திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/44.குற்றங்கடிதல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


பொருட்பால் அரசியல்- அதிகாரம் 44.குற்றம் கடிதல்

தொகு

பரிமேலழகர் உரை

தொகு

அதிகாரமுன்னுரை:

அஃதாவது, காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் எனப்பட்ட குற்றங்கள் ஆறனையும் அரசன் தன்கண்நிகழாமற் கடிதல். இவற்றை வடநூலார் பகை வர்க்கம் என்ப. இவை குற்றம் என்று அறிதலும், கடிதலும் அறிவுடையார்க்கல்லது கூடாமையின், அதன்பின் வைக்கப்பட்டது.

குறள் 431 (செருக்கும்)

தொகு
செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்       செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து (01)                          பெருக்கம் பெருமித நீர்த்து.
இதன்பொருள்:செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம்= மதமும் வெகுளியும் காமமுமாகிய குற்றங்களில்லாத அரசரது செல்வம்;
பெருமித நீர்த்து= மேம்பாட்டு நீர்மையினை உடைத்து.
விளக்கம்: மதம் செல்வக்களிப்பு. சிறியோர்1 செயலாகலின் அளவிறந்த காமம் சிறுமை எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான், இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறுமுடைமையின் மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.
1.குறள், 26..

குறள் 432 (இவறலு மாண்பிறந்த)

தொகு
இவறலு மாண்பிறந்த மானமு மாணா       இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
வுவகையு மேத மிறைக்கு (02)                        உவகையு்ம் ஏதம் இறைக்கு.
இதன்பொருள்: இவறலும்= வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும்= நன்மையின் நீங்கிய மானமும்; மாணா உவகையும்= அளவிறந்த உவகையும்; இறைக்கு ஏதம்= அரசனுக்குக் குற்றம்.
விளக்கம்: மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பிறந்த மானம்' என்றார். அஃதாவது, "அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர்3 தந்தை தாய் என்றிவ"1ரை வணங்காமையும், முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது கழிகண்ணோட்டம்; பிறரும் "சினனே காமங் கழிகண்ணோட்டம்" என்று இவற்றை "அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது"2 என்றார்.
இவை யிரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவையென்பது கூறப்பட்டது.
1.புறப்பொருள் வெண்பா மாலை, பாடாண் படலம் -33.
2.பதிற்றுப்பத்து-22.
3.தனக்கு மூத்தவர்கள்

குறள் 433 (தினைத்துணையாங்)

தொகு
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்       தினைத் துணையாம் குற்றம் வரினும் பனைத் துணையாக்
கொள்வர் பழிநாணு வார் (03)                                                           கொள்வர் பழி நாணுவார்.
இதன்பொருள்: பழி நாணுவார்= பழியை அஞ்சுவார்; தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத் துணையாக் கொள்வர்= தங்கண் திணையளவாம் குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவாகவன்றிப் பனையின் அளவாகக் கொள்வர்.
விளக்கம்: 'குற்றம்' சாதிப்பெயர். தமக்கு ஏலாமையிற் சிறிதென்று பொறார்; பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அது வாராமற் காப்பர் என்பதாம்.

குறள் 434 (குற்றமே)

தொகு
குற்றமே காக்க பொருளாக குற்றமே       குற்றமே காக்க பொருளாக குற்றமே
யற்றந் தரூஉம் பகை                                  அற்றம் தரூஉம் பகை.
இதன்பொருள்: அற்றம் தரூஉம் பகை குற்றமே= தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே; குற்றமே பொருளாக காக்க= ஆகலான், அக்குற்றம் தன்கண் வராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும்.
விளக்கம்: இவைபற்றியல்லது, பகைவர் அற்றம் தாராமையின் இவையே பகையாவனவென்னும் வடநூலார் மதம் பற்றிக் 'குற்றமே யற்றந் தரூஉம் பகை' என்றும், இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டென்பார் 'பொருளாக' என்றும் கூறினார். 'குற்றமே காக்க' என்பது, "அரும்பண்பினால் தீமை காக்க" என்பதுபோல நின்றது.

குறள் 435 (வருமுன்னர்க்)

தொகு
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்      வரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போலக் கெடும் (05)                                           வைத் தூறு போலக் கெடும்.
இதன்பொருள்:
வரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை= குற்றம் வரக் கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை; எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்= அது வந்தால் எரி முகத்து நின்ற வைக்குவை போல அழிந்துவிடும்.
விளக்கம்:
'குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'முன்னர்' என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி. 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனாற் காக்கலாங் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும் அதனாற் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையாற் பெற்றாம்.

குறள் 436 (தன்குற்ற)

தொகு
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி       தன் குற்றம் நீங்கிப் பிறர் குற்றம் காண்கில் பின்
னென்குற்ற மாகு மிறைக்கு (06)                          என் குற்றம் ஆகும் இறைக்கு.
இதன்பொருள்:
தன் குற்றம் நீங்கிப் பிறர் குற்றம் காண்கிற் பின்= முன்னர்த் தன் குற்றத்தைக் கண்டு கடிந்து பின்னர்ப் பிறர் குற்றம் காணவல்லனாயின்; இறைக்கு ஆகும் குற்றம் என்= அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது?
விளக்கம்:
அரசனுக்குத் தன் குற்றம் கடியாவழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாவது; கடிந்தவழி முறை செய்தலாம் என்பார், 'என் குற்றமாகும்' என்றார்; எனவே, தன் குற்றங் கடிந்தவனே முறைசெய்தற்குரியவன் என்பதாயிற்று.
இவை நான்கு பாட்டானும் அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற் கூறுப.

குறள் 437 (செயற்பால)

தொகு
செயற்பால செய்யா திவறியான் செல்வ      செயல் பால செய்யாது இவறியான் செல்வம்
முயற்பால தன்றிக் கெடும் (07)                          உயற்பாலது அன்றிக் கெடும்.
இதன்பொருள்:
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்= பொருளால் தனக்குச் செய்துகொள்ளப்படுமவற்றைச் செய்துகொள்ளாது அதன்கட் பற்றுள்ளஞ் செய்தானது செல்வம்; உயற்பாலதன்றிக் கெடும்= பின் உளதாம் பான்மைத்தன்றி வறிதே கெடும்.
விளக்கம்:
'செயற்பால'வாவன: அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செயதலாவது- பெருக்குதல்;

அது,

"பொன்னி னாகும் பொருபடை யப்படை-
தன்னி னாகுந் தரணி தரணியிற்-
பின்னை யாகும் பெரும்பொருள் அப்பொருள்
துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே"3 என்பதனான் அறிக. அறம் செய்யாமையானும், பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' யென்றும், இன்பப் பயன் கொள்ளாமையிற் 'கெடும்' என்றும் கூறினார். 'உயற்பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.

குறள் 438 (பற்றுள்ளமென்னும்)

தொகு
பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு      பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
மெண்ணப் படுவதொன் றன்று (438)                        எண்ணப் படுவது ஒன்று அன்று.
இதன்பொருள்:
பற்றுள்ளம் என்னும் இவறன்மை= பொருளைவிடத் தகுமிடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளமாகிய உலோபத்தினது தன்மை; எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று= குற்றத்தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்றன்று, மிக்கது.
விளக்கம்:
இவறலது தன்மையாவது, குணங்களெல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு; ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்றன்று' என்றார். எவற்றுள்ளும் என்பது இடைக்குறைந்து நின்றது.
இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.

குறள் 439 (வியவற்க)

தொகு
வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க      வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை (09)                                           நன்றி பயவா வினை.
இதன்பொருள்: எஞ்ஞான்றும் தன்னை வியவற்க= தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக; நன்றி பயவா வினை நயவற்க= தனக்கு நன்மை பயவா வினைகளை மானத்தால் விரும்பாது ஒழிக.
விளக்கம்:
தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமையானும், அறனும் பொருளும் இகழப்படுதலானும், 'எஞ்ஞான்றும் வியவற்க' என்றும், கருதியது முடித்தேவிடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின் அவற்றாற் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார்.
இதனான் மத, மானங்களின் தீமை கூறப்பட்டது.

குறள் 440 (காதலகாதல்)

தொகு
காதல காத லறியாமை யுய்க்கிற்பின்      காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
னேதில வேதிலார் நூல் (10)                        ஏதில ஏதிலார் நூல்.
இதன்பொருள்: காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்= தான காதலித்த பொருள்களை அவர் அக்காதலறியாமல் அனுபவிக்கவல்லனாயின்; ஏதிலார் நூல் ஏதில= பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம்.
விளக்கம்:
அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பாராகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம் வெகுளி, உவகை என்பன முற்றக் கடியும் குற்றம் அன்மையின், இதனாற் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.