திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/25.அருளுடைமை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


3. துறவறவியல்

தொகு
பரிமேலழகர்தம் இயல் முன்னுரை
இனி, முறையானே துறவறம் கூறிய தொடங்கினார். துறவறமாவது, மேற்கூறிய இல்லறத்தின் வழுவாது ஒழுகி, அறவுடையராய்ப்? பிறப்பினை அஞ்சி, வீடுபேற்றின் பொருட்டுத் துறந்தார்க்கு உரிய அறம். அதுதான் வினைமாசு தீர்ந்து, அந்தக்கரணங்கள்

தூயவாதற்பொருட்டு, அவராற் காக்கப்படும் விரதங்களும், அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும் என இருவகைப்படும்.

விரதம்

தொகு
அவற்றுள், விரங்களாவன, இன்னஅறம் செய்வல் எனவும், இன்ன பாவம் ஒழிவல் எனவும், தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன. அவைதாம் வரம்பில ஆகலின், பெருகும் என்று அஞ்சி, அவைதம்முளே பலவற்றையும் அகப்படுத்து நிற்கும் சிறப்புடையன சிலவற்றை ஈண்டுக் கூறுவான் தொடங்கி, முதற்கண் 'அருளுடைமை' கூறுகின்றார்.

அதிகாரம்: 25. அருளுடைமை

தொகு
பரிமேலழகரின் அதிகார முன்னுரை
அஃதாவது, தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வாதாகிய கருணை. இல்லறத்திற்கு அன்புடைமை போல இது துறவறத்திற்குச் சிறந்தமையின் முன்கூறப்பட்டது.

குறள்: 241 (அருட்செல்வஞ்)

தொகு
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள (01).
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம்
பூரியார் கண்ணும் உள.
[அருஞ்சொற் பொருள்: பூரியார்- இழிந்தவர்கள்; கண்ணும்- இடத்தும்.]
பரிமேலழகர் உரை
செல்வத்துள் செல்வம் அருட் செல்வம்= செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது, அருளான்வரும் செல்வம்; பொருள்செல்வம் பூரியார் கண்ணும் உள= அஃது ஒழிந்த பொருளான்வரும் செல்வங்கள், இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அருளான்வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம்; ஏனை நீசர்கண்ணும் உளவாம் பொருட்செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.

குறள்: 242 (நல்லாற்றான்)

தொகு
நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றான்
றேரினு மஃதே துணை (02)
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை.

[அருஞ்சொற்பொருள்: ஆறு> ஆற்றான்- நல்லநெறி, வழி; அருள்ஆள்க- அருள்வழி நிற்க, அதாவது அருளுடையவனாக விளங்குக. தேரினும்- ஆராய்ந்து பார்த்தாலும், தேர்>தேரின்>தேரினும்.]``

பரிமேலழகர் உரை
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க= அளவைகளானும், பொருந்துமாற்றானும் நன்றான நெறியிலே நின்று, 'நமக்குத் துணையாம் அறம் யாது' என்று ஆராய்ந்து அருளுடையராக; பல் ஆற்றான் தேரினும் துணை அஃதே= ஒன்றையொன்று ஒவ்வாத சமயநெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அளவைகளாவன, பொறிகளான் காணும் 'காட்சி'யும், குறிகளான் உய்த்துணரும் 'அனுமான'மும், கருத்தா மொழி ஆகிய 'ஆகம'மும் என மூன்று. ஒப்புப்பற்றி உணரும் 'உவமை'யும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் 'அருத்தாபத்தி'யும், உண்மைக்கு மாறாய 'இன்மை'யும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒருவாற்றான் அவற்றுள்ளே அடங்குதலின், மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது, 'இது கூடும் இது கூடாது' எனத் தன்கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப. 'ஆற்றான்' என்பது, வேற்றுமை மயக்கம். ஒன்றையொன்று ஒவ்வாமையாவது, மதவேறுபாட்டான் அளவைகளூம் பொருள்களும் தம்முள் மாறுகோடல். அன்னவாயினும், அருள்துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரைவிட்டு நீங்காது இருமையினும் உதவலின் துணை என்றார்.
இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.

குறள்: 243 (அருள்சேர்ந்த)

தொகு
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த
வின்னா வுலகம் புகல் (03)
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

[அருஞ்சொற்பொருள்: இருள்சேர்ந்த- இருள்நிரம்பிய; இன்னா உலகம்- துன்ப உலகம் அதாவது நரகம்.]

பரிமேலழகர் உரை
இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல்= இருள்செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல்; அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை- அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
இருள் செறிந்த துன்ப உலகம் என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன்கண் புக்கார்க்குத் துன்பம் செய்வதொரு நரகத்தை. அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், உலகம் எனப்பட்டது.

குறள்: 244 (மன்னுயிரோம்பி)

தொகு
மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை (04)
மன் உயிர் ஒம்பி அருள் ஆள்வாற்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை.
பரிமேலழகர் உரை
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு= நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையனாவானுக்கு; தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப= தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். 'அஞ்சுதல்', துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன், கொலை முதலிய பாவங்கள் செய்யான்; எனவே, மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாயிற்று.

குறள்: 245 (அல்லல்அருளாள்)

தொகு
அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி (05)
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கு
மல்லல் மா ஞாலம் கரி.
பரிமேலழகர் உரை
அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை= அருள் உடையோர்க்கு இம்மையினும் ஒரு துனபம் உண்டாகாது; வளிவழங்கும் மல்லல் மா ஞாலம் கரி= அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'சான்று' ஆவார், தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர்; அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஓரிடத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார், 'வளி வழங்கு மல்லல் ஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகுபெயர்.
இவை மூன்று பாட்டானும், அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.

குறள்: 246 (பொருணீங்கிப்)

தொகு
பொருணீங்கிப் பொச்சாந்தா ரென்ப ரருணீங்கி
யல்லவை செய்தொழுகு வார் (06)
பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
அல்லவை செய்து ஒழுகுவார்.
பரிமேலழகர் உரை: அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார்= உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை; பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர்= முன்னும் உறுதிப் பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
உறுதிப்பொருள், அறம்; துன்புறுதல், பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.

குறள்: 247 (அருளில்லார்க்)

தொகு
அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு (07).
அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
இவ் உலகம் இல்லாகி ஆங்கு.
பரிமேலழகர் உரை
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை= உயிர்கள் மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு= பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அவ்வுலகம் , இவ்வுலகம் என்பன ஆகுபெயர்கள். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணம் ஆயினாற் போல, அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.

குறள்: 248 (பொருளற்றார்)

தொகு
பொருளற்றார் பூப்பரொருகா லருளற்றா
ரற்றார்மற் றாத லரிது (08)
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது.
பரிமேலழகர் உரை
பொருள் அற்றார் ஒருகால் பூப்பர்= ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒருகாலத்துச் செல்வத்தால் பொலிவர்; அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது= அவ்வாறு அன்றி அருள் இலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே, பின் ஒருகாலத்தும் ஆதல் இல்லை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
மற்று வினைமாற்றின்கண் வந்தது. மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்துப் பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.

குறள்: 249 (தெருளாதான்)

தொகு
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டாற்றா றேரி
னருளாதான் செய்யு மறம் (09)
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டு அற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
பரிமேலழகர் உரை
அருளாதான் செய்யும் அறம் தேரின்= உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின்; தெருளாதான் மெய்ப் பொருள் கண்டற்று= ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
மெய்ப்பொருள்- மெய்நூலில் சொல்லும் பொருள். நிலைபெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன் ஞானம் இன்மையால் தானே அழித்துவிடும். அதுபோல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்துவிடும் என்பதாயிற்று. ஆகவே பிற அறங்கட்கெல்லாம் அருளுடைமை மூலம் என்பது பெற்றாம்.
இவை நான்கு பாட்டானும், அத் துணை இல்லாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.

குறள்: 250 (வலியார்முன்)

தொகு
வலியார்முன் றன்னை நினைக்க தான் றன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து (10).
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து.
பரிமேலழகர் உரை
வலியார் முன் தன்னை நினைக்க= தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது, அவர்முன் தான் அஞ்சி நிற்கும் நிலையினை நினைக்க; தான் தன்னின் மெலியார்மேல் செல்லுமிடத்து= அருள் இல்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, அதன்மேல் அருளுடையன் ஆம் என்பது கருத்து.
இதனால், அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.