திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/24.புகழ்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


24. புகழ்

தொகு

பரிமேலழகர் உரை

தொகு
அதிகார முன்னுரை
அதாவது, இல்வாழ்க்கை முதல் ஈகை யீறாகச் சொல்லப்பட்ட இல்லறத்தின் வழுவாதார்க்கு, இம்மைப் பயனாகிய இவ்வுலகின்கண் நிகழ்ந்து இறவாது நிற்கும் கீர்த்தி. இது பெரும்பான்மையும் ஈதல் பற்றி வருதலின், அதன்பின் வைக்கப்பட்டது.

குறள்: 231 (ஈதலிசைபட)

தொகு
ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு (01)
ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
பரிமேலழகர் உரை
ஈதல்= வறியார்க்கு ஈக; இசைபட வாழ்தல்= அதனால் புகழ் உண்டாக வாழ்க; அது அல்லது ஊதியம் உயிர்க்கு இல்லை=
அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப் பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
இசைபட வாழ்வதற்குக் கல்வி, ஆண்மை முதலிய காரணங்களும் உளவேனும், "உணவின் பிண்டம் உண்டி முதற்று" (புறநானூறு, 18) ஆகலின், ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக ஈதல் என்றார். உயிர்க்கு என்பது, பொதுப்படக் கூறினாரேனும் விலங்கு உயிர்கட்கு ஏலாமையின் மக்களுயிர்மேல் நின்றது.

குறள்: 232 (உரைப்பார்)

தொகு
உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
றீவார்மே னிற்கும் புகழ் (02)
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
ஈவார் மேல் நிற்கும் புகழ்.
பரிமேலழகர் உரை
உரைப்பார் உரைப்பவை எல்லாம்= உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம்; இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ்= வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார்கண் நிற்கும் புகழாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்
புகழ்தான் 'உரையும் பாட்டும்' என இருவகைப்படும். (புறநானூறு, 27). அவற்றுள் 'உரைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடு்த்தாராயினும், இனம்பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளப்படும்; படவே, 'பாடுவார் பாடுவன எல்லாம் புகழாம்' என்பது பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க. இதனைப் 'பிறர்மேலும் நிற்கும்' என்பார், 'தாம் எல்லாம் சொல்லுக, புகழ் ஈவார்மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.

குறள்: 233 (ஒன்றாவுலகத்)

தொகு
ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றி்ல் (03)
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல்.
பரிமேலழகர் உரை
ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்= தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்= உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
இணை ஒன்றாக ஓங்குதலாவது, கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமைபற்றி வருதலால் தன்னொடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி, ஒன்றா என்பதற்கு ஒருவார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒருதலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர்.
இவை மூன்று பாட்டானும் புகழது சிறப்புக் கூறப்பட்டது.

குறள்: 234 (நிலவரை)

தொகு
நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு (04)
நிலவரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
பரிமேலழகர் உரை
நிலவரை நீள் புகழ் ஆற்றின்= ஒருவன் நிலஎல்லைக்கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச்செய்யுமாயின்; புத்தேள் உலகு புலவரைப்போற்றாது= புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்திநின்ற ஞானிகளைப் பேணாது.
பரிமேலழகர் உரைவிளக்கம்
புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், 'புலவரைப் போற்றாது' என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி, எய்துப என்ப தம் செய்வினை முடித்து" (புறநானூறு, 27) எனப் பிறராலும் சொல்லப்பட்டது.

குறள்: 235 (நத்தம்போற்)

தொகு
நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது (05).
நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.
பரிமேலழகர் உரை
நத்தம் ஆகும் கேடும்= புகழுடம்பிற்கு ஆக்கமாகும் கேடும்; உளது ஆகும் சாக்காடும்= புகழுடம்பு உளதாகும் சாக்காடும்; வித்தகர்க்கு அல்லால் அரிது= சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை.
பரிமேலழகர் உரை விளக்கம்
'நந்து' என்னும் தொழிற்பெயர், விகாரத்துடன் 'நத்து' என்றாய்ப் பின் 'அம்' என்னும் பகுதிப்பொருள் விகுதி பெற்று, 'நத்தம்' என்றாயிற்று. 'போல்' என்பது, ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னுங் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி ?கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது, புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூத உடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது, புகழ் உடம்பு நிற்கப் பூதஉடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கல்லால் அரிது' என்றார்.
இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.

குறள்: 236 (தோன்றிற்)

தொகு
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று (236)
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இல்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
பரிமேலழகர் உரை
தோன்றின் புகழொடு தோன்றுக= மக்களாய்ப்பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று= அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'புகழ்' ஈண்டு ஆகுபெயர். 'அஃது இலார்' என்றமையின், மக்களாய் என்பதூஉம், மக்களாய்ப் பிறவாமை என்ற அருத்தாபத்தியான் விலங்காய்ப் பிறத்தல் என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்று.

குறள்: 237 (புகழ்பட)

தொகு
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
யிகழ்வாரை நோவ தெவன் (237)
புகழ்பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
பரிமேலழகர் உரை
புகழ்பட வாழாதார்= தமக்குப் புகழுண்டாக வாழ மாட்டாதார்; தம் நோவார்= அதுபற்றிப்பிறர் இகழ்ந்தவழி இவ்விகழ்ச்சி நம்மாட்டாமையான் வந்தது என்று தம்மை நோவாதே; தம்மை இகழ்வாரை நோவது எவன்= தம்மை இகழ்வாரை நோவது என்கருதி.
பரிமேலழகர் உரைவிளக்கம்
புகழ்பட வாழலாயிருக்க அது மாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒருதலையாகலின், 'இகழ்வாரை' என்றார்.

குறள்: 238 (வசையென்ப)

தொகு
வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு
மெச்சம் பெறாஅ விடின் (08)
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
எச்சம் பெறாஅ விடின்.
பரிமேலழகர் உரை
இசை என்னும் எச்சம் பெறா விடின்= புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க அது பெறாது ஒழிவராயின்; வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப= வையகத்தோர்க்கு எல்லாம் அதுதானே வசை என்று சொல்லுவர் நல்லோர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
எச்சம் என்றார், செய்தவர் இறந்து போகத் தான் இறவாது நிற்றலின், இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.

குறள்: 239 (வசையிலா)

தொகு
வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம் (09)
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம்.
பரிமேலழகர் உரை
இசை இலா யாக்கை பொறுத்த நிலம்= புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம்; வசை இலா வண் பயன் குன்றும்= பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
உயிர் உண்டாயினும் அதனாற் பயன் கொள்ளாமையின், 'யாக்கை' எனவும், அது நிலத்திற்குப் பொறையாகலின், 'பொறுத்த' எனவும் கூறினார். விளையுள் குன்றுதற்கு ஏது, பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. 'குன்றும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது.
இவை நான்கு பாட்டானும், புகழ் இல்லாரது தாழ்வு கூறப்பட்டது.

குறள்: 240 (வசையொழிய)

தொகு
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர் (10)
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர்.
பரிமேலழகர் உரை
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்= தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர்= புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தவர் ஆவர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
வசையொழிதலாவது, 'இசை என்னும் எச்சம்' பெறுதல் ஆயினமையின், இசையொழிதலாவது 'வசை' பெறுதல் ஆயி்ற்று. மேல் 'இசையிலா யாக்கை'(குறள், 239) என்றதனை விளக்கியவாறு.
இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன.
மறுமைப் பயன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என மேலே கூறப்பட்டது. படவே, இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம்.
இனி, மனு முதலிய அறநூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக்கூறிய இவற்றுள்ளே அடங்கும்; அஃது அறிந்து அடக்கிக் கொள்க, யாம் உரைப்பின் பெருகும்.

திருக்குறள் அறத்துப்பால் 'இல்லறவியல்' முற்றும்