திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/99.சான்றாண்மை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்

தொகு

பரிமேலழகர் உரை

தொகு

அதிகாரம் 99. சான்றாண்மை

தொகு
அதிகார முன்னுரை
அஃதாவது, பலகுணங்களானும் நிறைந்து அவற்றை ஆடல் தன்மை. பல குணங்களானும் என்பது, சாலுதல் தொழிலான் பெறப்படுதலின், அவற்றை என்பது வருவிக்கப்பட்டது. பெருமையுள் அடங்காத குணங்கள் பலவற்றையும் தொகுத்துக்கொண்டு நிற்றலின், இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

குறள் 981 (கடனென்ப )

தொகு

கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து () கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. (01) சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு.

தொடரமைப்பு: கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு, நல்லவை எல்லாம் கடன் என்ப.

இதன்பொருள்
கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு= நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டு ஒழுகுவார்குக்; நல்லவை எல்லாம் கடன் என்ப= நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாய் இருக்கும் என்று சொல்லுவர் நூலோர்.
உரை விளக்கம்
சிலகுணங்கள் இலவாய வழியு்ம், உள்ளன செய்துகொண்டனவாய வழியும், சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர்பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.

குறள் 982(குணநலஞ் )

தொகு

குணநலஞ் சான்றோர் நலனே பிறநல () குணநலம் சான்றோர் நலனே பிற நலம்

மெந்நலத் துள்ளதூஉ மன்று. (02) எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

தொடரமைப்பு: சான்றோர் நலன் குணநலனே, பிற நலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

இதன்பொருள்
சான்றோர் நலன் குணநலனே= சான்றோர் நலமாவது குணங்களான் ஆய நலமே; பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று= அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று.
உரை விளக்கம்
அந்நலத்தை முன்னே பிரித்தமையின் ஏனைப் புறநலத்தைப் 'பிறநலம்' என்றும், அது குடிப்பிறப்பும், கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின், 'எந்நலத்து உள்ளதூஉம் அன்று' என்றும் கூறினார்.
இவை இரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள் பொதுவகையான் கூறப்பட்டன.

குறள் 983 (அன்புநாண் )

தொகு

அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ () அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

டைந்துசால் பூன்றிய தூண். (03) ஐந்து சால்பு ஊன்றிய தூண்.

தொடரமைப்பு: அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, சால்பு ஊன்றிய தூண் ஐந்து.

இதன்பொருள்
அன்பு= சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர் மேலும் உளதாய அன்பும்; நாண்= பழி, பாவங்களின் நாணலும்; ஒப்புரவு= யாவர்மாட்டும் ஒப்புரவு செய்தலும்; கண்ணோட்டம்= பழையார்மேல் கண்ணோடலும்; வாய்மையொடு= எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து= சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து.
உரை விளக்கம்
எண் ஒடு முன்னவற்றோடும் கூடிற்று. இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின், இவற்றைத் தூண் என்றார். ஏகதேச உருவகம்.

குறள் 984 (கொல்லா )

தொகு

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை () கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை

சொல்லா நலத்தது சால்பு. (04) சொல்லா நலத்தது சால்பு.

தொடரமைப்பு: நோன்மை கொல்லா நலத்தது, சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது.

இதன்பொருள்
நோன்மை கொல்லா நலத்தது= பிற அறங்களும் வேண்டுமாயினும், தவம் ஓருயிரையும் கொல்லாத அறத்தின்கண்ணதாம்; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது= அதுபோலப் பிற குணங்களும் வேண்டுமாயினும். சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின்கண்ணதாம்.
உரை விளக்கம்
'நலம்' என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டினையும் தலைமை தோன்ற இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லா அறம் சிறந்தாற் போலச் சால்பிற்குப் பிறர்குற்றம் சொல்லாக் குணம் சிறந்தது என்பதாம்.

குறள் 985 (ஆற்றுவார் )

தொகு

ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றோர் () ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்

மாற்றாரை மாற்றும் படை. (05) மாற்றாரை மாற்றும் படை.

தொடரமைப்பு: ஆற்றுவார் ஆற்றல் பணிதல், சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது.

இதன்பொருள்
ஆற்றுவார் ஆற்றல் பணிதல்= ஒரு கருமத்தைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக்கொள்ளுதல்; சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது= இனிச் சால்புடையார் தம் பகைவரைப் பகைமை ஒழிக்கும் கருவியும் அது.
உரை விளக்கம்
ஆற்றல்: அது வல்லராந் தன்மை. இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தான் தொக்கது. சால்பிற்கு ஏற்ற பணிதற் குணத்தது சிறப்புக் கூறுவார், ஏனையதும் உடன் கூறினார்.

குறள் 986(சால்பிற்கு )

தொகு

சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி () சால்பிற்குக் கட்டளை யாது எனின் தோல்வி

துலையல்லார் கண்ணுங் கொளல். (06) துலை அல்லார் கண்ணும் கொளல்.

தொடரமைப்பு: சால்பிற்குக் கட்டளை யாதெனின், தோல்வி துலை அல்லார் கண்ணும் கொளல்.

இதன்பொருள்
சால்பிற்குக் கட்டளை யாது எனின்= சால்பாகிய பொன்னின் அளவு அறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின்; தோல்வி துலை அல்லார்கண்ணும் கொளல்= அது தம்மின் உயர்ந்தார்மாட்டுக் கொள்ளும் தோல்வியை இழிந்தார்மாட்டும் கோடல்.
உரைவிளக்கம்
துலை- ஒப்பு. எச்சவும்மையான் இருதிறத்தார்கண்ணும் வேண்டுதல் பெற்றாம். கொள்ளுதல்: வெல்லும் ஆற்றல் உடையராயிருந்தே ஏற்றுக்கொள்ளுதல். இழிந்தாரை வெல்லுதல் கருதித் தம்மோடு ஒப்பித்துக்கொள்ளாது தோல்வியான் அவரின் உயர்வராயின், அதனான் சால்பளவு அறியப்படும் என்பதாம்.

குறள் 987 (இன்னாசெய்தார்க்கு )

தொகு

இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா () இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

லென்ன பயத்ததோ சால்பு. (07) என்ன பயத்ததோ சால்பு.

தொடரமைப்பு: இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால், சால்பு என்ன பயத்ததோ

இதன்பொருள்
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்= தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது= அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து?
உரை விளக்கம்
சிறப்பும்மை அவர் இன்னா செய்தற்கு இடனாதல் விளக்கிநின்றது. ஓகாரம் அசை. வினா எதிர்மறைப் பொருட்டு. தாமும் என்னா செய்வாராயின், சால்பால் ஒருபயனும் இல்லை எ்னபதாம்.
இவை ஐந்து பாட்டானும் சிறப்புவகையான் கூறப்பட்டது.

குறள் 988 (இன்மையொரு )

தொகு

இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னுந் () இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும்

தி்ண்மை யுண்டாகப் பெறின். (08) திண்மை உண்டாகப் பெறின்.


தொடரமைப்பு:சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின், ஒருவற்கு இன்மை இளிவு அன்று.

இதன்பொருள்
சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்= சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று= ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது.
உரை விளக்கம்
தளராமை நாட்டுதலின் வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மைதானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலையுடையர் என்பதாம்.

குறள் 989( ஊழிபெயரினுந்)

தொகு

ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக் () ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு

காழி யெனப்படு வார். (09) ஆழி எனப்படுவார்.

தொடரமைப்பு: சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார், ஊழி பெயரினும் தாம் பெயரார்.

இதன்பொருள்
சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார்= சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார்= ஏனைக் கடலும் கரையுள் நில்லாமல் காலத்தான் திரிந்தாலும் தாம் திரியார்.
உரை விளக்கம்
சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடல் ஆக்கியும், அதனைத் தாங்கிக்கொண்டு நிற்றலின் அஃது உடையாரைக் கரையாக்கியும் கூறினார். "பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ"ħ என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.
ħ. புறநானூறு, 330.

குறள் 990 (சான்றவர் )

தொகு

சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந்தான் () சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம்தான்

தாங்காது மன்னோ பொறை. (10) தாங்காது மன்னோ பொறை.

தொடரமைப்பு: சான்றவர் சான்றாண்மை குன்றின், இரு நிலம் தான் பொறை தாங்காது.

இதன்பொருள்
சான்றவர் சான்றாண்மை குன்றின்= பல குணங்களானும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; இரு நிலம் தான் பொறை தாங்காது மன்னோ= மற்றை இருநிலந்தானும் தன் பொறையைத் தாங்காதாய் முடியும்.
உரை விளக்கம்
தானும் என்னு எச்சவும்மை விகாரத்தான் தொக்கது. அவர்க்கு அது குன்றாமையும், அதற்கு அது தாங்கலும் இயல்பாகலான், அவை எஞ்ஞான்றும் உளவாகா என்பது தோன்றநின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'ஓ'காரம் அசை. இதற்கு இருநிலம் பொறை தாங்குவது சான்றவர் துணையாக வருதலான், அதுவும் அது தாங்கல் ஆற்றாது என்று உரைப்பாரும் உளர்.
இவை மூன்று பாட்டானும் அவற்றான் நிறைந்தவரது சிறப்புக் கூறப்பட்டது.