திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/32.இன்னாசெய்யாமை
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
துறவறவியல்
தொகுஅதிகாரம் 32. இன்னாசெய்யாமை
தொகுபரிமேலழகர் உரை
தொகு- அதிகார முன்னுரை
- அஃதாவது, தனக்கு ஒருபயன் நோக்கியாதல், செற்றம்பற்றியாதல் சோர்வானாதல் ஓருயிர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை. இன்னாசெய்தல் வெகுளி யொழியவும் நிகழும்என்பது அறிவித்தற்கு இது வெகுளாமையின் பின் வைக்கப்பட்டது.
குறள்: 311 (சிறப்பீனுஞ்)
தொகு- சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
- செய்யாமை மாசற்றார் கோள் (01)
- சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
- செய்யாமை மாசு அற்றார் கோள்.
- இதன்பொருள்
- சிறப்பு ஈனும் செல்வம் பெறினும்= யோகமாகிய சிறப்புத் தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள்= அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறியவாற்றான் மனம் தூயாரது துணிவு.
- உரைவிளக்கம்
- 'உம்'மை பெறாமை மேற்று. சிறப்புடையதனைச் 'சிறப்'பென்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின், எட்டுச் சித்திகளையும் 'சிறப்பீனும் செல்வம்' என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றமையான் 'மாசற்றார்' என்றும் கூறினார்.
- இதனால் தமக்கொரு பயனோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.
குறள்: 312 (கறுத்தின்னா)
தொகு- கறுத்தின்னா செய்த வக்கண்ணு மறுத்தின்னா
- செய்யாமை மாசற்றார் கோள் (02)
- கறுத்து இன்னா செய்த அக் கண்ணும் மறுத்து இன்னா
- செய்யாமை மாசு அற்றார் கோள்.
- இதன்பொருள்
- கறுத்து இன்னா செய்த அக்கண்ணும்= தம்மேல் செற்றங்கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்தவிடத்தும்; மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள்= மீண்டு தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு.
- உரைவிளக்கம்
- இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தாற் றொக்கது. அவ்வின்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பால தென்பதாம்.
குறள்: 313 (செய்யாமற்)
தொகு- செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
- னுய்யா விழுமந் தரும் (03)
- செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
- உய்யா விழுமம் தரும்.
- இதன்பொருள்
- செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்= தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேற் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும்= அச்செயல் அவனுக்குக் கடக்கமுடியாத இடும்பையைக் கொடுக்கும்.
- உரைவிளக்கம்
- அவ்விடும்பையாவது, தவமிழந்து பழியும் பாவமும் எய்தல்.
குறள்: 314 (இன்னாசெய்தாரை)
தொகு- இன்னா செய்தாரை யொறுத்த லவர்நாண
- நன்னயஞ் செய்து விடல் (04)
- இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
- நன் நயம் செய்து விடல்.
- இதன்பொருள்
- இன்னா செய்தாரை ஒறுத்தல்= தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது; அவர் நாண நன்னயம் செய்து விடல்= அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்.
- உரைவிளக்கம்
- மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்குமாகலின், மறக்கற் பாலவாயின. அவரைவெல்லும் உபாயம் கூறியவாறு.
- இவை மூன்று பாட்டானும் செற்றம்பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.
குறள்: 315 (அறிவினான்)
தொகு- அறிவினானாகுவ துண்டோ பிறிதினோய்
- தநநோய்போற் போற்றாக் கடை (05)
- அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
- தம் நோய் போல் போற்றாக் கடை.
- இதன்பொருள்
- அறிவினான் ஆகுவது உண்டோ= துறந்தார்க்கு உயிர் முதலியவற்றை உள்ளவாறு அறிந்த அறிவினான் ஆவதொரு பயனுண்டோ? பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றாக் கடை= பிறிதோர் உயிருக்கு வரும் இன்னாதவற்றைத் தம்முயிர்க்கு வந்தன போலக் குறிக்கொண்டு காவாவிடத்து.
- உரைவிளக்கம்
- குறிக்கொண்டு காத்தலாவது நடத்தல், இருத்தல், கிடத்தல், நிற்றல், உண்டல் முதலிய தந்தொழில்களானும் பிறவாற்றானும் உயிர்கள் உறுவனவற்றை முன்னே அறிந்து உறாமற் காத்தல். இது பெரும்பான்மையும் அஃறிணைக்கண் நுண்ணிய உடம்புடையவற்றைப் பற்றி வருதலிற் பொதுப்படப் 'பிறிதின்நோய்' என்றும், மறப்பான் அது துன்புறினும் நமக்கின்னா செய்தலாம் என்று அறிந்து காத்தல் வேண்டுமாகலின் அது செய்யாவழி 'அறிவினான் ஆகுவதுண்டோ' என்றும் கூறினார்.
- இதனாற் சோர்வாற் செய்தல் விலக்கப்பட்டது.
குறள்: 316 (இன்னாவெனத்)
தொகு- இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை
- வேண்டும் பிறன்கட் செயல் (06)
- இன்னா எனத் தான் உணர்ந்தவை துன்னாமை
- வேண்டும் பிறன் கண் செயல்.
- இதன்பொருள்
- இன்னா எனத் தான் உணர்ந்தவை= இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தாற் தான் அறிந்தவற்றை; பிறன்கண் துன்னாமை வேண்டும்= பிறன்மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும்.
- உரைவிளக்கம்
- இன்பத்துன்பங்கள் உயிர்க்குணமாகலின், அவை காட்சியளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழியாகலான், உணர்ந்தவை என்றார்.
குறள்: 317 (எனைத்தானும்)
தொகு- எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானா
- மாணாசெய் யாமை தலை (07)
- எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
- மாணா செய்யாமை தலை.
- இதன்பொருள்
- மனத்தான் ஆம் மாணா= மனத்தோடு உளவாகின்ற இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை= எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம்.
- உரைவிளக்கம்
- ஈண்டு மனத்தான் ஆகாதவழிப் பாவமில்லை என்பது பெற்றாம். ஆற்றல் உண்டாய காலத்தும் ஆகாமையின் 'எஞ்ஞான்றும்' என்றும், எளியார்க்கும் ஆகாமையின் 'யார்க்கும்' என்றும், செயல்சிறிதாயினும் பாவம் பெரிதாகலின் 'எனைத்தானும்' என்றும் கூறினார்.
குறள்: 318 (தன்னுயிர்க்கு)
தொகு- தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ
- மன்னுயிர்க் கின்னா செயல் (08)
- பதப்பிரிப்பு
- தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என் கொலோ
- மன் உயிர்க்கு இன்னா செயல்.
- இதன்பொருள்
- தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான்= பிறர்செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்; மன் உயிர்க்கு இன்னா செயல் என்கொல்= நிலைபேறுடைய பிறவுயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தான்!
- உரைவிளக்கம்
- இவ்வாறே இவை பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான் அறிந்து வைத்துச் செய்கின்ற இப்பாவம் கழுவப்படாமையின், இன்னாதன யான் வருந்தப் பின்னே வந்து வருத்தும் என்பது ஆகமத்தானும் அறிந்து ஒழியற்பாலன என்பது தோன்றத் 'தான்' என்றும், அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கம் என்பது தோன்ற 'என்கோலோ' என்றும் கூறினார்.
- இவை மூன்று பாட்டானும் பொதுவகையான் விலக்கப்பட்டது.
குறள்: 319 (பிறர்க்கின்னா)
தொகு- பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் தமக்கின்னா
- பிற்பகற் றாமே வரும் (09)
- பதப்பிரிப்பு
- பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
- பிற்பகல் தாமே வரும்.
- இதன்பொருள்
- பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்= துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றை ஒருபகலது முற்கூற்றின்கட் செய்வாராயின்; தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்= தமக்கு இன்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும்.
- உரைவிளக்கம்
- 'முற்பகல்' 'பிற்பகல்' என்பன பின்முன்னாகத்தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. தவம் அழிதலின் அங்ஙனம் கடிதினும் எளிதினும் வரும்; அதனான் அவை செய்யற்க என்பதாம். இனித் 'தானே வரும்' என்பது பாடாமாயின், அச்செயல் தானே தமக்கு இன்னாதனவாய் வரும் என உபசார வழக்காக்கி, ஆக்கம் வருவித்து உரைக்க.
குறள்: 320 (நோயெல்லாம்)
தொகு- நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
- நோயின்மை வேண்டு பவர் (10)
- பதப்பிரிப்பு
- நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார்
- நோய் இன்மை வேண்டுபவர்.
- இதன்பொருள்
- நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்= இன்னாதன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேலவாம்; நோயின்மை வேண்டுபவர் நோய் செய்யார்= அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார்.
- உரைவிளக்கம்
- உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் அதுவே[1]யாகலின், நோயெல்லா நோய்செய்தார் மேலவாம் என்றார். இது சொற்பொருட் பின்வருநிலை.
- இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.
- [1].சீவக சிந்தாமணி, முத்தியிலம்பகம்-164.