திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/96.குடிமை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்

தொகு

பரிமேலழகர் உரை

தொகு

இயல்முன்னுரை

தொகு
இனி, அவ்வரசியலிலும் அங்கவியலிலும் அடங்காது ஒழிந்தவற்றது இயல்பு, பதின்மூன்றுஅதிகாரத்தாற் கூறுவான் தொடங்கி, முதற்கண் குடிமை கூறுகின்றார்.

அதிகாரம் 96.குடிமை

தொகு
அதிகார முன்னுரை
அஃதாவது, உயர்ந்த குடியின்கண் பிறந்தாரது தன்மை. உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதாகலின், அச்சிறப்புப்பற்றி இது முன் வைக்கப்பட்டது.

குறள் 951 (இற்பிறந்தார் )

தொகு

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச் ( ) இல் பிறந்தார்கண் அல்லது இல்லை இயல்பாகச்

செப்பமும் நாணு மொருங்கு. (01) செப்பமும் நாணும் ஒருங்கு.

தொடரமைப்பு: செப்பமும் நாணும் ஒருங்கு, இற்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை.

இதன்பொருள்
செப்பமும் நாணும் ஒருங்கு= செம்மையும் நாணும் சேர; இற்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை= குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா.
உரைவிளக்கம்
இல்லு குடி குலம் என்பன ஒருபொருள். ஈண்டு உயர்ந்தவற்றின் மேல. செம்மை: கருத்தும் சொலலும் செயலும் தம்முண் மாறாகாமை. நாண்: பழி, பாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின், ஒருவர் கற்பிக்கவேண்டாமல் தாமே உளவாம். பிறர்க்காயின் கற்பித்தவழியும் நெடிது நில்லா என்பதாம்.

குறள் 952 (ஒழுக்கமும் )

தொகு

ஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் மூன்று ( ) ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்

மிழுக்கார் குடிப்பிறந் தார். (02) இழுக்கார் குடிப்பிறந்தார்.

தொடரமைப்பு: குடிப்பிறந்தார், ஒழுக்கமும், வாய்மையும், நாணும் இம்மூன்றும் இழுக்கார்.

இதன்பொருள்
குடிப்பிறந்தார்= உயர்ந்த குடியின்கண் பிறந்தார்; ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார்= தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இமமூன்றன் கண்ணும் கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார்.
உரை விளக்கம்
ஒழுக்கம் முதலியன மெய்ம் மொழி மனங்களின ஆகலின், அம்முறையவாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின், 'இழுக்கார்' என்றார்.

குறள் 953 (நகையீகை )

தொகு

நகையீகை யின்சொ லிகழாமை நான்கும் ( ) நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகையென்ப வாய்மைக் குடிக்கு. (03) வகை என்ப வாய்மைக் குடிக்கு.

தொடரமைப்பு: வாய்மைக் குடிக்கு, நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப.

இதன்பொருள்
வாய்மைக் குடிக்கு= எக்காலத்தும் திரிபில்லாத குடியின்கண் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப= வறியார் சென்றவழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையுமாகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர்.
உரை விளக்கம்
பொய்ம்மை திரிபுடைமையின் திரிபின்மையை 'வாய்மை' என்றும், "இல்லாரை எல்லாரும் எள்ளுவர்" ஆகலின், இகழாமையை அவர்கூறாக்கியும் கூறினார். 'குடி' ஆகுபெயர். 'நான்கின் வகை' என்பது பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கான் உளதாம் என்று உரைக்க.
இவை மூன்று பாட்டானும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.

குறள் 954 ( அடுக்கிய)

தொகு

அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார் ( ) அடுக்கிய கோடி பெறினும் குடிப் பிறந்தார்

குன்றுவ செய்த லிலர். (04) குன்றுவ செய்தல் இலர்.

தொடரமைப்பு: அடுக்கிய கோடி பெறினும், குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்.

இதன்பொருள்
அடுக்கிய கோடி பெறினும்= பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்= உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார்.
உரை விளக்கம்
அடுக்கிய கோடி என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள் மேல் நின்றது. குன்றுந் தொழில்கள் குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.

குறள் 955 (வழங்குவ )

தொகு

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி () வழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும் பழம் குடி

பண்பிற் றலைப்பிரித லின்று. (05) பண்பில் தலைப்பிரிதல் இன்று.

தொடரமைப்பு: பழங்குடி, வழங்குவது உள்வீழ்ந்தக்கண்ணும், பண்பின் தலைப்பிரிதல் இன்று.

இதன்பொருள்
பழங்குடி= தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும்= தாம் கொடுக்கும் பொருள் பண்டையிற் சுருங்கிய இடத்தும்; பண்பின் தலைப்பிரிதல் இன்று= தம் பண்புடைமையின் நீங்கார்.
உரை விளக்கம்
தொன்றுதொட்டு வருதல் சேர சோழ பாண்டியர் என்றாற் போலப் படைப்புக்காலம் தொடங்கி மேம்பட்டு வருதல். அவர்க்கு நல்குரவாவது, 'வழங்குவது உள்வீழ்வது' ஆகலின், அதனையே கூறினார்.

குறள் 956 (சலம்பற்றிச் )

தொகு

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற ( ) சலம் பற்றிச் சால்பு இல செய்யார் மாசு அற்ற

குலம்பற்றி வாழ்துமென் பார். (06) குலம் பற்றி வாழ்தும் என்பார்.

தொடரமைப்பு: மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார், சலம் பற்றிச் சால்பு இல செய்யார்.

இதன்பொருள்
மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார்= வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக்கடவேம் என்று கருதி அவ்வாறு வாழ்வார்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார்= வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார்.
உரை விளக்கம்
அமைவின்மை: அம்மரபிற்கு ஏலாமை.
இவை மூன்று பாட்டானும், அவர் வறுமையுற்றவழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.

குறள் 957 (குடிப்பிறந்தார் )

தொகு

குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின் ( ) குடிப் பிறந்தார் கண் விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக்கண் மறுப்போ லுயர்ந்து. (07) மதிக் கண் மறுப்போல் உயர்ந்து.

தொடரமைப்பு: குடிப்பிறந்தார்கண் குற்றம், விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து விளங்கும்.

இதன்பொருள்
குடிப்பிறந்தார்கண் குற்றம்= உயர்ந்த குடியின்கண் பிறந்தார்மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து விளங்கும்= தான் சிறிதேயாயினும் விசும்பின்கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும்.
உரை விளக்கம்
உயர்குடி முதலிய பொருள்வகை மூன்றற்கும், விசும்பு முதலிய உவமை வகையொத்துப் பான் மாறுபட்டது. குடியது உயர்ச்சியானும், மதிபோன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம்.

குறள் 958 (நலத்தின்கண் )

தொகு

நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக் ( ) நலத்தின் கண் நார் இன்மை தோன்றின் அவனைக்

குலத்தின்க ணையப் படும். (08) குலத்தின் கண் ஐயப் படும்.

தொடரமைப்பு: நலத்தின்கண் நாரின்மை தோன்றின், அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்.

இதன்பொருள்
நலத்தின்கண் நான் இன்மை தோன்றின்= குல நலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரமின்மை உளதாம் ஆயின்; அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்= அவனை அக்குலப்பிறப்பின்கண்ணே ஐயப்படும் உலகம்.
உரை விளக்கம்
நலமும் குலமும் ஆகுபெயர். 'நாரின்மை'யான் கொடாமையும், கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கிநின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகம் என்பது அவாய்நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக வென விதியாக்கி உரைக்க.
இவ்விரண்டு பாட்டானும், வேறுபட்டவழிப் படும் இழுக்குக் கூறப்பட்டது.

குறள் 959 (நிலத்திற் )

தொகு

நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங் ( ) நிலத்தின் கிடந்தமை கால் காட்டும் காட்டும்

குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். (09) குலத்தின் பிறந்தார் வாய்ச் சொல்.

தொடரமைப்பு: நிலத்தின் கிடந்தமை கால் காட்டும், குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல் காட்டும்.

இதன்பொருள்
நிலத்தின் கிடந்தமை கால் காட்டும்= நிலத்தின் இயல்பை அதன்கண் முளைத்த முளை காட்டும்; குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல் காட்டும்= அதுபோலக் குலத்தின் இயல்பை அதன்கண் பிறந்தார் வாயி்ற் சொல் காட்டும்.
உரை விளக்கம்
'கிடந்தமை': உள்ளபடி, முளைத்த மாத்திரத்தானே நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய கூறார் ஆயினார். ஆகவே, பொருளினும் செயல் முதலிய வேண்டாவாயின. குலத்தியல்பு அறிதற் கருவி கூறுவார் போன்று, இன்சொல் வேண்டும் என்றவாறு ஆயிற்று.

குறள் 960 (நலம்வேண்டி )

தொகு

நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின் () நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு. (10) வேண்டுக யார்க்கும் பணிவு.

தொடரமைப்பு: நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும், குலம் வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டுக.

இதன்பொருள்
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும்= ஒருவன் தனக்கு நலன் உடைமையை வேண்டுவனாயின், நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டுக= குலன் உடைமையை வேண்டுவன் ஆயின், பணியப்படுவார் யாவர்மாட்டும் பணிதலை வேண்டுக.
உரை விளக்கம்
'நலம்'- புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது, விதிப்பொருட்டாய் நின்றது. "வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்"Ė என்புழிப்போல. அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்று இவர்Ļ எல்லாரும் அடங்க யர்க்கும் என்றார். பணிவு இருக்கை எழலும், எதிர்செலவும்Ż முதலாயின.
இவை இரண்டு பாட்டானும், குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.
Ė -தொல்காப்பியம்: சொல்லதிகாரம், கிளவியாக்கம்-நூற்பா.33
Ļ -புறப்பொருள்வெண்பா மாலை, பாடாண்- 33
Ż - நாலடியார், 143