்
(129)
துறந்தமனத் தனியோகர் தூய்மதியர் எங்கோன்
திருவார்மெய் வழிசாலை ஆண்டவர்எம் தந்தை
நிறைநீதித் திருவுருவாள் எண்டிசைகண் டறியா
நித்தியமெய் நீதித்தாய் ஆதித்தாய் எம்தாய்
மறலியின்கை தீண்டாத மாதவப்பே ரருளும்
மெய்வழிச்சாலை ஐயர் மெய்ம்மதத்தோர் நாங்கள்
அறங்கனிசத் தியதேவ பிரம்மகுலம் அம்மே
அமரருயர் பண்போங்கும் அனந்தர்குலம் அம்மே!
(130)
எங்கள்குலப் பெருமைதனை எடுத்துரைப்பேன் குயிலே
எவரும் இணை யில்பெருமை இனிபுகல்வேன் மயிலே
திங்கள்பிறை சூடினர்அச் சிவபெருமான் எங்கள்
திருக்குலத்தில் பெண்கொண்டார் மாமனவர் அம்மே
பொங்குதிருப் பாற்கடலில் பள்ளிகொண்டார் எங்கள்
பங்காளி ஆகினர்காண் பிரமனெங்கள் அண்ணன்
சிங்கமதிலே றிவரும் சக்தியெங்கள் அத்தை
சீர்துலங்கு ரிஷிமார்கள் சோதரர்கள் அம்மே!
(131)
கணபதியும் குமரனும்எம் அத்தைமக்கள் அம்மே
கிளைபிரித்த புத்தமதம் சமணமதம் அம்மே
குணமுடைய காண்பூசி லாவோட்ஸே ஷிண்டோ
கோதில்லா சௌராஷ்ட்ரம் கிறிஸ்துமதம் பேரா
வணக்கமிகும் இஸ்லாத்தும் வழிவழியர் கண்டாய்
மற்றுளவெம் மதங்களெல்லாம் எங்கள்மதம் அம்மே
இணக்கமிகு சமரசசன் மார்க்கமெனக் கடைநாள்
இயற்றியஅவ் வடலூரார் பெரியதந்தை அம்மே
(132)
அனைத்துமத உண்மைகளும் இருதயத்தில் இறைவர்
அழகுடனே இலங்குவதை அறிவுறுத்தும் கண்டாய்
தனித்தெவரும் தான்பெரிய ரெனவுரைக்க வியலா
தயவுடைய சாலையையர் தாங்களவதரித்து
தனித்தலைமைப் பெரும்பதியாய் சமரச நன்மார்க்கம்
தந்ததொரு பெரும்பரிசு மனுக்குலத்திற் கம்மே
குனித்த புருவத்தழகர் குலப்பெருமை கூற
கோடானு கோடிநாவும் போதாது அம்மே
(133)
பொய்யுரைக்கும் பாசாண்டிப் புலையரிடைப் புகுந்து
பேதகமாய்ப் புளுகியதால் வெற்றுமுரண் டாட்டம்
மெய்யுரைக்க வந்தவர்க்கு மிக்கிடைஞ்சல் செய்த
வெய்ய கொடும் பாதகரால் வந்ததுன்பம் கோடி
கையறியா வைத்தியரும் ஜோதிடர்மாந்த் ரீகம்
கசடரச வாதிகளும் மக்களிடைப் புகுந்து
மெய்யறிய வொட்டாமல் விளைத்ததுன்பம் கோடி
மெய்வழிசாலை ஆண்டார் பட்டசளம் மெத்த
(134)
வயிரவளைப் பீரங்கி கொண்டுதகர்த் தெறிந்து
மனுவினத்தை அமரரென மாற்றிப் பிறப்பித்து
அயர்விலராம் அனந்தர்குலம் உற்பவித்தார் அம்மே
ஆண்டவர்கள் திருக்குலத்தின் தயவிதுகாண் அம்மே
துயர்மறலி கைதீண்டா மெய்ம்மதத்தின் தோற்றம்
சத்தியதே வபிரம்ம குலமதனின் ஏற்றம்
இயல்புயர் யோகத்தரசர் எம்பெருமான் அருள்செய்
எங்கள்குலப் பெருமை சொலல் எவர்க்கும் அரிதம்மா
(135)
ஆராலும் அளப்பரிய அனந்தர்குலம் மயிலே!
அண்டினவர் கடைத்தேறும் பெரியகுலம் குயிலே!
பேராரும் பொன்னரங்கர் படைத்தகுலம் கனியே!
பெம்மான்சா யுச்யம்தரும் உயர்ந்தகுலம் மணியே!
சீராரும் தெய்வமருள் திருக்குலம்காண் அணியே!
தேவாதி தேவர்வந்து பிறந்தகுலம் உயிரே!
நீராரும் கடல்சூழ்ந்த நற்றமிழ் நாடகத்தே
நித்தியமார் சத்தியர்கள் நிறைந்தகுலம் அம்மே!
(136)
எண்சீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
சண்முகவடிவு :
ஆத்தாள் உன்குலப் பெருமை கேட்டுக் கேட்டு
அங்கமெலாம் பூரித்தேன் சிலிர்த்தேன் அம்மா
சீர்திகழும் திருமதியோய் எந்தனுக்கு
செப்பிடுவாய் குறிகளினி திங்கே மாதோ
ஆர்த்தெனது நெஞ்சிலுள்ள கவலை யெல்லாம்
அகலவொரு வழிசொல்வாய் ஆர ணங்கே
பூத்தஉந்தன் மலர்வாயால் பொருத்த மாகப்
புகன்றிடுவாய் புதுமார்க்கம் உய்யு மாறே
(137)
குறமங்கை:
குறியுரைக்க வேணுமென்றால் முப்பூசைசெய்
கோழிகடா பன்றியல்ல குணங்கொள் மாதே
நெறியுடனே மனம் மொழிமெய் தன்னில் இந்நாள்
நிற்குமந்தக் கசடெல்லாம் பலிதந் திட்டு
அறிவுதெளி வார்ந்திருக்கப் பழமும் புஷ்பம்
அன்பியைந்த காணிக்கை தாம்பாளத்தில்
குறியாகக் குருதிசைநோக் கினிது போற்றிக்
கும்பிட்டு இடதுகையைக் காட்டு மம்மா (138)
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
சண்முகவடிவு:
ஒப்பியே குறியு ரைக்க
உவந்த நற்றோகை மாதே
செப்பிய வண்ணம் செய்தேன்
சிந்தைகூர்ந் தாய்ந்து என்னைக்
கப்பிய கவலை நீங்கக்
கனிவுடன் குறியு ரைத்து
மெய்ப்பொருள் அடைந்து உய்ய
மெய்வழி காட்டு வாயே (139)
குருத் தியானம்
“எண்டிசையும் கண்டறியா எந்தாய்பரை” என்ற தெய்வத்திருப்பாசுரச் சந்தம்
விண்ணகத்தை மண்ணகத்தி லிறக்கி வைத்து
மெய்வழியைக் கொண்டுவந்த ஆண்டவரே
வண்ணஎழில் திருப்பாதம் வணங்குகின்றேன்
மாதவரே மாமணியே சிரம் பணிந்தேன்
தென்னாட்டில் எழுந்தருள்செய் சிவபரமே
திருமலர்த்தாள் சிரஞ்சூடி வழுத்துகின்றேன்
என்னினைவில் குடியிருந்து நாவினிலும்
எழுத்தாணி முனையிருந்து துணையருள்வீர்
பொன்னாட்டு மனுமகனே புரந்தரரே
போற்றியுமை வணங்குகிறேன் காத்தருள்வீர்
அந்நாட்டு வித்தெனவே ஆக்கவந்தீர்
அடிபணிந்து வணங்குகின்றேன் காத்தருள்வீர்
மன்னவராய் விண்ணவர்க்கு விளங்குமெந்தன்
மாதவரே ஞானமிகு ஆதவரே
என்னுயிர்க்கு உயிரான ஏந்தலரே
இறைஞ்சுகின்றேன் என்னாவில் குடியிருப்பீர்
திருமேனி அவதரித்த நாள்முதலாய்
தேவேசர் பட்டசளம் அளவுளதோ
பெருமலைமுன் உரைத்தாலும் அதுகரையும்
பாருலகும் பொடிந்துவிடும் மன்னாவே
உயிர்க்குயிராய் நேசித்த உத்தமியை
உயிரிருந்து பிய்த்தெடுத்த அருங்குழவி
அயராது அலைந்துழைத்து சேர்த்த செல்வம்
அன்புடைய பெற்றோர்கள் நட்புறவு
அனைத்தையும்கை விட்டெழுந்து துறவாக
ஆசானைக் கடும்பிடியாய்ப் பற்றியநாள்
தனைத்தொடர்ந்த பழையநினை வதும்உதறி
தான்பெற்ற செல்வமெல்லாம் அருட்குருவே
என்றுநினைத் தேகினிரே என்சாமி
எனதுதுரை பட்டசள அளவுளதோ
கன்றதுதாய்ப் பசுதொடர்ந்த காட்சியென
கனகவன மணிமன்னர் தனிகையராம்
குருமணியைப் பின்தொடர்ந்து செல்நாளில்
குணமணியே சுகநினைவு கொண்டிலிரே
பெருவனத்தே செல்நாளில் பயந்தனிரோ
பேதநினை வெதும்நினைத்து கயந்ததுண்டோ
கடுங்குளிரும் சுடுவெயிலும் பார்த்ததுண்டோ
கனமழையும் பசிதாகம் நோக்கினீரோ
சுடுபொடியும் இருட்பயமும் நினைத்ததுண்டோ
சுத்தமன வைராக்ய உத்தமரே
பன்னாளும் பாருலகில் அலைந்தலைந்து
பாருலகில் பட்டதெல்லாம் எமக்கலவோ
என்னாவி நின்றிலங்கும் இறையவரே
எம்முயிருக் கொருதுணையே குருநாதா
எதைப்புசிப்போம் எங்கேநாம் சென்றிடுவோம்
எங்குறைவோம் என்றுநினைத் திருந்ததுண்டோ
இதயமதில் ஒளிர்மணியே என்துரையே
எங்ஙனம் நீர்மறிமேய்த்தீர் தவம்புரிந்தீர்
இணையில்லாத் தவமேரே எம்அரசே
எம்பாட்டர் தனிகைமணி தமைப்பிரிந்து
துணையில்லா தலைந்தலைந்து எமைத்தேடி
துன்புற்ற ததும்தூய மறைபுலம்பும்
வன்கணரால் பட்டதுன்பம் வரையுளதோ
மதிமணிநா மறைவேந்தே வணங்குகின்றேன்
என்குறிசொல் தப்பாத வரமருள்வீர்
இனியதவ மாமணியே வரமருள்வீர்
பொன்னரங்க நாயகரே போற்று கின்றேன்
பேசும்குறி பிறழாத வரமருள்வீர்
சொன்னகுறி தவறாத திறமருள்வீர்
ஜோதிவடி வானவரே வேண்டுகின்றேன். (140)
மாதவ மாமுனி வோர்கள் பராவிடும்
மெய்வழி ஆண்டவரே
மனுமகனே எழில் மலரடி போற்றி
வணங்குகின் றேனரசே
ஓதிடுமென்குறி பேதமுறாமலே
ஒருதிரு வரமருள்வீர்
உத்தமரே சத்ய நித்தியரே என
துயிர்த்துணை யானவரே
நீதிநடாத்திடு சேதமிலாநெறி
நிலைபெற உயர்வுறவே
ஆதிதுணை எமதாருயிர் நாயகர்
அடிமலர்த் துணை தருமே
சீதனமேதெனத் தாதையர் ஓதியே
நீதர்உமை யெமக்கே
சீதனமேதரும் மாதனம்யாமுற
சேமமெலா முறுமே
(141)
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
சண்முகவடிவு:
உயிர்கனிந் துருக தெய்வம்
உவந்திறைஞ் சிடுபொன் மாதே
துயர்தவிர்ந் திடவெ னக்கு
சொல்லுவாய் குறிகள் உந்தன்
நயவுரை குறிகள் மெய்யாய்
நடக்குமா உரைப்பாய் சற்று
தயவுடன் இறையை வேண்டிச்
சாற்றிட விழைந்தேன் மாதோ!
(142)
குறமங்கை:
வழிவழி குறிசொல் வானோர்
மரபினில் வந்தே னம்மே
எழிலுடை முத்தே என்சொல்
என்றுமே பிறழ்ந்த தில்லை
தொழிலிதாய்க் கொண்ட எந்தன்
தூயமெய்த் திறன்காண் கிற்பாய்
பழியுறேன் என்றும் எங்கும்
பரமர்தாள் பணிந்தேன் போற்றி
(143)
வேறு
முற்பிறப்பும் இப்பிறப்பும்
வரும்பிறப்பும் உரைப்பேன்
மூதுரைசொல் நாதரின்மெய்த்
திருமகள் நானம்மே
(144)
பொற்கொடியே நற்குலத்துப்
பிறந்தஇள மயிலே
பொன்னரங்கர் திக்விஜயம்
கண்டுவந்தாய் குயிலே
(145)
மெய்வழிதெய் வத்திருவார்
வதனம் தரிசனமே
மிக்கதுகண் டுனையிழந்தாய்
சொக்கிவிட்டாய் மனமே
(146)
துய்யதிரு மலர்ப்பதத்தைத்
தொழுதவரைச் சேர
தையலுந்தன் சிந்தையிலே
மையல்கொண்டாய் மயிலே
(147)
வையகத்தை உய்யவைக்க
வந்தசித்தர் நித்யர்
மெய்யாக மெய்யாக
நீயடைவாய் சத்யம்
(148)
வெய்யபிற விப்பிணியை
வென்றிடு மெய்வரமே
ஐயர்தரப் பெற்றிடுவாய்
அழகிய சித்திரமே
(149)
சண்முகவடிவு:
திக்விஜயம் கண்டதுண்மை
சிந்தையினில் மையல்
மிக்கடைந்த துண்மைஅதில்
வெல்லுவனோ தையல்
(150)
எட்டிரண்டு வயதுடையேன்
எனதிளமை தன்னை
எட்டிரண்டும் அருள்பவர்தான்
ஏற்பதுண்டோ மின்னே!
(151)
கட்டுடையேன் பெற்றோரின்
காபந்தும் உடையேன்
கட்டறுத்துக் கழலிணையைக்
கன்னியெங்ஙன் அடைவேன்
(152)
திட்டியெனை ஏசாரோ
செல்வதெங்ஙன் தனியே
அட்டியுண்டே அதற்குவழி
இயம்பிடுவாய் கனியே
(153)
பெண்ணாகப் பிறந்தனனே
தனித்தியங்கல் எளிதோ
பண்ணகர்தாள் அடையும்வழி
பகர்ந்திடுவாய் கிளியே
(154)
ஔவையாரும் காரைக்கால்
அம்மையொடு ஆண்டாள்
செவ்வழி சார்ந்திடப்பட்ட
சளமிகவும் பெரிதே
(155)
குறமங்கை:
பொன்மகளே உன்னுடைய
எண்ணமறிந் தேனே
போதமுயர் நாதரின்பால்
அன்புகொண்டாய் தேனே
(156)
என்னுடைய குலதெய்வம்
குருகொண்டல் அன்னோர்
இன்னலற வாழ்வருளும்
ஏந்தலவர் மின்னே
(157)
முன்னிருந்த முனிவரர்கள்
தேவரெல்லாம் இன்று
என்னையரின் பிள்ளைகளாம்
அனந்தர்களாம் நன்று
(158)
உன்னுடைய முன்பிறப்பில்
அன்னவரின் அடியாள்
என்னருமைக் கண்மணியே
இணையடியில் படிவாய்
(159)
எம்பெருமான் எழில்மலர்த்தாள்
விழைந்தினிது நாடி
நம்பிவந்து நலமடைந்தோர்
நற்புவியில் கோடி
(160)
நின்னையவர் திருவடியில்
சாரவைப் பேன்மயிலே
நின்னுளத்தின் கவலைவிடு
நலம்புரிவேன் குயிலே
(161)
சண்முகவடிவு:
எட்டாத கனியென்று
ஏங்கிநின்றேன் தாயே
எட்டியதைப் பெற உதவி
இனிது புரிவாயே
(162)
முற்றுணர்ந்த முனிவர்களும்
தேவரும்சொல் வழியே
நற்றுணையாம் நெறிநவின்றாய்
நன்றிகயல் விழியே
(163)
கும்பிடப் போனதெய்வம்
குறுக்கே வந்ததென்பார்
தெம்பளித்து நம்பிக்கை
தந்தனைநீ அன்பே
(164)
என்னுளத்துட் புகுந்துவிட்ட
ஏந்தலின் ஆலயமும்
மன்னவர்தம் மக்கள்நிலை
வாழ்வதனின் நயமும்
(165)
நன்றங்ஙன் நிகழ்வனவும்
நவின்றிடுவாய் கனியே
இன்றவர்தம் ஏர்புகழை
இயம்பிடுவாய் இனியே
(166)
தென்றிசையில் எழுந்தகதிர்த்
திறமுரைப்பாய் மயிலே
என்றனைஆள் திறம்வழியும்
எடுத்துரைப்பாய் குயிலே
(167)
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
குறமங்கை என்னும் அம்மே
கூறிய துண்மை என்னை
அறமிளிர் ஐயர் தாளில்
அணிவிக்க ஆன செய்ம்மின்
வறியவர் செல்வம் தம்மை
விழையுமா றெளியாள் வேண்டும்
நெறிமுறை நிகழ்வு தோற்றம்
நேமங்கள் உரைப்பீர் அம்மே
(168)
குறமங்கை:
பொங்கு மன்புடைய செல்வி
பூரித்தேன் உன்றன் வாக்கால்
எங்கள் நாயகரின் கோவில்
இலங்கிடும் பதியும் மக்கள்
அங்கியற் றிடும்வ ணக்கம்
ஆர்ந்திடும் சீர்வி ழாக்கள்
மங்கையுன் உளமு வப்ப
வரைகுவன் கேளு மம்மே!:169
வேறு
ஆனந்தக் களிப்பு
<poem>
இவ்வுலகின் திருமுகம் நேர் - பாரதம்
இலங்கும் எழில்விழிகள் தமிழகமாம்
அவ்வரிய தமிழகத்தில் - மெய்ம்மை
அழகாய் விளங்கு புதுக்கோட்டையுண்டு
(170)
ஒப்பரிய ஊறல்மலையாம் - அங்கு
உத்திமிக ஓங்குசித்தி கானகமுண்டு
செப்பரிய மயிலினங்கள் - நடமிடச்
செவிகளி கூவுமிசைக் குயிலினங்கள்
(171)
முத்துநீர் நிறை ஏரி - கதிரவன்
முகம்பார்க்கும் கண்ணாடி போலிலங்கும்
கொத்தலர் காசாம்பூ - பூத்திருக்கும்
கரையதனோரம் மெய்த் திருமகனார்
(172)
செங்கோல் புரி திருவூர் - நாமம்
செப்பிடில் அதொப்பரிய மெய்வழிச்சாலை
மங்கா தவமுனிவோர் - பல்லோர்
வரைந்துளர் தீர்க்க தரிசனங்கள்
(173)
சீரோர் எதிர் பார்த்த - ஆதி
திருவுடல் தாங்கிவந்து அருள்புரியும்
பாரோங் குயர்பதியாம் - சுத்தப்
பத்தியங் கொள் அனந்தர்கள் வாழ்திருவூர்
(174)
சூது கொலை களவு - காமம்
சாராயம் கொள்ளும்பஞ்ச பாதகமில்லார்
தீதுபுரிசினிமா புகையும் - கொள்
தீங்கினர்கள் இல்லாத பாங்குடை ஊராம்
(175)
நாகரிகம் என்று உலகோர் - கழிவிடம்
நாட்டி வைப்பர் வீட்டினிலே இங்கதில்லை
வேதமறை ஒலிமுழங்கும் - ஆதிதிரு
மான்மியம் தேடுகூடகம் கீத முழங்கும்
(176)
கப்பல் கவிழ்த்து வைத்த - காட்சிபோல்
கர்த்தர் எழில்ஆலயம் இங்கு திகழும்
செப்பமிட்ட தென்னோலை - வேய்ந்து
தேவனின் திருக்கோவில் பொலிந் திருக்கும்
(177)
பூட்டும் கதவு மில்லை - சந்தனப்
பொன்மணல் பரப்பிய தளமிலங்கும்
தேட்டம் மிகும் தவத்தார் - ஈசரெழில்
திருமாளிகை ஈசான்யத் திக்கிலிலங்கும்
(178)
குவலயத் தோரை யழைக்கும் - கிள்நாமக்
கொடிநெடி(து) உயர்மரம் முன்முகப்பில்
தவச்செல்வ அனந்தர்களின் - விடுதிகள்
தெருக்களும் நிரைநிரை யாய்மிளிரும் (179)
சுற்றிலும் முள்வேலி - அமைதி
சூழ்ந்திருக்கும் தூய்மை வாழ்ந்தி ருக்கும்
குற்றமில் பாலகர்கள் - தேடு
கூடகம் மான்மியம் வேதமிசைக்கும்
(180)
வைகறைத் துயிலெழுந்து - பள்ளியெழுச்சி
வண்ணமாய் பாடிதெய்வ தரிசனைக்காய்
கைகளை ஏந்திநின்று - காத்திருந்து
கர்த்தரை தரிசித்து உயிர்க்களிப்பார்
(181)
சங்கற்பத் திருவணக்கம் - செய்துமனச்
சங்கையறும் ஏழுமணி சார்ந்தனைவரும்
எங்கள் குருமணியின் - எழில்வருகை
எக்காளம் ஊதியனைவர்க்கும் உரைக்கும்
(182)
திங்கள் கங்கை சூடுசிவனார் - எங்கள்குல
தெய்வம் எழில் ஆலயத்திற் கெழுந்தருள்வார்
பொங்கிவரும் அருளமுத - வரிஷிப்பால்
பூரித்து எங்களுயிர் தளிர்த்திருக்கும்
(183)
பதினொரு மணிக்கு எங்கோன் - உருமகாலப்
பாங்குயர்ந்த தவத்தினுக் கெழுந்த ருள்வார்
பதியவர் தவமிருக்கும் - தவமாளிகை
பக்தியுடன் அறம்வலம் புரிகுவமே
(184)
தவமுடித் தெழுந்தருளி - பலன் வழங்கும்
தரிசனை கண்டு எங்கள் உயிர்துளிர்க்கும்
பவவினை பறந்தோடும் - எங்களையர்
பரமனார் திருமுக தரிசனையால்
(185)
செந்தா மரைக்காடு - பூத்திருக்கும்
சேகரர் அனந்தர்குழாம் திரண்டிருக்கும்
பைந்தார் துளபர் எம்மான் - சாலைப்
பாண்டியரை எப்போதும் வேண்டி வணங்கும்
(186)
நகரா எக்காளம் முழங்கி தவவிரதர்
நாயகரை வணங்க எல்லோரும் வணங்கும்
இறைநய நேரமென்னும் - மாலை
எழில்வணக்கம் சாலைப் பொழில் வணக்கம்
(187)
மறைமொழித் திருமலர்நா - வழங்கும்
மதியமுதம் பொழி பதியெங்கள் கோன்
அசைந்து துந்துமி முழங்க - அரனார்பதம்
ஆருயிர்கள் உய்திபெற வணங்குவர்காண்
(188)
ஒன்பது மணி வணக்கம் - தெய்வ
உத்தம தவமேருவைப் பணிந்திறைஞ்சும்
தென்பது தரும்பாரா - திருவணக்கம்
செல்வர்கள் இராமுழுதும் செய்துகளிப்பர்
(189)
ஆர்கலி உலகினிலே - அந்த
ஆதிமுழு முதல்இறை அருள்வழங்க
மார்கழி முடிநாளில் - எங்கள்
மாதேவர் அவதாரத் திருவுயர்நாள்
(190)
மந்திரச் சந்ததியினர் - ஓவாது
வாழ்த்தி வணங்கியிறைக் கிணங்கி நிற்பர்
எந்திர வல்லள்தயவை - வேண்டி
இனிய அனந்தர்குலம் கனிந்திருக்கும்
இனியபண்டங்கள் படைத்து - எல்லோரும்
எங்களுயிர்க் குயிர்த்தோற்றம் கொண்டாடுவோம்
கனியும் தைமுதல் நாளன்று - எங்கள்
கர்த்தருக்குப் படைத்திடும் இன்சுவைப் பொங்கல்
(191)
முக்கூர் கத்திகொண்டு - பொங்கல்தனை
மூதுரை நாதர்பானைப் பலியிடுவார்
எக்களிப் பார்த்திருக்கும் - எழிற்கோலம்
இனியகழைக் கரும்பு அலங்கரிக்கும்
(192)
மறுநாள் காணும்பொங்கல் - சாலை
மாடுகளலங்கரித்துக் கூடும்திருநாள்
பெறுவோம் இன்ப நிறைவு - கும்மிகோலாட்டம்
பெருமகிழ்வங்கே நிறைந்திருக்கும்
(193)
திங்களூர் தனிலெங்கோன் - எங்கள்பாட்டையர்
தனிகை மணிவள்ளலை உபசரித்து
பொங்கும் பிரம்மோபதேசம் - பெற்றதிருநாள்
பங்குனி பவுரணையில் போற்றி மகிழ்வோம்
(194)
கேழ்வரகு அப்பமொடு தேன் - சமர்ப்பித்து
கர்த்தர் பிறவாநாட் பிறப்புத் திருநாள்
சூழ்ந்து பணிந்து வணங்கி - எங்கள்
சுத்தநெறிச் சத்தியரைப் போற்றிமகிழ்வோம்
(195)
மாதவர் தாதையொடு - அகிலவலம்
வந்ததொரு காலம்தாதை உரைப்படியே
நீதமாய் மறிமேய்த்து - எங்கள் ஜீவன்
நேர்த்தியாக மேய்ப்பதற்குத் திறன்வளர்த்த
(196)
தாதையின் அருந்தவமார் - கட்டளைப்படி
தன்னேரிலா எங்கள் தனிநாயகர்
மேதகுதிரு நாளை - வைகாசியில்
மிக்கமகிழ்வுடன் இங்கு ஆசரிப்போம்
(197)
திருப்பரங்குன்றின் மிசையே - மிளிர்குகையில்
தேவபிரான் தவம்செய்து சன்னதம்பெற்ற
அருட்பெரும் திருநாளை - அகமகிழ்ந்து
அனைவரும் கொண்டாடி அருள்பெறுவோம்
(198)
இச்சைமிகும் எண்ணம் சொல்செயல் - தன்னால்
இயற்றிய பாவங்களைக் களைந்தெடுக்க
பிச்சையாண்டவர் திருக்கோலம் - எங்கள்பிரான்
பூண்டுவந்து ஆண்டுகொள்ளும் திருநாள்காண்
(199)
கார்க்கும்தீ கைக்கொண்டு வந்து - எங்களுயிர்
கார்க்கும் திருநாளே கார்த்தி கையர்நாள்
ஆர்க்கும் பிறவிப்பிணி - அது தொலைந்து
ஆண்டவர்கள் சந்ததியாய் நாங்கள் விளங்கும்
(200)
மாதவமேரு எங்கள் கோன் - புரிதவத்தால்
வளர்வுறும் தவவிளை வோங்கும் திருநாள்
மாதந் தோறும் பவுரணையில் - பிறைநாளும்
வள்ளல் பிரான் கிள்நாமக் கொடியேற்றம்
(201)
கூறவியலாத பற்பல - திருச்செயல்கள்
கோடிகோடி யுள்ளன என் செல்வமயிலே
பேறுபெற அங்கு வந்துநீ - அங்கமாகிப்
பெருமானார் பாதமலர் போற்றி வணங்கு
(202)
வேறுவழி இல்லைதங்கமே - இந்தப்பு விக்கு
மெய்வழிஒன்றே அனைத்தும் உய்வழியென்போம்
மாறுசெயும் வஞ்சப் புலையர் - வேடங்களிட்டு
வையகத்தை ஏய்த்துவழிப் பறிசெய் கின்றார்
(203)
ஊறுபடா உத்தமர் நெறி - உலகிலிது
ஒன்றே பிரிதொன்றிலை என்றுநீ அறி
ஈறில்பதம் பேரின்ப நெறி - அருள்புரிவார்
எம்பெருமான் சாலையண்ணல் சார்ந்துஉய்குவாய்
(204)
எண்சீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
சண்முகவடிவு:
சீராரும் தெய்வப்பதித் திருவும் மாட்சி
செப்பினைநற் சேயிழையே செவிகுளிர்ந்தேன்
ஆரணங்கே அங்கமெலாம் பூரித்தார்த்தேன்
அந்தவொரு பெரும்பாக்யம் பெறுவதென்றோ
பேராரும் பொன்னரங்கர் பொற்றாள் தன்னில்
புதைந்துமுகம் பணிந்தருளைப் பெறுவதன்றோ
நேராரு மில்லாமெய்ச் சாலை தெய்வ
நினைவெண்ணி நெஞ்சமிக நெகிழ்கின் றேனே
(205)
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
குறமங்கை:
தங்கமே வருந்தல் வேண்டாம்
தலைவரை அடைவாய் சத்யம்
அங்கமே நலிதல் விட்டு
அண்ணலைப் பணிந்திருப்பாய்
இங்குந்தன் பெற்றோர் தம்மை
இனிது நான் நேர்ந்துபேசி
பொங்கிநீ பூரித் தார்ப்பப்
பொற்பதி சேர்ப்பேன் அம்மே!
(206)
சண்முகவடிவு:
நன்றியின் மிகையால் எந்தன்
நாவெழ வில்லை தாயே
இன்றுநன் னாளாய் எற்கு
இலங்கிடும் பேறு பெற்றேன்
சென்றுநற் செயல் முடித்து
சேதிகொண் டிங்கு வாரும்
வென்றிகொள் நாளை எண்ணி
வேட்கையோ டிருப்பேன் மாதோ
(207)
குறமங்கை வருகை
பல்லவி
மங்கை வந்தனளே - குறக்குல
மங்கை வந்தனளே
அனுபல்லவி
மங்கை குறக்குல நங்கை ரதிக்கிவள்
தங்கை வளையொலி செங்கை அழகினள்
தங்கமென ஒளிர் அங்க எழில்கொடு
எங்கும் எவர்க்குமே நன்கு குறிசொல (மங்கை)
சரணங்கள்
துங்க மணியணி தொங்க இளையபெண்
சிங்கம் இனியசொல் பொங்கு மியல்பினள்
இங்கித நன்குணர் பங்கினள் மெல்லியல்
திங்கள் வதனநற் சேயிழை ஆயிழை (மங்கை)
கொஞ்சும் கிள்ளைமொழி வஞ்சிக் கொடியிடை
பஞ்சினின் மெல்லடிப் பாங்கியிப் பூங்குயில்
சஞ்சீவி போல்பவள் ரஞ்சித மோகினி
அஞ்சிடா நெஞ்சினள் வஞ்சகமில்லவள் (மங்கை)
முல்லையென முத்துப் பல்லழகி அன்புச்
சொல்லழகி வளை வில்புரு வத்தினள்
கொல்லெமன் தன்னையும் நில்லெனும் மெய்ம்மறை
கல்லழகி வேற்கண்ணழகி தங்க (மங்கை)
தங்கத்தோடு குழை தொங்கிட டால்விரி
வைரமூக் குத்தியும் புல்லாக் கிலங்கிட
துங்க எழிலினள் சங்குக் கழுத்தினள்
சொர்ண மணிமாலை உல்லாசமாய்த் தொங்க (மங்கை)
வண்டு முரல்மலர்ச் செண்டனிந் துசுருள்
கொண்டையி னாள்இள மாமயில் பூங்குயில்
கெண்டை விழிதோளில் தண்டையி லங்கிட
மண்டெழில் மாதிவள் கண்டோர் மயங்கிட (மங்கை)208)
சண்முகவடிவின் பெற்றோர் குறமங்கையை அழைத்தல்
வாராய் குறமாதே - குறிமொழி
கூறாய் இதுபோதே
எமக்கொரு திருமகள்
இணையிலா எழில்மகள்
இமைப்பொழுதும் அமைதி
இன்றியே அலைமகள்
ஏனோ இதுகூறாய் - இதற்கோர்
தேனார் வழி கூறாய்
இறைவரென் நாயகர்
மறைமுதல் தாயகர்
நிறைமொழி தூயகர்
எனதுயிர் நேயரே
என்றே மொழிகின்றாள் - மயங்கியே
நின்றே நலிகின்றாள்
பண்டிது போல்சிலர்
விண்டது உண்டுகாண்
இன்றிது நன்றென
எமதுளம் ஒப்பிலம்
திருந்தும் வழிகூறாய் - தெளிவதைப்
பொருந்தும் நெறிநேராய்
இளமகள் குலமணி
எமக்கொரே நலமணி
உளம்தெளி வகையுரை
உயர்குற மயிலேநீ
வாராய் குறமாதே - குறிமொழி
கூறாய் இதுபோதே (209)
குறமங்கை சண்முகவடிவுடனும் பெற்றோருடனும் உரையாடல்
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
நன்றுநன் றன்பி னீரே
நங்கையை அழைத்து வாரும்
என்றனின் மாத்தி ரைக்கோல்
ஈந்தவள் குணங்கண் டாய்ந்து
தென்றிசைக் கயிலை நாதர்
திருவடி தோத்த ரிப்பேன்
என்றுமே குறைவா ராது
இதயத்தில் தெளிவு கொண்மின்
(210)
தூலபண் டிதங்கள் செய்யும்
துறைவர்பல் லோரிங் குண்டு
ஞாலத்தில் ஜீவன் கொள்ளும்
நலிவுதீர் பண்டி தர்காண்
ஏலவல் லாரென் தெய்வம்
இனிய நல்லியல் பினீரே
ஆலமர் கண்டர் கண்டால்
அறும்பிணி அனைத்தும் அம்மே
(211)
வாரும் இளங்குயிலே
வடிவே எழில் மயிலே
மனதில் கிலேசம் வேண்டாம்
மாதேவர் துணையுண்டு
தேரும் எங்கள் குலத்தின்
தெய்வப் பதிவாருங்கள்
தீரும் பிணிகள் யாவும்
தெளியும் மனமயக்கம்
நேரும் நலங்கள் யாவும்
நித்ய வரங்கள் ஈயும்
நீள்புவி தன்னில் அந்த
நற்பதிக் கீடே இல்லை
சீரும் சிறப்பும் சேரும்
செல்கதி மெய்ம்மையாரும்
தெய்வம் பராவிடம்மா
சிந்தை தெளிவாயம்மா
இந்தா என் மாத்திரைக் கோல்
இருகையால் பற்றிக் கொள்வாய்
என்தெய்வம் எழுந்தருள்செய்
தென்திசை நோக்கி நிற்பாய்
பைந்தார் துளபர் எங்கள்
பரமரே பணிகின்றோம்யாம்
பைங்கிளியுற்ற துன்பம்
போக்கி யருள் வீர்ஐயா
சிந்தாகுலம் தவிர்ப்பீர்
சிறந்த நலம் அளிப்பீர்
செல்வச் சிறுமிக் கெல்லாச்
செல்வம் வரம் அருள்வீர்
தந்தையும் தாயும் ஏங்கள்
சற்குரு தெய்வம் நீரே
சரணம் சரணம் என்று
தஞ்சம் அடைந்தோம் தேவே
உலகம் அனைத்தும் உய்ய
ஒப்பில்லா ஓர் துறையே
உங்கள் பதம் பணிந்தேன்
உதவி செய்வீர் துரையே
நிலமுழு தொன்றே குலம்
நித்யம் தெய்வம் ஒன்றென்ற
நெறியை நிலை நிறுத்த
நீணில மிசை வந்த
குலதெய்வ தேவேசா நும்
கழல் பணிந்திறைஞ்சி னோம்யாம்
குறைகளைந் தாதிரிப்பீர்
கோவே குரு மகேந்த்ரா
அலகில் பெருஞ் சோதியே
அன்பின் திருவுருவே
அறிவே தயா நிதியே
ஆண்ட ருள் புரிவீரே!
(212)
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
குறமகள் இங்ஙன் போற்றக்
குலமகள் களிப்பக் கண்டு
உறுமகிழ் வெய்திப் பெற்றோர்
உரையில் நம்பிக்கை கொண்டார்
அறமுரை குறமா திற்கு
அன்புக் காணிக்கை யீந்தார்
நறுங்கனி யன்ன நங்காய்
நற்பதி செல்வோம் என்றார்
(213)
அன்புடை நங்கை பெற்றோர்
அறமுணர் குறமா தோடு
இன்பமாய் இறைவர் சாலை
எழிற்பதி சார்ந்தார் நன்றே
தென்புலத் தெழுந்த தெய்வ
தரிசனை கண்டாள் செல்வி
தன்னுளங் கவர்ந்த ஐயர்
தாளினில் தஞ்ச முற்றாள்
(214)
குறமங்கை தெய்வத் திருவருட் பெருமைகளைச் செப்புதல்
எண்சீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
என்னுரையைக் கேட்டுஇந்த எழிற்பதிக்கு வந்தீர்
இறைவரின்நற் றிருவடியைத் தரிசனமும் செய்தீர்
இந்நிலத்தை உய்விக்க இறைவர்அவ தரித்து
இங்கெழுந்து அருள்புரியும் இயல்பைஅறி வீரே!
தென்னாடுடை சிவனார் திருமேனி கொண்டு
சாலை அண்ணலாக வந்த சேதியறிவீரே
எந்நாளிற் செய்தவமோ இறைதயவைப் பெறவே
இங்குற்றீர் புண்ணியத்தின் பங்குற்றீர் நல்லிர்!
(215)
கோவில்களும் குளங்களொடு கடவுளரின் பெயரால்
கோடிதலம் உலகிலுண்டு அவையனைத்தும் நகலே
சேவையென்றும் வணக்கமென்றும் பலவிதமாய்க் கூறி
செலவுவைத்து உங்கள்செல்வம் களவுகௌவார் கண்டீர்
பூவுலகில் மானுடர்தம் பிறப்புவளர் வாழ்வு
பொருந்துகின்ற இன்பமொடு இறப்பும்ஒரே முறைதான்
தேவனின்மெய் யுணர்ந்தோரே சாவாமை உறுவார்
தெரியாதோர் நரகடைவர் தெளிந்திடுவீர் அம்மே
(216)
தம்மையும்தம் தலைவரையும் தானுணரா மாந்தர்
தலங்களையும் சிலைவணக்கம் தன்னில் புகுத்தாட்டி
பொய்ம்மையருத் தம்கற்பித்து பலசடங்குட் புகுத்தி
புன்மைதனைப் பரப்பிவைத்தார் பூதலத்தோ ரிடையே
செம்மைநெறி செப்பியபேர்க் கிடுக்கண்கள் செய்தார்
தெய்வமெதற் கென்றுணராத் தீங்கினர்கள் அந்தோ
அம்மையப்பர் அவதரித்து அருள்வசந்த காலம்
அறிந்தடைந்தோர் உய்திபெற்றார் அன்புடையீர் கேண்மின்
(217)
உண்மையுணர்ந் துலகில்பிறந் துற்றபயன் தெரிந்தோர்
ஒருதனிமெய்த் தலைவரின்தாள் உவந்தடைந்து உய்ந்தார்
அண்ணலருள் பெறவிழைந்தோர் அங்கமென ஆகி
அருட்பிரசா தம்பெறுமின் அதுஒன்றே நன்மை
கண்ணகன்ஞா லத்தில்மனுக் கடமையிது தேர்மின்
கசடுடையோர் பொய்ம்மைநெறி விட்டுவில கிடுமின்
மண்ணவரை விண்ணவராய் மாற்றும்ரச வாதி
மெய்வழிதெய் வம்திருத்தாள் மிகப்பணிந்து உய்ம்மின்
(218)
வெற்றிதரும் நாயகர்வி நாயகர்என் பார்கள்
வேழமெனத் திறமுடையார் ஆனமுகம் என்றார்
பற்றலர்கள் அன்னவர்க்கு ஆனைமுகம் என்று
படமெழுதிச் சிலைவடித்துப் பரவுகின்றார் அந்தோ
அற்றுவினை கவலையெல்லாம் ஆறவருள் முருகர்க்(கு)|r}}
ஆறுமுகம் என்றார்கள் ஆறு(6)முகம் வரைந்தார்
நற்றுணையாம் சிவம்சக்தி நலம்பொதிந்த நிலையை
நன்கறியா(து) ஆண்பாதி பெண்பாதி என்றார்
(219)
அறவணையில் பரந்தாமர் பள்ளிகொண்டார் என்றால்
அரவணையென் றேபாம்பின் வடிவெழுதி வைப்பார்
துறவடைந்து பற்றற்ற நிர்வாண இயல்பை
துகிலுரிந்து கேவலமாய் நிர்வாணம் என்றார்
உறுசோகம் இல்லாமை அசோகமென இயம்ப
உயர்ந்ததொரு மரமாம்அ சோகமென்று கூறும்
அறம்ஞானம் போதனைசெய் ஆசான்தன் நிழலை
அதுவுமொரு அரசமர நிழலென்று உரைத்தார்
(220)
குருமுனியைக் குறுமுனியென்(று) உருகுறுக்கி வரைந்தான்
கோவென்இறை பூசைக்குப் பசுமாட்டை வணங்கும்
அருட்ஜோதி என்னிலிவர் சுடுவிளக்கைக் காட்டும்
அகம்கற்பு ஊறொளிக்கும் கற்பூரம் கொளுத்தும்
மருவில்லாப் பெருவிளக்கம் தெளிவுளத்தின் ஒளியை
மாவாலே விளக்கேற்றி மகிழ்ந்தாடிக் குதிக்கும்
இருள்நீக்கி மனம்மொழிமெய் எழில்பெறல் முப்பூசை
இதைஆடு கோழிபன்றி பலியிடலென் பார்கள்
(221)
இறையழகை அங்கமதில் நாவிலெல்லாம் பொதிதல்
இதைஊசி வேல்உடம்பில் அலகுகுத்தல் என்பான்
நறும்பூவாம் இதயமலர் மிசையேறும் நலத்தை
நெருப்பைமிதித் துப்பூவை மிதித்தலென்று கூறும்
உறும்சூலால் ஆதிசக்தி உலகுபடைத் திடலை
உயிர்பறி சூலாயிதமென் றுளறுமிந்த உலகம்
அறுசுவைநா வடக்கிஉண்டி குறைவாய்கட் டென்றால்
அதிகம்உண்டு துணியாலே வாயைக்கட்டிக் கொள்வான்
(222)
குருபெருமான் திகழ்பதியைக் குருச்சேத்ரம் என்றால்
குருச்சேத்ரம் போர்க்களமென் றியம்பியவர் புலம்பும்
அருள்வானின் அறமுணர்ந்தோர் வான்அறம்கண் டோர்கள்
அவர்குரங்காம் வானரமென் றலறிவிரித் திடுவார்
குருஒன்பான் வியாக்கிரண பண்டிதரைக் குரூரன்
குரங்குவடி வாயமைத்துக் கேவலம்செய் திட்டான்
அருட்பாதம் தீட்சையது ஜீவநிலை யேற்றம்
அதைஅற்பர் கால்தூக்கித் தலைமேலே வைக்கும்
(223)
பசுவென்றும் ஜீவனின்பிற் பிடரியிலே விஸ்வம்
பாங்குறக்காண் தரிசனம்விஸ் வரூப என்றார்
பசுவென்று பெண்மாட்டின் பின்பாகம் பார்த்தல்
பைத்தியமாய் விஸ்வரூப தரிசன மென்றாரே
நிசமான இறையருள்ஆ சீர்வழங்கும் பாதம்
நீசரிவர் ஆசீர்வா தம்மென்றே உரைப்பர்
அசலான உபதேசம் ஆண்டவர்பொற் பதியாம்
அதைச்சொல்லால் உரைப்பனென்று வாய்புலம்பிதிரியும்
(224)
மோனமென்றால் ஞானவரம் பென்னும்உயிர் நிலையாம்
மோனமென்று பேசாமல் ஊமைஆண்டி யாவான்
ஞானமென்று குருபெருமான் திருமணிச்சூல் தாங்கி
நமையன்னா டேற்றுதலே உபதேசம் ஆகும்
ஞானமென்று வாய்புலம்பித் திரிந்திடுபா தகரால்
நாடுவோரும் தானும்கெட்டு நாசமுறுகின்றார்
வானமென்றால் மேல்நோக்கி அண்ணாந்து பார்ப்பார்
மாதவத்தோர் உறைதிருநா டென்று அறியாரே
(225)
அகரமெனும் ஆதியிறை அருள்தெளியா மாந்தர்
அகராதி பார்த்துரைத்தல் ஞானமென்று அலறும்
சுகஞானம் பெரும்பொருளின் சூக்மமறி யாமல்
சொற்பொருள்சொல் சோம்பேறிச் சந்தையிங்கே ஆச்சே
பகரரும்மெய் பரம்பொருள்மெய் ஆண்டவர்பால் சத்யம்
பகர்ந்ததனை மறந்துளறும் பாசடைபுன் மனத்தோர்
இகமிதனில் தாமும்கெட்டுப் பிறரையுமே கெடுத்து
எரிநரக விறகாவர் என்னுரைப்போம் எளியேம்
(226)
சண்முகவடிவும் பெற்றோரும் சாலை ஆண்டவர்களின் அங்கமாதல்
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
மாதிங்ஙன் உரைப்பக் கேட்டு
மனந்தெளி வுற்ற பெற்றோர்
வேதவே தியரென் சாலை
வித்துநா யகர்பொன் னாரும்
`பாதமே வணங்கிச் சேரப்
பணிந்து விண்ணப்பித் தேங்க
கோதிலா இறைவர் அன்னோர்
குறைகளைந்(து) அங்கத் தேற்றார்
(227)
அங்கமாம் விண்ணப் பத்தை
ஆண்டவர் முன்படித்து
தங்கள்கை யொப்பமிட்டுச்
சமர்ப்பிக்க அண்ணல் ஏற்று
உங்கள்கை யொப்பம் தானோ
உணர்ந்துதான் சேர்கின் றீரோ
அங்ஙனமா யின்நன் றென்று
அருள்கனிந் தேற்றார் நன்றே
(228)
சண்முகவடிவு வேண்டுதல்
சண்முகவடிவு:
ஐயனே அரசே என்னை
ஆட்கொள்ளல் வேண்டும் நாதா
மெய்யனே எளியாள் ஜீவன்
மீதினில் இரங்கி யேற்பீர்
தையல்யான் சிறுமி யென்று
தள்ளிட வேண்டாம் என்னை
உய்ய ஏற்றிடுவீர் பொன்னார்
உங்கள்தாள் சரணம் தஞ்சம் (229)
ஆண்டவர்கள்:
சிறுமியாய் உள்ளாய் நீதான்
சிறிதுநாள் செல்லட் டும்மே
பொறுமையாய் அன்பு கொண்டு
போய்வந்து பழகித் தேர்வாய்
உறுபெருங் கடல்வற் றும்மோ
உனக்கிது உரிமை என்றும்
நறுமண மலர்சார் வண்டாய்
நாடிநீ இருப்பாய் என்னை (230)
சண்முகவடிவு:
மறுத்திடல் வேண்டாம் தேவே
மனமிரங் கிடுதல் வேண்டும்
பொறுக்கிலேன் தயைசெய் யுங்கள்
பொன்னடி தஞ்சம் தேவே
மறைமுதற் பொருளே வேண்டி
வணங்கினேன் ஏற்றல் வேண்டும்
மறுகியென் னுள்ளம் நித்தம்
மாழ்கினேன் அபயம் மன்னோ (231)
ஆண்டவர்கள்:
திருமணம் கொண்ட பின்தான்
சேர்ப்பதென் சபைவ ழக்கம்
திருமணப் பருவ மில்லாச்
சிறுமிநீ வருந்து கின்றாய்
அருள்மணம் விழைந்தாய் உந்தன்
ஆர்வத்தை மெச்சு கின்றேன்
உருகிடல் வேண்டாம் ஏற்றேன்
உகந்தனன் என்றார் ஐயர்
(232)
ஏற்றனன் என்றசொற் கேட்(டு)
இன்பமிக் கோங்கச் செல்வி
மாற்றறி யாப்பொன் னான
மாதவர் தாளில் வீழ்ந்து
போற்றினாள் தொழுதாள் வாழ்த்திப்
பிறவியின் பயன் பெற்றேனென்(று)
ஏற்றியே இறும்பூ தெய்தி
இதயம் பூரித்தாள் மன்னோ
(233)
சாலையம்பதியில் கண்ட காட்சிகள்
மெய்வழி தெய்வத்தின் மாட்சி கண்டார்
மேதினி யில்காணாக் காட்சி கண்டார்
உய்வழி தன்னை இறைவர் விண்டார்
உற்றவர் தம்முயிர் உய்யக் கண்டார்
எல்லா மதங்களும் ஒன்றல் கண்டார்
ஏகமாய் மெய்வழி சார்தல் கண்டார்
வல்லாளர் எங்கோன் தயவைக் கண்டார்
வாழும் நெறிதனில் ஓர்மை கண்டார்
சாதிபேதம் தீர்ந்த சீர்மை கண்டார்
சற்சனர் அன்பால் தழுவக் கண்டார்
நீதிதெய் வத்திரு நீர்மை கண்டார்
நித்திய வாழ்வின் நெறியைக் கண்டார்
பசுவும் புலியும் ஒருது றையில்
பருகித்தா கம்தீர்ந்த காட்சி கண்டார்
இசைவாய் பருந்தும் கிளியி ணைந்து
ஏகமாய் ஓர்கூட்டில் வாழக் கண்டார்
வேதங்கள் எல்லாம் விளங்கக் கண்டார்
மெய்யாய்மந் திரங்கள் தெளியக் கண்டார்
நீதங்கொள் வாழ்வின் நெறியைக் கண்டார்
நித்தியர் நற்றாள் பணிந்து கொண்டார்
சாவில் இருவிதம் என்று கண்டார்
சற்சனர் ஜீவப்ர யாணம் கண்டார்
தேவன் திருவருள் தன்னைக் கண்டார்
சிந்தை தெளிந்து மகிழ்வு கொண்டார்
கல்லாரும் கற்றாரும் மெய்ம்மை கண்டு
கண்ணீர் சொரிந்து பணியக் கண்டார்
வல்லார் எளியார் ஒருங்கி ணைந்து
வள்ளல்பா தத்தைப் பணியக் கண்டார்
செல்வர் வறியவர் ஒன்றி நின்று
தெய்வம் பராவும் திறங்கள் கண்டார்
வள்ளல் பதாம்புயம் வாழ்த்தி நின்றார்
வரங்கள் பதிதரப் பெற்றுக்கொண்டார்
(234)
சாலை ஆண்டவர்களை தோத்தரித்தல்
எண்சீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
எங்களுயிர் மீதிரங்கி தயவால் ஏற்ற
இனியதிருச் சாலைஆண் டவரே போற்றி!
பொங்கிவரும் அருளாலே ஆண்டு கொண்ட
பொன்னடியை மிகப்பணிந்து வணங்கு கின்றோம்
எங்கள்குல குருநாதா அரசே போற்றி!
எழிலாரும் திருக்கயிலைத் தேவே போற்றி!
மங்காத மணிவிளக்கே மறலி தீண்டா
மெய்ம்மதத்தில் ஏற்றீர்கள் மலர்த்தாள் போற்றி!
(235)
திக்விஜயம் செய்வதுவாய்க் காட்டி எங்கள்
ஜீவனையும் தடுத்தாட்கொண் டருள்செய் தேவே
சொக்கேசா திருவரங்க நாதா போற்றி!
சோதிமுடி துலங்குகின்ற தவமே போற்றி!
முக்கோடி தேவர்கட்கும் முதல்வா போற்றி!
முனிரிஷிமார் சித்தர்கட்கும் அரசே போற்றி!
எக்காலும் மறவாத வரந்தந் தாள்வீர்
இணையடியை வணங்குகின்றோம் சரணம் போற்றி!
(236)
குறமங்கைக்கு நன்றி கூறுதல்
அன்புகொண்ட ஆரணங்கே
அழகுகுற மங்கை
அறநெறியைக் காட்டி எம்மை
ஆதரித்த நங்கை
உன்பெரிய நன்றிஉயிர்
உள்ளளவும் மறவோம்
உத்தமப்பெண் நீயல்லவோ
எங்களின் மெய்உறவாம்
(237)
பணம் மதிப்பு பதவிபட்டம்
குலம்குறித்தே உலகோர்
பற்றுவைப்பார் குறைவுபடில்
அன்புகொண்டு பழகார்
குணம் உயிர்மேல் கொண்டஅன்பு
ஆண்டவர்பால் பக்தி
கொண்டவர்க்கிங் கன்புஉண்டு
உலகிணைக்கும் சக்தி
(238)
ஆருயிர்நட் பென்றுலகோர்
அறைவதெல்லாம் பொய்யே
ஆருயிரைக் கண்டபின்பே
அதைஉரைப்போம் மெய்யே
சீருரைநம் தெய்வப்பதி
சேர்பரோப காரம்
செய்தனையே உந்தனுக்கென்
செய்வோம் உபச்சாரம்
(239)
பெற்றமகள் உற்றநிலை
யால்கவலை யுற்றோம்
பொன்மகள்நின் துணையதனால்
பிணியகலப் பெற்றோம்
கற்றபயன் காசினியில்
உற்றபயன் கண்டோம்
கர்த்தாதி கர்த்தரின்நல்
லாரமுதம் உண்டோம்
(240)
நற்றவர்தம் திருப்பதிக்கு
நல்வழியைக் காட்டி
நாங்களும்மெய் சாரவைத்து
நற்கதியுள் கூட்டி
வெற்றியெங்கள் வாழ்வில்பெற
வழியுரைத்தாய் வாழ்க
மெய்த்தெய்வத் துணையால்நீ
மகிழ்வொடென்றும் வாழ்க!
(241)
குறமங்கையின் உரை
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
குணமுயர் பெரியீர் எம்மான்
கோதகல் நெறிசார்ந் துய்ந்தீர்!
குணமகள் குணபே தத்தைக்
குறித்துநீர் கவலை கொண்டீர்!
மணம்அரு ளாளர் பாதம்
வணங்கியப் போதம் தந்தீர்!
இணங்கிய பண்பால் நீங்கள்
ஏற்றமுற் றீர்கா ணம்மே.
(242)
குறமங்கையின் வாழ்த்து
கலிவிருத்தம்
நன்றி உங்களுக் கென்றுமென் நன்றியே
என்றன் நாதனைத் தேடிநான் ஏகுவேன்
சென்றுதெய்வத் திருவேதம் ஓதுவீர்
என்றும் குன்றாத வாழ்வினில் வாழ்கவே! (243)
குறமகன் குறமாதைத் தேடுதல்
பல்லவி
மங்கையைக் காணேனே - எழில்குற
மங்கையைக் காணேனே (மங்கையை)
அனுபல்லவி
பங்கயச் செல்வியும் பார்த்துமயங்கிடும்
நங்கையை மேனகை தங்கையைப் பேரெழில்
பொங்கிடும் கங்கையைப் போல்மொழி பேசிடும்
எங்குல தங்கத்தை இன்பமயிலாளை (மங்கையை)
சரணங்கள்
அன்புமிகுந்தவள் அகத்தில் புகுந்தவள்
அனைவரும் போற்றி மதிக்கத் தகுந்தவள்
என்பு இளகிட இன்சொல் வழங்கிடு
தென்பு மிகுந்த திறமை உடையஎன் (மங்கையை)
பாடும் சாலைத்தமிழ் பண்கள் கூவும்குயில்
தேடும் மெய்யறிவினில் சிந்தைகனிமயில்
நாடும் ஞானநூல்கள் நல்லோர் நயந்திடும்
சாடும் பொய்ஞ்ஞானியைச் சொல்லம்பால் எய்திடும் {{Pline|(மங்கையை)
குறவர்குலக் கொழுந்தான மணியாளை
கோமான்தெய்வத் திருப்பாதம் பணிவாளை
மறவாத சிந்தையள் மறலியை வென்றவள்
மாதவர் சந்ததி பூதலம் வந்தஎன் (மங்கையை)
வையகமுற்றிலும் வானோர் புகழ்சொல
மெய்யன்புகொண்ட விறல்மிகு நங்கையை
தெய்வத்திருநாமம் மூலமந்த்ரமதும்
செப்பிடும் ஓவாது செய்வழி இஃதென்னும் (மங்கையை) 244)
குறமகனும் குறமங்கையும் சந்தித்து உரையாடல்
குறமகன்:
எங்கே சென்றிருந்தாய் இத்தனை நாளாக
என்னருமைக் குயிலே - நெஞ்சினில்
இன்ப நடமயிலே
இங்குன்னைக் காணாது ஏக்கமுற்றிருந்தேன்
இன்பக் கனிமொழியே - தங்கமே
எழிலார் கயல் விழியே (245)
குறமங்கை:
உங்களை ஏங்கிடவிட்டு நான்சென்றேனே
உத்தம நாயகரே - மென்மையார்
உள்ளத்தில் தூயவரே
நங்குரு நாதர் அகிலவலம் சென்ற
நாடுகள் சுற்றிவந்தேன் - தெய்வப்புகழ்
நல்லோர்க்குச் சொல்லி வந்தேன் (246)
குறமகன்:
சென்ற பதிகளில் கண்ட அதிசயம்
செப்படி என்கனியே - இதயத்தில்
சூடும் எழில் மணியே
குன்றுடையார் நம்மின் கோமகனார்புகழ்
கூறிய தெங்ஙனமோ - கேட்டபேர்
மாறிய தெங்ஙனமோ (247)
குறமங்கை:
எங்குச் சென்றாலும் நான் ஏதுசெய்தாலுமே
ஏந்தல் திருப்புகழே - மொழிவேன்
இனிய அருட்புகழே
அங்கங்கு கேட்டபேர் அண்ணல் பதிவந்து
அங்கமும் ஆயினர்காண் - திருத்தாளில்
சங்கமம் ஆயினர்காண் (248)
சிந்தை தனிலெந்தை இன்பத்திருவுரு
எந்நாளுமே மறவேன் - கணமும்
தந்தை தனை நினைவேன்
மந்திர வாசர்நம் எந்திர வள்ளலின்
மாட்சிதனைப் புகழ்ந்தேன் - செங்கோல்
ஆட்சிதனைப் புகழ்ந்தேன் (249)
குறமகன்:
ஆடிவ ரும்மயில் கூவிவ ரும்குயில்
அன்புடைக்கண் மணியே - இதயம்
அலங்கரிக்கும் மணியே
தேடிவ ரும்பொருள் தெய்வம் திருவலம்
சென்றபதியினையே - நிரலாய்ச்
செப்பிவாரும் கனியே (250)
ஆண்டவர்கள் அகிலவலம் வந்த ஊர்கள்
மாதேவர் அவதரித்த மார்க்கம்பட்டி சென்றேன்
மணம்புரிந்த பள்ளபட்டி அதன்வழியே வந்தேன்
தாதையை நேர்திங்களூர் நத்தத்தேரின் அடியும்
தாம்வதிந்த காசுக்காரம் பாளையமும் பார்த்தேன்
(251)
ஈரோடு பெருந்துறையும் சிறுவலூர் ஈங்கியூர்
எழிலாரும் கோபிச்செட்டி பாளையம் குன்னத்தூர்
சீராரும் சென்னிமலை அவினாசி சேகூர்
செல்வமிகும் கோயம்புத்தூர் தத்தமங்கலம் காண்
(252)
கண்ணணூர் பூனாச்சி மலையும் சிவமலையும்
கஞ்சமலை வௌக்கேத்தி அரசலூர் சென்றேன்
எண்ணெழு மாத்தூரு காடையாம் பட்டி
எழிலார் தாரமங்கலம் சூரமங்கலம் காண்
(253)
சேலம் செவ்வாய்ப்பேட்டை சேர்வராய மலையும்
தின்னப்பட்டி மலையாளம் கருப்பூரும் சென்றேன்
கோலமிகு சரக்குப்பிள்ளை யூர்ஓம லூரும்
வெள்ளாளப் பட்டியொடு மேச்சேரி சென்றேன்
(254)
விருத்தாசலம் பாலூர் ஸ்ரீமுஷ்ணம் சென்றேன்
வாரியங்காவல் மற்றும் வீராணத்தேரி
அருமைவெள்ளாறு வடவாநதி மன்னார்குடியும்
அழகான சிதம்பரமும் சீர்காழி சென்றேன்
(255)
ஆடுதுறை நன்னிலமும் முத்துப்பட்டிணமும்
அரியதேவ கோட்டைவழி பெங்களூர் சென்றேன்
நீடுஆரா வயலுடனே சேந்தனியும் சென்றேன்
திருச்சுழி பாசிப்பட்டிணம் ராமநாதபுரமும்
(256)
அருப்புக்கோட்டை கழுகுமலை ஊத்துமலை சுரண்டை
அழகான பாவநாசம் நாலாந்தலா குற்றாலம்
திருவான தற்கரை இடிந்தகரை மற்றும்
கூட்டப்பள்ளி கன்னியா குமரிக்கும் சென்றேன்
(257)
ஆர்வாமுள்ளிக் கோட்டை செந்திலம் பதியும்
அரியதிரு நெல்வேலி கோவில்பட்டி சென்றேன்
சீராரும் விருதுநகர் ரெட்டியப் பட்டியும்
திருப்பரங்குன்றம் சென்று தவகுகையும் கண்டேன்
(258)
தனிகைவள்ளல் பாட்டையர் தவமுனிவ ருடனே
சாலைதெய்வம் அகிலவலம் வந்தஇட மெல்லாம்
இனிதெளியாள் சுற்றிவந்தேன் இன்பம் வியப்புற்றேன்
இதன்மேலும் சென்றவிடம் எடுத்துரைப்பேன் இனிதே
(259)
தவம்முடித்து சன்னதங்கள் ஆண்டவர்கள் பெற்று
தாதையுரைப்படி ஞானத்தனிச் செங்கோல் ஓச்சு
சிவகுருதம் சீடர்களைத் தேடியலை ஊர்கள்
சென்றுவந்தேன் அவைஇனிது செப்பிடுவேன் நாதா
(260)
மதுரை நா வினிப்பட்டி கீழச்சேவல்பட்டி
மேலூர்கீழூர் சிவகங்கைதிருப் புத்தூர் சுக்காம்பட்டி
இதமாகக் கருங்குளமும் கோட்டுத்துறைப்பட்டி
இனிய திருக்கோஷ்டியூர் ராஜகம்பீரம்
(261)
தஞ்சாவூர் காரைக்கால் பிரான்மலை மற்றும்
தவவேந்தர் பழஞ்சாலைப் பொன்னரங்கம் மற்றும்
எஞ்சாது இவையனைத்தும் யான்பார்த்து வந்தேன்
ஏகும்வழி தனிலே எண்ணடங்காக் காட்சிகள் காண்
(262)
பொய்ஞ்ஞானப் புலையர்களின் புன்மைநெறி பற்றி
பொதுமக்கள் ஏமாறும் பரிதாபநிலையும்
அஞ்ஞானச் சிலைவணக்கம் அறிவறியாச் செயல்கள்
ஆங்காங்கு பற்பலவாய் நிகழுகின்ற தந்தோ
(263)
எத்தனைதான் எடுத்துரைத்தும் ஏற்பவர்கள் சிலரே
ஏற்காமல் வீணாவார் ஏராளம் உளரே
அத்தனின்மெய் மாட்சியினை அறிபவர்மாணிக்கம்
அடியாள்பல் லோரிடமும் ஆர்புகழைச் சொன்னேன்
(264)
மாகடலில் முத்தெடுத்தல் போல்வதிது மன்னோ
வையகத்தில் மெய்வழியைத் தொடர்பவர்கள் பொன்னே
ஆகுநெறி தொடர்பவர்கள் அறிவறிந்து உய்வர்
அருட்குருகொண் டல்பதத்தில் வணக்கம்மிகச் செய்வர்
(265)
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
இப்படி யாக மங்கை
ஏகிய பதிகள் சொல்லி
ஒப்புடன் கணவ ரோடு
உத்தமர் பதத்தைப் போற்றி
பொற்புயர் பொன்ன ரங்கர்
பெருந்தய வினுக்கா ளாகி
முப்பொழு தும்வ ணங்கி
மெய்ப்பயன் பெற்று வாழும்
(266)
குறமங்கை வினா
சென்றதெங் கேயென் றன்பாய்
செப்பிடக் கேட்ட நாதா
நின்றனின் செலவும் அங்ஙண்
நிகழ்ந்தன பெற்ற நன்மை
குன்றுடை யார்நம் ஐயர்
கோலமும் அருள்மெய்ம் மாட்சி
நன்றினி நவில வேண்டும்
நற்றுணை போற்று நல்லிர்!
(267)
குறமகன் விடை
வேதமா மறைகள் கூறும்
மெய்ம்மையைத் தெளிவு றுத்திப்
போதமாம் அருளன் பார்த்துப்
புரிகயி றாய்மு றுக்கி
நீதமாம் மரண அச்சம்
எனும்வலைக் கண்ணி வைத்து
நாதமார் நித்ய வாழ்வு
எனும்இரை தெளித்தார் ஐயர்
(268)
பல்லவி
வந்தனர் ஐயே - கண்ணிக்குள் வந்தனர் ஐயே
சரணங்கள்
வேளாளர் செட்டியார் கைக்கோளர் வாணியர்
வன்னியர் ஐயரும் ஐயங்கார் கண்டியர்
தாளாளர் அம்பலக் காரரும் தேவரும்
தேவாங்கர் தேசிகர் தம்பிரான் நம்பியார்
தோளாரும் பண்டாரம் நம்பூதரி நாடர்
சாஸ்திரி குரவர் சேர்வைகோ முட்டியர்
ஆளாரும் மந்திரி முத்திரியர் கோனார்
ஆச்சாரி பூசாரி உடையார்அக முடையார்
(வந்தனர்)
நாயகர் நாயனார் கருணீகர் பண்டிதர்
ராஜாக்கள் சங்கமர் பண்ணாடி வேளாரும்
தீயர்ஏ காலிசெம் படவர் ராவுத்தர்
சீர்மறைக் காயர்ஆறு சுத்தியார் யாதவர்
போயரும் செட்டியார் மருத்துவர் புராதனர்
மேனன் மேத்தா லாலா புலவர் கிராமணி
ஆயசௌ டாஷ்டிரர் அருந்ததி பஞ்சாபி
அரியராஜ புத்ரர் கள்ளர் மறவாரும்
(வந்தனர்)
மெய்வைத்த சிந்தையர் வேடுவர் மற்றிங்ஙண்
விஸ்வ பிராமணர் ஸ்மார்த்தர்கள் எல்லோரும்
தெய்வத் தமிழ்மலை யாளர்கன் னடர்கள்
தெலுங்கர் ஹிந்திபார்ஸி பற்பலமொழியினர்
சைவர் வைணவர் கிறிஸ்துவர் இஸ்லாமும்
சமணம் பௌத்தம் எனும் சகல மதத்தினர்
வைவஸ்வ தவத்தார்எம் மாதவர் திருத்தாளில்
வந்து சங்கமமாகி வாழ்வெய்தலாயினர்
(வந்தனர்) 269)
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
கண்ணிக்குள் வந்து சிக்கிக்
கர்த்தர்கைக் குள்ளே மாட்டி
பண்ணகர் அருட்கூட் டிற்குள்
பண்புடன் அடைபட்டார்கள்
மண்ணவ ராகி வந்தோர்
மாறிவிண்ணவரா யாகி
எண்ணரும் அமுதம் மாந்தி
எழுப்பினர் வேத கோஷம்
(270)
இறைதந்த இரையாம் நாதம்
இனிதுமாந் தியர்பே ரின்பம்
மறைதெளி ஞான மார்ந்து
மகிழ்வுடன் எழுப்பும் ஓசை
நிறைவுறக் கேட்ட அந்த
நெறியல்லா நெறிகள் யாவும்
சிறைவிரித் தெழும்பி ஓடிச்
சென்றன மீளா வாறே!
(271)
பல்லவி
போயின ஐயே புன்மை போயின ஐயே
சரணங்கள்
பொய்யும் களவும் கொலையும்சூ துடனே
வெய்யாகொ டும்புலை வேட்கையும் காமமும்
நையச்செ யும்திரைக் காட்சிபுகைப்பிடி
ஐயர்நாமம் கேட்டு அலறிப் பயந்துமே (போயின)
செய்ந்நன்றி துரோகமும் பெற்றோர் துரோகமும்
ஐயமுற்ற நட்பு ஆச்சாரி யர்க்கிடர்
ஐயர்முன் மாந்த்ரீகர் ஜோதிடர் வாதிகள்
வெய்ய வஞ்சகமும் வெருவி யலறியே (போயின)
போலிப்பா சாண்டியர் சாதிவெறியினர்
ஆலமெ னத்தகும் சமய வெறியினர்
சீலம் கற்றோமென்னும் செருக்குத் தருக்கினர்
காலனி டர்மர ணபயம் யாவுமே (போயின)
சற்குரு திருமுன்னர் சத்தியம் செய்துபின்
தற்குறி யாகத் தவறுசெய் புல்லரும்
கற்புநெறிகெட்ட ஆடவர் பெண்டிர்கள்
தற்புகழ் எச்சித் தனத்தினர் வீணர்கள் (போயின)
கள்ளர் கபடர்கள் கண்ணியம் கெட்டோர்கள்
உள்ளில் யதார்த்தமில் ஊனமுடை யோர்கள்
வெள்ளமெ னக்கொடு வேகக்கா முகர்கள்
துள்ளும் திமிருடை தூர்த்தத் தனமுள்ளோர் (போயின)
இரக்கமில்லாதவர் ஈனப் புலையர்கள்
அரக்கர்கள் அன்பில்லார் ஆசானுக்கிடர் செய்தோர்
பரகதி நம்பிக்கை யில்லாத பாதகர்
வரதர் அருள்திரு வானோசை கேட்டதும் (போயின) 272)
குறவன் உரை
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
என்குலக் குறமங் கைவா
ஏந்தலைப் பணிவோம் நன்று
பொன்னரங் கர்பொற் பாதம்
போற்றிசெய் துய்வோம் இன்று
இன்னல்கள் அனைத்தும் நீங்கி
எமபடர் தாண்டி மெய்யார்
நன்னலம் பெருக தெய்வ
நற்பதம் பணிந்து உய்வாம்
(273)
நேரிசை வெண்பா
சாலையெனும் ஊரிதுவோ சர்வேசர் ஆண்டவர்கள்
கோலத் திருவாட்சி கொண்டாளும் - சீலர்
அனந்தாதி தேவர்கள்மெய் அண்ணல் புகழைத்
தினம்போற்றித் தோத்தரிக்கும் ஊர் (274)
ஊரான ஊரோ! உயிர்பயிரேற் றும்ஊரோ!
சீராரும் சாலையண்ணல் செங்கோல்செய் - பேராரும்
பெம்மான் பெருந்துறையார் பொன்னரங்கர் தண்ணருளால்
செம்மாந் திருக்கும்நல் லூர் (275)
மறைகள் தெளிந்தவூர் வானோர்கள் நாதர்
இறைவர் இனிதரசு செய்யும் - உறையூர்
வயலூர் அனந்தர்புரம் மெய்வழித் தெய்வம்
இயலும்மெய் குண்டம் அறி (276)
மெய்யூர் தெளிவாகும் வேதத்தூர் வையகத்தார்
உய்யூர்சா லையூர் உயிர்க்கினிமை - செய்யூர்
திருப்பதிக்குச் சேர்க்கும் திருநாகூர் எங்கோன்
அருட்பதிச்சா லைஆண்டார் ஊர் (277)
கல்லாத நூலெல்லால் கற்கவேண் டாம்புவியீர்
சொல்லாது சொல்லும் சுகமேரு - வல்லாளர்
சாலை வளவரசைச் சார்ந்தால் ஒருசொல்லில்
மேலைவெளிக் கேற்றும் விரைந்து (278)
வாடாத வாய்மை வழங்கும் தவமேரு
தேடாத செல்வம் தரும்பெறலாம் - நீடாழி
சூழுலகில் ஞானச்செங் கோல்செய்யும் பொன்னரங்கர்
வாழ்பதிக்கு வம்மின் விரைந்து (279)
சாதி யொழித்துச் சமய சமரசத்தில்
நீதி அரசை நிலைநிறுத்தி - மேதினியில்
மெய்யான ஞானம் வழங்கியது இக்காலம்
மெய்வழிதெய் வம்என் றறி (280)
மின்னார்கள் ஞானத்தில் மின்னார்கள் என்றவுரை
தன்னால் பொடியும் தரமளித்த - என்னாதர்
மெய்வழி ஆண்டவர்கள் வள்ளண்மைக் கீடுஇணை
வையகத்தில் வானகத்தில் இல் (281)
கல்லார்க்கும் கற்றவர்க்கும் வல்லார் எளியார்க்கும்
எல்லார்க்கும் ஞானம் எளிதேகாண் - சொல்லாரும்
சன்மார்க்கம் இந்தச் சகத்தே தழைத்தேற
நன்மார்க்கம் செய்தார் நயந்து (282)
எம்மொழியே ஏற்றம் இறையவர்க்குப் பாலமெனும்
தம்செருக்குத் தாழச் சமம்வழங்கி - மெய்ம்மொழியால்
பேதம் கெடுத்தினிது வேதம் விளங்கவைத்தார்
நாதர்மெய் யாண்டவர்கள் தான் (283)
குறமகனும் குறமங்கையும்
தெய்வம் பராவுதல்
உய்வழி தந்தவரை உயிர்ப்பயிர்செய் உத்தமரை
மெய்வழிச் சாலைதெய்வ வேதாவை வாழ்த்துகின்றோம்
பொன்னரங்க நாயகரைப் பொற்றாமரை மலர்த்தாள்
இன்னுயிரில் பதித்தவரை இறையவரை வாழ்த்துகின்றோம்
விண்ணவரை மாதவரை வேதமுத லானவரை
மண்ணவரை உய்யவைக்க வந்தவரை வாழ்த்துகின்றோம்
தனிகைமணி தந்தவரை தருமதுரை மெய்ஞ்ஞானக்
கனிகைதரு வள்ளலரைக் கற்பகரை வாழ்த்துகின்றோம்
அன்புவடி வானவரை அஞ்சல்அஞ்சல் என்றுவரம்
இன்பமிகத் தந்தவரை இனியவரை வாழ்த்துகின்றோம்
ஊனில் நிறைந்தவரை உயிருட் கலந்தவரை
கானில் அருளரசாள் கலையரசை வாழ்த்துகின்றோம்
தென்பாண்டி நாட்டரசைச் செண்பகவாசம் கொழிக்கும்
விண்பாண்டிக் கோமகனை வாயார வாழ்த்துகின்றோம்
மறைமணியை வான்கனியை மதிநிறைநல் லமுதரசை
இறைசூலாம் இமையவரை எம்பதியை வாழ்த்துகின்றோம்
பூதலரை உய்விக்கப் போந்தவரை மாதவரைக்
காதலரை உயிர்கவர்ந்த காந்தர்தமை வாழ்த்துகின்றோம்
மண்படியாப் பொன்மணித்தாள் வருந்தநடம் புரிந்தெமையாள்
ஒண்புகழார் ஆண்டவர்கள் உயர்திருவை வாழ்த்துகின்றோம்
காணாக் கருவூலம் கானகத்தே கொண்டுவந்து
பூணாரம் தந்தருள்செய் பொன்னரசை வாழ்த்துகின்றோம்
கல்லாப் பிழைபொறுத்துப் பொல்லாப் பொழித்தெமக்கு
எல்லாப் பரிசருளும் இமையவரை வாழ்த்துகின்றோம்
உத்யோ வனச்சாலை சித்தி நிலைப்பிடத்தில்
முத்தியருள் வித்தகரை நித்தியரை வாழ்த்துகின்றோம்
உளம்புகுந்துஆள் கள்வர்தமை உயிர்கவர்ந்து வென்றவரை
வளம்பலவும் நல்குமண வாளரையே வாழ்த்துகின்றோம்
வரந்தருவார் வானவராம் தரந்தருவார் மறலிவெலும்
உரந்தருவார் ஆனஎங்கள் புரந்தரரை வாழ்த்துகின்றோம்
கள்ளம் தவிர்த்தெமது உள்ளம் கரைஞான
வெள்ளம் பெருகஅருள் வள்ளல்பதம் வாழ்த்துக்கின்றோம்
ஆதிதுணை யானவரை வேதமுடி வானவரை
நீதியர சானவரை நலம்படிந்து வாழ்த்துகின்றோம்
சாதிச் சமயவெறிச் சழக்கொழியச் சமரசமார்
நீதியர சானவரை நிலம்படிந்து வாழ்த்துகின்றோம்
துன்பமெலாம் தாமடைந்து இன்பம் எமக்களிக்கும்
அன்புவடி வானவரை அடிபணிந்து வாழ்த்துகின்றோம் (284)
அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
பூமிமிசை வந்தருள் செய் பொன்னரங்கர்
பேர்வாழி! போற்றிச் சீரார்
நாமமுரைத் தோர்வாழி! நண்ணிபணிந்
தோர்வாழி! நால்வே தங்கள்
சேமமுற ஓதியவர் கேட்டோர்கள்
வாழி!இறை உவந்தோ ரெல்லாம்
ஏமனமல் முத்தாபம் தவிர்ந்தன்னா
டேகியென்றும் வாழி!வாழி!
(285)
சீர்வாழும் தெய்வச் செங்கோல்
திருமிக வோங்கும் சாலை
ஊர்வாழி! உத்தி யோங்கு
சித்திகா னகமே வாழி!
நேர்வாழும் அனந்தர் வாழி!
நற்றவர் சார்ந்தோர் வாழி!
பார்வாழி மெய்யென் றெங்கும்
படர்ந்து நீடுழி வாழி!
(286)