நற்றிணை - தொகுதி 2/பாடிய சான்றோர்கள்

பாடிய சான்றோர்கள்
[எண்—செய்யுள் எண்]

அஞ்சில் ஆந்தையார் 233

இவர் அஞ்சில் என்னும் ஊரினர். இவர் பெயர் ஆந்தை என்பது. ஐந்து இல் மட்டுமே முதலில் அமைந்த சிற்றூர் அஞ்சில் ஊர் எனப் பெயர்பெற்றுப் பின்னர் ஊர் வளர்ந்த போதும் அதே பெயராகி நிலைபெற்று இருக்கலாம். இது குறிஞ்சித் திணைச் செய்யுள். கடுவன் நடுங்கக் குரங்குக் குட்டி மேகத்திடையிலே சென்று ஒளிக்கும் பெருங்கல் நாடன் என்பது நகைச்சுவை கனிந்த ஓவியமாகும். ஆன்றோர் சென்ற நெறி பற்றியே வழுவாமற் சென்று ஒழுகும் பண்புடையோரே சான்றோர் எனக் கூறும் அறிவுரை இன்றைக்கும் என்றைக்கும் பொருந்துவதாகும்.

அம்மூவனார் 275, 307, 315, 327, 395, 397

'மூவன்! என்னும் இயற்பெயரை உடையவர் எனவும், சிறப்புக் கருதி 'அம்' என்னும் அடைசேர்த்து வழங்கப் பெற்றவர் எனவும் கருதுவர். சேரன், பாண்டியன், மலையமான் போன்றோரால் ஆதரிக்கப்பெற்ற சிறப்பினர். தொண்டி, மாந்தை, கொற்கை, கோவலூர் ஆகியவற்றை வியந்து பாடியவர். ஐங்குறுநூற்றுள் நெய்தல்பற்றிய நூறு செய்யுட்களைச் செய்தவர். பிற தொகை நூல்களுள்ளும் இவர் பாடியவாக 27 செய்யுட்கள் காணப்பெறும். இந்நூலில் வரும் செய்யுட்களுள் 397-ஆம் செய்யுள் மட்டும் பாலையாகவும், மற்றைய நெய்தலாகவும் காணப்பெறும். நெய்தல் பற்றிய செய்யுட்களை மிகவும் செவ்விதாகச் செய்யும் புலமைத்திறம் மிகுந்தவர் இவர். இந்நூலின் 395-ஆம் செய்யுளில் குட்டுவனையும் மாந்தை நகரத்தையும் இவர் சிறப்பித்துப் பாடியுள்ளனர். சாவின் பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் மறக்குவேன் கொல், என் காதலன் எனவே அஞ்சுவல்' எனத் தேம்பும் தலைவியின் கற்புள்ளச் சால்பினை 397-ஆம் செய்யுளிற் கண்டு போற்றலாம். மற்றைய பாடல்களும் நெய்தல் நிலத்தின் தன்மைகளையும். அந் நிலத்து மகளிரின் உளப்போக்கையும் ஓவியப்படுத்திக் காட்டுகின்ற சிறப்பின ஆகும்.

அம்மெய்யன் நாகனார் 252

இவர் நாகர் குடியினர்; அம்மெய்யன் என்னும் பெயரினர். மெய்யன், மெய்யப்பன், மெய்யம்மை என்பன இந்நாளினும் தமிழ்க்குடிகளின் பெயர்களாக விளங்குவன காணலாம்; இவர் சிறப்புப்பற்றி 'அம்' என்னும் சொல்லைச் சேர்த்து அம்மெய்யன் என்று வழங்கியிருக்கிறார்கள். இனி, அம்மையன்—தாய் போன்ற தயாளன்—என்று இறைவனைக் குறிக்கும் பெயரே இவ்வாறு மருவி வந்தது என்றும் கூறலாம். காதலனைப் பிரிந்திருக்கும் காதலியை அவள் தோழி ஓவியப்படுத்திக் காட்டும் பாங்கில், 'புனைசுவர்ப் பாவை' என வரும் சொற்கள், உள்ளத்திலே ஓவியக் காட்சிகளாக நின்று நிலைப்பனவாகும். பெண்ணின் காற்கு, 'முயல்வேட்டு எழுந்த முடுகுவிசைக்கதநாய் நல்நாப் புரையும் சீறடி' என்று கூறும் உவமை நினைக்குந் தோறும் இன்பம் அளிப்பது.

அல்லங் கீரனார் 245

இவர் கீரர்குடியினர், இவர் பெயர் அள்ளன் என்றிருப்பது பொருத்தம் என்று ஔவையவர்கள் கருதுவார்கள். இச்செய்யுள் நெய்தல் திணையைச் சார்ந்தது. நெய்தற் காட்சிகள் எழிலோடு காட்டப்பெறுவதுடன், 'தான் நம் அணங்குதல் அறியான், நம்மின் நான் அணங்கு உற்றமை கூறி....தொழுது நின்றதுவே' எனத் தோழி தலைவியிடம் சொல்வதாக வருவன பெரிதும் இனிமை பயப்பதாகும். சங்கறுக்கும் தொழிலோடு கடற்கரைப் பகுதியிலே வாழ்ந்தவரான இவர், இரவுப்போதிலும் தம் தொழிலைச் செய்து வந்த சிறப்பால், 'அல்அம் கீரனார்' எனப் பெற்றனர் போலும்!

ஆலங்குடி வங்கனார் 230, 330, 400

இவர் ஆலங்குடி என்னும் ஊரினர். வங்கனார் என்பது இவரது பெயர். இவ்வூர் புதுக்கோட்டை மாவட்டப் பகுதியிலுள்ள ஓர் ஊர் என்பர். ஆலமரம் நிழல் செய்ய அமைந்த குடியிருப்பாதலால் இப்பெயரை அவ்வூர் பெற்றிருக்கலாம். இவர் உள்ள நெகிழ்வை இனிதாக ஓவியப்படுத்தும் திறன் பெற்றவர். 'எம்இல் பெருமொழி கூறித் தம்இல் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை போல்பவன்' என்று பரத்தை தலைவனை இகழ்வதாகக் காட்டும் இவர் (குறு. 8) அந்நாளையக் குடும்பத்தலைவர்கள் தலைவியரிடம் கொண்டிருந்த மதிப்பையும் காட்டுவர். இம் மூன்று செய்யுட்களுமே மருதத்திணைச் செய்யுட்கள்தாம். 'புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென மலிபுனல் பரத்தந்தாங்கு, இனிதே தெய்ய நிற்காணுங்காலே' என்று தலைவனிடம் சொல்லி வாயில் மறுப்பதும் (230), 'நின் மகளிரை எம் மனைத் தந்து நீ தழீஇயினும் அவர்தம் புன்மனத்து உண்மையோ அரிதே' (330) என்று தம் உயர்வைத் தோழி கூறுவதும், சிறந்த குடும்பச் செவ்விகளாம். 'நீயே கெடு அறியாய் எம் நெஞ்சத்தானே' என்று பிரிவின் போது தலைவனிடம் உரைப்பதும், பெண்மை உயர்வைக் காட்டுவது ஆகும்.

ஆலம்பேரிச் சாத்தனார் 255

மதுரை சார்ந்த ஆருலவிய நாட்டு ஆலம்பேரி என்னும் ஊரினர். சாத்தனார் இயற்பெயர் எனலாம். வாணிகச் சாத்துள் ஒருவராகித் தொழிலாற்றியமையின் இப்பெயர் பெற்றவரும் ஆகலாம். அகத்துள் நான்கும், நற்றிணையுள் நான்கும் இவர் செய்யுட்கள். நெய்தலும் பாலையும் இவரைக் கவர்ந்தவை. கடலன், பிட்டன், நெவியன் என்போரைப் பாராட்டியவர். இச்செய்யுள் குறிஞ்சித் திணை சார்ந்தது. இரவுநேரத்து மலைவழி வரும் ஏதங்களை அடுக்கிக்கூறும் நயத்தைக் காணலாம். இரவிற் கழுதுகள் வெளிப்போந்து ஊரிடையே உலவும் என்பதும், அரவுகள் திருமணி உடையன என்பதும் இச்செய்யுள் காட்டும் பழங்கால மக்களிடை நிலவிய நம்பிக்கைகள் ஆகும். 'நாம் வருந்தினும் அவர் வாரார் ஆயின் நன்று' என்று நினைக்கும் பெண்மையுள்ளக் கவலையின் ஆழத்தையும் இதிற் காணலாம்.

ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் 264

இவர் ஆவூரினர்; சாதேவனார் என்னும் பெயரினர். 'காவிதி' என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர். இந்த ஆவூர் சோணாட்டு ஆவூர்க்கூற்றத்து ஆவூராயிருக்கலாம் எனவும், அது இந்நாளிலே பசுபதிகோயிலாக வழங்குகிறது என்றும் கூறுவர். பழங்காலத்திலே, ஆக்களைப் பேணிவாழ்ந்த மக்கள் பலராதலின் ஆவூர்களும் எப்பகுதியிலும் இருந்தன என்பதினால், எந்த ஆவூரினர் இவர் என்று கூறுதற்கு இயலவில்லை. சாதேவனார் என்பது சகாதேவனார் என்பதன் தமிழ் வடிவாகவும் இருக்கலாம். இச்செய்யுளுள் வரும், 'கோவலர் யாத்த ஆபூண் தெண்மணி இயம்பும் ஈகாண் தோன்றும் எம் சிறு நல் ஊரே' என்னும் சொற்கள், இவர் ஆவூரினர் என்பதற்குச் சான்றாகவும் கொள்ளப்படும். மழையில் நனைந்த கூந்தலை விரித்து உலர்த்துகின்றாள் தலைவி; அதனை 'அணிகிளர் கலாவம் ஐது விரித்து இயலும் மணிபுரை எருத்தின் மஞ்ஞை போல' எனச் சொல்லிய சிறப்பினர் இவர்.

ஆவூர்கிழார் மகனார் கண்ணனார். 207

இடைக்காடனார் 316

இவர் இடைக்காடு என்னும் ஊரினர். இவ்வூர் தென்றமிழ் நாட்டுள்ளதோர் ஊர். இவர் வேறு; இடைக்காட்டுச் சித்தர் வேறு. இவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்தவர். முல்லைத்திணை இவருக்கு நிரம்பவும் பிடித்தமானது. 'மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி, நிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவர் எல்லாம் நின் நோக்கினரே' (புறம் 42) என்று வளவனின் வண்மையை இவர் வியந்து போற்றுவதால், இவரைச் சோணாட்டு இடைக்காட்டினர் என்பாரும் உளர், இச்செய்யுட்களுள் இவர் காட்டும் தாய்மை ஓவியமும் (221), 'மணிநிற எழிலி மடவது' எனத் தோழி தலைவியைத் தேற்றும் திறமும் நயமுடையனவாம்.

இளநாகனார் 205, 231

இவர் நாகன் என்னும் பெயரினர்; இளமை இவரைப் பிறரின் வேறுபடுத்த வந்த சொல் ஆகும், பிறரின் இளமையுடையவர் இவர் என்றற்கு, நாகர் குடியைச் சேர்ந்த இளைஞர் என்றும் கருதலாம். 'மையற விளங்கிய மணிநிற விசும்பின் கைதொழு மரபின் எழுமீன் போல' என்று இவர் கூறுகின்றார் (231). எழுமீன் என்பது சப்தரிஷி மண்டிலம் எனப் பெறுவது; அதனுள் ஒன்றான அருந்ததி போற்றுதல் தமிழ் மரபு; பிறரையும் போற்றும் மரபும் உண்டென்று இதனால் அறியலாம். 'சப்த கன்னியர்' 'ஏழு கன்னிமார்' என்று இம்மரபு இன்றும் தமிழகச் சிற்றூர்களில் வழிபடும் தெய்வ மரபாக நிலவுகின்றது. 'புன்னை பூப்பூத்து விளங்குவது குருவி முட்டைகளை உடைத்துப் போட்டாற்போல விளங்கும்' என்பதும் நல்ல உவமையாகும். 'ஆளி நன்மான்' (205) என இவர் உரைப்பதனால், இவர் காலத்தே ஆளி என்னும் விலங்கு தமிழ்நாட்டுக் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்தமையும் அறியலாம்.

இளவெயினனார் 263

எயினன் என்னும் பெயருடைய இவர் வேட்டுவக் குடியினராகலாம். இளமை பருவம் குறித்தது. கடுவன் இளவெயினனார் வேறு; இவர் வேறு என்று அறிதல் வேண்டும். இச்செய்யுளில் கரப்பவும் கரப்பவும் கைமிக்கு வழியும் கண்ணீர்பற்றிக் கூறித்தலைவியின் மனத்துயரை எடுத்துக் காட்டுவர் இவர். சூலுற்ற பேடைக்கு, நாரை கடல்மீன் கொண்டுதந்து காக்கும் அன்பினையும் எடுத்து காட்டுவர்.

இளவேட்டனார் 221

உரோடகத்துக் கந்தரத்தனார் 306

இவர் கந்தர் அத்தனார் எனும் பெயரினர். உரோடகம் என்னும் ஊரினர். இது இந்நாளில் ஒரகடம் என வழங்குவது என்பர். இதனால், வேறு கந்தரத்தனார்களும் பண்டைநாளில் இருந்தமை அறியலாம். வண்ணப்புறக் கந்தரத்தனார் என்பவர் இந்நற்றிணையின் 71ஆம் செய்யுளைச் செய்தவராவர். தினைக்கதிர் கொய்தபின் தாள் மட்டுமே நிற்கும் அழிபுனத்துக்கு, விழா நிகழ்ந்து கழிந்த களத்தை உவமித்த சிறப்பினர் இவர்.

உலோச்சனார் 203, 223, 249, 254, 278, 287, 311, 331, 354, 363, 372, 398

நற்றிணையுள் 20 பாடல்கள் பாடிய சிறப்பினர் இவர். இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பொறையாற்றுப் பெரியன் காலத்தவர். இவர் ஊர் காண்டவாயில் என்பதனை நற்றிணை 3&ஆம் செய்யுளால் அறியலாம். மக்களின் வாழ்வுப் போக்கை உற்றறிந்து நயம்பட அமைத்துச் செய்யுள் யாக்கும் திறனுடைய இவர், நெய்தல் திணையையே சிறப்பாகப் பாடியவராவார். தாழைப்பூவின் மணம் காற்றோடு வந்து பரதவர் சேரியின் புலால் நாற்றத்தைப் போக்கும் (203); அலருரைக்கும் பெண்டிர்கள் சுறாமீன்கள் போன்றவர் (223); இரும்பு, வெள்ளி, பொன் எனும் மூன்றையும் ஒரே செய்யுளில் உவமைப் பொருளாக்கிய சிறப்பு (249); வானம் வேண்டா உழவின் கானலம் சேரி (254); கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே (278); நமர் நமர் அறியாச் சேரி (331); எல்லி அன்ன இருள்நிறப் புன்னை (354); அலவன் ஆட்டி விளையாடல் (363); திமில் விளக்கம் எண்ணுதல் (372); உருகெழு தெய்வம் இரவில் கரந்து உறைதல் இல்லாது வெளிப் போந்து உலவுவது (398) போன்றவான பல செய்திகளை இவர் செய்யுட்கள் நமக்கு எடுத்துக் காட்டும், புன்னைக்குத் தான் எத்தனை உவமைகள்! இவர் பாடல்களின் போக்கும் பிறவும் இவரைக் கடற்கரைப் பட்டினத்துப் பரதவர் குடிவந்த தமிழ்ப் பேரறிஞராகவே காட்டுகின்றன. இந்நாளிலும் தென் மாவட்டங்களில் உவச்சர் என்போர் காளிகோயிற் பூசாரிகளாக உள்ளனர். இதனால், உலோச்சர் என்பதும் 'வேலன்' போல ஒரு பெயர் எனவும் கருதலாம்.

உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் 370

உறையூரின்கண் வாழ்ந்த இவர் சாத்தனார் என்னும் பெயரினர். சாத்தன் என்பது தொழிலும் ஆகலாம். 'கதுவாய்' ஏணிச்சேரிபோல உறையூரின் பகுதி என்பார்கள். மேற்கது வாய் கீழ்க்கதுவாய் என்பன பழங்காலக் கணிதத்தின் வாய்பாடுகள் என்றும் அறிகின்றோம். அவற்றுள், இவர் சிறந்த அறிவுபெற்றுத் திகழ்ந்தவர் என்று கருதுவதும் பொருந்தும். இச்செய்யுள் அரியதொரு இல்லற ஓவியமாகும். மகனைப் பெற்ற வாலாமையோடு படுத்திருக்கும் மனைவியைச் சென்று பார்த்துக் கணவன், 'புதல்வன் ஈன்றெனப் பெயர்பெயர்ந்து, அவ்வரித் திதலை யல்குல் முதுபெண்டாகித் துஞ்சுதியோ!' என மிகவும் வியப்பதும், அவள், 'முகை நாண் முறுவல் தோற்றித் தகைமலர் உண்கண் புதைப்பதும்', மறக்கமுடியாத குடும்பக் காட்சிகளாகும்.

எயினந்தை மகனார் இளங்கீரனார் 269, 308, 346

இவர் வேடர் குலத்தவர். எயினந்தையாரின் மகனார். பாடல்கள் பெரிதும் பாலைத்திணை சார்ந்திருப்பன என்பதும் இவர் எயினர் குடியினர் என்பதற்குச் சான்றாக விளங்கும். அகம், குறுந்தொகை ஆகியவற்றுள்ளும் இவர் செய்யுட்களைக் காணலாம். அந்தில் இளங்கீரனார், பொருந்தில் இளங்கீரனார் ஆகியோர் வேறு; இவர் வேறு. புதல்வனைப் பெற்றவளைப் பிரியும் தலைவனை நினைந்து, அவள் துயரநிலையை ஓவியமாகப் படைத்துள்ள 269ஆம் செய்யுள் மிகச்சிறந்த உயிர்ச்சித்திரம் ஆகும். பிரிவை நினைந்து செயலற்றவளுக்கு, 'பொறியழி பாவையின் கலங்கி' எனக் கூறுவது கொண்டு, அக்காலத்தில் பொறியமைத்து இயங்கச் செய்யும் பாவைகள் சமைக்கும் கைவினைஞரும் தமிழ் நாட்டில் இருந்தனர் எனலாம் (305); ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு' என்று கொண்ட முடிவு முற்றவும் அழிந்து போவதற்குக் காட்டும் உவமை மிகவும் ஆழமானதும் அருமையானதும் ஆகும். போர்முனைப் பாசறையிலிருந்து மனைவியை நினைத்து உருகும் தலைவனின் வேதனையும் சிறந்தவோர் உருக்கமான ஓவியமாகும் (346).

ஐயூர் முடவனார் 206, 334

இவர் 'ஐயூர்' என்னும் ஊரினர்; முடவன் என்பது இவர்க்கு அமைந்த பெயராகும். இவர் அறநெறிகளை உரைக்கும் ஆற்றல் தனியொரு பேராற்றலாகும். மாறன் வழுதியைப் பாடிய புறப்பாட்டில்,

'நீர் மிகின் சிறையும் இல்லை;
தீ மிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளி மிகின் வலியும் இல்லை;
ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி'

என்று, அவன் போராற்றலைக் கூறுவது, பொன்னுரைகள் என்றே போற்றத்தக்கவை யாகும். இப்படியே, கிள்ளிவளவன் இறந்தபோது,

'புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை,
விரிகதிர் ஞாயிறு விசும்பிவர்ந் தன்ன,
சேண்விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்,
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்
தேவருலக மெய்தினன்'

என்று உருக்கமாகப் பாடுகின்றனர். சொற்றிறம் பொருள் திறம் ஒலிநயம் என்னும் மூவகை யானும் சிறந்தவை இவர் செய்யுட்கள். ஆகவே 'ஐயூர் முழவனார்' என்று இவர் பெயர் இருந்திருக்கலாம் என்று சொல்லவும் தோன்றுகின்றது. தோன்றிக்கோனை வியக்கின்றார் இவர்:

'அறவர் அறவன்
மறவர் மறவன்
மள்ளர் மள்ளன்
தொல்லோர் மருகன்'

சொற்கள் முழக்கமிடுகின்றன.

இந்நூற் செய்யுட்கள் குறிஞ்சி மலைவளத்தையும், களவுக்காதலரின் உள்ளத்துடிப்பையும் கவினோடு சித்திரப்படுத்துகின்றன. 'என்னோ தோழி நம் இன்னுயிர் நிலையே?' என்னும் தொடர்— பெண்மையின் உருக்கமான வினா — நம் செவிகளில் எப்போதுமே நின்று ஒலிக்கும் செவ்வியதாகும்.

ஓரம்போகியார் 360.

ஐங்குறு நூற்றுள் மருதம் பற்றிய நூறு செய்யுட்களையும் செய்த சான்றோர் இவர். ஆதன் அவினி, பாண்டியன், சோழன், மத்தி, இருப்பையூர் விரான் என்போரைப் பாடிய சிறப்பினர். இச்செய்யுள் பரத்தமை உறவுடையானைப் பழித்துக் கூறுவதே ஒரு தனியழகு எனலாம். 'காழின் குத்திக்கசிந்தவர் அலைப்ப, கையிடை வைத்து மெய்யிடைத் திமிரும், முனியுடைக் கவளம்போல, நனிபெரிது உற்ற நின் விழுமம் உவப்பேன்' எனத் தலைவியின் கூற்றாக உரைப்பது எண்ணி எண்ணி இன்புறுதற்கு உரியதாம். அன்புடைப் பாகரே குத்து முள்ளாற் குத்தி வருத்துதலாலே, உண்ணுதற்குக் கைக்கொண்ட கவளத்தைச், சினம் கொண்ட யானையானது உண்ணாதே, தன் உடல்மேல் எல்லாம் சிதறிற்று என்பதுபோல, எனக்கு அன்புடையானாகிய நீயே என்னை வருத்தும்போது, என் இன்பம் எல்லாம் துன்பமாகிப்போக, என் மேனியும் நலன் சிதைந்து கெட்டது; என் அன்பு உளத்தால் வந்த துயராதலின் யாதும் உவப்பேன்" என்கின்றனள். ஏக்கம் வருத்தம் சால்பு பெண்மை பொறுப்பு கற்பு எனும் பண்புநலன்கள் எல்லாமே ஒன்றுபட்டு அலைமோதும் பெண்மையுள்ளத்தை இந்தச் சொற்களிற் காண்கின்றோம். இவ்வாறு தலைவியர் மாட்டே அநுதாபத்தோடு தம் மருதச்செய்யுட்களை ஒருபக்கமாகச் சார்ந்து உரைப்பதனாலேயே, இவரை 'ஓரம் போகியார்' என்றனர் எனவும் கருதலாம்.

ஔவையார் 295, 371, 381, 390, 394

பாணர் மரபினராகவும் பைந்தமிழும் பண்புச்செவ்வியும் மிகுந்தாராகவும் விளங்கிய இப்புலவர் பெருமாட்டியாரின் வரலாறு வியந்து வியந்து போற்றுதற்கு உரியதாகும். தகடூர் அதியமானுடன் நெருங்கிய நட்பு உடையராயினும், தமிழகத்து அந்நாளைய மக்களாலும் ஆட்சித் தலைவர்களாலும் ஒருங்கே மதித்துப் போற்றப்பெற்ற சால்பினரும் இவராவர். புலமை எளிமை செம்மை அஞ்சாமை அருள்மை போன்ற பண்புகள் அனைத்தும் தமிழறிவோடு சேர்ந்து அமைந்த உருவமாக விளங்கிய உயர்ந்தோர் இவர். பெண்ணினத்தின் உயர்வுக்கு என்றும் இலக்கியமாகித் தொழுது போற்றும் உயர்வும் கொண்டு விளங்குபவர். இவருடைய 295 ஆம் செய்யுள் வேறு பல்நாட்டிற் கால்தர வந்த பல்வினை நாவாய் தோன்றும் கடற்றுறையைக் காட்டுகின்றது. 'இளநலம் இற் கடை ஒழியச் சேறும்—வாழியோ—முதிர்கம் யாமே' என்று தலைவி வருந்தும் வருத்த மிகுதியை உணர்ந்து நினைக்க வேண்டும். 'அருந்துயர் உழத்தலின் உண்மை சான்ம்' என்பது 381 ஆம் செய்யுளில் வரும் பொன்மொழி. அஞ்சியின் வள்ளன்மையும், இச்செய்யுளில் 'ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்கத் தேர் வீசு இருக்கை' என அவன் அரசிருக்கையினைக் கூறுவதனால் காட்டப் பெறும். இவ்வாறு உலகியல் அறநெறி காட்சி நயம் தமிழினிமை அனைத்தும் செறிந்தவை இவர் செய்யுட்கள்.

கச்சிப்பேட்டு இளந்தச்சனார் 266

காஞ்சியை அடுத்திருந்த ஓர் ஊர் கச்சிப்பேடு. இவ்வூரவராக, இளந்தச்சனார், பெருந்தச்சனார், காஞ்சிக் கொற்றனார், நன்னாகையார் போன்ற புலவர்கள் பலரைக் காணலாம். தச்சுத் தொழிலுடன் தமிழ்வளமும் கொண்டிருந்த சான்றோர் இவர் என்பதைப் பெயரே உணர்த்தும். 'வேறுபட்டு இரீய காலை இரியின், பெரிய அல்லவோ பெரியவர் நிலையே' என்பது சிந்தனைக்குரிய செழுமையான தொடர் ஆகும்.

கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் 213

இவரும் கட்சிப் பேட்டினர்; தச்சுத் தொழிலினர்; ஆண்டால் இளந்தச்சனாரினும் பெரியவர். தலைமகன் வந்து புதியவன்போலச் சொல்லாட முயன்று, அவள் பேசாதிருக்க, மேலும் கூறுபவனாக, 'காதலும் நுமதோ?' என அமைந்துள்ள இச்செய்யுள் நயமும் செறிவும் மிகுந்ததாகும். 'இளந்தச்சு' சிறு தொழிலெனவும், 'பெருந்தச்சு' தேர் வேலையும் பிறவுமான நுட்பமான மரத்தொழில் எனவும் கருதுவர்.

கணி புன்குன்றனார் 226

கணியன் பூங்குன்றனார் எனவும் இவர் பெயர் வழங்கும். இவரைப் பாரியின் பறம்பு நாட்டைச் சேர்ந்த பூங்குன்றத்தினர் என்பார்கள். வானியலில் வல்லவராதலின் 'கணி' எனப்பெற்றனர். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் செறிவுமிக்க தொடரை அருளிய சான்றோர் இவரே. 'ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம்' என்று தெளிவாக உணர்ந்து வாழ்ந்த பெரியோர் இவர் எனலாம். இச்செய்யுளும் பலப்பல உண்மைகளை வலியுறுத்திப் பேசும் செய்யுளாகவே அமைந்துள்ளது.

'மரஞ்சா மருந்தும் கொள்ளார்'
'உரஞ்சாஅச் செய்யார் உயர்தவம்'
'வளங்கெடப் பொன்னும் கொள்ளார் மன்னர்'

என்பவை பொன்னாற் பொறித்துப் போற்றற்குரியன. கணியர் என்று செய்யுளும் தெளிவாகக் காட்டுகின்றது.

கந்தரத்தனார், கருவூர்க் 238

உரோடகத்துக் கந்தரத்தனாரினும், காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தரினானும் வேறானவர் இவர். இவரைக் கருவூரினர் என்பார் சிலர். 'கந்தரத்தன்' என்பது சிவபிரான் பெயராகலாம். தலைமகள் பருவங் கண்டு அழிந்ததன் கூற்றாக அமைந்த செய்யுள் இதுவாகும். 'உரனொடு, கனியா நெஞ்சத்தோர்க்கும் இனிய அல்ல நின் இடிநவில் குரலே' எனப் பருவமழையைப் பழிக்கிறாள் தலைவி.

கபிலர் 217, 222, 225, 253, 267, 291, 309, 320, 336, 353, 359, 368, 373, 376

வேள் பாரியின் நண்பரும், சங்கப் புலவருள் மிகவும் உயர்ந்து நின்றோருள் ஒருவரும் கபிலராவர். இவர் அந்தணாளர்; பாரியை நட்பாகக்கொண்டு போற்றிய பண்பினர். பாண்டிய நாட்டுத் திருவாதவூரிலே பிறந்தவர். சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பற்றிப் பதிற்றுப்பத்துள் ஏழாம் பத்துப் பாடியவர். குறிஞ்சிக் கலி, குறிஞ்சிப் பாட்டு, ஐங்குறு நூற்றுள் குறிஞ்சி பற்றிய 100 செய்யுள் இவர் செய்த பெருநூல்களாம். இவர் செய்த சங்கப்பாடல்கள் 235 என்பார்கள். 'பொய்யா நாவிற் கபிலன்', 'அந்தணாளன் கபிலன்' என அக்காலப் புலவர்களாலும் போற்றப் பெற்றவர். இந்நூற் பாடல்களுள் பல அரிய செய்திகளை இவர் வாக்காகக் காணலாம்.

இசைபட வாழ்பவர் செல்வம் போலக்
காண்டொறும் பொலியும்'—217

முள்ளூர் மலையனின் கொடைத்திறம் பற்றி 290 ஆம் பாடல் கூறுகின்றது; ஓரியைக் காரி கொன்றதை 320 ஆம் செய்யுள் காட்டும்; பன்றிக் கறியைக் குடிமுறை பகுக்கும் மனையோளை 336 காட்டுகின்றது; மந்திக்கு விருந்து செய்யும் குறமகளை 353 இல் காணலாம்; காந்தள் தாது மேலே விழ, வீடு திரும்பிய பசுவை அதன் கன்றே இனங்காணாது மயங்குகிறது 359 இல்; 476 கிளிவிடு தூதாக விளங்குகின்றது.

கயமனார் 279, 293, 305, 324

இவர் குறுந்தொகையின் ஒன்பதாம் பாடலுள் சொல்லிய நயமான உவமைபற்றி இப்பெயர் பெற்றவர் எனலாம். சங்க நூற்களுள் 25 செய்யுட்கள் இவர் பெயரால் காணப்படும். மகட்போக்கிய தாயது புலம்பலாகவே பல செய்யுட்களும் காணப்படுவதனால், இவர், அத்தகு தாய்மாரின்பால் இரக்க நெஞ்சம் உடையவராதல் பொருந்தும். இச்செய்யுட்களும் அத்துறையினைச் சார்ந்தவையே யாகும். 'சிலம்பு கழீஇய செல்வம் பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே' (279) என்பதனால், பெண்கள் திருமணத்திற்கு முன்பாகச் சிலம்புகளைக் கழற்றிவிடுகின்ற தமிழ் மரபைக் காணலாம். தாய்மையின் சோகச்சித்திரங்களாக விளங்கும் செய்யுட்கள் இவை. தன் மகளின் நல்வாழ்விலேயே மனம் ஈடுபட்ட தாய், அவள் தன் காதலனுடனே வீட்டை விட்டு வெளியேறிப் போனபோது, அஃது அறத்தொடு பட்டதென்று நினைத்தாலும், பாசத்தால் துடித்துப் புலம்புகின்றனள்.

கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் 343

கருவூரினர் இவர். கதப்பிள்ளை என்பார் குறுந்தொகையுள் 64, 265, 38 ஆம் செய்யுட்களைச் செய்தவர். அவர் மகனார் இந்தச் சாத்தனார் ஆகலாம். கடவுள் தங்கும் ஆலமரத்தடியிலே பலிச்சோறிட்டுப் போற்றுவதையும், அப்பலியைக் காக்கை உண்டுபோதலையும் இச்செய்யுள் காட்டும். கணவர் வரவை அறிவித்த காக்கைக்கு இப்படிப் பலியிட்டுப் போற்றுவது பழையகாலத் தமிழ்மகளிர் மரபாதலையும் காணலாம். இன்றைக்கும் காக்கைக்குச் சோறிட்டே உண்பது என்பது பல தமிழ்க் குடும்பங்களின் மரபாகும். அதுவும் சிறப்பு நாட்களில் காக்கை பலிச்சோற்றை உண்டால்தான், பின்னர், தெய்வம் ஏற்றதெனக் கருதித் தாம் உண்பார்கள். இந்தத் தமிழக மரபைக் காட்டியவர் இவர்.

கருவூர்க் கோசனார் 214

இவர் கருவூரினர். கோசனார் என்னும் பெயரினர். கோசிகனார் என்பதே கோசனாராக மருவியது என்பாரும் உளர். 'கோசம்' ஆடை வகையுள் ஒன்றென்பதும், அதனை நெய்யும் தொழிலோர் கோசனார் எனப் பெயர் பெற்றனர் எனவும் உரைப்பர். 'கோசர்' என்னும் இனத்தவர் இவர் என்று சொல்வதும் பொருந்தும். வாய் மொழிக் கோசர் என்னும் பழைய இனத்தை இவர் சார்ந்தவராகலாம் என்பதே ஏற்புடைத்தும் ஆகும். இவருடைய கருவூர் கொங்கு வஞ்சி எனப் புகழோடு திகழ்ந்த இந்நாளைய தாராபுரம் என்றும் கொள்வர்.

'இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசைவுடன் இருந்தோர்க்கு அரும் புணர்வின'

என்பார் இவர். இதனால்,

வினைவயிற் பிரிந்து போதல் பண்டை நாள் ஆடவர்களிடையே வழங்கிய உலகியல் அறம் என்பதை இச்செய்யுளால் அறியலாம்.

கழாஅர்க்கீரன் எயிற்றியனார் 281, 312

இவர் பெயர் எயிற்றியனார் என்பது. இது எயிற்றியார் என்றும் வழங்கும். சோணாட்டுக் காவிரியின் வடகரையிலுள்ளதாயிருந்த கழார்ப் பெருந்துறை கழார் முன்றுறை என்னும் கடற்கரையூராக இருந்த ஊரினர். இந்நாள் அது அழிந்து போய்விட்டது. எனினும், 'களார்க் கூற்றம்' எனும் பெயர் பல கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது என்பர். ஒருகாலத்து 'மத்தி' என்பானுக்கு உரியதாக இருந்தது இது. இம் முன்துறையிலேயே புதுநீர்விழா ஆடிய போது ஆட்டனத்தியைக் காவிரி இழுத்துச் சென்றது. 'கீரன்' என்பது இவர் தந்தை பெயர் ஆகலாம். எயிற்றியார் என்பவர்கள் இவரைப் பெண்பாலராகக் கொண்டு 'கீரன்' கணவர் பெயர் என்று கருதுவர். இவர் பாடிய பிற பாட்டுக்களைப் பிற சங்க நூற்களிலும் காணலாம். இவரை எயிற்றியார் என்றே குறுந்தொகையும் அகநானூறும் காட்டும். காக்கை கழார்க் கொள்ளும் சோற்றுப் பலிக்காகக் காத்திருக்கும் செய்தியைக் கூறுகின்றது 281 ஆம் செய்யுள். 'கோடைத் திங்களும், யாம் தன் உழையம் ஆகவும் பனிப்போள் வாடைப் பெரும்பனிக்கு என்னாவாளோ?' என வருந்தும் தலைவனை 312 ஆம் செய்யுளில் இவர் காட்டுவர்.

கள்ளிக்குடிப் பூதம்புல்லனார் 331

இவர் கள்ளிக்குடி என்னும் ஊரினர். குறுந்தொகையின் 190 ஆவது செய்யுளைச் செய்தவரும் இவரே என்பார்கள். கள்ளிக்குடி என்பது தென் தமிழ் நாட்டுள்ள ஓர் ஊர் ஆகலாம். பல்லி ஒலிப்பதை நல்ல சகுனமாகக் கொள்ளும் மரபினை இச்செய்யுளில் காணலாம். 'நீங்குக மாதோ நின் அவலம், நயவரு குரல பல்லி—நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படுமே' எனத் தேற்றுகின்றாள் தலைவியைத் தோழி.

காசிபன் கீரனார் 248

காசிபன் என்பவரின் மகனார் இவர். கீரர் மரபினர். இவரைக் காப்பன் கீரனார் என்றும் கொள்வர், காசிபன் என்றும் பெயரைக் கோத்திரப் பெயராகவும் கொள்ளலாம். 'பொய்யிடியை மழைக்குரல்' எனக் கருதி மயிலினம் ஆடிக்களிக்கும் மடமைபற்றிக் கூறுவது நயமான பகுதியாகும்.

காப்பியஞ் சேந்தனார் 246

இவரைக் காப்பியக் குடியைச் சேர்ந்த சேந்தனார் எனவும், காப்பியர் மகனாகிய சேந்தனார் எனவும் கொள்வர். சேந்தனார் என்பது பழந்தமிழகத்தில் பலர்க்கும் வழங்கப்பட்ட பெயராகும். தொல்காப்பியர், காப்பியக்குடிக் காப்பியனார் என்போரும் இந்த மரபினரே யாவர். இச்செய்யுளும் பல்லி நல்ல பக்கத்தே சொல்வது நிகழும் என்ற நம்பிக்கையை உரைக்கின்றது. 'நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கர்த்தேற்றும்' என்று வந்துள்ளமை காணலாம்.

காமக்கணி நப்பசலையார் 243

நப்பசலையார் இவர் எனவும், காமக்கணி என்பது காமக்காணி என்பதன் மருவிய வடிவம் எனவும், அரசர்களால் காமக்கிழத்தியர்க்கு அளித்தலான காணியாட்சியாகிய நிலம் பொருள் பெற்றவர் எனவும் கருதுவர் காமக்கணி என்பது காமக்கண்ணி என்பதன் சிதைவு எனவும், வசீகரமான கண்பார்வை உடையவராதல் பற்றிக் காமக்கணி எனப் பெற்றனர் எனவும் கருதலாம்; இதுவே பொருந்தும். 'காமக்காணி' என்பது பழந்தமிழ் மரபிற்கே குறையாக நிற்பதாக முடியும். 'பிரிதல் ஆடவர்க் கியல்பெனின், அரிது மன்று அம்ம அறத்தினும் பொருளே' என்பது மிகச் செறிவான சொற்றொடர் ஆகும்.

காரிக் கண்ணனார் 237

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பவர் குறுந்தொகையின் 297 ஆம் செய்யுளையும், அகத்தில் 2ஆம் புறத்தில் 5ஆம் பாடியவர். சோழன் சூராப்பள்ளித் துஞ்சிய பெரும் திருமாவளவன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய நன்மாறன் ஆகியோரைப் பாடியுள்ளனர். அவரே இவர் எனலாம். காரி—கரிக்குருவி; கருமை கருமையான கண் பெற்றவர் போலும் இவர். 'உள்ளடி முள்ளும் உறாற்கதில்ல' என்று பிட்டங் கொற்றனை வாழ்த்தியவர் இவர். இச்செய்யுளுள், ஆய்அண்டிரன் பரிசில் வழங்குவதற்காகத் தொகுத்து வைத்திருந்த யானைகளின் மிகுதிபற்றி வியப்போடு கூறுகின்றார் இவர். 'இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன் புரவெதிர்ந்து தொகுத்த யானை போல' என்பது அத்தொடர்களாம்.

காவன்முல்லைப் பூதனார் 274

இவர் காவல் முல்லைத் துறைபற்றிய செய்யுட்களை இயற்றுவதில் வல்லவராயினமையாலும், பூதனார் என்னும் இயற்பெயர் உடைமையாலும் இவ்வாறு வழங்கப் பெற்றனர் என்பர். முல்லை நிலஞ் சார்ந்தவர் எனவும், காவல் தொழிலர் எனவும் கருதுவர் சிலர். குமிழ மரங்களின் பழங்கள் உதிர்ந்து கிடப்பதை 'இழைமகள் பொன்செய் காசின் ஒண்பழம் தாஅம்' என்று நயம்பட உரைப்பர் இவர்.

காவிரிப்பூம் பட்டினத்துச் செங்கண்ணனார் 389

காவிரிப்பூம் பட்டினத்தார் இவர். செங்கண்ணன் இவர் பெயர். 'காரிக்கண்' போல இவர் கண்கள் செம்மை பெற்றிருந்தமையின் இப்பெயர் பெற்றவரும் ஆகலாம். இனிச் 'செங்கண்' 'கடுங்கண்' என்பவை அரசகருமத்தவர் சிலரைக் குறிக்கும் பதவிப் பெயர் என்பதும் கூறப்படும். இவர் குறுந்தொகையின் 347ஆம் செய்யுளைச் செய்த சேந்தங்கண்ணனார் என்பாரினும் வேறானவர் எனவும், இருவரும் ஒருவரே எனவும் வழங்குவர். கள்ளிலுக்கு உரியவனான அவியனின் மலைவளத்தை இவர் சிறப்பித்துள்ளமையால், அவன் காலத்தவராகலாம். இவர் குறிஞ்சியை மிகச்சுவையாக எடுத்துக்காட்டும் புலமையாளர் என்பதற்கு இச்செய்யுளே நல்ல சான்றாகும். 'சேவலொடு சிலம்பின் போகிய சிதர்கால் வாரணம், முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப்பல நன்பொன் இமைக்கும் நாடன்' என்பது, பொன்கொழிக்கும் தமிழகத்தை நம் நினைவிற் காட்டுவதாம்.

கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் 218

'கிடங்கில்' இன்றைய திண்டிவனப் பகுதியில் இருந்த ஓர் ஊர். இவர் பெயர் கண்ணனார். காவிதிப் பட்டம்பெற்ற கீரன் என்பாரின் மகனார் இவராவர். 'செம்மை சான்ற காவிதி மாக்கள்' என்பதனால், காவிதிப்பட்டம் பெறற்குரியவர் செம்மையாளர் என்பதும் விளங்கும். 'எட்டி காவிதிப் பட்டம் தாங்கிய மயிலியல் மாதர்' என்பதனால், ஆடவர்போலவே மகளிரும் இப்பட்டம் பெறுவதற்கு உரியவர் எனலாம். இவ்வூரவர்கள் கிடங்கில் குலபதி நக்கண்ணனார் (குறுந்.252), காவிதிப் பெருங்கொற்றனார் ஆகியோரும் ஆவர். பிரிந்துறையும் தலைவியின் மனநிலையை உருக்கமாகக் காட்டுவது இச்செய்யுளாகும்.

கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் 364

இவரும் கிடங்கிலைச் சேர்ந்தவர்; காவிதிப் பட்டம் பெற்றவர்; கொற்றனார் என்னும் இயற்பெயரினை உடையவர். 'பெரும்' என்பது இவர்தம் சிறப்புடைமையால் சேர்ந்துள்ள அடையாகும். வரைவிடை வைத்துப் பிரிந்துபோன தலைவனின் நினைவாலே வருந்தி நலியும் ஒரு தலைவியின் சோகத்தை உருக்கமாகப் படம்பிடித்துக் காட்டுவது இச்செய்யுளாகும். 'உயிர் செலத் துனிதரு மாலை' என்று மாலைக்குக் குறித்துள்ள பண்பு ஏக்கத்தின் குரலாகும்.

கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சோகோவனார் 365

கிள்ளிமங்கலத்து உழவர்குடியைச் சேர்ந்தவர் இச்சான்றோர்; இவர் பெயரைச் சொகிரனார் எனவும் சிலர் காட்டுவர். 'மங்கலம்'—இறையிலியாக அளிக்கப்படும் ஊராகும். 'கிள்ளி மங்கலம்' என்பது கிள்ளியின் பெயரால் அளிக்கப்பெற்ற ஊரென்று காட்டும். 'கிழார்' வேளாண்குடியென உணர்த்தும். சோகோவனார் இயற்பெயராகவும் காரணப் பெயராகவும் கொள்ளலாம்; சிலர் சேரகோவனார் எனவும் கொள்வர். இச்செய்யுள் வரைகடந்த வேதனையாலே துடிக்கும் பெண், மரபு கடந்த செயலையும் செய்வோமா என நினைக்கின்றதன் எல்லையைக் காட்டுகின்றது. 'நீ சான்றோன் அல்லன்' என்று சொல்லிவர அவனூர் போவோமா?' என்று கேட்கும் உள்ளத்திலே கனன்று எழும் துயரத்தீயை நாம் நினைக்கும்படி செய்துவிடுகின்றார் இவர்.

குடவாயிற் கீரத்தனார் 212, 379

தஞ்சை மாவட்டக் கொடவாசல் ஊரினர் இவர். இவர் கழுமலப் போரைப்பற்றிப் பாடியவர். சோழர் குடந்தைக்கண் வைத்த பெருநிதியும் இவராற் குறிக்கப்படும். நக்கீரர் போன்ற பெரும்புலவர்கள் காலத்தவர். பார்வைப் புள் வைத்து வேடர்கள் பறவைகளைப் பிடிப்பதைப்பற்றி 212ஆம் செய்யுளில் இவர் கூறுவர். 'பம்பை' என்னும் பழைய தோல்வாத்தியக் கருவிபற்றிய குறிப்பையும் இச்செய்யுளிற் காணலாம். 'தேர்வண் சோழர் குடந்தை வாயில்' என்று 379ஆம் செய்யுளில் இவர் குறிப்பிடுவது கொண்டே இவர் பெயர் குடவாயிற் கீரத்தனார் என வழங்கப் பெற்றதாகவும் கூறலாம். வயிற்றில் அடித்துச் சிவந்த கைவிரல்கள் காந்தள் பூக்கள் போன்று விளங்கும் என்பது சிறந்த உவமையாகும்.

குண்டுகட் பாலியாதனார் 220

பாலியாதனார். என்னும் பெயரினர். ஆதன் எனப் பெயருடையோர் பலர்; அவருள் 'பாலியாதன்' என இவர் சிறப்பிக்க பெறுகின்றனர். 'பாலி' பாழியின் சிதைவெனக் கொண்டு பாழிப்பகுதியினர் என்பர் சிலர். 'குண்டு கண்' என்பது உறுப்பமைதியால் வந்த பெயரும் ஆகலாம், செங்கண் காரிக்கண் போன்று. இச்செய்யுளில் வரும் நகைச்சுவை வியக்கத்தக்கது. 'சிறுகுறு மாக்கள் பெரிதும் சான்றோர்' என்பது அது. பிறர் சான்றோர் ஆகார் என்பதும் அதன் கருத்தாகலாம்.

குதிரைத் தறியனார் 296

குதிரைத் துறையனார் என்றும் இவர் பெயரைக் கூறுவர். திறையனார் என்பாரும் உளர். இவர் குதிரைமலைப் பகுதியினர் என்பவர் மற்றும் சிலர். ஆனால், இவர் பழங்காலத்துக் கடற்கரையிலே வந்து இறங்கும் குதிரைகளை வாங்கி விற்கும் தொழிலுடையவராயிருந்தனர் எனலாம். பழங்கால மெசபொட்டேமியா அசிரியாப் பகுதிகளிலிருந்து ஏராளமான குதிரைகளைத் தமிழ் அரசர்கள் தம் படையணிகளுக்கு இறக்குமதி செய்தனர் என்பதனால், இவர் அத்தொழில் நிலவிய கடற்றுறையுள் ஒன்றில் இருந்தவர் என்றே கருதலாம். 'வினையே நினைந்த உள்ளம்' என்னும் இவர் வாக்கினை இச்செய்யுளில் காணலாம்; மிகச் செறிவான சொற்றொடர் அது.

குளம்பனார் 288

இவர் பெயர் குளம்பனார் என்பது. குளம்பாதாயனார் என்று மற்றொரு சான்றோர் பெயரும் காணப்படும். குறிஞ்சிப் பாடல் இது. இதன்கண் மகளது களவு உறவினை அறியாளாய் அன்னை கட்டுக்காணும் மரபு விளக்கப் படுகின்றது. 'செம்முது பெண்டிரொடு' என, அன்னை தன் உதவிக்குக் கொள்வோரது திறமும் காட்டப்படுகின்றது.

குறமகள் குறியெயினி 357

எயினர் மரபினர் இவர். 'எயினி' என்பது குறவர் (எயினர்) குடியினர்களுள் சிலரது பெயராகவும் வழங்கும். குறி எயினி என்பதில் வரும் 'குறி' என்பது 'குறிப்பு' என்று பொருள்படும். இச்செய்யுளில் வரும் 'என் குறிப்பு என்னொடு நிலையாதாயினும்' என்ற தொடரால் இவர் இப்பெயர் பெற்றனர் எனவும் கருதலாம். இக்குறிஞ்சித் திணைச் செய்யுள் பெண்ணின் மனவுறுதியைச் சிறப்புறக் காட்டுவதாகும். 'சாரல் நாடனொடு ஆடிய நாளே...என்னொடு நிலையாதாயினும், என்றும் நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே" என்று தலைவி கூற்றாக இவர் காட்டுவது காணலாம்.

குன்றியனார் 239

இவர் பாடிய செய்யுள் மற்றொன்றை (நற் 117) நற்றிணை முதற்பகுதியுள் காணலாம். குறுந்தொகையுள் 6 செய்யுட்கள் காணப்படும். தொண்டிப் பகுதியினர் இவர் எனவும் சிலர் கருதுவர். நெய்தல் திணைச் செய்யுளான இது தோழி கூற்றாக மிகவும் இனிமை செறிய அமைந்த சிறப்பினதாகும்.

குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார் 332

கண்ணத்தன் என்னும் பெயருடையாரான இவர் குன்றூர் கிழாரின் மகனார். குன்றூர் என்பது குறிஞ்சிப் பகுதிச் சிற்றூர். இச்செய்யுளும் குறிஞ்சிச் செய்யுளே. 'குவளை குறுநர் நீர்வேட்டாங்கு, நாளும் நாள் உடன் கவவவும், தோளே தொல்நிலை வழீஇய நின் தொடி' என்று இவர் கூறுவது, சிந்தையைப் பிணிக்கும் சிறப்பினதாகும்.

கடலூர்ப் பல்கண்ணனார் 380

கூடலூர்ப் பல் கண்ணனார் எனவும் இவர் பெயர் வழங்கும், 'பல் கண்' என்பது வண்ணக்கண் போன்று அரசகருமத்துள் ஒன்றெனவும் கருதுவர். அதனைச் செய்து வந்தவர் இவராகலாம். ஊர் விழாவைக் குயவன் சென்று ஊராருக்கு அறிவிப்பதை இவர் நற்-200இல் காட்டுவர். இச்செய்யுளில், தன் தலைவனின் பரத்தமையால் மனம் நொந்த தலைவியானவள், அவன் பாணனிடம்,

'நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு
மாசுபட் டன்றே கலிங்கமும்; தோளும்
திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்ற
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே
வாலிழை மகளிர் சேரித் தோன்றும்
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்...'

என்று சொல்வதாக அமைந்துள்ள சொற்கள், உயிரோவிச் சித்திரங்கள் என்று கூறலாம். இவர் நடுகாட்டுக் கூடலூரினிர் என்பர் சிலர்.

கூற்றங் குமரனார் 244

குமரனார் என்னும் பெயரினர் இவர், சல்லியங்குமரனார் என்றாற்போல. கூற்றனின் மகனார் இவரெனவும், 'கூற்றம்' என்னும் நிலப்பகுதிக்குத் தலைவராயிருந்தமையினால் கூற்றங் குமரனார் எனப் பெற்றனர் எனவும் கருதுவர். வண்டைத் தன் துயரத்தை எடுத்துச் சொல்லுமாறு கேட்பதாக அமைந்த இச்செய்யுள் மிகவும் வளமையுடையதாகும்.

கொற்றங் கொற்றனார் 259

கொற்றனார் பெயரால் வழங்கும் நற். 31 ஆவது செய்யுளைப் பாடியவர் ஒருவர்; இவர் வேறு ஒருவர். செல்லூர்க்கிழார் மகனார் பெருங்கொற்றனார் எனவும், செல்லூர்க் கொற்றனார் எனவும் வழங்கும் வேறு புலவர்களும் காணப்படுவர். கொற்றம் உடையவர் என்பதனால் கொற்றங் கொற்றனார் எனக் குறிக்கப் பெற்றிருக்கலாம். இக்குறிஞ்சிச் செய்யுள் செறிப்பு அறிவித்து வரைவு வேட்டலாக அமைந்த சிறந்த செய்யுளாகும். 'பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை' என்று, இவர் களவுக் காதலை வியந்து கூறுவர்.

கோட்டியூர் நல்லந்தையார் 211

கொட்டியூர் நல்லெந்தையார் எனவும் இவர் பெயர் காணப்படும். கோட்டியூர் பாண்டிநாட்டுச் சிறப்புடன் விளங்கிய ஊர்களுள் ஒன்றாகும். நல்லந்தையார் என்பது நல்லன் தந்தையார் என்று பொருள்கொள்ளற் குரியது என்பர். 'நல்லந்தை' என்பது பெண்பாற் பெயரெனவும் கொள்வர். இச்செய்யுள் நெய்தல் நிலத்தை நன்கு ஓவியப்படுத்தும். 'நீர்க்குருகின் குத்துக்குத் தப்பிய இறாமீன், தாழை முகையைக் கண்டு வெருவி ஓடும்' என்று மிக நயமாகக் கூறுவதைக் காணலாம்.

கோவூர் கிழார் 393

தொண்டைநாட்டுக் கோவூரினர் இவர். சோழன் நலங்கிள்ளி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்தவர். இவருடைய புறப்பாடல்கள் 15 உம் சரித்திரச் சிறப்புடையனவாகும். அஞ்சாமையுடன் உண்மையை எடுத்துரைத்து அறம்பேணும் மனத்திறன் பெற்றவர் இவர். இது குறிஞ்சிச் செய்யுள். 'களவுக் காதலர் அவர்கள்; அவன் புதியவன் போல் வரைவுவேட்டு வருகின்றான் போலவும், வதுவை நாளன்று அவள் நாணத்தோடு ஒடுக்கமாக இருப்பது போலவும் மனக்கண்ணிற் கண்டு தோழி கூறுவதில் நகைச்சுவையும் ஆர்வமும் மரபும் ஒளிசெய்யக் காணலாம்.

கோளியூர்கிழார் மகனார் செழியனார் 383

செழியனார் இவர் பெயர். கோளியூர் கிழார் மகனார் இவர். வேளாண் தொழில் செய்து சிறந்தவர். இவர் பாண்டிய நாட்டார் என்பது தம் மகனுக்குச் செழியன் எனப் பெயரிட்டதனாலேயே அறியத்தகும். 'கோழி'யூர் என்பதே கோளியூர் என 'ழ'கரம் பேதப்பட்டதாகலாம். 'கொடிய இரவிலே காட்டுவழி வருகின்ற நீதான் எமக்கு அருளினவன்போன்று தோன்றினும், உண்மையிலே அருளினவன் அல்லைகாண்; வழியேதம் நினைத்து எம்மைத் துயரப்படவே வைத்தனை' என்று தோழி சொல்வதாக வருவது பெண்களின் சிறந்த மனநிலைக் காட்சியாகும்.

சீத்தலைச் சாத்தனார் 339

இவர் வாணிக மரபினர். மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனவும் வழங்கப்பெறுவர். சீத்தலை ஊர் எனவும், தமிழ்ப் பற்று மிகுதியால் புன் செய்யுட்களைக் கேட்கும்போது எழுத்தாணியால் தலையிற் குத்திக் குத்திப் புண்பட்டதால் வந்த பெயர் எனவும் உரைப்பர். மணிமேகலை செய்தவர்; இளங்கோ, செங்குட்டுவன் ஆகியோரின் நண்பர். சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைப் பாடியவர் (புறம்.59). அகத்தும் குறுந்தொகையினும் இவர் செய்யுட்கள் காணப்படும். தலைமகன் வரைந்து வராமையால் தலைவியும் தோழியும் கொள்ளும் வேதனை மிகுதியை, 'இருவேம் நீந்தும் பருவரல், வெள்ளம்' என்று கூறியவர் இவர்.

சேந்தன் பூதனார் 261

இவர் இயற்பெயர் பூதனார் எனவும், சேந்தனாரின் மகனாராக இவர் இருக்கலாம் எனவும் கருதுவர். 'தோழி, காதலர் அருளிலர், பெருவரைச் சிறுநெறி வருதலானே' என்று சொல்வதாக வரும் தொடர் மனத்தை உருக்குவதாகும்.

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் 386

இவர் மதுரையையடுத்த திருத்தங்கால் என்னும் ஊரினர். ஆத்திரேயன் என்னும் சொல் கோத்திரத்தைக் குறிப்பதாகக் கொண்டு இவரைப் பார்ப்பன மரபினர் என்பர் சிலர். ஔவை அவர்கள் ஆத்திரேயன் என்பது தவறு; ஆதிரையான் என்று கொள்வதே பொருந்தும் என்பார்கள். இவ்வாறு கொள்ளின் ஆதிரையானின் மகனார் என்று அப்போது கொள்க. இது குறிஞ்சித்திணைச் செய்யுள். 'பன்றி ஏனல் கதிரைத் திருடித்தின்றுவிட்டு, வேங்கைக்கும் அஞ்சாது கழைவளர் சாரல் துஞ்சும் நாடன்' என்பது களவில் இன்பந்துய்த்தும், அலருக் கஞ்சாது வாளாவிருக்கும் தலைவனை நன்கு நினைப்பிப்பதாகும்.

தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் 313

இவரும் திருத்தங்கால் ஊரினர். பொற்கொல்லர்; வெண்ணாகன் என்னும் பெயரினர். இனிப் பொன்செய் கம்மியன் கைவினைபோல, வேங்கை நாளுறு புதுப்பூத் தோன்றும் என்ற நயம்பற்றிப் பொற்கொல்லன் என்று குறித்தனர் என்றும் கருதலாம். 'தோடு புலர்ந்து அருவியின் ஒலித்தல் ஆனா நாம் கூஉம் தினையே' என்று முற்றிய தினைப்பயிரை ஓவியப்படுத்துவர் இவர். இன்றைக்கும் இவ்வூர்ப் பகுதிகளில் தினை பயிரிடுவாரைக் காணலாம். ஆகவே, கண்டறிந்த உண்மைகளை இலக்கியப்படுத்திய சிறப்பினர் இவர் எனலாம்.

தாயங்கண்ணனார் 219

எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் என்பாரும் இவரும் வேறானவர் எனலாம். கண்ணனார் இயற்பெயர் எனவும், 'தாயன்' தந்தையார் பெயர் எனவும் கொள்ளலாம். ஈசனைத் 'தாயுமானவன்' என்பது மரபு; அக்கருத்தே 'தாயன்' என்னும் பெயருக்கும் தோற்றமாகலாம். 'தாயம்' உரிமை எனக் கொள்ளின், அரசால் உரிமையாக நிலமோ யாதோ வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றவர் எனலாம். நெய்தல் திணைச் செய்யுள் இது. 'பரதவர் படகுகளில் வைத்துள்ள விளக்குச் சுடர்கள் முதிரா ஞாயிற்று எதிரொடு கடுக்கும்' என்ற உவமையால், இவர் கடற்கரை நாட்டவர் எனவும் கொள்ளலாம்.

தும்பிசேர் கீரனார் 277

'அம்ம வாழியோ, அணிச் சிறைத் தும்பி' எனக் குறுந்தொகையுள் (392) பாடிய நயத்தால் தும்பிசேர் கீரனார் எனப் பெற்றனர் என்பர். தும்பி சொகினனார் எனவும் சிலர் கருதுவர். பாலைத்திணை சார்ந்த இந்தச் செய்யுளையும் 'கொடியை, வாழி தும்பி' என்றே தொடங்குகின்றார். 'மெய்யோ கருமை அன்றியும், செல்வன் அறிவும் கரிதோ அறனிலோய்' என்று கேட்பது மறக்க முடியாத வாசகமாகும். தும்பிவிடு தூதில் மிகவும் நயமுள்ள, படித்துச் சிந்தித்து இன்புறவேண்டிய, செய்யுள் இதுவாகும்.

துறைக்குறுலாவிற் பாலங்கொற்றனார் 286

கொற்றனார் இவர் பெயர்; சிறந்த வில்லாண்மை உடையவர் என்பதால் 'மாவிற்பால' என்ற அடை பெற்றனர்; 'துறைக்கு உறும்' என்பது இவரது காவற்றொழிலின் செவ்வியைக் குறிப்பதாகலாம். போர்த்துறையில் பணியாற்றியவர் என்பது பொதுவான கருத்து. 'விம்மி விம்மி நொந்து நொந்து இனைதல்' என்று தலைவியின் நிலையைக் குறிப்பது உள்ளத்தில் நிலைக்கும் சோக ஓவியமாகும். குமிழம்பூ காற்றிலாடுவது, மகளிர் காதுகளில் அணிந்துள்ள குழைகள் ஆடுவதுபோன்றிருக்கும் என்பது அழகிய உவமையாகும்.

தேய்புரிப் பழங் கயிற்றினார் 284

இச்செய்யுளில் வரும், 'தேய்ப்புரிப் பழங்கயிறு போல வீவது கொல் என் வருந்திய உடம்பே' என்னும் நயமிக்க தொடரால் பெயர் பெற்றவர் இவர். 'செய்வினை முடியாது எவ்வம் செய்தல், எய்யாமையோடு இளிவு தலைத்தரும்' என்பது இவருடைய, மறக்கமுடியாத மற்றொரு பொன்மொழி போன்ற தொடராகும்.

தேவனார் 227

இவரைப் பூதன் தேவனார் என்பர் சிலர். தேவன் என்னும் பெயர் வழக்கு; இவரைத் தேவகோட்ட வழிபாட்டுத் தொடர்பினர் என நினைக்கவும் செய்யும். இப்பாடலுள் 'பசும் பூண் சோழர் கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்' என்று இவர் கூறுவதனால், இவரைத் தொண்டைநாட்டு ஆர்க்காட்டினர் எனக் கொள்வதும் பொருந்தும்.

தொல் கபிலர் 276, 328, 399

கபிலரினும் பழைமை வாய்ந்தவர் இவர். நற். 114ல் 'புள்ளித் தொல்கரை' எனக் கூறிய நயத்தால் இப்பெயர் பெற்றனர் என்றும் கருதுவர். 'இல்லுறை கடவுட்கு மகளிர் பலியிடும் வழக்கம்' இவருடைய அகநானூற்றுச் செய்யுளால் அறியப்படும். பழங்கால மக்களுடைய வழக்காறுகள் பலவற்றையும் இவர் தம் செய்யுட்களுள் எடுத்துக் காட்டுவர். 'குறவர் மகளிரேம் குன்றுகெழு கொடிச்சியேம்' (276) 'வாங்கு அமைப் பழுநிய நறவு' (27) என்றெல்லாம் ஒலிச்சிறப்பும் கருத்துவளமும் இவர் வாக்கில் அணிபெற இணைந்து நடனமிடும். 'கலம் பெறு விறலி, வெண்கிழி வேண்டாது ஆடும்' காட்சி (328) யும் இவர் செய்யுளிற் காணப் பெறும்.

நக்கீரனார் 258, 340, 358, 367

இவர் 'கணக்காயனார் மகனார் நக்கீரனார்' என்னும் சிறப்புடையோர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தவர். 'உண்பது நாழி, உடுப்பவை இரண்டே, பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே' (புறம் 189) என்று சமத்துவக்குரல் எழுப்பிய சான்றோர். மருங்கூர்ப் பட்டினச் சிறப்பும் (258), வாணன் சிறுகுடி வளமும் (340), பசும்பூண் வழுதி மருங்கையும் (358), அருமன் பேரிசைச் சிறுகுடியும் (367) இந்நூற் செய்யுட்களுள் இவரால் சிறப்பித்துக் கூறப்பெறுகின்றன. இவர் வரலாறு விரிவானது; இவர் புலமையோ அளவிட்டுக் கூறமுடியாத அளவினது.

நப்பாலத்தனார் 240

அத்தனார் இவர் பெயர். 'ஐதே கம்ம இவ்வுலகு படைத்தோனே' எனப் பாலினை எடுத்துக் கூறிய சிறப்பால் 'நப்பால்' என்று சிறப்பிக்கப் பெற்றனர். இப்பாலைத் திணைச் செய்யுள் ஏக்கப் பெருமூச்சின் எழிற் சித்திரமாகும்.

நம்பி குட்டுவர் 236, 345

'குட்டுவர்' என்னும் சேரவரசர் பரம்பரையைச் சார்ந்தவர் இவர். 'நம்பி' என்னும் சிறப்புப் பெயரினர். குறுந்தொகையுள் 109, 243 ஆம் செய்யுட்களையும் பாடியவர். கைகடந்த காம நோயினை, 'நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும் தீயுமிழ் தெறலின் வெய்தாகின்றே (236) எனவும், 'வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே!' எனவும், உருக்கமாக மனவேதனைகளைக் காட்டும் சொற்றிறன் அமைந்தவர் இவர். நற்றிணை 145 ஆம் செய்யுளையும் செய்தவர்.

நல்லூர்ச் சிறுமேதாவியார் 282

நன்பலூர்ச் சிறு மேதாவியர் எனவும் வழங்குபவர் ஒருவர் காணப்படுவர். இவர் நல்லூரினர் என்பதனால் இவ்வாறு குறிக்கப் பெற்றனராகலாம். 'அகில் சுடு கானவன் உவல்சுடு கமழ்புகை ஆடு மழை கங்குலின் மறைக்கும் நாடு' எனக் குறிஞ்சி வளம் பாடியவர் இவர்.

நல்வேட்டனார் 292

மிளைகிழான் நல்வேட்டனார் எனவும் கூறுவர். அவர் பாடியதாக வருவன 210, 349 ஆம் செய்யுட்கள். வேளாண் குடியினர். இது—292— குறிஞ்சித் திணைச் செய்யுள். இரவுக்குறி மறுத்து வரைவு வேட்டலாக அமைந்தது.

நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் 382

இவர் பெயர் நிகண்டன் என்பது. இது ஒருவகைத் துறவு நெறி எனவும் கருதுவர். கலைக்கோட்டுத் தண்டினராகத் தோன்றியமையின் இப்பெயர் பெற்றவர் ஆகலாம். 'ஆருயிர் அழிவதாயினும் பழியுண்டாதலின் காமநோயை மறைத்தல் வேண்டும்' என்று பெண்கள் கருதும் மனப்பாங்கை இச்செய்யுளிற் காணலாம்.

நொச்சி நியமங்கிழார் 208, 209

நொச்சி வேலி சூழ்ந்த நியமம் என்னும் ஊரைச் சார்ந்த வேளாண் குடியினர் என்பர். நியமம் நெகமம் என்னும் இந்நாளைய ஊர் எனவும் கொள்வர். பூக்கோள் காஞ்சியாக அமைந்த இவரது புறச் செய்யுள் (293) மிகச்சிறந்த பொருட் செறிவு உடையதாகும். நொச்சித் திணை என்பது புறத்துறைகளுள் ஒன்று. அதனை முறைமை தவறாமல் போற்றி வாழ்ந்த மறமாண்பினர் இவர் எனக் கொள்வதும் இவர் பெயருக்குப் பொருத்தமாகலாம். காமநோயின் தன்மையை, 'படுங்கால் பையுள் தீரும்; படாஅது தளிருங்காலை யாயின், என் உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே' என்று இவர் உருக்கமாக எடுத்துக் கூறியுள்ளனர் (209).

பரணர்: 201, 247, 260, 265 270, 280, 300, 310, 350, 356

இவர் கபிலரோடு ஒருங்கு சேர்த்து உரைக்கப்படும் சிறப்பினர். வரலாற்றுச் செய்திகளைத் தம் செய்யுட்களில் அமைக்கும் வரலாற்று மனத்தினர். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்துள் (ஐந்தாம் பத்து) பாடிப் பெரும் பரிசில் பெற்றவர். கொல்லித் தெய்வம் காக்கும் குடவரை பற்றியும் (201), புலிகொன்ற யானையின் செங்கோட்டைக் கழுவுவதற்கு மழை பெய்த சிறப்பையும் (247), தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன் மலிபுனல் வாயில் மிஞிலி காக்கும் பாரம் பற்றியும் (265), இருப்பை நகரம் பற்றியும் (266), மாரி வண் மகிழ் ஓரி கொல்லி பற்றியும் (265), வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன் பற்றியும் (270), தொன்றுமுதிர் வேளிர் குன்றூர் பற்றியும் (280), தழும்பன் ஊணூர் பற்றியும் (300), தேர்வண் விராஅன் இருப்பை பற்றியும் (350), இவர் செய்யுட்கள் நமக்குக் கூறுகின்றன. இவற்றுடன் மக்களின் மனப்போக்குகளையும் நெகிழ்ச்சிகள் கலக்கங்களையும் வளமான சொற்களால் வகையுற அமைத்துக் காட்டி வான்புகழ் பெற்றவர் இவர், இவரைப் பாணர் மரபினர் என்பர். ஆதியில் 'பரண்காவல்' மேற்கொண்டிருந்த காரணத்தால், பெரும்புலவரென மதிக்கப் பெற்ற பின்னரும், அப்பெயரே பெயராகப் பெற்று நிலவலாயிற்று என்றும் கருதலாம்.

பாண்டியன் மாறன் வழுதி 301

இவன் பெயரே இவனைப் பாண்டிய மன்னர் குடியினன் என்று காட்டும். தன் மகள் கன்னிமை எழிலிலே நாளுக்குநாள் கவின்பெற்று விளங்கக் கண்டு வியந்து வியந்து தாய் பாராட்டிப் பேணுவதாக அமைந்த இச்செய்யுள் மிகவும் செறிவானது ஆகும். உவமைகள் துள்ளிவந்து அழகு செய்கின்றன.

மேனி, குறிஞ்சி நாண்மலர் புரையும் மேனி
கண், மலர்பிணைத்தன்ன மாயிதழ் மழைக்கண்
சாயல், மயில் ஓரன்ன சாயல்
கிளவி, செந்தார்க் கிளிஓரன்ன கிளவி
தோளி, பணைத்தோள்
வனப்பு, பாவையன்ன வனப்பு

என்று ஓவியப்படுத்தும் புலமை நயம் உடையவர் இவர்.

பாலை பாடிய பெருங்கடுங்கோ 202, 224, 256, 318, 337, 384, 391

சேர மன்னர் குடியினருள் கடுங்கோ மரபில் தோன்றியவர். பாலைத் திணை பாடுவதில் வல்லவர். கலித்தொகையுள் செறிவுடைய பாலைக்கலியோடு, மற்றும் சங்கநூற்களுள் 23 செய்யுட்களும் இவர் பெயராற் காணப்படும். போர் மறவனையும் வியந்து, 'சேண்விளங்கு நல்லிசை நிறீஇ நாநவில் புலவர் வாயுளானே' என்று பாராட்டிய மன்னன் இவன். 'கிழவர் இன்னோர் என்னாது பொருள்தான் பழவினை மருங்கில் பெயர்பு பெயர்பு உறையும் (கலி. 21)' என்று தத்துவம் காட்டுபவன் இவன். இவனே பெருஞ்சேரல் இரும்பொறை என்பதும் பொருந்தும். 'அறுமீன் கெழீஇய அறம் செய் திங்கள் செல்சுடர் நெடுங்கொடி போல (202) என்று கார்த்திகை விளக்கீட்டைக் கூறியுள்ளவன் இவன். இதனால், கார்த்திகைப் பெருவிழாவும் அது பற்றிய தமிழர்களின் நம்பிக்கையும் மிகமிகப் பழமையுடையன என்பதனை அறியலாம். 'புணர்ந்தீர் புணர்மினோ, என இணர்மிசைச் செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும்' இன்ப வேனிலை 224ஆம் செய்யுளிற் காணலாம். 'உலகம் படைத்தகாலை, தலைவ! மறந்தனர் கொல்லோ சிறந்திசினோரே' (337) என்று கேட்பவன் இவன். பிரிய நினைக்கும் தலைவனிடம் 'நாண்விட்டு அருந்துயர் உழந்த காலை மருந்து எனப்படூஉம் மடவோள் (381), எனத் தலைவியை அறிமுகப் படுத்தும் பண்பினன் இவன். 'நன்னன் நல் நாட்டு ஏழிற்குன்றம் பெறினும், பொருள் வயின் யாரோ, நின் கண் தெண்பனி கொளப் பிரிகிற்பவர்?' என்று தலைவியைத் தோழி தேற்றுவதாகக் காட்டும் 391ஆம் செய்யுள், பிறர் நாட்டுச் சிறப்பையும் வியந்து போற்றும் இவனது மனச்செவ்வியைக் காட்டுவதாகும்.

புதுக்கயத்து வண்ணக்கண் கம்பூர் கிழான் 294

கம்பூர் கிழான் என்னும் பெயரோடு விளங்கிய இவர் வேளாண் மரபினர். புதுக்கயம் என்னும் பகுதியிலே 'வண்ணக்கண்' என்னும் பொறுப்பேற்று வாழ்ந்தவர். உள்ளே கனன்று எரியும் காமநோயினை, 'தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு' என வெம்மை புலப்பட எடுத்துக்காட்டிய புலமைத் திறத்தினர்.

பெருங்குன்றூர் கிழார் 347

குன்றூர் போலவே பெருங் குன்றார் என்பதும் பழைய காலத்து ஊர்களுள் ஒன்றாகலாம். அவ்வூரின் வேளாண் மரபினர் இவர் ஆகலாம். இனி இச்செய்யுளுள் வரும் 'பெருவரை நாடன்' என்னும் குறிப்பால் இப்பெயர் பெற்றனர் என்றும் கருதுவர். குறிஞ்சித் திணைச் செய்யுள் இது. சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறையை பதிற்றுப் பத்துள் ஒன்பதாம் பத்திற் பாடிய சிறப்பினர் இவர்.

பெருந்தலைச் சாத்தனார் 262

இவரைப் பெருந்தலையூர்ச் சாத்தனார் என்றும் கூறுவர். சீத்தலை, பெருந்தலை என்பன அக்காலத்து ஊர்களாகலாம். சீத்தலைச் சாத்தனாரினும் பிரித்துக் காட்ட இவரைப் பெருந்தலைச் சாத்தனார் என்றனர். இனி, சீத்தலை, பெருந்தலை எனும் இவையே வாணிக மரபினருள் சாத்துடையோர்களுக்குள் நிலைபற்றியமைந்த தகுதிகளும் ஆகலாம். 'இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்பப் பிரிவு நன்று என்னு மாயின், இன்மையது இளிவு அரிது மன்றம்ம' என்று, காதலன் மனம் வருந்துவதாகக் காட்டுவது இச்செய்யுள்.

பொதும்பில்கிழார் மகனார் வெண்கண்ணியார் 375, 387

'பொதும்பில்' பழம் பேரூர்களுள் ஒன்று. அவவூர்ப் புலவர்களுள் நக்கனார் ஒருவர்; இவர் மற்றொருவர். 'பொதும்பில் கிழார் மகனார்' என்பதனால், இவ்வெண் கண்ணியார் அவர் மகன் எனலாம். வெண்கண்ணி என்பது இவர் பின்னர் வாழ்ந்த ஊரின் பேரும் ஆகலாம். சில பதிப்புகளில் 387ஆம் செய்யுள் பொதும்பில் கிழார் பாடியதெனவும் காணப்பெறும். 'உரவுத்திரை எறிவன போல வரூஉம்' என்பார் இவர் (375) 387ஆம் செய்யுள் தலையாலங்கானப் போர் வெற்றி பற்றிக் குறிப்பிடுவதனால், இவரை அக்கால வட்டத்தினர் என்று கருதுவதும் பொருந்தும்.

மடல்பாடிய மாதங்கீரனார் 377

இவர் மடல்பற்றிப் பாடியதனால் இப்பெயர் பெற்றவர். இச்செய்யுளும் மடல் பற்றியே வந்துள்ள மனங்கசியச் செய்யும் செய்யுளாகும். கீரர் குடியினர் எனவும், தங்கால் என்னும் பாண்டிப் பதியினர் எனவும் கருதலாம். மா - சிறந்த; தங்கால் கீரனார் என்று அப்போது கொள்க.

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 297, 321

'ஞாழல்' என்பது கடற்கரைப் பாங்கில் செழித்து வளரும் மரவகை. அவ்வகை மரங்கள் செறிந்த ஊர் 'ஞாழல்' என்று பேர் பெற்றிருக்கலாம். 'மள்ளன்' என்பது இவர் படைமறவர் என்பதைக் காட்டும். 217ஆம் செய்யுள் குறிஞ்சி; 317ஆம் செய்யுள் முல்லை. 'கான முல்லைக் கயவாய் அலரி பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய' என்று இவர் அக்காலத்துப் பார்ப்பன மகளிரது இயல்புகளுள் மலர் சூடும் மரபைக் குறிப்பிட்டுக் காட்டுவர் (321).

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 344

மதுரையில் அறுவை வாணிகம் (துணி வாணிகம்) செய்து வந்தவர் இவர், புலி முழக்கை இடிமுழக்காக நினைத்து, காயப்போட்ட செந்தினை உணங்கலைத் தொகுக்கும் குறிஞ்சி மகளிரை இச்செய்யுளிற் காணலாம்.

மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் 303, 338

ஆருலவிய நாடு என்பது மதுரை சார்ந்த ஒரு நாட்டுப் பகுதி. அப்பகுதியிலுள்ள 'ஆலம்பேரி' என்னும் ஊரினர். இவர் வாணிகச் சாத்தினர். 'பேர்ஏரி' யுள்ள ஊர்கள். பேர் சிதைந்து 'பேரி' என வருவது இயல்பு. கடப்பேரி வேலப் பேரி, என்பவை போல. 'தொன்முது கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை' எனப் பனைமரத்தடியில் தெய்வம் வீற்றிருக்கும் மரபை இவர் காட்டுவர். இச்செய்யுள் இந்த ஆலம்பேரியைக் கடற்கரையூர் என்று கருதச் செய்யும். 'ஆலங்குளம்' என நெல்லை மாவட்டத்துள்ள ஊர்கள் இன்றும் சிலவாகும்.

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் 273

இவர் 'கூத்தனார்' என்னும் சிவன் பெயர் பெற்றவர். சேந்தன், தந்தையார் பெயர். இளம்பால் ஆசிரியன் என்பது இவர் சிறார்களுக்குத் தொடக்கக்கல்வி பயிற்றி வந்தவர் என்று காட்டும். 'குன்ற நாடனை உள்ளுதொறும் நெஞ்சு நடுக்குறூஉம் அவன் பண்பு தரு படரே' என்று பிரிவின் வேதனையால் கலங்கிய மகளிர் வாக்காக இவர் கூறுவது மறக்க முடியாத சிறப்பினதாகும்.

மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் 366

மதுரையிலிருந்த பூதன் தேவனார் என்பார் இவர். மற்றொரு பூதன் தேவனாரும் இந்நூலின் 80 ஆவது செய்யுளைச் செய்தவராகக் காணப்படுகின்றனர். ஈழம் என்பது தற்கால இலங்கையின் பழைய பெயராதலால், இவர், அங்கிருந்து இங்கு வந்து தங்கியவர் என்பர். தென்கிழக்குத் திசைக்கே 'ஈழம்' என்று ஒரு பெயர் வழக்கு உளதாதலின், இவரை மதுரையின் தென்கிழக்குப் பகுதியில் இருந்தவர், முருகாடும் வேலன்போலச் சதுக்க பூதங்கட்கு வழிபாடாற்றி வந்த மரபினர் எனலாம். 'கரும்பின் வெண்முகை வேல்போலத் தோன்றும்' எனவும், 'குரீஇ முயன்று செய் குடம்பை மூங்கில் அம்கழைத் தூங்கும்' எனவும், 'வடபுல வாடைக்குப் பிரிவோர் மடவர்' எனவும் இவர் நயம் பெற எடுத்து உரைப்பர்.

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் 250, 369

வெள்ளையார் இவர் பெயர்; இன்றும் தென் தமிழ்நாட்டுப் பகுதிகளில் வெள்ளைச்சாமி, வெள்ளையம்மாள், வெள்ளையன், வெள்ளைச்சி போன்ற பெயர்கள் வழக்காற்றில் உள்ளன. ‘ஓலைக் கடையம்' என்பது மதுரையில் ஒரு பகுதியாகலாம். பனை ஓலையால் பெட்டிகள் வளைகள் வேய்ந்து விற்கும் தொழில்செய்து வந்தவராகவும் கருதலாம். கடையம் கடகம் என்பன ஓலைப் பெட்டிகளுக்கும் வளைகளுக்கும் வழங்கப்படும் பெயர்கள். இப்பாடலின் (250) போக்கு இவரைப் பெண்பாலர் எனவும் காட்டும். தெருவிலே 'அரிபெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் தேர்நடை பயிற்றும் தேமொழிப் புதல்வனை'க் கண்ட தகப்பன் ஆர்வத்தோடு எடுத்துத் தழுவப் போகின்றான். அவன், தன்னை மறந்து பரத்தை உறவிலே மயங்கிக் கிடந்த வேதனையால் வெதும்பியிருந்த அவன் மனைவிக்கு அதைக் கண்டதும் நெஞ்சம் கொதிக்கிறதாம். 'யாரையோ நீ' எனக் கேட்டுத் தன் குழந்தையைத் தானே முந்திப்போய் எடுத்துக் கொள்கின்றாளாம். ஊடலிலே சிறந்த ஓவியம் இது; பெண்மையைப் புரிந்த பெண்மையின் வாக்கு. 'சிறை அடு கடும் புனல் அன்ன, என் நிறையடு காமம்' என்னும் சொற்களும் வேதனைக் குமுறலை வெளிப்படுத்தும் வெம்மையான சொற்களாம்.

மதுரைக் கண்ணத்தனார் 351

கண்ணத்தன் என்பார் இவர். கண்அனையார் என்று பொருள்படும் சொல் இது. இச்செய்யுள் அருமையான கற்பனை நயம் செறிந்தது. தாய்க்குத் தலைவியின் களவைக் குறிப்பாகத் தோழி உணர்த்துகின்றாள். 'அன்னையே! தெய்வம் பேணி வருந்தல் வேண்டா; புனம் காப்பின், தோழி, தன் நலனை மீளவும் பெறுவாள்' என்கின்றாள், நயமாக.

மதுரைக் காருலவியங் கூத்தனார் 325

இவர் கூத்துத் தொழிலராகவோ, அல்லது கூத்தனாகிய சிவனின் நாமத்தைப் பெயராகப் பெற்றவரோ ஆகலாம். 'கார் உலவி அம் கூத்து' என்பது மேகப் போக்குப்போல அசைந்தாடும் கூத்து வகையாக இருக்கலாம். 'பூப்போல் உண்கண் புதுநலம் சிதைய வீங்குநீர் வாரக் கண்டும் போதல் தகுமோ?' என்னும் கேள்வி, தலைவனின் நெஞ்சைப் பிரிதல் நினைவகற்றித் தடுப்பதாகும்.

மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் 285

வெண்ணாகன் என்னும் பெயரோடு கொற்றொழில் செய்து வந்தவர் இவர். 'இரவின் வருதல் அன்றியும்...அயலோர் அம்பலின் அகலான், பகலின் வரூஉம்' என்று கூறி, வரைந்து வராத தலைவனை நகையாடி, வரைந்துவரத் தோழி கூறுவது சிறந்த பேச்சு மரபாகும்.

மதுரைச் சுள்ளம் போதனார் 215

பூதனார் என்பதே போதனார் என மருவிற்று என்பர். இது நெய்தல் திணைச் செய்யுள். இச்செய்யுளின் அமைப்பு இவர் இரவிலே கடல்மேற் சென்று வேட்டையாடும் மரபினை நன்கு தெரிந்தவராகக் காட்டுமாதலின், இவரைக் கடற்கரையூரவர், மதுரையில் வந்து தங்கியவர் எனலாம். இது நெய்தல் திணைச் செய்யுள். மீன் நெய்யிட்டுப் பரதவர் விளக்கு எரித்த வழக்கத்தை இச்செய்யுளால் அறியலாம். வேட்டையிலே உறுதியோடு முயன்று வெற்றியோடு—வெற்றி கண்டபின்னரே—கரைக்கு மீள்வர் பரதவர் என்பதும் காணலாம்.

மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் 352

சொகுத்தனார் இவர் பெயர்; மதுரையிலிருந்தவர்; மருதங்கிழார் என்பாரின் மகனார். இச்செய்யுள் பாலைத் திணைச் செய்யுள் ஆகும். பாலைப் பகுதியின் வெம்மையை மிகவும் விளக்கமாகக் காட்டுவது இச்செய்யுள். முதுநரியின் நீர் வேட்கையும், அது பேய்த்தேரைக் கண்டு மயங்கித் திரிந்து, பதுக்கை நீழலான ஒதுக்கிடமும் பெறாமல் வாடுவதும் பாலையை நன்கு உணர்த்துவன. அங்கே, தன் உள்ளத்தே மனைவியின் உருவைத் தோன்றக் காண்பவன் 'எப்படி வந்தாளோ?' என்று கவலைப்படுவதாக அமைந்துள்ளது சிறந்த இலக்கிய நயம் ஆகும்.

மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார் 322

சேந்தனாரின் மகனாரான இவர் கொற்றனார் என்னும் இயற்பெயரினர். ஆசிரியத் தொழிலில் ஒரு பகுப்பிலே பணியாற்றியவர். மேனி மாற்றங்களை அன்னை கண்டு, வெறியாடலுக்கு ஏற்பாடு செய்வதுபற்றிக் கூறும் செவ்வி மிகவும் செறிவு உடையதாகும். 'வேலன் இன்னியம் கறங்கப் பாடிப் பன்மலர் சிதறிப் பரவுறும் பலிக்கு இந்நோய் தணிவதாயின், இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை' என்று கொதிக்கின்ற பெண்மையைக் காட்டுகின்றார் இவர்.

மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் 317

இவர் நாகன் என்பார் மகனார்; வேட்டனார் என்னும் பெயரினர். 'பூவண்ட நாகன்' என்பது, பூவினை நாடித் திரியும் வண்டினைப்போல இன்றமிழ்ச்சுவை நாடிப் பலர்பாலும் சென்று பெற்றுக் களித்த தமிழன்பினர் என்றும் உணர்த்தும். இது குறிஞ்சித் திணைச் செய்யுள். பெண்கள் கூடிச்சென்று குவளை மலர்களைக் கொய்து வருவதுபற்றிய செய்தியை இதனாற் காணலாம்.

மதுரைப் பெருமருதனார் 241

பெருமருதனார் என்னும் பெயர் இவர் வையைத் துறைகளுள் ஒன்றான பெருமருதந்துறைப் பகுதியினர் என்பதனால் உண்டாகியிருக்கலாம். திருமருத முன்துறை என்றாற் போல நீர்த்துறைகள், துறைக்கு நிழல் செய்யும் மரங்களை யொட்டிப் பெயர் பெறுவது பண்டைக்கும் இன்றைக்கும் வழக்காகும். அரசடித்துறை, ஆலடித்துறை என்றாற்போல ஆற்றுத் துறைப் பெயர்கள் தென்னாட்டில் வழங்கும். இது பாலைத் திணைச் செய்யுள். 'நில்லாப் பொருட் பிணி' என்று பொருளார்வத்தை விளக்கியவர் இவர். உவமை நயம் நிரம்பிய செய்யுள் இது.

மதுரைப் பெருமருதன் இளநாகனார் 251

இவர் பெருமருதனாரின் மகனார்; இளநாகனார் என்னும் பெயரினர். செறிப்பு அறிவுறுத்தி வரைவு கடாதலாக வரும் இச்செய்யுள் சிறந்த செவ்வி நிரம்பியதாகும். 'தினையே! தோடிடங் கோடாய் நீடினை விளைமோ!' என்று வேண்டுவது அரிய கற்பனை ஓவியம் எனலாம்.

மதுரை பேராலவாயர் 361

பேராலவாயர் எனவும் இவர் பெயர் விளங்கும். இவர் பாடின செய்யுட்களாகத் தொகை நூற்களுள் காணப் பெறுவன ஆறு செய்யுட்கள் ஆகும். பூதப் பாண்டியன் தேவி தீப்பாய்ந்த காலத்திலே இவர் பாடியுள்ள புறப்பாடல் உருக்கம் மிக்கதாகும். அகம் 296 ஆம் செய்யுளுள் இவர் நெடுஞ்செழியனைக் குறித்துள்ளனராதலின், அக்காலத்தவர் எனலாம். வீடு திரும்பிய படைத் தலைவனை அவன் மனைவி வரவேற்று, இன்புறும் நயத்தைத் தோழி நயமாக, ‘அரும்படர் அகல நீக்கி, விருந்தயர் விருப்பினள்’ என்று சொல்வதை, இச்செய்யுளிற் காட்டுகின்றனர் இவர்.

மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் 329

மருதங்கிழார் மகனார் இவர்; சொகுத்தனார் இவர் பெயர் என்பது விளங்கும். இச்செய்யுள் பழந்தமிழரின் தத்துவச் சிந்தனைகளை உணர்த்துகின்ற சிறப்பினது. ‘வரையா நயவினர்; நிரையம் பேணார்’ என்று ஆறலைப்போரை இவர் குறிப்பிடுகின்றார். கணையில் பருந்துச் சிறகைச் செறித்துக் கொள்ளும் வேட்டுவர் மரபையும் இவர் கூறுகின்றனர்.

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் 388

இவரும் மருதங்கிழாரின் மற்றொரு மகனார் ஆவர். பெருங்கண்ணனார் என்னும் பெயரினர். நெய்தல் திணைச் செய்யுளான இது, இரவிலே கடல் மேற் சென்று எறி உளியால், மீன் வேட்டையாடும் வழக்கத்தையும், வேட்டமாடியவர் வைகறையில் கரையேறிப் புன்னை மரத்து நிழலில் அமர்ந்து, கூட்டமாகக் கள்ளுண்டு மகிழும் இயல்பையும் காட்டுகின்றது. ‘பெரிய மகிழும் துறைவன், எம் சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே’ என்று தலைவன் சொல்வது, பெண்மைச் சால்பினைக் காட்டுவதாகும்.

மதுரை மருதன் இளநாகனார் 216, 283, 290, 302, 326, 341, 362, 392

தொகை நூற்களுள் 79 செய்யுட்கள் இவர் பெயராற் காணப்படும். வரலாற்றுச் செய்திகளைத் தம் செய்யுட்களில் அமைத்துப் புரடும் இயல்பினர் இவர். மருதக் கலியின் 35 செய்யுட்களும் பாடியவர் இவரே. பாண்டியன் கூடாகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், நாஞ்சில் வள்ளுவன் ஆகியோரைப் பாடியவர். ‘எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகார் கழனி’ என முருகவேளைக் குறித்துள்ளனர் 216; ‘ஏதிலாளன் கவலை கவற்ற ஒரு முலையறுத்த திருமாவுண்ணி’ என்று இவர் உரைக்கும் வரலாறே சிலம்புக்கு அடிப்படை (216) என்பாரும் உளர். ‘முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி ஏமுற விளங்கிய சுடர்’ எனக் கதிரோனைக் காட்டுவர் (283); ‘வண்டென மொழிப, மகன் என்னாரே’ என்று பரத்தனான தலைவனைப் பழித்துக் காட்டுவர்—(290) இழையணி மகளிரின் விழைதக, நீடு சுரி இணர சுடர்வீக் கொன்றை, விழைதகப் பூக்கும்—302 என்பர்; ‘மீன்குடை நாற்றம் செல்லாது துய்த்தலை மந்தி தும்மும்’—326 என்று குரங்குகளின் இயல்பை எடுத்துக் காட்டுவர்; தலைமகன் தலைமகளைப் பிரிந்து, பாசறையிலிருந்து வருந்துவதாக இவர் ஓவியப்படுத்துவர் 341; ‘நீ விளையாடுக சிறிதே; யானே மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை இரும் புறம் பொருந்தி, அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்; நுமர்வரின் மறைகுவன்’ என்று காதலிக்குக் கூறும் காதலனின் செவ்வி போற்றற் குரியது—362, இவ்வாறெல்லாம் நமக்குப் பழந்தமிழ் மக்கள் வாழ்வின் நயத்தைக் காட்டும் சிறந்த சான்றோர் இவர்.

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் 289

‘மேவார் ஆரரண் கடந்த மாரி வண் மகிழ்த் திதலை எஃகின் சேந்தன்’ என்பான் அழிசி என்பானின் மகன்; ஆர்க்காட்டு ஊரினர். இவர் மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் என்பாரின் மகனாரான குமரனார் என்பவர். ‘காதலர் நிலம் புடைபெயர்வ தாயினும், கூறிய சொல் புடை பெயர்தலோ இலரே’ என்று அந்நாளைய இளைஞரின் சால்பை எடுத்துக் காட்டுகின்றார் இவர். இரவெல்லாம் காம நோய் மூண்டு வருத்துவதற்கு, இடையர் இரவுக் குளிருக்காக நெருப்பிட்டு வைத்துள்ள பெரு மரத்தின் வேர், இரவு முழுவதும் கனன்று கொண்டிருக்கும் நிலையை நயமாக உவமித்தவர் இவர்.

மள்ளனார் 204

இவர் போர் மறவர் என்று கூறலாம். குறுந்தொகையில் 72 ஆம் செய்யுளையும் செய்தவர். இவர் பெயர் அம்மள்ளனார் எனவும் காணப்படும். ‘கொடிச்சி செல்புறம் நோக்கி விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே’ என்று ஒரு காதலின் காதற்பாங்கை எடுத்துக் கூறும் சிறப்பினர்.

மாறோக்கத்து நப்பசலையார் 304

மாறோக்கம் என்பது கொற்கைப் பகுதி சார்ந்த நாட்டின் பழம் பெயர் என்பர். ஓக்கம்— உயர்ச்சி; பெரிதும் உயர்ச்சியுடையது என்பது பொருள். வாணிக வளத்தாலும், பிற வளத்தாலும் சிறப்புற்றிருக்கலாம். நப்பசலையார் பாடிய பாடல்கள் பிற தொகை நூல்களிலும் காணப்படும். ‘புணரிற் புணருமார் எழிலே, பிரியின் மணிமிடை பொன்னின் மாமை சாய, என் அணிநலம் சிதைக்குமார் பசலை’ எனப் பசலையை நயம்பட இச்செய்யுளிற் கூறுவதாலும் இவர் ‘நப்பசலை’ எனப் பெயர் பெற்றிருக்கலாம். ‘அசுணங் கொல்பவர் கைபோல், —விறலோன் மார்பு—நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே’ என்று பிரிவின் கொடுமையை இவர் மனமுருக எடுத்துரைப்பர்.

மிளைகிழான் நல்வேட்டனார் 210, 349

நல்வேட்டன் என்னும் பெயருடைய இவர் மிளை என்னும் பகுதிக்கு உரிமை பெற்று, ‘மிளை கிழான்’ எனப் பெற்றனராகலாம். மிளை—காவற்காடு; ஆகவே, இவ்வூர் காவற்காடு சூழ்ந்திருந்த ஊர் என்பதும் அறியப்படும். இவர் செய்யுட்கள் உலகியல் அறத்தை நுட்பமாக உரைப்பதுடன், இயற்கை எழிலையும், மக்கள் வாழ்வியலையும் நன்கு ஓவியப் படுத்தும் செறிவு பெற்றனவுமாகும்.

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று, தம் செய்வினைப் பயனே!
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே’

என்று திட்பமாக உரைத்த செவ்வியர் இவர் (210) இவருடைய நெய்தற் செய்யுள் காம நோயால் வருந்தும் தலைவனின் நெஞ்சத்தின் நல்ல படப்பிடிப்பு ஆகும்.—349.

முக்கல் ஆசான் நல்வெள்ளையார் 272

முக்கல் என்னும் ஊரினர்; ஆசிரியர் தொழில் செய்தவர்; வெள்ளையார் என்னும் பெயரினர். ‘என் சிறுமை அம்பல் மூதூர் அறிந்தது, அது யான் கொண்ட நோயினும் பெரிதாக என்னை வருத்துகின்றது’ எனத் தலைவியின் மனத் துயரைக் காட்டும் இவர் செய்யுள் உருக்கமானதாகும்.

முடத்திருமாறன் 228

மாறன் என்னும் பெயர் இவரைப் பாண்டிய மரபினர் எனக் காட்டும். ஔவையவர்கள் இவனைத் தொண்டை நாட்டு ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்தவன் எனவும், அதன் பழம் பெயர் திருமுட்டம் என்பதால், முட்டத் திருமாறன் என்பதே பெயர் எனவும் கூறுவர். இடைச் சங்கத்து இறுதியில், பாண்டிய நாட்டை அரசாண்டவன் முடத்திரு மாறன் என்று இறையனார் களவியலுரையால் அறியப் படுவதால், இவனைத் தொண்டை நாட்டுக்கு இழுப்பது சிறிதும் பொருந்துமாறில்லை. இவன் ‘குட்டுவனின் குட வரையை’ எடுத்துக் காட்டியவன் (நற் 105). ‘வரிகொள் சாபத்து எறிகணை’ என்று வில்லுக்கு ‘சாபம்’ என்னும் வேற்று மொழிச் சொல்லை எடுத்தாண்டவன் இவன்.

முதுவெங் கண்ணனார் 232

முது வெண் கண்ணனார் எனவும் சிலர் கருதுவர். ‘இளங்கண், செங்கண்’ என்னும் பெயர்கள் அந்நாள் பெருவழக்காயிருந்தவை. பாண்டி நாட்டு பொதும்பில் வெண்கண்ணனாரினும் வேறுபடுத்த இவரை ‘முதுவெண்கண்ணனார்’ என்றனர் எனினும் பொருந்தும். ‘வேங்கை வீயுக விரிந்த முன்றில் கல்கெழு பாக்கம்’ எனக் காட்டுவது இவருடைய ஊர் என்றே கொள்வதும் பொருந்துவதே யாகும்.

முப்பேர் நாகனார் 314

இவர் நாகனார் என்னும் பெயரினர்; முப்பேர் என்னும் ஊரினர். முப்பூர், முப்பையூர் என்றிருக்கலாம் என்பர். ‘முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தான்; வாழ்நாள் வகையளவு அறிநரும் இல்லை’ என்று நிலையாமை பற்றிக் கூறும் இவர் சொற்கள் பொன் போன்றவை.

மோசி கீரனார் 342

இவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையால் சிறப்பித்துப் போற்றப் பெற்றவர். ‘மோசி’ என்னும் குடியினர் என்பது; அல்லது மோசியூரினர் எனலாம். மோசிக் கண்ணத்தன், மோசி சாத்தன், மோசி கரையன், மோசி கொற்றன் எனப் பலர் மோசிப் புலவர்கள் ஆவர். உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் என்னும் பெயரை நினைத்தால், மோசி என்பவர் மகனார் கீரனார் என்றே கொள்ளத் தோன்றும். ‘நின்வயின் சேரி சேரா வருவோர்க்கு, என்றும் அருளல் வேண்டும், அன்புடையோய்’ என்று, வீட்டுக்கு வந்தவரை உபசரிக்கும் கடமையைக் காட்டித் தலைவனுக்கு இரங்குமாறு தலைவிக்குக் கூறுபவர் இவர்.

வடம வண்ணக்கண் பேரிசாத்தனார் 299, 323, 378

இவர் சாத்தனார் என்னும் பெயரினர். ‘வண்ணக்கண்’ நாணய நோட்டக்காரர் பணி; ‘வடம்’ என்னும் அடையால், வடபகுதிக்குரிய பணி புரிந்தவராகலாம். இஃதே போல், ‘வடம் வண்ணக்கண்’ தாமோதரனார் என்பாரும் குறுந்தொகைப் புலவருள் ஒருவராகக் காணப்படுகின்றனர். கடலலையின் ஒலியினை நற்றிணையின் 378ஆவது செய்யுளுள் பேரிகையின் ஒலிக்கு உவமித்ததால் ‘பேரி’ என்னும் அடை மொழியினை இவர் பெற்றனர் எனக் கருதுவர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பாடியவராதலால், பாண்டி நாட்டாராகலாம். பெரிய சாத்தினை வைத்து, வாணிபம் நடாத்தியவர் என்றும் சிலர் நினைப்பர். ‘நீயும், நின் புதல்வரும், அவர் பெறும் பெரும் புதல்வரும் நீடு வாழ்க’ என வாழ்த்து மரபை வகுத்தவர் இவர். கடல் அலை கரையில் மோதிச் சிதறுவதை ‘வில் எறி பஞ்சி போல, மல்கு திரை வளிபொரு வயங்கு பிசிர் பொங்கும்’ என்றவர் இவர்—299; இவருடைய 318ஆவது நெய்தற் செய்யுள் பிரிவாற்றாமையாற் புலம்பும் தலைவியின் உள்ளத்தை—அதன் வெம்மைத் துயரை நன்கு ஓவியப்படுத்திக் காட்டுவதாகும். ‘நாடாது இயைந்த நட்பு’ எவ்வளவு வருத்தம் தருவதாயிற்று என்று காட்டுவர் இவர்.

வண்ணக்கண் சோருமருங் குமரனார் 257

வண்ணக்கண் நாணய கோட்டக்காரர் பணி என்பர். இப்பெயரால் தமிழகத்துப் பல ஊர்கள் முற்காலத்தும், பிற்காலத்தும் நிலவின. எனவே, ஊரைக் குறிக்கும் என்பதும் பொருந்துவதே. சோருமருங் குமரனார் என்பதை ‘சேரிக்குமரங் குமரனார்’ எனக் கொள்வர் ஔவை. ‘இயங்குநர் மடிந்த, கயம்திகழ் சிறு நெறிக், கடுமா வழங்குதல் அறிந்தும் நடுநாள் வருதி, நோகோ யானே’ என இரவுக் குறி ஏதம் காட்டி மறுத்தலை இவர் கூறுவர்.

வன்பரணர் 374

பரணரினும் வேறானவர் என்று காட்ட வன்பரணர் என்று குறித்திருக்கின்றனர். கொல்லித் தலைவனான வல்வில் ஓரியின் வன்மையை வியந்து பாடியவர். 'களரிப் புளியால் காய்பசி பெயர்க்கும்' மக்களை இவர் செய்யுளிற் காணலாம்.

விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார் 242

பெருங்கண்ணனார் இவர் பெயர். ‘மடமான் விழிக்கட் பேதையோடு’ என மான் கன்றை வியந்து கூறியமையால், இப்பெயர் பெற்றனர் எனலாம். அருமையான முல்லைத் திணைச் செய்யுள் இது.

விற்றூற்று வண்ணக்கண் தத்தனார் 298

விற்றூற்று என்பது பாண்டி நாட்டுளதாயிருந்த ஓர் ஊர் என்பர். வண்ணக்கண் தொழில். தத்தன் இவர் பெயர். இவர் பொற்றேர்ச் செழியனின் கூடலைப் போற்றியுள்ளார். தலைவியைப் பிரியவும் மாட்டாது, பொருள் தேடி வருதலையும் மறக்கவியலாது ஊசலாடும் ஒரு தலைவனை அறிமுகப்படுத்தும் சிறந்த ஓவியம் இச்செய்யுள் எனலாம்.

வினைத்தொழிற் சோகீரனார் 319

இவர் சங்கறுக்கும் தொழிலில் வினைத் திறத்தோடு விளங்கிய சிறப்பால் இப்பெயர் பெற்றவராகலாம். இச்செய்யுள் பழங்கால நெய்தல் மக்களின் நம்பிக்கைகளையும் நமக்குக் காட்டும். ‘அணங்குகள் இரவுப் போதில் நடமாடும்’ என்றும் அறிகின்றோம். ‘தலைமகன் தலைமகளை நினைந்து துஞ்சுதல் பெறானாய்,’ ‘மீன் கண் துஞ்சும் துஞ்சும் பொழுதும், யான் கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே’ என்று வேதனைப்படுவதைக் காட்டுவர் இவர்.

வெள்ளி வீதியார் 335, 348

மதுரை வெள்ளியம்பலத் தெருவில் இருந்தவர். பிரிவு நினைந்து இரங்கலாக இவர் செய்த 14 செய்யுட்களைச் சங்க நூற்களுட் காணலாம். ‘காலே பரிதப்பினவே, கண்ணே நோக்கி நோக்கி வாள் இழந்தனவே’ என்று பிரிவு நோயின் கொடுமையை இவர் குறுந்தொகையுள் (44) காட்டுவர். இவர் செய்யுட்கள் ‘சோக கீதங்கள்’ எனத் தகுந்தவை. ‘காமம் பெரிதே; களைஞரோ இலரே;’ என்னும் சொற்கள் எத்துணைச் சோகத்தின் புலம்பல் என்பதை நினைந்து உருகினாற் காணலாம் (335). ‘என்னொடு பொரும்கொல் இவ் உலகம்? உலகமொடு பெரும்கொல் என் அவலம் உறு நெஞ்சே?’ என்னும் போது, கரை கடந்து உயிரை வதைக்கும் பிரிவுக் கொடுமையை நாமும் உணரலாம் (348).

வெறிபாடிய காமக் கண்ணியார் 268

காமக் காணியார் எனவும் இவர் பெயரைச் சிலர் கொள்வர். ‘காமக் காணி’ என்பது, காமக் கிழத்தியர்க்கு வழங்கும் உரிமை நிலம் எனலாம். வெறிபாடுவதில் சிறந்தவர் என்பதனால், வெறிபாடிய என்னும் அடைமொழி பெற்றனர். ‘காமக்கண்ணி’ என்பது அன்னை காமாட்சியின் பெயர்களுள் ஒன்றாகும்—அதன் தமிழாக்கம் ஆகும். ஆகவே, அத்திருப்பெயர் உடையவரும் ஆகலாம். இச்செய்யுளும் ‘பெய்மணல் முற்றம் கடிகொண்டு மெய்ம்மலி கழங்கின், வேலனைக் கொணர்ந்து வெறியாடுதல்’ பற்றியே பேசுகின்றது.

பாடினோர் பெயர் காணாச் செய்யுட்கள் 207, 229, 235, 271, 355, 385, 396

மறைந்த செய்யுள் 234