திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/17.அழுக்காறாமை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


அதிகாரம் 17 அழுக்காறாமை தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகார முன்னுரை
இதனுள் அழுக்காறு என்பது ஒரு சொல். அதற்குப் பொருள் மேலே உரைத்தாம்.(குறள்-35)

அச்சொற் பின் அழுக்காற்றைச் செய்யாமை என்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும், மகர ஐகார விகுதியும் பெற்று அழுக்காறாமை என நின்றது. இப்பொறாமையும் பொறைக்கு மறுதலை யாகலின், இதனை விலக்குதற்கு இது பொறையுடைமையின் பின் வைக்கப்பட்டது.

திருக்குறள் 161 (ஒழுக்காறாக்) தொகு

ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் நெஞ்சத்
தழுக்கா றிலாத வியல்பு
ஒழுக்காறாக் கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு (01)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு= ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றமில்லாத இயல்பினை;
ஒழுக்காறாக் கொள்க= தனக்கு ஓதிய ஒழுக்கநெறியாகக் கொள்க.
பரிமேலழகர் உரைவிளக்கம்
இயல்பு, அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறிபோல உயிரினும் ஓம்புக என்பதாம்.

திருக்குறள் 162 (விழுப்பேற்றின) தொகு

விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு
மழுக்காற்றி னல்ல பெறின்
விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்மாட்டும்
அழுக்காற்றின் அல்ல பெறின் (01)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்- யாவர்மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்;
விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை= மற்றவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒபபது இல்லை.
பரிமேலழகர் உரை விளக்கம்
அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார் யார்மாட்டும் என்றார். அன்மை வேறாதல். இவை இரண்டு பாட்டானும், அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.

திருக்குறள் 163 (அறனாக்கம்) தொகு

அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான் (03)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான்= மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமுமாகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்;
பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான்= பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உவவாது அழுக்காற்றைச் செய்வான்.
பரிமேலழகர் உரை விளக்கம்
அழுக்கறுத்தல் எனினும், அழுக்காறு எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாம்.

திருக்குறள் 164 (அழுக்காற்றின்) தொகு

அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி
னேதம் படுபாக் கறிந்து
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து (04)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
அழுக்காற்றின் அல்லவை செய்யார்= அழுக்காறு ஏதுவாக அறன் அல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்;
இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து= அத் தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து.
பரிமேலழகர் உரை விளக்கம்
அறன் அல்லவையாவன, செல்வம் கல்வி முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.

திருக்குறள் 165 (அழுக்காறுடையார்க்) தொகு

அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு ஈன்பது (05)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது= அழுக்காறு பகைரை யொழிந்தும் கேடு பயப்பது ஒன்றாகலின்;
அழுக்காறு உடையார்க்கு அது சாலும்= அவ் வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேணாடா, கேடு பயத்தற்கு அதுதானே அமையும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
அதுவே என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.

திருக்குறள் 166 (கொடுப்பதழுக்கறுப்) தொகு

கொடுப்ப தழுக்குறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும்
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் (06)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்= ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்;
உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்= உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும்
பரிமேலழகர் உரைவிளக்கம்
கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப்பற்றிப் பொறாமை செய்தல். சுற்றம் கெடும் எனவே, அவன்கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர்பேறு பொறாமை, தன்பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.

திருக்குறள் 167 (அவ்வித்து) தொகு

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ
டவ்வையைக் காட்டி விடும்
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் (07)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
அழுக்காறு உடையானை= பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறமை உடையானை;
செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டி விடும்= திருமகள் தானும் பொறாது தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
'தவ்வை', மூததவள். 'தவ்வையைக் காட்டி' என்பது, "அறிவுடை யந்தண னவளைக்காட் டென்றானோ" (கலித்தொகை, மருதம்-7) என்பது போல உருபுமயக்கம். மனத்தைக் கோடுவித்து அழுக்காறுடையன் ஆயினானை யென்று உரைப்பாரும் உளர்.

திருக்குறள் 168 (அழுக்காறென) தொகு

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும்
அழு்ககாறு என ஒருபாவி திருச் செற்றுத்
தீயுழி உய்த்து விடும் (08)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
அழுக்காறு என ஒரு பாவி= அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி;
திருச் செற்றுத் தீயுழி உய்த்து விடும்= தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து, மறுமைக்கண் நரகத்தில் செலுத்தி விடும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையும் கெடுத்தற் கொடுமைபற்றி, அழுக்காற்றினைப் பாவி என்றார், கொடியானைப் பாவி என்னும் வழக்குண்மையின். இவை ஆறு பாட்டானும், அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.

திருக்குறள் 169 (அவ்விய நெஞ்சத்தான்) தொகு

அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான்
கேடு நினைக்கப் படும்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும் (09)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்= கோட்டத்தினைப் பொருந்தியவனைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும்;
செவ்வியான் கேடும் நினைக்கப்படும்= ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின் அவை ஆராயப்படும்
பரிமேலழகர் உரை விளக்கம்
'கோட்டம்', ஈண்டு அழுக்காறு. 'உளவாயின்' என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால் இதற்கு ஏதுவாகிய பழவினை யாது என்று ஆராயப்படுதலின், 'நினைக்கப்படும்' என்றார். "இம்மைச் செய்தன் யானறி நல்வினை, உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்தித், திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது" (சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை,வரிகள்: 91-93)என நினைக்கப்பட்டவாறு அறிக.

திருக்குறள் 170 (அழுக்கற்றகன்றாரும்) தொகு

அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
பெருக்கத்திற் றீர்ந்தாரு மில்
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் (10)
பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
அழுக்கற்று அகன்றாரும் இல்லை= அழுக்காற்றைச்செய்து பெரியராயினாரும் இல்லை;
அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்= அச்செயலிலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை.
பரிமேலழகர் உரை விளக்கம்
இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது.