திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/33.கொல்லாமை
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
துறவறவியல்
தொகுஅதிகாரம் 33.கொல்லாமை
தொகுபரிமேலழகர் உரை
தொகு- அதிகார முன்னுரை
- அஃதாவது ஐயறிவுடையன முதல் ஓரறிவுடையன ஈறாய உயிர்களைச் சோர்ந்துங் கொல்லுதலைச் செய்யாமை. இது மேற்கூறிய அறங்கள் எல்லாவற்றினும் சிறப்புடைத்தாய்க் கூறாதவறங்களையும் அகப்படுத்து நிற்றலின் இறுதிக்கண் வைக்கப்பட்டது.
குறள்: 321 (அறவினையாதெனிற்)
தொகு- அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
- பிறவினை யெல்லாந் தரும் (01)
- பதப்பிரிப்பு
- அறவினை யாது எனில் கொல்லாமை கோறல்
- பிற வினை எல்லாம் தரும்.
- இதன்பொருள்
- அறவினை யாது எனின் கொல்லாமை= அறங்கள் எல்லாமாகிய செய்கை யாதுஎன்று வினவின், அஃது ஓருயிரையும் கொல்லாமையாம்; கோறல் பிறவினை எல்லாம் தரும்= அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான்.
- உரைவிளக்கம்
- 'அறம்' சாதியொருமை. விலக்கியதொழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை 'அறவினை' என்றார். ஈண்டுப் 'பிறவினை' என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம், ஏனைப் பாவங்கள் எல்லாம் கூடியும் விளைக்கமாட்டா என்பதாம். கொல்லாமைதானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்குஏது எதிர்மறை முகத்தாற் கூறியவாறாயிற்று.
குறள்: 322 (பகுத்துண்டு)
தொகு- பகுத்துண்டு பலலுயி ரோம்புத னூலோர்
- தொகுத்தவற்று ளெல்லாந் தலை (02)
- பதப்பிரிப்பு
- பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
- தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
- இதன்பொருள்
- பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல்= உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு ஐவகைஉயிர்களையும் ஓம்புதல்; நூலோர் தொகுததவற்றுள் எல்லாம் தலை= அறநூல் உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள்எல்லாவற்றினும் தலையாய அறம்.
- உரைவிளக்கம்
- பல்லுயிரும் என்னும் முற்றும்மை. விகாரத்தாற் தொக்கது. 'ஓம்புதல்' சோர்ந்தும் கொலைவாராமற் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்துண்டல் இன்றியமையா உறுப்பாகலின், அச்சிறப்புத் தோன்ற, அதனை இறந்தகால வினையெச்சத்தாற் கூறினார். எல்லாநூல்களினும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்புஆகலின், ஈண்டும் பொதுப்பட 'நூலோர்' என்றும், அவர் எல்லோர்க்கும் ஒப்பமுடிதலான் இது 'தலை'யாயஅறம் என்றும் கூறினார்.
குறள்: 323 (ஒன்றாகநல்லது)
தொகு- ஒன்றாக நல்லது கொல்லாமை மறறதன்
- பின்சாரப் பொய்யாமை நன்று (03)
- பதப்பிரிப்பு
- ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
- பின் சாரப் பொய்யாமை நன்று.
- இதன்பொருள்
- ஒன்றாக நல்லது கொல்லாமை= நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணை ஒப்பு அது இன்றித் தானேயாக நல்லது கொல்லாமை; பொய்யாமை அதன் பின்சார நன்று= அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன்பின்னே நிற்க நன்று.
- உரைவிளக்கம்
- நூலோர் தொகுத்த அறங்கள் என்பது, அதிகாரத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும் மேற் 'பொய்யாமை பொய்யாமை ஆற்றின்' எனவும், 'யாம் மெய்யாக் கண்டவற்றுளில்லை' எனவும், கூறினார் ஆகலின், இரண்டறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழும்அன்றே, அது நிகழாமைப் பொருட்டு, ஈண்டு 'அதன்பின்சாரப் பொய்யாமை நன்று' என்றென்றார், முற்கூறியதிற் பிற்கூறியது வலியுடைத்து ஆகலின். 'அதனைப் பின்சார நன்று' என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும் வழி மெய்யும் பொய்யாயும் இதனைப்பற்ற அது திரிந்து வருதலான் என உணர்க.
- இவை மூன்று பாட்டானும் இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.
குறள்: 324 (நல்லாறு)
தொகு- நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
- கொல்லாமை சூழு நெறி (04)
- பதப்பிரிப்பு
- நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
- கொல்லாமை சூழும் நெறி.
- இதன்பொருள்
- நல் ஆறு எனப்படுவது யாது எனின்= மேற்கதி வீடுபேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாதென்று வினவின்; யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி= அஃது யாதோர் உயிரையும் கொல்லாமையாகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி.
- உரைவிளக்கம்
- யாதொன்றும் என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல் வழுவாமற் காத்தல். இதனால், இவ்வறத்தினையுடையதே நன்னெறி என்பது கூறப்பட்டது.
குறள்: 325 (நிலையஞ்சி)
தொகு- நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
- கொல்லாமை சூழ்வான் றலை.
- பதப்பிரிப்பு
- நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக்
- கொல்லாமை சூழ்வான் தலை.
- இதன்பொருள்
- நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம்= பிறப்புநின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப்பொருட்டு மனைவாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும்; கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை= கொலைப்பாவத்தை அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன்.
- உரைவிளக்கம்
- பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்றுஇன்றி உள்ளனவெல்லாம் துன்பமேயாய நிலைமை. துறவு ஒன்றேயாயினும், சமயவேறுபாட்டாற் பலவாம் ஆகலின், நீ்த்தாருள் எல்லாம் என்றார்.
- இதனால் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.
குறள்: 326 (கொல்லாமைமேற்)
தொகு- கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற்
- செல்லா துயிருண்ணுங் கூற்று (06)
- பதப்பிரிப்பு
- கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ் நாள்மேல்
- செல்லாது உயிர் உண்ணும் கூற்று.
- இதன்பொருள்
- கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ் நாள்மேல்= கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல்; உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது= உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது.
- உரைவிளக்கம்
- மிகப்பெரிய அறம் செய்தாரும், மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையானன்றி இம்மை தன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பர் என்னும் அறநூல் துணிவுபற்றி, இப்பேரறம் செய்தான்தானும் கொல்லப்படான்; படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறு இன்றி எய்தும் என்பார், 'வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது' என்றார்; செல்லாதுஆகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடுபெறும் என்பது கருத்து.
- இதனான் அவர்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.
குறள்: 327 (தன்னுயிர்)
தொகு- தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
- தின்னுயிர் நீக்கும் வினை (07)
- பதப்பிரிப்பு
- தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
- இன் உயிர் நீக்கும் வினை.
- இதன்பொருள்
- தன் உயி்ர் நீப்பினும்= அது செய்யாவழித் தன் உயி்ர் உடம்பின் நீங்கிப் போம் ஆயினும்; தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை செய்யற்க= தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க.
- உரைவிளக்கம்
- தன்னை அது கொல்லினும் தான் அதனைக்கொல்லற்க என்றது, பாவம் கொலையுண்டவழி்த்தேய்தலும், கொன்றவழி வளர்தலும் நோக்கி. இனித் தன்னுயிர் நீப்பினும் என்பதற்குச் சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயி்ர் போமாயினும் என்றுரைப்பாரும் உளர். பிறர்செய்தலும் ஆகாமையின் அஃது உரையன்மை அறிக.
குறள்: 328 (நன்றாகுமாக்கம்)
தொகு- நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
- கொன்றாகு மாக்கங் கடை (08)
- பதப்பிரிப்பு
- நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்குக்
- கொன்று ஆகும் ஆக்கம் கடை.
- இதன்பொருள்
- நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும்= தேவர் பொருட்டு வேள்விக்கட் கொன்றால் இன்பமிகும் செல்வம் பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும்; சான்றோர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை= துறவான் அமைந்தார்க்கு ஓருயிரைக் கொல்லவருஞ் செல்வம் கடை.
- உரைவிளக்கம்
- இன்பமிகுஞ் செல்வமாவது தாமுந் தேவராய்த் துறக்கத்துச் சென்றெய்துஞ்செல்வம். அது சிறிதாகலானும், பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறுஇல் இன்பம் எய்துவார்க்குக் கடை எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆமாயினும் வீடு எய்துவார்க்கு ஆகாது என்றமையின், விதி விலக்குக்கள் தம்முள் மலையாமை விலக்கியவாறாயிற்று. இஃது இல்லறமன்மைக்குக் காரணம்.
- இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.
குறள்: 329 (கொலைவினையரா)
தொகு- கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
- புன்மை தெரிவா ரகத்து (09)
- பதப்பிரிப்பு
- கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்
- புன்மை தெரிவார் அகத்து.
- இதன்பொருள்
- கொலை வினையர் ஆகிய மாக்கள்= கொலைத்தொழிலை யுடையராகிய மாந்தர்; புன்மை தெரிவார் அகத்துப் புலை வினையர்= அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தர் ஆயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத்தொழிலினர்.
- உரைவிளக்கம்
- கொலைவினையர் என்றதனான், வேள்விக்கட் கொலையன்மை அறிக. புலைவினையர் என்றது தொழிலாற் புலையர் என்றவாறு. இம்மைக்கட் கீழ்மை எய்துவர் என்பதாம்.
குறள்: 330 (உயிருடம்பி)
தொகு- உயிருடம்பி னீ்க்கியாரென்ப செயிருடம்பிற்
- செல்லாத்தீ வாழ்க்கை யவர் (10)
- பதப்பிரிப்பு
- உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
- செல்லாத் தீ வாழ்க்கையவர்.
- இதன்பொருள்
- செயிர் உடம்பின் செல்லாத் தீவாழ்க்கையவர்= நோக்கலாகா நோய்உடம்புடனே வறுமைகூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை; உயிர் உடம்பின் நீக்கியார் என்ப= இவர் முற்பிறப்பின்கண் உயிர்களை அவை நின்றவுடம்பினின்று நீக்கினவர் என்று சொல்லுவார் வினை விளைவுகளை அறிந்தோர்.
- உரைவிளக்கம்
- செல்லாவாழ்க்கை தீவாழ்க்கை எனக்கூட்டுக. "செயிருடம்பினராதல் அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித் - துக்கத் தொழுநோ யெழுபவே"[1] என்பதனானும் அறிக. மறுமைக்கண் இவையும் எய்துவர் என்பதாம்.
- இவை யிரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.
- அருளுடைமை முதற் கொல்லாமை யீறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களு்ம் அடங்கும்; அஃதறிந்து அடக்கிக் கொள்க. ஈண்டுரைப்பிற் பெருகும்.
- [1]. நாலடியார், 123.