திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/122.கனவுநிலையுரைத்தல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்

தொகு

பரிமேலழகர் உரை

தொகு

அதிகாரம் 122. கனவுநிலை உரைத்தல்

தொகு
அதிகார முன்னுரை
அஃதாவது, தலைமகள் தான் கண்ட கனவினது நிலைமையைத் தோழிக்குச் சொல்லுதல். அக்கனவு நனவின்கண் நினைவு மிகுதியாற் கண்டதாகலின் இது நினைந்தவர் புலம்பலின்பின் வைக்கப்பட்டது.

குறள் 1211 ( காதலர்)

தொகு
(தலைமகன் தூதுவரக் கண்டாள் சொல்லியது. )

காதலர் தூதொடு வந்த கனவினுக் ( ) காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

கியாதுசெய் வேன்கொல் விருந்து. (01) யாது செய்வேன்கொல் விருந்து.

[தொடரமைப்பு: காதலர் தூதொடு வந்த கனவினுக்கு, விருந்து யாது செய்வேன்கொல்.]

இதன்பொருள்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு= யான் வருந்துகின்றது அறிந்து, அது தீரக் காதலர் விடுத்த தூதினைக்கொண்டு என்மாட்டு வந்த கனவினுக்கு;
விருந்து யாது செய்வேன்= யான் விருந்தாக யாதனைச் செய்வேன், எ-று.
உரைவிளக்கம்
விருந்து என்றது விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது கனவிற்கொன்று காணாமையின், யாது செய்வேன் என்றாள்.

குறள் 1212 (கயலுண்கண் )

தொகு
(துதுவிடக் கருதியாள் சொல்லியது. )

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க் ( ) கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு

குயலுண்மை சாற்றுவேன் மன். (02) உயல் உ்ண்மை சாற்றுவேன் மன்.

[தொடரமைப்பு: கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின், கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன்மன் ]
]

இதன்பொருள்
கயல் உண்கண் யான் இரப்பத்துஞ்சின்= துஞ்சாதுவருந்துகின்ற என் கயல்போலும் உண்கண்கள் யான் இரந்தால் துஞ்சுமாயின்;
கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன்மன்= கனவிடைக் காதலரைக் காண்பேன், கண்டால் அவர்க்கு யான் ஆற்றியுளேனாய தன்மையை யானே விரியச் சொல்வேன், எ-று.
உரை விளக்கம்
'கயலுண்கண்' என்றாள், கழிந்த நலத்திற்கு இரங்கி. உயல்-காமநோய்க்குத் தப்புதல். தூதர்க்குச் சொல்லாது யாம் அடக்குவனவும், சொல்லுவனவற்றுள்ளும் சுருக்குவனவற்றின் பரப்பும் தோன்றச் சொல்வேன் என்னும் கருத்தால் சாற்றுவேன் என்றாள். இனி, அவையும் துஞ்சா, சாற்றலும் கூடாது என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. முன்னுங்கண்டாள் கூற்றாகலின், கனவுநிலையுரைத்தல் ஆயிற்று.

குறள் 1213 ( நனவினான்)

தொகு
(ஆற்றாளெனக் கவன்றாட்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. )

நனவினா னல்கா தவரைக் கனவினாற் ( ) நனவினான் நல்காதவரை கனவினாற்

காண்டலி னுண்டென் னுயிர். (03) காண்டலின் உண்டு என் உயிர்.

[தொடரமைப்பு: நனவினான் நல்காதவரை, கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு. ]
]

இதன்பொருள்
நனவினான் நல்காதவரை= நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை;
கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு= யான் கனவின்கட் கண்ட காட்சியானே என் உயிருண்டாகாநின்றது, எ-று.
உரை விளக்கம்
மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. அக்காட்சியானே, யான் ஆற்றியுளேனாகின்றேன், நீ கவலல் வேண்டா வென்பதாம்.

குறள் 1214 ( கனவினானுண்)

தொகு
(இதுவுமது )

கனவினா னுண்டாகுங் காம நனவினா ( ) கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

னல்காரை நாடித் தரற்கு. (04) நல்காரை நாடித் தரற்கு.

[தொடரமைப்பு: நனவினான் நல்காரை நாடித் தரற்கு, கனவினான் காமம் உண்டாகும்.]

இதன்பொருள்
நனவினான் நல்காரை நாடித் தரற்கு= நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர்சென்றுழி நாடிக்கொண்டுவந்து கனவு தருதலான்;
கனவினாற் காமம் உண்டாகும்= அக்கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகாநின்றது, எ-று.
உரை விளக்கம்
காமம்-ஆகுபெயர். நான்காவாது மூன்றன்பொருண்மைக்கண் வந்தது. இயல்பான் நல்காதவரை அவர்சென்ற தேயம் அறிந்துசென்று கொண்டுவந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல் என்பதாம்.

குறள் 1215 ( நனவினாற்கண்ட)

தொகு
(இதுவுமது )

நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான் () நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவும்தான்

கண்ட பொழுதே யினிது. (05) கண்ட பொழுதே இனிது.

[தொடரமைப்பு: நனவினால் கண்டதூஉம் (இனிதே) ஆங்கே, கனவுந்தான் கண்ட பொழுதே இனிது. ]

இதன்பொருள்
நனவினாற் கண்டாதூஉம் (இனிது) ஆங்கே= முன் நனவின்கண் அவரைக்கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று அப்பொழுதே;
கனவுந்தான் கண்டபொழுதே இனிது= இன்று கனவின்கட் கண்டு நுகர்ந்த இன்பமும் அக்கண்டபொழுதே இனிதாயிற்று, அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன.
உரை விளக்கம்
இனிது என்பது முன்னும் கூட்டப்பட்டது. கனவு- ஆகுபெயர். முன்னும் யான்பெற்றது இவ்வளவே, இன்னும் அதுகொண்டு ஆற்றுவல் என்பதாம்.

குறள் 1216 (நனவென )

தொகு
( இதுவுமது )

நனவென வொன்றில்லை யாயிற் கனவினாற் ( ) நனவு என ஒன்று இல்லையாயின் கனவினான்

காதலர் நீங்கலர் மன். (06) காதலர் நீங்கலர் மன்.

[தொடரமைப்பு: நனவென ஒன்று இல்லையாயின், கனவினாற் காதலர் நீங்கலர்மன். ]

இதன்பொருள்
நனவென ஒன்று இல்லையாயின்= நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்;
கனவினாற் காதலர் நீங்கலர்மன்= கனவின்கண் வந்துகூடிய காதலர் என்னைப் பிரியார், எ-று.
உரை விளக்கம்
ஒன்று என்பது, அதன்கொடுமை விளக்கிநின்றது. அஃது இடையே புகுந்து கனவைப்போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு.

குறள் 1217 ( நனவினானல்)

தொகு
( விழித்துழிக் காணாளாயினாள் கனவிற் கூட்ட நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது. )

நனவினா னல்காக் கொடியார் கனவினா ( ) நனவினான் நல்காக் கொடியார் கனவினான்

னென்னெம்மைப் பீழிப் பது. (07) என் எம்மைப் பீழிப்பது.

[தொடரமைப்பு: நனவினான் நல்காக் கொடியார், கனவினான் எம்மைப் பீழிப்பது என். ]

இதன்பொருள்
நனவினான் நல்காக் கொடியார்= ஒருஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாத கொடியவர்;
கனவினான் எம்மைப் பீழிப்பது என்= நாள்தோறும் கனவின்கண் வந்து நம்மை வருத்துவது எவ்வியைபுபற்றி, எ-று.
உரை விளக்கம்
பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கிக் 'கொடியார்' என்றும், கனவில் தோள்மேலராய், விழித்துழிக் கரத்தலின் அதனானும் துன்பமாகாநின்றது என்பாள், 'பீழிப்பது' என்றும் கூறினாள். நனவின் இல்லது, கனவினும் இல்லையென்பர், அது கண்டிலம் என்பதாம்.

குறள் 1218 ( துஞ்சுங்காற்)

தொகு
( தான் ஆற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்தாட்கு இயற்பட மொழிந்தது. )

துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கா ( ) துஞ்சும்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால்

னெஞ்சத்த ராவர் விரைந்து. (08) நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

[தொடரமைப்பு: துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி, விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தர் ஆவர்.]

இதன்பொருள்
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி= என்நெஞ்சு விடாது உறைகின்ற காதலர் யான் துஞ்சும்பொழுது வந்து என் தோள்மேலராய்;
விழி்க்குங்கால் விரைந்து நெஞ்சத்தராவர்= பின் விழிக்கும்பொழுது, விரைந்து பழைய நெஞ்சின்கண்ணராவர், எ-று.
உரை விளக்கம்
கலவிவிட்டு மறையும் கடுமைபற்றி விரைந்து என்றாள். ஒருகாலும் என்னின் நீங்கி அறியாதாரை நீ நோவற்பாலையல்லை என்பதாம்.

குறள் 1219 ( நனவினானல்)

தொகு
(இதுவுமது )

நனவினா னல்காரை நோவர் கனவினாற் ( ) நனவினான் நல்காரை நோவர் கனவினான்

காதலர்க் காணா தவர். (09) காதலர்க் காணாதவர்.

[தொடரமைப்பு: கனவினாற் காதலர்க் காணாதவர், நனவினான் நல்காரை நோவர். ]

இதன்பொருள்
கனவினான் காதலர்க் காணாதவர்= தமக்கொரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற்கண்டறியாத மகளிர்;
நனவினான் நல்காரை நோவர்= தாமறிய நனவின்கண் வந்து நல்காத நங்காதலரை அன்பிலர் என நோவா நிற்பர், எ-று.
உரை விளக்கம்
இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலர் உளராய் அவரைக் கனவிற் கண்டு அறிவாராயின், நம் காதலர் கனவின்கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் எ்னபதாம்.

குறள் 1220 ( நனவினானந்)

தொகு
( இதுவுமது )

நனவினா னந்நீத்தா ரென்பர் கனவினாற் () நனவினான் நம் நீத்தார் என்பர் கனவினால்

காணார்கொ லிவ்வூ ரவர். (10) காணார்கொல் இவ் ஊரவர்.

[தொடரமைப்பு: இவ்வூரவர் நனவினான் நம்நீத்தார் என்பர், கனவினால் காணார் கொல்.]

இதன்பொருள்
இவ்வூரவர் நனவினான் நம்நீத்தார் என்பர்= இவ்வூரின்மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம்காதலரைக் கொடுமைகூறாநிற்பர்;
கனவினாற் காணார்கொல்= அவர் கனவின்கண் நீங்காதுவருதல் கண்டறியாரோ, எ-று.
உரை விளக்கம்
என்னோடு தன்னிடை வேற்றுமையின்றாயின், யான்கண்டது தானும் கண்டு அமையும், அதுகாணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளேயாம் என்னும் கருத்தால, 'இவ்வூரவர்' என்றாள்.