திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/19.புறங்கூறாமை

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


அதிகாரம் 19 புறங்கூறாமை தொகு

பரிமேலழகர் உரை தொகு

அதிகார முன்னுரை
அஃதாவது, காணாதவழிப் பிறரை இகழ்ந்து உரையாமை. மொழிக்குற்றம் மனக்குற்றமடியாக வருதலான் இஃது அழுக்காறாமை வெஃகாமைகளின் பின் வைக்கப்பட்டது.

திருக்குறள் 181 (அறங்கூறா) தொகு

அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறா னென்ற லினிது
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது (01)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும்= ஒருவன் அறனென்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்;
புறங்கூறான் என்றல் இனிது= பிறனைப் புறங்கூறானென்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று.
பரிமேலழகர் உரை விளக்கம்
புறங்கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.

திருக்குறள் 182 (அறனழீஇ) தொகு

அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
புறனழீஇப் பொய்த்து நகை
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன் அழீஇப் பொய்த்து நகை (02)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே= அறன் என்பது ஒன்றுஇல்லை என அழித்துச் சொல்லி அதன்மேற் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து;
புறன் அழீஇப் பொய்த்து நகை= ஒருவனைக் காணாத வழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல்
பரிமேலழகர் உரைவிளக்கம்
உறழ்ச்சி நிரல்நிறைவகையாற் கொள்க. அழித்தல்= ஒளியைக் கோறல்.

திருக்குறள் 183 (புறங்கூறிப்) தொகு

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
லறங்கூறு மாக்கந் தரும்
புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும் (03)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
புறங்கூறிப் பொய்த்து உயிர்வாழ்தலின்= பிறனைக் காணாதவழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்;
சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்= அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், சாதல் ஆக்கந்தரும் என்றார். ஆக்கம் அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். அறம் ஆகுபெயர். தரும் என்பது இடவழுவமைதி.

திருக்குறள் 184 (கண்ணின்று) தொகு

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்
கண் நின்று கண் அறச் சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்காச் சொல் (04)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
கண் நின்று கண் அறச் சொல்லினும்= ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னான் ஆயினும்;
முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க= அவன் எதிரின்றிப் பின் வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாது ஒழிக.
பரிமேலழகர் உரை விளக்கம்
பின் ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்லின்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது

திருக்குறள் 185 (அறஞ்சொல்லு) தொகு

அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப்படும் (05)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை= புறஞ்சொல்லுவான் ஒருவன் அறனை நன்று என்று சொல்லினும், அது தன் மனத்தானாய்ச் சொல்லுகின்றான் அல்லன் என்பது;
புறஞ்சொல்லும் புன்மையால் காணப் படும்= அவன் புறஞ்சொல்லுதற்குக் காரணமான மனப்புன்மையானே அறியப்படும்.
பரிமேலழலகர் உரை விளக்கம்
மனந்தீது ஆதலின் அச்சொல் கொள்ளப் படாது என்பதாம்.

திருக்குறள் 186 (பிறன்பழி) தொகு

பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
திறன்றெரிந்து கூறப் படும்
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும் (06)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
பிறன் பழி கூறுவான்= பிறன் ஒருவன் பழியை அவன் புறத்துக் கூறும் அவன்;
தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும்= தன் பழி பலவற்றுள்ளும் உளையும்திறம் உடையவற்றைத் தெரிந்து அவனாற் கூறப்படும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
புறத்து என்பது அதிகாரத்தாற் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியாற்கு அவ்வளவன்றி அவனிறந்து பட்டு உளையுந் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின் 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.

திருக்குறள் 187 (பகச்சொல்லி) தொகு

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாட றேற்றா தவர்
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச் சொல்லி
நட்பு ஆடல் தேற்றாதவர் (07)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்= தம்மை விட்டு நீங்குமாற்றாற் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்;
நகச் சொல்லி நட்பாடல் தேற்றாதவர்= கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பாடலை அறியாதார்.
பரிமேலழகர் உரை விளக்கம்
சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பர் என்ற கருத்தான், அயலாரோடும் என்பது வருவித்து உரைக்கப்பட்டது. அறிதல் தமக்குறுதி என்று அறிதல். "கடியு- மிடந் தேற்றாள் சோர்ந்தனள் கை" (கலித்தொகை, மருதம்- 27) என்புழிப் போலத் தேற்றாமை தன்வினையாய் நின்றது. புறங்கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.

திருக்குறள் 188 (துன்னியார்) தொகு

துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா
ரென்னைகொ லேதிலார் மாட்டு
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு (08)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்= தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினையுடையார்;
ஏதிலார் மாட்டு என்னை கொல்- அயலார்மாட்டுச் செய்வது யாதுகொல்லோ!
பரிமேலழகர் உரை விளக்கம்
தூறறுதல் பலரும் அறியப் பரப்புதல். அதனிற் கொடியது பிறிது ஒன்று காணாமையின், என்னைகொல் என்றார். செய்வது என்பது சொல்லெச்சம். என்னர்கொல் என்று பாடம் ஓதி, எவ்வியல்பினராவர் என்றுரைப்பாரும் உளர்.

திருக்குறள் 189 (அறனோக்கி) தொகு

அறனோக்கி யாற்றுங்கோல் வையம் புறனோக்கிப்
புன்சொல் லுரைப்பான் பொறை
அறன் நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன் நோக்கிப்
புன் சொல் உரைப்பான் பொறை (09)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
புறன் நோக்கிப் புன் சொல் உரைப்பான் பொறை= பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடல்பாரத்தை;
வையம் அறன் நோக்கி ஆற்றும் கொல்- நிலம் இக்கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன்நோக்கி ஆற்றும்கொல்' என்றார். இவை ஐந்து பாட்டானும் புறங்கூறுவார்க்கு எய்தும் குறறம் கூறப்பட்டது.

திருக்குறள் 190 (ஏதிலார்) தொகு

ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பிற்
றீதுண்டோ மன்னு முயிர்க்கு
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு (10)
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்= ஏதிலாரைப் புறங் கூறுவார் அதற்கு அவர்குற்றம் காணுமாறுபோலப் புறங்கூறலாகிய தம்குற்றத்தையும் காணவல்லர் ஆயின்;
மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ= அவர் நிலைபேறு உடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?
பரிமேலழகர் உரை விளக்கம்
நடுவுநின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கிக் 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலிற் பாவம் இன்றாம் ஆகவே, வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, உயிர்க்குத் 'தீதுண்டோ' என்றும் கூறினார்.இதனால் புறங்கூற்றொழிதற்கு உபாயம் கூறப்பட்டது.