திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/21.தீவினையச்சம்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


அதிகாரம் 21 தீவினையச்சம் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல். இதனால், மெய்யின்கண் நிகழும் பாவங்கள் எல்லாம் தொகுத்து விலக்குகின்றார்ஆகலின், இது பயனிலசொல்லாமையின்பின் வைக்கப் பட்டது.

திருக்குறள் 201 (தீவினையார்) தொகு

தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு
தீ வினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீ வினை என்னும் செருக்கு (01)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தீவினை என்னும் செருக்கு= தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை;
தீவினையார் அஞ்சார்= முன்செய்த தீவினையுடையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்= அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர்.
பரிமேலழகர் உரை விளக்கம்
'தீவினையென்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல்தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்துஅறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.

திருக்குறள் 202 (தீயவை) தொகு

தீயவை தீய பயத்தலாற் றீயவை
தீயினு மஞ்சப் படும்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் (02)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தீயவை தீய பயத்தலால்= தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள் பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான்;
தீயவை தீயினும் அஞ்சப் படும்= அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோருடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின், 'தீயினும் அஞ்சப் படுவது' ஆயிற்று.

திருக்குறள் 203 (அறிவினுள்) தொகு

அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல் (03)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
அறிவினுள் எல்லாம் தலை என்ப= தமக்கு உறுதி நாடும் அறிவுகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவர் நல்லோர்;
செறுவார்க்கும் தீய செய்யா விடல்= தம்மைச் செறுவார்மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
விடுதற்குக் காரணமாகிய அறிவை 'விடல்' என்றும், செயத்தக்குழியும் செய்யாது ஒழியவே, தமக்குத் துன்பம் வாராது என உய்த்து உணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாந் தலை' என்றும் கூறினார். 'செய்யாது' என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும், தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.

திருக்குறள் 204 (மறந்தும்பிறன்) தொகு

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி
னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு (04)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
பிறன் கேடு மறந்தும் சூழற்க= ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாது ஒழிக;
சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்= எண்ணுவனாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'கேடு' என்பது ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதே தானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான்நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.

திருக்குறள் 205 (இலனென்று) தொகு

இலனென்று தீயவை செய்யற்க செய்யி
னிலனாகு மற்றும் பெயர்த்து
இலன் என்று தீயவே செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து (05)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
இலன் என்று தீயவை செய்யற்க= யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக;
செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும்= செய்வானாயின், பெயர்த்தும் வறியன் ஆம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அத்தீவினையால் பிறவிதோறும் இலனாம் என்பதாம். 'அன்' விகுதி முன் தனித் தன்மையினும், பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை "உளனாவென் னுயிரை யுண்டு" (கலித்தொகை,குறிஞ்சி,22) என்பதானானும் அறிக. மற்று அசைநிலை. 'இலம்' (மணக்குடவர்) என்று பாடம் ஒதுவாரும் உளர். 'பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின் அப்பொருளேயன்றி நற்குண நற்செய்கைகளானும் வறியனாம்' என்று உரைப்பாரும் உளர்.

திருக்குறள் 206 (தீப்பாலதான்) தொகு

தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல்வேண்டா தான்
தீப் பால தான் பிறர்கண் செய்யற்க நோய்ப் பால
தன்னை அடல் வேண்டாதான் (06)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
நோய்ப்பால தன்னை அடல்வேண்டாதான்= துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின்வந்து வருத்துதலை வேண்டாதவன்;
தீப்பால தான் பிறர்கண் செய்யற்க= தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.
பரிமேலழகர் உரை விளக்கம்
செய்யின் அப்பாவங்களால் அடுதல் ஒருதலை என்பதாம்.

திருக்குறள் 207 (எனைப்பகை) தொகு

எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்
எனைப் பகை உற்றாரும் உய்வர் வினைப் பகை
வீயாது பின் சென்று அடும் (07)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
எனைப் பகை உற்றாரும் உய்வர்= எத்துணைப்பெரிய பகையுடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர்;
வினைப் பகை வீயாது சென்று அடும்= அவ்வாறுஅன்றித் தீவினையாகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
"வீயாது- உடம்பொடு நின்ற உயிருமில்லை" என்புழியும், வீயாமை நீங்காமைக்கண் வந்தது.

திருக்குறள் 208 (தீயவை செய்தார்) தொகு

தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்தற்று (08)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தீயவை செய்தார் கெடுதல்= பிறர்க்குத் தீவினைகளைச் செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின்;
நிழல் தன்னை வீயாது அடிஉறைந்தற்று= ஒருவன் நிழல் நெடிதாகப் போயும், அவன்தன்னை விடாது வந்து அடியின்கண் தங்கிய தன்மைத்து.
பரிமேலழகர் உரைவிளக்கம்
இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றிநின்று, அதுவந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின்அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர்.

அஃது உரையன்று என்பதற்கு அடிஉறைந்த நிழல் தன்னை வீந்தற்று என்னாது, 'வீயாது அடியுறைந்தற்று' என்ற பாடமே கரியாயிற்று. மேல், 'வீயாது பின் சென்று அடும்' என்றார், ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.

திருக்குறள் 209 (தன்னைத்தான்) தொகு

தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்
தன்னைத் தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும்
துன்னற்க தீவினைப் பால் (09)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தன்னைத் தான் காதலன் ஆயின்= ஒருவன், தன்னைத் தான் காதல் செய்தல் உடையனாயின்;
தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க= தீவினையாகிய பகுதி, எத்துணையும் சிறியதொன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.
பரிமேலழகர் உரை விளக்கம்
நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின் 'தீவினைப்பால்' என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன்மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார்ஆகலின், 'தன்னைத் தான் காதலன்ஆயின்' என்றார். இவை ஆறுபாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவார் என்பது கூறப்பட்டது.

திருக்குறள் 210 (அருங்கேடன்) தொகு

அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யா னெனின்
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடித்
தீ வினை செய்யான் எனின் (10)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின்= ஒருவன் செந்நெறிக்கண் செல்லாது, கொடுநெறி்க்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின்;
அருங்கேடன் என்பது அறிக= அவன் அரிதாகிய கேட்டையுடையன் என்பது அறிக.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அருமை- இன்மை; அருங்கேடன் என்பதனைச் "சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில், என்றூழ் வியன்குளம்" ென்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம், 'செய்யான்' எனும் எதிர்மறைவினையுட் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.