திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/104.உழவு

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்

தொகு

பரிமேலழகர் உரை

தொகு

அதிகாரம் 104. உழவு

தொகு
அதிகார முன்னுரை
அஃதாவது, சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கும் உரித்தாய உழுதல் தொழில், செய்விக்குங்கால் ஏனையோர்க்கும் உரித்து. இது, மேல் குடிஉயர்தற்கு ஏது என்ற ஆள்வினையாகலின், குடிசெயல்வகையின் பின் வைக்கப்பட்டது.

குறள் 1031 (சுழன்று )

தொகு

சுழன்று மேர்ப்பின்ன துலக மதனா () சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்

லுழந்து முழவே தலை. (01) உழந்தும் உழவே தலை.

தொடரமைப்பு: சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், அதனால் உழந்தும் உழவே தலை.

இதன் பொருள்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்= உழுதலான் வரும் மெய்வருத்த நோக்கிப் பிறதொழில்களைச் செய்துதிரிந்தும், முடிவில் ஏருடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை= ஆதலான் எல்லா வருத்தமுற்றும், தலையாய தொழில் உழவே.
உரை விளக்கம்
'ஏர்' ஆகுபெயர். பிற தொழில்களான் பொருள் எய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்லவேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பி்ன்னது உலகம்' என்றும், வருத்தம் இலவேனும், பிறதொழில்கள் கடை என்பது போதர 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார்.
இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 1032(உழுவாருலகத் )

தொகு

உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா () உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது

தெழுவாரை யெல்லாம் பொறுத்து. (02) எழுவாரை எல்லாம் பொறுத்து.

தொடரமைப்பு: அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து, உழுவார் உலகத்தார்க்கு ஆணி.

இதன் பொருள்
அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து= அவ்வுழுதலைச் செய்யமாட்டாது பிற தொழில்கள் மேல் செல்வார் யாவரையும் தாங்குதலால்; உழுவார் உலகத்தார்க்கு ஆணி= அது வல்லார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணி ஆவர்.
உரை விளக்கம்
"காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு"1 என்றாற் போல, உழுவார் என்றது, உழுவிப்பார் மேலும் செல்லும். 'உலகத்தார்' என்றது, ஈண்டு இவரை ஒழிந்தாரை. கலங்காமல் நிறுத்தற்கண் ஆணி போறலின், 'ஆணி' என்றார். பொறுத்தலான் என்பது திரிந்து நின்றது. ஏகதேச உருவகம். அஃதாற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்தென்று பாடமோதி, அது மாட்டாதார் புரப்பார் செய்யும் பரிபவம் எல்லாம் பொறுத்து, அவரைத் தொழுவாரே ஆவார் என்று உரைப்பாரும் உளர்.2
1. பட்டினப்பாலை, அடி: 283-284.
2. மணக்குடவர்

குறள் 1033 (உழுதுண்டு )

தொகு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் () உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர். (03) தொழுது உண்டு பின் செல்பவர்.

தொடரமைப்பு: உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார், மற்று எல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர்.

இதன் பொருள்
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார்= யாவரும் உண்ணும் வகை உழுதலைச்செய்து அதனான் தாமும் உண்டு வாழ்கின்றாரே தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர்= மற்றையார் எல்லாம் பிறரைத் தொழுது அதனான் தாமும் உண்டு அவரைப் பின்பற்றிச் செல்கி்ன்றவர்.
உரை விளக்கம்
'மற்று' என்பது, வழக்குப் பற்றி வந்தது. தாமும் மக்கட் பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது, அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி, அவர்பின் செல்வார் தமக்கு உரியர் அல்லர் என்பது கருத்து.

குறள் 1034 (பலகுடை )

தொகு

பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப () பல குடை நீழலும் தம் குடைக் கீழ்க் காண்பர்

ரலகுடை நீழ லவர். (04) அலகு உடை நீழலவர்.

தொடரமைப்பு: அலகு உடை நீழலவர், பல குடை நீழலும் தம் குடைக்கீழ்க் காண்பர்.

இதன் பொருள்
அலகு உடை நீழலவர்= உழுதல் தொழிலான், நெல்லினை உடையராய தண்ணளி உடையோர்; பல குடை நீழலும் தம் குடைக்கீழ்க் காண்பர் = பலவேந்தர் குடை நிழலதாய மண் முழுதினையும், தம் அரசன் குடைக்கீழே காண்பர்.
உரை விளக்கம்
'அலகு'- கதிர்; அஃது ஈண்டு ஆகுபெயராய் நெல் மேலதாயிற்று. உடைய என்பது, குறைந்து நின்றது. நீழல் போறலின், 'நீழல்' எனப்பட்டது. 'நீழலவர்' என்றது, இரப்போர்க்கு எல்லாம் ஈதல் நோக்கி. ஒற்றுமை பற்றித் 'தம்குடை' என்றார். 'குடைநீழல்' என்பதூஉம், ஆகுபெயர். "ஊன்றுசான் மருங்கின் ஈன்றதன் பயனே"3 என்றதனால் தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி, மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம்; "இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும், உழவிடை விளைப்போர்"4 என்றார் பிறரும்.
3. புறநானூறு, 35.
4. சிலப்பதிகாரம், நாடுகாண் காதை: 149.

குறள் 1035 (இரவாரிரப் )

தொகு

இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது () இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர். (05) கை செய்து ஊண் மாலையவர்

தொடரமைப்பு: கை செய்து ஊண் மாலையவர் இரவார், இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர்.

இதன் பொருள்
கை செய்து ஊண் மாலையவர் இரவார்= தம் கையால் உழுதுண்டலை இயல்பாக உடையார் பிறரைத் தாம் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர்= தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றனைக் கரவாது கொடுப்பர்.
உரை விளக்கம்
'செய்து' என்பதற்கு உழுதலை என வருவிக்க. 'கைசெய்தூண் மாலையவர்' என்பது, ஒருஞான்றும் அழிவில்லாத செல்வம் உடையர் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.

குறள் 1036 (உழவினார் )

தொகு

உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம் () உழவினார் கைம் மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேமென் பார்க்கு நிலை. (06) விட்டேம் என்பார்க்கு நிலை.

தொடரமைப்பு: உழவினார் கை மடங்கின், விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை

இதன் பொருள்
உழவினார்கை மடங்கின்= உழுதலை உடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின்; விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை= யாவரும் விழையும் உணவும், யாம் துறந்தேம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா.
உரை விளக்கம்
உம்மை இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மையால் தாம் உண்டலும், இல்லறம் செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. அவர் உறுப்பு மாத்திரமாய கை வாளாவிருப்பின், உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தேம் என்பார்க்கு என உரைப்பாரும் உளர்.5
இவை ஐந்து பாட்டானும் அதனைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.
5. மணக்குடவர்.

குறள் 1037 (தொடிப்புழுதி )

தொகு

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் () தொடிப் புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்

வேண்டாது சாலப் படும். (07) வேண்டாது சாலப் படும்.

தொடரமைப்பு: தொடிப் புழுதி கஃசா உணக்கின், பிடித்து எருவும் வேண்டாது சாலப் படும்.

இதன் பொருள்
தொடிப் புழுதி கஃசா உணக்கின் = ஒரு நிலத்தினை உழுதவன் பலப்புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காயவிடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும்= அதன்கண் செய்த பயிர், ஒரு பிடியின்கண் அடங்கிய எருவும் இட வேண்டாமல், பணைத்து விளையும்.
உரை விளக்கம்
பிடித்து: பிடியின்கண்ணது. பிடித்த என்பதன் விகாரம் என்பாரும் உளர்.6 வேண்டாமல், சான்று என்பன திரிந்து நின்றன.
6. மணக்குடவர்.

குறள் 1038 (ஏரினு )

தொகு

ஏரினு நன்றா மெருவிடுதல் கட்டபி () ஏரினும் நன்றாம் எரு இடுதல் கட்டபின்

னீரினு நன்றதன் காப்பு. (08) நீரினும் நன்றதன் காப்பு.


தொடரமைப்பு: ஏரினும் எரு இடுதல் நன்றாம், கட்டபின் அதன் காப்பு நீரினும் நன்று.

இதன் பொருள்
ஏரினும் எரு இடுதல் நன்றாம்= அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்டபின் அதன் காப்பு நீரினும் நன்று= இவ்விரண்டும் செய்து களைகட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர்கால் யாத்தலினும் நன்று.
உரை விளக்கம்
'ஏர்' ஆகுபெயர். காத்தல்: பட்டி முதலியவற்றான் அழிவு எய்தாமல் காத்தல். உழுதல், எருப்பெய்தல், களைகட்டல், நீர்கால்யாத்தல், காத்தல் என்று இம்முறையவாய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம்.

குறள் 1039(செல்லான் )

தொகு

செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலந் () செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து

தில்லாளி னூடி விடும். (09) இல்லாளின் ஊடி விடும்.

தொடரமைப்பு: கிழவன் செல்லான் இருப்பின், நிலம் இல்லாளின் புலந்து ஊடி விடும்.

இதன் பொருள்
கிழவன் செல்லான் இருப்பின்= அந்நிலத்திற்கு உரியவன் அதன்கண் நாடோறும் சென்று பார்த்து அடுத்தன செய்யாது மடிந்து இருக்குமாயின்; நிலம் இல்லாளிற் புலந்து விடும்= அஃது அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின் அவனோடு ஊடிவிடும்.
உரை விளக்கம்
செல்லுதல் ஆகுபெயர். பிறரே ஏவியிராது, தானே சேறல் வேண்டும் என்பது போதரக் 'கிழவன்' என்றார். தன்கட் சென்று வேண்டுவன செய்யாது, வேறிடத்து இருந்தவழி, மனையாள் ஊடுமாறு போல என்றது, அவன் போகம் இழத்தல் நோக்கி.
இவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது.

குறள் 1040 (இலமென்ற )

தொகு

இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி () இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்

னிலமென்னு நல்லா ணகும். (10) நிலம் என்னும் நல்லாள் நகும்.

தொடரமைப்பு: இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின், நிலம் என்னும் நல்லாள் நகும்.

இதன் பொருள்
இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்= யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும்= நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள், தன்னுள்ளே நகாநிற்கும்.
உரை விளக்கம்
உழுதன் முதலிய செய்வார், யாவர்க்கும் செல்வம் கொடுத்து வருகின்றவாறு பற்றி 'நல்லாள்' என்றும், அது கண்டுவைத்தும், அது செய்யாது வறுமையுறுகின்ற பேதைமை பற்றி, 'நகும்' என்றும் கூறினார். இரப்பாரை என்று பாடம் ஓதுவாரும் உளர்.7
இதனான் அது செய்யாதவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற அதிகாரமுறைமைக்குக் காரணமும் இது.
7. மணக்குடவர்.