திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/50.இடனறிதல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள்- பொருட்பால் 1. அரசியல்- அதிகாரம் 50. இடனறிதல்

தொகு

பரிமேலழகர் உரை

தொகு

அதிகாரமுன்னுரை: அஃதாவது, வலியும் காலமும் அறிந்து பகைமேற் செல்வான் தான் வெல்லுதற்கு ஏற்ற நிலத்தினை அறிதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 491 (தொடங்கற்க)

தொகு

'தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று'தொடங்கற்க எவ் வினையும் எள்ளற்க முற்றும்

'மிடங்கண்ட பின்னல் லது. (01)'இடம் கண்டபின் அல்லது.

இதன்பொருள்
முற்றும் இடம் கண்டபின் அல்லது= பகைவரை முற்றுதற்கு ஆவதோர் இடம் பெற்றபின் அல்லது; எவ்வினையும் தொடங்கற்க= அவர்மாட்டு யாதொரு வினையும் தொடங்காது ஒழிக; எள்ளற்க= அவரைச் சிறியர் என்று இகழாது ஒழிக.
உரைவிளக்கம்
முற்றுதல்- வளைத்தல். அதற்கு ஆம் இடமாவது, வாயில்களானும், நூழைகளானும் அவர் புகலொடு போக்கொழியும்வகை அரணினைச் சூழ்ந்து, ஒன்றற்கொன்று துணையாய்த் தம்முள் நலிவிலாத பல படையிருப்பிற்கும், மதிலும் அகழும் முதலிய அரண் செய்யப்பட்ட அரசிருப்பிற்கும் ஏற்ற நிலக்கிடக்கையும், நீரும் உடையது. அதுபெற்றால் இரண்டும் செய்க என்பதாம்.

குறள் 492 (முரண்சேர்ந்த)

தொகு

'முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா'முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்

'மாக்கம் பலவுந் தரும். (02)'ஆக்கம் பலவும் தரும்.

இதன்பொருள்
முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கும்= மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும்; அரண்சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும்= அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும்.
உரைவிளக்கம்
'மாறுபாடா'வது, ஞாலம் பொதுவெனப் பொறா அரசர் மனத்தின்கண் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனாலும் இது பகைமேற் சென்ற அரசர்மேற்றாயிற்று. உம்மை சிறப்பும்மை. அரண் சேராத ஆக்கமும் உண்மையின், ஈண்டு ஆக்கம் விசேடிக்கப்பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.

குறள் 493 (ஆற்றாரும்)

தொகு

'ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து'ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து

'போற்றார்கட் போற்றிச் செயின். (03)'போற்றார் கண் போற்றிச் செயின்.

இதன்பொருள்
ஆற்றாரும் ஆற்றி அடுப= வலியர் அல்லாதாரும், வலியராய் வெல்வர்; இடன் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின்= அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினைசெய்வராயின்.
உரைவிளக்கம்
வினை என்பதூஉம், தம்மை என்பதூஉம் அவாய்நிலையான் வந்தன. காத்தல், பகைவரான் நலிவு வாராமல் அரணானும் படையானும் காத்தல். இவ்வாற்றான், வினைசெய்வராயின் மேற்சொல்லிய (குறள்: 492) வலியின்றியும் வெல்வர் என்பதாம்.

குறள் 494 (எண்ணியார்)

தொகு

எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்துஎண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து

'துன்னியார் துன்னிச் செயின். (04)'துன்னியார் துன்னிச் செயின்.

இதன்பொருள்
இடன் அறிந்து துன்னியார்= தாம் வினைசெய்தற்கு ஏற்ற இடத்தினை அறிந்து சென்ற அரசர்; துன்னிச் செயின்= அரணைப் பொருந்திநின்று அதனைச் செய்வராயின்; எண்ணியார் எண்ணம் இழப்பர்= அவரை வெல்வதாக எண்ணியிருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை இழப்பர்.
உரைவிளக்கம்
அரண் என்பது அவாய்நிலையான் வந்தது. எண்ணம் என்றது, எண்ணப்பட்ட தம் வெற்றியை. அதனை இழப்பர் என்றார், அவர் வினைசெய்யாமல் தம்மைக் காத்தமையின். இதனால் அவர் பகைவர் தோற்பர் என்பதாயிற்று.
இவை நான்கு பாட்டானும், பகைவர் அரணின் புறத்து இறுப்பார் அதற்கு ஆம் இடம் அறிதல் கூறப்பட்டது.

குறள் 495 (நெடும்புனலுள்)

தொகு

'நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி'நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்

'னீங்கி னதனைப் பிற. (05)'நீங்கின் அதனைப் பிற.

இதன்பொருள்
முதலை நெடும்புனலுள் பிற வெல்லும்= முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின் பிறவற்றை எல்லாம் தான் வெல்லாநிற்கும்; புனலின் நீங்கின் அதனைப் பிற அடும்= அப்புனலின் நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லாநிற்கும்.
உரைவிளக்கம்
எனவே, எல்லாரும் தந்நிலத்து வலியர் என்பது கூறப்பட்டது. 'பிற' என்பது, முன்னும் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிறவெல்லாம் நிற்றல் ஆற்றாமையின் அவையெல்லாம் முதலைக்கு எளியவாம்; அவை இயங்குதற்கு உரிய நிலத்தின்கண், அஃது இயங்கல் ஆற்றாமையின் அஃது அவற்றிற்கு எல்லாம் எளிதாம் என்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடன் அறிந்து செல்வராயின், அவர் தமக்கு எளியராவர்; அன்றித் தாம் நிற்கலாற்றா விடத்துச் செல்வராயின், அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம். அவரை அவர் நிற்றல் ஆற்றாவிடத்துச் சென்று வெல்க என்பதாம்.

குறள் 496 (கடலோடா)

தொகு

'கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு'கடல் ஓடா கால் வல் நெடும் தேர் கடல் ஓடும்

'நாவாயு மோடா நிலத்து. (06)'நாவாயும் ஓடா நிலத்து.

இதன்பொருள்
கால் வல் நெடுந்தேர்= நிலத்தின்கண் ஓடும் கால் வலிய நெடிய தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா; கடல் ஓடும் நாவாயும் நிலத்து ஓடா= இனி, அக்கடலின்கண் ஓடும் நாவாய்கள் தாமும், நிலத்தின்கண் ஓடமாட்டா.
உரைவிளக்கம்
'கடலோடா' என்ற மறுதலையடையான், நிலத்துஓடும் என்பது வருவிக்கப்பட்டது. 'கால்வல் நெடுந்தேர்' என்பது, ஓடுதற்கு ஏற்ற காலும், பெருமையும் உடையவாயினும் என்பதுபட நின்றது. மேற்சென்றார் பகைவரிடங்களை அறிந்து, அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினைசெய்க என்பது தோன்ற நின்றமையின். இதுவும் மேலை அலங்காரம் ஆயிற்று.

குறள் 497 (அஞ்சாமை)

தொகு

'அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை'அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை

'யெண்ணி யிடத்தாற் செயின். (07)'எண்ணி இடத்தான் செயின்.

இதன்பொருள்
எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின்= பகையிடத்து வினைசெய்யும் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி அவற்றை அரசர் இடத்தொடு பொருந்தச் செய்வராயின்; அஞ்சாமை அல்லால் துணை வேண்டா= அச்செயற்குத் தம் திண்மையல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை.
உரைவிளக்கம்
திண்ணியராய் நின்று செய்து முடித்தலே வேண்டுவதல்லது 'துணைவேண்டா' என்றார், அவ்வினை தவறுதற்கு ஏதுவின்மையின்.
இவை மூன்று பாட்டானும், வினைசெய்தற்குஆம் இடனறிதல் கூறப்பட்டது.

குறள் 498 (சிறுபடை)

தொகு

'சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா'சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான்

'னூக்க மழிந்து விடும். (08)'ஊக்கம் அழிந்து விடும்.

இதன்பொருள்
உறுபடையான்= பெரும்படையுடைய அரசன்; சிறுபடையான் செல் இடம் சேரின்= ஏனைச் சிறுபடை உடையானை அழித்தல் கருதி, அவன் புகலைச் சென்று சாருமாயின்; ஊக்கம் அழிந்து விடும்= அவனால் தன்பெருமை அழியும்.
உரைவிளக்கம்
'செல்லிடம்' அவனுக்குச் செல்லுமிடம். 'அழிந்துவிடும்' என்பது எழுந்திரு்க்கும் என்றாற்போல ஒருசொல். ஊக்கத்தின் அழிவு, உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன்படைப்பெருமை நோக்கி இடன் நோக்காது செல்வனாயின், அஃது, அப்படைக்கு ஒருங்கு சென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாகப் பெருமையாற் பயனின்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.

குறள் 499 (சிறைநலனுஞ்)

தொகு

சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்தசிறை நிலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்

'ருறைநிலத்தோ டொட்ட லரிது. (09)'உறை நிலத்தோடு ஒட்டல் அரிது.

இதன்பொருள்
சிறை நலனும் சீரும் இலர் எனினும்= அரண் அழித்தற்கு, அருமையும் பெருமையுமாகிய ஆற்றலும் உடையர் அல்லராயினும்; மாந்தர் உறை நிலத்தோடு ஒட்டல் அரிது= வினைக்குரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின்கண் சென்று தாக்குதல் அரிது.
உரைவிளக்கம்
'நிலத்தோடு' என்பது வேற்றுமை மயக்கம். ஆண்மையுடையாரைச் சிறுமை நோக்கி இருப்பின்கண் சென்று தாக்கின், அவர் அது விட்டுப்போதல் துணிவினதுஅன்றிச் சாதல் துணிவினராவர்; ஆகவே, அவர்க்குப் பெரும்படை உடையும் என்பதாம்.

குறள் 500 (காலாழ்)

தொகு

'காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா'கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா

'வேலாண் முகத்த களிறு. (10)'வேல் ஆள் முகத்த களிறு.

இதன்பொருள்
கண் அஞ்சா வேல்ஆள் முகத்த களிறு= பாகர்க்கு அடங்காவுமாய், வேலாட்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை; கால் ஆழ் களரின் நரி அடும்= அவை, கால்ஆழும் இயல்பிற்றாய சேற்றுநிலத்துப்பட்டுழி நரி கொல்லும்.
உரைவிளக்கம்
'முகம்' ஆகுபெயர். ஆண்மையும், பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துசசெல்லின் அவற்றாற் பயனின்றி மிகவும் எளியரால் அழிவர் என்பது தோன்ற நின்றமையின், இதுவும் அவ்வலங்காரம். 'வேலாழ் முகத்த' என்று பாடம் ஓதுவாருமுளர். வேற்படை குளித்த முகத்தவாயின், அதுவும் நரி அடுதற்கு ஏதுவாய் முடிதலின், அது பாடமன்மை அறிக.
இவை மூன்றுபாட்டானும், பகைவரைச் சார்தலாகா இடனும், சார்ந்துழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.