திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/2.வான்சிறப்பு

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பரிமேலழகர் உரை

தொகு

பாயிரவியல்- அதிகாரம் 2.வான்சிறப்பு

தொகு
அதிகார முன்னுரை:
அஃதாவது, அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும், நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

திருக்குறள்: 11 (வானின்று)

தொகு
வானின் றுலகம் வழங்கி வருதலாற்      வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
றானமிழ்த மென்றுணரற் பாற்று.             தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று.

தொடரமைப்பு:

இதன் பொருள்:

வான் நின்று உலகம் வழங்கி வருதலால் = மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்;
தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று = அம்மழைதான் (உலகத்திற்கு) அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடையது.

உரை விளக்கம்:

'நிற்ப' என்பது, 'நின்று' எனத்திரிந்து நின்றது.
'உலகம்' என்றது, ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது, பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல்.
அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், 'உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை அமிழ்தம் என்று உணர்க' என்றார்.

திருக்குறள்: 12 (துப்பார்க்கு)

தொகு
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்      துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉமழை.                                                         துப்பு ஆயதூஉம் மழை.


தொடரமைப்பு:துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி, துப்பார்க்கு துப்பு ஆயதுஉம் மழை.


பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி = உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி;
துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை = (அவற்றை) உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
தானும் உணவாதலாவது தண்ணீராய் உண்ணப்படுதல்.
சிறப்புடைய உயர்திணைமேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின், அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.

†.இப்பாடல் ‘சொற்பின் வருநிலை அணி’ ஆகும்.

திருக்குறள்: 13 (விண்ணின்று)

தொகு
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்      விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
துண்ணின் றுடற்றும் பசி." (03)                                         உள் நின்று உடற்றும் பசி.


தொடரமைப்பு:விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்துள் நின்று உடற்றும் பசி


பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) விண் இன்று பொய்ப்பின் = மழை வேண்டுங் காலத்துப் பெய்யாது பொய்க்குமாயின்;
விரிநீர் வியன் உலகத்துள் = கடலாற் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்;
நின்று உடற்றும் பசி = நிலைபெற்று (உயிர்களை) வருத்தும் பசி.


பரிமேலழகர் உரைவிளக்கம்:
கடலுடைத்தாயினும் அதனாற் பயனி்ல்லை என்பார், 'விரிநீர் வியனுலகத்து' என்றார்; உணவின்மையின், பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.

திருக்குறள்: 14 (ஏரினுழா)

தொகு
"ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்      ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளங்குன்றிக் கால்." (04)              வாரி வளம் குன்றிக்கால்.


தொடரமைப்பு:உழவர் ஏரின் உழாஅர்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால்.


பரிமேலழகர் உரை:
உழவர் ஏரின் உழாஅர் = உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்;
புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் = மழை என்னும் வருவாய் (தன்) பயன் குன்றின்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
'குன்றியக்கால்' என்பது, குறைந்து நின்றது.
உணவின்மைக்குக் காரணம் கூறியவாறு.

திருக்குறள்: 15 (கெடுப்பதூஉம்)

தொகு
"கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே      கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
யெடுப்பதூஉ மெல்லா மழை(05)                                               எடுப்பதூஉம் எல்லாம் மழை. (௫)


தொடரமைப்பு:கெடுப்பதுஉம் கெட்டார்க்கு சார்வு ஆய் மற்று ஆங்கே எடுப்பதுஉம் எல்லாம் மழை.


பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) கெடுப்பதூஉம் = (பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று) கெடுப்பதூஉம்;
கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் = (அவ்வாறு) கெட்டார்க்குத் துணையாய்(ப் பெய்து) முன் கெடுத்தாற்போல எடுப்பதூஉம்;
எல்லாம் மழை = இவை எல்லாம் (வல்லது) மழை.
பரிமேலழகர் உரை விளக்கம்:
`மற்று` வினைமாற்றின்கண் வந்தது.
`ஆங்கு` என்பது, மறுதலைத் தொழில் உவமத்தின்கண் வந்த உவமச்சொல்.
கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், `கெட்டார்க்கு` என்றார்.
`எல்லாம்` என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளாற் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி.
‘வல்லது’ என்பது, அவாய்நிலையான் வந்தது.
மழையினது ஆற்றல் கூறியவாறு.


‡. ஒரு சொல் மற்றொரு சொல்லை அவாவி (வேண்டி) நிற்றல்.

திருக்குறள்: 16 (விசும்பிற்)

தொகு
"விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே      விசும்பின்துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும்புற் றலைகாண் பரிது.(06)"                                      பசும்புல் தலை காண்பு அரிது. (௬)


தொடரமைப்பு:விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே பசு புல் தலை காண்பு அரிது.


பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்)விசும்பின் துளி வீழின் அல்லால் = மேகத்தின் துளி வீழின் காண்பதல்லது;
மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது = வீழாதாயின், அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
'விசும்பு' ஆகுபெயர்.
'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.
இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது; ஓரறிவு உயிரும் இல்லை என்பதாம்.


↑. ஒரு பொருளின் பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகிவருவது ஆகுபெயர். விசும்பு என்பது, மேகம் என்பதற்கு ஆகிவந்தது.

திருக்குறள்: 17 (நெடுங்கடலுந்)

தொகு
"நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி      நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தானல்கா தாகி விடின்" (07)                                                தான் நல்காது ஆகி விடின். (௭)


தொடரமைப்பு:நெடு கடலும் தன் நீர்மை குன்றும், எழிலி தான் நல்காது ஆகி விடின்.


பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் = அளவில்லாத கடலும் தன்னியல்பு குறையும்;
எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் = மேகந்தான் (அதனைக்) குறைத்து (அதன்கட்) பெய்யாது விடுமாயின்.
பரிமேலழகர் விளக்கம்:
உம்மை சிறப்பும்மை.
தன்னியல்பு குறைதாலாவது, நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணிமுதலாயின படாமையும் ஆம்.
ஈண்டுக் 'குறைத்தல்' என்றது முகத்தலை. அது "கடல் குறை படுத்தநீர் கல் குறைபடவெறிந்து" (பரிபாடல்-20) என்பதானானும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம்.
இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

திருக்குறள்: 18 (சிறப்பொடு)

தொகு
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்         சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கு மீண்டு." (08)       வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (௮)


தொடரமைப்பு:வானோர்க்கும் ஈண்டு சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்கும் ஏல்.


பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) வானோர்க்கும் ஈண்டுச் சிறப்பொடு பூசனை செல்லாது = தேவர்கட்கும் இவ்வுலகில் (மக்களாற் செய்யப்படும்) விழவோடு கூடிய பூசையும் நடவாது;
வானம் வறக்குமேல் = மழை பெய்யாதாயின்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின், 'செல்லாது' என்றார்.
நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்யப்படுவது, நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.
உம்மை சிறப்பும்மை.

¶. ஏதேனும் ஒரு நிமித்தம் (காரணம்) பற்றிச் செய்வது நைமித்திகம்.

திருக்குறள்: 19 (தானம்)

தொகு
"தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்      தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்கா தெனின்." (09)                             வானம் வழங்காது எனின். (9)


தொடரமைப்பு: வியன் உலகம் தானம் தவம் இரண்டு உம் தங்கா வானம் வழங்காது எனின்.


பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா = அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா;
வானம் வழங்காது எனின் = மழை பெய்யாதாயின்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
'தான'மாவது, அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடுங் கொடுத்தல்.
'தவ'மாவது, மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டிசுருக்கல் முதலாயின.
பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின்மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.

திருக்குறள்: 20 (நீரின்றமையாது)

தொகு

"நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்      நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு." (10)                        வான் இன்று அமையாது ஒழுக்கு. (௰)


தொடரமைப்பு:யார் யார்க்கு உம் நீர் இன்று உலகு அமையாது எனின், ஒழுக்கு வான் இன்று அமையாது.


'பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் = எவ்வகை மேம்பட்டார்க்கும் நீரையின்றி உலகியல் அமையாதாயின்;
ஒழுக்கு வான் இன்று அமையாது = (அந்நீர் இடையறாது ஒழுகும்) ஒழுக்கும் வானையின்றி அமையாது.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
பொருள் இன்பங்களை ‘உலகியல்’ என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின்.
இடையறாது ஒழுகுதல், எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல்.
நீர்இன்றி அமையாது உலகு என்பது, எல்லாரானும் தெளியப்படுதலின், அதுபோல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படுமென்பார், 'நீரின்றமையாதுலகு எனின்' என்றார்.
இதனை, நீரையின்றி அமையாது உலகாயின், எத்திறத்தார்க்கும் மழையையின்றி ஒழுக்கம் நிரம்பாது என உரைப்பாரும் உளர்.
இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.
தெய்வப்புலமை திருவள்ளுவர் செய்த அறத்துப்பால் அதிகாரம் 'வான்சிறப்பும்' அதற்குப் பரிமேலழகர் வரைந்த உரையும் முற்றும்.