திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/80.நட்பாராய்தல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


80.நட்பாராய்தல் தொகு

திருக்குறள் பொருட்பால்- அங்கவியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 80.நட்பு ஆராய்தல் தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, மேற்சொல்லிய இலக்கணத்தாரை ஆராய்ந்து அறிந்தே நட்க வேண்டுதலின், அவரை ஆராயும் திறம். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 791 (நாடாது ) தொகு

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் () நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு. (01) வீடு இல்லை நாடு ஆள்பவர்க்கு.

தொடரமைப்பு: நட்பு ஆள்பவர்க்கு நட்டபின் வீடு இல்லை, நாடாது நட்டலின் கேடு இல்லை.

இதன்பொருள்
நட்பு ஆள்பவர்க்கு நட்டபின் வீடு இல்லை=நட்பினை விரும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவனோடு நட்புச்செய்தபின் அவனை விடுதல் உண்டாகாது; நாடாது நட்டலிற் கேடு இல்லை= ஆகலான், ஆராயாது நட்புச்செய்தல்போலக் கேடு தருவது பிறிதில்லை.
உரைவிளக்கம்
ஆராய்தல், குணஞ்செய்கைகளது நன்மையை ஆராய்தல். 'கேடு' ஆகுபெயர். நட்கின் தாம் அவர் என்னும் வேற்றுமையின்மையின் 'வீடில்லை' என்றும், அவ்வேற்றுமையின்மையான் அவன்கண் பழிபாவங்கள் தமவாம் ஆகலின், இருமையும் கெடுவர் என்பது நோக்கி 'நாடாது நட்டலிற் கேடில்லை' என்றும் கூறினார்.

குறள் 792(ஆய்ந்தாய்ந்து ) தொகு

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை () ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடை முறை

தான்சாந் துயரந் தரும். (02) தான் சாம் துயரம் தரும்.

தொடரமைப்பு: ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் கடை முறை தான் சாம் துயரம் தரும்.

இதன்பொருள்
ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான்= குணமும் செய்கையும் நல்லன் என்பது, பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து ஒருவனோடு நட்புக்கொள்ளாதவன்; கடைமுறை தான் சாம் துயரம் தரும்= முடிவில் தான் சாதற்கு ஏதுவாய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்கவேண்டாமல் தானே விளைக்கும்.
உரைவிளக்கம்
கடைமுறைக் கண்ணென இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்க. குணமும் செயலும் தீயானொடு கொள்ளின் அவற்கு வரும் பகைமையெல்லாம் தன்மேலவாய்ப் பின் அவற்றான் இறந்துவிடும் என்பதாம்.
இவை இரண்டுபாட்டானும் ஆராயாவழிப் படும் இழுக்குக் கூறப்பட்டது.

குறள் 793 (குணனும் ) தொகு

குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா () குணனும் குடிமையும் குற்றமும் குன்றா

வினனு மறிந்தியாக்க நட்பு. (03) இனனும் அறிந்து யாக்க நட்பு.

தொடரமைப்பு:குணனும் குடிமையும் குன்றா இன்னும் அறிந்து, நட்பு யாக்க.

இதன்பொருள்
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து= ஒருவன் குணத்தினையும், குடிப்பிறப்பினையும், குற்றத்தினையும், குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்து அறிந்து; நட்பு யாக்க= அவனோடு நட்புச் செய்க.
உரைவிளக்கம்
குற்றம் இல்லாதார் உலகத்து இன்மையின், உள்ளது பொறுக்கப் படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்று அன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப்பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இனனும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பார் 'அறிந்து யாக்க' என்றும் கூறினார்.

குறள் 794 (குடிப்பிறந்து ) தொகு

குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் () குடிப் பிறந்து தன்கண் பழி நாணுவானைக்

கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு. (04) கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு.

தொடரமைப்பு: குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானைக் கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும்.

இதன்பொருள்
குடிப்பிறந்து தன்கண் பழிநாணுவானை= உயர்ந்த குடியின்கண் பிறந்து, தன் மாட்டு உலகர் சொல்லும் பழிக்கு அஞ்சுவானை; கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும்= சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது.
உரைவிளக்கம்
குடிப்பிறப்பான் தான் பிழைசெய்யாமையும், பழிக்கு அஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம். இவை இரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை விலைகொடுத்தும் கொள்க என்பதாம்.

குறள் 795 (அழச்சொல்லி ) தொகு

அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய () அழச் சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய

வல்லார்நட் பாய்ந்து கொளல். (05) வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்.

தொடரமைப்பு: அல்லது அழச் சொல்லி இடித்து வழக்கு அறிய வல்லார் ஆய்ந்து நட்புக் கொளல்.

இதன்பொருள்
அல்லது அழச் சொல்லி= தாம் உலகவழக்கல்லது செய்யக் கருதின், சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து= செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு அறிய வல்லார்= அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; ஆய்ந்து நட்புக்கொளல்= ஆராய்ந்து நட்புக் கொள்க.
உரைவிளக்கம்
'அழச்சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற? குற்ற வினைகள் வருவிக்கப்பட்டன. 'வழக்கு' உலகத்தார் அடிப்படச் செய்துபோந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும்வகை அறிவித்தல் அரிதாகலின் 'அறியவல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.

குறள் 796(கேட்டினு ) தொகு

கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை () கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை

நீட்டி யளப்பதோர் கோல். (06) நீட்டி அளப்பது ஓர் கோல்.

தொடரமைப்பு: கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல் கேட்டினும் ஓர் உறுதி உண்டு.

இதன்பொருள்
கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல்= ஒருவனுக்குக் கேடென்பது தன் நட்டாராகிய புலன்களை எஞ்சாமல் அளப்பதோர் கோல்; கேட்டினும் ஓர் உறுதி உண்டு= ஆகலின் அதன்கண்ணும் அவனாற் பெறப்படுவதோர் நல்லறிவு உண்டு.
உரைவிளக்கம்
தத்தம் நட்பு எல்லைகள் சுருங்கி இருக்கவும், செல்வக்காலத்துப் புறத்துத் தோன்றாமல் போந்தார் பின் கேடுவந்துழிச் செயல் வேறுபடுதலின் அக்கேட்டால் அவை வரையறுக்கப்படும் என்பதுபற்றிக் கேட்டினைக் கோலாக்கியும், அதனால் அவரை அளந்தறிந்தால் ஆவாரையே கோடலின் அவ்வறிவினை 'உறுதி' யென்றும் கூறினார். 'கிளைஞர்' ஆகுபெயர். இஃது ஏகதேச உருவகம்.
இவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும், ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவர் என்பதூஉம் கூறப்பட்டன.

குறள் 797 (ஊதிய ) தொகு

ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார் () ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

கேண்மை யொரீஇ விடல். (07) கேண்மை ஒரீஇ விடல்.

தொடரமைப்பு: ஒருவற்கு ஊதியம் என்பது பேதையார் கேண்மை ஒரீஇ விடல்.

இதன்பொருள்
ஒருவற்கு ஊதியம் என்பது= ஒருவனுக்குப் பேறென்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஒரீஇ விடல்= அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின், அதனை ஒழிந்து அவரின் நீங்குதல்.
உரைவிளக்கம்
நட்பு ஒழிந்தாலும், நீங்காக்கால் "வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வே"§மாறுபோலத் தீங்கு வருதலின், 'விடல்' என்றும், நீங்கியவழித் தீங்கு ஒழிதலேயன்றி இருமையின்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின் அதனை 'ஊதியம்' என்றும் கூறினார்.

§. நாலடியார், 180.

குறள் 798 (உள்ளற்க ) தொகு

உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க (08) உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

வல்லற்க ணாற்றறுப்பார் நட்பு. (08) அல்லல் கண் ஆற்று அறுப்பார் நட்பு.

தொடரமைப்பு: உள்ளம் சிறுகுவ உள்ளற்க,அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு கொள்ளற்க.

இதன்பொருள்
உள்ளம் சிறுகுவ உள்ளற்க= தம் ஊக்கம் சுருங்குதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாது ஒழிக; அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க= அதுபோலத் தமக்கு ஒருதுன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாது ஒழிக.
உரைவிளக்கம்
'உள்ளம் சிறுகுவ'வாவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும், பயனில்லனவுமாம். 'ஆற்று' என்பது, முதனிலைத் தொழிற்பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், வலியறுப்பார் என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.

குறள் 799(கெடுங்காலை ) தொகு

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை () கெடும் காலை கை விடுவார் கேண்மை அடும் காலை

யுள்ளினு முள்ளஞ் சுடும். (09) உள்ளினும் உள்ளம் சுடும்.

தொடரமைப்பு: கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை, அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும்.<

இதன்பொருள்
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை= ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும்= தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும்.
உரைவிளக்கம்
நினைத்ததுணையானே இயைபு இல்லாத பிறனுக்கும் கூற்றினும் கொடிதாம் எனக் கைவீடு எண்ணிச் செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, அவன்றானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும் அக்கேட்டினும் சுடும் என்று உரைப்பாரும் உளர்.
இவை மூன்றுபாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.

‡. மணக்குடவர்

குறள் 800 (மருவுக ) தொகு

மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்து () மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்

மொருவுக வொப்பிலார் நட்பு. (10) ஒருவுக ஒப்பிலார் நட்பு.

தொடரமைப்பு: மாசு அற்றார் கேண்மை மருவுக, ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக.

இதன்பொருள்
மாசு அற்றார் கேண்மை மருவுக= உலகோடு ஒத்துக் குற்றமற்றார் நட்பினையே பயில்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக= உலகத்தோடு ஒத்தில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியது ஒன்றனைக் கொடுத்தாயினும் விடுக.
உரைவிளக்கம்
உலகோடு ஒத்தார் நட்பு இருமையின்பமும் பயத்தலின் 'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே பயத்தலின் அதன் ஒழிவை விலைகொடுத்தும் கொள்க என்றும் கூறினார்.
இதனால் அவ்விருமையும் தொகுத்துக் கூறப்பட்டன.