திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/14.ஒழுக்கமுடைமை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை

தொகு

பரிமேலழகர் உரை

தொகு
அதிகார முன்னுரை
அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை யுடையராதல். இது மெய்ம்முதலிய அடங்கினார்க்கல்லது முடியாதாகலின், அடக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது.
==  திருக்குறள் 131 (ஒழுக்கம்) ==

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் (01)

பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஒழுக்கம் விழுப்பம் தரலான் = ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் = அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும்.

பரிமேலழகர் உரைவிளக்கம்: உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டுவருவிக்கப்பட்டது. அதனால் அவ்விழுப்பம் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். உயிர் எல்லாப்பொருளினும் சிறந்ததாயினும் ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின், 'உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.

திருக்குறள் 132 (பரிந்தோம்பிக்)

தொகு
பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினு மஃதே துணை
பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பித்
தேரினும் அஃதே துணை
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க= ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமற் பேணி வருந்தியும் காக்க;
தெரிந்து ஓம்பித் தேரினும் துணை அஃதே = அறங்கள் பலவற்றையு்ம் ஆராய்ந்து இவற்றுள் இருமைக்கும் துணையாவது யாதென்று மனத்தை யொருக்கித் தேர்ந்தாலும் துணையாய் முடிவது அவ்வொழுக்கமே யாகலான்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.

திருக்குறள் 133 (ஒழுக்கமுடைமை)

தொகு
ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க
மிழிந்த பிறப்பாய் விடும்
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
ஒழுக்கம் உடைமை குடிமை= எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கமுடைமை குலனுடைமையாம்;
இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் = அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கமுடையாராக உயர்குலத்தவராகலின், குடிமையாம் என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும், ஒழு்க்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தவராகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றும் கூறினார். உள்வழிப்படும் குற்றத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடின்றி எய்துதலின், அவ்விரைவுபற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.

திருக்குறள் 134 (மறப்பினும்)

தொகு
மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடு்ம்
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
ஓத்து மறப்பினும் கொளல் ஆகும்= கற்ற வேதத்தினை மறந்தான் ஆயினும் அவ்வருணம் கெடாமையிற் பின்னும் அஃது ஓதிக் கொளலாம்;
பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்= அந்தணனது உயர்ந்த வருணம் தன்னொழுக்கம் குன்றக் கெடும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான் 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின் இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.

திருக்குறள் 135 (அழுக்காறுடையான்)

தொகு
அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை
யொழுக்க மிலான்க ணுயர்வு
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று= அழுக்காறு உடையான்மாட்டு ஆக்கம் இல்லாதாற்போல; ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை= ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சியில்லை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சியில்லை யென்பது பெற்றாம். என்னை? "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்ற"மும் (குறள்:166) நல்கூர்தலின். 'உயர்வு' உயர்குலமாதல்.

திருக்குறள் 136 (ஒழுக்கத்தினொல்கார்)

தொகு
ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
னேதம் படுபாக் கறிந்து
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து (06)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்= செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்திற் சுருங்கார் மனவலியுடையார்;
இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து= அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலமாகிய குற்றம் உண்டாமாற்றை அறிந்து.
பரிமேலழகர் உரைவிளக்கம்
ஒழுக்கத்திற் சுருக்கம் அதனை உடையார்மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.

திருக்குறள் 137 (ஒழுக்கத்தினெய்துவர்)

தொகு
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி (07)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர்= எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்;
இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர்= அதனினின்று இழுக்குதலானே தாம் எய்துதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பகைபற்றி அடாப்பழி கூறியவழி அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், 'எய்தாப் பழி' எய்துவர் என்றார்.
இவை ஐந்துபாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படுங்குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.

திருக்குறள் 138 (நன்றிக்கு)

தொகு
நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும் (08)
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும்
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
நல்லொழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும்= ஒருவனுக்கு நல்லொழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்;
தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்= தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'நன்றிக்கு வித்தாகும்' என்றதனால், தீயவொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும், 'இடும்பை தரும்' என்றதனால் நல்லொழுக்கம் இன்பந் தருதலும் பெற்றாம். ஒன்றுநின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின், இதனாற் பின்விளைவு கூறப்பட்டது.

திருக்குறள் 139 (ஒழுக்கமுடையவர்க்)

தொகு
ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல் (09)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
வழுக்கியும் தீய வாயால் சொலல்= மறந்துந் தீயசொற்களைத் தம் வாயாற் சொல்லும் தொழில்கள்;
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா= ஒழுக்கம் உடையவர்க்கு முடியா.
பரிமேலழகர் உரைவிளக்கம்
தீயசொற்களாவன: பிறர்க்குத் தீங்குபயக்கும் பொய்ம் முதலியனவும், வருணத்திற்கு உரியஅல்லனவும் ஆம். அவற்றது பன்மையாற் சொல்லுதல் தொழில் பலவாயின. 'சொலல்' சாதியொருமை. சொல்லெனவே அமைந்திருக்க 'வாயால்' என வேண்டாது கூறினார். நல்லசொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு. இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.

திருக்குறள் 140 (உலகத்தோடு)

தொகு
உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்
உலகத்தொடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலாதார் (10)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்= உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்;
பல கற்றும் அறிவிலாதார்= பல நூல்களையுங் கற்றாராயினும் அறிவிலாதார்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'உலகத்தோடு பொருந்த ஒழுகுத'லாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகியவாற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான், அவையும் அடங்க 'உலகத்தோ டொட்ட' வென்று்ம், கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார். ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல்.
இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் ஒருவாற்றாற் றொகுத்துக் கூறப்பட்டன.