திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/9.விருந்தோம்பல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


இல்லறவியல்

தொகு

அதிகாரம்: 09. விருந்தோம்பல்

தொகு
பரிமேலழகரின் அதிகாரமுன்னுரை
விருந்தோம்பல்: அஃதாவது, இருவகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை நினைந்து செய்வனவாகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கீதலன்மையானும், இடைநின்ற விருந்தோம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முதலாயிற்று. வேறாகாத அன்புடை யிருவர் கூடியல்லது செய்யப்படாமையின், இஃது அன்புடைமையின் பின் வைக்கப்பட்டது.
{இருவகைவிருந்தினர் = குறித்துவந்தார், குறியாதுவந்தார்(பார்க்க: குறள், 43 பரிமேலழகர் உரை)
முன்னைய இரண்டு = தென்புலத்தார், தெய்வம்.
பின்னைய இரண்டு = ஒக்கல், தான்}

திருக்குறள்: 81 (இருந்தோம்பி)

தொகு
இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி |இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. |வேளாண்மை செய்தல் பொருட்டு. (௧)

தொடரமைப்பு:

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் = மனைவியோடும் வனத்திற் செல்லாது இல்லின்கணிருந்து பொருள்களைப் போற்றிவாழுஞ் செய்கையெல்லாம்;
விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு = விருந்தினரைப்பேணி அவர்க்குபகாரஞ் செய்தற்பொருட்டு.
பரிமேலழகர் உரைவிளக்கம்
எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கணிருத்தலும், பொருள்செய்தலுங் காரணமாக வருந் துன்பச் செய்கைகட் கெல்லாம் பயனில்லை யென்பதாம்.


திருக்குறள்: 82 (விருந்துபுறத்)

தொகு
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா |
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (02)|

தொடரமைப்பு:


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) சாவா மருந்தெனினும் = உண்ணப்படும் பொருள் அமிர்தமேயெனினும்;
விருந்து புறத்ததாத் தான் உண்டல் = தன்னை நோக்கிவந்த விருந்து தன்னில்லின் புறத்ததாகத் தானே உண்டல்;
வேண்டற்பாற்று அன்று = விரும்புதன் முறைமை யுடைத்ன்று.
பரிமேலழகர் உரைவிளக்கம்
சாவாமருந்து சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. விருந்தின்றியே ஒருகாற் றானுண்டலைச் சாவா மருந்தென்பார் உளராயினும் அதனையொழிகவென் றுரைப்பினுமமையும்.
இவை யிரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.

திருக்குறள்: 83 (வருவிருந்து)

தொகு
வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை |
பருவந்து பாழ்படுத லின்று. |

தொடரமைப்பு:


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை = தன்னை நோக்கி வந்தவிருந்தை நாடோறும் புறந்தருவான தில்வாழ்க்கை;
பருவந்து பாழ்படுதல் இன்று = நல்குரவான் வருந்திக் கெடுதலில்லை.
பரிமேலழகர் உரை விளக்கம்
நாடோறும் விருந்தோம்புவானுக்கு அதனாற் பொருடொலையாது மேன்மேற் கிளைக்கு மென்பதாம்.

திருக்குறள் 84 (அகனமர்ந்து)

தொகு
அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து |
நல்விருந் தோம்புவா னில். |

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

தொடரமைப்பு:

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) செய்யாள் அகன் அமர்ந்து உறையும்= திருமகள் மனமகிழ்ந்து வாழாநிற்கும்;
முகன்அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல் = முகமினியனாய்த் தக்கவிருந்தினரைப் பேணுவானதில்லின்கண்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
மனமகிழ்தற்குக் காரண்ம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி ஞானவொழுக்கங்களா னுயர்தல்.
பொருள் கிளைத்தற்குக் காரணங் கூறியவாறு.

திருக்குறள் 85 (வித்துமிடல்)

தொகு
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி |
மிச்சில் மிசைவான் புலம். |

தொடரமைப்பு:


பரிமேலழகர் உரை
(இதன் பொருள்) விருந்தோம்பி மிச்சி்ல் மிசைவான் புலம் = முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு;
வித்தும் இடல் வேண்டுமோ = வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா.
பரிமேலழகர் உரைவிளக்கம்
கொல் என்பது அசைநிலை. தானே விளையுமென்பது குறிப்பெச்சம்.
இவை மூன்று பாட்டானும் விருந்தோம்புவார் இம்மைக்கணெய்தும் பயன் கூறப்பட்டது.

திருக்குறள் 86 (செல்விருந்தோம்பி)

தொகு
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா |
னல்விருந்து வானத் தவர்க்கு. |

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்து அவர்க்கு.

தொடரமைப்பு:


(இதன்பொருள்) செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் = தன்கட் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக்கடவ விருந்தைப் பார்த்துத் தான் அதனோடு உண்ணவிருப்பான்;
வானத்தவர்க்கு நல் விருந்து = மறுபிறப்பிற் றேவனாய் வானினுள்ளார்க்கு நல்விருந்தாம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
வருவிருந்தென்பது இடவழுவமைதி. நல்விருந்து எய்தா விருந்து.
இதனான் மறுமைக்கணெய்தும் பயன் கூறப்பட்டது.

திருக்குறள்: 87 (இனைத்துணைத்)

தொகு
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் |
றுணைத்துணை வேள்விப் பயன். |

தொடரமைப்பு:


(இதன்பொருள்) வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை= விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று;
விருந்தின் துணைத்துணை= அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு.
பரிமேலழகர் உரைவிளக்கம்
ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' யென்றும், பொருள்அளவு "தான் சிறிதாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான் சிறிதாப் போர்த்து விடும்"(நாலடியார், 38) ஆதலின், 'இனைத்துணைத்தென்ப தொன்றில்லை` என்றுங் கூறினார்.
இதனான் இருமையும் பயத்தற்குக் காரணங் கூறப்பட்டது. (07)

திருக்குறள் 88 (பரிந்தோம்பிப்)

தொகு
பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி |
வேள்வி தலைப்படா தார். |

தொடரமைப்பு:


(இதன்பொருள்)
பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர்= நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இதுபொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்;
விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார்= அப்பொருளான் விருந்தினரையோம்பி வேள்விப் பயனையெய்தும் பொறியிலாதார்.
பரிமேலழகர் விளக்கம்
"ஈட்டிய வொண்பொருளைக், காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்" (நாலடியார்,280) ஆதலின், 'பரிந்தோம்பி' யென்றார். 'வேள்வி' ஆகுபெயர்.

திருக்குறள் 89 (உடைமையுள்)

தொகு
உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா |
மடமை மடவார்க ணுண்டு. |

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.

தொடரமைப்பு:


(இதன்பொருள்)
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடைமை= உடைமைக்காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை;
மடவார்கண் உண்டு= அஃது அறிந்தார்மாட்டு உளதாகாது, பேதையர்மாட்டே உளதாம்.
பரிமேலழகர் விளக்கம்
' உடைமை' பொருளுடையனாந்தன்மை. பொருளாற் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மையாக்கலின், மடமையை 'இன்மை'யாக உபசரித்தார். பேதைமையான் வருந்தோம்பலை இகழிற் பொருள் நின்றவழியும் அதனாற் பயனில்லை என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பாவழிப் படுங் குற்றம் கூறப்பட்டது.

திருக்குறள் 90 (மோப்பக்)

தொகு
மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து |
நோக்கக் குழையும் விருந்து. |

தொடரமைப்பு:


(இதன்பொருள்)
அனிச்சம் மோப்பக் குழையும்= அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது;
விருந்து முகம் திரிந்து நோக்கக் குழையும்= விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'அனிச்சம்' ஆகுபெயர். சேய்மைக்கட் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம், இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீ்ண்டிய வழியல்லது வாடாத அனிச்சப்பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம்.
இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டுமென்பது கூறப்பட்டது.

(தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய விருந்தோம்பல் அதிகாரம் பரிமேலழகர் உரை முற்றியது.)