திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/38.ஊழ்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


ஊழியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

இயல்முன்னுரை
இவ்வாற்றான் இம்மை மறுமை வீடென்னும் மூன்றனையும் பயத்தற்சிறப்புடைத்தாய அறம் கூறினார்; இனிப் பொருளும் இன்பமும் கூறுவார், அவற்றின் முதற்காரணமாய ஊழின்வலி கூறுகின்றார்.

அதிகாரம் 38 ஊழ் தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒருபொருட்கிளவி. இது பொருள் இன்பங்கள் இரண்டற்கும் பொதுவாய் ஒன்றனுள் வைக்கப்படாமையானும், மேற்கூறிய அறத்தோடு இயைபுடைமையானும் அதனது இறுதிக்கண் வைக்கப்பட்டது.

குறள்: 371 (ஆகூழாற்) தொகு

ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி (01)
ஆகு ஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள்
போகு ஊழால் தோன்றும் மடி.
இதன்பொருள்
கைப்பொருள் ஆகு ஊழால் அசைவுஇன்மை தோன்றும்= ஒருவற்குக் கைப்பொருள் ஆதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும்= அஃது அழிதற்குக் காரணம் ஆகிய ஊழான் மடி உண்டாம்.
விளக்கம்
ஆகூழ், போகூழ் என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு-மடி. பொருளின் ஆக்கவழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.

குறள்: 372 (பேதைப்படுக்கும்) தொகு

பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
மாகலூ ழுற்றக் கடை (02)
பேதைப் படுக்கும் இழவு ஊழ் அறிவு அகற்றும்
ஆகல் ஊழ் உற்றக் கடை.
இதன்பொருள்
இழவு ஊழ் (உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும்= ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும் கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனைப் பேதையாக்கும்; ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும்= இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும் கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும்.
விளக்கம்
கைப்பொருள் என்பது அதிகாரத்தான் வந்தது. இழவூழ் ஆகலூழ் என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. உற்றக்கடை என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும் வேறுபடு்க்கும் என்பதாம்.

குறள் 373 (நுண்ணியநூல்) தொகு

நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
னுண்மை யறிவே மிகும் (03)
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும்.
இதன்பொருள்
நுண்ணிய நூல் பல கற்பினும்= பேதைப்படுக்கும் ஊழ்உடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும்; மற்றும் தன் உண்மை அறிவே மிகும்= அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும்.
விளக்கம்
பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல் கல்வியறிவைப் பின் இரங்குதற்குஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். "காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா- வாதல் கண்ணகத்து அஞ்சனம் போலுமால்"1 என்பதும் அது. செயற்கையான் ஆய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.

1. சீவகசிந்தாமணி, கனகமாலையார் இலம்பகம்-76.

குறள் 374 (இருவேறுலகத்து) தொகு

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய லராதலும் வேறு (04)
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.
இதன்பொருள்
உலகத்து இயற்கை இரு வேறு= உலகத்து ஊழினாய இயற்கை இரண்டு கூறு; திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு= ஆதலாற் செல்வமுடையர் ஆதலும் வேறு, அறிவுடையர் ஆதலும் வேறு.
விளக்கம்
செல்வத்தினைப் படைத்தலும் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க்கு அல்லது இயலா அன்றே; அவ்வாறன்றி அறிவுடையார் வறியர் ஆகவும், ஏனையார் செல்வர் ஆகவும் காண்டலான், அறிவுடையார் ஆதற்கு ஆகும் ஊழ் செல்வம் உடையார்க்கு ஆகாது; செல்வம் உடையர் ஆதற்கு ஆகும் ஊழ், அறிவுடையர் ஆதற்கு ஆகாது என்று ஆயிற்று. ஆகவே செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக்காரணமும் வேண்டா என்பது பெற்றாம்.

குறள் 375 (நல்லவையெல்லாம்) தொகு

நல்லவை யெல்லாந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு (05)
நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
இதன்பொருள்
செல்வம் செயற்கு= செல்வத்தை ஆக்குதற்கு; நல்லவை எல்லாம் தீயவாம்= நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம்= அதுவே அன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும், ஊழ்வயத்தான்.
விளக்கம்
நல்லவை, தீயவை என்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலாயவற்றை. ஊழான் என்பது அதிகாரத்தாற் பெற்றாம்.

அழிக்கும் ஊழ் உற்றவழிக் காலம் முதலிய நல்லவாயினும் அழியும்; ஆக்கும் ஊழ் உற்றவழி, அவை தீயவாயினும் ஆகும் என்பதாயிற்று. ஆகவே, காலம் முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்கும் என்பது பெற்றாம்.

குறள் 376 (பரியினும்) தொகு

பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம (06)
பரியினும் ஆகாவாம் பால் அல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
இதன்பொருள்
பால் அல்ல பரியினும் ஆகாவாம்= தமக்கு ஊழ் அல்லாத பொருள்கள் வருந்திக் காப்பினும் தம்மிடத்து நில்லாவாம்; தம உய்த்துச் சொரியினும் போகா= ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும், தம்மை விட்டுப் போகா.
விளக்கம்
பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினால் ஆவதல்லது காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம்.
இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.

குறள் 377 (வகுத்தான்) தொகு

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது (7)
வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
இதன்பொருள்
கோடி தொகுத்தார்க்கும்= ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும்; வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது= தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது.
விளக்கம்
ஓருயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கட் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின் வகுத்தான் என்றார். "இசைத்தலும் உரிய வேறிடத் தான"2 என்பதனான் உயர்திணை ஆயிற்று. "படையாதார்க்கே அன்றிப் படைத்தார்க்கும்"3: என்றமையால், உம்மை எச்ச உம்மை. : "வெறும் முயற்சிக4ளாற் பொருள்களைப் படைத்தலல்லது நுகர்தலாகாது"4; : அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.

2. தொல்காப்பியம், சொல்லதிகாரம், கிளவியாக்கம்-56.

3. 'தொகாதார்க்கே அன்றித் தொகுத்தார்க்கும்'- என்றும் பாடம்.

4. இலக்கணக்கொத்து, வினையியல்- பதினேழாம் சூத்திரவுரை.

குறள் 378 (துறப்பார்மற்) தொகு

துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால
வூட்டா கழியு மெனின் (08)
துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற் பால
ஊட்டா கழியும் எனின்.
இதன்பொருள்
துப்புரவு இல்லார் துறப்பார்= வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையர் ஆவர்; உறற்பால ஊட்டா கழியும் எனின்= ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின்.
விளக்கம்
துறப்பார் என்பது ஆர் ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும் கருத்து வேற்பாட்டால் துன்பம் உறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், மன் ஒழியிசைக்கண் வந்தது.

குறள்: 379 (நன்றாங்கால்) தொகு

நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன் (09)
நன்று ஆம் கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லல் படுவது எவன்.
இதன்பொருள்
நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர்= நல்வினை விளையுங்கால் அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது இவை நல்லவென்று இயைந்து அனுபவிப்பார்; அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன்= ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு அனுபவியாது துடைக்குந் திறன் நாடி அல்லல் உழப்பது என் கருதி?
விளக்கம்
தாமே முன்செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால; அவற்றுள் ஒன்றற்கு இயைந்து அனுபவித்து ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம்.
இவை மூன்று பாட்டானும் இன்பத்துன்பங்கட்குக் காரணமாய ஊழின்வலி கூறப்பட்டது.

குறள் 380 (ஊழிற்பெருவலி) தொகு

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும் (10)
ஊழிற் பெருவலி யா உள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும்.
இதன்பொருள்
மற்றுஒன்று சூழினும் தான் முந்துறும்= தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலை ஆவதோர் உபாயத்தைச் சூழினும், தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும்; ஊழிற் பெருவலி யா உள= அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை யுள?
விளக்கம்
பெருவலி ஆகுபெயர். சூழ்தல் பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றுச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின், உம்மை எச்சவும்மை. எல்லாம் வழியாக வருதல் உடைமையின், ஊழே வலியது என்பதாம்.
இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.

ஊழியல் முற்றிற்று

அறத்துப்பால் முற்றிற்று