திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/29.கள்ளாமை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


துறவறவியல்

தொகு

அதிகாரம் 29.கள்ளாமை

தொகு

பரிமேலழகர் உரை

தொகு
அதிகார முன்னுரை
அஃதாவது, பிறர் உடைமையாய் இருப்ப தியாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக்கருதாமை. கருதுதலும் செயதலோடு ஒத்தலின், 'கள்ளாமை' என்றார்.இல்வாழ்வார்க்காயின் தமரொடு விளையாட்டு வகையால் அவரை வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருள்களை அங்ஙனங் கொள்ளினும் அமையும்; துறந்தார்க்காயின் அதனைக் கருதிய வழியும் பெரியதோர் இழுக்காம் ஆகலின், இது துறவறமாயிற்று. புறத்துப் போகாது மடங்கி ஒருதலைப்பட்டு உயிரையே நோக்கற் பாலதாய அவர்மனம் அஃதொழிந்து புறத்தே போந்து பஃறலைப்பட்டு உடம்பின் பொருட்டுப் பொருளை நோக்குதலேயன்றி, அது தன்னையும் வஞ்சித்துக் கொள்ளக் கருதுதல் அவர்க்குப் பெரியதோர் இழுக்காதல் அறிக. இவ்வாறு வாய்மை முதற் கொல்லாமை யீறாக நான்கதிகாரத்திற்கும் ஒக்கும். பொருள்பற்றி நிகழும் குற்றத்தை விலக்குகின்றது ஆகலின், இது காமம் பற்றி நிகழ்வதாய கூடாஒழுக்கத்தின் பின் வைக்கப்பட்டது.

குறள்: 281 (எள்ளாமை)

தொகு
எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு (01)
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்று்ம்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு.
இதன்பொருள்
எள்ளாமை வேண்டுவான் என்பான்= வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான்;

எனைத்தொன்றும் கள்ளாமை தன் நெஞ்சு காக்க= யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க.

உரைவிளக்கம்
எள்ளாது என்னும் எதிர்மறைவினையெச்சம் 'எள்ளாமை' எனத் திரிந்து நின்றது. 'வீட்டினை யிகழ்த'லாவது, காட்சியே அளவையாவது என்றும், நிலம் நீர் தீ வளி யெனப் பூதம் நான்கேயென்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றிப் பிரிவான் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின்கட் களிப்புப்போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்தவுயிர் பின் பிறவாதென்றும், இன்பமும் பொருளும் ஒருவனாற் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயத முதலிய மயக்கநூல்களைத் தெளிந்து, அவற்றிற்கேற்ப ஒழுகுதல். ஞானத்திற்கு ஏதுவாய மெய்நநூற் பொருளையேனும் ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக் கொள்ளின், அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்தொன்றும்' என்றார். நெஞ்சு கள்ளாமற்காக்க எனவே, துறந்தார்க்கு விலககப்பட்ட கள்ளுதல், கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.

குறள்: 282 (உள்ளத்தால்)

தொகு
உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல் (02)
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
பரிமேலழகர் உரை
உள்ளத்தால் உள்ளலும் தீதே= குற்றங்களைத் தந் நெஞ்சாற் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம்; பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்= ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியாவகையால் வஞ்சித்துக் கொள்வேம் என்று கருதற்க.
உரைவிளக்கம்
'உள்ளத்தால்' எனவேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையார் உள்ளம்போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. 'உள்ளலும்' என்பது இழிவுசிறப்பும்மை. அல்விகுதி வியங்கோள் எதிர்மறைக்கண் வந்தது.
இவை இரண்டுபாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃதுஎன்பதூஉம் இது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.

குறள்: 283 (களவினால்)

தொகு
களவினா லாகிய வாக்க மளவிறந்
தாவது போலக் கெடும் (03)
களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து
ஆவது போலக் கெடு்ம்.
பரிமேலழகர் உரை
களவினால் ஆகிய ஆக்கம்= களவினால் உளதாகிய பொருள்; ஆவது போல அளவு இறந்து கெடும்= வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும்.
உரைவிளககம்
ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. 'எல்லையைக் கடந்து கெடுத'லாவது, தான் போங்காற் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன் கொண்டுபோதல். அளவறிந்து என்று பாடம்ஓதி, அவர் பயன் கொள்ளும் அளவறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும் என்று உரைப்பாரும் உளர்.

குறள்: 284 (களவின்கட்)

தொகு
களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும் (04)
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
இதன்பொருள்
களவின்கண் கன்றிய காதல்= பிறர்பொருளை வஞசித்துக் கோடற்கண்ணே மிக்கவேட்கை; விளைவின்கண் வீயா விழுமம் தரும்= அப்பொழுது இனிதுபோலத்தோன்றித் தான் பயன் கொடுக்கும்பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும்.
உரைவிளக்கம்
கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின், வீயா விழுமந் தரும் என்றார்.

இவை இரண்டுபாட்டானும் அவை கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.

குறள்: 285 (அருள்கருதி)

தொகு
அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில் (05)
அருள் கருதி அன்புடையர் ஆதல் பொருள் கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார் கண் இல்.
இதன் பொருள்
அருள் கருதி அன்பு உடையர் ஆதல்= அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல்; பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார் கண் இல்= பிறர் பொருளை வஞ்சி்த்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார் மாட்டு உண்டாகாது.
உரைவிளக்கம்
தமக்குரிய பொருளையும், அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்குரிய பொருளை நன்கு மதித்து அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வு பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கண்மேல் அருள்செய்தல் நமக்கு உறுதி என்றுஅறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சி கூடாது என்பதாம்.

குறள்: 286 (அளவின்கண்)

தொகு
அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர் (06)
அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காதலவர்.
இதன்பொருள்
அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார்- உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழு்கமாட்டார்; களவின்கண் கன்றிய காதலவர்= களவின்கண்ணே மிக் வேட்கையை உடையார்.
உரைவிளக்கம்
'உயிர் முதலியவற்றை அளத்த'லாவது, காட்சி முதலாகச்சொல்லப்பட்ட அளவைகளான் உயி்ர்ப்பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக் குற்ற விளைவுகளையும், அவற்றான் அது நாற்கதியுட் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோக ஞானங்களையும் அவற்றான் அஃது எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப. 'அதற்கேற்ப ஒழுகுத'லாவது அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல்.

குறள்: 287 (களவென்னுங்)

தொகு
களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு
மாற்றல் புரிந்தார்க ணில் (07)
களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார் கண் இல்.
இதன்பொருள்
களவு என்னும் காரறிவாண்மை= களவென்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்= உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை.
உரைவிளக்கம்
இருள்-மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் களவென்னும் காரறிவாண்மை என்றும், காரணத்தைக் காரியமாக்கி அளவென்னும் ஆற்றல் என்றும் கூறினார்.

களவுந் துறவும், இருளும் ஒளியும்போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.

குறள்: 288 (அளவறிந்தார்)

தொகு
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு (08)
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு.
இதன்பொருள்
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்= அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலைபெற்றாற் போல நிலைபெறும்; களவு அறிந்தார் நெஞ்சில் கரவு= களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை.
உரைவிளக்கம்
உயிர் முதலியவற்றை அறந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையாற் பெற்றாம்.
களவோடு மாறின்றி நிற்பது இதனாற் கூறப்பட்டது.

குறள்: 289 (அளவல்ல)

தொகு
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர் (09)
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல
மற்றைய தேற்றாதவர்.
இதன்பொருள்
அளவு அல்ல செய்தாங்கே வீவர்= அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்தபொழுதே கெடுவர்; களவு அல்ல மற்றைய தேற்றாதவர்= களவல்லாத பிறவற்றை அறியாதவர்.
உரைவிளக்கம்
தீய நினைவுகளாவன, பொருளுடையாரை வஞ்சிக்குமாறும், அவ் வஞ்சனையால் அது கொள்ளுமாறும், கொண்டவதனால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலுஞ் செய்தலோடு ஒக்கும் ஆகலிற் 'செய்'தென்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கிக் கரந்த சொற் செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்குமாகலின் 'ஆங்கே வீவர்' என்றும் கூறினார். 'மற்றைய'வாவன, துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய் கனி கிழங்கு சருகு முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும் தானங்களுமாம். தேற்றாமை, அவற்றையே நுகர்ந்து அவ்வளவான் நிறைந்திருத்தலை அறியாமை.
இதனாற் கள்வார் கெடுமாறு கூறப்பட்டது.

குறள்: 290 (கள்வார்க்குத்)

தொகு
கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு (10)
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.
இதன்பொருள்
கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும்= களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்புந் தவறும்; கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது= அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணதாகிய புத்தேள் உலகும் தவறாது.
உரைவிளக்கம்
உயிர் நிற்றற்கு இடனாகலின், 'உயிர்நிலை' எனப்பட்டது. சிறப்பும்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின் 'உயிர்நிலையும் தள்ளும்' என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் 'புத்தேள் உலகும் தள்ளாது' என்றும் கூறினார். "மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து"1 என்புழியும் தள்ளுதல் இப்பொருட்டாதல் அறிக.இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர்.
இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.
1.திருக்குறள்,596.