திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/133.ஊடலுவகை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல் தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகாரம் 133. ஊடல் உவகை தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, அப்பெற்றித்தாய ஊடலால் தமக்குக் கூடல் இன்பம் சிறந்துழி அச்சிறப்பிற்கு ஏதுவாய அவ்வூடலைத் தலைமகள் உவத்தலும், தலைமகன் உவத்தலும்ஆம். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 1321 ( இல்லை) தொகு

(தலைமகள், காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை என்றாட்கு அவள் சொல்லியது.)

இல்லை தவறவர்க் காயினு மூடுதல் ( ) இல்லை தவறு அவர்க்கு ஆயினும் ஊடுதல்

வல்ல தவரளிக்கு மாறு. (01) வல்லது அவர் அளிக்குமாறு.

[தொடரமைப்பு: அவர்க்குத் தவறுஇல்லையாயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது.]

இதன்பொருள்
அவர்க்குத் தவறு இல்லையாயினும்= அவர்மாட்டுத் தவறு இல்லையாயினும்;
அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது= நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு, அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது, எ-று.
உரைவிளக்கம்
அவர்க்கு என்பது, வேற்றுமை மயக்கம். அளவிறந்த இன்பத்தர் ஆகலின் யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக்கருதி அது பொறாமையான் ஊடல் நிகழாநின்றது என்பதாம்.

குறள் 1322 (ஊடலிற் ) தொகு

(புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை என்றாட்கு அவள் சொல்லியது. )

ஊடலி்ற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி ( ) ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி

வாடினும் பாடு பெறும். (02) வாடினும் பாடு பெறும்.

[தொடரமைப்பு: ஊடலின் தோன்றும் சிறு துனி, நல்லளி வாடினும் பாடு பெறும்.]

இதன்பொருள்
ஊடலில் தோன்றும் சிறுதுனி= ஊடல் ஏதுவாக நம்கண் தோன்றுகின்ற சிறிய துனி தன்னால்;
நல்லளி வாடினும் பாடுபெறும்= காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும் எ-று.
உரை விளக்கம்
தவறின்றி நிகழ்கின்ற ஊடல், கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது என்பாள், 'சிறுதுனி' என்றும், ஆராமைபற்றி நிகழ்தலின், அதனான் நல்லளி வாடாது என்பாள், 'வாடினும்' என்றும், பின்னே பேரின்பம் பயக்கும் என்பாள், 'பாடுபெறும்' என்றும் கூறினாள். அது வருத்தம் எனப்படாது என்பதாம்.

குறள் 1233 (புலத்தலிற் ) தொகு

(இதுவுமது )

புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு ( ) புலத்தலி்ன் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னா ரகத்து. (03) நீர் இயைந்து அன்னார் அகத்து.

[தொடரமைப்பு: நிலத்தொடு நீர் இயைந்தன்னார் அகத்துப் புலத்தலின், புத்தேள் நாடு உண்டோ.]

இதன்பொருள்
நிலத்தொடு நீர் இயைந்தன்னார் அகத்துப் புலத்தலின்= நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமையுடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல;
புத்தேள் நாடு உண்டோ= நமக்கு இன்பந்தருவது ஒரு புத்தேள் உலகமும் உண்டோ, இ்ல்லை எ-று.
உரை விளக்கம்
நீர், தான் நின்ற நிலத்து இயல்பிற்றாம் ஆமாறுபோலக் காதலரும், தாம் கூடிய மகளிர் இயல்பினர் ஆகலான், அதுபற்றி அவரோடு புலவிநிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், அவர் நமக்கும் அன்னர் ஆகலின் அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது என்பாள், 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ' என்றும் கூறினாள். உவமம் பயன்பற்றி வந்தது.

குறள் 1324 (புல்லிவிடா ) தொகு

( அப்புலவி இனி யாதான் நீங்கும் என்றாட்குச் சொல்லியது.)

புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென் ( ) புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும் என்

னுள்ள முடைக்கும் படை. (04) உள்ளம் உடைக்கும் படை.

[தொடரமைப்பு: புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும், என் உள்ளம் உடைக்கும் படை.]

இதன்பொருள்
புல்லி விடாப் புலவியுள் தோன்றும்= காதலரைப் புல்லிக்கொண்டு, பின்விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்;
என் உள்ளம் உடைக்கும் படை= அதன்மேற்சென்ற என் உள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம், எ-று.
உரை விளக்கம்
'புலவியுள்' என்னும் ஏழாவது, வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. 'என்னுள்ளம் உடைக்கும் படை'க்கலம் என்றது, வணக்கத்தையும், பணிமொழியையும். படைக்கலம் என்றாள், அவற்றான் அப்புலவி உள்ளம் அழிதலின். புலவிநீங்கும் திறம் கூறியவாறு.

குறள் 1325 (தவறில ) தொகு

( தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.)

தவறில ராயினுந் தாம்வீழ்வார் மென்றோ () தவறு இலராயினும் தாம் வீழ்வார் மெல் தோள்

ளகறலி னாங்கொன் றுடைத்து. (05) அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து.

[தொடரமைப்பு: தவறு இலராயினும், தாம் வீழ்வார் மென்றோள் அகறலின், ஆங்கு ஒன்று உடைத்து.]

இதன்பொருள்
தவறு இலராயினும், தாம் வீழ்வார் மென்றோள் அகறலின்= ஆடவர் தங்கண் தவறு இலராயினும் உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லியதோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்;
ஆங்கு ஒன்று உடைத்து= அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தலுடைத்து, எ-று.
உரை விளக்கம்
உடையராயக்கால், இறந்த இன்பத்தோடு வரும் இன்பமும் எய்துவர் ஆகலின், அது மிகநன்று. மற்றை இலர் ஆயக்காலும், வரும் இன்பத்தை இகழ்ந்தது இல்லை என்னும் கருத்தால், 'தவறு இலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். ஊடலினாய இன்பம், அளவிறத்தலின், கூறற்கு அரிது என்பான், அப்பெற்றியது 'ஒன்று' என்றான். தவறின்றி ஊடியதூஉம், எனக்கு இன்பம் ஆயிற்று என்பதாம்.

குறள் 1326 (உணலினு ) தொகு

( இதுவுமது )

உணலினு முண்ட தறலினிது காமம் ( ) உணலினும் உண்டது அறல் இனிது காமம்

புணர்தலி னூட லினிது. (06) புணர்தலின் ஊடல் இனிது.

[தொடரமைப்பு: உணலினும் உண்டது அறல் இனிது, காமம் புணர்தலின் ஊடல் இனிது.]

இதன்பொருள்
உணலினும் உண்டது அறல் இனிது= உயிர்க்கு மேல் உண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்;
காமம் புணர்தலின் ஊடல் இனிது= அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும், முன்னைத் தவறுபற்றி ஊடுதல் இன்பந்தரும், எ-று.
உரை விளக்கம்
காமத்திற்கு என்புழிச் சாரியையும், நான்கன் உருபும் விகாரத்தான் தொக்கன. பசித்துண்ணும்வழி, மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம். அதுபோல அகன்று கூடும்வழி, ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன்னனுபவம்பற்றிக் கூறியவாறு.

குறள் 1327 ( ஊடலிற்) தொகு

( இதுவுமது )

ஊடலிற் றோற்றவர் வென்றா ரதுமன்னும் ( ) ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும்

கூடலிற் காணப் படும். (07) கூடலில் காணப்படும்.

[தொடரமைப்பு: ஊடலின் தோற்றவர் வென்றார், அது மன்னும் கூடலில் காணப்படும்.]

இதன்பொருள்
காம நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றார் ஆவர்;
அது கூடலில் காணப்படும்= அஃது அப்பொழுது அறியப் படாதாயினும், பின்னைப் புணர்ச்சியன்கண் அவரால் அறியப்படும், எ-று.
உரை விளக்கம்
தோற்றவர்- எதிர்தல் ஆற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றார் ஆயினார். மன்னும் உம்மும் அசைநிலை. யான் அதுபொழுது சாய்தலின், இதுபொழுது பேரின்பம் பெற்றேன் என்பதாம்.

குறள் 1328 ( ஊடிப்பெறு) தொகு

(இதுவுமது )

ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் ( ) ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல் வெயர்ப்பக்

கூடலிற் றோன்றிய வுப்பு. (08) கூடலில் தோன்றிய உப்பு.

[தொடரமைப்பு: நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு, ஊடிப் பெறுகுவம் கொல்லோ ]

இதன்பொருள்
நுதல் வெயர்ப்பக் கூடலி்ல் தோன்றிய உப்பு= இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை;
ஊடிப் பெறுகுவம் கொல்லோ= இன்னுமொருகால் இவள் ஊடி யாம்பெறவல்லேமோ, எ-று.
உரை விளக்கம்
கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை- கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலான் ஆய இன்பம். இனி அப்பேறு கூடாதெனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.

குறள் 1329 (ஊடுகமன் ) தொகு

( இதுவுமது )

ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப ( ) ஊடுக மன்னோ ஒளி இழை யாம் இரப்ப

நீடுக மன்னோ விரா. (09) நீடுக மன்னோ இரா.

[தொடரமைப்பு: ஒளி இழை ஊடுக மன்னோ, யாம் இரப்ப இரா நீடுக மன்னோ. ]

இதன்பொருள்
ஒளியிழை ஊடுகமன் = ஒளியிழையினை உடையாள், இன்னும் எம்மோடு ஊடுவாளாக;
யாம் இரப்ப இரா நீடுகமன்= அங்ஙனம் அவள் ஊடிநிற்றற்கும், அதனை உணர்த்துதல் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும், காலம்பெறும் வகை இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக எ-று.
உரை விளக்கம்
'ஊடுக' 'நீடுக' என்பன வேண்டிக்கோடற் பொருள். மன்னிரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்.

குறள் 1330 (ஊடுதல்காமத் ) தொகு

( இதுவுமது )

ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங் () ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்

கூடி முயங்கப் பெறின். (10) கூடி முயங்கப் பெறின்.

[தொடரமைப்பு: காமத்திற்கு இன்பம் ஊடுதல், அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின்.]

இதன்பொருள்
காமத்திற்கு இன்பம் ஊடுதல்= காமநுகர்ச்சிக்கு இன்பமாவது, அதனை நுகர்தற்கு உரியார், ஆராமைபற்றித் தம்முள் ஊடுதல்;
அதற்கு இன்பம் கூடி முயங்கப்பெறின்= அவ்வூடுதற்கு இன்பமாவது, அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின் அம்முயக்கம், எ-று.
உரை விளக்கம்
கூடுதல்- ஒத்த அளவினராதல். முதிர்ந்த துனியாயவழித் துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றிக் 'கூடிமுயங்கப்பெறின்' என்றான். அவ்விரண்டின்பமும் யான் பெற்றேன் என்பதாம்.

ஈண்டுப் பிரிவினை வடநூன் மதம்பற்றிச் செலவு, ஆற்றாமை, விதுப்பு, புலவி என நால்வகைத்தாக்கிக் கூறினார். அவற்றுள் செலவு பிரிவாற்றாமையுள்ளும், ஆற்றாமை, படர்மெலிந்திரங்கன் முதல் நிறையழிதல் ஈறாயவற்றுள்ளும், விதுப்பு, அவர்வயின்விதும்பல் முதல் புணர்ச்சி விதும்பல் ஈறாயவற்றுள்ளும், புலவி, நெஞ்சொடுபுலத்தல் முதல் ஊடலுவகை ஈறாயவற்றுள்ளும் கண்டுகொள்க. அஃதேல் வடநூலார் இவற்றுடனே சாபத்தினான் ஆய நீக்கத்தினையும் கூட்டிப் பிரிவினை ஐவகைத்தென்றாரால் எனின், அஃது, அறம்பொருளின்பம் என்னும் பயன்களுள் ஒன்றுபற்றிய பிரிவு இன்மையானும், முனிவர் ஆணையான் ஒருகாலத்து ஓர் குற்றத்து உளதாவதல்லது உலகு இயல்பாய் வாராமையானும், ஈண்டு ஒழிக்கப்பட்டது என்க.

கற்பியல் முற்றிற்று

காமத்துப்பால் முற்றிற்று

திருக்குறள் பரிமேலழகர் உரை முற்றுப்பெற்றது