திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/111.புணர்ச்சிமகிழ்தல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- களவியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 111.புணர்ச்சி மகிழ்தல் தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, அங்ஙனம் குறிப்பறி்ந்து புணர்ந்த தலைமகன் அப்புணர்ச்சியினை மகிழ்ந்து கூறல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 1 ( கண்டுகேட்டு) தொகு

[இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது]

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு ( ) கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம் புலனும்

மொண்டொடி கண்ணே யுள. (01) ஒள் தொடி கண்ணே உள.

தொடரமைப்பு:
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும், ஒண்டொடி கண்ணே உள.

இதன்பொருள்
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்= கண்ணாற்கண்டும், செவியாற் கேட்டும், நாவால் உண்டும், மூக்கான் மோந்தும் மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம் புலனும்;
ஒண்டொடி கண்ணே உள= இவ்வொள்ளிய தொடியை உடையாள்கண்டே உளவாயின.
உரைவிளக்கம்
உம்மை முற்றும்மை. தேற்றேகாரம் வேறிடத்து இன்மை விளக்கி நின்றது. வேறு வேறு காலங்களில் வேறு வேறு பொருள்களான் அனுபவிக்கப்படுவன ஒருகாலத்து இவள்கண்ணே அனுபவிக்கப்பட்டன என்பதாம். வடநூலார் இடக்கர்ப்பொருளளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டு அடக்கிக் கூறப்பட்டன.

குறள் 1102 (பிணிக்கு ) தொகு

[இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது]

பிணிக்கு மருந்து பிறம னணியிழை ( ) பிணிக்கு மருந்து பிற மன் அணி இழை

தன்னோய்க்குத் தானே மருந்து. (02) தன் நோய்க்குத் தானே மருந்து.

தொடரமைப்பு:
பிணிக்கு மருந்து பிற, அணியிழை தன் நோய்க்கு மருந்து தானே.

இதன்பொருள்
பிணிக்கு மருந்து பிற மன்= வாத முதலிய பிணிகட்கு மருந்தாவன அவற்றிற்கு நிதானமாயினவன்றி மாறாய இயல்பினை உடையனவாம்;
அணியிழை தன் நோய்க்குத் மருந்து தானே= அவ்வாறன்றி இவ்வணியிழையினை உடையாள் தன்னின் ஆய பிணிக்கு மருந்தும் தானே ஆயினாள்.
உரை விளக்கம்
இயற்கைப் புணர்ச்சியை நினைந்து முன் வருந்தினான் ஆகலின், 'தன்னோய்' என்றும், அவ்வருத்தம் தமியாளை இடத்து எதிர்ப்பட்டுத் தீர்ந்தான் ஆகலின், 'தானே மருந்து' என்றும் கூறினான். இப்பிணியும் எளியவாயவற்றான் தீரப்பெற்றிலம் என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.

குறள் 1103 (தாம்வீழ்வார் ) தொகு

[நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது என்ற பாங்கற்குச் சொல்லியது.]

தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொ ( ) தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது கொல்

றாமரைக் கண்ணா னுலகு. (03) தாமரைக் கண்ணான் உலகு.

தொடரமைப்பு:
தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிது கொல், தாமரைக்கண்ணான் உலகு.

இதன்பொருள்
தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்= ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில்போல வருந்தாமல் எய்தல் ஆமோ; தாமரைக்கண்ணான் உலகு= அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்?
உரை விளக்கம்
ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய்நிலையான் வந்தது. இப்பெற்றித்தாய துயிலைவிட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது என்னும் கருத்தால் 'இனிதுகொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். 'தாமரைக்கண்ணான்' என்பது அவனுக்குப் பெயர் அன்மையின், அஃது உரையன்மை அறிக.

குறள் 1104 (நீங்கிற் ) தொகு

[பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது]

நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந் ( ) நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்

தீயாண்டுப் பெற்றா ளிவள். (04) தீ யாண்டுப் பெற்றாள் இவள்.

தொடரமைப்பு:
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீ, இவள் யாண்டுப் பெற்றாள்.

இதன்பொருள்
நீங்கின்தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ= தன்னை அகன்றுழிச் சுடாநிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும், இப்பெற்றித்தாய தீயை;
இவள் யாண்டுப்பெற்றாள்= என்கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள்?
உரை விளக்கம்
கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடிய பின் இன்புறுதலின் 'குறுகுங்கால் தண்ணென்னும்' என்றும், இப்பெற்றியதோர் தீ உலகத்து இல்லையாம் ஆகலின், 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத்தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்.

குறள் 1105 (வேட்டபொழுதி ) தொகு

[தோழியிற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது]

வேட்ட பொழுதி னவையவை போலுமே () வேட்ட பொழுதின் அவை அவை போலுமே

தோட்டார் கதுப்பினா டோள். (05) தோடு ஆர் கதுப்பினாள் தோள்.

தொடரமைப்பு:
வேட்ட பொழுதின் அவையவை போலுமே, தோட்டார் கதுப்பினாள் தோள்.

இதன்பொருள்
வேட்ட பொழுதின் அவையவை போலுமே= மிக இனியவாய பொருள்களைப் பெறாது அவற்றின்மேல் விருப்பம் கூர்ந்தபொழுதின்கண், அவையவை தாமே வந்து இன்பம் செய்யுமாறுபோல் இன்பம் செய்யும்;
தோட்டார் கதுப்பினார் தோள்= எப்பொழுதும் பெற்றுப் புணரினும், பூவினை அணிந்த தழைந்த கூந்தலினை உடையாள் தோள்கள்.
உரை விளக்கம்
தோடு ஆகுபெயர். இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டத்துக்கண் முன்னரே நிகழ்ந்திருக்கப் பின்னரும் புதியவாய்நெஞ்சம் பிணித்தலின், அவ் வாராமைபற்றி இவ்வாறு கூறினான். தொழிலுவமம்.

குறள் 1106 (உறுதோறு ) தொகு

[இதுவுமது]

உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் ( ) உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்கு

கமுதி னியன்றன தோள். (06) அமுதின் இயன்றன தோள்.

தொடரமைப்பு:
உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால், பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன.

இதன்பொருள்
உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால்= தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்று உறும்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்;
பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன= இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினான் செய்யப்பட்டன.
உரை விளக்கம்
ஏது ஆகலான், தீண்டல் அமிழ்திற்கும் எய்திற்று. வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, அவை 'அமிழ்தின் இயன்றன' என்றான். தளிர்த்தல்- இன்பத்தான் தழைத்தல்.

குறள் 1107 [தம்மிலிருந்து] தொகு

[இவளைநீ வரைந்துகொண்டு உலகோர் தம்மில்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தோடு படல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது]

தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா ( ) தம் இல் இருந்து தமது பாத்து உண்டு அற்றால்

லம்மா வரிவை முயக்கு. (07) அம் மா அரிவை முயக்கு.

தொடரமைப்பு:
அம் மா அரிவை முயக்கு, தம்இல் இருந்து தமது பாத்து உண்டற்றால்

இதன்பொருள்
அம் மா அரிவை முயக்கு= அழகிய மாமை நிறத்தை உடைய அரிவையது முயக்கம்;
தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால்= இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கணிருந்து, உலகோர் தம் தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்கட்குப் புகுத்துத் தம் கூற்றை உண்டாற்போலும்.
உரை விளக்கம்
தொழிலுவமம். இல்லறம் செய்தார் எய்தும் துறக்கத்து இன்பம் எனக்கு இப்புணர்ச்சியே தரும் என, வரைவு உடன்படான் கூறியவாறாயிற்று.

குறள் 1108 [வீழுமிரு] தொகு

[ஒத்த அன்புடைய நுமக்கு ஒருபொழுதும் விடாத முயக்கமே இனியது என வரைவு கடாய தோழிக்குச் சொல்லியது]

வீழு மிருவர்க் கினிதே வளியிடை ( ) வீழும் இருவர்க்கு இனிதே வளி இடை

போழப் படாஅ முயக்கு. (08) போழப் படாஅ முயக்கு.

தொடரமைப்பு:
வளி இடை போழப் படா முயக்கு, வீழும் இருவர்க்கு இனிதே.

இதன்பொருள்
வளி இடை போழப் படா முயக்கு= ஒருபொழுது நெகிழாமையின் காற்றால் இடை அறுக்கப்படாத முயக்கம்;
வீழும் இருவர்க்கு இனிதே= ஒருவரை ஒருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே.
உரை விளக்கம்
முற்றும்மை விகாரத்தான் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஈண்டு இருவர் இல்லை;இன்மையான் இஃது ஒவ்வாது என்பது கருத்து. களவிற் புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு உடன்படான் கூறியது.

குறள் 1109 [ஊடலுணர்த] தொகு

[கரத்தல் வேண்டாமையின் இடையறவு இல்லாத கூட்டமே இன்பப் பயனுடைத்து என வரைவு கடாவியாட்குச் சொல்லியது]

ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங் ( ) ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம்

கூடியார் பெற்ற பயன். (09) கூடியார் பெற்ற பயன்.

தொடரமைப்பு:
ஊடல் உணர்தல் புணர்தல் இவை, காமம் கூடியார் பெற்ற பயன்.

இதன்பொருள்
ஊடல் உணர்தல் புணர்தல் இவை= புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீங்குதலும், அதன்பின் நிகழ்வதாய அப்புணர்ச்சிதானும் என இவையன்றே;
காமம் கூடியார் பெற்ற பயன்= வரைந்துகொண்டு காமத்தை இடைவிடாது எய்தியவர் பெற்ற பயன்கள்.
உரை விளக்கம்
ஆடவர்க்குப் பிரிவு என்பது ஒன்று உளதாதன் மேலும், அதுதான் பரத்தையர்மாட்டு ஆதலும், அதனை அறிந்து மகளிர் ஊடிநிற்றலும், அவ்வூடலைத் தவறு செய்தவர்தாமே தம் தவறின்மை கூறி நீக்கலும், பின்னும் அவ்விருவரும் ஒத்த அன்பினராய்க் கூடலும் அன்றே முன வரைந்து எய்தினார் பெற்ற பயன்; அப்பயன் இருதலைப் புள்ளின் ஓருயிராய உழுவல் அன்பு உடைய எமக்கு வேண்டா என அவ்வரைந்து எய்தலை இகழ்ந்து கூறியவாறு.

குறள் 1110 [அறிதோறறி] தொகு

[ புணர்ந்துடன் போகின்றான் தன்னுள்ளே சொல்லியது]

அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ் () அறிதோறு அறியாமை கண்டு அற்றால் காமம்

செறிதோறுஞ் சேயிழை மாட்டு. (10) செறிதோறும் சேயிழை மாட்டு.

தொடரமைப்பு:
அறிதோறு அறியாமை கண்டற்று, சேயிழை மாட்டுச் செறிதோறும் காமம்.

இதன்பொருள்
அறிதோறு அறியாமை கண்டற்று= நூல்களானும் நுண்ணுர்வானும் பொருள்களை அறிய அறிய முன்னை அறியாமை கண்டாற்போலக் காணப்படா நின்றது;
சேயிழை மாட்டுச் செறிதோறும் காமம்= சிவந்த இழையினை உடையாளை இடைவிடாது செறியச் செறிய இவள்மாட்டுக் காதல்.
உரை விளக்கம்
களவொழுக்கத்திற் பல இடையீடுகளான் எய்தப்பெறாது அவாவுற்றான் இதுபொழுது நிரந்தரமாக எய்தப் பெற்றமையின், 'செறிதோறும்' என்றான். அறிவிற்கு எல்லையின்மையான் மேன்மேல் அறிய அறிய முன்னை அறிவு அறியாமையாய் முடியுமாறுபோலச் செறிவிற்கு எல்லையின்றி மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு செறியாமையாய் முடியாநின்றது எனத் தன்னாராமை கூறியவாறு.
இப்புணர்ச்சி மகிழ்தல், தலைமட்கும் உண்டேனும் அவள்மாட்டுக் குறிப்பான் நிகழ்வது அல்லது கூற்றான் நிகழாமை அறிக.