திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/53.சுற்றந்தழால்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 53. சுற்றம் தழாஅல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகார முன்னுரை:

அஃதாவது, அரசன் தன் கிளைஞரைத் தன்னின் நீங்காமல் அணைத்தல். வினைசெய்வாரைக் கூறி ஏனைச் சுற்றம் கூறுகின்றார் ஆகலின், இது தெரிந்துவினையாடலின் பின் வைக்கப்பட்டது.

குறள் 521 (பற்றற்ற) தொகு

'பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்'பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல்

'சுற்றத்தார் கண்ணே யுள. (01)'சுற்றத்தார் கண்ணே உள.

இதன்பொருள்
பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல்= ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள்; சுற்றத்தார் கண்ணே உள= சுற்றத்தார்மாட்டே உளவாவன.
உரைவிளக்கம்
சிறப்பும்மை, வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. 'பழைமை' பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவராகலின், ஏகாரத் தேற்றத்தின்கண் வந்தது.
இதனாற் சுற்றத்தாரது சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 522 (விருப்பறாச்) தொகு

விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறாவிருப்பு அறாச் சுற்றம் இயையின் அருப்பு அறா

'வாக்கம் பலவுந் தரும். (02)'ஆக்கம் பலவும் தரும்.

இதன்பொருள்
விருப்பு அறாச் சுற்றம் இயையின்= அன்பு அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின்; அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும்= அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
உரைவிளக்கம்
உட்பகையின் நீக்குதற்கு 'விருப்பறாச் சுற்றம்' என்றும். தானே வளர்க்கும் ஒருதலையாய செல்வத்தின் நீக்குதற்கு 'அருப்பறாவாக்கம்' என்று விசேடித்தார். தொடை நோக்கி விகாரம் ஆயிற்று. 'இயையின்' என்பது அதனது அருமை விளக்கிநின்றது. 'ஆக்கம்' என்பது, ஆகுபெயர். 'பலவும்' என்றது அங்கங்கள் ஆறனையும் நோக்கி, பலர்கூடி வளர்த்தலின், அவை மேன்மேற் கிளைக்கும் என்பது கருத்து.

குறள் 523 (அளவளா) தொகு

அளவளா வி்ல்லாதான் வாழ்க்கை குளவளாக்அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளாக்

'கோடின்றி நீர்நிறைந் தற்று. (03)'கோடு இன்றி நீர் நிறைந்து அற்று.

இதன்பொருள்
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை= அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதவன் வாழ்க்கை; குளவளாக் கொடு இன்றி நீர் நிறைந்தற்று= குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற் போலும்.
உரைவிளக்கம்
சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சு கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவதாகலின், அளவளாவு எனபது ஆகுபெயர். வாழ்க்கை யென்றதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை. நிறைதல் என்னும் இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றமில்லாதவன் செல்வங்கள் தாங்குவார் இன்மையிற் புறத்துப் போம் என்பதாம்.

குறள் 524 (சுற்றத்தாற்) தொகு

'சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல் செல்வந்தான்'சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான்

'பெற்றத்தாற் பெற்ற பயன். (04)'பெற்றத்தால் பெற்ற பயன்.

இதன்பொருள்
செல்வம் பெற்றத்தான் பெற்ற பயன்= செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது; சுற்றத்தான் சுற்றப்பட ஒழுகல்= தன் சுற்றத்தால் தான் சூழப்படும்வகை அதனைத் தழீஇ ஒழுகுதல்.
உரைவிளக்கம்
'பெற்ற' என்பதனுள் அகரமும், அதனான் எனபதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தான் தொக்கன. இவ்வொழுக்குப் பகையின்றி அரசாடற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப் பயன் என்றார்.
இவைமூன்று பாட்டானும் சுற்றந்தழால் செல்வத்திற்கு ஏதுவும், அரணும், பயனும் ஆம் என்பது கூறப்பட்டது.

குறள் 525 (கொடுத்தலு) தொகு

கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கியகொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

'சுற்றத்தாற் சுற்றப் படும். (05)'சுற்றத்தான் சுற்றப்படும்.

இதன்பொருள்
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின்= ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும், இன்சொற் சொல்லுதலையும் வல்லனாயின்; அடுக்கிய சுற்றத்தான் சுற்றப்படும்= தம்மின் தொடர்ந்த பலவகைச் சுற்றத்தானே சூழப்படும்.
உரைவிளக்கம்
இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது தோன்ற 'ஆற்றின்' என்றார். தம்மின் தொடர்தலாவது, சுற்றத்தது சுற்றமும், அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும், சாமமும் என்ப.

குறள் 526 (பெருங்கொடையான்) தொகு

பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்

'மருங்குடையார் மாநிலத் தில். (06)'மருங்கு உடையார் மாநிலத்து இல்.

இதன்பொருள்
பெரும் கொடையான் வெகுளி பேணான்= ஒருவன்மிக்க கொடையை உடையனுமாய், வெகுளியை விரும்பானும் ஆயின்; அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல்= அவன்போலக் கிளையுடையார் இவ்வுலகத்தில் இல்லை.
உரைவிளக்கம்
மிக்க கொடை, ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல். விரும்பாமை, இஃது அரசற்கு வேண்டுவது ஒன்றுஎன்று அளவிறந்து செய்யாமை.

குறள் 527 (காக்கை) தொகு

காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமுகாக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்

'மன்னநீ ரார்க்கே யுள. (07)'அன்ன நீரார்க்கே உள.

இதன்பொருள்
காக்கை கரவா கரைந்து உண்ணும்= காக்கைகள் தமக்கு இரையாயின கண்டவழி, மறையாது இனத்தை அழைத்து அதனோடும்கூட உண்ணாநிற்கும்; ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள= சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உளவாவன.
உரைவிளக்கம்
அவ்வாக்கங்களாவன: பகையின்மையும், பெருஞ்செல்வமுடைமையும் முதலாயின. எச்சவும்மையான் அறமும் இன்பமுமே அன்றிப் பொருளும் எய்தும் என்பது பெறுதும். அப்பெற்றித்தாய இயல்பென்றது தாம் நுகர்வன எல்லாம் அவரும் நுகருமாறு வைத்தல்.

குறள் 528 (பொதுநோக்கான்) தொகு

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கிபொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

'னதுநோக்கி வாழ்வார் பலர். (08)'அது நோக்கி வாழ்வார் பலர்.

இதன்பொருள்
பொதுநோக்கான் வரிசையா நோக்கின்= எல்லாரையும் ஒருதன்மையராக நோக்காது, அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின்; அதுநோக்கி வாழ்வார் பலர்= அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.
உரைவிளக்கம்
உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப் பொதுநோக்கை விலக்கி, எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசைநோக்கை விதித்தார்.
இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.

குறள் 529 (தமராகித்) தொகு

தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக்தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் அமராமைக்

'காரண மின்றி வரும். (09)'காரணம் இன்றி வரும்.

இதன்பொருள்
தமராகித் தற்றுறந்தார் சுற்றம்= முன் தமராய் வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒருகாரணத்தான் தன்னைப்பிரிந்து போயவர், பின்னும் வந்து சுற்றமாதல்; அமராமைக் காரணம் இன்றி வரும்= அவ்வமராமைக் காரணம், தன்மாட்டு இல்லையாகத் தானே உளதாம்.
உரைவிளக்கம்
'அமராமைக் காரணம் இன்றி' என்றதனான், முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம். அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. ஆக்கம் வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையவராய சுற்றத்தார்க்குச் செயற்கையான் வந்தநீக்கம், அதனையொழிய ஒழியும்; ஒழிந்தால் அவர்க்கு அன்புசெய்து கொள்ளவேண்டா, பழைய இயல்பாய் நிற்கும் என்பார் 'வரும்' என்றார்.

குறள் 530 (உழைப்பிரி்ந்து) தொகு

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தஉழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

'னிழைத்திருந் தெண்ணிக் கொளல். (10)'இழைத்து இருந்து எண்ணிக் கொளல்.

இதன்பொருள்
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை= காரணமின்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்துபோய்ப் பின் காரணத்தான் வந்த சுற்றத்தானை; வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக் கொளல்= அரசன் அக்காரணத்தைச் செய்துவைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க.
உரைவிளக்கம்
வாளா 'உழைப்பிரிந்து' என்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றாம். வருதற்காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்துபோய்ப் பகையோடு கூடும் ஆகலின் 'இழைத்திருந்து' என்றும், அன்பின்றிப்போய்ப் பின்னும் காரணத்தான் வந்தமையின் 'எண்ணிக் கொளல்' என்றும் கூறினார்.
பிரிந்துபோய சுற்றத்தாருள் தீமைசெய்யப்போய் அதனை ஒழியவருவானும், அது செய்யாமற்போய்ப் பின் நன்மைசெய்ய வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.